இறுதி பாரம் - சிறுகதை - மணவை கார்னிகன் | (Final burden) Iruthi Bhaaram Tamil Short Story (Sirukadhai) by Manavai Karnikan | https://bookday.in/

இறுதி பாரம் – சிறுகதை

இறுதி பாரம் - சிறுகதை பழனியம்மாளுக்கு இரவு தூக்கத்தில் பனிரெண்டு மணிமுதல் மூன்று மணிக்குள் எப்போது யேனும் விழிப்பு ஏற்பட்டு விடும்.மகன் முருகேசன் வீட்டில் ஒட்டுத் திண்ணை கூட கிடைக்கவில்லை பழனியம்மாளுக்கு. வீட்டின் முகப்பு பகுதியில் தாவாரம் போல் இறக்கி விடப்பட்ட…
‘நோன்பு’ சிறுகதை – மணவை கார்னிகன்

‘நோன்பு’ சிறுகதை – மணவை கார்னிகன்




அன்று இரவு 12 மணி ஆகியும் இந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு பாம்பு மிதமிஞ்சிய உணவை உட்கொண்டு நெளிவதைப்போல. தெளிந்தும் புரண்டும் படுத்திருந்தவனுக்கு, தூக்கம் மிகப்பெரிய வரமாக இருந்தது.அவன் பக்கத்தில் படுத்திருந்த அந்தோணிக்கு, அந்த வரம் கிடைத்து வெகுநேரமாகிவிட்டது. ஜெபமாலையை வலது கையில் வைத்தவாறே வரத்தின் ஸ்பரிசத்தால் குறட்டையெல்லாம் வருகிறது. பகல் முழுதும் வண்டி இழுத்து அழுத்து போனவனுக்கு படுத்ததும் தூக்கம் உடனே வந்துவிடும் ஆனால் அன்று இரவு அப்படி வரவில்லை.

அன்சார் பாயின் அறிவுறுத்தலின்படி உறக்கம் வரவில்லை என்றால் உனக்கு பிடித்த கடவுளின் பெயரோ, அல்லது உனக்கு பிடித்தவர்களின் பெயரோ, 108 முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இரு. உறக்கம் நன்றாக வரும் என்பார். எண்ணுவதற்கும் ஒரு வழியும் சொல்லியிருந்தார். ஒரு விரலுக்கு இரண்டு ரேகை கோடு அது மூன்று பாகமாக இருக்கும். மேலிருந்து கீழ் வந்து. பிறகு கீழிருந்து மேல் வந்தால் ஐந்து, ஒரு விரலுக்கு ஐந்து என்றால், ஐந்து விரலுக்கு இருபத்தி ஐந்து. நான்கு கைவிரல் நூறு. மீதம் எட்டு சுலபம்தானே! என்பார் அன்சார் பாய்.

அன்று இரவு அப்படியும் சொல்லி பார்த்துவிட்டான். வரவே வராது என்ற முடிவுக்கு போய்விட்டான். வீட்டிற்கு வெளியே சென்று வைத்திருந்த பீடிகட்டில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்து புகைத்தபடி இருந்தான். அவன் சிந்தையில் ஏதோ ஒடிக்கொண்டே இருந்தது.

“டேய் எதுக்கு இந்த வேலை உன்னால் முடியது பேசாம எப்பவும் போல இருந்துரு” அவன் மனம் சொன்னது.

பீடியின் இறுதிக் கங்கு விரலை முத்தமிட்டது. உதறித் தள்ளிய பீடியைப் பார்த்தவாறு நின்றான். விடிந்தால் வண்டி இழுக்கணும், ஊரு ஊராகச் சுற்றித் திரியணும், அதற்கெல்லாம் உடம்புல தெம்பு வேண்டும்.

“நம்மால முடியாதுப்பா” என்று நினைத்து வீட்டிற்குள் சென்றான்.அவனோடு சேர்த்து ஐந்துபேர் அந்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.
இப்போது அந்தோணி, இத்திரனின் படுக்கை இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்.

“அண்ணே, தள்ளிப்படுங்க என்றான்”

வேண்டாவெறுப்பாக ஒரு உருளில் சரியானது அவனது இடம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் படுத்தான் இந்திரன்.மணி சரியாக 2.30 யை தொட்டது. முதலாளியும் அவனோடு வேலை செய்யும் இரண்டு வேலையாளும் இஸ்லாமியர்கள், இவர்களுக்காக உணவு தயார் செய்ய வெள்ளச்சாமி விழித்துவிட்டார். முதல்நாள் நோன்பு என்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருந்தார். முதலாளி அன்சார்பாயை எழுப்பி விட்டு ஒழையை அடுப்பில் போட்டார் வெள்ளச்சாமி.

