இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்




மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.

இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.

நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.

காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.

மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.

இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.

உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.

உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.

குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.

மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).

கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.

இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Source: Pulapre Balakrishnan 2022.

மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.

வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).

சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).

இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

-பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும்,  வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும், வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரிதான வளர்ச்சியினைக் காண முடிந்தது, அடுத்த கால் நூற்றாண்டில் 3லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினையும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் 6 விழுக்காடு வளர்ச்சியினையும் கண்டது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்க நிலையில் தொடர்ந்து விரைவான விரைவான வளர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் அத்துடன் சமுதாயத்தில் சமனின்மை என்ற நிலையும் காணப்பட்டது. 1980க்கு முன்பு அரசியல் மற்றும் கொள்கைகள் வாணிபச் சார்பு, வளர்ச்சிச் சார்பு என்ற இரண்டிற்கும் எதிரானதாக இருந்தது. ஆனால் 1980க்கு பின் வளர்ச்சிச் சார்பு மற்றும் வாணிபம் சார்பு நிலைக்கு ஆதரவான அரசியலும், கொள்கைகளும் உருவானது. 1990களில் சந்தைச் சார்பு நிலையினைப் பின்பற்றிய இந்தியா பன்னாட்டுப் பொருளாதாரத் தளங்களில் தடம் பதிக்கத் தொடங்கியது. வாணிபச் சார்பின் உத்திகள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவானது ஆனால் சந்தத்தைச் சார்பு உத்திகள் நுகர்வோர்களுக்கான ஆதரவான நிலையுடையது. சந்தை சார்பு உத்திகள் போட்டியினை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கும். இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியும் உள்நாட்டு வாணிபம் மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் இதன் விளைவுகள் அரசியல் பெருக்கத்தினால் வட்டார மற்றும் வகுப்புச் சமனின்மை அதிகரித்தது, மொழிசார் தேசியத்தின் தாக்கம் குறைந்தது, அரசியல் காரணங்களினால் நலன் சார் அணுகுமுறைகள் உருவாகியது.

இந்தியாவில் தனிக் கட்சி ஆதிக்கம் முடிவுற்று கூட்டணி ஆட்சிகள் ஒன்றி அரசியல் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (ஐ.மு.கூட்டணி), பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (தே.ஜ.கூட்டணி) போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ஐ.மு.கூட்டணி 218 இடங்களிலும், தே.ஜ.கூட்டணி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐ.மு.கூட்டணியானது மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. இக் கூட்டணி 2004 முதல் 2009 முடிய ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2009ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 262ல் ஐ.மு.கூட்டணியும், 159ல் தே.ஜ.கூட்டணியும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இக் கூட்டணி ஆட்சி முழுமையாக பத்து ஆண்டுகள் மே 2009 முதல் மே 2014வரை நீடித்திருந்தது. பல மாநிலக் கட்சிகள் ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 7 – 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல், முதலீட்டைப் பெருக்குவது, வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கூலியினை அளித்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தை உருவாக்குவது, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவது போன்றவை இடம் பெற்றிருந்தது (GoI 2004).

ஐ.மு.கூட்டணி அரசின் ஜனரஞ்சக திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், சீர்திருத்தங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியது மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியது போன்றவற்றைக் குறிப்பிடலாம் (Maitreesh Ghatak et al 2014). அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம், விலை உயர்வு, இந்தியப் பணம் வலுவிழந்தது, நிதிப் பற்றாக்குறை போன்றவை ஐ.மு.கூட்டணி அரசில் காணப்பட்டது. மார்ச் 7, 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும்போது, இரண்டாவது பசுமையை புரட்சியானது பழம், காய்கறிகளின் உற்பத்தியினைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதற்காகத் தோட்டக்கலை இயக்கம் (mission) உருவாக்கப்பட்டு நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள், கருவுற்ற தாய்மார்கள் பயனடையும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் இந்தியத் திட்டக் குழுவினால் வடிவமைக்கப்பட்தைக் குறிப்பிட்டார். இரண்டாவது பசுமைப் புரட்சியானது, பொது-தனியார்-பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது என்றார். இதன்படி 1) நீர் ஆதாரப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உணவு உற்பத்தியை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பது, 2) அறுவடைக்கும் பிந்தைய நிலைகளில் வீணாகும் விளைபொருட்களின் அளவினைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, பன்னாட்டு அளவில் விவசாயிகள் வேளாண் வாணிபத்தில் பங்கேற்பை ஊக்குவிப்பது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா உலக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டது.

ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டது. அவை, 1) பொருளாதார அறைகூவல்கள் 2) அரசியல் அறைகூவல்கள் ஆகும். பொருளாதார அறைகூவல்களைப் பொருத்த அளவில் உள்கட்டமைப்புகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துதலின்போது பெரும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது. உயர் பொருளாதார வளர்ச்சியானது திறனுடைய தொழிலாளர்களின் தேவையினை அதிகரித்தது. ஆனால் அடிப்படையில் இந்தியாவால் குறைந்த திறனுடையவர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.மு.கூட்டணி அரசானது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. ஏழைகளுக்கான திட்டமாக இது இருந்தாலும் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியாகக் காங்கிரஸில் இரட்டைத் தலைமை காணப்பட்டது. பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கை வேரூன்றி இருந்தது. காங்கிரஸ் தலைமுறை, வாரிசு அரசியல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ரீதியாகச் செயல்பாடுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தோய்வு காணப்பட்டது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2004-05ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 2005-06ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், மருத்துவத் தாவரங்கள், வாசனைப் பொருள் உற்பத்தித் தாவரங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2005-06ல் ஒன்றிய அரசின் உதவியுடன் வேளாண் சீர்திருத்த விரிவாக்கத்திற்கு மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது. 2005-06ல் வேளாண்மைக்கான நடைமுறை ஆராய்ச்சி முன்னோடித் திட்டத்திற்கான தேசிய நிதி உருவாக்கப்பட்டது. இத்துடன் இதே ஆண்டில் தேசிய வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தை படுத்துதலுக்கு 2003 வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2006ல் பாரத் நிர்மாண் என்ற கால வரம்பு (2005 – 2009) திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டம், பிராதான மந்திரி கிராம சாலை திட்டம், விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், ராஜீவ் காந்தி கிராம மின் இணைப்பு திட்டம், கிராம பொது தொலைப்பேசி போன்றவற்றை உள்ளடக்கி ஒரு குடையின் (பாரத் நிர்மாண்) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் ஆதாரம். வெள்ள மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு திட்டம் மார்ச் 2005ல் தொடங்கப்பட்டது. நீர்த் தேக்கம் பழுது பார்த்தல், மறுசீரமைப்பது, நீர்த் தேக்கத்தை மீண்டும் பெறுவது போன்றவை இந்தியாவில் 16 மாவட்டங்களில் 700 நீர்த் தேக்கங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டது. இதனால் 20000 ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்தது (GoI 2005).

இந்திய விவசாயிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, தனிநபர், உறவினர்கள்;, முகவர்கள், வண்டிக்காரர்கள், வியாபாரிகள் போன்ற ஆதாரங்களின் வழியாக அதிக அளவிற்குக் கடன் பெற்று வேளாண் சாகுபடி செய்பவர்களாக இருக்கின்றனர். 1951-61ல் கிராமப்புறக் கடனில் 75 விழுக்காடு முறைசாரா வழியாக அதிக வட்டிக்கு வண்டிக்காரர்களிடம் பெற்றிருந்தனர். இதனைப் போக்க 1969, 1980ல் இந்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. இதன் விளைவு 1991ல் இவ்வகைக் கடன் 25 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்தது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபின் முறைசார் (நிறுவனக் கடன்) திடீரென வீழ்ச்சியடைந்தது. 1992ல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையான வேளாண்மைக்கு “இலக்கின் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குதல்” பரிந்துரைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக வட்டிக்கு முறைசாரா வழியாக மீண்டும் கடன் பெறத் தொடங்கினர். அரசு அளித்த வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அவர்களின் சாகுபடி செலவை எதிர்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமாகக் கடன் பெறத் தொடங்கினர். எனவே, ஐ.மு.கூட்டணி அரசானது 2004-05 முதல் 2007-08 முடிய வேளாண் கடன் வழங்கலை இரட்டிப்பு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வேளாண் குடிகளில் கடன்பட்டோர் 48.6 விழுக்காடாக இருந்தது 2013ல் 51.9 விழுக்காடாக அதிகரித்தது. இக் கடன் நிலை மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாட்டுடன் காணப்பட்டது. கடன்பட்ட விவசாயிகளின் பங்கானது உச்ச அளவாக ஆந்திரப் பிரதேசத்தில் 93 விழுக்காடாகும். தேசிய அளவில் வேளாண் குடிகளில் கடன் பெற்றோரில் 60 விழுக்காட்டினர் நிறுவனம் சார் கடனாளிகள் ஆவார்கள். விவசாயப் பணிகள் மேற்கொள்ளக் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்க 1998ல் கிசான் கிரெடிட் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது உள்ளடக்கிய நிதி முறையினைப் பின்பற்றியதால் ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2013ல்) விவசாயிகளுக்கு 392 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது. இவர்கள் பெறும் கடனைச் சரியான தவணைக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டால் பூஜ்ய வட்டி என்று அறிவிக்கப்பட்டது. அரசின் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 2003ல் வேளாண் குடிகளின் சராசரிக் கடன் ரூ.12885லிருந்து 2013ல் ரூ.47000ஆக அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 375 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது (Sher Singh Sangwan 2015).

