“லியோ டால்ஸ்டாய்” வாழ்க்கை கட்டுரைகள் – நூலறிமுகம்
டால்ஸ்டாய் கதைகள் – நூலறிமுகம்
வோல்கா நகரில் நிலவி வரும் பழங்கதை: மூன்று துறவிகள் – லியோ டால்ஸ்டாய் (1886)
அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்..” (மத்தேயு 6: 7, NLT)
“ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
ஒரு பிஷப் ஆர்ச்சேஞ்சலிலிருந்து சோலோவெட்ஸ்க் மடாலயத்துக்குப் கப்பலில் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்; அதே கப்பலில் ஏராளமான புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் அங்கிருக்கும் புனிதத் தலங்களை தரிசிக்கப் பிரயாணம் செய்தனர்.
பிரயாணம் மிகவும் சீராக இருந்தது. காற்று சாதகமாக அடித்தது, காலநிலை சிறப்பாக இருந்தது. யாத்ரீகர்கள் கப்பல் மேல்தளத்தில் உண்டு கொண்டும், குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர். பிஷப்பும் மேல் தளத்துக்கு வந்து மேலும், கீழும் நடந்தார்.
அப்போது ஒரு குழுவினர் ஒரு மூலையில் நின்று கொண்டு ஒரு மீனவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்த மீனவர் கடலைச் சுட்டிக் காட்டி அவர்களிடம் எதோ கூறிக் கோண்டிருந்தார். பிஷப் நின்று மீனவர் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த திசையைப் பார்த்தார். அங்கு கடல் நீர் சூரிய வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்ததைத் தவிர, அவரால் எதையும் பார்க்க முடியவில்லை.
அவர்கள் பேசுவதைக் கேட்க அவர் அவர்களுக்கு அருகில் சென்றதும், மீனவர் அவரைப் பார்த்து விட்டு மரியாதையுடன் தம் தொப்பியை அகற்றி விட்டு அமைதியாகி விட்டார். மற்றவர்களும் தமது தொப்பியை அகற்றி விட்டு வணங்கினர்.
”நான் உங்களைத் தொந்தரவு செய்ய வரவில்லை நண்பர்களே” என்றார் பிஷப். “இந்த நல்ல மனிதர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கவே வந்தேன்.”
மற்றவர்களை விட சற்றுத் துணிவு கொண்டவராக இருந்த ஒரு வணிகர் பதிலளித்தார், “மீனவர் துறவிகள் பற்றி எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.”
”எந்தத் துறவிகள்?” என்று கேட்டுக் கொண்டே கப்பலின் மூலையில் இருந்த ஒரு பெட்டியில் அமர்ந்தார் பிஷப். “அவர்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எதைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தீர்கள்?.”
”அதோ, அங்கே நீங்கள் பார்க்கும் தீவைத்தான் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தேன்” என்று அந்த மனிதர் சற்று வலது புறமாகத் தன் கையை நீட்டிக் காட்டினார். “இந்தத் தீவில்தான் அந்தத் துறவிகள் தமது ஆன்மா விடுதலை பெற வசித்துக் கொண்டிருக்கின்றனர்.”
”அந்தத் தீவு எங்கிருக்கிறது? எனக்கு எதுவும் தெரியவில்லையே” என்றார் பிஷப்.
”அதோ தூரத்தில் என் கை காட்டும் திசையில் பாருங்கள். அதோ சிறிய மேகத்தைப் பாருங்கள். அதன் கீழ் சற்று இடப்புறத்தில் ஒரு சிறிய கீற்று தென்படுகிறதே. அதுதான் அந்தத் தீவு.”
பிஷப் மீண்டும் கவனமாகப் பார்த்தார். ஆனால் அவரது பழக்கப்படாத கண்களால் சூரிய வெளிச்சத்தில் மின்னும் கடலைத் தவிர வேறு எதையும் காண முடியவில்லை.
