நூல் அறிமுகம்: க.வீரமணியின் ‘அப்பாவின் காதலி’ (சிறுகதை) – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: க.வீரமணியின் ‘அப்பாவின் காதலி’ (சிறுகதை) – பாரதிசந்திரன்



”அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”

“படைப்பாற்ற உளவியல்” (CREATIVE PSYCHOLOGY) வெளிப்பாடுகள், தொடர் சமூக வரலாற்றில் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படுகையில், படைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல், காலம், சமூக ஒழுங்கு, குழுவாழ்க்கை, அறம் சார்ந்த நடைமுறைகள் ஆகியவை ஒருங்கே சேர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

சமூகத்திற்குப் படைப்பு எதையோ நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன் நம்பிக்கை முழுமையுமான நிகழ்வுப் பதிவுகளின் உணர்வுப் பரிமாறுதலையே மையம் கொண்டு சுழல்கின்றன.

தனிமனித கவனித்தலும், ரசித்தலும், மேம்பட்ட தீவிர உள்வாங்குதலுக்குப் பிரதானமான காரணமாக இருந்தாலும், பிரிது ஒருவருக்குக் கடத்தி விட உணர்வு துடிப்பதே பெரும் பகுதி நியாயமாயும் இருக்கிறது. இயல்பாகவும் இருக்கிறது.

மாபெரும் உளவியல் அறிஞர் ’ஆல்பிரட் ஆட்லர்’ (Alfred Adler) கூறிய படைப்பு வெளிப்பாடு தாழ்வு மனப்போக்கை ஈடு செய்ய வெளிவந்த அற்புதமான உத்தி என்பதை உற்று நோக்குகிறபொழுது, படைப்பாளரின் தேவைக்கான விருந்தாகவும், அவன் படைக்க விரும்பிய மாற்றாருக்கான விருந்தாகவும் படைப்பு மிகுந்து மிளிர்கிறது.

இவ்வாறான படைப்புத்திறனைச் சிறுகதை இலக்கிய வகையில் தெளிவு படுத்திக் காண முடியும். பிற துறைகளைவிட இத்துறை அதிகமாய் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டது எனலாம்.

படைப்பின் உணர்வுகள் அப்படியே வாசகனுக்கு சென்றடையும் சிறந்த கட்டமைப்பைச் சிறுகதை இலக்கியம் பெற்றிருக்கின்றன. இங்கு ‘சிக்மண்ட் பிராய்ட்’(Sigmund Freud) படைப்புத்திறன் குறித்தான கருத்தானது ஒப்புமைக் கருத்தாகிச் சரியாகப் பொருந்துவதைப் அறிந்து கொள்ளலாம். அதாவது சிக்மன்ட் பிராய்ட் படைப்பின் அடிப்படையில் குறித்து கூறும்பொழுது, “ ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோளத்திற்கு பாலியல் ஆசையின் பதங்கமாதல் (SUBLIMATION) (மாற்றம்) விளைவாகவும், பாலியல் கற்பனையானது சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவத்தில் ஒரு படைப்பு தயாரிப்பில் புறநிலைப் படுகின்றது” என்பார். படைப்புக்கு அடிப்படை இயற்கையின் எதிரி எதிர் விருப்பே காரணமென்கின்றார்.

மேற்கண்ட படைப்பு மற்றும் படைப்புத்திறன் குறித்த விளக்கம் எல்லாம் எழுத்தாளர் க.வீரமணி அவர்கள் எழுதிய ”அப்பாவின் காதலி” சிறுகதை படித்து முடிக்கும்பொழுது, ஒப்புமையோடு மனதில் எழுகின்றன.

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படைப்பு வெளிப்பாடு. ஜி ஆல்போர்ட் தன் திறனோடு சில கதைகளில் நிற்கின்றார். ஏ.மாஸ்லோ சில கதைகளில் சிரிக்கின்றார். யுங் சில கதைகளில் அவரே வெளிப்படுகின்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் இப்பிரபஞ்சத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன் சில கதைகளில் நின்று தத்துவம் கூறுகின்றார். இவ்வாறு படைப்புத்திறனைக் கோட்பாடுகளாகக் கூறிய பல அறிஞர்கள் இந்த நூலைப் படித்து முடிக்கும்பொழுது, இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறார்கள் என்பது இச்சிறுகதை தொகுப்பின் மிகப்பெரும் பெருமையாகும்.

எழுத்தாளர் க.வீரமணி அனுபவங்களை அனுபவங்களாகப் பார்க்காமல் சமூகத்தின் அறமாகப் பார்க்கின்றார். எவ்வகை அனுபவமும் ஒவ்வொரு அறக்கருத்தை உலகத்திற்கு சொல்லுகிறது எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். மொத்தம் 22 அனுபவங்கள் 22 சிறுகதைகளாக 22 அறக்கருத்துக்களாகச் சமூகத்திற்குப் பாடம் நடத்தப்பட்டிருக்கின்றன.

காலத்தால் அழிவு பெறாத சிறுகதைகள் தமிழில் பல நூறு உண்டு என்னும் வரிசையில் இக்கதைகள் வருங்காலத்தில் சேர்க்கப்படலாம்.

கதாபாத்திரங்களாக, இச்சிறுகதைகளுக்குள் உலா வருகிறவர்கள் சாதாரணமானவர்களாக நாம் அவர்களைக் கருதி விட முடியாது. கதை படித்து முடித்தவுடன் பசை போடாமல், பிரித்து விட முடியாதபடி நம்மோடு நாமாக ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.

பெண் கதாபாத்திரங்களை ரசித்தலின் உச்சத்தில் வைத்தும், அடி ஆழத்தின் வலிகளைத் தேடிப் பிடித்து, அந்த ரணத்தை ஆற்றியும் தலைமேல் தூக்கிக் கொண்டு அவர்களின் பண்பை நினைந்து நினைந்து பேசுதலும் தெய்வமெனப் பாவித்து ஆராதனை செய்தும் பெண் கதாபாத்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியர் க. விரமணி.

எல்லோரும் புரிந்து வைத்திருக்க வேண்டிய சரியான பெண் உலகம், இவரின் பொன் உலகமாகும்.

நியாயம் தேடி முள் சங்கிலியைச் சாட்டையாய் உயர்த்தும் குரலும் சில இடங்களில் ரத்தக்கரை கொண்டிருக்கின்றன. படைப்பாளன் இதனைக் கூடச் செய்யாமல் விட்டிருந்தால், கொஞ்சம் கூட நிறமற்றவராக அல்லவா இருந்திருப்பார்? எனவே எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சில கதைகளில் புரட்சி வண்ணங்களைப் பூசிக்கொண்டு களமாடுகிறார். இதற்குச் சில கதைகள் உதாரணமாக இருக்கின்றன.

உள்ள அன்பை, நேசத்துடன் காதல் செய்யும் நேர்த்தியும், உடன் கலந்து ஒன்றாகி மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடையும் காதல் இல்லறம் எனும் சொர்க்கலோகத்தை அடையாளப்படுத்திக் கதையாக்கி இருக்கிறார்.

இந்தக் கதைகள் வருங்கால இளைஞர்களுக்கு மெய் சிலிர்க்கும் முத்த தேசத்தை அடையாளம் காட்டும். உணர்வுகள் மிக நெருக்கமானவை. மனித மனங்கள் இந்தச் சொர்க்கபுரியில் முழுமையுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை அதன் இன்பம் குறைந்து விடாமல் அப்படியே கதையாக்கி தந்திருப்பது மிகச் சிறப்பானதாக இருக்கின்றது

இலக்கியத்தில் உணர்வுகள் எப்படிப்பட்டதாயினும் ரசனைக்கானது எனில் மொழி கடந்தும், நாடு கடந்தும் பயணிக்கும். தொட்டால் சுண்டும் மின்சாரம் போன்றது இலக்கியமெனின் எவ்விடமெனினும் அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும். அதை நோக்கிய பயணம், ஆசிரியர் க.வீரமணி அவர்களால் தொடங்கப்பட்டு விட்டது இச்சிறுகதைகளால்.

– பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி – து.பா.பரமேஸ்வரி




புத்தக வாசிப்பே முற்போக்கை மேம்படுத்தும்..
படைப்புகளே பகுத்தறிவைச் சீர்தூக்கும்..
வாசிப்பின் நீட்சியே எழுத்துக்கான முதிர்ச்சி..

