பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் – தசிஎகச  வரவேற்கிறது – விழியன்

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் – தசிஎகச வரவேற்கிறது – விழியன்




வணக்கம்,

சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க முடியும் என்று பலரும் யோசனை தெரிவித்து வந்தனர்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கமும், கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு முன்வைத்த பரிந்துரைகளில், ’வாரம் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் வாசித்து. அது குறித்து வகுப்பறையில் பேசும் விதமாக பாடவேளை அட்டவணை அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், கதை, பாடல், நாடகம், அறிவியல் நூல்கள் வாசிப்பது பாட நூல்களைக் கற்கவும் உதவும் என்பதால், அதை வலியுறுத்தியிருந்தோம். இந்த அரசு, இம்மாதிரியான கோரிக்கைகளை ஆராய்ந்து ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ எனும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் பணியைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்க’த்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த ஆரோக்கியமான முன்னெடுப்பு. நூல்களை வாசிக்கும் மாணவர்களை பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுத்து சிறப்பிக்க உள்ள முறை வரவேற்கத்தக்கது. முத்தாய்ப்பாக, ‘இறுதியில் தேர்வாகும் மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, புகழ்பெற்ற நூலகங்களைப் பார்வையிட வைப்பது சிறப்பானது. அதே நேரம், இந்தச் செயல்பாடு வழக்கமான போட்டிகளில் ஒன்றாக மாறிவிடுவதும் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. அதேபோல, மாநில அளவில் தேர்வான மாணவர்கள், குழந்தை எழுத்தாளர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியிருப்பது மாணவர்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல முயற்சி, அதை மனதார பாராட்டுகிறோம். பள்ளிக்கல்வித் துறையோடு கைக்கோத்து செயல்படவும் விரும்புகிறோம்.

இந்தத் திட்டம் 6ஆம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது என்று உள்ளது. விரைவில் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று நம்புகிறோம். மேலும் போட்டிகள் என்பது உந்து சக்தியாக இருக்கமட்டுமே, போட்டி முடிந்தாலும் வாசிப்பு தொடர உறுதி செய்ய வேண்டும். இந்த சரியான சந்தர்ப்பத்தில் பள்ளிகளுக்கு நூலகரை நியமிப்பது, நூலகத்திற்கு என்று போதிய ஏற்பாடு, புதிய புத்தகங்களுக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டம் கல்வியிலும் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்தெடுப்பதிலும் மகத்தான சாதனையை நிகழ்த்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இதனை முன்னெடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கும் எங்கள் சங்கத்தின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கணம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்

நன்றி,
விழியன் | செயலாளர்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
contact.tncwaa@gmail.com

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மண்ணுக்கேற்ற மார்க்சியர் அருணன் – நா.முத்துநிலவன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மண்ணுக்கேற்ற மார்க்சியர் அருணன் – நா.முத்துநிலவன்




உலகை விளக்கியவர் பலர்! இதை மாற்றுவது எப்படி என்பதுதான் மார்க்சியத்தின் வெற்றி என்பார்கள். தமிழ்ச் சமூகத்தை விளக்கிய தமிழறிஞர் பலர் என்றாலும் தமிழ் மண்ணுக்கான மார்க்சிய ஆய்வுகளைத் தந்ததில் தோழர் அருணன்தான் முன்வரிசையில் நிற்கிறார்.

தந்தையார் வாழைப்பழக் கடை வைத்திருந்தவர் என்பதைச் சொல்லத் தயங்காத அருணன், அவரது குடும்பத்தில் பட்ட மேற்படிப்புப் படித்த முதல்பிள்ளை இவர்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்!

மேலூர் அருகில் ஒரு சிறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அருணன், மதுரையில் பிறந்து, மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.முத்தையாவைத் தனது எழுத்துக்கும் இயக்கத்துக்கும் முன்னோடியாகக் கொண்டார். 47ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டின் மனச்சாட்சியாகத் திகழும் தமுஎகசவின் அடிஉரமாகத் திகழ்ந்தவர். பணி நிறைவுக்குப் பின், மதுரையிலிருந்து புலம்பெயர்ந்து, சென்னையில் தன் மகனோடு இருந்தாலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், “அருணன் தமிழ்” வலைக்காட்சியிலும் மார்க்சிய ஒளிவீசித் திகழ்பவர் அருணன்.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் மறைந்த போது அவரைப் பற்றிய -1977- தீக்கதிர்க் கட்டுரைதான் தனது முதல் படைப்பு எனும் தோழர் அருணன், “ஒரு தலைவரின் மரணம், ஒரு எழுத்தாளரின் ஜனனத்துக்குக் காரணமானது” என்பதோடு, “அது அரசியல் எழுத்தின் துவக்கம், எனது இலக்கியஎழுத்து, செம்மலரில் எழுதிய நாவல் மதிப்பீட்டுடன் துவங்கியது” என்கிறார்! (“மனு தர்மத்துக்கு நேர் எதிரானது மார்க்சியத்தின் சமதர்மம்” – அருணன் நேர்காணல் – தமுஎகச அறம் கிளையின் ப.தி.ராஜேந்திரன் எழுதிய சிறு நூல் – பாரதி புத்தகாலயம் -2019)