”என்னால் பார்க்க முடியவில்லை” என்றார் அவர். “ஆனால் அங்கு வசிக்கும் துறவிகள் யார்?”
”அவர்கள் புனிதர்கள்” என்று பதிலளித்தார் மீனவர். அவர்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தான் என்னால் அவர்களை நேராகப் பார்க்க முடிந்தது.”
தான் ஒருமுறை மீன்பிடிக்கச் சென்றபோது வழி தவறியதையும், தம்மை அறியாமல் அந்தத் தீவில் இரவு ஒதுங்கியதையும் அவர் விவரித்தார். காலையில் அவர் தீவில் சுற்றித் திரிந்த போது அவர் ஒரு மண்ணால் செய்யப்பட்ட குடிசைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அருகில் ஒரு முதியவர் நின்றிருந்ததைக் கண்டார். அப்போது மேலும் இருவர் அங்கு வந்தனர். அவர்கள் அவருக்கு உணவளித்த பிறகு அவரது பொருட்களைக் காய வைத்து, அவரது படகைச் சரி செய்ய உதவினர்.
”அவர்கள் எப்படி இருந்தனர்?” என்று கேட்டார் பிஷப்.
”அவர்களில் ஒரு குள்ளமானவர், முதுகு கூன் போட்டவர். அவர் ஒரு பாதிரியார் உடையை அணிந்திருந்தார், மிகவும் வயதானவர்; அவருக்கு நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்று சொல்ல முடியும். அவரது வெண்தாடி பச்சை நிறத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவர் வயதானவர். ஆனால் அவர் எப்போதும் புன்னகையுடன் இருந்தார், அவரது முகம் சுவர்க்கத்திலிருந்து வந்த தேவதையைப் போல் பளிச்சென இருந்தது.
இரண்டாமவர் உயரமானவர், ஆனால் அவரும் மிகவும் வயதானவர். அவர் ஒரு கந்தலான விவசாயியின் கோட்டை அணிந்திருந்தார். அவரது தாடி அகலமாக இருந்தது, மஞ்சள் நிறமும், சாம்பல் நிறமும் கலந்ததாக அது இருந்தது. அவர் வலிமையானவர். நான் அவருக்கு உதவச் செல்வதற்கு முன்பே அவர் என் படகை ஒரு வாளியைக் கவிழ்ப்பது போல் கவிழ்த்து விட்டார். அவரும் மிகவும் கருணையும், உற்சாகமும் கொண்டவர்.
மூன்றாமவர் உயரமானவர், அவரது தாடி பனியைப் போல் வெண்மையாகவும், அவரது கால் முட்டியைத் தொடுவது போல் நீளமாகவும் இருந்தது. அவர் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார், அவரது கண் புருவம் தொங்கிக் கொண்டிருந்தது; அவரது இடுப்பைச் சுற்றியிருந்த ஒரு துணியைத் தவிர அவர் வேறெதையும் அணியவில்லை.
”அவர்கள் உங்களுடன் பேசினார்களா?” என்று விசாரித்தார் பிஷப்.
”பெரும்பாலான நேரத்தில் அவர்கள் அமைதியாகவே வேலை செய்தனர். ஒருவருடன் ஒருவர் கூட மிகவும் குறைவாகவே பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் ஒரு பார்வை பார்க்க வேண்டியதுதான், மற்றவர்கள் அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு விட்டனர். நான் மூத்தவரிடம் அவர்கள் அங்கு எவ்வளவு காலமாக வசிக்கின்றனர் என்று கேட்டேன். அவர் முறைத்து விட்டு, கோபப்படுபவர் போல் எதோ முணுமுணுத்தார்; ஆனால் மிகவும் முதியவர் அவரது கையைத் தூக்கிப் புன்னகைக்கவும், மூத்தவர் அமைதியானார். முதியவர் இதை மட்டும் சொல்லி விட்டுப் புன்னகைத்தார்: ”எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.”
