To Sir With Love Braithwhaite BookReview By Theni Sundar. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் - தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – தேனி சுந்தர்




உலகப் போரின் போதும், கடுமையான வேலைகள் செய்யும் போதும் கருப்பு, வெள்ளை பேதமில்லை.. ஒரு நல்ல வேலை தேடி அலைகிறார். வேலை இருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை. காரணம் கருப்பு வெள்ளை..!

தகவல் சொல்லும் போதே நம்பிக்கை இழக்க வைக்கும் வார்த்தைகள். கிட்டத்தட்ட நம்ம ஊர்ல சொல்றது அடிக்கடி அரசு துறைகளில் சொல்லப் படுவது போல சொன்னால் தண்ணி இல்லாக் காடு.. பனிஸ்மெண்ட் ஏரியா.. அந்த மாதிரி..!

வெள்ளை மக்கள் தான் அங்கும். ஆனால் அவர்களும் கூட வறுமையின் பிள்ளைகள் தான். குடிக்க கஞ்சி இல்லைன்னாலும் வீராப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்வது போல நிற வெறிக்கு கொஞ்சமும் குறைவில்லை..!

அந்த பள்ளி குறித்து நல்ல அபிப்பிராயங்கள் எங்கும் இல்லை. ஊரிலும் இல்லை. பள்ளிக்கு உள்ளேயும் இல்லை.. பணியில் சேர்வதற்கு முன்பு பள்ளி முழுவதையும் ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வாங்க.. அவசரம் எதுவுமில்லை.. நிதானமாக முடிவெடுங்க என்கிறார் புளோரியன். பள்ளியின் முதல்வர்.

அமைதி இல்லை. ஒழுங்கு இல்லை. மதிப்பு இல்லை. மரியாதை இல்லை. வளாகத்திற்கு உள்ளே வருவோர்க்கு கெட்ட வார்த்தைகள் இலவசம். பார்க்க கூசும் காட்சிகள்.. கோபமூட்டும் பார்வைகள்.. வேறு வழியில்லை, பிழைப்புக்காக வாத்தியார் ஆவது என முடிவெடுக்கிறார் பிரைத்வெயிட்.!

நாம் அறிந்த எல்லா பள்ளிகளிலும் இருக்கிற அத்தனை கேரக்டர்களிலும் ஆசிரியர்கள் அங்கு இருக்கிறார்கள். பெண்கள் தான் பெரும்பான்மை..! புதுசா வந்தவர் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிப்பார்ன்னு தெரியல.. கிண்டல் கேலிகள்..!

உலகப் போரில் சண்டையிட போனவர் பிரைத்வேயிட். கிட்டத்தட்ட அதே தயாரிப்புடன் வகுப்புறைக்கு செல்கிறார்.. போரில் வெற்றி ஒன்றே இலக்கு என்று சென்றவர் வகுப்பறையில் தோற்றுப் போகிறார். ஆம், வேண்டுமென்றே தோற்றுப் போகிறார். உள்ளங்களை வெல்வதற்கு தோல்வி தான் முதல் படி..!

இங்கு மதிக்கத் தகாத பெண்கள் என்று யார் இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியில் சரிபாதி பேரை வெல்கிறார். அடித்து வீழ்த்த வலை விரிக்கிறான் டென்ஹாம். அடித்தும் வீழ்த்தி, அன்பால் அதை விட பெரும் வெற்றியை ஈட்டுகிறார். வகுப்பில் மீதி பாதியையும் வென்று விட்டார். ஆசிரியர் பெல் பிரச்சினையை சிறப்பாக அணுகி மொத்த வகுப்பையும் வென்று விட்டார்..!

பமீலா எடுக்கும் துணிச்சல் மிக்க முடிவால் ஒட்டு மொத்த மாணவர்களின் மனதையும் வென்று எதிரணி, தனது அணி என்று எதுவும் இல்லாமல் ஓரணியில் திரள வைக்கிறார். தெருவிலும் வெற்றி..!

