நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சண்முகசாமி

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சண்முகசாமி




நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

திருநர்களின் வாழ்வில் நடைபெறும் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் என்னவென்று ஓரளவு தெரிந்தே தான் இருக்கிறேன்/றோம். ஆனால் மிகத் துல்லியமாக அவர்களின் கொடுந்துயரம் நிறைந்த வாழ்வை இல்லையில்லை பூமி தன்னிடத்தில் இருப்போரை வெளியில் தூக்கி வீசாததால் வேறு வழியின்றி திருநர்கள் நடைப்பிணமாக வாழும் இப்பூமியின் வாழ்வை தோழர் மு.ஆனந்தன் அவர்கள் கதைகளாக (இந்நூலை வாசித்தால் கதையா இல்லை வாழ்க்கைப் போராட்டக் களமா என வாசகர்கள் உணரலாம்) தொகுத்து வழங்கிய விதம் உள்ளபடியே பூமியின் ஈர்ப்பை விட அதிக ஈர்ப்பை ஆசிரியரிடம் நாம் பெறுவோம்.

இந்நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் வரும் கைரதி/கைரதன் வாழ்வுப் போராட்டம் நம்மை ஒன்று வெட்கித் தலைகுணிய வைக்கும் அல்லது ஆனந்தக் கண்ணீரில் மிதக்க வைக்கும். அதுமட்டுமா முக்கியமான இடத்தில் கதாப் பாத்திரங்களுக்கு உவமையும், வர்ணனையும் கொடுக்கும் அழகே அழகு. இந்த வர்ணனை/உவமைகளை தேடிப் பொருத்துவதற்கே தோழருக்கு நிறைய காலம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.

உதாரணமாக
*JNU பல்கலைப் பதிவாளரிடம் கைரதன் மற்றும் தோழர்கள் குழு, ‘விண்ணப்பத்தாளில் ஆண், பெண் என இரண்டு தேர்வு தானே இருக்கு ஏன் மாற்றுப்பாலினத் தேர்வு இல்லை’ என கேட்கும்போது,
பதிவாளரின் பதிலில்லா உணர்வை ‘பிரியாணிக்கு தம் வைத்தது போல் அவர் குமுறிகிட்டிருக்கார் அவர் பதிலே அளிக்கவில்லை’ என எழுத்தாளர் நச்சின்னு வைத்த பேனா முள் அப்படியே நம்மில் எழுதியதாகவே உணர்வோம்.

*’ஓலையக்கா லாக்கப்’ கதையில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட கைரதி காவலர்களின் வசவுகளால் நொறுங்கிப்போய் இருக்க ‘நீ ஆம்பளையா பொம்பளையான்னு பார்க்கனும் கழற்றுடி துணியை என உருவியபோது கைரதி தன் மானத்தைக் காத்துக்கொள்ள தன்மீது தீவைத்துக்கொள்ள சுள்ளிகளைத் தேடினால். ஆனால் சுற்றிலும் சு…….களாகவே இருந்தன என்று ஆசிரியர் எழுதிய போது நம் மனம் குன்றி அப்படியே அந்த சு…களை அறுத்தெறிய வேண்டும் என்று மனம் குமுறியது.

இந்நூலில் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை தோழர்களே.

கழிவறைக்காக லாட்ஜில் வேறுவழியின்றி எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கட்டிட எல்லா லாட்ஜிலும் கைரதிகள் ஏறியிறங்கி அவமானப்பட்டதையா;

இல்லை வேலை செய்து வாழவேண்டும் என்று பூமிப்பந்தில் இடமில்லாமல் சுற்றிவரும் கைரதியை லாக்கப்பில் வைத்து காவல் மிருகங்கள் பாலியல் ரணக் கொடூரம் செய்து நீதிமன்றத்தில் ‘தகாத உறவு கொண்டனர்’ என்று பொய்கூறி அந்தக் காவல் மிருகங்களே பல ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கித் தந்தையா;

