ச.லிங்கராசுவின் “பக்தி வேஷம்”
இசை வாழ்க்கை 74: என் இசையை அழைக்கிறேன் – எஸ் வி வேணுகோபாலன்
மூன்று வேளைக்கு என்று மாத்திரை மருந்து எழுதித் தருகின்றனர் மருத்துவர்கள். எல்லா வேளைக்கும் இசை என்று எழுதித் தந்தால் ஆகாதா என்று தோன்றுகிறது. எல்லாப் பொழுதும் எல்லோரும் இசையோடு நடக்காவிட்டாலும், இசை சூழவே நகர்கிறது வாழ்க்கை, வானத்து நிலா கூடவே நடந்து வருவது மாதிரி.
நம்ப மாட்டீர்கள், மேலே உள்ள பத்தியை மட்டும் மடிக்கணினியில் அடித்துவிட்டு அடுத்த இரு நாட்கள் முழுக்க வேலைகள், சில மாநாடுகள், குடும்ப சங்கமம் ஒன்று என சுற்றிக் கொண்டிருந்ததில், கட்டுரையைத் தொடராமல் வைத்திருந்தேன். அடுத்த நாளும் திருமண நிகழ்வுக்கு அதிகாலை சென்று வந்தது, அக்கா மகன் கீழே விழுந்ததில் வலக்கையில் பிரச்சனை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் சிறு எலும்பு முறிவு என்றறிந்து மனமுறிந்து முதலுதவிக்குப் பின் அடுத்தகட்ட சிகிச்சைக்கு சிந்திக்க நேரமெடுத்து அவர்கள் இல்லத்தில் கொண்டுவிட்டு வீடு திரும்பியபின் தான் தெரிந்தது, காலையில் இருந்தே உடலில் வாட்டிக் கொண்டிருந்தது ஜலதோஷம் மட்டுமல்ல, காய்ச்சலும் இருப்பது! மறு நாள் முழுக்க ஓய்வு, மருத்துவ ஆலோசனை, மெல்ல மெல்லத் தணிந்து காற்றோடு வெளியேறிக் கொண்டிருக்கிறது காற்றில் தோன்றிய காய்ச்சல்.
இருக்கட்டும், அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. எல்லா வேளைக்கும் இசை என்ற கோரிக்கை அச்சில் வராமலே அன்பர்கள் இசையை அனுப்பிக் கொண்டு இருக்கத்தானே செய்கின்றனர்!
லிங்கராசு, எதிர்பாராத ஓர் இன்பத் தேனைத் தான் பருகிய அதே வேகத்தில் (எனக்கு ஜுர வேகத்தில்!) வாட்ஸ் அப்பில் பரிமாறி இருந்தார். ஒற்றை வரியில் அதை விளக்க முடியாது. அது ஓர் இசை வாழ்க்கையின் குறுநாவல். அதிவேக நினைவு கூரல். பல்வேறு மனிதர்களோடு வெவ்வேறு காலங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒரே நேரத்தில் யாரோ ஓடவிட்டுக் கேட்கையில் நீங்கள் இன்னார் என்று அடையாளப்படுத்திப் பரவசப்படுமுன் அடுத்த புகைப்படம்…அடுத்த பரவசம்..அதற்குள் மற்றுமொரு படம்…. மற்றுமொரு பரவசம் தணியுமுன் இன்ப அதிர்ச்சி..அதை அனுபவிக்குமுன் மேலுமொரு கிளர்ச்சி…. வேறெப்படி வருணிக்க?
ஆனால், அந்த இசையோட்டத்தைக் கேட்டதோடு நிற்க இடம் கொடுக்கவில்லை மனம். கொஞ்சம் கூடுதலாக அகழ்ந்து பார்ப்போம் என்று தேடுகையில் கிடைத்த தரவுகள்…ஆஹா…. எல்லாம் கொட்டிக்கிடக்கிறது, நாம் தான் தாமதமாகச் சென்றடைகிறோம் என்று நொந்து கொண்டேன் என்னை!
எம் எஸ் வி என்கிற மனிதர் அவர் உருவத்தைப் போல் எத்தனை மடங்கு உயரத்தில் இசையுலகில் சஞ்சரித்தவர் என்பதை நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகுகிறது. அப்பேற்பட்ட மெல்லிசை மன்னர், தானாகப் போய் இவர் வீட்டில் இருந்து இவரை அழைத்து வந்த ஆண்டு, நாள் யாருக்குத் தெரியும்….. அப்படி அழைக்கப்பட்டு வந்தவர் வாசித்த இசைக்கருவியைத் தம் உயிராகக் கருதி விஸ்வநாதன் பயன்படுத்திய பாடல்களின் தளங்கள், தன்மைகள், உணர்வுகள், உணர்ச்சிகள் தாம் எத்தனை எத்தனை….
புல்லாங்குழல் வாசித்தவர்…தெலுங்குப் படங்கள் உள்பட கிளாரினெட் வாசித்துப் புகழ் பெற்றிருந்தவர்… சாக்ஸஃபோன் கற்றிருந்தவர். மிகவும் தற்செயலாகக் கையில் எடுத்தார் அந்தக் கருவியை…. அங்கிருந்து அவர் கடந்த இசைப் பயணம் அடுத்தடுத்த தலைமுறை ரசிகர்களது இசை வாழ்க்கைப் பயணத்தின் பகுதியாகி விட்டது!
மகத்தான இசைப்பாடல்களில் அந்த எளிய மனிதரின் வாசிப்புப் பகுதிகளை மட்டுமே தொகுத்து (அன்பர் வைத்தி நீடு வாழி!) 7.33 நிமிடங்களில் வழங்கி இருக்கும் துளிகளில் குளித்தெழவே குதூகலமும், பரவசமும், கண்ணீரும் கட்டுக்கடங்கவில்லை எனில், மொத்தப் பாடலோடு அந்தக் கருவியின் இசையை, அவரது மொத்த வாசிப்பைக் கேட்க முடியுமானால் எத்தனை பேரானந்தம் வாய்க்கும்……
இன்னுமென்ன புதிர்….ஷெனாய் சத்யம் என்று அழைக்கப்படும் சத்யநாராயணா தான் அது! ஷெனாய் உலக பிதாமகன் பிஸ்மில்லாகான் அவர்களால் மதிக்கப்பட்ட பெருங்கலைஞன். ஜெமினி ஸ்டுடியோ ஆர்ட்டிஸ்ட், பின்னர் அங்கிருந்து வெளியேறிய காலத்தில் எம் எஸ் வி அன்போடு சுவீகரித்துக் கொண்ட மேதை. மங்கள இசை என்று வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இசைக்கருவியின் அசாத்திய கற்பனை உணர்ச்சி மழையை திரை இசைப்பாடல்களில் தங்குதடையின்றி பொழிந்து கொண்டிருந்தவர். 1974இல் வெளியான தீர்க்க சுமங்கலி தான் அவரது கடைசி வாசிப்பு.
