நூல் அறிமுகம்: ஆ.கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ – பாவண்ணன்

நூல் அறிமுகம்: ஆ.கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ – பாவண்ணன்



ஆவணப்பெட்டகம்
பாவண்ணன்

 மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொழிற்சங்கத் தோழரான ஆர். பட்டபிராமன் தமிழில் எழுதி வெளிவந்த ’நேருவின் மரபு’ என்னும் புத்தகம் ஒரு போராளியாக சுதந்திரப்போராட்டத்தில் நேரு ஆற்றிய  பங்களிப்பையும் ஒரு பிரதமராக சுதந்திரமடைந்த தாய்நாட்டை உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயர்த்துவதற்காக ஆற்றிய பங்களிப்பையும் பற்றிய தெளிவை அளித்தது. நேருவின் சாதனைகளை இளையோர் அறிந்துகொள்ள அன்று அது ஒரு கைவிளக்காக இருந்தது. அதையடுத்து 1940-1964 கால இடைவெளியில் நேருவும் இந்திராகாந்தியும் எழுதிப் பகிர்ந்துகொண்ட கடிதங்களின் தொகைநூலாக ஆங்கிலத்தில் வெளிவந்த TWO ALONE TWO TOGETHER  என்னும் நூல் நேருவுக்கு இருந்த பற்பல துறைகள் சார்ந்த அக்கறைகளையும் ஈடுபாடுகளையும்  கனவுகளையும் வெளிப்படுத்தியது. கசப்பும் வெறுப்பும் மண்டிய இன்றைய சூழலில் கசப்புகளுக்கு அப்பால் கடந்து சென்று மானுடத்தை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே வாழ்க்கை முவழுதும் உழைத்து மறைந்த அன்றைய மகத்தான ஆளுமைகளை நினைத்துக்கொள்வதும் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதும் படிப்பதும் மிகவும் அவசியமாகின்றன.

மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பைக் கொண்டவர் காந்தியடிகள். அதை ஒருபோதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அவர் தன் ஆர்வங்களை வெளிப்படையாகவே வைத்துக்கொண்டார். ஆனால் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியா நடக்கவேண்டிய வழி என்று தெரிவித்தார். மதத்தின் மீது எள்ளளவும் ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவராகவே வாழ்ந்தவர் நேரு. அவரும் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியாவின் வழி என்பதில் உறுதியாக இருந்தார். எத்தனையோ அழுத்தங்களுக்கு அவர் இலக்கானபோதும், அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். நடுங்கியிருந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி அனைவரையும் சமமென உணரவைத்தார். மதச்சார்பின்மை என்னும் பாதையின் மதிப்பை இருவருமே உணர்ந்திருந்தனர்.

இன்று சூழல் பெரிதும் மாறிவருகிறது. மதம் சார்ந்த விவாதம் மீண்டும் மேலெழுந்து வருகிறது. ஒரு சமூகத்தில் மதத்தின் இடம் என்ன, மதச்சார்பின்மையின் இடம் என்ன என்று இன்றைய தலைமுறையிடம் உரையாடி வழிநடத்திச் செல்ல தகுதியான ஆளுமைகள் இல்லை. குழப்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் நேரு போன்ற மகத்தான மனிதர்களின் பங்களிப்பைப்பற்றிய அறிதல் முக்கியமானதொரு சமூகத்தேவையாக இருக்கிறது. ஆ.கோபண்ணா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த நூலின் தமிழ் வடிவமான மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு என்னும் புத்தகத்தை காலம் வழங்கியிருக்கிற கையேடு என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே காமராஜர் பற்றி விரிவான நூலை எழுதி அறிமுகப்படுத்தியிருக்கும் கோபண்ணா, அதற்கு இணையான விரிவோடும் ஆழத்தோடும் தகவல் செறிவோடும் நேரு பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.

செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு. பிரம்மஞான சபையைச் சேர்ந்த ப்ரூக்ஸ் என்பவர் அவருடைய வீட்டுக்கே வந்து கல்வியைக் கற்பித்தார். பதினாறு வயது வரை அவருடைய கல்வி வீட்டிலேயே தொடர்ந்தது. பிறகு முறையான கல்வியைப் பெறும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளிக்கல்வியையும் கல்லூரிக்கல்வியையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே அவர் கற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து 1912இல் இந்தியாவுக்குத் திரும்பிய நேரு தன் தந்தையின் வழியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஆனால் காலமோ தேசசேவை  என்னும் திசையில் அவரைச் செலுத்தியது.