மீனவர் பேசிக் கொண்டிருந்தபோது கப்பல் தீவுக்கருகில் வந்து விட்டது. “அதோ இப்போது அதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம். கருணையுள்ளவரே, அதைப் பாருங்கள்” என்று வணிகர் தன் கையைக் காட்டிச் சொன்னார்.
பிஷப் பார்த்த போது அங்கு ஒரு இருண்ட கீற்று தென்படுவதைக் கண்டார் – அதுதான் அந்தத் தீவு. அதை சிறிது நேரம் பார்த்த பின், அவர் கப்பலின் தளத்தை விட்டு அகன்று கப்பலின் கம்பத்துக்கருகில் நின்று கொண்டிருந்த தலைமை மாலுமியிடம் கேட்டார்:
”அது என்ன தீவு?”
”அதுவா, அதற்குப் பெயர் கிடையாது. கடலில் இது போல் நிறைய உள்ளன.”
”அங்கு வசிக்கும் துறவிகள் தமது ஆன்ம விடுதலைக்காக வசிக்கிறார்கள் என்பது உண்மையா?”
”அப்படித்தான் சொல்கிறார்கள் கருணையுள்ளவரே. அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. மீனவர்கள் அவர்களைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்; ஆனால் அவர்கள் (பொய் சொல்லிக்) சரடு விட்டுக் கொண்டிருக்கலாம்.”
”நான் அந்தத் தீவில் இறங்கி அந்த மனிதர்களைப் பார்க்க வேண்டும். நான் எப்படிச் செல்வது?” என்று கேட்டார்.
”கப்பல் தீவுக்கருகில் செல்ல முடியாது” என்று தலைவன் பதிலளித்தான். “ஆனால் நீங்கள் அங்கு படகில் செல்ல முடியும். நீங்கள் கப்பல் தலைவனிடம் பேசுங்கள்”.
தலைவனுக்குச் செய்தி சொல்லப்பட்டதும் அவர் வந்து சேர்ந்தார்.
”நான் அந்தத் துறவிகளைக் காண விரும்புகிறேன்” என்றார் பிஷப்.
”என்னை அங்கு அழைத்துச் செல்ல முடியுமா?”
தலைவர் அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
”அதைச் செய்ய முடியும். ஆனால் நாம் நிறைய நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். நான் இதைச் சொல்லலாம் என்றால் கருணையுள்ளவரே, நீங்கள் அவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்வதற்குத் தகுதியானவர்களல்ல அவர்கள். அவர்கள் முட்டாள் முதியவர்கள், எதையும் புரிந்து கொள்ளாதவர்கள், கடலில் மீன் இருக்கிறது என்பதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூடப் பேசாதவர்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.”
”நான் அவர்களைக் காண விரும்புகிறேன்” என்றார் பிஷப். “உங்கள் நேரத்துக்காகவும், உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுக்காகவும் நான் உங்களுக்குப் பணம் கொடுத்து விடுகிறேன். தயவுசெய்து எனக்கு ஒரு படகைக் கொடுங்கள்.”
வேறு வழியில்லை; எனவே உத்தரவு கொடுக்கப்பட்டது. மாலுமிகள் பாய்மரங்களை உயர்த்தினர், தலைமை மாலுமி சுக்கானைத் திருப்பினான், கப்பல் தீவை நோக்கிச் சென்றது. கப்பல் முனையில் ஒரு இருக்கை போடப்பட்டு அதில் பிஷப் முன்னால் பார்த்து அமர்ந்து கொண்டார். பயணிகள் அனைவரும் அங்கு கூடி தீவைப் பார்த்தனர். கூர்மையான கண்களை உடையோரால் இப்போது அங்கு இருந்த பாறைகளைப் பார்க்க முடிந்தது, பிறகு ஒரு களிமண் குடிசை தென்பட்டது. கடைசியில் ஒருவர் துறவிகளையே பார்த்து விட்டார். தலைவர் ஒரு தொலைநோக்கியைக் கொண்டு வந்தார். அதன் மூலம் பார்த்து விட்டு அதை பிஷப்பிடம் கொடுத்தார்.