லிங்கராசு அவர்கள் பகிர்ந்து கொண்ட இணைப்பில் அடுத்தடுத்து வேகமாக வெவ்வேறு திரைப்பாடல்களில் அவரது வாசிப்பைக் கேட்கும் மூத்த ரசிகர்கள் அந்தந்தப் பாடல்களை எளிதில் கண்டடைய முடியும், ஓரிரண்டு பாடல்கள் பிடிபடாமல் அதற்குள் அடுத்த பாடல் தொடங்க இன்னும் திணறிக்கொண்டிருக்கிறேன் நான். அந்த த்ரில் இல்லை என்றால் என்ன (இசை) வாழ்க்கை!
விசாகப்பட்டினம் அருகே உள்ள விஜயநகரம் தான் அவரது சொந்தவூர். அங்கிருந்து தான் சென்னை வந்தடைந்தார். இருதய பாதிப்பு இருந்திருக்கிறது அவருக்கு. இயற்கை நமக்கு அதிக வரம் அளித்திருக்கவில்லை. ஆனாலும், அவருடைய மகன்கள் நால்வர், மகள், மருமகன் எல்லோரும் இசை உலகில் தங்களைக் கண்டெடுத்தது மிகவும் சிறப்பான செய்தி.
மூத்தவர் கிருஷ்ணகுமார். சலீல் சவுத்ரி, தேவராஜன் மாஸ்டர் போன்ற பிரபல இசை மேதைகளில் புல்லாங்குழல் கலைஞராக வாசித்தவர். அடுத்தவர் பாபுஜி (இப்போது இல்லை) ஓர் அருமையான கிடார் இசைக்கலைஞர். மூன்றாமவர் நாராயண ராவ் (அண்மையில் காலமானவர்) மிகச் சிறந்த வயலின் கலைஞர். இவருடைய பயிற்சியில் சிறந்த செல்லோ இசைக்கருவி வாசிப்பவராகவும், ஷெனாய் கலைஞராகவும் பரிணமித்திருக்கும் நான்காமவர் பி எஸ் ராமச்சந்திரன் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், சத்யம் அவர்களது சிறப்பியல்புகளை!
தந்தை வாசித்த ஷெனாய் கருவியை, அந்த அழகான கருவியைச் சுமந்திருக்கும் மரப்பெட்டியை, அவர் பாடல்களுக்கிடையே வாசிக்க இசையமைப்பாளர் சொல்லக் கேட்டுத் தெலுங்கில் தனது கைப்பட எழுதி வைத்திருந்த இசைக் குறிப்புகளை எல்லாம் ராமச்சந்திரன் பத்திரமாக வைத்திருக்கிறார். அதே கருவியில் தந்தையின் சிறப்பான இசைத் துளிகளை அவரும் அத்தனை இனிமையாக இசைக்கவும் செய்கிறார்!
(மெல்லிசை) மன்னர் குடும்பம் சார்பில் இவரை நேர்காணல் செய்திருக்கும் பாப்ஜி பீட்டர் அவர்களுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். எத்தனை அருமையான கேள்விகள் சுரங்கத்திலிருந்து தோண்டியெடுத்துப் பெறும் அரிய செய்திகள்.
ஷெனாய் கருவியில் நாதஸ்வரத்தைப் போலவே சீவாளி உண்டு. அது மிகவும் மென்மையாகவோ, பெரிதும் கடினமாகவோ அமைந்துவிடக் கூடாது. ஈரப்பதம் வேண்டும், ஆனால் அளவோடு. அதற்காகக் காய்ந்து விட்டிருந்தால் காற்று தான் வரும், இசை கேட்காது. நாதஸ்வரத்தில் சுதந்திரமாகக் காற்றை உடசெலுத்தி வாசிக்க இயலும், ஷெனாயில் மிதப்படுத்தி மிகப் பக்குவமாகக் காற்றை அதற்கேற்ப சமன்படுத்தி ஊதி தான் சிறந்த வாசிப்பை வழங்க முடியும்! புல்லாங்குழல் உள்ளிட்டு இசைக் கருவிகளுக்கு இப்படியான வெவ்வேறு வகை பக்குவங்கள் உண்டு என்றாலும், ஷெனாய் இன்னும் நுட்பமானது என்று சொல்லப்படுகிறது.
இத்தனை கெடுபிடிகள், சவால்கள் மிகுந்த கருவியில் தான், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், நினைக்கத் தெரிந்த மனமே, நிலவே என்னிடம் நெருங்காதே, பல்லாக்கு வாங்கப் போனேன், ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், கண்ணிலே என்ன உண்டு, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்….என்று எண்ணற்ற பாடல்களில் பின்னி எடுத்திருக்கிறார் சத்யம்.
பாக்கியலட்சுமி படத்தின் புகழ் பெற்ற ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்…’ பாடலின் சரணங்களில் பி சுசீலாவின் இனிமையான வரிகளுக்கு இடையே ஒலிக்கும் ஷெனாய் இசை எத்தனை நெகிழ்ச்சிக்குரிய உணர்வுகளைக் கிளர்த்தக் கூடியது, எல்லாம் சத்யம் அவர்களது மாயாஜாலம் தான்!
இராமச்சந்திரன் பேச்சில் எல்லாக் கலைஞர்களையும் கொண்டாடும் நல்லுள்ளம் பளிச்சிட்டுக் கொண்டே இருக்கிறது. ஓர் இசைக்கலைஞர் இசைக்கலைஞராகத் தான் இருக்க வேண்டும், எந்திரமாக அல்ல என்கிறார். தனது தந்தைக்கோ, புகழ் பெற்ற எந்தக் கலைஞருக்குமோ அந்த இசை எப்படி சாத்தியப்பட்டது எனில் கள்ளம் கபடமற்ற அர்ப்பணிப்பும், இசையில் இருந்த அளவு கடந்த ஈடுபாடும் தான் என்கிறார்! தனது தந்தை ஈட்டிய சொத்து அவரது கலைக்கான புகழன்றி அசையும் அசையா சொத்துக்கள் அல்ல, பிஸ்மில்லா கான் ஏதோ நிகழ்ச்சியில் வாசித்தார் என்றால், அதற்கான சன்மானம் அவரைச் சுற்றி 500 எளிய மனிதர்களுக்கு அன்னமாகப் போய்ச் சேர்ந்துவிடும், காசு கருதுபவர்கள் அல்ல இவர்கள் என்று கண்களில் பெருமிதம் மின்ன இந்தக் காலத்தில் சொல்லத்தக்க மகனைப் பெற்றவர் சத்யம் என்பதை விட வேறென்ன சொல்ல வேண்டும்!
செல்லோ இசைத்தும், ஷெனாய் வாசித்தும் இராமச்சந்திரன் அண்மைக் காலப் பாடல்களிலும் தேர்ச்சியான இசையை பொதிகை தொலைக்காட்சியின் இசையும் இசையும் என்ற நிகழ்வில் வழங்கி இருப்பதைக் கேளுங்கள். அன்பின் பொழிவு அது!