ஆயுதமேந்தி எதிர்ப்பதைவிட புறக்கணிக்கும் எதிர்ப்புக்கு வலிமை அதிகம் என்பதை அக்காலத்தில் அயர்லாந்தில் செயல்பட்ட சின்ஃபெயின் இயக்கம் வழியாக தெரிந்துவைத்திருந்த நேருவுக்கு இளம்பருவத்திலேயே சமூகப்போராட்டத்தின் வடிவத்தைப்பற்றிய ஒரு தெளிவு இருந்தது. 1916இல் லக்னோ மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த காந்தியடிகளை நேரில் சந்தித்து உரையாடினார். 1917இல் சம்ப்ராணில் அவுரி விவசாயிகளுக்காக காந்தியடிகள் மேற்கொண்ட போராட்ட வழிமுறையும் அதில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியும் நேருவை ஈர்த்தன. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தை அறிவித்ததும் நேரு அதற்கு உடனடியாக ஆதரவைத் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நேருவுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. அதே சமயத்தில் அவருடைய தந்தையாருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. தந்தையும் மகனும் ஒரே சமயத்தில் சிறையில் தண்டனைக்காலத்தைக் கழித்தனர்.

பகத்சிங் பற்றி கோபண்ணா எழுதியிருக்கும் குறிப்புகள் பலரும் அறியாத சில உண்மைகளை முன்வைத்துள்ளன. சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய லாலா லஜபதிராய் என்னும் மூத்த தலைவரை 30.08.1928 அன்று ஜே.ஏ.ஸ்காட் என்பவர் தலைமையிலான போலீஸ் படை கடுமையாகத் தாக்கியது. இத்தாக்குதலுக்கு இலக்கான லஜபதிராய் 17.11.1928 அன்று மறைந்தார். அவருடைய மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக, அப்போது இளைஞர்களாக இருந்த பகத்சிங்கும் அவருடைய நண்பர் இராஜகுருவும் திட்டமிட்டனர். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த நாளும் குறித்துவிட்டனர். ஆனால் ஸ்காட் என நினைத்து தவறுதலாக சான்டர்ஸ் என்பவரைச் சுட்டு விட்டனர். தம் தவறு உறைத்ததுமே அந்த இடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, 08.04.1929 அன்று எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்து மைய சட்ட மேலரங்கில் குண்டுவீசினர். யாரையும் கொலை செய்வது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை. மாறாக பொதுமக்களுக்கு எதிராக, அவசரமாக பாதுகாப்பு மசோதாவையும் வர்த்தகத்தகராறுகள் மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் அந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மூவரையும் சிறைக்குச் சென்று சந்தித்தார் நேரு. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இர்வினைச் சந்தித்து முறையீடு செய்தார் காந்தியடிகள்.  அதேபோன்ற கோரிக்கைகள் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் இர்வினை வந்தடைந்தன. இர்வினால் தனிப்பட்ட விதத்தில் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. இன்னொரு பக்கத்தில் அரசு அதிகாரிகளின் அழுத்தமும் அவருக்கு இருந்தது. குறிப்பிட்ட தேதிக்கு ஆறு நாட்கள் முன்பாகவே மூவரும் தூக்கிலிடப்பட்டுவிட்டனர். அவர்கள் மறைவுக்குப் பின்னர் 29.08.1931 அன்று நடைபெற்ற மாநாட்டில் பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். ”கவலைப்படவேண்டாம் என்று பக்த்சிங் என்னிடம் கூறியிருக்கிறான். என்னைத் தூக்கிலிடட்டும். நீங்கள் உங்கள் படைத்தலைவரை நிச்சயம் ஆதரித்தாக வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஆதரித்தாக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார். ”நான் தீவிரவாதியல்ல. நீண்டகால திட்டங்களுக்கு உறுதியான கோட்பாடுகளை வைத்திருக்கும் நான் ஒரு புரட்சியாளன்” என்று பகத்சிங் எழுதிய கடைசிக்கடிதத்தில் காணும் குறிப்பு மிகமுக்கியமானது. பக்த்சிங் தொடர்பாக பலருடைய மனத்தில் தெளிவில்லாத வகையில் நிறைந்திருக்கும் குழப்பங்கள் தீரும் வகையில் கோபண்ணாவின் குறிப்புகள் தெளிவைக் கொடுக்கின்றன.