”இது சரியாக இருக்கிறது. மூன்று பேர் கரையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கே அந்தப் பெரிய பாறைக்கருகே வலதுபுறம் நிற்கிறார்கள்.
பிஷப் அதை வாங்கிக் கண்ணில் வைத்து அந்த மூவரைப் பார்த்தார்: உயரமானவர், குள்ளமானவர், குள்ளமாகவும், கூன் போட்டும் இருந்தவர் அனைவரும் கரையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றனர்.
தலைவர் பிஷப்பிடம் திரும்பினார்.
இதற்கு மேல் கப்பல் நெருக்கமாகச் செல்ல முடியாது கருணையுள்ளவரே. நீங்கள் கரைக்குச் செல்ல விரும்பினால், நீங்கள் படகில் செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் இங்கே நங்கூரம் இடுகிறோம்.”
நங்கூரம் கீழிறக்கப்பட்டது, பாய்மரங்கள் சுருட்டப்பட்டன. ஒரு அதிர்வுடன் கப்பல் குலுங்கியது. பிறகு ஒரு படகு கீழிறக்கப்பட்டு அதில் துடுப்புப் போடுவோர் குதித்தனர். நூல் ஏணி வழியாக பிஷப் அதில் இறங்கி அமர்ந்து கொண்டார். துடுப்புக்காரர்கள் விரைவாகத் துடுப்புப் போடவும், படகு கரையை நோக்கி விரைந்தது. அவர்கள் கரைக்கு மிகவும் அருகில் வந்தவுடன் அவர்கள் மூன்று முதியவர்களைக்கண்டனர்: தன் இடுப்பில் ஒரு துணியை மட்டுமே கட்டிக் கொண்டிருந்த உயரமானவர்; கந்தலான விவசாயி கோட்டைப் போட்டுக் கொண்டிருந்த குள்ளமானவர், மிகவும் பழைய பாதிரி உடையைப் போட்டுக் கொண்டிருந்த மிகவும் மூத்தவர் – அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
துடுப்புக்காரர்கள் கரைக்குப் படகை இழுத்துப் பிடித்துக் கொள்ளவும் பிஷப் இறங்கினார்.
முதியவர்கள் அவருக்குக் குனிந்து வணக்கம் செலுத்தினர். அவர் அவர்களுக்கு ஆசி கூறியதும், அவர்கள் இன்னும் குனிந்து வணங்கினர். பிறகு பிஷப் அவர்களிடம் பேசத் தொடங்கினார்.
”இறை மனிதர்களே, நீங்கள் இங்கே உங்கள் ஆன்ம விடுதலைக்காகவும், உங்கள் சக மனிதர்களுக்காக இயெசு கிருஸ்துவிடம் பிரார்த்தனை செய்யவும் இங்கு வசிக்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கிருஸ்துவின் தகுதியற்ற சேவகனான நான் கடவுளின் கருணையால் அவரது மந்தைக்கு கற்பிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன். நான் கடவுளின் சேவகர்களாகிய உங்களைப் பார்க்கவும், என்னால் முடிந்ததைக் கற்பிக்கவும் விரும்பினேன்.”
முதியவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டு அமைதியாக இருந்தனர்.
”நீங்கள் உங்கள் ஆன்மாவைக் காத்துக் கொள்ள என்ன செய்கிறீர்கள், இந்தத் தீவில் ஆண்டவனுக்கு எவ்வாறு சேவை செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்” என்று கேட்டார் பிஷப்.
பெருமூச்சு விட்ட இரண்டாவது துறாவி மிகவும் வயதானவரான மூத்தவரைப் பார்த்தார். பின்னவர் புன்னகைத்து விட்டுக் கூறினார்:
”எங்களுக்கு ஆண்டவருக்கு எப்படிச் சேவை செய்வது என்பது தெரியாது. நாங்கள் எங்களுக்கு மட்டுமே சேவை செய்து கொள்கிறோம் ஆண்டவரின் சேவகரே”.
