ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி
ஆதிகாலத்துல மனுசன் ஆடை அணிந்தது கிடையாது. உடையில்லாம தான் காடுகள்ல சுத்தி திரிஞ்சான். அதுல ஆண் பெண் பேதம்ங்குறது கிடையாது. யாருமே உடையணிஞ்சது இல்ல… அடுத்து ஒவ்வொரு நாகரீக மாற்றத்தின் போதும் உடை நவீனத்துவம் பெற்றுகிட்டே வருது.இலை, தழை அணிஞ்சு திரியுறான்… அடுத்து தான் துணி நெய்ய கண்டுபிடிக்கான்… துண்டு துணியை மேலையும் கீழயும் சுத்தினது தான் முதல் ஆடை வடிவமைப்பு… இப்படித்தான் உடை நாகரீகம் படிப்படியா வந்துட்டே இருந்தது….
உடைங்குறது நமக்கு மிக நெருக்கமானது … அது கொடுக்கும் பார்வை தான் இங்க நம்மோட வெளிப்பாடு. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்றத கேட்ருக்கோம்… தெருல நடந்து போகுறப்ப ஆடையில்லாம ஒருத்தர பார்த்தா நமக்கு தோன்ற முதல் எண்ணம் அவர் மனபிறழ்சி உள்ளவரா இருக்கக்கூடும்ங்குறது தான்….. இல்ல பிச்சைகாரரா இருப்பாங்களோன்னு தான் நினைப்போம்…. உடைங்குறது உடலை மறைக்கவும், சுற்றுசூழல் மாற்றத்துலயிருந்து நம்ம பாதுகாக்கவுங்குற நிலை மாறி உடைதான் நம் உடல் மொழியாகவே பார்க்கப்படுது.
உடைக்குக்குறது இங்க சாதி,மதம் வெளிப்படுத்தும் அங்கீகாரம் … கபாலி படத்துல ஒரு வசனம் வரும் காந்தி ஏன் கதர் அணிந்தார்ன்னும், அம்பேத்கர் ஏன் கோட்டுபோட்டார்ன்னும் காரணம் இருக்குன்னு.. அதற்கு பின் பெரிய அரசியலே இருக்கு…..
இத்தனை அரசியல் பின்புலம் இருக்குறப்ப பெண்களோட உடை மட்டும் ஆண்களுக்கு கிளர்ச்சி தந்தே ஆகணும்ங்குற நோக்கத்துலயே இங்க வடிவமைக்கப்படுது. ஆடை அணியாத போது பெண்களோட உடல் அடிமைப்படுத்தபடல… ஆடைகளுக்கு பின் மனிதநாகரீகத்துல மதம் புகுத்தப்படுது… அது எப்படி பெண்களின் மாதவிடாய் தீட்டுன்னு ஒதுக்குச்சோ அதே போல பெண்களோட உடலையும் அருவறுப்பாய்,அவமானமாய் சித்தரிக்கத்தொடங்குது….
இந்த உடைதிணிப்பை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய சூழல்ல இருக்கோம்…. ஒரு பெண் சேலை உடுத்திருக்கப்போ இடையோ, மார்போ உடை விலகி தெரிஞ்சாலும் அது கண்ணியமான உடைன்னு சொல்ற நாம …. ஒரு பேண்ட், டாப் போட்ருக்கப்போ கைய தூக்கும் போது வெளிதெரியுற இடுப்பு அந்த உடையை கவர்ச்சியா காட்டுதுன்னு சொல்றோம். ஒரு சுடிதார்க்கு சால் போடலைனாலே துப்பட்டா போடுங்க தோழின்னு சொல்ற அளவு பெண்களோட உடை கொச்சைப்படுத்தப்படுது… இங்க கொச்சைப்படுத்தப்படுறது பெண்ணோட உடையில்ல உடல்…..
ஆண்,பெண் உடலீரப்புங்குறது இயற்கை.. ஆனால் பெண்களுக்கான உடையமைப்பு இப்ப பெரும்பாலும் உடலீர்ப்புக்காக பயன்படுத்தப்படும் சாதனமாதான் பெண்களோட உடலை பயன்படுத்துது….
