இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே… – எஸ் வி வேணுகோபாலன்
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’
என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது!
இதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தமது சாதனைகளை ஆவணப்படுத்த அக்கறை கொள்ளாது அலட்சியமாக இருக்கும் சமூகம்! எத்தனையோ அரிய செல்வங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கத் தவறி இருக்கிறோம். நுட்பமான வரலாறுகள், பல அசாத்திய மனிதர்களைக் குறித்து நம்மிடையே இல்லை.
அண்மையில் இசையுலகின் அறிஞர் ஒருவரது புத்தகம் சென்னையில் வெளியானது. அவரது பார்வைக்கு அந்தப் புத்தகத்தை விரைவில் சேர்ப்போம் என்று மார்ச் 28, 2023 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக விழாவில் பேசப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அந்த அறிஞர் தனது சுவாசத்தைத் தானிருந்த தேசத்தில் நிறுத்தி விட்டிருந்தது பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. மிக இலகுவாகத் தமிழில் பேச அறிந்திருந்த அந்த அறிஞர் இந்தியர் அல்ல, ஜப்பானியர். லச்சப்ப பிள்ளை எனும் வித்வானிடம் முறைப்படி கற்றுக் கொண்ட சிறப்பாக நாகஸ்வரம் வாசிக்கப் பழகி இருந்தவர். ராஜரத்தினம் பிள்ளை அவர்களைக் குறித்த சீரிய ஆய்வு மேற்கொண்டு அந்த நோக்கில் இசையுலகு குறித்த முக்கியமான தீஸிஸ் அவர் படைத்திருந்ததன் நூல் வடிவம் வெளியாகும் தருணத்தில் அவரே வந்து நாகஸ்வர இசை வழங்க விரும்பி இருந்தார், அது சாத்தியமாகவில்லை என்பது கூடுதல் துயரச் செய்தி.
அவரது நூலின் முதல் பிரதியை வாங்கிக் கொண்டவரும், இந்த நூலைக் கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பு செய்திருப்பவருமான பத்திரிகையாளர் – தி இந்து ஆங்கில ஏட்டின் முன்னாள் ரீடர்ஸ் எடிட்டர் ஏ எஸ் பன்னீர்செல்வன் அவர்கள் ஃபிரண்ட்லைன் இதழில் எழுதியுள்ள புகழஞ்சலிக் கட்டுரை, டெரடா யோஷிடாகா (1954-2023) எனும் மிகச் சிறந்த இசை ஆய்வாளரை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. உலக பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இசைத் துறையில் பெரும் பொறுப்புகளும், ஆய்வுத் தலைமையும் வகித்தவர் அவர்.
அந்த நூல் என்ன பேசுகிறது என்பதை தி இந்து ஆங்கில நாளேட்டில் மிகச் செறிவாக முன் வைக்கும் ப கோலப்பன் அவர்களது கட்டுரை, இன்றும் பெரிய சபாக்களில் நாகஸ்வர வித்வான்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது போவதையும் பேசுகிறது.
ராஜரத்தினம் பிள்ளை முன்னெடுத்த துணிவுமிக்க போராட்ட அணுகுமுறை, இசையுலகில் நிலவிய சாதீய அணுகுமுறைகளை, வெளிப்படையான பாகுபாடுகளை எப்படி எதிர்கொண்டது என்பதையெல்லாம் அலசும் டெரடா அவர்களது N. Rajarattinam Pillai: Charisma, Caste Rivalry and the Contested Past in South Indian Music புத்தகம் பெரிய மேளமும் கர்நாடக இசையும் என்ற தென்னகத்தின் இரண்டு இசை மரபுகள் குறித்த நுட்பமான ஆய்வு நூலாக விரிகிறது என்பதையும் விவரிக்கிறார் கோலப்பன். பிராம்மணர் மற்றும் பிராம்மணர் அல்லாதாருக்குமிடையே நிலவிய முரண்பாடுகள், சாதீய மேலாதிக்கம் மட்டுமின்றி இசைக்கருவிகள் பயன்படுத்திய இதர சாதியினரை இசை வேளாளர் எப்படி பார்த்தனர் என்பது உள்பட டெரடா தனது ஆய்வில் கொண்டு வந்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.
