Posted inPoetry
சுட்டுவிரலுடன் ஓர் சுண்டுவிரல் கவிதை – கார்கவி கார்த்திக்
ஆறுதல் சொல்லி சொல்லி
கண்ணீருக்கு கைகள்
வலித்துப் போனது
எந்த தீங்கும் செய்ய நினைக்காத மனங்களுக்கு தொடர் காயங்கள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
யாரிடம் சொல்லி அழ
யார் தேற்றலில்
எழுந்து நிற்க
நொந்து போன மனதில்
எத்தனை இரணங்கள்
தீண்டாதீர்கள்
அருகில் வாராதீர்கள்
யாருடைய உறவும் அவசியமில்லை
யாரையும் என் நிழல்கூட
ஏற்க விரும்பவில்லை
நிலை அறிந்து பழகிட யாருமில்லை
எனக்கென்று அவளைத்தவிர யாருமில்லை…
கவலை என்னவென்று
சொல்லி அழுதுவிடுகிறாள்
இந்த மரத்தலான ஆணுக்கு
கண்கள் சிவப்பதோடு
முற்றும் பெறுகிறது கண்ணீர்
யாருக்குதான் கவலையில்லை
என்போல யாருக்குதான்
கவலையில்லை
தொலைந்துவிட தோன்ற நினைக்கையில்
கண்ணீர் துடைக்க வேண்டி
அருகில் அவள்
தொலையட்டும் அனைத்தும்
நான்
அவளோடு மட்டும் பயணிக்கிறேன்
நாங்காளாய்….!