என்கிற இலக்கிய அறம் மற்றும்  சமூக அக்கறையின் நீட்சியாக உருவான அமைப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 44வது பிறந்த தினத்தின் வாசிப்பு ஆர்வமும் எழுத்தின் மேல் தீவிரமும் கொண்ட 500 அக்குபங்சர் ஹீலர்களைக் கொண்டு 2019ஆம் ஆண்டு எழுத்தாளர் திரு ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் ‌திரு.ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் திரு.லட்சுமிகாந்தன் ஆகிய எழுத்தாளுமைகள் இயக்கத் தூண்களாகக் நின்று வழிநடத்த தமுஎகச மாநில உறுப்பினர் திரு அ.உமர் பாரூக் அவர்களால் உருவான அறம் கிளை பல இலக்கியச் சந்திப்புகள், பயிலரங்குகள், தொல் எழுத்துப் பயிற்சி முகாம்கள், படைப்புகளைக் கொண்டாடும் நிகழ்வுகள், வரலாற்றுப் பயணங்கள் என அறம் கிளையின் இலக்கிய முன்னெடுப்புகள் என்பவை அளப்பரியது.

இதன் தொடர்ச்சியாக அறம் கிளையின் அடுத்தகட்டப் பயணமாக சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்து நேர்காணல் செய்து அவர்களின் எழுத்து அனுபவங்கள், வாழ்க்கைப் படலங்கள், இலக்கியப் பயணங்கள், படைப்பு ஈர்ப்புகள், போன்றவற்றைத் தொகுத்து  நூலாகப் பதிவு செய்ய முடிவெடுத்து அதற்கான ஆக்கபூர்வ முன்னெடுப்பை மேற்கொண்டது.

பாரதி புத்தகாலயத்தின் ஊக்குவிப்பிலும் மாநில நிர்வாகிகளின் வழிநடத்தலிலும் அறம் கிளை உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயற்கரிய முயற்சி குறுநூலாக  செயல்வடிவம் பெற்றது. அதன் நீட்சியாகவே சிறு பகுதியாக சில எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் “படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி” என்கிற தலைப்பின் கீழ் படைப்பிலக்கித் தழுவலுடன் அறம் கிளை உறுப்பினர் திருமதி சாந்தி சரவணன் அவர்களால் எழுத்தாளர் திரு கா.சி தமிழ்க்குமரன் அவர்களின் நேர்காணல் தொகுப்பு சிறப்பான வடிவமைப்புடன் வெளியிடப்பட்டது.

ஒரு ஆகச் சிறந்த எழுத்தாளன், மக்கள் மத்தியில் பேசப்படும் கதைக்காரனாக   அவரது படைப்புகள் பேசும் பொருளாகச் சிறக்கத் தம்மைப் பற்றியும் தமது கற்பனையில் தோன்றும் நிகழ்வுகளைப் புனைவுகளாக வடித்துக் கதைகளாக உருமாற்றுவது என்பது ஒரு உயிரற்ற உடலாகவே ஒவ்வொரு படைப்பும் திகழும் எப்போதும். நம்மைச் சுற்றிய மாந்தர்களை, அவர் வாழ்க்கையை  உடனிருந்து கண்டுணர்ந்த அவலங்களை தூக்கிச் சுமந்த அனுபவங்களைப் பதிவு செய்வதே இலக்கியம்‌,அதுவே படைப்பு.‌அப்போதே படைப்புகள் வாழ்வாங்கு வாழும். மக்களிடமிருந்தே கதைகள் உருவாகிறது என்கிற முனைப்பை முன்னிறுத்தியே தமது படைப்புகள்  உருவாகுவதாகத் தமது நேர்காணலில் குறிப்பிடும் திரு கா.சி தமிழ்க்குமரன் அவர்கள் பிறந்தது முதல் தம்  கண்முன் விரிந்த கரிசல்காட்டு மாந்தர், தம்முடைய இளம் பருவத்து பால்யகால நினைவுகள்‌  பசுமரத்து ஆணி போல் பச்சை பசுமையாகத்  தம் நினைவுகளை ஆக்கிரமித்து  நீக்கமற நின்றுவிட அந்தப் பசுமையே கதைகளாகக் கதைக் களங்கலாகத் தமது தொகுப்பை நிரப்பியுள்ளதாகக் கூறுகிறார்.

தாம் கடந்து வந்த வாழ்க்கைப்பாதைகள் அதில் நிறைந்துள்ள பிரச்சனைகள் சிக்கல்கள் பற்றி எழுதும் போதுதான் படைப்புகள் உயிரோட்டமாக இருக்கும். அஃதில்லையானால் அது செயற்கைத் தன்மையுடையதாய் இருக்கும் என்று தமது படைப்பின் கருக்கான விளக்கமளிக்கிறார்‌ தமிழ்க்குமரன் அவர்கள்.

நகர வாழ்க்கை செயற்கைத் தன்மைக் கொண்டுள்ளது என்றும் தமது கிராமப்புறத்து கரிசல் நில மக்களின் இயல்புத் தன்மையே தமது கதைகளுக்கான உயிரோட்டம் என்றும் மேலும் அப்படியான விவசாயக் குடிகளே பெரும்பாலான கதைகளின் கதை மாந்தர்கள் என்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சென்னம்பட்டி புதூர் அருகில் பிறந்து வளர்ந்த
திரு கா.சி தமிழ்குமரன் அவர்கள் சிறு பிராயம் முதல் கரிசல் மக்களின் மைந்தனாக வாழ்ந்து விவசாயத்தையும் விவசாய மாந்தர்களையும் தமது வாழ்வின் பெரும் பகுதியாகக் கடந்து வந்துள்ளார். அவரின் தந்தையார் கா. சின்னத்தம்பி அவர்கள்.. இலக்கிய ஆர்வம் மிக்கவர். கவிதை எழுதும் பழக்கம் கொண்டவர்.
‌‌விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற தமிழ்க்குமரன்‌ அவர்கள் தொடர்ந்து அதே துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று‌ ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார். தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இணையர் திருமதி சந்திரா நாகலாபுரம் ரெட்டிய பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

சிபி யூகி மற்றும் எழில் ரிதன் இரு மகன்கள்.1995 இல் அறிவொளி இயக்கத்தில் இணைந்து, 1997இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்ட கிளைகளுக்குத் தலைவராகவும் சிலவற்றிக்குச் செயலாளராகவும் பொருளாளராகவும் பயணித்து இயக்கத்துடன் சமூக அறத்தைப் பேணி வருகிறார்.

தமது பள்ளிக்கால அனுபவத்தைப் பகிரும் தமிழ்க்குமரன் அவர்கள் தமது பள்ளிக்கால ஆளுமையாகத் தமது வாழ்வின் பல இடங்களில் உத்வேகத்தைக் கூட்டி அனைவருக்கமான எடுத்துக்காட்டாக உச்சமாக முன்மாதிரியாகத் திகழ்ந்தத் தமது பள்ளியின் மேல்நிலைக் கல்வியின் விலங்கியல் பிரிவு ஆசிரியராக திரு செல்வநாதன் அவர்களைக் குறிப்பிடுகிறார். .

வகுப்பில் ஒரே ஒரு மாணவனுக்காகத் தம் நேரத்தை ஒதுக்கி பாடம் நடத்திய மாண்பையும் வகுப்பில் பல மாணவர்களின் கடவுள் சார்ந்தும் சாதி மதம் பற்றியுமான மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து பகுத்தறிவு வளரச் செய்த பகுத்தறிவுப் பாசுரமாக ஆசிரியர் திரு செல்வநாதன் திகழ்ந்ததாகவும் இன்றும் பள்ளிக்கால வகுப்பறை நினைவுகளாக ஒரு செல் இரு செல் பரிமாணம் மாற்றம் என்பது ஒரு நிகழ்வு என்கிற முற்போக்கையும், சுய சிந்தனைத்திறனையும் வளர்த்தவர் என தமது விலங்கியல் ஆசிரியரைப் பெரிதும் சிலாகித்துக் கொள்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.