2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்களின் கடன் ரூ.6000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். தேசிய விவசாயக் கொள்கை செப்டம்பர் 2007ல் தேசிய விவசாயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2007-08ல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவர் விரிவாக்கத் திட்டம் 300 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது. இதன்படி வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கோதுமை, நெல், பருப்பு உற்பத்தியை 10 மில்லியன் டன், 8 மில்லியன் டன், 2 மில்லியன் டன் என்று முறையே 11வது திட்ட கால முடிவிற்குள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மே 2005ல் தொடங்கப்பட்டது. இதன்படி தோட்டக்கலை வட்டார அணுகுமுறையின் அடிப்படையில் உற்பத்தியினை அதிகரிப்பது, ஊட்டச்சத்து உறுதியினை சாத்தியமாக்குவது, வேளாண் குடிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 2005ல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு உதவி செய்தது. மார்ச் 2006ல் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 3.4 லட்சம் ஹெக்டேர் பயனடைந்தது. அக்டோபர் 2006ல் தேசிய மூங்கில் இயக்கம் தொடங்கப்பட்டது இதன்படி மூங்கில் உற்பத்தியினை விளைவித்து வேலைவாய்ப்பை உருவாக்க முனைந்தது. 1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து டிசம்பர் 2006 முதல் புதிய வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீர்த் தேக்கங்கள் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் திட்டம் 2005ல் ரூ.300 கோடியில் தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆகஸ்ட் 2007ல் வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க ரூ.2500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான தொழில்நுட்ப இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் விளைச்சல் விரைவான அதிகரிப்பை அடைந்தது. ஆனால் 1990களில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமையல் எண்ணெய் அதிகமாக இறக்குமதியானது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகள் இழப்பினை எதிர்கொண்டனர், சாகுபடி செய்யும் விளைநிலப் பரப்பும் குறையத் தொடங்கியது. மீண்டும் 2001ல் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்கள் மீது வரி விதித்ததால் சமையல் எண்ணெய் விலை உயர்வடைந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் எண்ணெய்வித்துக்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். 2010-11ல் இறக்குமதிக்கான சமையல் எண்ணெய் மீது வரிவிதித்தது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தது.

Source: Government of India (2016): Indian Public Finance Statistics 2015-2016,” Ministry of Finance, Department of Economic Affairs, Economic Division.

Source: GBGA (2013) “How has the Dice Rolled: Response to Union Budget 2013-14,” Centre for Budget and Governanace accountability, New Delhi, www.cbgaindia.org.

ஐ.மு.கூட்டணி அரசானது கிராமப்புற மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய சமுதாய உதவி திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை கிராமப்புற மேம்பாட்டிற்கு மன்மோகன் சிங் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது (Amit Basole 2017). ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் 2007ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த கொண்டுவரப்பட்டது. இதற்கான ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விதை, உரம், தோட்டக்கலை, வேளானமை இயந்திரமயமாக்கல், வேளாண் விரிவாக்கம், பயிர்ச் சாகுபடி, சந்தைப் படுத்துதல், பரிசோதனை ஆய்வகம், நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, நீர்த் தேக்கம் மற்றும் கூட்டுறவு போன்றவற்றின் மீதான மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடர் வேலை என்பது இயலாத நிலையினை உணர்ந்து தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் செப்டம்பர் 2005ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் பிப்ரவரி 2, 2006ல் நாட்டில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் ரூ.11300 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009ல் இத்திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறத்தில் திறன் குன்றிய உழைப்பாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பினை அளிப்பதை நோக்கமாக்க கொண்டது. இத் திட்டத்தினால் கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்தக் குறிப்பாக நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இத் திட்டத்தில் சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா திட்டமும், உணவுக்கு வேலைத் திட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் இத் திட்டம் 330 மாவட்டங்களிலும், 2008-09ல் 596 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வழியாக ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் 2006-07ல் 90.5 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டது. 2009-10ல் இது 283.6 கோடியாகவும், 2013-14ல் இது 220.4 கோடியாகவும் அதிகரித்தது (Ashok Pankaj 2017). இத்திட்டத்தைக் கிராமப்புற பஞ்சாயத்துகள் வழியான நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசானது 2004ல் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைத் துவக்கி கிராமப்புற மேம்பாட்டிற்கும் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது (GBGA 2009). கால்நடைகள் வேளாண்மை வளர்ச்சிக்கும், கிராமப்புற வருமான பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதால் 2013-14ல் தேசிய கால்நடை இயக்கம் ரூ.307 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2014ல் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், காளான், பூக்கள், நறுமணப் பொருட்கள், மரங்கள் போன்றவை வளர்ப்பதாகும். இதன்படி 11வது திட்டக் காலத்தில் இவற்றை பயிரிட 23.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. 2012ல் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் சர்க்கரை துறை முறைப்படுத்துதல் அறிக்கையின்படி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமானது, சர்க்கரையைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகும். 2010-11ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த ரூ.400 கோடி 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2012-13ல் ரூ.1000 கோடியாக அதிகரித்தது (GoI 2013).

விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமப்புற கடன் நிலைக்கான வல்லுநர் குழு 2006ல் அமைக்கப்பட்டது.

இக்குழு ஜூலை 2007ல் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதில் அளவுக்கு அதிகமான மக்கள் வேளாண்மையினைச் சார்ந்திருக்கின்றனர், கிராமப்புறம் தொடர்ந்து பெருமளவிற்கு பன்முகமடையாமல் உள்ளது, தலா வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கடன் இருப்பில் பற்றாக்குறை, வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடு போதுமான அளவிற்கு இல்லாமல் உள்ளது, குறைவான தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்திருப்பது போன்ற அறைகூவல்களை இந்திய வேளாண்மை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரதம மந்திரி தொகுப்பை நாட்டில் 31 மாவட்டங்களில் ரூ.28000 கோடிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தியது (GoI 2007). 2007-08ல் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டமான ஆம் ஆத்மி பீமா யோஜனா தொடங்கப்பட்டது. வேளாண் துறையின் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2009ல் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, 2010-11ல் சில மாநிலங்களில் வறட்சி, 2012-13ல் தாமதமான பருவ மழை போன்ற நிலை நிலவியது. அதே சமயம் எப்போதும் இல்லாத அளவாக 2011-12ல் உணவு தானியம் 259.32 மில்லியன் டன் உற்பத்தியானது. எட்டாவது திட்ட காலத்தில் வேளாண் வளர்ச்சி சராசரியாக 4.8 விழுக்காடும், 9வது திட்டத்தில் 2.5 விழுக்காடும், 10வது திட்டத்தில் 2.4 விழுக்காடும், 11வது திட்ட காலத்தில் 3.6 விழுக்காடும் இருந்தது (GoI 2013) எனவே நீடித்த வேளாண் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 12வது திட்டக் காலத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு வேளாண் வளர்ச்சியினை உறுதிசெய்ய முடிவெடுத்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஐ.மு.கூட்டணி ஆட்சி முடிவுற்றதால் இதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறைக்குப் பிந்தைய காலங்களில் பல முதன்மைப் பயிர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களில் அதிகரித்திருந்தது. ஆனால் 2001 – 2010ஆம் ஆண்டுகளுக்கிடையே பருப்பு மற்றும் பருத்தியின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்தது. நெல், சர்க்கரை, கோதுமை உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களுடன் ஒப்பிடும்போது 1990களில் அதிகரித்திருந்தது. பருத்தி உற்பத்தி 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிக வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் பி.டி.பருத்தி ரக தொழில்நுட்பமாகும். ஆனால் இதனைச் சாகுபடி செய்ய அதிக செலவும், இடரும் இருந்ததால் 2010-11 மற்றும் 2015-16ல் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித் திறன் குறைந்தது.

அட்டவணை: வேளாண்மை செயல்பாடுகள் (விழுக்காடு)

விவரங்கள் 1981-82 முதல் 1989-90 வரை 1990-91 முதல் 1999-00 வரை 2000-01 முதல் 2009-10 வரை 2010-11 முதல் 2013-14 வரை
வேளாண் வளர்ச்சி  2.9 2.8 2.4 2.1
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.7 5.3 6.8 3.7
மொத்த நீர்பாசன பரப்பு வளரச்சி 2.07 2.28 1.11 1.36
உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 2.8 1.79 1.03 0.66

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வேளாண்மையின் போக்கு

விவரங்கள் 2003-04 2004-05 2005-06 2006-07 2007-08 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 2013-14
உண்மை வேளாண் வளர்ச்சி 9.0 0.2 5.1 4.2 5.8 0.1 1.0 7.7 3.6 1.8 3.7
ஜிடிபி-க்கு வேளாண்மையின் பங்கு 20.3 19.0 18.3 17.4 16.8 15.8 14.7 14.5 14.1 13.7 13.9
வேளாண்யின் மூலதன ஆக்கம் (ஜிடிபி-யில் மூ) 2.1 2.1 2.2 2.2 2.3 2.7 2.6 2.3 2.4 NA NA
உணவு தானிய உற்பத்தி (மி.ட) 213 198 209 217 231 236 218 245 259 255 266
தலா உணவு தானிய இருப்பு (கிராம்) 438 463 422 445 443 436 444 437 454 450 401
குறைந்த பட்ச ஆரவு விலை(ரூ)

நெல் (சாதாரணம்)

கோதுமை

550

630

560

540

570

700

620

850

745

1000

900

1080

1000

1000

1000

1170

1080

1285

1250

1350

NA

NA

Source: GoI (2017): “Economic Survey 2016-17,” Ministry of Finance, Government of India. 