”ஆனால் ஆண்டவரிடம் எப்படிப் பிரார்த்திக்கிறீர்கள்?” என்று கேட்டார் பிஷப்.
”நாங்கள் இந்த முறையில் பிரார்த்திக்கிறோம். நீங்கள் மூவர், நாங்கள் மூவர், எங்கள் மீது கருணை காட்டுங்கள்”. முதியவர் இதைச் சொன்னதும், அவர்கள் மூவரும் வானை நோக்கிக் கண்களை உயர்த்தித் திருப்பிக் கூறினர்:
”நீங்கள் மூவர், நாங்கள் மூவர்
எங்கள் மீது கருணை காட்டுங்கள்!”
பிஷப் புன்னகைத்தார்.
”புனித மும்மூர்த்திகள் குறித்து நீங்கள் எதோ அறிந்திருக்கிறீர்கள் என்பது தெளிவு. ஆனால் நீங்கள் சரியான முறையில் பிரார்த்திக்கவில்லை. நீங்கள் என் நேசத்தை வென்றுவிட்டீர்கள், இறை மக்களே. நீங்கள் ஆண்டவரை மகிழ்விக்க விரும்புவதைக் காண்கிறேன், ஆனால் அவருக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை நீங்கள் அறியவில்லை. அது பிரார்த்தனை செய்யும் முறையல்ல; ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள், நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்கு என்னுடைய சொந்த முறையைக் கற்பிக்கவில்லை, ஆனால் புனித நூல்களில் ஆண்டவர் அனைத்து மக்களையும் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாரோ, அதைக் கற்பிக்கிறேன்.”
பிஷப் ஆண்டவர் எவ்வாறு தன்னை மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்டார் என்பதை விளக்கத் தொடங்கினார்; ஆண்டவர்தான் தந்தை எனவும், குமாரனையும், புனித ஆவியையும் பற்றிக் கூறினார்.
”ஆண்டவரின் குமாரன் மக்களைக் காப்பாற்ற பூமிக்கு வந்தார்; நாம் பிரார்த்திப்பது எப்படி என்று இவ்வாறு நமக்குக் கற்றுத் தந்தார். நான் சொல்வதைக் கேட்டுத் திரும்பக் கூறுங்கள்: “பரலோகத்தில் இருக்கும்”
முதல் முதியவர் அவரைத் தொடர்ந்து கூறினார், “பரலோகத்தில் இருக்கும்”, இரண்டாமவரும் “பரலோகத்தில் இருக்கும்” எனத் தொடர, மூன்றாமவரும் “பரலோகத்தில் இருக்கும்” என்றார்.
”பரமபிதாவே” என்று பிஷப் தொடர்ந்தார்.
முதல் துறவி திருப்பிக் கூறினார், “பரமபிதாவே”. ஆனால் இரண்டாமவர் திணறினார். உயரமான துறவியால் அதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. முடி அவரது வாயின் மேல் வளர்ந்திருந்ததால் அவரது வார்த்தைகள் தெளிவாக இல்லை. பல்லே இல்லாத மிக மூத்தவரும் தெளிவில்லாமல் குழறினார்.
பிஷப் மீண்டும் வார்த்தைகளைத் திரும்பவும் சொன்னார். முதியவர்கள் அவரைப் பின்பற்றிக் கூறினார்கள். பிஷப் ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கொள்ள, துறவிகள் அவர் முன்னால் அவரது வாயைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டு அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னார்கள். நாள் முழுதும் பிஷப் வார்த்தைகளை இருபது முறை, முப்பது முறை, நூறு முறை திரும்பத் திரும்பக் கூறி முயற்சி செய்தார். முதியவர்கள் அவரைத் தொடர்ந்து கூறினார்கள். அவர்கள் தவறாகச் சொன்னார்கள், அவர் சரி செய்தார், மீண்டும் சொல்லச் சொன்னார்.