கலைஞர்களை சமமாக மதித்தல் ஒரு சமூகத்தின் பொறுப்பு. சக கலைஞர்கள் திறமையைக் கொண்டாடுதல் கலைஞர்கள் யாரும் இழந்துவிடக் கூடாத நல்லியல்பு. அந்நாட்களில் ஓர் இசைக்கலைஞர் பாட, மற்றுமோர் இசை மேதை அவருக்கு பக்க வாத்தியம் இசைத்ததெல்லாம் கேள்விப்படுகிறோம் என்று தனிப்பட்ட உரையாடலில் குறிப்பிட்டார் கோலப்பன். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடுகையில் ஜி என் பி (ஜி என் பாலசுப்பிரமணியன்) தம்பூரா மீட்டியதுண்டு, புகைப்படப் பதிவே உண்டென்பார்கள் என்றார். மேடையில் ஓர் இசைக் கலைஞர் இசைக்கையில் எதிரே வரிசையாக எத்தனையோ இசை மேதைகள் அமர்ந்து ரசித்துப் பாராட்டிக் கேட்ட சுவாரசியமான செய்திகள் பதிவாகி உள்ளன. ஓர் உன்னத மரபு அது.
அண்மையில், ஓர் அரிய காணொளி பார்த்தபோது அத்தனை உற்சாகம் பிறந்தது. திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களிடம் அமர்ந்து, மன்னவன் வந்தானடி பாடல் கம்போசிங் எப்படி அத்தனை நேர்த்தியாக அமைந்தது என்று மெல்லிசை மன்னர் (குரலை வைத்துத் தான் உணர முடிகிறது, உருவத்தைப் பார்த்து அல்ல!) எம் எஸ் விசுவநாதன் கேட்க, வரிகளின் பெருமை கண்ணதாசனுக்கு என்கிறார். உண்மைதான், அது பாடலின் பெருமை, இசை அமைத்தது நீங்கள் ஆயிற்றே என்றால், அதெல்லாம் குருவாயூரப்பன் கருணை என்று தன்னடக்கத்தோடு சொல்லியவாறு, கே வி மகாதேவன் அவர்கள் ஸ்வர வரிசைகளில் வரும் இடத்தை ஹார்மோனியம் தபோலா கருவிகளோடு இசைத்துக் காட்டுவது ஓர் அருமையான பதிவாகும்.
இதில் மற்றொரு சுவாரசியமான காணொளியும் காணக் கிடைத்தது. எந்தக் கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரு பாடலுக்காகத் தான் மற்றோர் இசை மேதையை எம் எஸ் வி ரசித்துப் பாராட்டிப் பேசினாரோ அதே ராகத்தில் அவரும் ராமமூர்த்தி அவர்களும் சேர்ந்து இசையமைத்த அழகை அவரோடு பல ஆண்டுகள் இணைந்து இயங்கிய மதுரை ஜி எஸ் மணி அவர்கள் மெல்லிசை மன்னர் எதிரில் கொண்டாடிப் பேசும் காட்சி அது.
அந்தப் பாடலை இசைத்தவர்கள் எதிர்பார்க்க முடியாத இணை குரல்கள், சீர்காழி கோவிந்தராஜன், எம் எல் வசந்தகுமாரி! அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் மகனே கேள், வெளியாகவில்லை, அந்த வருத்தத்தோடு மணி பேசுவதைக் கேட்க முடிகிறது. எம் எஸ் வியின் ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய விவரிப்பு இருக்கிறதே…ஆஹா… அந்த ரசனை, பாராட்டு, பரவசம் தான் எத்தனை உன்னதமான பண்பு. தலைக்கனம் அற்ற குழந்தைமைப் பார்வையோடு எம் எஸ் வி மேடையில் இருப்பது இன்னும் அழகான காட்சி.