சேரும் சகதியும் குழப்பமும் குற்றமும் என எல்லா கேடுகளும் பாகுபாடுகளும் நிறைந்த சமூகத்தில் வாழும் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் பள்ளிக்கு வந்து போகிறார்கள். அவர்களின் நடத்தைகளை அவர்களின் வாழிட சூழலையும் சேர்த்து பாருங்கள் என்கிறார். தெருவைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பறையை, குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது..! எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்காமல் பேசும் பள்ளியின் முதல்வர் புளொரியன்..சிறந்த முன்னுதாரணம்!

சுதந்திர பள்ளி.. விவாத வகுப்பறை சிந்தனைகளையும் சின்ன சின்ன இடங்களில் தோற்று தோற்று மாணவர்கள் மனதையும் மக்கள் மனதையும் வெல்லும் பிரைத்வெயிட் என்னும் ஹீரோவையும் அறிமுகப் படுத்துகிறது எங்கள் பேரா. ச.மாடசாமி அவர்களின் நிறத்தை தாண்டிய நேசம் என்கிற புதிய நூல். வாசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது..

நிறத்தை தாண்டிய நேசம்.. மாற்றத்திற்கான வாசல்..!

To Sir With Love Braithwhaite BookReview By M kathiresan. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் - ம.கதிரேசன்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – ம.கதிரேசன்




கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் TO SIR WITH LOVE என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் தான் “நிறத்தைத் தாண்டிய நேசம்”. இது அவரது வாசிப்பனுபவ புத்தக வரிசையில் மூன்றாவதாகும். TO SIR WITH LOVE புத்தக ஆசிரியர் ரிக்கி பிரைத்வைட். கறுப்பர்.அவரின் சுயசரிதை. சந்தர்ப்பவசத்தால் ஆசிரியரான கறுப்பர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை.

பிரைத்வைட் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தவர். இன்ஜினியர்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் சேர்ந்து போரிடுகிறார்.
உலகப் போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படுகின்றன. வேலையிழப்பு. பண்பாட்டிலும், நாகரிகத்திலும் தான் பெரிதும் மதிக்கும் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். இங்கிலாந்தின் நிறத்தின் அடிப்படையிலான பாரபட்சத்தால் செல்லுமிடமெல்லாம் நிராகரிக்கப் படுகிறார். இறுதியாக லண்டனின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.

கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளி- பணிபுரிய யாரும் தயங்கும் பள்ளி. ஆசிரியர் பணியே அவர் நேசிக்கும் பணியல்ல. அதிலும் சேரிப் பகுதியில், சமாளிப்பதற்கு கடினமான பள்ளியில் வாழ்க்கை பாட்டுக்காக பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள்தான். மாணவர்களை சமாளிப்பது பெரும்பாடு. பொதுவாக ஆண் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் நீடிக்க முடிவதில்லை. அவரது நல்வாய்ப்பு ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் புளோரியனும் சக பெண் ஆசிரியர்களும்தான்.

புளோரியன் எளிமையானவர். வழக்கமான பள்ளியாக இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரத்துடன் புதிய முயற்சிகளுடன் பள்ளியை நடத்துபவர். பசியுடன் வரும் மாணவர்களைப் புரிந்தவர். பல்வேறு இன, மத மாணவர்கள் படிப்பதால் அசெம்பிளியில் கூட குறிப்பிட்ட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மதிய உணவை உண்கின்றனர். பாடம், ஆசிரியர், விளையாட்டு பற்றிய மாணவர்களின் வெளிப்படையான வாராந்திர அறிக்கை- மதியம் இசை-நடனம்-ஆண்டுப் பேரவை- அதில் கற்றுக்கொண்டவைகளை மாணவர்களே வெளிப்படுத்துதல், ஆசிரியர்களுடன் மாணவர்களின் கேள்விகள் என்று புதுமையான முயற்சிகளை பின்பற்றுகிறார் புளோரியன்.