இல்லை காவல்துறையால் தேடித்தேடி கைது செய்யப்பட்ட கைரதிகள் என்ன படித்துள்ளனர் என்று நல்ல உள்ளம் கொண்ட பெண் காவல் தெய்வத்தால் கேட்கப்பட்டபோது அமைதியாக இருந்து இறுதியில் ‘மருத்துவர்’ என்று அந்தக் கைரதி கூறியபோது இந்த உலகமே அரண்டது போன்ற உணர்வா;

இல்லை பாவ மன்னிப்பு எல்லோருக்கும் கிடைப்பது போல் எனக்கும் கிடைக்குமா? நான் திருச்சபையில் உயர்ந்த பதவியில் அமரமுடியுமா? என்று வாடிகன் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்ட கைரதிக்கு ‘பெண்ணிற்கு அப்பதவி வழங்கமுடியாது’ என பாவமன்னிப்புக் கூண்டே மறுத்ததையா

எதை எழுதுவது எனத் தெரியவில்லை தோழர்களே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி திருநர்களின் குறிப்பான பிரச்சினைகளை சமூகத்தில் வைத்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு நம்மால் முடிந்த குரலை எழுப்பவேண்டும் என்ற உள்ளுணர்வு பீறிட்டு வெளிவந்ததை உணர்ந்தேன் தோழர்களே!

இறுதியாக இந்த உலகத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்,

“பொதுவான கழிவறைகளில் ‘ஆண், பெண்’ மட்டுமே இருக்குமே, இனி கூடுதலாக ‘கைரதி, கைரதன்’ எனக் கூடுதலாக இரண்டு கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த உலகம் குரலெழுப்புமா? நான் எழுப்புகிறேன் தோழர்களே உடனே கழிவறையில் நான்கு அறைகள் கொண்ட தடுப்புகளை உருவாக்கு அரசே” என்று.

அடுத்து பள்ளிகளே, மாணவர்களில் இருக்கும் கைரதி, கைரதன்களைக் கண்டு அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையான ஆத்மார்த்தமான வார்த்தைகளை வாஞ்சையுடன் வடித்திடுமாறு வேண்டுகிறேன் சமூகம் தானாகவே மாறும்.

ஆஹா அணிந்துரை வழங்கிய தோழர் #அழகியபெரியவன் அவர்களின் வார்த்தை சும்மா நச்.

‘அறியாமையுடன் திரியும் மனிதரின் பார்வையில் உடன்பாடில்லாதவை எவையுமே விலக்கப்பட்டவைதான். மாறிய அல்லது திரிந்த பாலினக் கூறுகளை அவர்கள் மூர்க்கமாக விலக்குகின்றனர். ஏனெனில் அவர்களால் அத்திரிந்த பாலினக் கூறுகளின்மீது கற்பு, ஆணாதிக்கம், சாதி, மதம், வணிகம் ஆகிய அளவுகோல்களை துல்லியமாக ப் பொருத்த முடிவதில்லை!’

தோழர் #பிரியாபாபு அவர்கள் ‘திருநர் இலக்கியத்தின் புதிய முகம்’ என்று இந்நூலுக்கு மகுடம் சூட்டியிருப்பார்.

முதல் பதிப்பு ஜூன்-2022, இரண்டாம் பதிப்பு ஆகஸ்டு-2022. இதுவே இந்நூலின் மகத்துவத்திற்கு சாட்சி.

ஏராளமான தரவுகளைக் காண அவசியம் அனைவரும் ‘கைரதி377’ நூலை வாங்கி வாசிக்க வேண்டுகிறேன் தோழர்களே!

தோழர் #முஆனந்தன் அவர்களே தங்களின் உயிரோட்டமான எழுத்திற்கு செவ்வணக்கம்!

தோழமையுடன்
சண்முகசாமி இராமசாமி
புதுச்சேரி
செல்-9443534321