தாங்கள் முன்பு இசையமைத்த சந்திராணி (1954) படத்தின் ‘வான் மீதிலே’ என்ற பாடலை மிகவும் விரும்பும் இளையராஜா கேட்டுக்கொண்டபடி அவரோடு இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில், அதன் சாயை தெரியாதபடி (செப்படி வித்தை என்கிறார் எம் எஸ் வி!) அமைத்த மெட்டு தான் ‘வா வெண்ணிலா’ பாடல் என்று எம் எஸ் வி இசைத்துக் காட்டிச் சொல்வது ரசமான தகவல்.
பாடலைப் பெற்றெடுத்தது நான், ஆனால் அந்தக் குழந்தைக்குத் தலை சீவிப் பொட்டு வைத்துப் பட்டுச் சட்டை அணிவித்து அலங்காரம் செய்ததெல்லாம் ராஜா தான் என்கிறார். சக கலைஞர்கள் உயர்ச்சி தாழ்ச்சி உணர்வு இன்றி இணைந்து இயங்கும்போது எத்தனை இனிய படைப்புகள் உருவாகும் என்பதையும் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு சொல்கிறார் மெல்லிசை மன்னர்.
வா வெண்ணிலா ஓர் அற்புதமான பாடல். பாடலாசிரியர் வாலி. எஸ் பி பி, எஸ் ஜானகி இருவருமே தனித்தனியாகப் பாடி இருக்கின்றனர். பாலு பாடுகையில் ஜானகியின் ஹம்மிங் பாடலை மேலும் ஒளிர வைக்கிறது! வெண்ணிலாவைத் தேடும் வானம் என்ற பொருளில் விரியும் பல்லவி என்பதால், விண்ணிலே மிதப்பது போலவே ஒலிக்கிறது பாடல் முழுவதும்.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு இந்தப் பாடல். சுழற்சியை நிறுத்தாத குடை ராட்டினம் இதன் தாளக்கட்டு. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்றார் பாவேந்தர். பார்வை என்ன, முகமே பார்க்க இயலாமல் துடிக்கும் காதலனின் வேட்கை இந்தப் பாடல். அந்த தாகத்தை மொண்டு மொண்டு வந்து கொண்டு சேர்க்கும் குரலில் எஸ் பி பி இந்தப் பாடலை அத்தனை உயிர்த்துடிப்பாக இசைக்க, அந்த உயிர்க் காதலின் இதயத் துடிப்பாக இயங்குகிறது ஜானகியின் ஹம்மிங். வயலின், கிடார், அளவான குழலிசை என்று கருவிகளைத் தேர்வு செய்த ராஜா, சரணங்களுக்கு இடையேயான இசைக்கோலத்தை ஜானகியின் ஹம்மிங் மையக்கருவாக இருக்குமாறு அமைத்துக் கொண்டது பாடலை இன்னும் ஈர்ப்பு மிகுந்ததாக ஆக்குகிறது.