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பீடு

ஆண்டு சராசரி தேஜகூ (1998-04) ஐமுகூ-I (2004-09) ஐமுகூ-II (2009-13) ஐமுகூ

(2004-13)

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி  (%) 5.9 8.0 7.0 7.6
பொதுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) 5.4 6.1 10.4 8.1
உணவுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) 4.2 7.0 11.6 9.0
நிதிப்பற்றாக்குறை (ஜிடிபி யில் % ஆண்டுக்கு) 5.5 3.9 5.5 4.6
அந்நியச் செலாவணி  வரத்து (பில்லியன் டாலர்) 2.85 15.44 16.19 20.22
வேளாண்மைக்கான விவசாயக் கடன் வளரச்சி (%) 135.97 140.93 132.90* 307.81*
உணவு தானிய உற்பத்தி (%) 202 218 244 229.6

குறிப்பு: * 2011-12 வரை

Source: Maitreesh Ghatak, Parikshit Ghosh, Ashok Kotwal (2014): “Growth in the Time of UPA – Myths and reality,” Economic and Political Weekly, Vol 49 (16), pp 34-43 and 

http://www.rgics.org/sites/default/files/Facts-NDA-UPA.pdf.

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

ஒப்பீட்டு அளவில் பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5.9 விழுக்காடாக இருந்தது, ஐ.மு.கூட்டணி ஆட்சியின் முதல் காலகட்டத்தில் 8.0 விழுக்காடாகவும், இரண்டாவது காலகட்டத்தில் 7.0 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தமாக 7.6 விழுக்காடாகவும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியைவிட ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி ஆண்டான 2012-13ல் பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் குறைந்தது. தொழில் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியானது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் தே.ஜ.கூட்டணியின் ஆட்சியைவிட செயல்பாடுகள் சிறந்து காணப்பட்டது. ஆனால் உணவு பணவீக்கம், தே.ஜ.கூட்டணி அரசியைவிட (4.2 விழுக்காடு) ஐ.மு.கூட்டணி அரசில் (9.0 விழுக்காடு) அதிகமாக இருந்தது. ஆனால் அந்நியச் நேரடி முதலீடானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் ரூ.2.35 பில்லியன் டாலராக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 20.22 பில்லியன் டாலராக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியமானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 1.6 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது 2.6 விழுக்காடாக அதிகரித்தது. இதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 50 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 61 விழுக்காடாக அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி அரசு பதவி ஏற்றபோது வேளாண்மை மீதான பொது-தனியார்-பங்கேற்பு முதலீடானது 2003-04ல் 20:80ஆக இருந்தது 24:76 என்று 2013-14ல் மாற்றம் அடைந்தது. மொத்த வேளாண்மைக்கான முதலீட்டில் பொதுத்துறை 20 முதல் 25 விழுக்காடு என்ற வீச்சில் 2003-04 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே இருந்தது. நீர்ப்பாசனமும் உணவு உற்பத்தியும் நேர்மறைத் தொடர்புடையது. 1980ல் நீர்பாசனப் பரப்பளவு அதிகமாக அதிகரித்திருந்தது ஆனால் 1990களில் இது குறைவான அளவிற்கே உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை முதலீடு நீர்ப்பாசனத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததாகும். மொத்த உற்பத்தியில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு 2005-06ல் 0.8 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2013-04ல் இது 0.6 விழுக்காடாகக் குறைந்தது. இது போல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு 1998-99ல் ஜி.டி.பியில் 0.44 விழுக்காடாக இருந்தது 2011-12ல் இது 0.32 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டுகளில் வேளாண் விரிவாக்கத்திற்கு 0.15 விழுக்காடாக இருந்தது 0.05 விழுக்காடாகக் குறைந்தது (Shantanu De Roy 2017).

உணவு விலையானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் மெதுவாக அதிகரித்தது ஆனால் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது வேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது ஐ.மு.கூட்டணி காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 2005-06 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே நெல்லுக்கு 11.3 விழுக்காடும், கோதுமைக்கு 10.1 விழுக்காடும், கரும்புக்கு 12.9 விழுக்காடும், பருத்திக்கு 9.2 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டது (Krishnasamy et al 2015). மேலும் இக் காலகட்டத்தில் 650 லட்சத்திற்கு மேல் விவசாயிகள் கடன் பெற்றனர். உணவிற்கான மானியம் மூன்று மடங்கு அதிகரித்தது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 35 கிலோ உணவு தானியம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணியில் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. இரண்டு லட்சம் கி.மீட்டருக்குமேல் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டது. வறுமையானது ஆண்டுக்கு 2 விழுக்காடு குறைந்தது (Govardhana Naidu 2016). ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் வேளாண் வருமானம் 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே 5.36 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக வேளாண் சாகுபடியாளர்களின் வருமானம் 7.29 விழுக்காடு இதே காலகட்டத்தில் அதிகரித்திருந்தது (Ramesh Chand et al 2015).

ஐ.மு.கூட்டணி அரசில் எரிசக்தி உருவாக்கம், சாலைக் கட்டமைப்பு, ரயில் கட்டமைப்பு, கனிம வளங்களை எடுத்தல், தொலைத் தொடர்பு விரிவாக்கம் போன்ற முக்கியக் கட்டமைப்பின் மீது முதலீடுகள் செய்யப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பதியல் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 4.76 விழுக்காடாக தே.ஜ.கூட்டணியில் இறுதி காலமான 2003-04ல் இருந்தது 2008-09ல் 7.32 விழுக்காடாகவும், 2010-11ல் 8.4 விழுக்காடாகவும் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 7-8 விழுக்காடு அளவிலிருந்தது ஆனால் இது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக அளவிலான வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், பழங்குடியினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவானது. அதே நேரம், ஏழைகள் பெருமளவிற்குக் குறைந்தனர். 1993-94 மற்றும் 2004-05ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 0.74 விழுக்காடு ஏழ்மை குறைந்தது ஆனால் இது 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 2.18 விழுக்காடு ஏழைகள் குறைந்தனர், குறிப்பாக இது கிராமப்புறங்களில் 0.75 விழுக்காடு மற்றும் 2.32 விழுக்காடு என்று முறையே குறைந்தது குறிப்பிடத்தக்கது (Maitreesh Chatak et al 2014).

பொருளாதார சீர்திருத்தமானது வேளாண்மையில் சிறிய அளவில் பயிர் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பெரிதும் பாதித்து. கிராமப்புற உள்கட்டமைப்பு மீது பொதுத்துறை முதலீடு குறைந்தது, குறிப்பாக நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் குறைந்தது போன்றவை வேளாண் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தது. 2011-12ல் வேளாண்மையை 59 விழுக்காடு ஆண் உழைப்பாளர்களும், 75 விழுக்காடு பெண் உழைப்பாளர்களும் சார்ந்திருந்தனர். உயர் பொருளாதார வளர்ச்சி கிராமப்புற வறுமையைக் குறைக்கக் கூடியதாகும். வேளாண் வளர்ச்சி 2விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை அதிகரித்து இத்துடன் பொருளாதாரமும் 9 விழுக்காடு அதிகரித்தால் வேளாண் சார் துறைக்கும் வேளாண் சாரத் துறைக்கும் உள்ள வருமான இடைவெளியினை குறைக்கும் என்று திட்டக்குழு (2006ல்) கணித்துள்ளது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1981-82 முதல் 1989-90க்கும் 2010-11 முதல் 2013-14க்குமிமையே அதிக அளவில் குறைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியப் பயிர்கள் சீர்திருத்தக் காலங்களுக்குப்பின் பொதுவாகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது (Shantanu De Roy 2017).

இந்தியப் பொருளாதாரத்தை பொருத்த அளவில் வேளாண்மையினை உள்ளடக்கிய முதன்மைத் துறையானது மற்ற இரு துறைகளான தொழில் மற்றும் சேவையைவிட மிகவும் பின்தங்கியதாகவும், அதிக பாதிப்பினை உடையதாகவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதே சமயம் வேளாண்மை சார் வேiவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் திடமான முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேளாண் குடிகள் 70 விழுக்காட்டினர் போதுமான வருமானமின்றி வாழ்ந்து வருகின்றனர். வேளாண் சாராத துறையானது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் வேளாண் சார் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் 2005ல் வேளாண் சாரா வேலைவாய்ப்பு 27 விழுக்காடாக இருந்தது 2010ல் 32 விழுக்காடாகவும், 2015ல் 42 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண்மை மூலம் போதுமான வருமானம் ஈட்ட முடியாதல் 52 விழுக்காடு வேளாண் குடிகள் கடனாளிகளாக உள்ளனர். இவர்கள் சராசரியாக ரூ.47000 கடனை உடையவர்களாக உள்ளனர். தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி 76.9 விழுக்காடு கிராமப்புற குடிகள் மாதம் ரூ.10000 வருமானம் பெறுகின்றனர். 90 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடிகள் குறிப்பாக விவசாயிகள், கைவினைஞர்கள் அரசின் குறைந்தபட்ச கூலியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி வேளாண்மை மூலம் பெறும் வருமானம் 2003ல் ரூ.1060 ஆக இருந்தது 2013ல் ரூ.3844 ஆக அதிகரித்தது. இந்தியாவில் தற்போது 30 விழுக்காடு வேளாண் குடிகள் வண்டிக்காரர்கள், வணிகர்களிடம் கடன் பெற்றுள்ளனர் (Amit Basole 2017). இந்தியாவின் வேளாண்மையின் வழியாக பெரும் வருமானமானது 2004-05ல் ரூ.434160 கோடியாக இருந்தது 2011-12ல் ரூ.1144363 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் வேளாண் சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 9.27 கோடியிலிருந்து 7.82 கோடியாகவும், வேளாண் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை 16.61 கோடியிலிருந்து 16.62 கோடியாகவும் இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது (Ramesh Chand et al 2015).

மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பணவீக்கம், பன்னாட்டு நிதி சிக்கல், எரிபொருள் விலை ஏற்றம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிக வட்டி வீதத்தினால் முதலீட்டில் பின்னடைவு, ஊழல் போன்ற நிகழ்வுகள் காணப்பட்டது. அதே சமயம் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதார இயக்கம், தகவல் அறியும் சட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. (Anil Padmanabhan 2014). இந்திப் பொருளாதாரம் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரித்தது, பொருளாதார கட்டுப்பாடு இல்லாமல் தடையற்றதாக இருந்தது, வறுமை துல்லியமாக்கக் குறையத் தொடங்கியது, உள்கட்டமைப்புகள் அதிக வேகமெடுத்தது போன்றவை பல்வேறு தளங்களில் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றது (Maitreesh Ghatak et al 2014). ஒப்பீட்டு அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து பேரியல் பொருளாதார நிலைகளில் சிறந்ததாக இருந்தது.

1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக திறனை அடைவது என்ற இரட்டை இலக்கைக் கொண்டதாக இருந்தது. இதனைக் கட்டுப்பாடற்ற சந்தை வழியாக அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உற்பத்தித் திறன் அதிகமானது. 1991ல் பொருளாதாரச் சீர்திருத்தின பிந்தைய நிலைகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்தது. 2003-04க்கு பிந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் 10 விழுக்காட்டிற்குச் சற்றே குறைவான வளர்ச்சியினை கண்டது. ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் இந்த உயர் வளர்ச்சியினை முடிவிற்குக் கொண்டுவந்தது. இதனால் நீடித்த தொழிற் கொள்கை, வர்த்தகக் கொள்கை போன்றவை உற்பத்தித் துறையினைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சேவைத் துறை விரைந்த வளர்ச்சியினை பெற்றது. வேளாண் துறையினைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதுமட்டுமல்ல மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய தலா கையிருப்பானது குறைந்தது. இதற்கான காரணம், தாராளமயமாக்கப்பட்ட சந்தை மற்றும் தொழில், சேவைத் துறைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பதாகும்.

இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு உரியப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு, கிணறு போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகின்றனர். இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியானது நவீனத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் தொடர்புடையது. இதனை அதிக அளவில் உள்ள குறு, சிறு விவசாயிகளால் மேற்கொள்ளாதது வேளாண்மையின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அன்மைக் காலமாக பல்வேறு காரணங்களினால் மண் வளம் நிறைந்த பகுதியில்கூட உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. வேளாண்மை மீதான பொதுத் துறை முதலீடு குறைந்து காணப்படுவது போன்றவை வேளாண் துறையின் செயல்பாடுகளில் பிற்போக்கான நிலை உள்ளதற்கான காரணங்களாகக் கண்டறியப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் கட்ட ஆட்சியில் சிறப்பான பல அம்சங்கள் வேளாண்மையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது அதன் வளரச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னெடுப்பு குறைவாகவே இருந்தது. அளவுக்கு அதிக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கவனம் செலுத்தப்பட்டதால், வேளாண் விளைநிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான வாட்டர்லூ வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 9 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 1 பேரா.பு.அன்பழகன்




இந்தியாவில் 1960களிலே பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமரானதும் தொழில் தொடங்க உரிமம் பெறும் கட்டுப்பாடுகளையும், தொழில் முற்றுரிமை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அடுத்து பிரதமராகப் பதவி வகித்த ராஜீவ் காந்தி தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது, செலாவணி மாற்றில் இணக்கத் தன்மை, இறக்குமதி மீதான பகுதி அளவில் கட்டுப்பாடுகளை நீக்கியது எனப் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. போபர்ஸ் உழல் பிரச்சனை எழுந்ததன் காரணமாக ராஜீவ் காந்தியின் சீர்திருத்தங்ளுக்குப் போதுமான சாதகமான சூழல் காணப்படவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் நிலையற்ற அரசியல் மற்றும் குழப்ப நிலையினால் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவருடைய காலகட்டங்களில் முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வற்றிய நிலையிலிருந்தது. இதனை எதிர்கொள்ள அடுத்துப் பிரதமராகப் பதவி ஏற்ற நரசிம்ம ராவ் பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார். சீனா, 33 ஆண்டுகளுக்கு முன்பு (1978ல்) பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. சோவியத் யூனியன் 1980களின் மத்தியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால் இந்தியா இச்சீர்திருத்தங்களை மேற்கொள்ள காலதாமதமானது. மேற்கண்ட நாடுகள் போன்ற அரசியல் முறையை இந்தியா பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் சோசியலிச சித்தாந்த முறையை இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தது. ஒரு நிலையில் உலக நாடுகள் பலவும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை பின்பற்றத் தொடங்கியது. எனவே இந்தியா இந்த முறைக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 44 ஆண்டுகள் கடந்த நிலையில் சந்தைச் சீர்திருத்தங்கள் 1991ல் நடைமுறை படுத்தப்பட்டது.

மே 1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இத் தேர்தலில் காங்கிரஸ் 232 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரையில் பிரதம மந்திரியாக பதவியிலிருந்தார். நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றபோது இந்தியாவின் வெளிநாட்டு கடன் அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்தியாவின் கடன் 1991ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்து வந்த இருவாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. இதைத் தவிற்று வளைகுடா போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிக அளவிலிருந்தது. இந்தியாவில் நிலையற்ற அரசு நடைபெற்றதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கினர். இது மேலும் சிக்கலை உருவாக்கியது. எனவே இந்த நிலையினை எதிர்கொள்ள அனுபவம் மிக்கப் பொருளியல் அறிஞரான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது (அரசியல் ரீதியான சவால்களை நரசிம்ம ராவ் எதிர்கொண்டார்). இதன் அடிப்படையில் அதிக வெளிப்படைத்தன்மையும், குறைவான பொருளாதாரக் கட்டுப்பாடும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்மோகன் சிங் முன்னெடுத்தார். முதல் முயற்சியாக இரு முறை பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முக்கிய வெளிநாட்டுச் செலாவணியுடன் இந்தியப் பணத்தின் மதிப்பை 9 விழுக்காடு குறைப்பினை ஜூலை 1, 1991அன்றும், மேலும் 11 விழுக்காடு மதிப்புக்கு குறைப்பினை ஜூலை 3, 1991அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகரிப்பதாக இருந்தது. ஜூலை 4-18, 1991ல் நான்கு கட்டங்களாக இந்தியா, இங்கிலாந்து வங்கியில் தங்கத்தை அடைமானம் வைத்து 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வர்த்தக கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி உரிமம் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தேவையற்ற பொருட்கள் இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க பணமதிப்பினைக் குறைத்தது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்பட்டது. இறக்குமதிக்கான ஒதுக்கீட்டு அளவு (quotas) விலக்கிக்கொள்ளப்பட்டது, சுங்க வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்பட்டது. இதன்படி 51 விழுக்காடுவரை தங்குதடையற்ற முதலீட்டிற்கான ஒப்புதலுக்கு வழி வகுத்தது. இதுபோன்று உள்நாட்டில் உரிமம் பெறும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை விரிவாக்கம் ஊக்குவிக்கப்படவில்லை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு அளவிற்கு நிதிப் பற்றாக்குறையாக இருந்தது இதனைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிறுவன வரியை 45 விழுக்காடு அதிகரித்தது. சமையல் எரிவாயு உருளை, உரம், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, சர்க்கரைக்கு அளிக்கப்பட்ட மானியம் விலக்கிக் கொள்ளப்பட்டது (Ramya Nair 2021).

1991 ஜூலை புதிய தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தொழில் உரிமம் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு விதிவிலக்கு இருந்தது. முற்றுரிமை வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டது. பொதுத்துறை முற்றுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தனியார்த் துறை முற்றுரிமைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது (Ramya Nair 2021). 1991வது தொழிற் கொள்கையானது இந்தியாவில் எளிமையாக வாணிபம் செய்ய வழிவகை செய்தது. பணித்துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. காப்பீட்டுத் துறை, வங்கி, தகவல் தொடர்பு, வான்வழிப் போக்குவரத்து, போன்றவை மீது தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. அதே சமயம் தொழிலாளர்ச் சட்டங்கள் வளைந்து கொடுக்கும் நிலை உருவானது. அரசியல் ரீதியாகப் புதியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக்கா கட்சிக்கு உள்ளேயும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பு உருவானது. ஆனால் இவற்றைத் திறமையாக நரசிம்ம ராவ் எதிர்கொண்டார். சுருக்கமாகக் குறிப்பிட்டால் இந்து வளர்ச்சி வீதம் (3.5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள பொருளாதார வளர்ச்சி) என்ற நிலையினை 1950களிலிருந்து – 1970கள் வரை காணப்பட்டது. இதனை மீட்டெடுக்க 1980களில் வர்த்தக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது. 1990களில் சந்தைச் சார்பான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் 2000ஆம் ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது (Ramachandra Guha 2017).

அட்டவணை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)

ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தாலாவருமனாம்
1972-1982 3.5 1.2
1982-1992 5.2 3.0
1992-2002 6.0 3.9

Source: Ramachandra Guha (2017): “India After Gandhi,” Macmillan, New Delhi.