மெல்லிசை மன்னர்களின் இசையில், கர்ணன் படத்தின் ‘இரவும் நிலவும் வளரட்டுமே’ என்ன மாதிரியான கிறக்கம் அளிக்கும் பாடல், ஆனால், கர்ணனில் எந்தப் பாடல் தான் சாதாரணமானது! டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா இணை குரல்களில் என்றென்றும் இரவு நேரப்பாடல்கள் வரிசையில் முக்கியமானதாகத் திகழும் அந்தப் பாடலின் சரணங்களுக்கு இடையே இரட்டை ஷெனாய், ஒன்று கீழ் வரிசையிலும் மற்றொன்று மேல் நோக்கியுமாக இசைக்கும் இடம் அத்தனை உயிரானது.
கர்ணன் படத்திற்கான பாடல்கள் பதிவின்போது சற்று உடல் நலக்குறைவில் ஓய்வில் இருந்திருக்கிறார் சத்யம். வடக்கில் இருந்து ராம் லால் என்ற கலைஞரை – அவரே ஓர் இசை அமைப்பாளரும் கூட, ஷெனாய் வாசிக்க அழைத்திருந்தார் எம் எஸ் வி, ஆனாலும், சத்யம் அவர்களை ரிக்கார்டிங் நேரத்தில் வந்து விட்டுப் போகுமாறு வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார், ‘இந்தப் பாடலில் ஒரு சிறிய இடத்தில் உங்கள் வாசிப்பும் இருக்கட்டும்’ என்று எம் எஸ் வி வாசிக்க வைத்தது தான் சத்யம், ராம் லால் இரட்டை ஷெனாய் கலக்கிய அந்தக் கலக்கல். முக்கியமான உள்ளூர்க் கலைஞர் ஒரு மகத்தான தயாரிப்பில் விடுபட்டு விடக்கூடாது என்ற அக்கறை கொண்டிருந்த எம் எஸ் வி பற்றி நினைத்தால் ஏனய்யா கண்ணீர் வராது!
முதன்முறை கேட்டதில் இருந்தே வீட்டில் அதிகம் பாடிக் கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்றில், சத்யம் அத்தனை கலந்திருக்கிறார் என்பதை மிகவும் தாமதமாக உணரும்போது அந்தப் பாடல் மீது இன்னும் காதல் கூடுகிறது. ஆதரவற்ற ஜீவனான தனக்கு பித்தாகிப் போய்விட்ட வாழ்க்கையின் இடையே மிகத் தற்செயலாக வாய்த்த பற்றுதல் மிக்க உறவும் தன்னைக் கைவிட்டுப் பிரிந்து போக நேரும் ஒரு சோதனை மிக்க இரவில் வெடித்தழும் நாயகன் தனது உள்ளத்தைத் திறப்பதில், கேட்போர் உள்ளத்தையும் கரைத்துவிடுகிற பாடல் அது. பாடலுக்கான பாவங்களை சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.
‘நான் உன்னை அழைக்கவில்லை’ என்று தொடங்கும் டி எம் சவுந்திரராஜன், ‘என் உயிரை அழைக்கிறேன்’ என்கிற இரண்டாவது வரியை எடுத்து வைத்ததும், அவரது உருக்கத்திற்குத் தனது ஷெனாய் வாசிப்பில் மேலும் உருக்கம் சேர்க்கிறார் சத்யம். அதற்குப் பிறகு கேள்வியே கிடையாது, கதையில் அந்த இடத்திற்கான அற்புதமான பாடல் பிறந்து விடுகிறது.
பல்லவியைத் தொடங்குகிறார் டி எம் எஸ், ‘கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை’ என்கிற வரி சாதாரணமானது, ஆனால் எங்கே அதை எழுதுகிறார் கவிஞர் என்கிறபோது எப்படி மின்னுகிறது, அதுவும் ‘மனதில்’ என்பதில் டி எம் எஸ் செதுக்கும் சிறு நகாசு ….! அடுத்த வரியில், ‘நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை, பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை’ என்பது புரிந்தும் பிடிபட விரும்பாத சூழலின் முரணை பிரதிபலிக்கிறது.
முதல் சரணத்தை நோக்கிய திசையில், வயலின்கள் எங்கே இழைக்கத் தொடங்கி, அதில் எந்த இடத்தில் ஷெனாய் வந்து கலக்க வேண்டும் என்பதை எத்தனை நேர்த்தியாக சிந்தித்திருப்பார் எம் எஸ் வி!
‘என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை’ என்பது சரணத்தின் முதல் வரி, அதை டி எம் எஸ் பாடவும், சின்ன இசை கொடுத்து மீண்டும் பாட விட்டுவிடுவதில்லை எம் எஸ் வி, வயலின்களை வைத்து இழைக்கிறார், அதோடு ஷெனாய் ஒரு சிறிய வாசிப்பு, பின்னர் மீண்டும் அதே வரியை எடுக்கிறார் டி எம் எஸ். இடையே எத்தனை உணர்வுகளைக் கிளர்த்தி விட முடிகிறது என்பது தான் அந்தக் கற்பனையின் வலு!
‘வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை’ என்பது அடுத்த வரி. இது கோடிக்கணக்கானோரது வலிக்கும் இதயக் குமுறல்! அதில் கரையும் இதயத்திடம் நாயகன் உரிமை எடுத்துக் கொண்டு தனது ஆதங்கத்தை வேகமாக எடுத்து வைக்க ஏதுவாக அடுத்த வரிகளின் வேகத்தை, தாளத்தை அமைத்திருக்க, ‘அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா …’ என்று போய், ஓர் இடைவெளி கொடுத்து, தாளம் நிறுத்திக் குரல் மட்டும் ஒலிக்க, அம்மா….என்ற தனிச்சொல் எடுத்து, ‘விவரம் புரியாதா’ என்று முடித்து, பல்லவிக்குச் செல்கிறார் டி எம் எஸ். பல்லவியில் அந்த ‘நான்’ என்பது அகந்தைக்கு இடமற்ற ஓர் அடிமையின் முகவரிச் சொல், அதை ஒவ்வொரு முறையும் டி எம் எஸ் எத்தனை விதமாகக் குழைத்திருப்பார்…
இரண்டாவது சரணத்தில் ஷெனாய் மேலும் நெருக்கமாகிறது உள்ளத்திற்கு, பாரதியின் பாம்பு பிடாரன் வேறு யார், சத்யம் காரு தான், உள்ளத்தில் ஒட்டும் மூச்சுக் காற்று தானே வெளியே இசைக்கருவியில் வந்து ஒட்டுகிறது ! வயலின்கள் பராமரித்து வழங்கும் சோலையில் நிகழ்கிறது அந்த ஷெனாய் வாசிப்பு!
