Posted inPoetry
மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி
குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும்
தம்பதியினரிடம் விசேஷம் இல்லையா
என்று கேட்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
நரை ஏற்பட்டு நடை தளர்ந்த
காரணத்தால்
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் மூப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
ஏதோ ஒரு காரணத்தால்
இணையைப் பிரிந்து வாழும்
ஆணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
யாரோ ஒருவர் வியர்வை சிந்தி
நட்டு வைத்த செடி மரமாகி
அது வெட்டி வீழ்த்தப்படுவதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
வகைவகையாய் தின்று
சுவை சலித்து மீந்து விட்டதை
குப்பையில் கொட்டி கவிழ்ப்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
இல்லையே என்று கைநீட்டி
ஒருவர் கேட்கும் போது
இல்லையென்ற தலையசைப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
மரணம் இன்று கூட வரலாமென
தெரியாமல் ஒவ்வொரு நாளும்
பொருளுக்காய் ஓடும் மனதிற்குள்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது
– ஜெயஸ்ரீ பாலாஜி