ஆண்டவரின் பிரார்த்தனையை அவர்களுக்கு முழுதும் கற்பிக்கும் வரை பிஷப் அங்கிருந்து செல்லவில்லை. அவர்கள் அவரைப் பின்பற்றிச் சொல்ல மட்டுமல்ல, அவர்களே அதைச் சொல்லவும் வைத்தார். நடுவில் இருந்தவர்தான் முதலில் அதைத் தெரிந்து கொண்டார், முழுதும் தனியாகச் சொல்லக் கற்றுக் கொண்டார். பிஷப் அவரை மீண்டும் மீண்டும் சொல்ல வைத்தார், கடைசியில் மற்றவர்களும் சொன்னார்கள்.
அப்போது இருட்டிக் கொண்டிருந்தது, பிஷப் கப்பலுக்குத் திரும்புமுன் நிலவு நீரின் மேல் தோன்றி விட்டது. அவர் துறவிகளிடம் விடைபெற்றுக் கொண்டபோது அவர்கள் தரை வரை குனிந்து அவரை வணங்கினர். அவர் அவர்களை அள்ளியெடுத்து ஒவ்வொருவருக்கும் முத்தமிட்டு தான் சொல்லிக் கொடுத்தபடி பிராத்திக்குமாறு கூறினார். பிறகு படகில் ஏறிக் கப்பலுக்குத் திரும்பினார்.
அவர் படகில் ஏறிக் கப்பலுக்குத் திரும்பும்போது துறவிகள் அவர் சொல்லிக் கொடுத்த பிரார்த்தனையை உரக்கக் கூறுவதைக் கேட்டார். படகு கப்பலை நெருங்கியபோது அவருக்கு அவர்களது குரல் கேட்கவில்லை. ஆனால் அவர்களை நிலா வெளிச்சத்தில் அவர்களை அவர் கரையில் விட்டு விட்டு வந்த இடத்திலேயே நிற்பதைப் பார்க்க முடிந்தது.
குள்ளமானவர் நடுவிலும், வலது புறத்தில் உயரமானவரும், நடு உயரம் இருப்பவர் இடது புறமும் நின்றனர். பிஷப் கப்பலில் ஏறியதும் நங்கூரம் உயர்த்தப்பட்டு பாய்மரங்கள் இறக்கப்பட்டன. காற்று அவற்றை நிரப்பவும் கப்பல் நகர்ந்தது.
பிஷப் சுக்கானுக்கு அருகில் அமர்ந்து கொண்டு கப்பல் நகர்கையில் தீவைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவரால் துறவிகளைப் பார்க்க முடிந்தது, பிறகு அவர்கள் மறைய, தீவை மட்டும் பார்க்க முடிந்தது. பிறகு அதுவும் மறைந்தது, கடலை மட்டுமே நிலவு ஒளியில் பார்க்க முடிந்தது.
யாத்திரீகர்கள் படுக்கச் சென்றனர், தளம் அமைதியாகி விட்டது. பிஷப்பால் தூங்க விரும்பாமல், சுக்கானுக்கருகில் அமர்ந்து துறவிகளை நினைத்துக் கொண்டு தீவு இனியும் தெரியாத கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார். நிலவின் ஒளி கடலின் மேல் இங்கும் அங்கும் மாறி மாறி மின்னிக் கொண்டிருந்தது. திடீரென அவர் எதோ வெண்மையாகவும், பிரகாசமாகவும் நிலவின் ஒளியில் நகர்வதைப் பார்த்தார். அது ஒரு கடற்பறவையா அல்லது எதோ ஒரு சிறிய படகின் துடுப்புகள் மின்னுகின்றனவா? பிஷப் ஆச்சரியத்துடன் அதைக் கூர்ந்து பார்த்தார்.