1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சரான மன்மோகன் சிங் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதற்கான முக்கியக் காரணம் சோவியத் ஒன்றியதில் மிக்கைல் கோர்பச்சோவ் கொண்டுவந்த பெரெஸ்த்ரோயிக்கா என்ற மறுசீரமைப்பு கொள்கையினைப் பின்பற்றி இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தில் 1991ன் படி 80 விழுக்காடு தேசிய உற்பத்தியில் தனியாரிடமிருந்து பெறப்படுகிறது ஆனால் இது சோவியத் ரஷ்யாவில் காணப்படவில்லை. எனவே இந்தியா தனி அடையாளக் கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய முதலீடுகள் தேவைப்பட்டது எனவே இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த MRTP சட்டம் 1969ல் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான அனுமதி பெறுவது நீக்கப்பட்டது. இந்தியா உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் நுழைவதற்காக சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, நடப்பு கணக்கு பரிமாற்றம், வர்த்தக நிலையினைத் தீர்மானிக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அந்நிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வருவதற்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. சந்தை அடிப்படையில் செலாவணி மாற்று செயல்படுத்தப்பட்டது, வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டது, தொழிற்சாலைகளுக்கு தேவையானதைத் தடையற்ற முறையில் இறக்குமதி செய்துகொள்ளுதல், தொழில் உரிமம் ரத்து செய்தல், பொதுத் துறையில் சீர்திருத்தம், மூலதனச் சந்தை மற்றும் நிதித் துறையில் சீர்திருத்தம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் அந்நிய முதலீடு பெறுவதிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுப்பதாகும்.

பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் விதிவிலக்காக ரயில்வே, துறைமுகம், பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் இருந்தது. நுகர்வோர்களுக்குச் சாத்தியப்படக்கூடிய நன்மைகள் கிடைக்கச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு சீர்திருத்தமானது உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க முற்றிலுமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பகுதியாக அந்நியச் செலாவணி பொதுச் சந்தையில் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. லாபம் தரும் மூலதன வரவு கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பின் கீழ் வந்த நடைமுறையில் வர்த்தக அளவு கட்டுப்பாட்டு முறை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தியா உலக அளவிலான தாராளப் பொருளாதார மயமாக்கலின் கொள்கையின் ஒரு பகுதியாகச் செயல்பட்டது. இதன் விளைவு இந்தியா மிகவும் திறனுடன் வேகமான வளர்ச்சியினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு, இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டெழுந்தது. 1991-92ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது 1992-93ல் 5.5 விழுக்காடு வளர்ச்சியினை எட்டியது, 1993-94ல் 6.2 விழுக்காடு என மேலும் அதிகரித்தது. எட்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியினை கண்டது. முதலீடு, தொழில் துறை, வேளாண்மை, பணித்துறை போன்றவை வளர்ச்சிப் பாதையில் சென்றது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97களுக்கிடையே ஆண்டுக்குச் சராசரியாக 3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. ஆனால் இது தொழில் மற்றும் பணித் துறையினை ஒப்பிடும் போது குறைவான அளவிற்கே பதிவாகியிருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே நேரடி அந்நியச் செலாவணி முதலீடானது 100 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1992-93க்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகக் கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே வறுமையின் அளவு 6 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்திருந்தது. 1993-1998ஆம் ஆண்டுகளுக்கிடையே சமூகச் செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் வேளாண் கூலியானது 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதே ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பானது ஆண்டுக்கு 6.3 மில்லியன் அதிகரித்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றபோது பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது ஆனால் பணக் கொள்கைகள் மற்றும் நிதி சீர்திருத்தங்களினால் 1996ல் 5 விழுக்காடாக்க குறைக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான மானியம் 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.14 மில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் பயிர்செய்யும் நிலங்கள் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் 2003-04 முதல் 2008-09 முடிய இந்தியா இதுவரைக் கண்டிராத வளர்ச்சியினை எட்டியது (10 விழுக்காடு). சேவைத்துறையானது மற்றத் துறைகளைக் காட்டிலும் அபரீதமான வளர்ச்சியினைக் கண்டது. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கொள்கையானது சேவைத்துறையினை வேகமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியது. 2008க்கு பின்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலிருந்தது. வேளாண்மைத் துறையினை பொருத்தமட்டில் ஏற்றத்தாழ்வுடனான வளர்ச்சி பதிவாகியிருந்தது. உணவு உறுதியானது மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உணவு கையிருப்பு குறைந்திருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையானது சேவை மற்றும் தொழிற் துறைகளுக்குச் சாதகமாகவும் வேளாண்மைத் துறைக்கு எதிராகவும் இருந்தது. அதே சமயம் வர்த்தக, தொழிற்கொள்கைகளின் சீர்திருத்தத்தினால் வர்த்தக நிலை மேம்படுத்துவதாகவும், இது வேளாண்மையினை நோக்கியதாக இருந்தது. இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையினை இந்தியா தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிலைகளில் பெருமளவிற்கு நன்மைகளை உண்டாக்கியிருந்தது. இதன் விளைவு வேளாண் வளர்ச்சியானது 1991லிருந்து சீரற்ற போக்கு காணப்படுகிறது. சராசரி உற்பத்தியானது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லை. உலகளவில் தலா உணவு நுகர்ச்சி அளவினைவிடக் குறைவாக உள்ளது. குடும்பங்களின் சராசரியாக உணவிற்குச் செலவிடுவது உலக அளவில் உள்ள பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கான காரணமாக உருவெடுத்தது. இது ஏழை மக்கள் அதிகமாக பாதிப்பிற்கு உண்டாக்கியது. தற்போது வருமையினைக் கணக்கிடுவதில் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் சமூகக் காரணிகளும் (கல்வி, சுகாதாரம்) கணக்கில் கொண்டு வறுமையினை அன்மைக் காலமாக அளவிடப்படுகிறது. இதனைக்கொண்டு பார்க்கும்போது, வறுமையில் வாழ்ந்தவர்கள் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும் ஏற்றத் தாழ்வுடன் உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்துகிறன. பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர். அதேசமயம், மக்களிடையே பெரும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது (Thomas Piketty). சில பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு 1991லிருந்து வறுமையானது அதிக அளவில் குறையத் தொடங்கியது என்று குறிப்பிடுகின்றனர்.

(தொடரும் ……)

Mugathirai Agatrappatta Savarkar Book By Samsul Islam சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர்

சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர்




“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினர் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.

இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

Mugathirai Agatrappatta Savarkar Book By Samsul Islam Bookreview By S. Veeramani நூல் அறிமுகம்: சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் - ச.வீரமணி

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

Mugathirai Agatrappatta Savarkar Book By Samsul Islam Bookreview By S. Veeramani நூல் அறிமுகம்: சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் - ச.வீரமணி

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு  வெளிவர விருக்கிறது.

இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.

Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு

புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன – வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது – சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் – டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு




Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு1991ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்திய மக்கள்தொகையின் பல்வேறு பிரிவினர் மீது வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த சீர்திருத்தங்களின் தன்மையையும், அவற்றால் உருவான கொள்கைகளையும் தொடர்ந்து இந்திய இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்து வந்துள்ளன. இந்த முப்பதாண்டு காலத்தில் அந்த புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், சீர்திருத்தங்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தொடர்புகள், இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் பரந்த தாக்கம் குறித்து ஃப்ரண்ட்லைனிடம் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி பேசினார்.Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருஉரையாடலின் பகுதிகள்:
புதிய தாராளமயச் சீர்திருத்தங்களை இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்கள். சீர்திருத்தங்களின் முப்பதாண்டு காலத்தை இப்போது பார்க்கும் போது இடதுசாரிகளின் அந்த விமர்சனம் நிரூபணமாகி இருப்பதாக நீங்கள் சொல்வீர்களா?

நிச்சயமாக! புதிய தாராளமயச் சீர்திருத்தங்களின் நோக்கம் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. அது மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மக்களை வறுமையில் ஆழ்த்துவது, வறுமை அதிகரிப்பு, அதிவேகமாக விரிவடைகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அனைத்து நாடுகளிலும் உள்நாட்டுத் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் கூடுதலான வீழ்ச்சி போன்றவற்றின் இழப்பில் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே இந்த சீர்திருத்தக் காலகட்டம் கவனத்தில் கொண்டிருந்ததை உலக மற்றும் இந்திய அளவில் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் காட்டுகின்றன. உலகப் பொருளாதார மந்தநிலை, அது மக்கள் வாழ்வின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை இப்போது பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற தொற்றுநோயால் இன்னும் அதிகமாக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் ‘மிகப் பெரிய அளவிற்கு பிரம்மாண்டமான உற்பத்தி, பரிவர்த்தனை வழிமுறைகளை உருவாக்கியுள்ள முதலாளித்துவம் தனது மந்திரங்களால் உருவாக்கப்பட்ட மாயஉலகின் சக்திகளை இனி ஒருபோதும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது நிற்கின்ற மந்திரவாதியைப் போன்றதாகும்’ என்று ஒருமுறை கூறியதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.

மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காகவும் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் நமது விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதன் பின்னணியில் முப்பதாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகின்ற இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களே இருக்கின்றன. அவை நம்மிடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இண்டிகோ தோட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பரான் சத்தியாகிரகம் குறித்த நினைவுகளை எழுப்புகின்றன. பெருநிறுவன ஆதரவு, சிறு உற்பத்தியின் அழிவு (மோடியின் ‘பணமதிப்பு நீக்கம்’), உணவுப் பற்றாக்குறை போன்றவை விரைவிலேயே பெருமளவிற்கு அதிகரிக்கப் போகின்றன.