கண்ணதாசன், காதலையும் கடவுளையும் ஒருபோதும் பிரிப்பதில்லை. அது உரிமை சார்ந்த ஒரு குற்றச்சாட்டு. அதன் மீதான விசாரணை. ‘என்னைப் படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை’ என்கிறார், மீண்டும் வயலின்களும் ஒரு சிறு ஷெனாய் வாசிப்புமாக அந்த வெளியை நிறைக்கிறார் எம் எஸ் வி! ‘உன்னை அனுப்பி வைத்தான்’ என்கிறார் டி எம் எஸ், அது எப்படி சாத்தியம் எனில், அதற்குத் தான் பல்லவியில் விளக்கம் இருக்கிறதே, ‘கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை’ என்று! ‘உனக்கும் கருணை இல்லை’ என்பது நாயகியைக் குறைபட்டுக்கொள்வது போன்ற சாக்கில், பின் தேதியிட்டுக் கடவுளையும் நிந்தித்தல்! எப்பேற்பட்ட கற்பனையோடு இந்த வரிகளில் உருக்கம் கொணர்கிறார் டி எம் எஸ்….
பிறகு வேக நடையில், ‘இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்கக் கூடாதா…’ இப்போது அம்மா இல்லை, அம்மம்மா… அடுத்த கட்ட உருக்கத்திற்கு! தாளக்கட்டு தவிர்த்து டி எம் எஸ் மட்டும் பாடுகிறார், ‘இரக்கம் பிறக்காதா’ என்று!
இரக்கம் பிறக்க வைக்க மட்டுமல்ல, உற்சாகக் கிளர்ச்சியிலும் நிறைய ஒலித்திருக்கிறது சத்யம் அவர்களது ஷெனாய். அப்படியான பாடல் ஒன்றை உடனே எடுத்துப் பேசவும் ஆசை, ஆனால், இப்போதே வளர்ந்து விட்டிருக்கிறது இந்த அத்தியாயம். வேறொரு தருணத்தில் எடுத்துக் கொண்டாடுவோம்!
ஒரு பாடல் பதிவுக்காக, பிஸ்மில்லா கான் அவர்களைப் போய்ப் பார்த்தாராம் எம் எஸ் வி, உடனே அவர் ஷெனாய் எடுத்து, ஒரு சிறு வாசிப்பு கொடுத்து, என்னது இது என்று கேட்டாராம், உறைந்து போய் நின்றிருக்கிறார் விஸ்வநாதன். ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ பாடலில் வரும் வாசிப்பு அது, ‘இப்பேற்பட்ட வாசிப்பு கொடுத்த கலைஞன் உங்களிடம் இருக்கிறார், அவரை விட்டு என்னிடம் வருவானேன்?’ என்று கேட்டாராம் பிஸ்மில்லா. அசந்து போன எம் எஸ் வி, “அய்யா, அந்த அற்புதக் கலைஞர் மறைந்துவிட்டார்!” என்று சொன்னாராம். சத்யம் மட்டுமல்ல, அவரை மதிக்கும் தன்மையில் பிஸ்மில்லா கான், எம் எஸ் வி எல்லோரும் சம உயரத்தில் ஒளிரும் தன்னடக்க மேதைகள் அல்லவா!
இராமச்சந்திரன் ஒரு வேண்டுகோள்தான் திரும்பத் திரும்ப வைக்கிறார், அதை மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்கள் எண்ணற்ற மேடைகளில் சொல்லிக் கொண்டே இருந்தார்: இசைக் கருவிகளைக் கொண்டாடுங்கள், இசைக் கலைஞர்களைக் கொண்டாடுங்கள், அழிந்து விடாது கலையைத் தழைக்க வையுங்கள், கீ போர்டில் எல்லா இசையையும் கொண்டு வந்துவிட முடியும் என்று எண்ணி எந்திரங்களாகிப் போய் விடாதீர்கள் என்பது தான்!
எந்திரமாகாமல் நம்மை மந்திரம் போட்டு மனிதர்களாகத் தக்க வைப்பதில் இசைக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அந்த இசையையும் ஓர் எந்திரத்திடம் ஒப்படைப்பதா என்பது தான் எழுப்பப்படும் கேள்வி! பல்வேறு விதமான இசையை அந்தந்தக் கருவிகள் மூலம் வாசிக்கக் கேட்கும் இன்பம், இசைக் கலைஞர்களது வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் சமூக இன்பமாகிறது! ‘வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி’ என்று மகாகவி ‘வேயின் குழலோடு வீணை முதலாய்’ எடுத்துச் சொல்லிச் சென்றது தானே இசை வாழ்க்கை!
இசைத்தட்டு சுழலும் ….
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com
இசை வாழ்க்கை 69 : இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன் – எஸ்.வி.வேணுகோபாலன்
இசையென்ன சுதியென்ன லயமென்ன அறியேன்
எஸ்.வி.வேணுகோபாலன்
கடந்த சில நாட்களில் இசை வாழ்க்கை குறித்த நேரடி உரையாடல்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக அமைந்தது மிகவும் தற்செயலான ஒன்று.
அன்புத் தங்கை ஆண்டாள் (நான் அவளுக்கு வைத்த பெயர் ராதா), தங்கள் மகள் திருமண அழைப்புக்காக அண்மையில் வீட்டுக்கு வந்திருக்கையில், இசை வாழ்க்கை தொடரை முடிக்கலாமா என்றேன். வாக்கியத்தை முடிக்குமுன்பே, ‘ஏன் அண்ணா, எதுக்கு…அதெப்படி…யார் விடுவாங்க உன்னை?’ என்று அடுக்கடுக்காக வந்த அவளது கேள்விகளும், அவளது முகத்தில் பளிச்சிட்ட ஏக்கமும் வாழ்நாள் மறக்க முடியாதது.
‘எலந்தப் பயத்த’ விட்டுடீங்களே சார் என்று எல் ஆர் ஈஸ்வரி கட்டுரையைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பி அதன் தொடர் கடிதப் போக்குவரத்தில் மிக நெருக்கமான நட்பு பாராட்டும் கோவை லிங்கராசுஅவர்களும் தொடர் பற்றிக் கேட்டார். நேரில் பாராது மூன்றாண்டுகளாக அன்பு கொண்டாடும் கோவையின் மற்றுமோர் அன்பர் முருகானந்தம் கடந்த வாரம் நேரில் பார்க்கும்போது இசை வாழ்க்கை பற்றியே முதலில் பேசினார்.
அதன் அடுத்த சில நாளில் சென்னையில் ஒரு திருமண வரவேற்பில் பார்த்தபோது, சி ஐ டி யு தலைவர் தோழர் அ சவுந்திரராஜன் அவர்கள், இசை வாழ்க்கை தொடரைப் புத்தகமாக எப்போது தருவீர்கள் என்றே கேட்டார்.
