பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள் – 2
பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்
என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்
நூல் அறிமுகம்: டி. ஜே. எஸ். ஜார்ஜியின் எம். எஸ். சுப்புலட்சுமி -உண்மையான வாழ்க்கை வரலாறு (தமிழில் : ச. சுப்பாராவ்) – இந்து கணேஷ்
நூல் : எம். எஸ். சுப்புலட்சுமி
-உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : டி. ஜே. எஸ். ஜார்ஜ்
தமிழில் : ச. சுப்பாராவ்
விலை : ரூ.₹ 220/-
பக்கங்கள் : 255
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எம். எஸ். அம்மாவை பற்றி நினைத்தாலே அவரின் தெய்வீக குரல் தான் நம் நினைவிற்கு வரும். பக்தி என்கிற உணர்வை குரல் வழி கடத்திவிட முடியும் என்று நான் நம்பியது அவர் குறை கேட்டு தான். எனது பள்ளி பருவத்தில் யதார்த்தமாய் நான் கேட்க நேர்ந்த இவரின் அண்ணாமாச்சார்யா கீர்த்தனைகள் மற்றும் குறையொன்றுமில்லை பாடல் எனக்குள் சொல்லமுடியாத அமைதியை ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும் அதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தது, அப்போது எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பையும், உள்ளம் உருகும் உணர்வையும் அதற்கு பின்பு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அதே போல உணர முடிவதே அவரின் குரலின் சிறப்பு எனலாம். அவரின் உண்மையான சரிதம் என்ற உடன் மிகவும் ஆர்வமாகவே இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.
பொதுவாக நமக்கு பிடித்த பிரபலங்களின் சரிதையை நாம் எதற்காக தேடிதேடி வாசிக்கிறோம், அவர்கள் வாழ்வில் தோல்விகளை கடந்து எப்படி வெற்றி அடைந்தார்கள் என்று அறிவதன் மூலம் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் ஏற்படும் என்பதே பிரதானமான காரணமாக இருக்க முடியும். மற்றொன்று வம்பு பேசும் பொது மனோபாவம், பக்கத்து வீட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு ஏற்படும் ஆர்வம் போல பிரபலங்களின் வாழ்விலும் என்ன நடந்திருக்கும் என்ற குறுகுறுப்பு அனைவருக்கும் இயல்பான ஒன்று. இந்த புத்தகத்தில் ஆசிரியர் திரு. ஜார்ஜ் அவர்கள் இந்த இரண்டு விதத்திலும் நம்மை திருப்தி படுத்துகிறார். எம். எஸ் அவர்கள் சின்ன வயதில் இருந்து பாடத் தொடங்கி சிகரம் தொட்ட கதையை மட்டும் எழுதவில்லை, கூடவே இந்தியாவில் கர்நாடக இசையின் வரலாற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த காலகட்டத்தில் பெண்கள் இசைத் துறைக்கு வர எவ்வளவு தடை கற்களை கடக்க வேண்டி இருந்தது, அவைகளை திருமதி. எம். எஸ் அவர்கள் எவ்வளவு எளிதாக கடந்தார் என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அந்த காலத்திலேயே பிரபலமாக இருந்த பாடகிகள் திருமதி. எம். எல். வசந்தகுமாரி, திருமதி. டி. கே. பட்டம்மாள் போன்றோர் அடைந்த புகழை விட எம். எஸ். அவர்கள் பெரும் புகழ் அடைய காரணம் என்ன என்பதை வாசிக்கும் நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்த திருமதி. எம். எஸ் எப்படி அவரின் கணவர் சதாசிவத்தின் கரங்களை பிடித்தார், அது அவரது வாழ்வை எப்படி புரட்டி போட்டது என்பதை எல்லாம் இவ்வளவு ஆழமாக யாரும் ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
சிறிய வயதிலேயே அற்புதமான குரல் வளத்தை பெற்ற எம் எஸ் தன் குடும்ப வழக்கத்தை கடைபிடிக்க விரும்பவில்லை, தன் பதின்மங்களில் தைரியமாக தன் வீட்டை விட்டு வெளியில் வந்து சதாசிவம் அவர்களின் வீட்டில் அடைக்கலமாகி இருக்கிறார். அப்போது திரு. சதாசிவதிற்கு மணமாகி இருக்கிறது, எனினும் அவர் எம் எஸ்ஸின் இசை வாழ்விற்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். சதாசிவத்திற்கும் எம் எஸ்ஸின் அம்மா மற்றும் அண்ணா தரப்பினருக்கும் (மதுரை கோஷ்டி என்று சதாசிவம் அழைப்பாராம்) எப்போதுமே தகராறு இருந்து வந்திருக்கிறது. மதுரைக்கு அவருடைய தேவதாசி வாழ்விற்கு அவரை போக விடாமல் எம் எஸ்ஸை பாதுகாத்து வந்திருக்கிறார் சதாசிவம் அவர்கள். எம். எஸ்சிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்ட போது அவர் நடித்த படங்கள் எப்படி வெற்றி பெற்றன அதற்கு பின் இருந்த சதாசிவத்தின் சூட்சுமங்கள் என்னென்ன என்பதை எல்லாம் வாசிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.
நடிகர் மற்றும் பல்துறை வித்தகர் ஜி என் பி அவர்களை எம் எஸ் மிகவும் விரும்பி இருக்கிறார், அவரின் காதல் கைகூடவில்லை எனினும் அவர் ஜி என் பிக்கு எழுதிய கடிதம் இந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது அது நமக்கு புது தகவல், ஸ்வாரஸ்யமானதும் கூட ! சதாசிவத்தின் முதல் மனைவி இறந்த பிறகு அவசரமாக அவர் எம் எஸ் அவர்களை திருமணம் செய்து கொண்டது தேவையில்லாத பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது, எனினும் சதாசிவம் அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிட்டு சாதாரண நடிகை என்ற கட்டமைப்பிற்குள் இருந்த எம். எஸ்ஸிற்கு பக்தி என்னும் அலங்காரத்தை செய்து அதையே அவருக்கு நிரந்தர அடையாளமாக மாற்றியது எல்லாம் நாம் கற்பனை கூட செய்ய வாய்ப்பில்லாத விஷயங்கள். பக்திபூர்வமாக ஒரு வடிவமாகவே எம் எஸ் திகழ்ந்தார், அது அவருக்கு அற்புதமாக பொருந்தியது. சதாசிவம் அவர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் எம் எஸ் இன்னும் இசையில் பரிமளித்திருப்பார் என்று பலர் அபிபிபிராய பட்டிருக்கிறார்கள்.
ஆனால் எம் எஸ் எப்போதுமே தன்னை முழுவதுமாய் ஒப்புக் கொடுப்பவராகவே இருந்திருக்கிறார், பணிவும் அன்புமே அவரது அடையாளமாக இருந்திருக்கிறது. கல்கி கார்ட்ன்ஸ் உருவான கதை, ராஜாஜி மேல் எம் எஸ்- சதாசிவம் தம்பதிகளுக்கு இருந்த குரு பக்தி, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கும் சதாசிவத்திற்குமான நட்பு, மகா பெரியவா மேல் இருந்த பக்தி என்று எதையும் விடாமல் எழுதி இருக்கிறார் ஆசிரியர். முக்கியமாக சேவை மனப்பான்மையோடு
எம். எஸ் அவர்கள் பல கச்சேரிகளில் பாடி நிதி திரட்டி தர்ம காரியங்களுக்கு வழங்கி இருப்பதெல்லாம் வாசிக்க நெகிழ்ச்சி. அதையெல்லாம் முழுமையாக நெறிப்படுத்திய அவருடைய கணவர் சதாசிவத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. இசை சார்ந்த நூல்களை நான் அதிகம் வாசித்ததில்லை என்பதாலும் சில வாக்கியங்களை சரியாக புரிந்து கொள்ள இருமுறை அந்த பத்திகளை வாசிக்க வேண்டி வந்தது.
ஆராய்ச்சி நோக்கத்துடனும் மதி நுட்பத்துடனும் எழுதப்பட்ட இந்த நூலை எளிதில் படித்துவிட்டு கடந்து விட இயலாது, ஆழமான வாசிப்பு தேவை படும் சிறந்த புத்தகமிது. ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் மிக சிறிய விஷயத்தை கூட விட்டுவிடாமல் விரிவாக ஆராய்ந்து எழுதி இருப்பதால் மொழிப் பெயர்ப்பு மிகுந்த சவால் நிறைந்ததாகவே இருந்திருக்கும். சங்கீதம் தொடர்பாக நிறைய வார்த்தைகள் வருவதால் அதை போகிற போக்கில் மொழி பெயர்க்க இயலாது சற்றேனும் இசை ஞானம் தேவைப்படும். திரு. சுப்பாராவ் அவர்களின் கடினமான உழைப்புக்கு என் வந்தனங்கள். மனோகர் தேவதாஸ் வரைந்த எம் எஸ் அவர்களின் ஓவியம் இதில் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பாரத ரத்னா, மேக் சே சே விருது எல்லாம் அவரின் திறமைக்கு மட்டும் கிடைத்தவை அல்ல, மாறாக அவரின் பணிவிற்கும் அர்பணிப்பிற்கும் கிடைத்தவை. இசையாய் வாழ்ந்த ஒரு இசை குயிலின் குரலின் குழைவை, மயிலிறகு வருடலை அனுபவிக்க அவசியம் இந்த புத்தகத்தை வாசியுங்கள்….
நன்றி:
இந்து கணேஷ் முகநூல் பதிவிலிருந்து….