இந்தியாவில் சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற புதிய தாராளமயக் கருத்தியல் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்ததாகவே சீர்திருத்தச் செயல்முறைகள் இருக்கின்றன. பொதுச்சொத்துக்கள், அனைத்து பொதுப்பயன்பாடுகள், சேவைகள், கனிம வளங்கள், மக்கள் மீது ‘பயனர் கட்டணம்’ சுமத்தப்படுதல் போன்ற தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின் மூலம் முதலாளித்துவத்தின் மிக மோசமான கொள்ளையடிக்கும் தன்மையை விலங்குணர்வுகளைக் கட்டவிழ்த்து விட்டதைப் போல முழுமையாகக் கட்டவிழ்த்து விட்டு லாபத்தைக் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதே இங்கே அதன் நோக்கமாக உள்ளது. உலக அளவிலும், இந்தியாவிலும் பெருநிறுவனங்களுக்கு மாபெரும் வரத்தை புதிய தாராளமயம் அளித்துள்ளது. அதன் வளர்ச்சிக்குப் பிறகு பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரி உலகளவில் 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு நிதியச் சரிவுக்குப் பிறகு, பெரும்பாலான கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வங்களை மூன்றாண்டுகளுக்குள் மீட்டெடுத்துக் கொண்டதுடன் 2018ஆம் ஆண்டுக்குள் அவற்றை இரட்டிப்பாக்கிக் கொண்டனர். அவர்களால் அவ்வாறு பெறப்பட்ட செல்வம் உற்பத்தியின் மூலமாகப் பெறப்பட்டதாக இல்லாமல் ஊகவணிகங்களின் மூலமாகவே அதிகரித்திருக்கிறது. உருவாகியுள்ள உலகளாவிய ஆழ்ந்த மந்தநிலை பங்குச் சந்தைகளை ஏன் எதிர்மறையாகப் பாதிக்கவில்லை என்பதை விளக்குகின்ற வகையிலேயே அது உள்ளது.

மறுபுறத்தில் பார்க்கும் போது, உலகளவில் வருமானம் ஈட்டுகின்றவர்களில் எண்பது சதவிகிதம் பேரால் தங்களுடைய 2008ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு இன்னும் திரும்ப இயலவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை, தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களால் 1979இல் அமெரிக்காவில் நான்கு தொழிலாளர்களில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்த தொழிற்சங்கங்கள் இன்றைக்கு பத்து பேரில் ஒருவரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு குறைந்து விட்டன.

ஜெஃப் பெசோஸின் விண்வெளிப் பயணத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் சமத்துவமின்மை பிரச்சாரத்திற்கான உலகளாவிய தலைவரான தீபக் சேவியர் ‘நாம் இப்போது வானளாவிய சமத்துவமின்மையை அடைந்துள்ளோம். பெசோஸ் பதினோரு நிமிட தனிப்பட்ட விண்வெளிப் பயணத்திற்கு தயாரான ஒவ்வொரு நிமிடமும் பதினோரு பேர் பசியால் இறந்திருக்கக்கூடும். இது மனிதர்களின் முட்டாள்தனமாக இருக்கிறதே தவிர, மனிதர்களின் சாதனையாக இருக்கவில்லை’ என்று கூறினார்.

நியாயமற்ற வரி முறைகள், பரிதாபகரமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் பணக்காரர்களுக்கு முட்டுக் கொடுக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சுமார் 1.8 லட்சம் கோடி டாலர் என்ற அளவிற்கு அமெரிக்க கோடீஸ்வரர்கள் பணக்காரர்களாகியுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தால் மட்டும் ஒன்பது புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருதொற்றுநோய் வந்ததிலிருந்து உலகப் பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதற்காக பதினெட்டே மாதங்களில் பதினோரு லட்சம் கோடி டாலர் தொகை செலவிடப்பட்டது – அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 83.4 கோடி டாலர் மத்திய வங்கிகளால் செலவிடப்பட்டன. அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை, பசி, பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் இவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ள தொகையே இந்த தலைமுறையின் மிகப்பெரிய பங்குச் சந்தை தூண்டுதலுக்கும் காரணமாகியுள்ளது. அந்தக் கோடீஸ்வரர்கள் அனைவரும் அவ்வாறாகத் தூண்டி விடப்பட்ட பங்குச் சந்தையில் ஈடுபட்டனர். ஆழ்ந்த பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இவ்வாறான பங்குச் சந்தை ஏற்றம் என்பது ஒரு குமிழியைப் போன்றதாகும். அந்தக் குமிழியால் முடிவில்லாமல் விரிவடைய முடியாது. அது வெடித்துச் சிதறும் போது பொருளாதாரம் மேலும் சீரழிந்து, பல நாடுகள் நாசமான நிலைக்குத் தள்ளி விடப்படக்கூடும்.

நேருவியன் சகாப்தம் எதிர் நிகழ்காலம்
1980கள் வரை நேருவியன் காலத்து பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரிகளும் விமர்சித்து வந்துள்ளனர். பொருளாதாரக் கொள்கைகள் மீது உங்களுடைய தற்போதைய விமர்சனம் முந்தைய விமர்சனங்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது?

Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருஆம்! நேருவியன் காலத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறோம். இந்தியாவில் சுதந்திரத்திற்கான மிகப்பெரிய போராட்டத்தின் போது மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்யும் வகையிலேயே பெருமுதலாளித்துவத்தின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுக் கூட்டணியாக அமைந்திருந்த இந்திய ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருளாதார வளர்ச்சிப் பாதை அமைந்திருந்தது. அந்தக் காரணத்தாலேயே எங்களின் விமர்சனம் அதுபோன்று அமைந்தது. வறுமை, பசி, வேலையின்மை, கல்வியறிவின்மை ஆகியவற்றை அகற்றுவதற்குப் பதிலாக அவையனைத்தும் அதிகரிக்கவே செய்தன. ‘சோசலிச மாதிரியிலான சமூகம்’ என்பதாகவே நேருவியன் சகாப்தத்தின் பிரச்சாரங்களும், பேச்சுகளும் இருந்து வந்தன. ஆயினும் அப்போது நடைமுறையில் முதலாளித்துவப் பாதையே வளர்த்தெடுக்கப்பட்டது. லாபத்தைப் பெறுவதற்காக மனித சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே முன்னேற முடியும் என்பதாகவே முதலாளித்துவத்தின் வரையறை இருக்கிறது.

தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மீது வைக்கப்படுகின்ற இப்போதைய விமர்சனம் முற்றிலும் வித்தியாசமானது. நேருவியன் காலத்தில் என்னவெல்லாம் நமக்குச் சாதகமாகச் சாதிக்கப்பட்டனவோ, அவையனைத்தும் இப்போது மிகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அப்போது மேற்கொள்ளப்பட்ட திட்டக்குழு, ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறையை நிறுவி அவற்றிற்கு நமது பொருளாதாரத்தில் ‘உயர்நிலை’ கொடுக்க முயல்வது போன்ற செயல்பாடுகளே சுதந்திரமான பொருளாதார அடித்தளத்தை இந்தியாவிற்கு அமைத்துக் கொடுத்தன. மோடி அரசாங்கம் பின்பற்றி வருகின்ற தீவிரமான புதிய தாராளமயக் கொள்கைகள் ஈவிரக்கமின்றி அந்த அடிப்படைத்தளத்தை முழுமையாகச் சிதைத்து வருகின்றன. தொழில்துறை மீது மட்டும் நின்றுவிடாமல் அந்த தாக்குதல் விவசாயத்தையும் இப்போது ஆக்கிரமித்துள்ளது. விவசாயம் புதிய வேளாண் சட்டங்களால் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பொதுத்துறைக்கு இருந்த பங்கு தனியார் முதலாளித்துவத் துறை வளர்ந்து முன்னேறுவதற்கே இறுதியில் பலனளித்தது என்ற போதிலும் மேற்கத்திய மூலதனத்தின் பொருளாதாரப் பினாமியாக ஆவதிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கின்ற அரணாக அது செயல்படவே செய்தது. இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களையும், நமது தேசியச் சொத்துக்களையும் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய புரிதலில் இருந்துதான் இடதுசாரிகளின் பொதுத்துறைகளுக்கான இன்றைய ஆதரவு வந்திருக்கின்றது.

இந்தியா ஒளிர்கிறதா அல்லது துயரப்படுகிறதா
பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் ஏராளமான வருமானமும், செல்வமும் உருவாகியுள்ளது என்று நம்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். உழைக்கும் மக்களின் பொருளாதார வறுமையின் அடிப்படையில் பார்க்கும் போது அந்தக் கருத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது இல்லையா?Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருபுதிய தாராளமயச் சீர்திருத்தங்களின் விளைவாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிவேகமாக விரிவாக்கம் கண்டுள்ளன. ‘ஒளிரும் இந்தியா’ துயரத்தில் தொடர்ந்து ஆழ்ந்திருக்கின்ற இந்தியாவின் தோள்களிலேயே தொடர்ந்து சவாரி செய்து வருகிறது. ‘ஒளிரும் இந்தியா’வின் ஒளிர்வும், ‘துயரமான இந்தியா’வின் சீரழிவும் தலைகீழான தொடர்பில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள நூறு கோடீஸ்வரர்கள் 2020 மார்ச் மாதத்திலிருந்து தங்கள் செல்வத்தை ரூ.12,97,822 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். அந்த நூறு பேரிடம் இதுபோன்று சேர்ந்துள்ள தொகையான 13.8 கோடி ரூபாய் இந்திய ஏழைமக்களுக்கு தலா ரூ.94,045க்கான காசோலையை வழங்கிடப் போதுமான அளவில் உள்ளது.

