விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி

விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி




ரேகைகள்
கிழிந்த விரல்களால்
சோற்றைக் குழைத்து
குழைத்த சோற்றை
உருண்டை பிடித்துக்
குழந்தைக்கு
சோற்றை
ஊட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா

வாய் நீட்ட
வாங்கிய குழந்தையின்
தொண்டைக் குழியில்
அடைப்பட்டு நிற்கிறது ஒரு உருண்டை சோறு
நேற்று
இரவெல்லாம்
சேற்றையும் தன் வியர்வையும்
ஒன்றாக பிசைந்து சூளையில்
செங்கல் அறுத்த
அப்பாவின்
தேய்ந்த விரல்களில்
ஒரு விரலின்
முள்ளாகிய தடயம் ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

கோடுகள் கவிதை – ச.சக்தி

கோடுகள் கவிதை – ச.சக்தி




இறந்த
உடல்களை
வேக வைத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவின்
வயிற்றில்
நெருப்பாக எரிகிறது
நெளியும் புழுவாகிய பசி,

கிழிந்த
செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் கைகளில்
நெளிய ஆரம்பிக்கிறது பலரது பாதங்களுக்கான
பாதைகள்,

தேநீர்க் கடையில்
யாரோ குடித்து
வைத்த தேநீர்க் குவளையைக்
கழுவ முற்படும்
சிறுவனின்
கண்களில்
வழிய ஆரம்பிக்கிறது
குடும்பத்தின் வறுமை,

வேகமாக சென்று
கொண்டிருந்த
இருசக்கர வாகனத்தில்
அடிப்பட்டு
இறந்து போன
அணில் குஞ்சின்

தலையில்
வரையப் பட்டிருக்கிறது
நில்,கவனி,செல் என்ற
மூன்று மந்திர கோடுகள்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791742986,