தமது சிறு பிராய வாசிப்பனுபவத்தைப் பற்றி பேசும் அவர் தமது வாசிப்பின் முதல் பயணத்தைத் துவக்கி வைத்தவர் தமது தந்தையார் என்று குறிப்பிடுகிறார். தமது தந்தையார் சிறந்த கவிஞர் என்றும் கவிதைகள் படைப்பதில் நாட்டம் கொண்டவர் என்றும் அதேசமயம் புத்தக வாசிப்பு தந்தையிடமிருந்து வந்திருந்தாலும் சிறுகதைகளே தம்மை வெகுவாக ஈர்த்தன என்றும் கூறுகிறார். அதன்பொருட்டு தமது வாசிப்பு முற்றிலும் சிறுகதை எழுத்தாளர்கள் சார்ந்தே அவர்கள் படைத்த சிறுகதைகளை நோக்கியே நகர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்.

கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன் என துவங்கிய பால்யகால வாசிப்புப் பயணம் “மகாபாரதம் – வியாசர் விருந்து” புத்தகமே தமக்குப் பிடித்தமான முதல் புத்தகம் என்றும் கூறுகிறார்.

தொடர்ந்து தினமணி கதிர், ஆனந்த விகடன் இதழ்கள் கல்லூரிப் பருவத்தில் வாசிப்பைத் தக்க வைத்தன என்கிறார். ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “அம்மா” சிறுகதை உணர்வு‌நெகிழ்ச்சி மிக்க எழுத்து என்றும்‌ அவரை பெரிதும் பாதித்ததாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஓரிரண்டு நாட்கள் மனதை நெருடிய வண்ணம் இருந்ததாகவும் உணர்ச்சிப் பொங்கக் கூறுகிறார்.

எழுத்தாளர் கந்தர்வன் அவர்களின் “மங்களநாதர்” கதை வெகுவாக ஈர்த்ததாகவும் இந்த சிறுகதையை வாசித்தப் பின்பும் விருதுநகர் பெண்கள் மாநாட்டில் கந்தர்வன் அவர்கள் மேடையில் வாசித்தக் கவிதையொன்றின் மையத்தில்
“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை”

என்கிற வரிகள் தமிழ்குமரன் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததாகவும் அதன்பின்பே கந்தர்வன் அவர்களின் மீது பெரும் மதிப்பும் ஈடுபாடும் பிடித்தமும் ஏற்பட்டதாக சிலாகித்துக் கூறுகிறார்.

எழுத்தாளுமைகள் கந்தர்வன், தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோரின் சிறுகதைப் படைப்புகளே சிறுகதை எழுதத் தூண்டியதாகத் தமது நேர்காணலில் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை அவர் கதை எழுதிய பின்பு அதை அப்போது தமுஎகசவின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பிலிருந்த அப்பாக்குட்டியிடம் காண்பித்து இரவு வெகுநேரம் வரை அந்தக் கதையைப் பற்றிய விவாதம் தொடர்ந்ததாகவும் அப்பாக்குட்டி அவர்கள் தமிழ்க்குமரன் அவர்களைத் தொடர்ந்து எழுதும்படி ஊக்கப்படுத்தியதாகவும் கூறி புளங்காகிதம் கொள்கிறார். தாம் எழுதிய சிறுகதைகளை எழுத்தாளுமைகளின் மத்தியில் விரியப்படுத்தத் தயக்கமும் பயமும் இருந்ததால் தாமே வெகுகாலம்‌ வரை அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் கூறுகிறார்.

அடுத்தடுத்த சிறுகதைகளின்‌ பிரசுரத்தில் பத்திரப்படுத்திய கதைகளை வெளியிட்டதாகக் கூறுகிறார்.

அப்பா குட்டி அவர்களின் உந்துதலிலும் அறிவுரையிலும் தமது முதல் சிறுகதையை ஆர்வக் கோளாறால் பெயரிட மறந்த நிலையில் ‘இந்திய ஜனநாயக மாதர் சங்கம்’ இதழுக்கு அனுப்பியதாகவும் அதற்கு எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் அந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து “முரண்” என பெயர்சூட்டி இதழில் வெளியிட்டதாகவும் அதுவே அவரின் முதல் சிறுகதை வெளியீடு என்றும் கூறி பரவசமடைகிறார். நமது பிள்ளைக்கு சான்றோர் பெயர் வைப்பது போல என் சிறுகதைக்கு எழுத்தாளுமை ஒருவரின் பெயர் சூட்டல் பெரு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறி புளங்காகிதம் கொள்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.

அடுத்த சிறுகதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரான திரு எம். கே.ராஜா அவர்களின் உந்துதலில் மீனவ சமூகத்தைப் பற்றியக் கதையாக “பாடு” சிறுகதை ‘மகளிர் சிந்தனை’ பத்திரிக்கையில் வெளிவந்துள்ளதாகவும், தொடர்ந்து செம்மலர் இதழில் “பாடுபட்டு” சிறுகதை வெளிவந்ததையும் தமது நேர்காணலில் பகிர்கிறார். இவ்வாறே தமிழ்க்குமரன் அவர்களின் சிறுகதை பயணம் தமிழ் இலக்கிய உலகில் மெல்ல மெல்ல பவனி வரத் துவங்கியது.
கல்லூரிப் பருவத்தில் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற தமிழ்க்குமரன் அவர்களுக்கு தமது அண்ணன்களான தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி அவர்களின் சிறுகதைகள் வெளிவருவதைக் கண்டு தாமும் சிறுகதை எழுத வேண்டும் என்கிற உத்வேகமும் ஆர்வமும் எழ சிறுகதைகள் எழுதத் துவங்கியதை நினைவுக் கூர்கிறார். இதுவே அவரின் சிறுகதைப் படைப்பிற்கான முதல் வித்து என்றும் கூறி பெருமிதமும் கொள்கிறார்.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், உதயசங்கர், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், சாத்தூர் லக்ஷ்மணப் பெருமாள், கி ராஜநாராயணன் என பல எழுத்தாளர்களின் படைப்புகள் சிறுகதைகள் தமக்குள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இவர்கள் அனைவரும் தாம் வாழ்ந்த மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் மனதிற்கு மிக நெருக்கமாக எழுதுபவர்கள் என்றும் இப்படியான எழுத்தாளுமைகளின் வழிக்கொண்டே சிறுகதை எழுதும் நாட்டமும் வேகமும் கூடியதாகச் சிலாகித்துக் கொள்கிறார்.

எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் பற்றிக் கூறுகையில் தமிழ்ச்செல்வன் அவர்கள் இணையருக்கு மிகவும் மரியாதை அளிப்பவர் என்றும் தமது இணையரைச் சமமாக பாவிக்கும் குணம் கொண்டவர் என்றும் ஒரு முறை தமுஎகச மாநாட்டு விழாவிற்கு வந்திருந்த பொழுது தமிழ்க்குமரன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த போது,
“சமைக்கத் தெரியுமா?” என்று தமிழ்க்குமரன் அவர்களை தமிழ்ச்செல்வன் அவர்கள் கேட்க “அண்ணா சோறு மட்டுமே சமைப்பேன் குழம்பு வைக்கத் தெரியாது.” என்றார் தமிழ்க்குமரன் அவர்கள். “எல்லாம் ரொம்ப ஈசி, உப்பு புளி காரம் இது மட்டும் சரியா இருக்கனும் அவ்வளவுதான்.” என்று தமிழ்ச்செல்வன் கூறியதாக‌ அண்ணணுடனான தமது நினைவுகளைப் பகிர்கிறார். அண்ணனிடமிருந்து சமையல் கலைக் கற்ற அனுபவத்தையும் கூறி மகிழ்கிறார்.

தமது அண்ணன் அவர்கள் கற்பித்த குடும்பத்தின் பாலியல் சமத்துவத்தைப் பகிர்ந்தததுடன் தாமும் தமது இணையர் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலையை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டுச் செய்வதாக பெருமிதத்துடன் கூறி மகிழ்கிறார்.

ஆண் பெண் என்கிற பாலியல் வேற்றுமைப் பாராட்டுவது அர்த்தமற்றது என்றும் ஆண்களும் பெண்களும் சமமாக இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்கிறார்கள், அதனால் உடல் ரீதியாக Weaker sex என்று சொல்லப்படும் பெண்களைக் காட்டிலும் ஆண் தான் அதிகமாக வேலை செய்ய வேண்டும் எனவும் பாலியல் சமத்துவத்தைக் குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய கேள்வி ஒன்றில் வலியுறுத்துகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.