இசை எல்லோரது வாழ்க்கையிலும் அவரவர் தேர்வு செய்யும் விகிதத்தில் கலந்திருக்கவே செய்கிறது. இசையே வாழ்க்கையாக இருப்போர், நம் வாழ்க்கையில் இசை நிரப்பித் தருகின்றனர்.
முருகானந்தம் அவர்கள் கோவையில் நான் சென்றிருந்த திருமண மண்டபத்திற்கே தமது கவிதை நூலோடு வந்து பேசிக்கொண்டிருக்கையில், மேலே மண்டபத்திலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதுவும் இசை வாழ்க்கை அழைப்பு தான்.
அதற்குச் சற்றுமுன் தான் அருமையான ஒரு திரைப்பாடலைத் தனது இசைக்கருவியின் வழி செவிகளில் பொழிந்து கொண்டிருந்தார் நாதஸ்வரக் கலைஞர், என்னுள், வண்ணதாசனின் நடேசக் கம்பர் மகன் வந்து போனார். ஜெயபிரகாஷ் (அல்லது ஜெய்பிரகாசக் கம்பர்!)தான் அழைத்தது, ‘அந்தப் பாடல் வாசிப்பை அலைபேசியில் பதிவு செய்தீர்களே, எனக்கும் அனுப்புங்கள்’ என்று தான் அவரது அழைப்பு. இதைவிட இசை வாழ்க்கை வேறென்ன என்று ரசித்தார் முருகானந்தம்.
முழு பாடல் கூட அல்ல, இருக்குமிடத்திலிருந்து எழுந்து சென்று நாதஸ்வர இசைக்குழுவினர் அருகே அமர்ந்து தலையாட்டி ரசித்து, இரண்டாம் சரணத்தின் பிற்பகுதியிலிருந்து பாடல் நிறைவு பெறும்வரை தான் பதிவு செய்தது. முதல் நாள் அவரே சாக்ஸஃபோன் வாசித்துக் கலக்கினார் என்றார் மணவீட்டாரான தோழர் மோகன சுப்பிரமணியன்.
இளையராஜா – வாலி – ஜேசுதாஸ் – சித்ரா கூட்டணியில் விளைந்த மனதில் உறுதி வேண்டும் படத்தின், கண்ணா வருவாயா பாடலுக்குத் தங்கள் உடல் பொருள் ஆவி கொடுக்கத் துடிக்கும் கருத்துகள் நிரம்பித் ததும்புகின்றன யூ டியூபில்.
நேரடிக் காதல் பாடல் அல்ல, கண்ணா வருவாயா! நிறைவேறுமா என்ற கலக்கம், கூடிவிடாதா என்ற ஏக்கம், ஒன்று கலத்தலின் தாபம், அதன் நீட்சியான கனவுகளின் பரவச உச்சம். அதனால் தான், கவிஞர் மீராவைத் தேர்வு செய்கிறார். இரு கோடுகளில் வாலி எடுத்துக் கொண்டது ‘பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக’ என்பது. இங்கே ராதையைக் கூட யோசிக்க முடியாது. கண்ணன் வரவேண்டும் என்பதல்ல பல்லவி, கண்ணா வருவாயா என்பது தான்!
கண்ணனின் நினைப்புக்கான குழலோசையும், துயரக் கனவுகளுக்கான வயலின்களும், இரண்டின் இடையே ஊசலாடும் நெஞ்சைத் தாங்கிப் பிடித்துத் தேற்ற அபாரமான வீணையும், இதயத் துடிப்புகளுக்கான அசத்தல் தபலாவுமாக ஓர் அற்புத இசைக்கோவையை வழங்கி இருக்கிறார் ராஜா. கண்ணனின் வசீகரக் கனிவு நாடகத்திற்கான குரலை ஜேசுதாஸ் பொழிகிறார் எனில், மீராவின் பரிதவிப்பும், மோகமும் ஓர் உருக்கமான மொழியில் இசையாகிறது சித்ராவின் குரலில்!
கேட்பவர் மன நிலையைப் பாடல் நிகழும் களத்தை நோக்கி ஈர்ப்பது கூட அல்ல, திரட்டுகிறார் ராஜா. இந்தப் பாடலை கோரஸ் குரல்களில் தொடங்குகிறார்! குழுவினரின் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ….ஹம்மிங், மீராவின் தனிமைத் துயரின் இருளை எதிரொலித்து வெளிச்சம் நோக்கி ஒரு குறும்பயணம் போல் அமைகிறது. அதன் நிறைவில் (மோர் சிங் கூட ஒலிப்பது போல் உணர முடிகிறது), தபலாக்கட்டு சதிர் போல ஒலித்து படிப்படியாக விலகி ஓய்ந்து பாடகிக்கு இடம் கொடுத்து நிற்கிறது.
கண்ணா வருவாயா என்ற பல்லவியின் முதல் வரியைத் தாளக்கட்டு இன்றித் தான் இசைக்கிறார் சித்ரா. ஒற்றை அழைப்பில் வருபவன் அல்ல என்பதால், தாளத்தோடு இயைந்து மீண்டும் அதே வரியை இசைக்கிறார் சித்ரா. அடுத்த வரியை மீரா கேட்கிறாள் என்று வாலி எழுதுகிறார், ‘மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்’ என்று கண்ணன் வருகையை மேலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்குகிறார். எங்கே இருந்து எப்படி வெளிப்படுவான் கண்ணன் என்பதன் இலக்கியக் காட்சிப்படுத்தலாக அமைகிறது அவரது அடுத்த வரி: ‘மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து’.
பல்லவியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அத்தனை சங்கதிகள்….. அதிலும், ‘மாலை மலர்ச்சோலை’ என்ற இரண்டு சொற்களில் அத்தனை மயக்க விசைகள் முடுக்குவார் சித்ரா. நதியோரம் என்பதில் அந்த யோ…அய்யோ, எத்தனை அழகாகத் தொடுப்பார், நடந்து என்பதில் அந்த உகரம் பல்லவியின் சிகரம், உண்மையில் மலையிலிருந்து ஒய்யாரமாக வேகத் தப்படிகள் போட்டுக் கீழிறங்கி வருவது போல் தான் இழைப்பார்கள் முதலில் சித்ராவும், பின் ஜேசுதாசும்!
