Pei Katturai By Manimathavi பேய் - மணிமாதவி

பேய் – மணிமாதவி

வேப்பமர உச்சியில் நின்னு
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாட போகும் போது
சொல்லி வைப்பாங்க…..”

வேப்பமர உச்சிலயும், புளியமரதடிலயும் பேய்இருக்கும்னு சொல்லிருப்பாளே….. பேய் அலாரம் வச்சு 12 மணிக்கு வெளிவரும்னு சொல்லிருப்பாலே ….. பேய்க்கு மல்லிப்பூன்னா இஷ்டம்னு சொல்லிருப்பாளே…. முக்கியமா பேய்க்கு காலிருக்காது ஆனா கொலுசு மட்டும் போட்டு சத்தத்தோட வரும்னு சொல்லருப்பாளே…. எனக்கும் சொன்னானுவளே….. இதெல்லாம் உண்மைன்னு நம்பி இருட்டுல என் நிழலையும்….. கொலுசுசத்தத்தையும் கேட்டு பொடதி தெரிக்க ஓடி முன்னாடி ரெண்டு பல்லு பேந்தது ஒரு பக்கம்னா….‌ குப்பறவிழுந்தும் மண்ஒட்டாம…… நேத்து நான் பேய பார்த்தேன்…. ஆனா அது நான் சின்னபுள்ளன்னு… பல்ல மட்டும் எடுத்துட்டு விட்டுருச்சுன்னு வெட்கமே இல்லாம கதைவுட்டதெல்லாம் நினைச்சா இப்ப சிரிப்பு வருது…..

சரி சின்ன வயசுலதான் நம்புனோம் இப்பன்னு எட்டி பார்த்தா….. இப்பயும் ஊர்ல மாதவிலக்கான பூ வைக்க விடமாட்டாங்க….. ஆறு மணிக்கு மேல முச்சந்தில வயசுபிள்ளை நிக்க கூடாதுன்னு சொல்வாங்க….. சிவகாசிலயிருந்து ஊருக்கு கெளம்புனா அத்த பூ வச்சிட்டு வராத பேய் பிடிக்கும் சொல்வாங்க‌….‌ என் வீட்டுக்காரங்க கூட “ஏம்மா பேய் கூடவே வாரேன்…. எனக்கு எதும் சொல்லாம அவளுக்கு சொல்ற”ன்னு மைண்ட் வாய்ஸ்னு நினச்சு சத்தமா பேசி வாங்கி கட்டுவாங்க…. அது என்னவோ தெரியல படத்துல 100 க்கு 90 பேய் பொண்ணுகளாதான் இருக்கு… மனுசங்கள நாங்க எப்படி சம உரிமைன்னு போராடி வாரோமோ அப்படி பேய்படங்கள்ல இப்பதான் காஞ்சனா, டார்லிங்னு ஆம்பள பேய் கொஞ்சமா எட்டி பார்க்குது…..‌ எதுவோ எப்படியோ….. வடிவேல் டயலாக் மாதிரி…..‌
“பேய் இருக்கா இல்லையா….
பார்த்துருக்காங்களா …..பார்க்கலயா …..
நம்பலாமா நம்பகூடாதான்னு தெரிஞ்சே ஆகணும்.

பேய் இருக்குன்னு சொல்றவங்கள்ட்ட போய்… பேய பார்த்துருக்கிங்களான்னு கேட்டா…. முடிஞ்சளவு மழுப்பிட்டு…. பேய் புடிச்சவங்கன்னு சிலர கைகாட்டுவாங்க….. உண்மைலயே பேய்னா என்ன…. எப்படி பேய் பிடிக்குதுனு சொல்றாங்கன்னு தெரிஞ்சுகுவோம்….

நம்ம மூளை மிக பெரிய நினைவு பெட்டகம்…. இது பல கோடி நினைவலைகளை பல மடிப்புகளை பதிஞ்சுகிட்டே இருக்கும்…. அது நாம கேட்குற குரல்ல இருந்து இரைச்சல் வரை….. நுகர்ற மலரோட நறுமணத்துல இருந்து ….. மூத்திரசந்து நாத்தம் வரை….. குழந்தையோட ஸ்பரிசத்துல இருந்து அடிபடும் வலி வரை….. இப்படி எல்லாமே மூளையோட அடுக்குகள்ல பதிய பட்டிருக்கும்….. ஒருத்தரை பார்க்கும் போது அவருடைய மேனரிசம் கூட மூளையோட மடிப்புகள்ல பதியவச்சிருக்கும். இப்படி பதிய வைக்கப்பட்டிருக்கும் நினைவுகளோட இரைமீட்புதான் நாம காணும் கனவுகள்…. மூளைக்கு அப்பப்ப இந்த இரைமீட்டல் தேவைபடும்…