‘தொற்றுநோய்க் காலத்தில் ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானியால் சம்பாதிக்க முடிந்ததை திறன் எதுவுமற்ற தொழிலாளி ஒருவர் செய்து முடிப்பதற்கு பத்தாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். அதாவது முகேஷ் அம்பானி ஒரு நொடியில் செய்ததைச் செய்து முடிக்க அந்த தொழிலாளிக்கு மூன்று ஆண்டுகள் ஆகும்’ என்று ஆக்ஸ்பாமின் சமீபத்திய இந்திய துணை அறிக்கையான ‘அசமத்துவ வைரஸ்’ (The Inequality Virus) குறிப்பிடுகிறது.Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருமறுபுறத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 1,70,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பொதுமுடக்கத்தின் போது இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முப்பத்தைந்து சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் அவர்களுடைய சொத்து தொன்னூறு சதவிகிதம் அதிகரித்து இப்போது 42290 கோடி டாலர் என்ற அளவிலே உள்ளது. உண்மையில் தொற்றுநோய்களின் போது இந்தியாவின் முதல் பதினோரு கோடீஸ்வரர்களிடம் அதிகரித்துள்ள சொத்தை பத்து ஆண்டுகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அல்லது சுகாதார அமைச்சகத்தின் பட்ஜெட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேல்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் 93.4 சதவிகிதம் பேருக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்திற்கான பகிரப்படாத ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை கீழ்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் ஆறு சதவீதத்தினரால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடிகின்றது. இந்திய மக்களில் 59.6 சதவிகிதம் பேர் ஒரே அறையில் அல்லது அதற்கும் குறைவான இடத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்கச் செலவினங்களின் பங்கின் அடிப்படையில் உலகின் மிகக்குறைந்த சுகாதார பட்ஜெட்டில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டிருக்கிறது. தொற்றுநோய்களின் போது அதிகரித்த இந்தியாவின் முதல் பதினோரு கோடீஸ்வரர்களின் சொத்திற்கு வெறுமனே ஒரு சதவீத வரி மட்டும் விதிக்கப்பட்டிருந்தால்கூட, அதிலிருந்து கிடைத்திருக்கும் தொகை ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கி வருகின்ற ஜன் ஔஷதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற ஒதுக்கீட்டை 140 மடங்கு உயர்த்துவதற்குப் போதுமான அளவிலே இருந்திருக்கும்.

சீர்திருத்தக் காலம் இந்தியாவில் மக்களை மையமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் லாபத்தை மையமாகக் கொண்டதாக இருந்ததால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்று நம்மிடம் அறிவுறுத்துகிறார். உண்மையில் செல்வம் என்பது உழைக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பைப் பணமாக்குவதைத் தவிர வேறாக இல்லை எனும் போது மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் அதனை உருவாக்கியவர்களைத்தான் நாம் மதிக்க வேண்டியுள்ளது.

மோடி அரசாங்கம் திட்டக்குழுவை மட்டும் ஒழித்திருக்கவில்லை. அது மக்களின் வறுமை நிலைகளை அளவிடுவதற்காக சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பின்பற்றி வந்துள்ள அடிப்படை ஊட்டச்சத்து விதிமுறைகளையும் கைவிட்டிருக்கிறது. அந்த ஊட்டச்சத்து விதிமுறை கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் 2,100 கலோரிகள் தேவை என நிர்ணயித்திருந்தது. அந்த விதிமுறை அளவுகளின்படி 1993-94இல் இந்தியாவில் கிராமப்புறங்களில் 58 சதவிகிதமானவர்களும், நகர்ப்புறத்தில் 57 சதவிகிதமானவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாக தேசிய மாதிரி கணக்கெடுப்பின்கீழ் [National Sample Survey] நடத்தப்பட்ட விரிவான மாதிரி கணக்கெடுப்பு காட்டுகிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான அதேபோன்ற அடுத்த கணக்கெடுப்பு முறையே 68 மற்றும் 65 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாகக் காட்டியுள்ளது. அடுத்த விரிவான மாதிரி கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளில் இருந்த உண்மைகள் அனைத்தும் மோடி அரசால் மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டன. உலகம் போற்றுகின்ற நமது தரவுத்தள நிறுவனங்களையும் இந்த அரசு அழித்து வருகிறது. ஊடகங்களில் கசிந்துள்ள தரவுகள் கிராமப்புற இந்தியாவில் தனிநபர் நுகர்வுச் செலவில் (உணவு மட்டும் அல்ல) ஒன்பது சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. தொற்றுநோய் தாக்கப்படுவதற்கு முன்பே கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவில் நிலவுகின்ற வறுமை இதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிலே அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.

இன்றைய உலகளாவிய பசி குறியீடு ‘தீவிரமான பிரிவில்’ இந்தியாவை உள்ளடக்கி வைத்திருக்கிறது. மக்களிடையே குறிப்பாக குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் மற்றும் பிற குறியீடுகள் அபாயகரமாக அதிகரித்திருப்பதை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு – 5 (NFHS-5) காட்டுகிறது. சமீபத்தில் வெளியான உலகளாவிய குறியீட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை இரண்டு தரவரிசைகள் குறைந்திருக்கின்றது. கடந்த ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து 13.4 கோடி என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அதிகரித்த உலக ஏழைகளின் எண்ணிக்கையில் 57.3 சதவிகிதம் பங்கு இந்தியாவிடம் உள்ளது. நம்முடைய நடுத்தர வர்க்கத்தினரில் 59.3 சதவிகிதம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது இடதுசாரிகளின் அழுத்தம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாக சீர்திருத்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. புதிய தாராளமயத்திலிருந்து குறிப்பிடத்தக்க விலகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகள் பிரதிபலித்தனவா?

பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறுத்தி வைத்திருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவை மட்டுமே அளித்த போது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் [CMP] புதிய தாராளமய சீர்திருத்த செயல்முறை தொடர்வதற்கான திட்டம் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்ததால்தான் அவ்வாறு நடந்தது. மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், அத்தகைய குடியரசின் அஸ்திவாரங்களைப் பலவீனப்படுத்துகின்ற, குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற வகையில் வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையிலும் மட்டுமே இடதுசாரிகளின் அந்த ஆதரவு இருந்தது.

ஆம் – இடதுசாரிகளின் அழுத்தத்தாலேயே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் செயல்திட்டம் மிகவும் முக்கியமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமை, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம், தகவல் அறியும் உரிமை, கல்விக்கான உரிமை போன்றவற்றை அடக்கியதாக இருந்தது. அப்போது அவ்வாறு செய்யப்படவில்லையெனில் அது போன்ற நடவடிக்கைகள் ஒருநாளும் நடைமுறைக்கு வந்திருக்காது.

இந்திய அரசியலமைப்பு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்தியா வளரும்போது அதுபோன்ற உரிமைகளும், உத்தரவாதங்களும் விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கின்றனர். வேலை வாய்ப்பு உரிமை என்பது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் மக்களின் வேலை வாய்ப்புரிமையை உறுதி செய்தது. அதற்கென்று சில வரம்புகள் இருந்த போதிலும், ஆளும் வர்க்கங்களிடம் அதைச் செயல்படுத்த வேண்டாமென்ற முயற்சிகள் இருந்த போதிலும் அதனால் கிராமப்புற வேலைக்கான உரிமையை விரிவாக்கம் செய்ய முடிந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிக்கான சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே ​​அதேபோன்று நகர்ப்புற வேலையுறுதியையும் அமல்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கல்வியும் அதேபோல அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும், கல்விக்கான உரிமை நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும்கூட, குறைந்தபட்ச நீட்டிப்பாக அது இருந்திருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், உத்தரவாதங்களுக்கான விரிவாக்கங்களாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டம் போன்றவை இருந்தன. அந்த வகையில் பார்க்கும் போது இந்த சட்டங்கள் அனைத்தும் இடதுசாரிகளின் அழுத்தம் இல்லாமல் புதிய தாராளமயத்தின் கீழ் மிகச் சாதாரணமாக வர முடியாத சட்டங்களே ஆகும்.

புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது எவ்வாறாக இருந்தன? அதற்கும் சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருபெருநிறுவன நலன்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் வெறித்தனமான கூட்டணி 2014ஆம் ஆண்டு வெளிப்பட்டது. தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, பொதுத்துறையை பெருமளவிற்குத் தனியார்மயமாக்குவது, பொதுப் பயன்பாடுகள், கனிம வளங்கள் ஆகியவற்றின் மூலம் லாபத்தைப் பெருக்குவதைத் தீவிரமாகப் பின்பற்றுவது என்பதாக அது இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அது சலுகைசார் முதலாளித்துவத்தையும், அரசியல் ஊழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள், மனித உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களும் சேர்ந்து கொண்டுள்ளன. கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் தேசவிரோதமாகக் கருதி, மக்களை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் தேசத்துரோகம் செய்ததற்காக கண்மூடித்தனமாக கைது செய்வது போன்ற செயல்முறைகள் அரசியலமைப்பையும், மக்களுக்கு அது வழங்குகின்ற உத்தரவாதங்களையும் அவமதிப்பதாகவே இருக்கின்றன.Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருஇதுபோன்ற செயல்பாடுகள் இந்தியாவை ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ கொண்ட நாடு என்று உலகம் அறிவிக்கும் வகையில் வழிவகுத்துக் கொடுத்துள்ளன. உலகப் பொருளாதார சுதந்திரக் குறியீடு இந்தியாவை 105ஆவது இடத்தில் வைத்துள்ளது, கடந்த ஆண்டு இருந்த 79ஆம் இடத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 94ஆம் இடத்திலிருந்து 111ஆவது இடத்திற்குப் பின்னோக்கி நகர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் கடந்த ஆண்டு 129ஆம் இடத்திலிருந்த இந்தியா 131ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிக துயரத்துடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற எதேச்சாதிகாரம் ‘ஆட்சியுடன் பெருநிறுவனங்களின் இணைவு’ என்ற முசோலினியின் பாசிசத்தின் அச்சுறுத்தும் வரையறைக்கு நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது கோவிட்-19 தொற்றால் அந்தப் புதிய தாராளமயமே மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிற நிலைமையில் அதன் எதிர்காலம் மற்றும் அதற்கான மாற்று என்னவாக இருக்கும்?