சமீபத்துல ஒரு பெண்கள் உடையகத்துக்கு போனேன்…. நான் அங்க பார்த்த உடைல 75% சதவீதத்துக்கும் மேல உள்ள பெண்கள் அணியுற டாப்ஸ், சுடி எல்லாமே ,மார்பு பகுதிக்கு தனியா ஒரு பகுதியும் கீழ்பாத்தை தனியா பிரிக்கும் மாதிரியான வடிவமைப்பு…. மார்பு பகுதி எல்லா பெண்ணுக்கும் இருக்கும்… ஆனால் அதை ஏன் எடுப்பா காட்டி தனியா பார்ட்டீசன் கொடுத்து பிரிக்கனும்…. ஆண்கள் யாரும் அப்படி தனியா பிரிக்குற மாதிரி உடையணிந்து பார்த்துருக்கோமா….
ஏன் மார்பை அப்படி காட்டணும்….75% க்கு மேல உடை அப்படித்தான்…. ஏன்னு கேட்டப்ப ட்ரெண்டுன்னு சொன்னாங்க… ட்ரெண்ட் வரும் … ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி… ஆனால் ஆடை தேர்ந்தெடுப்புல கொஞ்சம் கவனம் வைங்க மக்கா…. நமக்கு மட்டும் இல்ல நம்ம குழந்தைகளுக்கும்…. எடுப்பா காட்டி அழகு பார்க்க நம்ம உடல் சாதனம் இல்ல…..
நவீனம், உடை சுதந்திரம்ங்குறது வேற…. காலசூழலுக்கு ஏற்ப உடை மாறும்… ஆனால் இங்க பெண் உடைசுதந்திரம்ங்குறது ஆண் எதை பார்க்கணும்ங்குறத பொறுத்து அமைய கூடாது….
பெண் உடைசுதந்திரம்ங்குறத பத்தி பெரியார் அழகா சொல்லிருப்பார்….”எது உனக்கு உடுக்க ஏதுவா இருக்கோ அதை உடுத்து…. ஆண்கள் மேல்சட்டையும், பேண்ட்டும் போடுறப்போ கண்ணியமா தெரியுதா அதே போல உனக்கு எது இலகுவோ அதை கண்ணியமா உடுத்துன்னு”
பெண்கள் உடலை முழுசா மூடியிருக்கனும்னு சொல்றதும் …. எது வெளிதெரியணும், எது எடுப்பா காட்டனும்னு பெண்களை போகபொருளாய் காட்டுறதும், அலங்கார கருத்தாக்கங்கள் தான்…
நாகரீகம்ங்குறது அதிகாரத்தின் கட்டமைப்புங்குற மார்க்ஸ் கூற்றை நினைவில் வைங்க. அடிமைத்தனம் வேற வேற வடிவுல வருதே தவிர அடிமைத்தனம் அப்படியே தான் இருக்கு. பொண்ணுங்க நம்ம நமக்கான உணர்வு, சுதந்திரம், உடைன்னு நமக்கானத சிந்திக்க தவறுறப்ப அதை ஆண் கைல எடுக்காங்க. நமக்கானது நம்மளோட சுயதேர்வா இல்ல திணிக்கப்பட்டதான்னு நாம தான் முடிவு பண்ணணும்.
ஆடை அரசியல் அதிலும் பெண் ஆடை அரசியல் அதிகம் இங்க…. எதை நாம் தேர்வு செய்யணும்ங்குறது நம்ம கைல…. எல்லாருக்கும் இருக்குற அதே மார்புதான் நமக்கும் என்ன பாலூட்டிங்குறதால அதன் வளர்ச்சி அதிகம். அதை எடுப்பா காட்டி தான் தீரணும்ங்குற அவசியமில்லை…. பெண் ஆடை சுதந்திரம் வேற….. இரண்டையும் குழப்பாம கண்ணியமான ஆடை தேர்வை எடுப்போம்.
-மணிமாதவி
பாலின சலுகைகள் Vs பாலின சமத்துவம் – மணிமாதவி
காலைலயே கொஞ்சம் வெளில போக வேண்டியது இருந்தது. பைக் எடுத்தப்ப பெட்ரோல் பிளிங் அடிச்சது.. சரி போற வழில போட்டுக்குவோம்னு பங்க்குக்கு வண்டியவிட்டேன்…. ஒரு நாளு பேர் நின்னுட்டு இருந்தாங்க நானும் பின்னாடி நின்னேன்… எனக்கு முன்ன நின்ன ஒரு அங்கிள் முன்ன போமான்னு சொன்னாரு… இல்ல அங்கிள் நீங்க போடுங்க நான் அடுத்து போடுறேன்னு சொன்னேன்….. அவர்க்கு அதுல உடன்பாடில்லை … பொம்பளபிள்ளை நீ முதல்ல போட்டு கெளம்பு நிக்காதன்னு சொன்னாரு….