“இந்திரே(ன்) கண்ண தேய்த்துத் தேய்த்துச் சிவந்து கெடக்கு பாயண்ணே. நைட்டெல்லாம் தூங்காம உருண்டுக்கிட்டே கிடந்தான்” என்று குற்றம் சாட்டிய வெள்ளச்சாமியைப் பார்த்து, “ஏம்பா நாம்மளா அவன நோம்பு இருக்கச் சொன்னோம்? அவனா நானும் நோம்பு இருக்குறேன்னு சொன்னான். அவன இங்க வரச்சொல்லு வெள்ள” என்றார் முதலாளி.

இப்போது உறக்கத்தின் வரம் கிடைத்து நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் இந்திரன்.

“டேய் பாயண்ணே கூப்றாரு எந்திரிடா டேய் டேய்..இவ்வளவு நேர முழிச்சிருந்துட்டு இப்ப தூக்கத்தப் பாரு”.

“வெள்ள விடுப்பா தூங்கட்டும்” என்றார் முதலாளி.

– மணவை கார்னிகன்

Mouna Porattam Shortstory By Manavai Karnikan மௌன போராட்டம் குறுங்கதை - மணவை கார்னிகன்

மௌன போராட்டம் குறுங்கதை – மணவை கார்னிகன்

நாரதர் கலகம் நன்மையில் முடியும். இங்கே ஓர் நாரதர் கலகம் செய்கிறார். நன்மையில் முடியுமா? சகுந்தலா ஊருக்கு வரும்போதெல்லாம் கை சுமையுடன் தான் வருவாள். இந்த முறை மனச்சுமையுடன் வருகிறாள். எல்லாச் சுமையும் வசந்தாவின் மேல் இறக்கி வைக்க அரக்கப்பரக்க வந்து கொண்டிருக்கிறாள்.

வசந்தா இதற்கு முன்பு சகுந்தலா வருவதை அன்போடு அழைத்ததுண்டு. “வாங்கத்தே வாங்க நல்லா இருக்கீங்களா”. என்று கேட்பாள். இந்த முறை சிரம் தாழ்ந்து நிற்க்கிறாள்.

“இங்க பாரு வசந்தா. ஒங்க அம்மா அப்பா சுரோட இருக்கனும்னா,ஒழுங்கா சொன்னத கேட்டுக் கிடு இரு. இல்லைனா செத்துபோயிரு. அண்ணே எல்லா உங்கள சொல்லணும். பொட்ட புள்ளக்கிச் செல்லம் குடுத்து வளத்தா இப்படித்தான் வந்து நிக்கும்”.

“நாங்க என்னத்துக்கு சாவுரோம். சனியெ இவள கொண்ணுப்புட்டு ஏழாநாள் கருமாதிய வைச்சுட்டு போய்க்கிட்டே இருப்போம்” வசந்தாவின் அம்மா பற்கள் நெரிபடப் பேசுகிறாள்.

“அண்ணி நீங்க சும்மா இருங்க. ஆ ஊன்னா கைய ஓங்கிகிட்டு…நீங்க வெளிய போங்க நாங்க பேசிக்கிறோம்”.

வசந்தாவின் யாக்கை மட்டும் அல்ல. அவள் ஒட்டுமொத்த ஆசைகளும் கூனி குறுகி அமர்ந்தன ஒட்டுத்திண்ணையில்.

“எதாவது பதில் பேசுறளா, பெத்த வயிறு எரிச்சா. நல்லாயிருக்க முடியாதுடி. சொல்றத கேட்டு சந்திரன கட்டிக்க. தோட்டந் தொறவு காசு பணமுனு நிறையா கிடக்குது. ராணிமாரி இருக்கிறத விட்டுட்டு அவன கட்டிக்கிட்டு என்னடி பண்ண போற. இங்க பார்டி அவேன் நல்லவன் இல்லைனு சொல்றாங்க முந்தாநாளு கூட யாரோ ஒரு பொம்பள கூட முருகன் தேடர்ல பாத்தேனு சொல்றாங்க. நம்ம இனத்தான் தான். ஆனா அவன் சேர்க்கை சரியில்லை.”

எந்தப் பதிலும் வரவில்லை வசந்தாவிடம்

“அண்ணே இது சரிபட்டு வராது…நான் வாரேன். அண்ணி நீங்க எதும் பேசாதிங்க..”

“அவராச்சு அவரு பிள்ளையாச்சு”.

வீட்டிலிருந்து வெளியே வந்த சகுந்தலா, செருப்பை மாட்டிக் கொண்டே சமிக் ஞை செய்தாள் அண்ணியிடம்.

பாத்திரங்கள் உருண்டன.

