மொழிபெயர்ப்பு கவிதை – அடிமைக்கு விடுதலை – ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ | தமிழில்: இரா இரமணன்
‘நீ இனி அடிமை இல்லை’
என்றொரு அறிவிப்பு
காதில் விழுந்தபோது
அவன் அப்படி பரவசப்பட்டான்!
சுதந்திரமானவன் என்ற
முதன்முதலாய் அறிந்தபோது
அவன் இதயம்
பெருமையால் அப்படி துடித்தது!
சட்டென்று
ஆத்மாவின் மேன்மை உணர்வுகள்
சுடர் விடத் தொடங்கியது.
இனி மண்டியிட வேண்டாம்.
சிந்தனைகள் உயரத் தொடங்கின.
தான் ஒரு மனிதன் என்று
தனக்குள்ளே உணர்ந்தான்.
மேலே நோக்க
சுவர்க்கத்தின் சுவாசக் காற்று
புதிதாய் அவனை சூழ்ந்தது.
காட்டுப் பறவைகள் பறப்பது கண்டு
அவன் முகம்
மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது..
காலடியில் ஓடை நோக்க
அது சுழித்தோடியது.
காற்றும் பறவையும் வெள்ளமும் போல்
‘நானும் சுதந்திரமானவன்’
என்று கூக்குரலிட்டான்.
‘ஓ விடுதலையே!
உன் பெயரில் கூட
ஏதோ பிரியம் இருக்கிறது.
அது
ஆத்மாவின் அகல் விளக்கை
அணையா சுடராய் ஏற்றுகிறது.
உனக்காய்
உறையிலிருந்து உருவும்
தேசபக்தனின் கத்திக்கு
வெற்றி சேவகம் செய்கிறது.
விடுதலை வேண்டி
உன்னத குருதி சிந்தும்
மார்புகள் வாழ்க!
சர்வாதிகாரி பிணித்த
அடிமை சங்கிலியை உடைத்தெறியும்
வலிய கரங்கள் வாழ்க!
சீரழிக்கப்பட்ட மனிதனுக்காய்
சிந்தித்தால்
அது அடிமைக்கும் சுதந்திரம்
அளித்திடுமே!
பிப்ரவரி 1827
ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ 1809ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தை போர்த்துகீசியர். தாய் இந்தியர். 19ஆம் நூறாண்டின் ஐரோப்பிய ஆசிய ஆளுமைகளில் ஒருவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.காலரா நோயினால் தனது 22ஆம் வயதிலேயே காலமானார். போயம்ஸ்(1827), தி ஃபக்கீர் ஆப் ஜுங்கீரா, தி பொயடிக்கல் ஒர்க்ஸ் ஆஃப் ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். அந்த கால கவிஞர்களைப்போல சுதந்திரம்,தேச பக்தி,நவீன சிந்தனைகள் ஆகியவை இவர் எழுத்துகளில் காணப்படுகிறது. தன்னுடைய மாணவர்களையும் காப்பிய நூல்களைப் படிக்க வைத்து புதிய சிந்தனைகளை ஊக்குவித்தார். இவரது புரட்சிகரமான கொள்கைகளினால் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரது ‘freedom to slave’ என்கிற பாடலை மொழியாக்கம் செய்துள்ளேன்.
இந்தப் பாடலில் கூறப்படும் விடுதலை மூன்று நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று; ஒரு மனிதனின் பிற்போக்கான சிந்தனைகளிலிருந்து அவனது ஆத்மா விடுதலை அடைவது; இரண்டு ஆப்பிரிக்க, அமெரிக்க மற்றும் இந்திய கண்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் விடுதலை; மூன்றாவது அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளின் விடுதலை. மேலும் இறுதி வரிகள் அடிமைப்பட்டுக் கிடப்பவர்கள் பால் சிந்தனை செலுத்துபவர்களே சுதந்திரமானவர்கள் என்பது ‘அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய உதவாமல் அடிமைப்படுத்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய முடியாது’ என்கிற மார்கீசிய கண்ணோட்டத்தோடும் ‘தன்னுடைய அடிமை சங்கிலியை கழற்றி எறிவது மட்டுமே சுதந்திரமாகாது. மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதித்தும் மேன்மைப்படுத்தியும் வாழும் வாழ்வே சுதந்திரமாகும்’ என்கிற நெல்சன் மண்டேலாவின் கூற்றோடும் ஒப்பிடத்தக்கது.
உசாத் துணைகள்:
1.Indian Writing In English – ஆங்கிலத் துறை- டெல்லிப் பல்கலைக்கழகம்
2.litreary yog – https://literaryyog.com/freedom-to-the-slave-by-derozio-summary)