தற்கால சமூகத்தின் பெண்களின் நிலைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், இன்றைய பெண்களைப் பற்றியான அவரது கருத்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சில பெண்கள் கணவனுக்கும் குடும்பத்திற்கும் அடக்கமாகத் தனக்குள்ளே ஒரு வலையை உண்டாக்கிக் கொண்டு எப்போதும் குடும்பத்தைச் சார்ந்தச் சார்பு நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர், மற்றொரு புறம் பார்க்கையில் சில பெண்கள் ஆண்களுக்கு இணையான சுதந்திரம் என்கிற பெயரில் எல்லையை மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற பெண்களின் மீதான இரு வேறுபட்ட கருத்துக்களை முன் மொழிகிறார் தமிழ்க்குமரன் அவர்கள். கடவுள் பற்றிய ஒரு கேள்வியில் அவர் கருத்து யாதெனில், கடவுள் என்பவர் பெரும்பாலானோரின் எண்ணத்தில் வாழ்கின்ற பிம்பம் என்றும் மக்களை நல்வழிப் படுத்தவே கடவுள் என்கிற பிம்பத்தை மக்களிடையே உருவாக்கினர் என்றும் சிவன் ஆதிக்கம் மிக்க கடவுள் மரியாதைக்குரியவர், முருகன் ஐயப்பன் பெருமாள் வயதில் சிறியவர்கள் அதனால் மக்களுக்கு அந்தக் கடவுள்கள் மீது ஈர்ப்பும் ஈடுபாடும் அதிகம் என்றும் உரிமையுடன் அவர்களைப் பெயர்ச் சொல்லி அழைத்து வணங்க ஏதுவாக இருக்கிறது என்கிற கடவுள்கள் பற்றிய அவரின் பார்வை வேடிக்கையாகவும் அதேசமயம் முற்றிலும் யதார்த்தமாகவும் மக்கள் பார்வையில் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருந்தது.

கிராமப்புறங்களில் விவசாயத்தின் விளைச்சல் பொருத்தே மக்கள் சாமிக்கு வழிபாடு நடத்துகின்றனர் என்றும் அமோக விளைச்சலின் சமயம் கிடாவெட்டி வழிபடுவதும் விளைச்சலில் சுணக்கம் ஏற்படும் வருடங்களில் “சாட்டுப்பொங்கல்” வைத்து எளிமையாக வழிபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

கிராமப்புறங்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கடவுளாகத் தங்கள் மூதாதையர்களை காவல் தெய்வங்களாக வழிபடும் வழக்கம் கொண்டுள்ளதைத் தமது இந்த கேள்வியில் குறிப்பிட்டு விளக்கிக் கூறுயுள்ளார்.

பிராமணர்களின் சாஸ்திர வழிபாடே பிந்தைய காலங்களில் முருகன் பெருமாள் போன்ற தெய்வங்களின் வழிபாடுத் துவங்கியது என்றும் ‘மனிதனுடைய மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் வழிபாடு,’ என்றும் ‘கும்பிட்டு மட்டும் இருந்தால் போதுமா நமது அன்றாட வாழ்வாதாரப் பணிகளைச் செய்வதே இறைவழிபாடு,’ என்றும் வழிபாட்டைப் பற்றிய அநேக கருத்துக்களை முன்வைக்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். அனைத்தும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் படியான முற்போக்குக் கருத்துகள். மேலும் கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம் நான் தான் கடவுள் என்று சொல்பவரை நம்பவே கூடாது அவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற இன்றைய கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்களைப் பற்றி‌ சமூகம் முன்பு தெளியப்படுத்துகிறார். இவர்கள் மக்களை மதம் பெயர் சொல்லி ஏமாற்றும் இடைத்தரகர்கள் என்று சாடுகிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் கோவிலுக்கு உள்ளேயே வைத்து குழந்தையைப் பலாத்காரம் செய்த போது கடவுள் அங்கு இருந்தாரா? என்கிற அவரின் கேள்வி பெரும் சர்ச்சசைக்குரியது. கோவிலுக்குள் கடவுள் உண்டு என்கிற மூடநம்பிக்கையை முற்றிலும் தகர்த்தெறிகிறது சிந்திக்கவும் வைக்கிறது.

கலையும் இலக்கியமும் நதிக்கரை ஓரமாகத் தான் பிறந்தன என்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். இதற்கான விளக்கத்தை விவரிக்கையில் நதிக்கரை ஓரங்களில் வாழ்க்கைத் தேவைகள் நிறைவு பெறுகின்றன. வாழ்க்கைத் தேவைக்களும் வாழ்வாதாரத்தின் அடிப்படைகளும் பூர்த்தி அடைந்த நிலையில் கலையும் இலக்கியமும் வெகு இயல்பாக மனிதர் மத்தியில் தோன்றும். வாழ்க்கைப்பாட்டிற்கே வழியற்ற பாலைவனப் பகுதிகளிலும் கரிசல் காடுகளிலும் கலையும் இலக்கியமும் எண்ணங்களை அசைக்காது. வாழ்க்கை தேடல் முடிந்த பின்பே இலக்கியத் தேடல் தொடங்கும் என்கிற தமிழ்க்குமரன் அவர்களின்‌ கருத்து இலக்கியவாதிகளும் கலைஞர்களும் உருவாகும் நிலம் சார்ந்த யதார்த்தத்தை வெகு இயல்பாக எடுத்துரைத்துள்ளது சிந்திக்க வேண்டிய ஒன்றே. அரசியலைப் பற்றியதொரு கேள்வியில் தமது கருத்துக்களை முன்வைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள் அரசியலற்ற இலக்கியம் என்பது மக்களுக்கான இலக்கியமாக இருக்காது, ஏதாவது ஒரு அரசியல் இல்லாமல் ஒரு சிறு கதையோ நாவலோ கவிதையோ படைக்க முடியாது. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு நுண் அரசியல் அவற்றுள் ஒளிந்துக் கிடக்கும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.

படைப்பிற்குள் அரசியலின் சாயலும் உள் புகுதலும் தவிர்க்க முடியாத ஒன்று . அதேபோல் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நிற்கும் அமைப்பும் இயக்கமும் இன்றியமையாதது என்று வலியுறுத்துகிறார். கலை இலக்கியவாதியாக ஒரு பிரதமருக்குக் கடிதம் எழுதினால் கூட ‘Anti Indian’ என்று வழக்கு பதிவுச் செய்யப்படுகிறது. திரைப்படத்துறையில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி போன்றோர் மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி இயக்கத்தின் ஆதரவையும் அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.மேலும் ஒரு குறிப்பிடத்தக்கச் சம்பவத்தை எடுத்துரைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள் தமுஎகச இயக்கத்தின் செயல்பாட்டும் அமைப்பின் தேவையும் என்பது எழுத்தாளர்களுக்கு இன்றியமையாதது என்றும் எழுத்தாளனுக்கு இயக்கம் எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தமது இந்த நேர்காணலில் பதிவிடுகிறார்.

நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் “மாதொருபாகன்” என்ற நாவல் எழுதிய போது நான்கு வருடங்கள் கழித்து திருச்செங்கோடு கோயிலை இழிவுபடுத்திப்படுத்தியதாகவும் சாமியைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் புகார் செய்து கலெக்டர் முன்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்தனர். பெருமாள் முருகன் அவர்கள் மனம் தளர்ந்த நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டார். அப்போது பொறுப்பில் இருந்த தமுஎகச தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தலையிட்டு வழக்குப்பதிவுச் செய்து வாதாடி பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தீர்ப்புக் கிடைக்கச் செய்தார். அதன் பின்பே பெருமாள்முருகன் மீண்டும் எழுதத் தொடங்கினார். அமைப்பே சோர்ந்து போன எழுத்தாளனை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் எழுத்துலகில் பிரவேசிக்கச் செய்தது. அதனால் அமைப்போ இயக்கமோ இலக்கியவாதிக்கு அவசியம் என்கிற இயக்கம் சார்ந்த இந்த சம்பவத்தைப் பதிவிட்டு இயக்கத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளது சிறப்புக்குரியது. தமுஎகச‌‌ அமைப்பின் சிறப்பைச் சுட்டிக்காட்டும் இந்த நிகழ்வு ஆகச்சிறந்த எழுத்தாளனின் எழுத்தும் ‌மதிப்பும் சமூகதீவிரவாதிகளின் முன்பு தாழந்திடாது உயர்த்தும் கை எங்கருந்தும் ஓங்கும் என்பதற்கான ஒரு காலக்கண்ணாடி.