கோவிட் தொற்றுநோய், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான நமது சுகாதாரப் பராமரிப்பின் போதாமையால் ஏற்பட்டுள்ள அவலங்கள் என்று அனைத்தும் மிகக் கடுமையாக இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சிக்கன நடவடிக்கைகள் துவங்கி ஊதியக் குறைப்புக்கள், வேலையிழப்புகள் மற்றும் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சிறு உற்பத்தியை அழித்தல் என்று மக்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலம் லாபங்களை அதிகரித்துக் கொண்டுள்ள உலகளாவிய புதிய தாராளமயப் பாதையின் ஒரு பகுதியாகவே இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலை இருக்கிறது. பொருளாதார நடவடிக்கையின் அனைத்து வழிகளையும் அது ஆக்கிரமித்துள்ளது. பெருநிறுவனங்களின் லாபத்திற்காக இந்திய விவசாயத்தையே இப்போது அழித்து வருவது, ஒப்பந்த விவசாயம் மற்றும் அதன் விளைவான உணவுப் பற்றாக்குறை போன்றவை அதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் புதிய தாராளமய சீர்திருத்தங்களின் திவால்நிலை உலகளவில் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்த தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை, ‘திறமையற்ற, வளர்ச்சிக்குப் பாதகமான நிலையை சமத்துவமின்மை எட்டியுள்ளது’ என்று முடித்திருக்கிறது. ‘சமத்துவமின்மையின் விலை’ என்ற தன்னுடைய புத்தகத்தில், மேல்தட்டில் உள்ள முதல் ஒரு சதவிகிதம் மற்றும் மற்ற தொன்னூற்றியொன்பது சதவிகித மக்களைப் பற்றி ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் பேசுகிறார். ‘நமது பொருளாதார வளர்ச்சி சரியாக அளவிடப்படுமானால் அது நமது சமூகம் ஆழமாகப் பிரிக்கப்படுவதால் அடையக்கூடியதை விட அதிகமாகவே இருக்கும்’ என்று அவர் முடித்திருக்கிறார்.Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருபுதிய தாராளமயத்திற்கு வெறுப்பை ஊட்டுகின்ற சலுகைத் தொகுப்புகளை பெருமளவிற்கு அரசு செலவினங்களின் மூலம் அனைத்து முன்னேறிய நாடுகளும் அறிவித்துள்ளன. உள்நாட்டுத் தேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதையே அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, ஆனாலும்….” என்று கூறி சமீபத்தில் தன்னுடைய உரையைத் துவங்கியிருக்கிறார்.

ஆனாலும் தன்னுடைய கூட்டாளிகள் வாங்கிய மிகப் பெருமளவில் செலுத்தப்படாத கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கும் மோடி அரசு அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதற்கு மறுக்கிறது. அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் மக்கள் மீதே அதிகச் சுமைகளைச் சுமத்தி வருகிறது. உள்நாட்டு தேவைகளைக் குறைத்து, பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரிக்கின்றது.

இந்த சீர்திருத்தப் பாதையைத் தீவிரமாகச் சுயபரிசோதனை செய்து, நமக்கான முன்னுரிமைகளை நாம் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்: விவசாயம், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்தல், பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக நமக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொது முதலீடுகளை வேலை வாய்ப்பையும், உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்கும் வகையில் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி 1990களின் தொடக்கத்தில் வகுக்கப்பட்ட புதிய தாராளமயப் பாதையிலே தொடர்ந்து நகர்ந்து வருகிறது. புதிய தாராளமய சீர்திருத்தங்கள் பற்றிய அந்தக் கட்சியின் பார்வை வேறு எந்த கட்சியையும் விட தீவிரமானதா?

எப்போதுமே இரட்டை நாக்கில்தான் பாஜக பேசி வருகிறது. அது சொல்வதும், செய்வதும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகவே இருந்து வருகின்றன. தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக் கொண்டு ஒரு காலத்தில் சுதேசி போன்ற முழக்கங்களை எழுப்பியும், எதிர்க்கட்சியாக இருந்தபோது உலக வர்த்தக அமைப்பை எதிர்த்தும் பேசி வந்த அந்தக் கட்சியின் செயல்பாடுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முற்றிலும் தலைகீழாக மாறி விட்டன.

குறிப்பாக 2014 முதல் புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகவே பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதுபோன்ற தீவிரம் முன்பு அதனிடம் காணப்படவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் [ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்] அமைப்பின் அரசியல் அங்கமாகும்.

இந்தியாவில் வெறித்தனமான சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வை நிறுவுவதற்கான தனது அரசியல் திட்டத்தையே இப்போதும் ஆர்எஸ்எஸ் பின்பற்றி வருகிறது. இந்திய சுதந்திரத்தின் போது அதை அடையத் தவறி விட்டதால், அரசியலமைப்பால் நிறுவப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசிற்கு குழிபறித்து, அதனுடைய இடத்தில் பாசிச ‘ஹிந்துத்வா ராஷ்டிரா’வை எழுப்புவதற்கு அது தொடர்ந்து முயன்று வருகிறது.
Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருஉலகமயமாக்கப்பட்ட இந்த உலகில் அத்தகைய நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கு சர்வதேச ஆதரவு நிச்சயம் தேவைப்படும். குறைந்தபட்சம் சர்வதேச சமூகத்தின் தீவிர எதிர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான சிறந்த வழி, புதிய தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் தீவிரமாகச் செயல்படுத்துவதே. உலகளாவிய மற்றும் உள்நாட்டு மூலதனம், பெருநிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையில் புதிய பகுதிகளை வழங்குவதன் மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவே முயல்கிறது.

வலதுபுறத் திருப்பம்
புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் உலக அரசியலில் அதன் அணுகுமுறை, பங்கின் மீது என்னவாக இருக்கும்?

உலகளாவிய அரசியல் வலதுசாரித் திருப்பம் என்பது நீண்டகால உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டதாகும். லாப அதிகரிப்பு மட்டங்களில் ஏற்பட்டுள்ள மந்தநிலை உலகளாவிய முதலாளித்துவத்தின் நலன்களை எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் வளர்ந்து வருகின்ற தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக உணர்வுகளைத் தூண்டி இனவெறி, இனப்பாரபட்சம், வெறுப்பைப் பரப்புதல், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை நசுக்குதல் போன்ற சீர்குலைக்கும் போக்குகளை இந்த வலதுசாரி அரசியல் திருப்பம் கொண்டு வந்துள்ளது.
Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருஇந்தியாவில் இத்தகைய வலதுசாரித் திருப்பம் வகுப்புவாத துருவமுனைப்பைக் கூர்மைப்படுத்தப்படுவதன் மூலமும், ஆர்எஸ்எஸ்சின் பாசிசத் திட்டங்களை முன்னெடுக்க உதவும் மத சிறுபான்மையினருக்கு எதிரான நச்சு வெறுப்பு, வன்முறை பிரச்சாரங்களின் மூலமும் வெளிப்படுகின்றது. இயல்பாகவே அது பாசிசம் நோக்கிய சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது.
Corporate-Communal Alliance Formed by New Liberal Reforms - Interview with Sitaram Yechury Article by T.K.Rajalakshmi in tamil translated by Tha.Chandraguru புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன - வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது - சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் - டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுருகுறிப்பாக 2014ஆம் ஆண்டு உருவான பெருநிறுவன-வகுப்புவாத உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அது சலுகைசார் முதலாளித்துவத்தின் மிக மோசமான வெளிப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது. சலுகைசார் பெருநிறுவனங்கள் மிகச் சாதாரணமாக தங்கள் செல்வத்தைக் குவிப்பதைக் காண முடிகிறது. இந்தியாவின் தேசியச் சொத்துக்களை பெருமளவில் கொள்ளையடிப்பதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டம், கட்டுப்பாடற்ற புதிய தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த திட்டத்தின் பகுதியாக, ஆர்எஸ்எஸ் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாகவே இருக்கிறது.

இத்தகைய கட்டுப்பாடற்ற புதிய தாராளமயக் கொள்கை சர்வதேச உறவுகளில் இந்தியாவிற்கான பங்கை சர்வதேச நிதி மூலதனத்தின் துணையுறுப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமியாக உறுதிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் வளரும் நாடுகளின் தலைமையாகவும், அணிசேரா இயக்கத்தின் சாம்பியனாகவும் இருந்த இந்தியாவின் பெருமை இப்போது வெறுமனே வரலாற்றுப் பதிவுகள் என்ற நிலைமைக்கு இறங்கி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்ற இந்த பெருநிறுவன-வகுப்புவாத இணைப்பு அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதிலிருந்து இந்தியாவை வெறித்தனமான சகிப்புத் தன்மையற்ற ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வாக உருமாற்றம் செய்வதற்கான ஒட்டுமொத்த தொகுப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

https://frontline.thehindu.com/cover-story/interview-sitaram-yechury-neoliberalism-economic-reforms-at-30-a-corporate-communal-nexus-has-emerged/article36288863.ece

நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு