Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 5 தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்தாய்ப்பால் ஒரு சிறந்த ஹெல்த் பாலிசி 

பூமியைத் தாண்டி அந்த ஆகாசத்திற்கும் அப்பாலிருக்கிற நிலவைக் கைக்காட்டி தன் பிள்ளைக்குச் சோறூட்டுவதாக அந்த நிலாவிற்கும் ஒருபிடி சோற்றைப் பிசைந்து ஊட்டுகிற தாய்மார்களை இன்றும்கூட நம் மொட்டை மாடி இரவுகளில் காண முடியும். பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு சோற்றைப் பிசைந்து பிசைந்து நிலவிற்கு ஒரு வாயும், பிள்ளைக்கு ஒரு வாயுமாக ஊட்டி வளர்ப்பதைப் பார்க்கையில் அம்மாக்களின் ஒரு கவளச் சோற்றை உண்டுதான் நிலவும்கூட நம் பால்யத்தோடு சேர்ந்தே வளர்ந்திருக்குமோ என்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது. அப்படியென்றால் தாய்ப்பால் அருந்தி வளருகிற நம் பிள்ளைகளும்கூட நிலவின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தவர்கள் தானோ என்று நினைக்கையில் உள்ளுக்குள் பரவசமாகக் கிளர்ந்து எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

குகைக்குள் வாழ்ந்த ஆதித்தாய் தன் மார்பிலே பிள்ளையைப் போட்டபடி இரவும் பகலுமாக நிலவைப் பற்றிய கதைகளாகச் சொல்லிச் சொல்லியே தாய்ப்பால் புகட்டிய அதே நிலவிற்குத் தானே இன்று நீங்களும் நானுமாக சேர்ந்து கொண்டு அதே பாசத்தோடு பாலூட்டிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்த நிலவின் வெண்ணிற ஒளிப் பாய்ச்சல்கூட பல்லாயிரம் ஆண்டுகளாக தாய்மார்களின் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த இந்த ஊட்டத்தினால் தான் இருக்குமோ என்கிற ஆச்சரியம்கூட எனக்கு உண்டு. இதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில், அடடே! இப்படித் தானே நீங்களும் நானுமாக அந்த நிலவையும் அம்மாவையும் போல எங்கோ இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் இந்தக் கடிதத்தின் வழியே அக்கறையோடு அன்பையும் பரிமாறிக் கொள்கிறோம் என்கிற போது கூடுதல் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அன்புத் தாய்மார்களே,
பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்பட்டாத பெற்றோர்களும் இருக்க முடியுமா? எதிர்காலத்தில் உதவக்கூடும் என்று ஏதாவதொரு பாலிசியையோ, ஒரு ஏலச் சீட்டையோ அவசரத்திற்குப் போட்டு வைத்திருக்கிற தாய்மார்களை இன்றுகூட எங்கும் பார்க்க முடியும். ஒருவகையில் அதுவும்கூட அவரவர் வருமானத்தையும், ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசத்தையும் பொருத்துத் தானே அமைகிறது.

ஆனால் அதேசமயம் ஏழை-பணக்காரன், கருப்பு-சிவப்பு, குட்டை-நெட்டை என்கிற எந்த பாரபட்சமுமின்றி ஒரு அட்சயப் பாத்திரத்தைப் போல குழந்தைகள் குடிக்கக் குடிக்கக் குறைவின்றி சுரக்கிற தாய்ப்பாலைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். ஆம், அத்தகைய மகத்துவம் வாய்ந்த தாய்ப்பாலினைப் புகட்டுவதன் வழியே ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆகச்சிறந்த “ஹெல்த் பாலிசியை” போட்டு வைத்திருப்பதைப் பற்றித் தான் நாம் இக்கட்டுரை முழுக்கப் பார்க்கப் போகிறோம்.

ஆம், அருமைச் சகோதரிகளே! தாய்ப்பால் கொடுப்பதன் வழியே குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, அவர்களின் ஆயுட்காலம் முழுவதிலும் உடல் ஆரோக்கியத்திற்காக தாய்ப்பால் எவ்வாறு பக்கபலமாக இருக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களைத் தான் நாம் இப்போது தெளிந்து கொள்ளப் போகிறோம். இக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் நம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட சிறந்ததொரு ஹெல்த் பாலிசியென வேறு எதுவுமே இருக்க முடியாது என்கிற முடிவிற்கு நாம் ஒவ்வொருவருமே நிச்சயமாக வந்துவிட முடியும்.