29.12.1929 அன்று லாகூர் நகரில் ரவி நதிக்கரையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காவலர்களின் தடியடிக்கு இலக்காகி மறைந்த தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவைப்போற்றும் விதமாக அத்திடலுக்கு லாலா லஜபதிராய் நகர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நேரு 01.01.1930 அன்று ரவி நதிக்கரையில் இந்தியாவின் தேசியக்கொடியை முதன்முதலாக ஏற்றினார். வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களுக்கு நடுவில் கொடி பறந்தது. கொடியை ஏற்றிவைத்த நேரு உணர்ச்சிவசப்பட்ட குரலில் “இந்தக் கொடி இந்திய சுதந்திரத்தின் அடையாளம், இந்தக் கொடி நம் ஒற்றுமையின் அடையாளம். ஒரே ஒரு இந்தியன் உயிரோடு இருக்கும் வரை, இந்தக் கொடியை ஒருவராலும் இறக்கமுடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கொடியைக் காக்கும் போராட்டத்தில் என் உயிரையும் கொடுத்து சுதந்திரத்தைக் காப்பேன். நீங்கள் அணிவகுத்து நின்று மரியாதை செய்யும் இந்தக் . கொடி எந்த இனத்தவருக்கும் சொந்தமானதல்ல. இந்தக் கொடியின் கீழ் நிற்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்துக்கள் அல்ல, முஸ்லிம்கள் அல்ல, சீக்கியர்கள் அல்ல, இந்தியர்கள் மட்டுமே. திரும்பவும் நினைவில் நிறுத்துங்கள். இப்போது ஏற்றிய இந்தக் கொடியை கடைசி இந்தியன் இருக்கும் வரைக்கும் கீழே இறக்கமுடியாது” என்று உரையாற்றினார். அடுத்த நாள் கூடிய செயற்குழு ஜனவரி 26 ஆம் தேதியை நாடெங்கும் பூரண சுதந்திர நாளாக கொண்டாடப்படும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நேரு கைது செய்யப்பட்டார். அவருக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

1916 முதல் 1946 வரையிலான முப்பதாண்டு காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக நேரு பலமுறை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ பத்தாண்டு காலம் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். தன் மகள் இந்திராவுக்குப் பிறந்த முதல் குழந்தையை நேரு பார்த்த தருணத்தை கோபண்ணா சித்தரித்திருக்கும் விதம் மனத்தைத் தொடுகிறது. 20.08.1944 அன்று இந்திராவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது நேரு அகமது நகர் கோட்டை சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த செய்தி கடிதம் வழியாக அவரை வந்தடைந்தது. மகளையும் குழந்தையையும் பார்க்கும் ஆவல் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் பாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சிறையில் இருந்தார் அவர். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் அகமது நகர் கோட்டை சிறையிலிருந்து அவர் பரேலி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தச் செய்தி மட்டுமே இந்திராவுக்குக் கிடைத்தது. நீண்ட பயணம் என்பதால் வழியில் நைனி சிறையில் இரவுப்பொழுதைக் கழிக்க தங்கிச் செல்லக்கூடும் என்று ஊகித்தார். ஒருவேளை ரயில்மாறி அப்படியே சென்றாலும் வியப்படைவதற்கில்லை என்றும் அவருக்குத் தோன்றியது. ஒருவேளை நைனி சிறைக்கு வந்தால் தந்தையைப் பார்க்கமுடியும் என மகள் நினைத்தாள். பொழுது சாய்ந்ததும் கணவரோடும் குழந்தையோடும் புறப்பட்டுச் சென்று காவலர்கள் பார்வையில் பட்டுவிடாமல் சிறைச்சாலைக்குச் செல்லும் சாலையில் தெருவிளக்குக் கம்பத்தின் கீழே மங்கிய வெளிச்சத்தில் நின்றிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே போலீஸ் வாகனத்தில் நேரு அச்சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார். அவர்களைக் கண்டதும் வாகனம் ஒரு கணம் தயங்கி நின்றது. கையிலிருந்த குழந்தை மீது வெளிச்சம் படும் வகையில் உயர்த்திக் காட்டினார் இந்திரா. முதலில் குழம்பினாலும் மறுகணமே அவர்களை அடையாளம் கண்டுகொண்ட நேரு அக்குழந்தையை வாகனத்திலிருந்தபடியே ஆவலுடன் உற்றுப் பார்த்து புன்னகைத்தார். அடுத்த கணமே அவ்வாகனம் சிறைச்சாலைக்குள் சென்றுவிட்டது. ஒரு குடும்பத்தில் சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்கள்கூட தேச விடுதலைக்காகப் போராடிய ஆளுமைகளின் வாழ்வில் அமையவில்லை என்பதைப் படிக்கும்போது, அவர்களுடைய தியாக உள்ளத்தை வணங்கத் தோன்றுகிறது.