முதல் சரணத்தை நோக்கிய ராஜ பாட்டையில், கோரஸ் ஒலிக்கிறது கண்ணா கண்ணா கண்ணா என்று உருக்கமாக! வீணை கனிவாகக் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகிறது, வயலின்களோ எச்சரிக்கையாக இரு, எச்சரிக்கையாக இரு என்று தேம்பித் துடிக்கின்றன. ஆவலுக்கும் கேவலுக்குமான உரையாடலாக இசைக்கருவிகள் இழைக்கும் காதல் நாடகத்தில், கண்ணன் வரவைப் புல்லாங்குழல் தான் மென்மையாக அறிவிக்கிறது. சுருளாகத் திரளும் கருமேகங்கள் போல் குழலிசை பரவ, காற்றில் பறக்கும் முடி கண்களில் பட்டுவிடாது, கைதொட்டு விலக்கி முகத்தை வருடிக் கொடுப்பது போன்ற மென்மையான ஹம்மிங் கொடுத்துச் சரணத்தைத் தொடங்கும் ஜேசுதாஸ், ‘நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்’ என்பதில் காதலிக்கு சத்தியம் செய்து கொடுக்கும் காதலனின் மனத்தை பிரதியெடுக்கிறார் குரலில்!
‘உண்ணும்போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்’ என்ற இடத்தில் சித்ரா மீராவின் ஆற்றாமையை அழுத்தமாகப் பதிவிடுகிறார். வாலியின் சிருங்கார ரசனையில் எழுதப்பட்ட ‘கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்’ என்ற வரியில் ததும்பும் காதல் உறவை ஜேசுதாஸ் பின்னிப் பிணையும் வண்ணம் பற்ற வைக்க, தன்னையே ஒப்புவிக்கக் காத்திருக்கும் மீராவின் விரகத்தை விவரிக்கும் ‘உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்’ வரியை சித்ரா எடுக்கிறார்.
அடுத்த இரு வரிகளில் இரண்டறக் கலக்கும் சங்கம அரங்கேற்றத்தில் காதலின் சங்கதிகளை இருவரையும் இசையின் சங்கதிகளாகச் சொல்ல வைக்கிறார் ராஜா, அதிலும், ‘சொர்க்கம் இதுவோ’ என்ற வரியில் தான் எத்தனை எத்தனை ரசவாதம்… ஜேசுதாஸ் இதயங்களைக் கரைத்துவிடுகிறார். அதுவும், ‘மீரா வருவாளா……’ என்று அவர் எடுக்கும் பல்லவியில் கண்ணனின் கள்ளக் குறும்பு நாடகமும் மனக்கண்களில் விரிகிறது.
இரண்டாவது சரணத்தை, சோகம் இழையோட ஒற்றை வயலினும், அதன் எதிரொலியாகக் கூட்டான வயலின்களும் மீண்டும் மீராவின் கலக்கங்களை பிரதிபலிக்க, வீணை ஒரு சமாதான சமரசத்தை எடுத்துப் பேசுகிறது. ஆனாலும், இதயத் துடிப்புகள் கூடி விடுகின்றன, சூழலின் பரிதவிப்பில். எனவே ராஜா தாளகதியை வேகப் படுத்த வேண்டி இருக்கிறது. தன்னன தன்னன தானத் தன்னன தன்னன தானத் தான தா….ன……னா என்ற மெட்டில் அமையும் இரண்டாம் சரணம், மஞ்சத்தில் கொஞ்சி மகிழ்ந்து குலாவும் இணைகளின் இன்ப விளையாட்டை வாலியின் துள்ளல் சந்தங்களில், சித்ராவும் ஜேசுதாசும் வழங்கும் ரசனை மிக்க குரல்களில் படைக்கிறது.
பாடலின் நிறைவுப் பகுதியில் உருளும் வேக தாபத்தை அன்று கோவை திருமண நிகழ்வில் ஜெயபிரகாஷ் இயன்றவரை நாதஸ்வரத்தில் வழங்க எடுத்த முயற்சி மறக்க முடியாதது.
ஜூன் 24, கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள், என்ன கவித்துவ இசையான தற்செயல் ஒற்றுமை! சொற்களில் இருந்து இசை கிடைக்கிறது என்ற விஸ்வநாதன் அவர்களும், இசையாகவே கவிதை வார்த்துக் கொண்டிருந்த கண்ணதாசன் அவர்களும் தமிழ்த் திரை இசைக்கு வழங்கிச் சென்றுள்ள செல்வ நிதியம் அள்ள அள்ளக் குறையாதது.
ஏனோ கடந்த சில நாட்களாக, ‘கண்கள் எங்கே’ பாடலில் நெஞ்சம் கிறங்கிக் கிடக்கிறது. கர்ணன் படத்திற்கான இசையை மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி – டி கே ராமமூர்த்தி முற்றிலும் விரிந்த கற்பனை தளங்களுக்கு எடுத்துச் சென்று, காவிய முயற்சிக்கேற்ற இசைக்கருவிகளையும் வடக்கே இருந்து தருவித்து, இசைக்கலைஞர்களையும் வருவித்துப் படைத்திருக்கும் பாடல்கள் கால காலத்திற்குமானவை.
நாயகி, நாயகனை எண்ணி உருகுவது பற்றி இலக்கியங்களில் கொட்டிக் கொட்டி எழுதப்பட்டிருக்கிறது. தோழிகள் அவளைச் சீண்டி ரசித்துப் படுத்தும் பாடும், தோழிகள் அவளிடம் சிக்கிக் கொண்டு படும் பாடும் ஒரு வண்ணமயத் திரைச் சீலையில் மெல்லிசை மன்னர்களும், கவிஞரும் குழைத்துக் குழைத்துத் தீட்டிய சித்திரம் கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே….
யாருமறியாத அந்திப் பொழுதில் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் பாவனையில் மென்மையாகத் தொடங்கும் பாடல், ஒரு பெருங்குழாம் புடை சூழப் பின்னர் கொண்டாட்ட கதியில் இசைக்கருவிகளின் கொண்டாட்டத் திருவிழாவாக மாறி விடுகிறது.
எம் எஸ் வி டைம்ஸ் இணையதளத்தில், பி சுசீலா குரலினிமையோடு, கோரஸ் ஹம்மிங் ஆக ஹா……ஹ…ஹா…ஹ ….ஹா…ஹ…ஹா… ஹ ….ஹா…ஹ…ஹா…ஹ …. என்று பாடல் நெடுக மெல்லிசை மன்னர்கள் பயன்படுத்தி இருப்பதை அத்தனை சிலாகித்து ராமன் என்பவர் சிறப்பாக எழுதி இருப்பார். வத்சன் எனும் மற்றுமோர் அன்பர் அதே பக்கத்தில், தாளக்கருவிகள் இன்றி சுசீலா பல்லவியின் முதல் அடியைப் பாடியதும் சிதார், சைலோஃபோன் உள்ளிட்ட கருவிகள் ஒலிப்பதையும், வீணையின் நாதம் இணைவதையும் உருகி எழுதி இருப்பார்.
‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, கண்ட போதே சென்றன அங்கே..’ என்ற பல்லவியை ஒரு கேள்வி பதிலாகத் தொடங்கும் நாயகி, சரணங்களிலும் தனக்குத் தெரிந்த கேள்விகளை எழுப்பித் தானே பதிலும் சொல்லியவாறு காதல் கொதிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் கவிஞர் புனைந்திருப்பார்.
