திரை விமர்சனம்: கடைசி விவசாயி – தமிழில் வந்திருக்கும் ஓர் உலகத்திரைப்படம் – இரா.தெ.முத்து
கடைசி விவசாயி திரைப்படத்தின் ஒன்லைன் கதைச்சுருக்கம் என்ன என கேட்டால், இன்னது என சொல்லி விட முடியாது.பல ஒன்லைன்கள் உள்ள திரைப்படம் கடைசி விவசாயி.
சொந்த மண்ணின் வேர்களை பற்றிய ஓர் அழகியல்சித்திரம் இந்தப்படம்.
மதுரைமாவட்டத்தின் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த ஏதாவதொரு சின்னப் பட்டியின் கதையைப் பேசுகிறது.இதன் வழி ஓர் இந்திய கிராமத்தை ஓர் உலக கிராமத்தை அதன் சவால்களைப் பேசுகிறது கடைசி விவசாயி.
ஊர் குலதெய்வம் கோவிலுக்கு திருவிழா நடத்தணும் என்று பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பெரியவர் அருந்ததி பிரிவுப் பெரியவரைப் பார்த்து வேண்டுகோள் விடுக்கிறார்.நல்லா நடத்துவோம்.பழைய மாதிரி நடக்க கூடாது என்ற கண்டிப்பு மேல் நின்று அருந்ததியர் பேச வாய்ப்பளிக்கிற படமாக வந்திருக்கிறது.
ஊரில் இணக்கம் வேண்டுமென்று சாதியம் பேசுபவரை எதிர்த்து பஞ்சாயத்தில் வாதிடுகிற பூசாரி இளைஞர்கள் என நம்பிக்கை அளிக்கிறது கடைசி விவசாயி. கிராமத்து பாம்படக்காது ஆத்தாக்களும் இணக்கத்தை விரும்புகின்றனர்.கிடாமீசைக்காரர்கள்தான் சண்டைக்கு சலங்கை கட்டுகின்றனர்.
வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, மேற்குலகத்திற்கு தேவையான பணப்பயிர் இதர தேவைகளுக்காக, சுற்றுப்பட்டி விவசாய நிலங்களெல்லாம் விற்கப்பட, பம்புசெட் கிணற்றடி நிலத்தை வைத்து தனி ஆளாக வேளாண்மை செய்து, கன்று காலிகளை பாதுகாக்கிற இயற்கை விவசாயி மாயாண்டி அவருக்கு இழைக்கப்படுகிற அநீதி, அம்பலமாகும் உள்ளூர் அரச முகங்கள் என்று பிரதான கதையொன்று ஆணிவேர் போல ஒடுகிறது.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் வழி தொடங்குகிறது படம்.படத்தை பார்த்து முடிக்கையில் இந்த தொடக்கக் காட்சி அச்சத்தை ஊட்டுகிறது.எத்தனை இள உயிர்களை காதல் எனும் பெயரில் காவு வாங்கிய மலை என அச்சத்தை ஏற்றுகிறது.
மலையில் இரண்டடி உயரத்தில் ஊர்மக்களின் குலசாமியாக நிறுவப்பட்டிருக்கும் அரூபமான கருந்தூண் வழிபாடு கொண்ட, பெருந்தெய்வ வழிபாடு ,கும்பாபிசேகம் இல்லாத சிற்றூர் அது. தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்கள் மதம், அது சார்ந்த அரசியல் வெறியூட்டுகள் இல்லாத சிவனே என்று சித்தநெறிப் போக்கில் வாழ்கிற ஊரின் மானுடவியலை அழகியலான கலைமொழியில் உணர்த்தி இருக்கிறது.
மாயாண்டியிடம் மட்டும் இயல்பாக பேசும் , பொது விசயங்களை அறிந்து வைத்திருக்கும் , பைத்தியம் என ஊரில் பலரால் புறக்கணிக்கப்படும், முருகபக்தனாக சித்தம் பிறண்டு காட்டு வழியாகவே ஒவ்வொரு ஊரைக் கடந்து திரியும் அலைகுடியான ராமையா பாத்திரம் வழியாக, வடபுலத்து வைதீகத்திற்கு மறுப்பான முருகவழிபாடு , இயற்கை மீது கானுயிர்கள் மீதான நேசம் கொண்ட பாத்திரம் என்ற புரிதலை படம் உருவாக்குகிறது.
முருகபக்தன் ராமையா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி மாறுபட்ட தோற்றம் நடிப்பை தந்து தன் திரைப் பயணத்தில் வகை வகையான நடிப்பை தருகிறார் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி.
கிளைமாக்சின் முன்னதான காட்சிகளில் எச்சில் தொட்டி இலைகளில் சிதறிய உணவுகளை சாப்பிடும் சிவனடிக்கு சாப்பிட உணவுப் பொட்டலம் தரும் ராமையாவின் (விஜய்சேதுபதி) நெற்றியில் சிவனடி திருநீறு பூசி விட்டு, கையில் அள்ளிக் கொடுக்கும் விபூதியை வாங்கி ராமையா மலைக்கும் போது சிவனடி பள்ளத்தாக்கை காட்டி , அங்க ஒருத்தி இருக்கா, அவளுக்கு வெச்சு விடு என்கிறார்.