பிரைத்வைட் உயர் வகுப்பு ஆசிரியர். அவர் கனவு கண்ட வகுப்பறையல்ல இது. அசுத்தமான வகுப்பறை. அழுக்கான உடைகள். அவரது முதல் வகுப்பு இறுக்கத்துடன் முடிகிறது. தொடர்ச்சியான வகுப்புகளிலும் கசப்பும் பகைமையும் மிஞ்சுகிறது. பேருந்து, பொதுவெளி எங்கும் நிலவும் நிறபேதம் சமூகத்தின் தாக்கத்தால் ஏழைமாணவர்களிடமும் ஒரு ஆண் ஆசிரியரிடம் கூட வெளிப்படுகிறது. பிரைத்வைட் பொங்கி எழுவதில்லை. கறுப்புத் தோலுடன் மரியாதையாக வாழ்வது எப்படி என்று அவமதிப்புகளை நிதானமாக கடக்கிறார். மாணவர்களின் ஒத்துழைக்காத மௌனம், வகுப்பறை சத்தம், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறார். மாணவர்களின் மனங்களை அன்பால் வெல்கிறார்.

ஏழை மாணவர்களான அவர்கள் பள்ளி உயர் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லக் கூடியவர்கள் அல்ல. உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை தாங்கும் நிலையில் உள்ளவர்கள். இதையே பிரைத்வைட் கற்பித்தல் ஆயுதமாக பிரயோகிக்கிறார். நீங்கள் குழந்தைகளல்ல;சீனியர்; வேலைக்கு போகும் இடங்களில் இதெல்லாம் வேண்டியதிருக்கும் என்று சொல்லியே மாணவர்களை வழிக்குக் கொண்டு வருகிறார். சமமாக நடத்துகிறார்.

உரையாடல் தொடங்குகிறது. பிரைத்வைட் பெரிதும் மெனக்கெடுகிறார். மாணவர்கள் எதைக் கேட்டாலும் அவரிடம் பதில் இருக்கிறது. மியூசியத்திற்கு அழைத்துச் செல்வது போன்று பொது வெளியிலும் கற்றலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறார். இப்போது அவரது டேபிளைச் சுற்றி எந்நேரமும் மாணவர்கள்! வீடுகளிலிருந்து ஆசிரியருக்கு பூங்கொத்தும் ,கேக்கும் கொண்டு வருகிறார்கள். எங்க சார் எங்க சார் என்று கொண்டாடுகிறார்கள்.

மாணவர்களின் குடும்ப பின்னணி நெகிழ வைக்கும்!அம்மாவின் பிரசவத்தின்போது தலைமாட்டில் உடனாளாக இருந்த ஒரு மாணவி. மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் பெற்றபோது குடும்பத்தையே தாயாக பார்த்துக்கொண்ட மாணவி .மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற குடும்ப பின்னணியை கொண்டவர்கள்தான்! விளையாட்டுச் சண்டையில் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவனுக்கு கத்திக் காயம்பட, கத்தியை வைத்திருந்த மாணவன் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது தண்டனையின்றி அந்த மாணவன் வெளிவருவதற்கு பிரைத்வைட் உதவுகிறார். இளம் விதவையான அம்மா, அவரது மகள் மனக்கசப்பை போக்க தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

வீதியோடு நெருங்கும்போது பள்ளியும் அவரோடு மிகவும் நெருக்கமாகிறது. தள்ளுவண்டியில் சாமான்கள் வாங்கும்போது அவருக்கு தனி முன்வரிசை. இவர் என் மகளின் /மகனின் ஆசிரியர் என்ற பெருமை! கறுப்பர் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த பெண்மணி மகளின் கோபத்தால் மனம் வருந்தி வீடு வாடகைக்கு விட முன்வருகிறார். அன்பு மட்டுமல்ல; மாணவர்களின் அத்துமீறல்களின் போதும் உரியவாறு தலையிடுகிறார் பிரைத்வைட்.

ஆண்டுப் பேரவை! பிரைத்வைட்டின் மாணவர்கள் உலகெங்கும் நாடு இழந்து வாடும் மக்கள் பற்றி- நாடு இனம் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்று- நிற பேதமற்ற இங்கிலாந்து என்றெல்லாம் பேசுகின்றனர். பிரைத்வைட்டின் முயற்சிகள் வீண் போகவில்லை! முடிவில் மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியரிடம் சொல்வது முக்கியமானது. ” உங்களால் வளர்ந்தோம். பொறுப்புள்ள இளைஞர்களாக நடத்தினீர்கள். உங்களுக்கு எங்களின் இந்த சிறு பரிசு” என்று எழுதி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.