தேசப்பிரிவினையின்போது உடைமைகளை இழந்து அடைக்கலம் தேடி வந்த மக்களைக் கண்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினார் நேரு. தனக்குச் சொந்தமான அலகாபாத் இல்லமான ஆனந்த பவனத்தை ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்றினார். அனைவருக்கும் உறுதியான இருப்பிடமும் வருமானமீட்டும் தொழிலும் கிட்டும் வரை அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கியிருந்தனர். பிறகு, அது ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான இல்லமாக தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து அது ஜவஹர் பாலபவனாக மாறியது.

மதச்சார்பின்மை பற்றி இந்திய மக்களுக்கு நேரு மீண்டும் மீண்டும் நினைவூட்டியபடியே இருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறியலாம். மதச்சார்பின்மை ஓர் உயர்ந்த நோக்காகும். அதில் சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. இதில் செய்துகொள்ளும் சமரசம் நம் கொள்கைகளிலிருந்து நம்மை பின்வாங்கவைத்துவிடும் என்று எல்லா மேடைகளிலும் முழங்கினார் நேரு. தன் வாழ்நாள் முழுதும் நாட்டுமக்களின் சிந்தனைகளை மதவன்முறைக்கு அப்பாற்பட்டதாகவே நேரு வைத்திருந்தார். மதப்பிரச்சினை தோன்றிய இடங்களிலெல்லாம் அதிலிருந்து மக்களை மீட்க அவர் சென்று நின்றார். அவர் எங்கு சென்றாலும் வகுப்புவாதத்துக்கு எதிராகவே பேசினார்.

நேரு நூற்றாண்டு விழா மலரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்ருதீன் தயாப்ஜி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை கோபண்ணா அளித்திருக்கிறார். முஸ்லிம்களால் துன்புறுத்தபட்டு பஞ்சாபிலிருந்து கூட்டமாக வந்த அகதிகள் தில்லி நகரில் தங்கியிருந்த நேரம். அவர்களுக்கு தில்லியில் வசிக்கும் முஸ்லிம்களை அழித்து வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு வேகம் எழுந்தது. உளவுத்துறை வழியாக அச்செய்தி காதில் விழுந்ததும் தயாப்ஜியை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு விரைந்து சென்றார். பழிவாங்கும் எண்ணத்தோடு ஆயுதங்களுடன் அகதிகளில் ஒரு பிரிவினர் அங்கே இருந்தனர். உடனே அவர்களுக்கு அருகே நின்ற வாகனத்தின் மீது ஏறி நின்று அவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். முதலில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் உடமையிழப்புகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்தார். பிறகு, பழிவாங்க நினைக்கும் எண்ணத்தை கடுமையாகக் கண்டித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என வாக்குறுதி அளித்த பிறகே நேரு அங்கிருந்து புறப்பட்டார். நிகழவிருந்த ஒரு பேரழிவை அன்று இரவு நிகழாமல் தடுத்ததை நடுக்கமும் பெருமிதமும் மண்டிய நெஞ்சுடன் பார்த்துக்கொண்டிருந்ததாக அக்கட்டுரையில் தயாப்ஜி எழுதியிருக்கிறார்.

நேருவுடன் உரையாடல் என்னும் புத்தகத்தின் ஆசிரியரான நார்மன் கசின்ஸ் என்பவர் தன் நினைவிலிருந்து விவரித்த மற்றொரு நிகழ்ச்சியையும் கோபண்ணா இணைத்துக்கொண்டிருக்கிறார். ஆயுதமேந்திய கூட்டத்தின் முன் நேரு ஆற்றிய உரையின் காரணமாக உருவான மனமாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட அவருடைய அனுபவம் அந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மதம் மிக முக்கியமான இடத்தைவகிக்கும் இந்தியாவில் மதச்சார்பின்மையை ஒரு கொள்கையாகக் கொண்டு செயல்படுவதற்கு நேரு செய்த முயற்சிகள் மிகமுக்கியமானவை. பசுவதையை சட்டத்தின் மூலம் தடுப்பது பற்றி ஒரு பேச்சு தொடங்கியதுமே, அதைக் கடுமையாக எதிர்த்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது என்பது ஒரு மதம் சார்ந்த சர்வாதிகார நாடாக இந்தியாவை மெல்ல மெல்ல மாற்றிவிடும் என்பது அவர் அச்சமாக இருந்தது. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முக்கியத்துவம் உருவானது. பசுவதைத்தடைச் சட்டத்தை உருவாக்குவது பற்றி பல மாநிலங்கள் பரிசீலித்தபோது, அதற்கு கடுமையான முறையில் எதிர்வினை புரிந்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை உருவாக்க நினைப்பதை விவேகமும் அனும்பவமும் அற்ற செயலாக தான் கருதுவதாக ஒரு கடிதமெழுதி 13.02.1955 அன்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பிவைத்தார். ஒரு கட்டத்தில் கோவிந்த் தாஸ் என்பவர் அப்படி ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முயற்சி செய்தபோது, அதற்கு கடுமையான வகையில் எதிர்வினையாற்றினார். தேச ஒற்றுமை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதே தவிர, ஒரே கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமை என்பதை அடிப்படையாகக் கொள்ளவில்ல என அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நேரு.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் நாட்டில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் நலனுக்காக முன்னெடுத்த சில போராட்டங்களால் வன்முறை வெடித்தது. உயிரிழப்பும் பொருட்சேதமும் நேர்ந்தன. அப்போது ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் “எது மிகப்பெரிய ஆபத்து? கம்யூனிசமா, வகுப்புவாதமா?” என்று ஒருவர் கேட்டார். மறுகணமே அவரிடம் நேரு “இது முட்டாள்தனமான கேள்வி. ஒரு மனிதனை நீரில் மூழ்கி சாகிறாயா, அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து சாகிறாயா என்று கேட்பதுபோல இருக்கிறது” என்று பதிலளித்தார். ஆனால் வேறுவேறு சொற்கள் வழியாக மீண்டும் மீண்டும் இதே கேள்வி கேட்கப்பட்டபோது “வகுப்புவாதம்தான் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து. கம்யூனிஸ்டுகள் வன்முறையைக் கொள்கையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில பொருளாதாரக் கொள்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லையே தவிர, அத்தகைய கொள்கைகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் வகுப்புவாதத்துக்கு அப்படிப்பட்ட எந்த அடிப்படையும் இல்ல்லை. அது அழிவைமட்டுமே கொண்டுவரும்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஜனநாயகம் என்பதை தேர்தல் காலத்தில் வாக்களிக்கிற ஒரு சடங்காக மட்டும் நேரு பார்க்கவில்லை. அவர் அதை ஒரு சிந்தனைமுறையாகவும் நடத்தை முறையாகவும் பார்த்தார். ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை. நம் கருத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் மட்டுமல்ல. ஏற்க மறுப்பவர்களிடமும் சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும். ஜனநாயகத்துக்கு பாராட்டும் பற்றும் தெரிவிக்கும் அதே வேளையில் பெரும்பாலான மக்களின் கருத்துகள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்னும் நேருவின் சொற்கள் கூர்மையானவை.