பற்கள் மற்றும் தாடை எலும்புகளின் வளர்ச்சி
தொண்டைக்குள் மூச்சுக்குழாயும் உணவுக்குழாயும் இரண்டு கிளையாகப் பிரிகிற இடமொன்று இருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அங்குதான் சுவாசிக்கிற மூச்சுக்காற்றையும், விழுங்குகிற உணவையும் பிரித்தனுப்புகிற பரபரப்பான சுங்கச்சாவடி வேலை நடக்கிறது. தொண்டைக்குள்ளிருக்கும் இந்தச் சுங்கச்சாவடியில் கதவைத் திறந்தும் மூடியும் தான் நம்முடைய சுவாசமும், உணவு விழுங்குதலும் எவ்வித சிக்கலின்றி நடந்து கொண்டேயிருக்கிறது. இப்படியான இடத்தில் கொஞ்சம் வேலை பிசகினாலும் நம் உயிருக்கே உலை வைத்த மாதிரிதான்.

நம்முடைய குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கையில் இந்தக் கதவானது மூச்சுக்குழல் பக்கமாக மூடிக் கொள்வதால் சவைத்துக் குடித்த தாய்ப்பாலானது திறந்திருக்கிற உணவுக்குழாய் வழியாக நழுவி வயிற்றுக்குள்ளே சென்றுவிடுகிறது. அதேசமயம் அவர்கள் பாலைக் குடித்துக் குடித்து இடையிடையே பெருமூச்சு விடுகையில் இந்தக் கதவு உணவுக்குழாய் பக்கமாக மூடிக் கொண்டு மூச்சுக்குழல் பகுதியை திறந்து கொள்ளச் செய்வதன் மூலம் சுவாசம் நடைபெற வழிசெய்கிறது. இத்தகைய தன்னிச்சையாக கதவைத் திறந்து மூடுகிற சிக்கலான வேலையைத் தொண்டையில் இருக்கிற எபிகிலாட்டிஸ் என்கிற மெல்லிய தகடு போன்ற எலும்பு தான் செய்கிறது என்பது பெரிய ஆச்சரியமான விசயமல்லவா.

Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 5 தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்படியாக உறிஞ்சுதல்(1)-விழுங்குதல்(2)-மூச்சுவிடுதல்(3) என்கிற வரிசையில் மீண்டும் மீண்டும் 1..2..3.. 1..2..3.. என்கிற வாய்ப்பாட்டில் தாய்பால் குடிக்கிற ஒவ்வொரு குழந்தையும் தாய்ப்பால் குடிக்கவும் பின் மூச்சுவிடுவதுமான ஒரு நுட்பமான வேலைப்பாட்டில் பசியாறிக் கொள்கிறார்கள். இத்தகைய தாய்ப்பால் புகட்டுகிற சூத்திரத்தில் ஏதேனும் சிக்கல் வருகிற பட்சத்தில் தான் மூச்சுக்குழல் வழியே செல்ல வேண்டிய காற்று உணவுக் குழாயிற்குள் சென்று வயிறு உப்பிசம் கொள்ளுவதும், உணவுக்குழாயினுள் செல்ல வேண்டிய தாய்ப்பால் மூச்சுக்குழாயினுள் புகுந்து புரையேறுவதுமாக ஆபத்தாகிவிடுகிறது. அதுசரி, இதற்கும் தாய்பால் புகட்டுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே யோசிக்கிறீர்கள்?

தாய்ப்பாலைக் குடிப்பதற்காக உதடுகள், அண்ணம், நாக்கு, முகத்தினுடைய மெல்லிய தசைகள் மற்றும் தாடை எலும்புகள் ஆகிய அத்தனையும் ஒருசேர இசை நயத்தோடு வேலை செய்தாக வேண்டும். முகத்திலுள்ள தசைகளின் சுருங்கி விரிகின்ற இசைவும், தாடை எலும்பு மூட்டுகளினுடைய முன்னும் பின்னுமான அசைவும் ஒத்திசைவாக இயங்கும் போதுதான் குழந்தையால் தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடிக்கவே முடியும்.