‘வா….வெண்ணிலா’ என்கிற முதல் பகுதி, காதலின் பேரழைப்பு! காதலனின் உளவியல் துள்ளலைத் தாளம் உடனிருந்து மேலும் விசையேற்றுகிறது. ‘உன்னைத் தானே…’என்பது வாலியின் சிறப்பு. எத்தனை எளிய சொற்களில் உணர்வுகளைக் கடத்த முடியும் என்பது தமிழ்த் திரையிசையில் கொட்டிக் கிடக்கிறது. ‘வானம் தேடுதே…’ என்பதில் அத்தனை சங்கதிகளையும் கொணர வைக்கிறார் ராஜா. ‘அங்கண் விசும்பில் அகல் நிலா பாரிக்கும் திங்களும்’ என்று தொடங்குகிறது நாலடியார் செய்யுள் ஒன்று. வானம் அதன் எல்லையற்ற பரப்பினால் பெருமை உடையது. அதைத் தனது வெண்மையான ஒளியால் மின்ன வைக்கிறது நிலா. அதனால் தான், உன்னைத் தானே வானம் தேடுதே என்பது பல்லவியை அத்தனை அழகாக்கி விடுகிறது. பேசுபொருள் உண்மையில் வெண்ணிலா அல்ல, காதலனின் கண்ணில் நிற்கும் பெண் நிலா என்பதை அடுத்த வரிகள் சொல்லிவிடுகின்றன, ‘மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போவதேன் ….’ அந்தத் தாளக்கட்டில் இந்த வரியின் ஒவ்வொரு சொல்லில் ஏற்றும் சங்கதிகளோடு பாலு அபாரமாக இசைப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
பல்லவி முடியக் காத்திருக்கும் ஜானகியின் தேனிசைக் குரலில் விரியும் ஹம்மிங், வயலின் இழைகளோடு பின்னிக் கொண்டு குழலால் உள்ளத்தை மெல்லத் தீண்டி சரணத்தில் கொண்டு சேர்க்கிறது. ‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்’ என்கிற இடங்களில் பெரிய ஜாலங்கள் இல்லாமல் நகர்த்தும் ராஜா, ‘ஒரு முறையேனும்…’ என்கிற பதங்களில் தொடங்குகிறார் மந்திர ஜாலத்தை. எதிரொலிக்கும் ஹா…ஹா…. ஹே ஹே என்ற ஒற்றைச் சொல் ஹம்மிங் பாலுவும் ஜானகியுமாக, அடுத்த மூன்று அடிகளும் முடித்து, ‘எனைச் சேர….’ என்ற இடத்தில் எஸ் பி பி எடுக்கும் அபாரமான ஆலாபனை நிறைவு பெறுமிடத்தில் தபேலா போடும் சொடுக்குகள் …ஆஹா….மீதி வரிகளை இன்னும் சுகமாக வழங்குகிறார். அதிலும் அந்தக் கடைசி வரியைத் தாளக்கட்டு இன்றி ஒயிலாக மிதக்க விட்டுப் பல்லவிக்குச் செல்கிறார் பாலு. அங்கே ‘உன்னைத் தானே’ சிறப்புக் கவனத்திற்குக் காத்திருக்கிறது.
இரண்டாம் சரணத்தை நோக்கிய இசைப்பயணம் கரவொலியின் ஜோரோடு ஜானகியின் ஹம்மிங் கலக்க, ‘மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்’ என்று எடுக்கிறார் எஸ் பி பி. ‘இடையினில் ஆடும்’ என்கிற இடத்தில் மீண்டும் அதே ஹா…ஹே மந்திர ஜாலம் அடுத்த மூன்று அடிகளுக்கும். ‘உனக்காக….’ என்ற இடம் வாய்க்கிறது மீண்டும் பாலுவுக்கு அபாரமான ஆலாபனை…தபேலா சொடுக்குகள்…மீதி வரிகளின் எல்லையில் முன் போலவே கடைசி வரியைக் காற்றில் மிதக்க விட்டுப் பல்லவியை இன்னும் காற்றோட்டமாக எடுக்கிறார் பாலு. உன்னைத் தானே என்ற இடத்திற்கு இப்போது வாய்க்கிறது கூடுதல் சங்கதி. அருமையாக நிறைவு பெறுகிறது பாடல்.
இசை வெறும் ரசனை மட்டுமின்றி, உணர்வுகளோடு பேசவும் செய்கிறது. உணர்வுகளோடு கலக்கவும் செய்கிறது. நினைவடுக்குகளில் காத்திருக்கிறது, கூண்டு எதிலும் அடைப்பட்டிராத ஒரு கிளி பின்னர் வந்து எடுத்துக் கொடுக்கிறது அந்த அடுக்குகளில் இருந்து அப்போது தேவைப்படும் ஒரு பாடலை….. இசையைச் சுழற்றி விட்டுப் பறந்து போகிறது இசைக் கலைஞர்களைக் கொண்டாடியபடி!
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]