எனக்கு அவ்வளவு வெறி…. அவருக்கு அடுத்து பெட்ரோல் போட்டா எனக்கு அப்படி ஒன்னும் நேரம் ஆகிடப்போறதில்ல…. அப்படி அவர் விட்டு கொடுத்து நான் முன்னாடி போய் போட்டு நான் எதையும் சாதிக்கபோறதுமில்லை…. நானும் நீங்க போங்க முதல்ல நான் போட்டுக்குவேன்னு சொல்ல…. அவரும் விடாப்படியா நான் பொம்பள பிள்ளைக்கு விட்டு கொடுத்தே ஆவேன்னு நிக்க…. கடைசில பங்க்காரங்க வந்து நீங்க அந்த பக்கம் போங்க… அவங்களுக்கு இந்தபக்கம் போட்டுகுறோம் இரண்டும் ஒரே நேரம்தான் ஆகும்னு சொன்னப்பறம் மனசேயில்லாம முன்ன போனார்….. இதை ஏன் இப்ப சொல்றேன்னு நினைக்காதிங்க மக்கா….. இங்க பாலின சமத்துவம் எந்த அளவு பேசப்படுதோ அதே அளவு பேசப்படவேண்டியது பாலின சலுகைகள்….
நீ பொண்ணு அதனால முன்னாடி பெட்ரோல் போட்டு போ…. நீ பொண்ணு பஸ்ல நிக்கவேண்டாம் உட்கார்ந்துக்கோ….. நீ பெண்எழுத்தாளர் உனக்கு இந்த தளம்…. நீ பெண்வேலையாள் அதுனால ஆறுமணிக்கு மேல வேலைபார்க்க வேணாம்…. நீ பெண் போலிஸ் அதனால உனக்கு இந்த பணிலயிருந்து விலக்கு தாரேன்….. இதெல்லாம் சில நாள்களாய் என்னை சுத்தி வண்டா அரிக்குது…. கத்தனும்னு இருக்கு.. நாங்க கேட்குறது பாலின சமத்துவம் பாலின சலுகையில்லன்னு….
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு…. சலுகைங்குறது நீங்க பார்த்து எங்களுக்கு கொடுக்குறது… சமத்துவம்ங்குறது எங்களுக்கான உரிமை…. எதை ஒரு பெண் செஞ்சாலும் முன்னாடி ஒரு அடைமொழி கொடுக்கபடுது…. பெண் எழுத்தாளர், பெண் இயக்குனர், பெண் காவலர், பெண் வாகன ஓட்டுனர்….. இப்படி எல்லாத்துக்கும் முன்ன பெண் அப்படிங்குறது சொருகலா வந்து தொக்கி நிக்குது…… சமத்துவம்னு பேசுற பலரே இதை முன்மொழியுறது நடக்குது…..
பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை முற்போக்குதனமா நிறைய பேசப்படுது ஆனால் உண்மையில் இதுதான் பொதிந்திருக்கும் பிற்போக்கு தனம்…… சமீபத்துல அரசு பெண் போலிஸ் அதிகாரிகளுக்கு பந்தோபஸ்து பணியில் சலுகை அறிவிச்சாங்க… அப்ப பலரும் முக்கியமா பெண்ணியவாதிகள் பலரும் ஆதரிச்சோம்… சந்தோசப்பட்டோம்.. அப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவங்களோட அதிருப்தியை வெளியிட்டுருந்தாங்க… அதாவது பாலின அடிப்படையில் இப்படி பணியை பங்கிட்டு கொடுக்குறது பழமைவாதத்தை புகுத்துவது…. பெண்கள் பாதுகாப்பு பணில ஈடுபடும்போது ஏற்படும் குறைகளை கலையதான் முயற்சி எடுக்கணுமே தவிர அதுலயிருந்து விலக்கு கொடுக்குறது சிறந்ததல்லன்னு….