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்….. பேய்ங்குறது முழுக்க முழுக்க கற்பனை உருவாக்கம் தான். சின்ன வயசில இருந்து நம்ம மூளைல பதியப்பட்டுருக்குற பேய் பத்தின நம்பிக்கைகளும் உருவகங்களும் குறிப்பிட்ட சூழல்ல… நம்மளோட நரம்பு தளர்ச்சியினாலும்….. இருதய குறைபாட்டாலும் உணரக்கூடிய காந்தவியல் மின்புலத்தோட வெளிப்பாடுதான் பேய்ங்குற கற்பனை….

இப்ப நமக்கு பேய் பத்தின பயம் எப்பயுமே உண்டுன்னு வச்சுக்குவோம்…. நம்மை சார்ந்த யாரோ துர்மரணம் அடைஞ்சா….. நம்ம மூளை பேய் சார்ந்த பயத்தையும்…. இறந்தவர் பத்தின நினைவுகளையும் ஒரு சேர புரட்டி கொடுக்கும்…. அப்படி கொடுக்கும்போது ஏற்படுற மனபிறழ்சிதான் பேய் பிடிக்குதுன்னு சொல்றது…. இறந்தவரோட மேனரிசம் நம்மள வழிநடத்தும் ஒரு பிரம்மை இருக்கும்.. சந்திரமுகி படத்துல வர்றது போலதான் கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சா…. சந்திரமுகியா நின்னா…. சந்திரமுகியாவே மாறுனா…‌ அதே தான்….

இதை மனோவியல்ல ஹாலூசினேசன் அப்படின்னு சொல்வாங்க…. சிலர் கருப்பா ஒரு உருவம் பார்த்தேன்னு சொல்வாங்க (visual hallucination) சிலர் இறந்தவங்கள பார்த்ததாவோ… குரலை கேட்டதாவோ சொல்வாங்க (auditory hallucination) இன்னும் சிலர் மண்டைக்குள்ள ஏதோ குரல் கேட்டுகிட்டே இருக்குறதா சொல்வாங்க (olfactory hallucination). இவங்க யாரும் பொய் சொல்லல. உருவத்தை பார்ப்பதாகவும்… குரலை கேட்பதாகவும் உருவகபடுத்திகுறாங்க. இது எல்லாம் பேய் பிடித்தல் இல்ல…. மனபிறழ்சி…. இதுக்கு பேயோட்ட போக கூடாது…… மனவியல் மருத்துவரை அணுகுதல்தான் நல்லது.

மனநோய்ங்குறத தாண்டி மூளையில் கட்டி (Brain tumor) ஒற்றை தலைவலி (Migrain) அல்ஸ்ஹைமர்(Alzheimer) போன்ற நோய் உள்ளவங்களுக்கு இந்த மாதிரி ஹலூசினேசன் வர வாய்ப்பு இருக்கு.

சரி பேயே இல்ல… அப்பறம் எப்படி பேய் ஓட்டுறாங்கன்னு கேட்டா….. அது தான் மூடநம்பிக்கை வணிகம். அங்க நம்ம பயம்தான் மூலதனம்… ஹாலூசினேசன்ல இருக்குறவங்கள பேயோட்டுறதா சொல்லி அடிக்குறது …. மந்திரிக்குறது எல்லாம் செய்வாங்க….‌ நம்ம மக்களோட பயத்த மூலதனமா வச்சு ஒரு பக்கம் கடவுள் ஒரு பக்கம் பேய்ன்னு பயங்கரமான வணிகம் நடக்கும். இப்படியான‌ பேய் பத்தின பயத்துக்கு “பாஸ்மோபியா ” ன்னு பெயர்…..

யோசிச்சு பார்த்தா…. இறந்த நம்ம மூதாதையரை குலதெய்வமா வணங்குன ஒரு சமூகத்தோட கைல கடுக கொடுத்து உன் மூத்தோர் வீடு திரும்பாம இருக்குறதுக்காகன்னு மூடவிதையை விதைச்சே வச்சிருக்காங்க…. இறந்தவங்கள அதிக நாள் கும்பிடகூடாதுன்னும் சொல்லி வச்சுருக்காங்க….. பல தலைமுறைக்கு முன்ன நம்ம வீட்ல இறந்தவங்கதான் நம்ம குலத்தோட வழிகாட்டி….. குலதெய்வம்….ஆனால் இப்ப… குடும்பத்துல ஒருத்தர் இறந்தா…. பேயாய் திரிவார்ன்னு பயம் காட்டியே…. தர்பணம்… ஹோமம்ன்னு பண்ண சொல்லி மூளைச்சலவை ஒருபக்கம் நடந்துகிட்டே இருக்கும்… எப்படியோ பேய்ங்குறது நம்மளோட கற்பனை உருவாக்கம்தான்…‌

“வேலையற்ற வீணர்களின்
தேவையற்ற வார்த்தைகளை
விளையாட்டாய் கூட நம்பிவிடாதே…நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே….”
பேய் என்பது வெளில எங்கயும் இல்ல….. நமக்குள்ள தான் இருக்குங்குற அறிவியல் உண்மையை பகுத்தறிந்து தெளிவோம்.

Avusaari Shortstory By Manimathavi அவுசாரி சிறுகதை - மணிமாதவி

அவுசாரி சிறுகதை – மணிமாதவி
சாந்தி…சாந்தி…

ம்ம்ம்..

சாந்தி….கொஞ்சம் எந்திரி…

ம்ம்ம்…

சாந்தி….எழுந்துரு…

என்னய்யா‌ ….இந்நேரம் ஏன் எழுப்புற…

பேசனும்…

இப்பவா…என்னாச்சு மாமா….எதும் பிரச்சனையா….ஏதும் வேணுமா…

இல்ல…கொஞ்சம் பேசணும்..

இந்நேரம் என்னத்தய்யா பேச போற….காலைல பேசலாம் போய் படு…

இல்ல இப்ப பேசனும்…

என்னய்யா ரோதனையா போச்சு உன்னோட….எத பத்தி பேசனும் சாமகாட்டுல…

இல்ல இன்னைக்கு ஊருக்கு போனத பத்தி ….

ஆமாயா….ஒரு மாசமா பழனி பழனின்னு பசப்பிட்டே திரிஞ்சதுக்கு இன்னைக்கு போயாந்தாச்சு ….ஒத்த மொட்டை வழிச்சு வர்றததுக்குள்ள போதும் போதும்னு ஆயாச்சு…ஆனாலும் உம்ம வீட்டாளுகள இழுத்து போய் வாரதெல்லாம் மலையை மயித்தகட்டி இழுக்குற காரியம்யா.‌….யாத்தே யாத்தே…மனுசருக்கு அத்தாவுத்தியா வந்துடும் இதுகள இழுத்து போயி வரமுன்ன …..வெள்ளன கெளம்பி செத்தமுன்ன தான் வந்து சேர்ந்தோம்….செத்தம் குறுக்க சரிப்போம்னு பார்த்தா சாந்தி சாந்தினு வந்து நிக்க….அத்த பத்தி என்னத்த பேச சொல்ற…

இல்ல காருல….

நான்தேன் உம்மட்ட படிச்சு படிச்சு சொன்னேம்ல …உங்காத்தாகாரி வரல வரலம்பா கார் வந்ததும் மொதெ அவதேன் ஏறுவா….நம்ம வீட்டு சனத்துக்கு டாடா சுமோ போதாதுயா …..வேனுக்கு சொல்லும்னா கேட்டியாயா…..சிறுக்கி பேச்ச கேட்க நாதியில்லாம….ஒம்பது சனம் போறதுல பத்தொன்பத நெறச்சா …..பரிதவிச்சு வந்து போச்சுயா….

இல்ல கரிக்கோலு….

உம்ம அண்ணே மவன்தான…‌ஏம்யா உங்காத்தாகாரிக்கு மசுரோட மண்டைக்குள்ள ஏதுமிருக்கா….அவன என்ன சின்ன நொல்லன்னு நெனச்சுபுட்டாளா….இளவட்டமாட்டம் இருக்கான் அவன என் மடில தள்ளிட்டா …எம்பொசமும் போச்சு ….ஒத்தபக்க பிட்டமும் போச்சு…

இல்ல கார்ல வச்சு யாருக்கும் தெரியாம போன் பேசுனியாமே..

