தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 12 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 9
பால்சுரப்பைக் கண்டறிவதற்கான வழிமுறைகள்
குழந்தையை மடியிலே கிடத்திவிட்டோம், அவர்களும் மார்புக் காம்பினை கச்சிதமாகக் கவ்வியபடி பாலருந்தத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் நாம் சரியாகத்தான் பாலூட்டிக் கொண்டிருக்கிறோமா என்கிற உள்ளுணர்வு மட்டும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டேயிருக்கும். இத்தகைய குழப்பத்தை தாய்ப்பாலூட்டுகிற சமயத்தில் வெளிப்படுகிற சில நுட்பமான சமிக்கைகள் வழியாக நாம் கண்டுபிடித்துவிட முடியும்.
முதலில் மார்பில் தாய்ப்பால் இறங்கியிருக்கிறது என்பதை சில அறிகுறிகளின் வழியாக நம்மால் கண்டு கொள்ள முடியும். அதாவது பிள்ளை பாலருந்துகையில் நம் மார்பில் சுருக் சுருக்கென்று குத்துவதைப் போலொரு உணர்வு தோன்றும். அத்தகைய உணர்வானது பால்பையிலிருந்து பிழிந்தெடுத்த பால் வெளியேறுகிற இயக்கத்தின் வெளிப்பாடுதான். அதேபோல விரல்களை வைத்து காம்பைச் சுற்றிய கருமை நிறத்திலான ஏரியோலா பகுதியில் தொட்டுத் தடவிப் பார்த்தாலே பால் நிறைந்த முடிச்சுகள் காம்பில் பின்னால் தடித்திருப்பதைக் காண முடியும்.
நம் பிள்ளைகள் அழுதுவதைக் கேட்டாலே, அவர்களைப் பற்றி நினைத்தாலே காம்பிலிருந்து பால் வடிவதை வைத்தே நம்மால் நேரடிச் சாட்சியமாக இதைச் சொல்லிவிட முடியுமே! அதேசமயம் மார்பிலிருந்து பாலினை வெளியேற்றுவதற்கு உதவுகின்ற ஆக்ஸிடோசின் ஹார்மோன், கர்ப்பப்பையையும் சுருக்குவதால் அடிவயிற்றில் வலியையும் பிறப்புறுப்பில் அவ்வப்போது இதனால் நீர் சுரப்பதையும் தாய்ப்பால் இறங்கியிருப்பதன் அறிகுறியாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஒருவேளை நாம் சரியாகத்தான் தாய்ப்பால் புகட்டுகிறோம் என்றால் அத்தகைய தாய்ப்பாலூட்டும் நிகழ்வென்பது வலியில்லாத, ஆசுவாசமளிக்கக்கூடிய ஒன்றாகவே தாய்மார்களுக்கு இருக்கும். அப்போது மார்பையே கரைத்து உறிஞ்சிக் குடித்துவிடுகிற இழுபறி போலான உணர்வை பாலருந்துகிற மார்பிலே நம்மால் உணர முடியும். அதே சமயத்தில் தனக்குத் தேவையான அளவிற்குத் தாய்ப்பால் கிடைக்கின்ற போது அதனது திருப்தியில் ஆரவாரமின்றி சாதுவாகப் படுத்து பாலருந்திக் கொண்டிருப்பார்கள்.
குழந்தைகளின் வாயிற்கு தாய்ப்பால் எட்டாத வரையில் அவசர அவசரமாக குடித்துக் கொண்டிருப்பவர்கள், பின் பால் தொண்டைக்குள் நிறைந்தவுடன் நிதானமாக பாலருந்த துவங்குவார்கள். இப்படியாக அவர்கள் நிதானமாகக் குடிக்கிற தோரணையின் சாயலை வைத்தே தாய்ப்பால் சரியாகத்தான் கிடைக்கிறது என்கிற முடிவிற்கு நாம் வந்துவிட முடியும். ஒரு நீண்ட சவைத்துக் குடித்தலோடு இடையிடையே அவர்கள் மூச்சுவிட்டு சவைத்தல்- விழுங்குதல்- மூச்சுவிடுதல் என்கிற தாய்ப்பால் குடித்தலின் சூத்திரத்தை சிரமமின்றி அவர்கள் மேற்கொள்வார்கள்.