சாதி அரசியல் பொருளாதாரம் கலந்தக் கலவை தான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை நிர்ணயம் செய்கிறது என்றும்,
சாதி பெயரிலிருந்து நீக்கி ரத்தத்தில் கலந்துள்ளது என்ற கருத்து இன்றைய சமூக சாதியக் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு சாதியற்ற பதிவு எந்த விதத்திலும் உதவாது அவனுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போகும், வாழ்வாதாரம் உயர்ந்தவனுக்கு சாதி என்கிற அடையாளம் தேவையில்லை. அதே சமயம் அதே இனத்தில் கீழ்மட்ட மக்களுக்கு சாதி என்கிற அச்சாணி அரசின் சலுகைகளை அடைவதற்குத் தேவையாக உள்ளது .சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதியின் பங்கையும் கீழ்த்தட்டு மக்களுக்கு சாதி பிரிவின் பதிவால் வாழ்வாதாரத்திற்கான அவசியத்தை நிலைநிறுத்தும் என்ற அரசாங்கத்தின் சமூகக் கட்டமைப்பை எடுத்தியம்புகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.

அறிவொளி இயக்கத்தில் தம்மை இணைத்திருந்த தமிழ்க்குமரன் அவர்கள் அறிவொளி இயக்கத்தில் கல்வி கற்க மக்கள் கொண்ட ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெகுநேரம் கிராமங்களில் கல்விப் பயில அவர்கள் காத்திருந்தத் தருணங்களையும் அறிவொளி இயக்கப் பாடல்களைப் பாடிய கணங்கள் அங்குள்ள பெண்கள் கண்கலங்கிய உணர்ச்சிப் பெருக்குகளையும் இரண்டு வருட காலங்களாக அறிவொளி இயக்கத்தில் பங்குக் கொண்டுப் பயணித்த நாட்களையும் பெருமிதத்தோடு நினைவுக் கூர்கிறார்.

மேலும் “கணையாழி” இலக்கிய பத்திரிக்கையில் தமிழ்க்குமரன் அவர்களது சிறுகதை ஒன்று தேர்வுப் பெற்று ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றத் தருணம் மகிழ்ச்சியின் உச்சம் என்று உச்சிமுகர்கிறார்.

தமிழ்க்குமரன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு “மாயத்திரை” , இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக “ஊமைத்துயரம்” மூன்றாவது தொகுப்பாக “பொலையாட்டு” பிரசுரமாகியுள்ளதாகவும் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதில் “ஊமைத்துயரம்” சிறுகதைத் தொகுப்பிற்கு 2016ஆம் ஆண்டின் சிறந்த புத்தகமாக “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்” மற்றும் “கலை இலக்கியப் பெருமன்றம்” இணைந்து சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக “தனுஷ்கோடி ராமசாமி” விருது வழங்கியும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் மாணவர்களுக்குக் கடந்த நான்கு வருடங்களாகப் பாட நூலாகவும் சிறப்புப் பெற்றுள்ளது என்றும் “நெருஞ்சி” என்கிற இலக்கிய அமைப்பு “பொலையாட்டு” புத்தகத்தைச் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்வு செய்ததையும் உளம் மகிழ பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து இப்பொழுது “கடூழியம்” என்கிற நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.இத்துடன் இவரது இலக்கியப் பயணம் நின்றுவிடவில்லை ..
சாத்தூர் லக்ஷ்மண பெருமாள் அவர்களின் கதையால் ஈர்க்கப்பட்டு 11 நிமிடங்களை மட்டுமே கொண்ட “மருவாதி” என்கிற குறும்படம் ஒன்று “குடி குடியை கெடுக்கும்” சில சமயங்களில் ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும்” என்ற தலைப்பை மையமாகக்கொண்டு உருவாக்கியுள்ளதையும் நம்முடன்‌ பகிர்ந்துள்ளார்.இதுவே அவரது முதல் குறும்படம் என்றும் கூறுகிறார்.

தமது படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததோடு கடமை நிறைவடைந்ததாகக் தேங்கி விடாமல் தம்முடன்‌ பயணிக்கும் சக தோழர்களுக்காக விருதுநகர் மாவட்ட தமுஎகச 14வது மாநாட்டில் விருதுநகர் மாவட்ட படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமது சகதோழர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சிறுகதைத் தொகுப்பான “மருளாடி” நூல் வெளியிடப்பட்டதையும் அந்தத் தொகுப்பில் தமது ஒரு சிறுகதையும் இடம்பிடித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பல புதிய எழுத்தாளர்களின் முதல் கதை அரங்கேறிய மேடை என்ற பெருமை இந்த தொகுப்பிற்கு உண்டு என்று பெருமிதம் கொள்கிறார்.இதுவே அவருக்கு பெரும் மனநிறைவைத் தந்ததாகவும் கூறுகிறார் தமிழ்க்குமரன் அவர்கள்.
சாதாரண மனிதர்களுக்கு இலக்கியம் என்ன செய்து விட முடியும் என்கிற கேள்விக்கு சிலப்பதிகாரத்தில் இருந்து தான் அரசர்களைத் தவிர்த்து சாதாரண மனிதர்களின் வாழ்வியல், சமூகத்தின் சூழல் பற்றியச் செய்திகள் நமக்குத் தெரியவந்தது என்றும் மனிதன் மக்கள் தலைவனாக இருந்தாலும் அவனின் வழி காட்டலாக இருந்தாலும் இலக்கியத்தின் வாயிலாக அதனைப் பார்க்கிறான். இலக்கியம் புரிதல், படைப்புகள் எல்லாம் சாதாரண மக்களைப் பார்த்து கேள்விப்பட்டு அனுபவத்தில் உணர்ந்ததைத் தானே இலக்கியமாகப் படைக்கிறான் என்று கேள்விக்கு பதில் அளிக்கிறார் தமிழ்க்குமரன் அவர்கள். புனைவிலக்கியத்தைப் பற்றிய கேள்வியில் அவர் பதிவு, புனைவு என்பதே கற்பனை தான். கற்பனை வளம் தான் எழுத்தாளரின் ஆயுதம் என்றும், அந்த கற்பனை தான் “பொன்னியின் செல்வன்,” “வேள்பாரி” போன்ற படைப்புகள் படைக்கக் காரணமாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

அண்டனூர் சுரா அவர்கள், திருச்சி கலைச்செல்வி அவர்கள், விருதுநகர் பாண்டிய கண்ணன்அவர்கள்,
“வால் யுவ புரஸ்கார்” விருது பெற்ற கோவில்பட்டி சபரிநாதன் அவர்கள் ஆகியோர் தமிழ்க்குமரன் அவர்களைக் கவர்ந்த இளம் படைப்பாளிகள் என்பதையும் இளம் படைப்பாளர்களைப் பற்றிய‌ கேள்வியொன்றில் பதிவிட்டுள்ளார்.
ஒரு உயிர் வாழவேண்டும். பிறந்து வாழ்ந்ததற்கான ஒரு தடத்தை விட்டுச் செல்லவேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கும் தமிழ்க்குமரன் அவர்கள், ‌ பெற்றோர்களின் வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையைச் சார்ந்தே இருக்கும். நம் பிள்ளைகள் நம் கண்களுக்கு முன் அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றம் தான் நம் வாழ்க்கையின் நிறைவு என்றும், வளமான எண்ணங்களைக் கொண்டு நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் சிறப்பு என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி முடிக்கிறார் தமிழ்குமரன் அவர்கள். கரிசல் நில மக்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் மக்கள் பரப்பில் தமது படைப்பின் வழியாக விரிவுபடுத்திய தமிழ்குமரன் அவர்களின் இந்த நேர்காணல் பதிவு அக்கு ஹீலர் திருமதி சாந்தி சரவணன் அவர்களால் இயல்பான சமூகத்திற்குத் தேவையான கேள்விக்கணைகளின் தொடு முனையில்‌ நேர்காணல் படைக்கப்பட்டுப் படைப்பாக வெளிவந்தது பாராட்டிற்குரியது.

சமூகம் சார்ந்தும் குடும்பம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்து அந்த கேள்விகளுக்கான கருத்துகளையும் மிக எளிமையாக இலகுவான மொழியில் எள்ளலற்ற பதில்களைக் கொண்டு விளக்கியுள்ளார் தமிழ்க்குமரன் அவர்கள். கடவுள் பற்றியத் தமது வேறுபட்ட பார்வையையும் கருத்துக்களையும் முன் வைக்கும் தமிழ்ககுமரன் அவர்கள் அதே சமயம் ஜாதி மதம் பற்றியும் தமது முற்போக்குச் சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தைச் சமூகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை ஒருபுறம் ஏற்றுக்கொண்ட போதிலும் தாழ்த்தப்பட்ட இனத்தின் கீழ் மட்ட மக்களுக்கு சாதி என்பது அரசின் சலுகைகளை அடைவதற்குத் தேவை என்கிற சமூக பொதுவான யதார்த்தத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பெண்ணியத்தைப் போற்றியும் குடும்பத்தின் சமத்துவப் பாலினத்தைப் பறைசாற்றவும் தயங்கவில்லை. கணவன் மனைவி இருவரும் சமமாகப் பாவிக்க வேண்டிய சமபாலினத்தவர் என்றும் வீட்டு வேலையை சமமாகப் பகிர்ந்து கொள்வதே சிறப்பு என்கிற சமத்துவத்தையும் தனது நேர்காணலின் மூலம் சமூகத்தின் முன் பதிவிடுகிறார்.

கற்பனையாகப் பல புனைவுகள் படைக்கப்பட்டாலும் தாம் கடந்து வந்த மனிதர்களையும் தம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கிராமத்து விவசாய குடிகளைப் பற்றியப் படைப்புகளைப் படைப்பதே தமது படைப்பிற்கான உயிரோட்டம் என்றும் கூறுகிறார். அவர் கடந்து வந்த கவர்ந்து நின்ற பல எழுத்தாளர்கள் இருப்பினும் அவர்களையும் அவர்களின் படைப்புகளையும் தமது தடத்திற்கான உந்துதலாகக் கொண்டிருந்தாலும் அவரது படைப்பிற்கென ஒரு தனி பாணி என்பது தம் சிறு பிராயம் முதல் ஒன்றி உறவாடிய கரிசல் நில மக்களின் வாழ்க்கைப் பாடுகளே..

ஒவ்வொரு கேள்விக்குமான தமது தீர்க்கமான பதிலை ஆழமான தெளிவான விளக்கத்துடன் விளக்கியுள்ளது பாராட்டிற்குரியது. சாந்தி சரவணன் அவர்களின் கேள்விகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நேர்த்தியுடன் கூடிய ஒருங்கிணைப்பில் தொடர்கதையாக தொகுத்திருப்பது சிறப்பு.

எழுத்தாளர் கா.சி. தமிழ்குமரன் அவர்களின் சிறுகதைப் பயணம் இத்துடன் நின்று விடாமல் வெவ்வேறு தளங்களைத் தொட்டு நாவல்களாக, கட்டுரைத் தொகுப்புகளாக, பல படைப்புகளாகத் தமிழ் இலக்கிய உலகை வலம் வர எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

நூல் : படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி
நேர்காணல் : கா.சி.தமிழ்க்குமரன்
சந்திப்பு : சாந்தி  சரவணன்.

விலை : ரூ.₹ 60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

– து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: பொன்-குமாரின் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு” – ஜனநேசன்

நூல் அறிமுகம்: பொன்-குமாரின் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு” – ஜனநேசன்



தனிமை என்னும் கலைடாஸ்கோப்

நாடறிந்த நல்ல கவிஞரும், திறனாய்வாளரும், நூல்கள் சேகரிக்கும் இலக்கியத் தேனீயுமான கவிஞர் பொன்.குமார் எழுதியுள்ள “தனிமையில் அலையும் ஒற்றை இறகு “எனும் கவிதைத்தொகுப்பை அனுப்பி இருந்தார். அட்டைப்படத்தை கண்ணுற்றபடி புத்தகத்தை விரிக்கையில் அந்த இறகைப் போலவே வாசக மனமும் சிந்தனை வெளியில் இலக்கற்றுப் பறக்கத் தொடங்கியது.

“தனிமையிலே இனிமை காணமுடியுமா …” பாடலை கவிஞர் கண்ணதாசனின் சொற்களுக்கு இசைத்தேனை தடவிய ஏ.எம்.ராஜா- சுசிலா குரல்கள் செவிவழி மனதை சிலிர்க்கச் செய்தன. . இந்த உலகில் யாரும், எதுவும் தனிமையில் இல்லை என்ற கவிஞரின் தர்க்கம் நினைவில் ஆடியது. அப்புறம் வள்ளலார் மொழிந்த உயிர்நேயச் சிந்தனையின் முதற்ப் படிகளாக “ பசித்திரு; தனித்திரு ; விழித்திரு “ என்ற நற்சுடர் மொழியும்; தனிமை பரவசத்தை வேறொரு சொல்லால் “சும்மா இருப்பதே சுகம் “என்றுரைத்த தாயுமானவர் மொழிகளும் ; இன்னும், “முறிந்த சிறகுகள் “ எழுதிய கவிஞர் கலீல் ஜிப்ரான் முதல் கல்யாண்ஜி உள்ளிட்ட பலரது சிந்தனைகளும் விரிய மனவெளியில் பறக்கச் செய்தது இந்த” ஒற்றை இறகு “.! யோசித்துப் பார்க்கையில் மேற்சொன்னவர்களின் வரிசையில் இந்த ஒற்றை இறகும் செருகி கவிதாதேவியின் மகுடத்தில் சிலிர்த்து நிற்கிறது.

இத்தொகுப்பில், தனிமை என்னும் சொல் சூழலுக்கேற்ப மலர்த்தும் பொருண்மை கலைடாஸ்கோப்பாக அர்த்தஜாலங்களை விரிக்கின்றன. தனிமை என்ற சொல் – ஒற்றை, தனித்துவம், தனிமைத்துவம், தனிமனிதத்துவம் விலக்கப்பட்ட, உறவுகளற்ற, மனதின் குரல், மௌனம், தவநிலை, சிகிச்சைமுறை, துணையன், இப்படி பல அவதாரங்களைப் புனைவதை தனிமை கவிதைகளில் கவிஞர் பொன். குமார் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு “தொகுப்பில் கோர்த்து, வாசக ரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்து வைக்கிறார் ..

சில கவிதைகள் வாசகனுக்குள் இன்னும் சில கவிதைகள் முளைவிட விதை தூவுகின்றன. சில கவிதைகள் குறுங்கதையாக கண் சிமிட்டுகின்றன. இத்தொகுப்பு வாசகனுக்குள் கவிச்சிறகு துளிர்ப்பதை உணர்த்துகின்றது. இத்தொகுப்பை வாசிப்பவர் இதை உணருவர்.

சில கவிதைகளையாவது சொல்லாமல் அறிமுகம் செய்வது மரபல்ல ஆகவே சில கவிதைகள் வாசக பார்வைக்கு முன்வைக்கிறேன்.

சமூகம் புறக்கணிப்பவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறது

தனிமை. [ பக். 18 ]

தனித்திருக்க

தனி இடம் தேடினேன்.

தனியிடத்தில்

தனியாக  இருந்தனர்

இருவர். [பக்.13 ]

இப்படி  நிறைய கவிதைகளை  வேறுவேறு உணர்வலைகளில்  வாசிக்கலாம். இத்தனிமை  கவிதை தொகுப்பில் தனித்துவமான ஒற்றைப் பொருண்மைத்   தலைப்புகளில்   பல்வேறு  படைப்பாளிகள் எழுதிய படைப்புகளின் பட்டியலை பின் இணைப்பாக  பொன். குமார்  இணைத்துள்ளார். இது இலக்கிய ஆய்வாளர்களுக்கு பேருதவியாக  அமையும். 