நாற்பது நூல்கள் தந்திருக்கும் இவர் “படைத்ததில் பிடித்த பட்டியல்” இது: நாவல்களில் – “நிழல்தரா மரம்”

சமூக ஆய்வில் – “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்”

தத்துவத்தில் – “தமிழரின் தத்துவ மரபு”

வரலாற்றில் – “காலந்தோறும் பிராமணியம்”

நாட்டுப்புறவியலில் – “கொலைக்களங்களின் வாக்குமூலம்”

இலக்கிய விமர்சனத்தில் – “வளரும் சிகரம் வைரமுத்து”

தமுஎகச மாநில மாநாடுகளில் தோழர் அருணனின் நிறைவுரை, தொகுப்புரைகளில் அடுத்த சில ஆண்டு உழைப்புக்கான “பேட்டரி சார்ஜ்” ஆகித் திரும்புவோர் – என்னைப் போல் தமுஎகச தோழர் – ஏராளமானோர்!

தோழர் கே.முத்தையாவுக்குப் பிறகு மாநிலப் பொதுச்செயலர், மாநிலத் தலைவர் என இவர் வழிகாட்டுதலில் வளர்ந்ததே இன்றைய தமுஎகச! அமைப்பும் படைப்பும் இரண்டு கண்களாகவே உணர்த்துபவர். “தமுஎகச எனது இன்னொரு பள்ளி, அதுதான் எனக்கு பள்ளியில் கிட்டாத கல்வியைத் தந்தது” எனும் அருணன், தமுஎகச மாநிலச் செயற்குழு, பொதுக்குழு விவாதங்களின் போது, குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி, முன்வைத்த கருத்துகள், ஒரு கருத்தை எப்படி அணுகவேண்டும் என்று இளையவர்க்கு நடத்திய பாடங்கள்! இதோடு, மாநாட்டு நிறைவில் “எழுதுவது அல்ல எழுப்புவதே எழுத்து” என்று, அவர் முழங்கியது, பலர் நெஞ்சில் இன்னும் பதிந்து கிடக்கும் கல்வெட்டு!

சங்க இலக்கியத்தில் ஆதித் தமிழ்ச் சமூக தரிசனம் கண்டவர், கம்பனை ரசித்தது எப்படி, சேக்கிழாரை ரசிக்க முடியாதது ஏன் என்பதை இவரது எளிமையும் வலிமையுமான நூல்களைப் படித்தால் புரியும்.

“இன்றைக்கும் ஒரு சாதிக்குள்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. பெண்ணைத் தாழ்ந்த பிறவியாக நோக்கும் சிந்தனையும், நடப்பும் உள்ளது. ஜோதிடம் பார்க்கும் பழக்கம் பரவியுள்ளது. இதெல்லாம் சேர்ந்ததுதான் பிராமணியம்” எனும் தோழர் அருணன், “பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் பிராமணியத்திற்கெதிராக பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இணைவதே திரிசூலமாகும்” என்பது இவரது ஆயுத எழுத்து!

தோழர் அருணன் அவர்களின் பன்முகத் திறனை அறிந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவருக்கு விருது ஏதும் தராமல், விருதுக்குழுத் தலைவராக்கி அழகு பார்த்தார்! பல்கலைக் கழகம்தான் பட்டம் தரும், பல்கலைக் கழகத்துக்கே எப்படிப் பட்டம் தர முடியும்?
எழுபத்தொன்றைக் கடந்து, இப்போதும் எழுதி இயங்கி விவாதித்து வரும் தோழர் அருணன், இன்னும் பல பத்தாண்டுகள் வாழ்ந்து தமிழ்ச் சமூகப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே தமிழ் கூறும் நல்லுலகின் நன்றி கலந்த எதிர்பார்ப்பு. “அருணன் தமிழ்” வளர்க!

– நா.முத்துநிலவன்