மேலும் அவர்களின் வாயில் தாய்ப்பால் நிறைந்திருக்கும் போது நம்மால் அவர்களது கண்ணங்கள் உப்பி வருவதையும் கவனிக்க முடியும். தாய்ப்பால் சரிவர குடிக்க முடியாத குழந்தைகள் காம்பை மட்டுமே வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க முயலுகிற போதுதான் இளநீரை உறிஞ்சுகுழாய் வைத்து உறிவதைப் போலொரு குழியினைக் கண்ணங்களில் காண முடியும். ஆனால் இதையெல்லாம் தாய்ப்பால் நன்றாகக் கிடைக்கிற குழந்தைகளிடம் நம்மால் பார்க்க முடியாது. இன்னும் மிக முக்கியமாக தாய்ப்பால் குடிக்கிற சப்தத்தையே நம்மால் கேட்க முடியுமே! அப்படியாக தாய்ப்பால் குடித்து விழுங்குகிற அசைவுகளையும்கூட நாம் அவர்களின் தொண்டைக் குழியிலே காணவும் முடியும்.
அவர்கள் திருப்தியாக தாய்ப்பால் அருந்தியிருந்தால் அதன் பின்பாக உதட்டோரத்தில் ஈரப்பதத்தையும், பால் குடித்த தடத்தையுமே நன்றாகப் பார்க்க முடியும். அவர்களும் வயிறு முட்ட நிறைவாகக் குடித்த பின்பாக பாலூட்டலுக்கு இடைப்பட்ட நேரத்தில் நன்றாகத் தூங்கியெழுவார்கள். பொதுவாக சரியாகப் பாலருந்தி துயில் கொள்கிற சமத்துப் பிள்ளைகள் வாந்தியெல்லாம் எடுப்பதில்லை. மேலும் அவர்கள் நன்றாகத் தாய்ப்பாலைப் பருகி சிறுநீரினை ஆறு முறைக்கு மேலாக வெளியேற்றியபடியே இருப்பார்கள். அதேபோல மலத்தினையும் மஞ்சள் நிறத்திலே வெளியேற்றத் துவங்கியிருப்பார்கள். அவர்கள் தாய்ப்பாலைத் தொடர்ந்து குடிக்கையில் எடையும் சீராக அதிகரிப்பதை வைத்தே இதனை உறுதிபடச் சொல்லிவிட முடியும்.
பிள்ளையின் தோல்களில் பார்க்க முடிகிற வாட்டமேயில்லாத மினுமினுப்பும்கூட தாய்ப்பால் கிடைத்தற்குரிய நல்ல அறிகுறிதான். பிள்ளையின் மிருதுவான உச்சிக்குழியுமே மேடாகவோ, அதிகமாக குழிவாகவோ இல்லாமல் கூடிய சீக்கிரத்தில் மூடிக் கொள்ளும். இதனை வைத்தே குழந்தைக்குத் தாய்ப்பால் நன்றாகத் தான் கிடைத்திருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
தாய்மார்களாகிய நாம் பாலூட்டிய பின்பாக நமது மார்பானது முந்தைய கணத்தை இழந்து இப்போது மென்மைத் தன்மையை அடைந்திருக்கும். மார்புக் காம்பும் நீண்டபடி காயமேதும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருக்கும். குழந்தைகள் தவறாக காம்பைக் கவ்வியிருந்தால் தான் புண்ணாகியிருக்குமே! இதையெல்லாம் வைத்தே நம் மார்பில் நன்றாகத் தாய்ப்பால் சுரந்திருக்கிறது, அதன் வழியே நிறைவாகப் பிள்ளைக்குத் தாய்ப்பால் கிடைத்திருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
– டாக்டர் இடங்கர் பாவலன்