யார் சொன்னா….நீ என்னத்த கண்ட……

இல்ல கரிக்கோல் தான்..மதுரை நெருங்கையில …எல்லாம் அசந்த நேரம்… யாருட்ட …என்ன பேசுன…

பேசுனேன் சொன்னவன் ..என்ன பேசுனுன்னு சொல்லலியோ

நீ தான் திருட்டு தனமா குசு குசுன்னு பேசுனியாம்ல ….அவன் வந்து சொல்லயிலே எனக்கு அசிங்கமா போச்சு.‌‌

போன் பேசுனதுல உமக்கென்னயா அசிங்கம் …

ஆத்தா அப்பனெல்லாம் திருட்டு தனமா அவுசாரிதேன் பேசுவா …‌நான் பெத்தவன் நீ சரியா இருந்தா சிறுக்கி அவுசாரிதனம் பண்ணுவாலான்னு கேட்டுபுட்டாவ…அண்ணனும் கொஞ்சம் வெசனபட்டான்….

என்னத்துக்கு…

நான் கொடுக்குற இடத்துலதான நீ இம்புட்டு ஆடுற….யார் என்னன்னு விசாரின்னு….

நீ என்னத்த சொன்ன…

எம்பொண்டாட்டி நான் கேட்காமலே என்ட எல்லாம் சொல்லிடுவான்னு மெச்சி வந்தேன்….இம்புட்டு நேரம் நீயும் சொல்லுவ பாத்தேன்….நீ தூங்கிபுட்ட அதேன் எழுப்புனேன்…..யாரு புள்ள….

இப்ப நான் யாருன்னு சொன்னாதான் நம்புவியா

இல்ல அவுகட்ட நான் ஒன்ன சரியா வச்சுருக்கேனு சொல்லனும்ல…

ஓ….நான் போன காட்டி அத நீ அவுகட்ட சொல்லிதேன்….நான் அவுசாரி இல்லன்னு நிருபிப்பியோ….

அப்படியில்லடி….ஒன்ன தப்பா பேசிட கூடாதுல….

அவுக பேசுனதோட ‌நீ என்ட்ட இப்ப கேட்குறதுதாம்யா நோவுது…

ஏய் .. யார்ட்ட பேசுனனு காட்டுறதுல உனக்கு என்ன ஆகிட போவுது ….உம்மேல தப்பில்லனா ஏன்டி பயப்படுற…

நான் பயப்பட்டேன்னே வச்சுக்கோயா…..இந்த போன்காட்டுல பாத்துதேன் ‌நீ என்ன நம்புவனா…..அப்டி ஒரு நம்பிக்கை தேவையேயில்ல…நான் அவுசாரியாவே இருந்துட்டு போறேன்யா…

ஏய்….என்னடி திமிரா….

ஆமான்னே வச்சுக்கோ…

எக்கா ….எக்கா ….அம்சவேணிக்கா….

ஏய் என்னடி …இம்புட்டு வெள்ளன வந்துருக்கவ….என்னடி ஆச்சு …ரவ்வுக்கு தூங்குனியா இல்லையா…கண்ணுலாம் வீங்கி கெடக்கு….உம்புருசனோட எதும் தகராறா….அவன் வெள்ளனவே வெளிய போனான்….

இல்லக்கா…. வந்துசேரவே ராவாகிபோச்சு…. எல்லாம் முடிச்சு உடம்பு நோவு சரியா தூக்கமில்ல….

என்னத்தயோடி …‌சரி இப்ப என்னத்துக்கு வந்தவ ….

சீட்டு எடுக்க கேட்டேனே ….

ஆமா ….நேத்து போனுலயும் இத தானடி சொன்ன….இந்த முறை எடுத்துக்கோன்னு சொல்லிபுட்டேனே …இன்னும் பத்து நா கெடக்கு ..‌அதுக்குள்ள ஏண்டி விடியமுன்ன வந்து நிக்க….

இல்லக்கா அது வேணாம்னு…..சொல்ல வந்தேன்….நான் கடைசி சீட்டே தட்டிகுறேன்கா…

அடி பாதகசத்தி….அரை நாளுக்குள்ள அப்படி என்னடி உனக்கு வந்துச்சு….நேத்துதேன் ….இந்த சீட்டு எடுத்தே தீருவேன்னு நின்ன இன்னைக்கு வேணாம்ங்க‌…கோட்டி கீட்டி புடிச்சுருக்கா…

இல்லக்கா ….எனக்கு வேண்டியவுகளுக்கு வண்டி எடுக்க கைகடிச்சுதுன்னு நேத்து பேசிட்டுருந்தாவ….சரிி நான் வீட்ல சிறுபாட்டுல போட்ட சீட்டுதான இது ….அவுகளுக்கு உதவ கொடுக்க நெனச்சேன்….

சரி இப்ப என்னாச்சு ‌…..அவுக வண்டி எடுக்கலயா..

இல்ல….அவுக செத்துட்டாவ……