மகளிர் தின சிறப்பிதழ்: மகளிர் தினமும் பெண் விடுதலையும் கட்டுரை – ராதிகா
ராதிகா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்றைய சூழலில், பெண்கள் பங்கு பெறாத துறைகளும் இல்லை, அவர்கள் எட்டாத இலக்குகளும் இல்லை என்பதே உண்மை. கல்வியிலாகட்டும், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களிலாகட்டும், வேலைவாய்ப்புகளிலாகட்டும் பெண்கள் அதிகம் சாதித்துள்ளனர். மேலதிகமாக, ராணுவத்திலும், போர் விமான இயக்கத்திலும், விண்வெளித் துறையிலும் கூட, பெண்கள் ஈடுபட்டு சிகரம் தொட்டுள்ளனர் என்றால், அது மிகையாகாது. இந்தச் சாதனைகளை எல்லாம் யாரும் மறுக்கவும் இயலாது.
இப்படி பெண்களின் முன்னேற்றத்தை, அனைத்துத் துறைகளிலுமான அவர்களது சாதனைகளை, ஈடுபாட்டை நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில், அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை மிக அமைதியாகக் கடந்து போகும் நிலையும் இருக்கிறது. இது மிகக் கசப்பான உண்மையாகும்.
தினம்தோறும், பெண்களுடைய வாழ்வு, வீட்டுக்குள்ளும் வெளியிலும், வெவ்வேறு விதமான பல சவால்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது. “மாவட்டங்கள், நாடுகள், கண்டங்கள் மாறினாலும் பெண்களின் கதைகள் அப்படியே தான் இருக்கின்றன” என்ற ஒரு எழுத்தாளனின் வரிகளே எனக்கு நினைவிற்கு வருகின்றது.
பாஜக ஆட்சியில் பெண்கள்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உன்னாவ், ஹத்ராஸ் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உலகையே உலுக்கின. ஹத்ராஸில் தலித் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மிகக் கொடூரமான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தபோது, மாநில அரசாங்கம் காலவ்துறையினரைக் கொண்டு இரவோடு இரவாக அவரது உடலை பெற்றோர்களுக்கே தெரியாமல் எரித்தது. உலகமே கண்டித்த இந்த அக்கிரமத்திற்கு சமீபத்தில் ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதயம் உள்ளவர்களை கொதிப்படையச் செய்திடும். அந்தப் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படவில்லை எனக் கூறி நான்கு பேரில் மூவரை விடுவித்துள்ளது நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசதி படைத்த அதிகார பலம் படைத்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சனாதன மனுதர்ம சாத்திரமே இந்தியாவிற்குத் தேவை எனப் பிரச்சாரம் செய்து வருகிற பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத் உத்திரப் பிரதேச மாநில அரசின் முதலமைச்சராக வேறு இருக்கிறார். அதனால் இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிற்கு நீதிபெற்றுத் தருவதற்குப் பதிலாக, சாதிய ஆணாதிக்க வெறிபிடித்த குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக நிற்கிறது பாஜவும், அதன் மாநில அரசும். இந்த மாநிலத்தில் அக்கிரமக்காரர்கள், அசுரபலத்தோடும், அரச பலத்தோடும் நீதிக்குப் புறம்பாக அதிகம் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். போலீஸ் அதிகாரிகள் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரை இம்மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளாக உள்ளனர் என்பது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கும் விஷயம்.
உத்திரப்பிரதேச மாநிலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் உட்சபட்ச குற்ற மாநிலமாக உள்ளது.
*2015 முதல் 2019 வரையிலான நான்கு வருடங்களில், உத்திரப்பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 67.7% அதிகரித்துள்ளது. இந்திய மாநிலங்களில் இதுவே அதிகமாகும்.
* தோராயமாக ஒரு நாளுக்கு 164 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக அங்கு நடக்கின்றன.
* கடந்த 2019 ம் ஆண்டு இந்தியாவில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புள்ள வழக்குகளில், 15% வழக்குகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில்தான் பதிவாகியுள்ளது.
இதேபோல், அஸ்ஸாம் மாநிலத்தில், இக்குற்றங்கள் ஒரு நாளுக்கு 177.8 ஆகவும், டெல்லியில் 144 ஆகவும் உள்ளன.
மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு முற்றிலும் பெண்கள் விரோத அரசாக உள்ளது. பாஜக அரசு பின்பற்றும் பிற்போக்கான அறிவியல் அடைப்படையற்ற கொள்கைகளால் இந்தியப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாகவே மாற்றப்பட்டு விட்டது. சமீபத்திய மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக கட்சியின் வேட்பாளர் ஒருவர், விபச்சார வழக்கில் சிக்கியுள்ளவர். மக்கள் பிரதிநிதியாக செயல்பட வேண்டிய பொறுப்பான பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இப்படிப்பட்ட ஒருவராக இருப்பதே ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத, குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு ஒரு சாட்சியாகும்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் பாஜக மோடி அரசின் ஆதரவோடு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக காவிக் கும்பல்கள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது சொந்தக்காரர்கள் அவர் கண்முன்னே கொல்லப்பட்டார்கள். அவரது குழந்தை அவர் கண்முன்னரே கொல்லப்பட்டது. 2002 குஜராத் வன்முறை வழக்குகளில் அபூர்வமாக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக பில்கிஸ் பானு வழக்கு இருந்தது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அந்தக் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மத்திய பாஜக அரசு தெரிவித்ததன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாக்கும் எண்ணம் படைத்த அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. பாஜக பெண்களின் உரிமைகள் குறித்த எத்தகைய பார்வை கொண்டது என்பதற்கு ஹத்ராஸ், குஜராத் பில்கிஸ் பானோ வழக்குகள் சாட்சியாக இருக்கின்றன. சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தன் வளர்ப்புத்தாய், தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சொல்லி, தமிழ்நாட்டிற்குத் தப்பி வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜக ஆர்.எஸ்.எஸ் எத்தகைய கொடூரமான மனிதஉரிமைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரான அமைப்புகளாக இருக்கின்றன என்பதற்கு அனுதினமும் இப்படியான பல்வேறு சம்பவங்களை நாம் கண்டு வருகிறோம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் இந்தக் காலத்தில் கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் நாடு முழுவதும் பெண்கள் மீது தொடரப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆணாதிக்க கருத்துக்கள், மூட நம்பிக்கைக் கருத்துக்கள் தொடர்ச்சியாக ஏதாவது வடிவத்தில் பரப்பப்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது.
பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. இங்கெல்லாம் பாஜக சங்பரிவாரங்கள் வலுப்பெற்று வருவது பெண்களுக்கு எதிரான மேலும் மோசமான சூழலைக் கட்டமைத்து வருகிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுபான்மையினப் பெண்கள் மீதான வன்முறைகள் சொல்லி மாளாது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் பெண்களுக்கான உரிமைகள், தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், தெருக்களில் என் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வகுப்புவாத கலவரங்கள் மற்றும் சாதி கலவரங்களின் போதும், பெண்களே அதிகம் குறிவைத்துத் தாக்கப்படுவதைப் பார்க்கிறோம். தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, உடை, உணவு விஷயங்களிலான உரிமை என, பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. சங்பரிவாரக் கும்பல்கள் திட்டமிட்டு, நாடு முழுவதும், சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு அச்சுறுத்தல்களைத் தந்து வருகின்றன. ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளை கெட்டிப்படுத்தும் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகள் செய்து வருகின்றன. புதிய புதிய வடிவங்களில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதை பாஜக அரசு கண்டும் காணாமல் இருக்கும் போக்கையும் பார்க்க முடிகிறது.
தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை காண்கிறோம். பொள்ளாச்சி சம்பவம், கள்ளக்குறிச்சி சம்பவங்கள் ஒரு சில உதாரணங்கள்.
பெண்ணுரிமைப் போராட்ட வரலாறு
வரலாற்று நெடுக பெண்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். மனிதர்களை சுரண்டலில் இருந்து விடுவிக்கும் கம்யூனிச தத்துவம் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்ஸ்-ஏங்கெல்ஸால் வளர்த்தெடுக்கப்பட்ட போது, தொழிலாளர் வர்க்கம் இந்தத் தத்துவத்தின் அறிவியல் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு கைக்கொண்டது. தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களில், பெண்கள் குழந்தைகள் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டார்கள். இது குறித்து மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் நிறைய குறிப்பிட்டிருக்கிறார். பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, வாக்குரிமை கோரிக்கைகளை முன்வைத்துப் போராட மார்க்சியத் தத்துவமும், சர்வதேச கம்யூனிச இயக்கமும் வழிகாட்டியது. விளைவாக, 1910 ம் ஆண்டு, டென்மார்க்கின் கோபன் ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில், “சர்வதேச மகளிர் தினமாக” ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாட வேண்டும் என்று, ஜெர்மன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் கிளாரா ஜெட்கின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். 1917 ரஷ்யப் புரட்சிக்கு தொடக்கமாய் பெண் தொழிலாளர்கள் பெட்ரோகிராட் நகரில் 1917 மார்ச் 8 அன்று நடத்திய போராட்டம் அமைந்தது. ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கைப் பறைசாற்றும் வகையில் அமைந்த மார்ச் 8 ஐ மகளிர் தினமாக சோவியத் ரஷ்யாவில் கடைபிடிக்க லெனின் தலைமையிலான உலகின் முதல் சோஷலிச அரசாங்கம் முடிவெடுத்துப் பின்பற்றியது. கம்யூனிஸ்ட் பெண் தலைவர்களின் முன்னெடுப்பால் 1975 முதல் ஐ.நா.சபை இந்த நாளை “சர்வதேச பெண்கள் தினமாக” கொண்டாடத் தொடங்கியது. மகளிர் தினம் உலகெங்கிலும் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களை ஒருங்கிணைப்போம்! போராடுவோம்!
உலகம் முழுவதுமே பெண்கள், தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை, பெரிய அளவில் நடத்த தொடங்கியுள்ளனர். வாழ்வுரிமை, வாழ்வாதாரம், ஜனநாயக உரிமைகள், வன்முறைகளற்ற வாழ்வு, மதசார்பின்மை ஆகியவற்றிற்காகப் போராடும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த ஆண்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகளை நடத்திட முடிவு செய்துள்ளன.
இந்தியாவில், முன்னெப்போதும் இல்லாத அளவில் நடைபெறும் பெண்ணுரிமை கருத்துக்கள் மீதான, கடுமையான, தொடர் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்த்து, அனைவரும் ஒன்றிணைந்து, குரல் எழுப்ப வேண்டிய காலம் இது. வாழ்வுரிமை, வாழ்வாதாரம், ஜனநாயக உரிமைகள், வன்முறையற்ற வாழ்வு, மதச்சார்பின்மை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் கோட்பாடுகளை முன்வைத்து, இந்தியப் பெண்களை ஒன்றிணைத்து, வகுப்புவாத, மனுவாத ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக அணி திரள்வோம்! மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அந்தக் கடமையை நமக்கு வலியுறுத்துகிறது.