நூல் : “தனிமையில்  அலையும்  ஒற்றை இறகு “-  கவிதைகள்
ஆசிரியர் : பொன். குமார்
விலை : ரூ. 60 /-
பக்கம் : 64 .
வெளியீடு : வெற்றிமொழி  வெளியீட்டகம்,
திண்டுக்கல் . 9715168794.

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ




‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்து விட்டான்’ என்று அறிவித்து விட்டு, பொது உலகிலிருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டார் எழுத்தாளர் பெருமாள்முருகன். 2015, ஜனவரியில் இது நடந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகனின் இந்த அறிவிப்பால் எண்ணற்ற எழுத்தாளர்களைப் போல தானும் அதிர்ந்து போனதாகக் குறிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், ‘தானே மனுதாரராக இருந்து பொதுநல வழக்கு போடலாமா என்று நினைத்தேன். ஆனால் ஒரு அமைப்பில் இருந்து கொண்டு அப்படிச் செய்வது முறையாக இருக்காது என்று என்னுள் ஒரு குரல் கேட்டதால்… தமுஎகச அமைப்பின் பேரில் பொதுநல வழக்குப் போட்டதாக’ கருத்துரிமை போற்றுதும் சிறப்பு மலரில் குறிப்பிடுகிறார்.

எப்போதும் தன் செயலின் மூலம் தனக்கு மட்டும் பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் தனது அமைப்பிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அமைப்பை முன்னிலைப் படுத்தி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறவர் தோழர் ச.செந்தில்நாதன்.

அந்த வழக்கில், ‘பேராசிரியர் பெருமாள்முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது. அவர் இனி எழுதுவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்… அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்.’ என்ற வாசகங்கள் அடங்கிய தீர்ப்புரை உலகமுழுவதுமுள்ள கருத்துரிமைப் போராளிகளால் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கப்பட்டன. ‘கருத்துரிமைக்கான போராட்டத்தின் உயிர்த் துடிப்பு மிக்க வரலாற்று ஆவணம்’ என்று தீர்ப்புரையை மதிப்பிடும் தோழர் ச. செந்தில்நாதன், தான் வாதாடிய இந்த வழக்கை தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைப்பதாக தனது நேர்காணலில் பதிவு செய்துள்ளார். வழக்கறிஞர் மற்றும் இலக்கியவாதி என்கிற வாழ்நாள் அனுபவச் செறிவிலிருந்து அந்த வழக்கை நடத்தி வெற்றி கண்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த வழக்கை நடத்தியதன் மூலம் தனக்கும் தமுஎகச அமைப்பிற்கும் பெருமை சேர்த்தவர் தோழர்.

2022, ஜூன் 5 ம் நாள் நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போது, ‘இது வரை எழுதியது முன்னோட்டம் தான் இனிமேல் தான் என் எழுத்தின் முழு வீச்சையும் வாசிக்கப் போகிறீர்கள். எனது கட்டை விரலில் கைப்பிடித்து எழுதும் வலு உள்ளவரை நான் எழுதிக் கொண்டிருப்பேன்’ என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

‘தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு’ அவர் எழுதிய முதல் நூல். 1967 ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் வெளிவந்த, தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய முதல் விமர்சன நூல் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பதிப்பாளரின் இரண்டாண்டு கால தாமதத்தால் நூல் வருவது தள்ளிப்போய் விட்டது. அதற்கிடையில் இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி, சாலைஇளந்திரையன் ஆகியோர் எழுதிய நூல்கள் வெளி வந்து விட்டன. முதலில் எழுதப்பட்டாலும் பின்னால் வெளிவந்தது என்றாகி விட்டது.

1975 ம் ஆண்டு தமுஎச வை உருவாக்கிய எழுத்தாளர்கள் 32 பேரில் ச.செந்தில்நாதன் இல்லை என்கிற வரலாறு கூட கால தாமதத்தால் ஏற்பட்டது தான். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அழைப்புத் தாமதமாகக் கிடைத்ததும், பயணம் செய்த வாகனம் ஏற்படுத்திய தாமதமும் சேர்ந்து அந்த வரலாற்றுக்குக் காரணமாகி விட்டது.

கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி வர அனுமதிக்கப்பட்டன. பல பக்கங்கள் மை பூசப்பட்டு கறுப்பாகவே இருக்குமாம். அப்போது தணிக்கைக்கு ஆட்படாமல் தப்பித்த முற்போக்கு இதழ் ‘சிகரம்’ மட்டும்தான். அதை நடத்தியவர் தோழர் ச.செந்தில்நாதன். சி.பி.ஐ.(எம்) கட்சியின் இலக்கியப் பத்திரிகையான செம்மலர் உள்ளிட்ட பல முற்போக்கு இலக்கிய இதழ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வெளிவர முடியாத காலத்தில் சிகரம், அவர்களின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ஐந்தாண்டு காலம் வெளி வந்த சிகரம், தமிழ்நாட்டிலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் தமிழில் எழுதும் பல எழுத்தாளர்களுக்கு புதிய வாசலைத் திறந்தது. அது வெளிவந்த காலத்தின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியது. தோழர் ச. செந்தில்நாதனுக்கு, சிகரம் ச. செந்தில்நாதன் எனும் அடைமொழியை வழங்கியது.

சிகரம் இதழ் ஆரம்பிப்பதற்கு முன்பே 1969 செப்டம்பரில் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ உருவாகி விட்டது. அதன் செயலாளர் தோழர் ச.செந்தில்நாதன். கந்தர்வன், கவிஞர் கண்ணதாசனின் தம்பி இராம. கண்ணப்பன், கார்க்கி மற்றும் ம.ந.ராமசாமி ஆகியோர் நிர்வாகக் குழுவினர். பெயர் பெற்ற எழுத்தாளர்களான அகிலன், தீபம் நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே அவர்களின் எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. விமர்சனத்தின் வெக்கை தாளாமல் வெளிநடப்புகளும் நடந்திருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கம் இலக்கியவாதிகள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1975 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான போது, மக்கள் எழுத்தாளர் சங்கம் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டது. த.மு.எ.ச உருவாவதற்கானத் தேவையை உணர்த்தியதாக, மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் வீச்சான செயல்பாடுகளை மதிப்பிடலாம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் மாநிலத் தலைவராக 9 ஆண்டுகளும் வழிநடத்தி இருக்கிறார்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ், தமிழ்வழிக் கல்வி போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு போராட்டக் களத்தில் முன்நின்றார். எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்தவர் முற்போக்காளர் வல்லிக்கண்ணன் அவர்கள். அவரது குடும்பச் சூழல் பொருளாதாரத்தில் நலிவுற்ற போது நண்பர்கள் தோழர்களுடன் இணைந்து குடும்ப நிதி திரட்டி வழங்கியதில் மிக முக்கியப் பங்கேற்றார். அதை தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிறைவான நிகழ்வாகவும் கருதுகிறவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறுகதை மேதை புதுமைப்பித்தன் பெயரில் அறக்கட்டளை அமைத்தது…

பெரிதும் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு அமைத்து தொடர்ந்து செயல்படுத்தி வருவது…

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வாழ்வின் இறுதி நாட்களில் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட போது, அவரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கையை உரிய முறையில் அரசுக்குக் கொண்டு சென்று பண உதவியைப் பெற்றுக் கொடுத்து நம்பிக்கையூட்டியது…

என தனித்து மிளிரும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் பல.

இடதுசாரிகளும் முற்போக்கு இலக்கிய அமைப்புகளும், தமிழ் பக்தி இலக்கியங்களுக்குள் குறுக்கீடு செய்து அதன் வரலாற்றுப் பரிணாமத்தைப் புரிந்து கொண்டு களமாட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பல அரிய ஆய்வு நூல்களை எழுதி வருவது மிக முக்கியக் கருத்தியல் செயல்பாடாகும். இந்துத்துவத்தை பண்பாட்டுத் தளத்தில் எதிர்கொள்ள, அதனுடன் முரண்படும் தமிழர் சமய மரபின் பல அடுக்குகளில் படிந்திருக்கும் ஜனநாயகச் சக்திகளை இணைக்கும் செயலுக்கு முன்னுரிமை வழங்கிடச் சுட்டுகிறார். களத்தில் அதற்கான பல முயற்சிகளையும் மேற்கொண்டார்.

தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்து சமய வழிபாட்டு முறைகளில் – வட மொழி வேதமும் வைதிக சமயமும் எவ்வித பெரிய அளவிலான எதிர்ப்புமின்றி நேரடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. வடமொழி வேதத்தையும் வைதிக சமயத்தையும் எதிர்த்து நிறுத்திய ஒரு வளமிக்க வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. அது ஒரு தனித்துவமிக்க வரலாறு. பேணி பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட.

கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராகிவிட முடியும். ஆனால் மலையாளத்தில் அர்ச்சனை செய்ய முடியாது. அர்ச்சனை வடமொழியில்தான். தமிழ்நாட்டில் தலித் அர்ச்சகராகவும் முடியும். தமிழில் அர்ச்சனை செய்யவும் முடியும். தமிழ் இலக்கியத்தின் பெரும் பரப்பை தனதாக்கி வைத்திருக்கும் பக்தி இலக்கியத்தின் கொடை அது. தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் வேத விதிகளின் படி கட்டப்பட்டவை அல்ல. தமிழ் ஆகமங்களின் படி கட்டப்பட்டவைகளாகும்.

தமிழ்நாட்டில், வேத சமய வித்தகர்களுக்கும் தமிழ் வழி வழிபாட்டாளர்களுக்கும் இடையே கூர்மையான முரண்பாடுகள் உண்டு. அம் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை என்பது தோழர் ச. செந்தில்நாதன் ஆய்வு முடிவுகள். இந்தத் தளத்தில் ‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறு வாசிப்பு’, ‘சைவ வைணவப் போராட்டங்கள் ஒரு மறு வாசிப்பு’, ‘தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்’ ஆகிய ஆய்வு நூல்கள் மைல் கற்களாக அமைந்தவை. தமிழ் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் தோழர் சிகரம் ச.செந்தில்நாதன்.

– சைதை ஜெ

நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்

நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்




ச.சுப்பாராவ் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதுரை போற்றுதும்’ புத்தகத்தை மதுரை பார்சல் பாசஞ்சர் போல மெதுவாகப் படித்தேன். மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறு வயது முதல் தான் அலைந்த மதுரை தெருக்களில் மீண்டும் ஒருமுறை சுற்றியிருக்கிறார். இம்முறை வேடிக்கையாக மட்டும் அல்ல; பார்த்த ஒவ்வொன்றிலும் ஒளிந்திருந்த வரலாற்றை, சோகத்தை, அழகை ஆழமாகப் பார்த்திருக்கிறார். ஆனாலும் எளிமையான, ஜனரஞ்சகமான கதை போல் சொல்கிறார். போகிற போக்கில் அவர் தெளித்துச் செல்லும் இலக்கிய குறிப்புகளை அறிவதற்கு என்னைப் போன்ற வாசகன் சற்று முயற்சி எடுக்க வேண்டும்.கம்பராமாயணத்தில் தொடங்கி நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் வழியாக சி.சு செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, ஒரு எழுத்துப் புலியின் மதுரை குறித்த வர்ணனை (யார், என்ன புத்தகம் என்று சொல்லி விடுங்கள் ராவ்),’காவல் கோட்டம்’ என ஆங்காங்கே மதுரை தொடர்பான இலக்கியப் படைப்புகளைக் கொடுக்கிறார். இருந்தாலும்…..

தனது ஆளுமையை உருவாக்கியவர்களில் ஜனதாக் கட்சி, எழுத்தாளர் சுஜாதா, மதுரையில் நடைபெற்ற அரசியல் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், இடது பக்கம் திருப்பிய டெய்லர் மணி என ஒரு அத்தியாயம். அதில் இடதுசாரிகள் குறித்து நல்ல விவரிப்பு. அன்று அவர் கேட்ட அரசியல் தலைவர்களில் மோகன், நன்மாறன் ஆகியோருடன் பின்னாளில் நெருங்கிப் பழகியதையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும்….

நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து அவற்றின் சாரத்தைச் சுவையான கட்டுரையாக எழுதுபவர் அல்லவா? அதனால் மதுரையில் இருக்கும் பதிப்பகங்களைப் பற்றிக் கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் எழுதியிருக்கிறார். மீனாட்சி புத்தக நிலையம், என்சிபிஎச், அன்னம், பாரதி புக் ஹவுஸ் என பரந்துபட்ட தொடர்புகள். ஆனாலும்….

பழம்பெரும் நடிகர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் திருப்பாவை கற்று தந்த மாமி என கலைகளைப் பற்றிய ஒரு 365 சுற்று அனுபவத்தைத் தருகிறார். இருந்தாலும்…..

மதுரைக்காரன் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி எழுதாமல் இருப்பானா? சங்கப் புலவர்களுக்குச் சன்னதி, மதுரையை முன்னொட்டாகப் போட்டுக்கொண்ட புலவர்களின் பெரிய பட்டியல், பள்ளியறை போகும்போது கோயில் கணக்கு படிப்பது, அப்போது எதுவரை தேவாரம் ஓதுவார்கள், எங்கிருந்து நாதஸ்வரம் வாசிக்கப்படும், பெண்கள் படுக்கப் போகுமுன் நகைகளைக் கழற்றி வைப்பது போல மீனாட்சி அம்மனும் செய்வது (தொ.பரமசிவன் மக்களுக்கும் கடவுள் வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கட்டுரையாக விளக்குவதை இந்த இரண்டு வரிகளில் விளக்குவது போல தோன்றுகிறது. ஐயப்பனின் மனைவியாகக் கருதப்படும் புஷ்கலை என்பவர் ஒரு சவுராஷ்டிரப் பெண்; அவரின் திருமண சடங்குகள் இன்றும் சவுராஷ்டிர சமுதாயத்தினரால் நடத்தப்படுவது என்கிற சேதியும் இது போன்றதாகக் கருதுகிறேன்.) போன்றவை குறித்த புதிய செய்திகள் சிறப்பு. இருந்தாலும்……

பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தது; தன் பள்ளியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் அவர் நினைவாற்றல்; கல்லறையையும் ஆய்வு செய்யும் அவரது விந்தை மனம்; அதிலும் ஜாக்சன் துரையையும் ஜம்புரோவையும் ஒப்பிட்டிருப்பது; இருந்தாலும்…

மதுரையின் உணவு வகைகளை ஆங்காங்கே சுவையாகச் சொல்லியிருப்பது; தானும் நண்பர்களும் டீ குடித்துக்கொண்டே கச்சேரிகளையும் அரசியல் பேச்சுக்களையும் கேட்டது; பீப்பிள்ஸ் நாடக்குழுவில் நடித்தது; தன்னால் விலை குறைந்த பொருட்களையே வாங்க முடிந்தது என்பது போன்ற வருணனைகள் அவரின் எளிய பின்னணியை காட்டுகிறது என்றாலும்…….

புத்தகம் முழுக்க நகைச்சுவை உணர்வு விரவிக் கிடக்கிறது; இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வந்த அன்று எதிர்த்த வீட்டு அக்கா தூக்கில் தொங்கியதைச் சொல்லும்போது சோகம் பின்னணியாய் ஒலிக்கிறது ஜார்ஜெட் தாவணி போட்டால் அந்த அக்கா சினிமாவுக்குப் போகிறார்கள் என்ற இடத்தில் தமிழ் மக்களின் மனத்தில் சினிமா எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைப் போகிற போக்கில் சொல்கிறார். இருந்தாலும்…..

மதுரையின் கட்டிடங்கள்,தெருக்கள்,திருவிழாக்கள் எல்லாமே சிறப்பாக விவரிக்கிறார். இருந்தாலும்……

(இந்தப் பதிவின் முடிவில் நான் சொல்ல நினைத்ததைச் சரியாக ஊகிக்கும் முதல் ஐந்து நண்பர்களுக்கு சுப்பாராவின் புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.)
– ரமணன்

நூல் :
மதுரை போற்றுதும்

ஆசிரியர் : ச.சுப்பாராவ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 200
தொடர்பு எண் : 098411 91397