இந்த அருமையான பாடலை பி சுசீலா தொடங்கும் இடத்தில், பூம்பாதங்கள் தரைக்கு வலிக்குமோ என்று நடப்பது போல அத்தனை மென்மையான தாளக்கட்டு ஒலித்தும் ஒலிக்காதது மாதிரி அமைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். பின்னர் தோழிகளின் ஹம்மிங் இணையவும் பாடலின் மொத்தத் தன்மையும் ஒரு கனவுலக நிகழ்வாகவே துள்ளாட்ட கதிக்கு மொழி பெயர்க்கப்பட்டுவிடும்.
பல்லவியில், ‘கால்கள் இங்கே மேனியும் இங்கே’ என்பதும் மெத்தென்ற குரலில் இசைக்கிறார் சுசீலா, ஆனால், அடுத்து, ‘காவலின்றி வந்தன இங்கே’ என்ற அடியில், கா என்ற நெடிலை நெடிதுயர்ந்து சங்கதிகள் இழைத்து மெருகூட்டி அந்த வரியின் தொடர்ச்சியில் ஒயிலான ஹம்மிங் சேர்த்து முடித்துப் பல்லவிக்குத் திரும்பும்போது பின்னணியில் கோரஸ் அபாரமாக வந்து கலந்து இழையோடி இன்பம் சேர்க்கிறது.
சரணங்களை நோக்கிய இசைக் கலவை ஒரு குதூகலக் காதல் களியாட்டத்திற்கான ஒத்திகை தான். அதிலும் கோரஸ் ஹம்மிங், இந்துஸ்தானி இசைக்கருவிகள் இணைந்து கிளர்த்தும் உணர்வுகள் மனத்தை வசப்படுத்தும். இரண்டாம் சரணத்திற்கு முன்பும் அதையே பயன்படுத்தி இருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.
சரணங்கள் இரண்டிலும் அருமையான வரிகளை லயத்தோடு தொடுத்திருப்பார் கவிஞர். அதிலும், முதல் சரணத்தில், ‘துணை கொள்ள அவனின்றித் தனியாகத் துடிக்கும், துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்’ என்ற இடம் அபாரம். ஏன் இந்த மயக்கம் என்ற பதங்களை அத்தனை கிறக்கமாக இசைத்திருப்பார் சுசீலா. பாடல் முழுவதிலும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கும் தேவிகா இந்த வரிகளுக்கான பாவத்தை மிகவும் காத்திரமாகச் செய்திருப்பார். சரணத்தின் நிறைவிலும் சுசீலா ஹம்மிங் எடுத்து முடிக்க, கோரஸ் உடனே கலந்து விடுகின்றனர் அவரது பல்லவிக்கு ஈடு கொடுக்க!
இரண்டாவது சரணத்தில், ‘இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்’ என்ற வரியில் அறியாமையும், ‘ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்’ என்பதில் வெகுளித்தனமும் தெளிவும் ஒரு தினுசாகக் கலந்த குரலில் எடுப்பார் சுசீலா. சரணத்தின் நிறைவில் கோலாகல கொண்டாட்ட கோரஸ் மீண்டும் வந்து இணைந்து விடுகிறது. பின்னர் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
சங்கதிகளும், ஏற்ற இறக்கங்களும், மென்மையும், அழுத்தமும் மாறி மாறி ஒலிப்பதுமான கடினமான பாடல் தான் இது, ஆனால் மிக இலேசாக இசைப்பது போல் வெளிப்படுத்தும் சுசீலா மொத்தப் பாடலையும் கட்டி ஆள்கிறார். பாடலுக்கான மொத்த உழைப்பையும் மேன்மைப்படுத்தும் வண்ணம் படமாக்கி இருப்பார் திரையுலக மேதை பி ஆர் பந்துலு.
கவிஞரும் மெல்லிசை மன்னர்களும் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அமர்ந்து மூன்றே நாட்களில் கர்ணன் படத்திற்கான பாடல்களுக்கான அடித்தளத்தை ஒருங்கிணைத்து முடித்தனர் என்று எழுதி இருந்தார் ஒருவர். இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
எண்ணற்ற எளிய மனிதர்களது வாழ்க்கையில் அவரவர் இன்ப துன்பத் தருணங்களில் எல்லாம் இசை நிறைந்திருக்கிறது. வெடிச்சிரிப்பிலும், மென் புன்னகையிலும் வெளிப்படும் இசை, கண்களில் திரையிடும் நீரிலும் கலந்திருக்கவே செய்கிறது. இசை, காற்றின் வடிவமும் வண்ணமுமாக உருவெடுக்கிறது. அதனால் தான் இசையே மூச்சாகிறது, இசை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு.
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com
சாதீயத்தில் ஹைக்கூ கவிதை – ச.லிங்கராசு
நல்ல வேளை அவள் மீதான காதலைச்
சொல்ல வில்லை அவன்
ஆணவக்கொலையிலிருந்து
தப்பினான்
யாரோ என்பதில் முகிழ்த்த
நட்பு
யார் என்பதில் அழிந்து போனது
எந்த யுக்தியும் பிடிபடவில்லையே
இவன்இன்னார் என்று அறிந்திட
சாதீயம் தொடர்கிறது
பெயரைச் சுருக்கியும் கூட
பெருமிதப்படுகிறது வர்ணம்
கந்தனாம் கபாலியாம்
கலியுகத்திலும் கல்கியாய்
கீதை பாடினால் எங்ஙனம்
ஒழியும் சாதி?
செய்தவன் நெசவாளி சூத்திரன்
தொட்டு தூக்கிப் போடுவதோ
சாஸ்த்திரன்
மதமே இங்கு மதம் பிடிக்க
வைக்க மனிதர்கள் வாழ்க்கை
சூன்யம்
ச.லிங்கராசு
பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு
சில்லெனக் குளிர்காற்று முகத்தில் அறைய, அதைப் பொருட்படுத்தாது வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் செழியன். வளைவுகளைச் சீராகக்கடந்த அந்த இருசக்கர வாகனம் தன்கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருந்ததது. வண்டியின் வேகத்தைவிட அவன் மனதின் வேகம் அதிகமாக இருந்தது.’ இன்று எப்படியாவது மலரிடம் பேசி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிடவேண்டும்’ மனதோடு பேசிக்கொண்டான் செழியன்.
செழியன், ஒன்றிய அரசின் அலுவலகத்தின் இளநிலை எழுத்தராகப் பணிபுரிபவன். மலர் சுமாரான தோற்றத்தில் அறிவாற்றல் கொண்ட பெண். வாசிப்பு அவளை
முற்போக்கான சிந்தனை கொண்ட பெண்ணாக மாற்றி இருந்தது. அவளுடைய அணுகுமுறை, பேச்சு, வேலையின் மீது அவளுக்கிருந்த அக்கறை, நல்ல இரசனை இவையெல்லாமே செழியனை ஈர்த்தது.