அரசியல் நிர்ணய சபையில் வாக்காளர்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒரு வரையறையை முன்வைத்து உரையாற்றினர். சிலர் குறைந்தபட்ச கல்வித்தகுதியை முன்வைத்தனர். சிலர் குறைந்தபட்ச செல்வவசதியை முன்வைத்தனர். ஆனால் நேரு அந்த வரையறைகளை கடுமையாக எதிர்த்தார். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கவேண்டும் என்று வாதாடினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நிலமற்றோர், சிறு குறு விவசாயிகள், பண்ணைத்தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், பெண்கள் என பல பிரிவினரும் ஒரே சமயத்தில் தம் வாக்குகள் மூலம் அதிகாரத்தில் பங்கெடுக்கமுடியும் என்று எடுத்துரைத்தார். கடுமையான வாதவிவாதங்களுக்குப் பிறகே நேருவின் கருத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.

தேசப்பிரிவினையைத் தொடர்ந்து உருவான பாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியான உருதுமொழியை உடனடியாக அலுவலக மொழியாக அறிவித்துவிட்டார்கள். அதேபோல இந்தியாவிலும் பெரும்பான்மையினரின் மொழியான இந்தி மொழியை அலுவல்மொழியாக அறிவிக்கவேண்டும் என வடமாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால் இந்தியை அறியாத தென்மாநில உறுப்பினர்கள் ஆங்கிலமே அலுவல்மொழியாக தொடரவேண்டும் என்று வலியுறுத்தினர். மொழி தொடர்பான பிரச்சினையில் நெகிழ்வும் இணக்கமும் கூடிய ஒரு முடிவையே நாம் எடுக்கவேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் பல மணி நேரங்கள் நடைபெற்றன. இறுதியில் இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை அலுவல் இணைமொழியாக ஆங்கிலமே தொடரும் என்று தெரிவித்தார் நேரு. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மொழி என்பது இயற்கையாக வளரும் மென்மையான மலரைப்போன்றது. ஒரு மலரை இழுத்தோ, திருப்பிபோ, அசைத்தோ உங்களால் வளர்க்கமுடியாது என்று உறுதியான குரலில் பதில் சொன்னார் நேரு. ஐநூறு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பேசிய ஈ.வெ.கி.சம்பத் குரலை மதித்து, அவரை அமைதிப்படுத்தும் விதமாக கடிதமெழுதி, தமிழகத்தில் நடக்கவிருந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தைத் தவிர்த்தார்.

இந்து ஆண்களுக்கு ஒருதாரத் திருமணத்தை வலியுறுத்தி, விவாகரத்து உரிமையும் மூதாதையர் சொத்தை மரபுரிமையாகப் பெறும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நேருவுக்கும் அச்சட்டத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் கடுமையான வகையில் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்தத் தருணத்தில் அந்த மசோதா கைவிடப்பட்டது. அதனால் மனவருத்தம் கொண்ட அம்பேத்கர் 1951இல் அவசரமாக தன் பதவியிலிருந்து விலகினார். எனினும் அச்சட்டத்தின் முக்கியத்துவம் கருதி அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த நேரு, ஒரே தொகுதியாக இருந்த அச்சட்டக் கூறுகளை ஐந்து தனித்தனி பிரிவுகளாக பிரித்து வெவ்வேறு சட்டங்களாக நிறைவேற்றினார். 1954இல் உருவான சிறப்புத்திருமணச்சட்டமும் 1955இல் உருவான இந்து திருமணச்சட்டமும் இந்து வாரிசுரிமைச்சட்டமும் 1956இல் உருவான இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டமும் இந்து தத்தெடுப்பு பராமரிப்புச் சட்டமும் அப்படி உருவானவையே. 1961இல் உருவான வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் பெண்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த ஒரு பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நேருவின் சொற்கள் அவருடைய நெஞ்சின் ஆழத்திலிருந்து தன்னிச்சையாக பிறந்து வருவதை அவருடைய பல்வேறு உரைகள் வழியாக உணர்ந்துகொள்ள முடியும். சுதந்திரத்திருநாள் அன்று வானொலியில் மக்களுக்காக அவர் ஆற்றிய உரை, காந்தியடிகளின் மறைவையொட்டி அவர் ஆற்றிய உரை, நங்கல் கால்வாயைத் திறந்து வைத்து ஆற்றிய உரை என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த உரைகளின் சாரமான பகுதிகளை கோபண்ணா பொருத்தமான இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார். 23.05.196 அன்று மக்களவையில் நேரு ஆற்றிய உரையில் பொதுத்துறைகள், தனியார் துறைகள் பற்றி தன் கருத்துகளைத் எடுத்துரைத்திருக்கும் பகுதி மிகமுக்கியமானது. “பொதுத்துறை வெளிப்படையாக வளரவேண்டும். நம் பொருளாதாரத்தில் பொதுத்துறை முக்கியமான பங்காற்றவேண்டும். தொழிற்துறைக் கொள்கைப்புரட்சியில் தனியார் துறைக்கும் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு களம் அமைத்துத் தரப்படும். தனியார் துறையைக் கையாளும் விதங்களைப் பற்றி அந்தந்த தருணங்களுக்கேற்ப முடிவு செய்யவேண்டும்” என்னும் சொற்கள் அவருடைய உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. கலப்புப்பொருளாதாரமே நேருவின் நோக்கமாக இருந்தது. சிற்சில பகுதிகளில் தனியார் துறையினர் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் அரசின் வழிகழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு அது செயல்படவேண்டும். முடிவில் பொதுத்துறையே சந்தையில் ஆதிக்கம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது நேருவின் பார்வையாக இருந்தது.

நேருவின் மற்றொரு முக்கியமான சாதனை அவருடைய ஐந்தாண்டுத்திட்டங்கள். முதலில் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள். நாட்டின் முக்கியமான ஆறுகளின் குறுக்கே அணைகள் எழுப்பப்படுகின்றன. நீர்த்தேவையையும் மின்சாரத்தேவையையும் இந்த அணைகள் தீர்த்துவைக்கின்றன. மின்சாரம் நீர்ப்பாசனத்துக்குரிய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க உதவுகிறது. அதனால் விளைச்சல் பெருகுகிறது. கட்டுமான வேலைகள் பெருகப்பெருக இரும்பின் தேவை அதிகரிக்கிறது. அதனால் முக்கியமான பகுதிகளில் இரும்பாலைகள் உருவாக்கப்படுகின்றன. விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதோடு, நிலத்தை வளமுடன் வைத்திருக்கத் தேவையான உரங்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் உருவாகின்றன. பெட்ரோல் கிணறுகள் தோண்டப்படுகின்றன. முதல் கிணற்றிலிருந்து பெட்ரோல் பீறிட்டெழும் காட்சியைக் கண்டு அகமகிழ்கின்றார் நேரு. அவர் அணிந்திருந்த ஆடையில் கன்னங்கரிய பெட்ரோல் துளிகள் தெறித்து கறை படிகிறது. அந்தக் கறையை சந்தோஷமாக தொட்டுப் பார்க்கிறார் நேரு. மக்களவையில் அந்த உடையுடன் பேசப்போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்திய எண்ணெய் எரிவாயுக்கழகம் உருவாகி மெல்ல மெல்ல விரிவடைகிறது. ஒவ்வொன்றும் அவருடைய கனவு. தேசத்தை தலைநிமிர்ந்து நிற்கவைக்கும் கனவு.

இந்தியாவை ஒரு தனித்துவம் மிக்க நாடாக உலக அரங்கில் வளர்த்தெடுத்து நிற்கவைப்பது அவருடைய மாபெரும் கனவாக இருந்தது. அவருடைய வாழ்க்கை வரலாறும் இந்தியாவின் வளர்ச்சி வரலாறும் வேறுவேறல்ல. ஒன்றே. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாகும். பிரிக்க முடியாத அந்தக் காட்சிகளை வரலாற்றுச் சாட்சிகளாக நிற்கும் நிகழ்ச்சிகளோடும் பல்வேறு ஆளுமைகள் எழுதிய நூல் குறிப்புகளோடும் இணைத்து கோபண்ணா உருவாக்கியிருக்கும் இந்த நூலை காலத்தின் தேவை கருதி உருவான முக்கியமானதொரு ஆவணப்பெட்டகம் என்று சொல்லலாம்.

(மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு. ஆ.கோபண்ணா. நவ இந்தியா பதிப்பகம். காமராஜ் பவன், 573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600006. விலை. ரூ.2500)