இவ்வளவும் ஓராண்டுக்குள் சாதித்துள்ளார் என்பதுதான் பிரைத்வைட்டின் பெருமை! மாணவர்களிடம் நிறத்தை தாண்டிய நேசம் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு சோகம்! அவரது சக பெண் ஆசிரியர் கில்லியன். வெள்ளை நிறத்தவர். ஒத்த ரசனையும், மனப்போக்கும் காதலுக்கு வழி வகுக்கிறது. காதல் கைகூடவில்லை.வெளியில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்குப் பிறகு சின்ன தயக்கத்திற்குப் பின்னர் கில்லியன் தெளிவடைகிறார். எனினும் அவரது தந்தை கலப்புத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. கில்லியன் பள்ளியைவிட்டு சென்று விடுகிறார். பிரிவால் சோர்வடைந்து விடவில்லை. உறுதியான மனிதர்! 104 வயது வரை வாழ்ந்தார்.

இந்தப் புத்தக அனுபவம் பற்றி எஸ். எம். கூறும்போது பிரைத்வைட்டின் மீதான அன்பால் புத்தகத்தை கையில் எடுத்ததாகவும், அனுபவத்தை எழுதி முடித்த போது பிரைத்வைட்டுடன் கூடவே தலைமையாசிரியர் புளோரியனும் மாணவி பமீலாவும்தனது மனதில் நிறைந்ததாக கூறுகிறார். மாணவர்களை நேசித்து தன்னுடன் பயணித்த சக ஆசிரியர்களும் உடன் நின்ற உயிருக்குயிரான மாணவர்களும் இந்த புத்தக வாசிப்பின் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தார்கள் என்கிறார்.

அனேகமாக நிறத்தை தாண்டிய நேசம் புத்தகத்தைப் படிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவரைப் போன்றே ஞாபகம் வருவது நிச்சயம். சில புத்தகங்கள் லயித்து படித்து அப்படியே விழுங்க வேண்டியவைகள் என்று பிரான்சிஸ் பேகன் கூறுவது இந்தப் புத்தகத்திற்கு அப்படியே பொருந்தும். பிரைத்வைட்டின் குழந்தைகளின் மீதான அன்பு எஸ்.எம். சாரின் வார்த்தைகளுடன் அன்பு வெள்ளமாக பிரவாகமெடுக்கிறது. அவரது “வித்தியாசம் தான் அழகு “புத்தக மதிப்புரையில் வேணுகோபாலன் “அன்புதான் பேராசிரியர் ச. மாடசாமியின் மைக்கூடு.அவரின் எந்த எழுத்தும் அன்பின் மை தொட்டே எழுதப்படுவது” என்று குறிப்பிட்டது மிகச் சரி. இந்தப் புத்தகத்தை வாசல் பதிப்பகம் அழகுணர்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.

கரோனோ பெருந் தொற்றுக்கு பின்னர் கற்றல் திறன் குறைபாடு அதிகரிப்பு- இடைநிற்றல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்நிலையில், போதிய ஆசிரியர்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் இந்த சிரமங்களைத் தாண்டியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பணியாற்றவேண்டியுள்ளது.

போற்றத்தக்க முன்னெடுப்புகளை பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தனிப்பட்ட முயற்சிகள் ஒரு இயக்கமாக மாற வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சங்கங்களின் கடமைகளில் சரி பாதி கற்பித்தல் தொடர்பான மெனக்கிடல்களும் இருக்க வேண்டும். அதற்கு பிரைத்வைட்டின் அனுபவம் கைகொடுக்கும்.

அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு நீண்டகாலமாகவே பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமது ஊதியத்தில் ஒன்றிரண்டு சதவீத தொகையையாவது புத்தகம் வாங்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதே அந்த ஆதங்கம். தமிழறிஞர் வீ.அரசு அவர்களின் தலைமையில் “சீர் வாசகர் வட்டம்” 700 பக்கங்கள் கொண்ட புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஒரு ரூ. 100 க்கு விற்பனை செய்யும் மகத்தான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கல்வி தொடர்பான புத்தகங்களை லட்சக்கணக்கில் ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியம் அல்ல.

புத்தகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம்
புத்தக வெளியீடு- வாசல் பதிப்பகம்
விலை- ரூ.120
98421 02133-
மின்னஞ்சல்- vasalviji@gmail.com