’அது நம்மைப் பின் தொடர்ந்து வரும் படகாக இருக்கும்’ என்று நினைத்தவர் ‘ஆனால் அது மிக வேகமாக நம்மைத் தாண்டிச் செல்கிறது. அது ஒரு நிமிடத்துக்கு முன் தூரமாக, மிகவும் தூரமாக இருந்தது. இப்போது அது மிகவும் அருகில் இருக்கிறது. அது ஒரு படகாக இருக்க முடியாது, ஏனெனில் துடுப்புகள் எதுவும் தென்படவில்லை; ஆனால் அது எதுவாக இருந்தாலும் சரி, அது நம்மை நெருங்குகிறது.’
அவரால் அது என்னவென்று கண்டு பிடிக்க முடியவில்லை. அது ஒரு படகுமல்ல, ஒரு பறவையுமல்ல, ஒரு மீனுமல்ல!. அது ஒரு மனிதனை விடப் பெரியது, மேலும் கடலுக்கு நடுவில் ஒரு மனிதன் வர முடியாது. பிஷப் எழுந்து சுக்கான் பிடிப்பவரிடம் சொன்னார்:
”அங்கே பாருங்கள், அது என்ன நண்பரே?’ பிஷப்பால் அதைத் தெளிவாகப் பார்க்க முடியாததால் அதைத் திரும்பவும் சொன்னார் – மூன்று துறவிகளும் தண்ணீரின் மேல் வெண்மை நிறம் பளபளக்க ஓடி வந்து கொண்டிருந்தனர், அவர்களது வெண்ணிறத் தாடிகள் மின்னின, அது பகல் இல்லை என்பது போல் மிக வேகமாகக் கப்பலை அணுகிக் கொண்டிருந்தனர்.
சுக்கான் இயக்குபவர் அதைப் பார்த்து விட்டு மிரண்டு போய் சுக்கானை விட்டு விட்டார்.
”ஓ, கடவுளே! துறவிகள் இது ஒரு வறண்ட நிலம் போல நம்மைப் பின் தொடர்ந்து ஓடி வருகிறார்கள்!.
அவர் சொன்னதைக் கேட்ட யாத்திரீகர்கள் துள்ளி எழுந்து அவருக்குப் பின்னால் குழுமினர். அவர்கள் துறவிகள் ஒருவரின் கைகளை ஒருவர் பிடித்துக்
கொண்டு ஓடி வருவதையும், முன்னால் வருபவர் கப்பலை நிறுத்தச் சொல்லிக் கேட்பதையும் கண்டனர். மூவரும் தமது கால்களை நகர்த்தாமலேயே தண்ணீரின் மேல் மிதந்து வந்தனர். கப்பலை நிறுத்துவதற்கு முன்பே அவர்கள் அதை அடைந்து, தமது தலைகளை உயர்த்தி ஒரே குரலில் சொல்லத் தொடங்கினர்:
”நாங்கள் நீங்கள் கற்பித்ததை மறந்து விட்டோம், ஆண்டவரின் சேவகரே. அதைத் திரும்பத் திரும்பச் சொன்ன வரை, அதை நினைவில் வைத்திருந்தோம். ஆனால் அதைச் சொல்வதை ஒரு முறை நிறுத்தியவுடன் ஒரு வார்த்தை மறந்தது, இப்போது எல்லாம் மறந்து விட்டது. எங்களால் எதையும் நினைவுகூர முடியவில்லை. மீண்டும் எங்களுக்குக் கற்பியுங்கள்.
பிஷப் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு கப்பலில் இருந்து குனிந்து பார்த்துச் சொன்னார்:
”உங்களது சொந்தப் பிரார்த்தனையே கடவளை அடைந்து விடும், இறை மக்களே. நான் உங்களுக்குக் கற்பிக்க வேண்டியவனல்ல. பாவிகளாகிய எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்.”
பிஷப் முதியவர்களின் முன்னால் மிகவும் குனிந்து வணங்கினார்; அவர்கள் திரும்பிக் கடலின் வழியே சென்றனர். அவர்கள் சென்ற பின்னால் அவர்கள் இருந்த இடத்தில் காலைவரை ஒரு ஒளி வீசியது.
தமிழில்: கி. ரமேஷ்.