அவளும் அப்பாவும் நள்ளிரவு நிசப்தம் கொள்வதுபோல் மௌனமாக.

அவர்களுடைய மௌனம் என்னவென்று எவருக்கும் தெரியாது.

ஒருவேளை அந்த நள்ளிரவு நகர்ந்த பின் விடியற்காலை ஏதேனும் தெரியக் கூடுமோ?

Anangu Novel By Arunpandiyan Manokaran Novelreview By Manavai Karnikan நூல் விமர்சனம்: அருண்பாண்டியன் மனோகரனின்அணங்கு நாவல் - மணவை கார்னிகன்

நூல் விமர்சனம்: அருண்பாண்டியன் மனோகரனின்அணங்கு நாவல் – மணவை கார்னிகன்




நட்பை மய்யமாக வைத்து எழுதபட்ட நாவல் முதல் நாவல் என்று எழுத்தாளர் சொல்லுகிறார் நிச்சயமாக நம்பமுடியவில்லை. எழுத்தின் நடையும் கதையின் கருவும் எந்த இடத்திலும் பிசிறு தெரியாமல் செதுக்கிய சிலையாக மிளிர்கிறது. “அணங்கு ”

முதல் பக்கம் புரட்டுகையிலே நட்பின் ஆழம் தெரிந்துவிடுகிறது. கவிதாவுக்கும் வள்ளிக்கும் இடையில் வெறும் நட்பாக மட்டும்இல்லை. அதற்கும் மேலாக பேரன்பு, நேசம், பிரியம், அனைத்தும் சேர்த்து நிற்கும் சினேகிதம்.

நாமெல்லாம் மழை நின்றதும் மரத்தின் கிளையின் இலையில் மீதமிருக்கும் மழைத்துளியை கிளையை பிடித்து அதிர வைத்து உடல் சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறோம், அப்படி வள்ளிக்காக உடல் சிலிர்ப்பை ஏற்படுத்த செய்த கவியின் செயல் அருமை.

ஆறாம் வகுப்பு படிக்கிற குழந்தைகளுக்கு என்ன தெரியும் விளையாட்டை தவிர. இப்படி பேரன்பை வெளிக்காட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குமா ஜாதிதேவ?

“அப்பா. ஏ கவிதா கூட சேந்தா மட்டும் ஆயா அடிக்குது?”

அதற்கு வள்ளியின் அப்பா சொல்லும் விளக்கம் முகம் சுழிக்க செய்கிறது.அவர் சொன்ன விளக்கங்கள் எல்லாம் என்வென்று தெரியாமலே

“ஏ கவி உங்கூட இனிமே சேந்து விளயாட கூடாதுனு அப்பா சொல்லிட்டாரு.”

இதுதான் அந்த பேரன்புக்கு முதல் விரிசல். அதற்கு பிறகு அடிக்கடி விரிசலை சந்தித்த கவியும் வள்ளியும் நீண்ட பிரிவில் தவித்தார்கள்.அது வேறு யாருக்கும் தெரியாது. அந்த பாவடிக்கும் ஏரிக்கும் நவ்வா மரத்திற்கும் மட்டுமே தெரிந்த விசயம். இப்போது போனால் கூட சொல்லகூடும்.

இப்படியாக வருடம் நகர்கிறது. ஆறு ஆண்டு கழித்து மீண்டும் உயிர்ப்புடன் துளிர்கிறது. ‘அந்த பேரன்பு’ அதை அப்படியே பிடிங்கி கசக்கி எரியுது செம்புராசு தென்ன தோப்பு.

பிறகு கல்யாணம் பண்ணி பிரிசன் வீட்டுக்கு போன வள்ளி.கவிதாவ சுமந்துக்கிட்டு வாரா கவிதா வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கோவில் திருவிழா பொங்கலுக்கு நடக்கும். அந்த திருவிழாவுல கவிதா பாத்திடனுமென்று வள்ளியும் வள்ளி அம்மாவும் ஊருசனத்துக்கு தெரியாம நட்டநடுராத்திரி கிளம்பிட்டாங்க.

இடையிடையே அடி உதை ரத்தம் என்று வருகிற இடமெல்லாம் வாசகனை அழ செய்கிறது.

தோழருக்கு இனிய வாழ்த்துகள் கூடியவிரைவில் தமிழுக்கு ஒரு நல்ல படத்துடன் இயக்குனர் அருண்பாண்டியன் மனோகரனை சந்திப்போம்.

வாசிக்க விரும்பும் தோழர்கள் 93444 86286 தொடர்புகொண்டு வாங்கி வாசிக்கவும்.

நூல்:அணங்கு
எழுத்தாளர்: அருண்பாண்டியன் மனோகரன். (உதவி இயக்குனர்)
பதிப்பு: எதிர் வெளியீடு