மலைவாசஸ்தலத்தில் அமைந்திருந்த ஒன்றிய அரசின் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த மலர்,ஆரம்பத்தில் தானுண்டு தன்வேலை
என்றிருந்தவள் நாளடைவில் எல்லோருடனும் சகஜமாகப்பழக ஆரம்பித்திருந்தாள்.
மலர் பிறந்து ஒருவருடத்திற்குள் தாயின் அரவணைப்பையும் பாசத்தையும் இழந்தாள். உடன்பிறந்த அக்கா அன்னையானாள். தந்தையையும் பிரிந்து ஒருவருடம்
ஓடிவிட்டது. இந்த அலுவலகத்தில் பணியிலிருந்தபோது அவர் மறைந்ததால் கருணை அடிப்படையில் மலருக்கு இளநிலை எழுத்தர் வேலை கிடைத்து.
உடன்பிறந்த அண்ணன் அண்ணியுடன் ஐக்கியமாகி வெகு நாட்களாகிவிட்டது.
தந்தை இரு பெண்களையும் கண்களாய் நினைத்தவர்.இரண்டு பெண்களுக்குமே அவர் நல்ல வசதிகளை ஏற்படுத்திவிட்டுத் தான் மறைந்தார்.
அக்காவும் தங்கையும் பாசமலர்களாய்த் திகழ்ந்தார்கள். மலரின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரக்கதையா? செழியன் இதை எல்லாம் கேள்விப்பட்டதும் மலர்
மீது அனுதாபம் கொண்டான்.
காலம் மலரையும் செழியனையும் நண்பர்களாக்கியது. ஆனால் அலுவலகமோ அவர்களை வழக்கமான பார்வையில் வைத்திருந்தது. நண்பர்களைக் காதலராக்கிப் பார்ப்பதும், காதலர்களைக் கணவன் மனைவியாக் கிப்பார்ப்பதும் அலுவலக உலகத்திற்குக் கைவந்தநிலையாயிற்றே!
பரஸ்பரம் தங்களின் வாழ்வியல், வாசிப்பு, இசை ரசனையைப் பற்றிப் பேசியவர்கள், திருமணம் என்ற வாழ்கையில் கடந்து போகமுடியாத முக்கிய விடயத்தில் வந்துநின்றார்கள். செழியனே இதை ஆரம்பித்து வைத்தான்.ஒரு வாரம் வரை இந்த பேச்சு நடந்துகொண்டு இருந்தது. அலுவலகம் அருகே வந்ததும் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்திய செழியன் அதைச் சாந்தப்படுத்தி நிறுத்திவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றான். அலுவலகம் களைக்கட்ட ஆரம்பித்திருந்தது.
மதிய உணவுக்குப்பின் மலரிடம் பொதுவான சில விசயங்களைப் பேசிய செழியன், முக்கியமான விசயத்திற்கு வந்தான்.
” என்ன மலர் இந்த ஒருவாரமா நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பிடிகொடுக்காமல் இருக்கிறீர்கள்? நானும் என்மனைவி தமிழரசியும் இரவு வெகுநேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம், அவள் தம்பி புகழுக்கு உங்களைப் பேசி முடிக்கலாமென்று……” அவன் முடிக்கவில்லை.
“எனக்கு இந்த திருமணம் பத்திலெல்லாம் எந்த கனவும் இல்லே ஆர்வமும் இல்லே இதைபத்திஎல்லாம் நீங்க வலைப்படாதீர்கள் செழியன்” என்று சிரத்தையின்றி பதில்சொன்னாள் மலர்.
” என்சிங்க உங்கள் உண்மையான நண்பனா நலம்விரும்பியா இதை நான் செய்யக்கூடாதா”
செழியனின் குரலிலிருந்த பவ்வியம் மலரை ஏதோசெய்தது. அதைச் சரிசெய்யும் நோக்கில் மலர், “என் உடன்பிறந்தவன் கூட இதையெல்லாம் நினைக்காதபோது நீங்கள் சிரத்தை எடுப்பதைப் பார்த்து நிறையப் பெருமைப்படுகிறேன் செழியன் ஆனால்……..”
“என்ன ஆனால்…அக்காவைப் பற்றி கவலைப்படுகிறீர்களா…நல்ல ஒரு கருணை இல்லத்தில் அக்காவை………..”
“நிறுத்துங்கள் செழியன்” மலரின் குரல் ஓங்கியது. அனைவரும் திருப்பிப் பார்த்தார்கள். செழியன் அதிர்ச்சியடைந்தான். மலர் இப்படிக் குரலுயர்த்திப் பார்த்ததில்லை. மலர் தாழ்ந்த குரலில், ஆனால் தீர்க்கமாகச் சொன்னாள்.
“என் அக்காவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் செழியன்? அவள் எனக்குத் தாயானவள். இரண்டு வயதில் நான் தாயை இழந்தபோது, அக்கா தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே தூக்கி எறிந்துவிட்டு என்னைத்தான் பறாதகுழந்தையாய் ஏற்றுக்கொண்டு இன்றுவரை பாசத்தைத் தந்துகொண்டிருக்கிறாள். பொதுவாக வயதானவர்கள் குழந்தைக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தக் குழந்தையைத் தவிக்கும்படி செய்துவிட்டு நான் மணவாழ்க்கையைப் பற்றி நினைக்கமுடியுமா? அப்படி நினைத்தால் நான் உடன் பிறந்தவளாக இருக்கமுடியாது.
கடைசிவரை எனக்காக அவள் அவளுக்காக நான்……என்னை மன்னியுங்கள் செழியன்
செழியன் திக்பிரமைகொண்டவனாய் மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கலையா? களையா? கவிதை – ச.லிங்கராசு
காதலையே இன்னும் எத்தனை காலம் பாடிக்கொண்டிருப்போம்?
எங்காவது எவராவது காதலிக்கத்தான் செய்வார்கள்
நாம் பாடாது விட்டாலும்
உதிப்பதும் மறைவதும் உதிர்வதும்
மலர்வதும் கூட
எவர் அதைப் பாடாது விட்டாலும்
நடக்கும்
பாடாது விட்டதால் இயற்கை
தன் இயல்பை மாற்றிக் கொள்ளுமா என்ன?
வர்ணாசிரமம் என்னும் வக்ரம்
இன்று வரிசை கட்டி நிற்கிறது
வர்க்க வித்தியாசமோ வானத்தைத்
தொட்டுப் பார்க்கிறது
உழுதவனை தொழுத காலம்
உயிரிழந்தே போய் விட்டது
சமூதாய வீதியிலே எத்தனையோ
சவக்குழிகள்!
சற்றாவது யோசிப்போம்
நாம் இது வரை
செய்தது சரிதானா?
கலை கலைக்காகவா?
இல்லை…… கலை வாழ்க்கை எனும்
போராட்டக் களத்திற்காகவா?