சிவனடி சொல்லின் அர்த்தம் புரிந்து, அசரீரியான மயில் அகவும் குரல் கேட்டு ராமையா கண்களைச் செருகி, மலையுச்சி சென்று தன்னை மாய்த்துக் கொள்ளும் கணம் பொடேரென்று கன்னத்தில் அறைந்து , ஏதோ ஒரு பெண்ணின் ராமையாவின் காதலியாகக்கூட இருக்கலாம் என்ற புரிதலில் ,ஆணவக்கொலக்களத்தை உணர்த்துகிறது இந்தக் காட்சிகள்.
செத்துக் கிடக்கும் மூன்று மயில்களை தன் நிலத்தில் புதைத்து அஞ்சலி செலுத்திய கானுயிர் நேசனான மாயாண்டியை போலீஸ் ,கோர்ட் ,ஒரு மாத நீதிமன்ற காவல் என அலைக்கழித்து, நிலக்கொள்ளையர்களுக்கு விவசாய நிலத்தை விற்க மறுத்தால் ஏற்படும் விளைவுகளை பழிவாங்கல்களை படம் சொல்கிறது.
யோகிபாபுவின் பாத்திரம் மனதை கசிய வைக்கும் துயரம் கொண்டதாக இருக்கிறது.நிலக்கொள்ளையர்களுக்கு பதினைந்து ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு, யானை ஒன்றை வாங்கி அக்கம் பக்கம் ஊரில் யானையோடு அலைந்து அதனால் கிடைக்கும் பணத்தில் வாழ்வை ஓட்டும் அந்த துயரம் நிலமிழந்த விவசாயிகளின் விரியுமொரு துயரக்காதையாக இருக்கிறது.
விவசாயி மாயாண்டியை வழக்கு, நீதிமன்றம் என அலைய விடுகிறார்கள்.ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்க ஆளில்லை.பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீதிமன்றக்காவல் நீள்கிறது. பயிர்களை எல்லாம் ஒவ்வொரு உயிராகப் பாவிக்கும் காது கேட்காத மாயாண்டி, மயில்களை கொன்றிருக்க வாய்ப்பில்லை என வழக்கை விசாரித்து, வழக்கிற்கும் மாயாண்டிக்கும் இடையில் இழுபடும் மனசாட்சி உள்ள இளம் மாஜிஸ்ரேட்டாக ராய்ச்சல் ரெபக்கா பிலிப் மனம் கவர்கிறார்.
இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக மாயாண்டி பாத்திரம்
தன் சொல்லை செயலை செய்து கொண்டே போகிறது.மலட்டு விதை, எண்ணெய்சத்து இல்லாத புண்ணாக்கு போன்றவைகளை இயல்பான வேளாண்மொழியில் விமர்சித்துப் பேசி, பசுமைப்புரட்சியின் எதிர் விளைவுகளை நிலத்தை மலடாக்கும் கார்ப்பரேட் பூச்சிக்கொல்லி நிறுவனங்களை அக்கம் பக்கமாக களையெடுக்கிறது.
எண்பது வயது மாயாண்டியாக உண்மையான விவசாயி நல்லாண்டி திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். விஜய்சேதுபதி, யோகிபாபு , ராய்ச்சல் ரெபக்கா தவிர, அனைத்துப் பாத்திரங்களும் உசிலம்பட்டி சுத்துப்பட்டி மக்களே பாத்திரங்களாக மாயாண்டியோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கலைகள் யாவற்றிற்கும் அடிப்படை உழைப்புதான். உழைப்பைத் தருகின்ற உழைப்பாளி மக்களே கலைகள் யாவற்றிற்கும் தாய் நிலமாக இருக்கிறார்கள் எனும் மார்க்சிய அணுகுமுறைக்கு ஏற்ப, மொத்த ஊரே கடைசி விவசாயி திரைப்படத்தில் தன் கலைநேர்த்தியை நிரூபித்திருக்கிறது. இயக்குநர் மணிகண்டன் உசிலம்பட்டி என்பதால் மண்ணின் நிறத்தை வாசனையை படத்தில் கொண்டு வந்துவிட்டார்.
காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை படங்களை தந்த இயக்குநர் ம.மணிகண்டன் இந்த திரைப்படத்தின் இயக்குநர் மட்டுமல்ல; கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என பொறுப்பேற்று படத்திற்கான உயிரும் ஒளியுமாக இருக்கிறார். வசனத்தின் நக்கல்,கலாய்ப்பு வழியாக எதுவொன்றையும் விமர்சிக்கிறார். எள்ளல் உத்தி சிறப்பான விமர்சன உத்தியாக மணிகண்டனிடம் மாறி வந்திருப்பது சிறப்பு.
சந்தோஷ் நாராயணன்-ரிச்சர்ட் ஹார்வி இசை படத்திற்கு பெரும்பலமாக இருக்கிறது.தோட்டாதரணியின் கலை இயக்கம் இயலான அசலான நேர்த்தியோடு கை கூடியிருக்கிறது.மொத்த ஊர் நடிக்கும் பொழுது, ஒலிக்கலவை இயற்கையாக வரும் பொருட்டு அஜயன் அடாட் மெனக்கெட்டிருக்கிறார்.
ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சிமலை படங்களை தயாரித்த விஜய்சேதுபதி, கடைசி விவசாயி படத்தை தயாரிக்க மணிகண்டனிற்கு உதவி இருக்கிறார்.
தமிழில் வந்திருக்கும் ஓர் உலக திரைப்படம் கடைசி விவசாயி.