அதுவரை அந்த பணிச்சலுகை சரிதான்னு தோனுன எனக்கு அதற்கு பின் கொஞ்சம் எப்படி இந்த சலுகை சரியானதா இருக்கும்னு தோன தொடங்குச்சு…. இங்க பாலின சமத்துவத்துக்கும் பாலின சலுகைக்கும் வேறுபாடு தெரியாம பல பெண்களே பாலின சலுகைக்குதான் போராடுறோம்… பாலின சலுகைக்கும் பாலின பேதத்துக்கும் அதிக வேறுபாடு கிடையாது.. இரண்டுமே பிற்போக்கு தனம்தான்…. இப்பதான் கொஞ்ச காலமா வெளில வந்துருக்கோம்..
இப்ப மறுபடி பாலின சலுகைகளை கொடுத்து கொடுத்து முடக்கறத எப்படி ஏத்துக்கப்போறோம்… ஏன் பொண்ணுனா கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து பார்க்குற வேலைக்கு மட்டும்தானா…. இப்ப சம உரிமை சம ஊதியம்னு குரல் கொடுக்குற நாம் இந்த சலுகைகளை ஏத்துக்கிட்டா உரிமையை பெற முடியுமா…. இந்த வேலைக்கு இந்த சம்பளம்தான்னு பேசுனா என்ன செய்ய முடியும் நாம….
சலுகைக்காக யார்ட்ட போய் நின்னாலும் மரியாதை கிடைக்காது…. எல்லாம் எங்களால் முடியும்னுதானே நாங்க வெளில வாரோம்… அப்பறம் பெண் அப்படிங்குறதால கொடுக்கப்படும் சலுகைகள் எங்களோட திறைமையை குறைச்சு மதிப்பிடுறதில்லையா…. போட்டியே போட விடாம பரிசு கொடுக்குறதுதான் இந்த சலுகை…. ஆணும் பெண்ணும் சமம்ன்னுதான் நாங்க வாரோம்…. நீங்க பொண்ணுன்னு சொல்லி பாவம் பார்த்து கொடுக்குற சலுகைகள் எல்லாம் பழையபடி எங்களை முடக்கத்தான் செய்யும்….
பெண்களுக்கு பணியிடங்கள்ல கொடுக்கப்படுற சலுகைகள் அவங்களோட தகுதியை குறைக்கும்… கழிப்பறை பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பகால பிரச்சனை போன்றவை, இதுதான பெண்கள் பணியிடங்கள்ல சந்திக்கும் பிரச்சனைகள்….. அதை தீர்க்கதான் வழிபார்க்கணுமே தவிர… இதை காரணம் காட்டி அவங்களுக்கு சலுகைகள்ங்குற பெயர்ல ஒதுக்கக்கூடாது.
சுழற்சிமுறை வேலை கொடுக்கலாம்…. பணியிடங்கள்ல தேவையான வசதிகள் செஞ்சு கொடுக்கலாம்… சலுகைகள் வழங்குறதுக்கும்…. தீண்டாமைன்னு சொல்லி ஒதுக்குனதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல…. இதை பெண்களுக்கு பழக்கப்படுத்தி பெண்ணுரிமைக்கும் சலுகைக்கும் வித்தியாசம் இல்லாம போய்டுது…. இந்த சலுகைகள் எல்லாம் மறைமுக பிற்போக்கு தனம்தான்… இப்ப சலுகையா இருக்கும் பின்னாள்ல இதை காரணம் காட்டி மறுபடி முடக்க செய்ற சூழல் வரும்….
சலுகைகள் வேற…. உரிமைகள் வேற…. பாலினத்துல பேதமில்லை…. பாலின சமத்துவம் வேணும்னு குரல் கொடுத்து… என்னாலயும் எல்லாம் செய்யமுடியும்னுதான் போராடி போராடி வெளிலவந்துருக்கோம்…. அதையெல்லாம் சலுகைகள்ங்குற பெயர்ல குலைக்காதிங்க… குலைக்கவிடாதிங்க…. எங்களோட திறமை தகுதியை காட்டி நாங்க பெறும் வெற்றிதான் எங்கள் போராட்டத்தோட வெற்றி…. அதுயில்லாம சலுகைகளால எங்கள முன்னிறுத்துறது எங்களுக்கான தோல்விதான்….. எங்களுக்கு சலுகைகள் வேணாம் சமத்துவம் போதும்.