குழந்தைகள் மார்புக் காம்பினை மேல் அண்ணத்தில் அழுந்த வைத்து அதன் மீது நாவினைச் சுழற்றிச் சுழற்றி பாலினை உறிஞ்சுவதால் அவர்களுடைய மேல்தாடை எலும்புகள் மெருகேறுகின்றன. அதனோடு முன்னும் பின்னுமாக அசைந்து கொடுக்கிற கீழ்த்தாடை எலும்புகளும் சேர்ந்து நன்றாகவே வளர்ச்சியடையத் துவங்குகிறது. தாடை எலும்புகளோடு சேர்ந்த பற்களுமே அதனது பள்ளத்திற்குள்ளாக நன்றாகப் பதுங்கி வலுவுள்ளதாக முட்டி முளைக்கின்றன. குழந்தைகளின் பற்களுமே பிறைநிலா வடிவில் வரிசையாக, அழகான ஒழுங்கமைவுடன் பொருத்தமாய் அமையப் பெருகிறது. அதனுடைய எனாமல் மற்றும் ஈறுகளுமே ஆரோக்கியமாக வளர்ந்து பிற்காலத்தில் பல் சொத்தை ஏற்படுவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

தாய்பால் குடிக்கும் போது கீழ்தாடையுடன் மண்டையோடு இணைந்த அதனது தாடை மூட்டுப் பகுதியுமே முன்னும் பின்னுமாக சீராக அசைந்து கொடுப்பதால் அதனோடு தொடர்புடைய காது மற்றும் காது குழலும் நன்றாக வளர்ச்சியடைய உதவுகிறது. நீங்கள் வேண்டுமானால் வாயினை நன்றாக அகலமாகத் திறந்தும், மூடியும் காதுகளுக்கு முன்னால் ஏற்படும் அசைவுகளை விரல் வைத்து கவனித்துப் பாருங்களேன். மேற்கண்ட தாய்ப்பால் பருகுகிற குழந்தைகளின் தாடை அசைவினால் தான் காதுகளினுடைய வளர்ச்சியும் நன்றாகப் பரிணாமம் அடைகின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். இப்படியான நுட்பமான அசைவினால் மட்டுமே மிகச் சரியான தாடை எலும்புகள் மற்றும் காதுகளின் வளர்ச்சிகள் சாத்தியமாகின்றன.

வாய்ப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் ஒவ்வொன்றும் அதற்கேற்ப அசைந்து கொடுத்து நன்றாக உறிஞ்சிக் கொள்ள உதவுவதால் குழந்தைகளின் மென்று தின்னக்கூடிய மெல்லிய தசைகளும் வலுப்பெறுகின்றன. இதனால் முகமும் மெருகேறி அழகான தோற்றத்தைப் பெறுகிறது. தாய்பால் குடித்தலின் போது குழந்தைகள் உபயோகப்படுத்துகிற தசைகள் தான் அவர்களின் மூச்சு விடுதல் மற்றும் உணவு விழுங்குதலுக்குமான அவசியமான பணிகளையும் செய்கிறது. ஆக, தாய்ப்பால் குடித்தலென்பது குழந்தைகளுக்கு எப்பேர்ப்பட்ட அத்தியாவசியமான விசயம் என்பதை நாம் முதலில் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் டப்பாக்களில் பசும்பாலை அடைத்துப் புகட்டும் தாய்மார்களையும், அதனை ஆவலின்றி வெறித்தபடியே குடிக்கும் குழந்தைகளையும் கொஞ்சம் உற்றுப் பாருங்களேன்.

அம்மாக்கள், டப்பாக்களில் பசும் பாலினை அடைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் மேலே சொல்லியதைப் போல அதற்குரிய தசைகளையோ, எலும்பு மூட்டுகளினுடைய நுட்பமான அசைவுகளையோ பயன்படுத்துவதில்லை. தாய்மார்களும்கூட குழந்தைகள் தாங்களாகவே உறிஞ்சிக் குடிப்பதற்கான வாய்ப்பினைத் தராமல் பால் நிரம்பிய டப்பாவின் பிளாஸ்டிக் காம்பினை வாயிற்குள் திணித்து ஒரேயடியாக வாயில் ஊற்றி விடுகிறார்களே! இதனால் குழந்தைகள் எவ்வித உழைப்புமின்றி சொகுசாக கொடுப்பதை வாயில் வாங்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறார்கள். இப்படியிருக்கையில் குழந்தைகளின் மென்று விழுங்குகிற தசைகளோ, நாக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளின் தசைகளோ எப்படி நன்றாக வளர்ச்சி அடையும் என்பதை நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

மேலும் புட்டிப்பாலைக் குடித்து வளருகிற குழந்தைகள் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான தசைகளை பயன்படுத்துவதால் அத்தியாவசியமான தசைகளின் வளர்ச்சியோ மெல்ல மெல்ல நடக்கிறது. இந்தக் குழறுபடியால் அவர்களின் நாக்கும்கூட தடித்துப் பருமனாகிவிடுகிறது. இதனால் குழந்தைகள் தூங்குகையில் இந்த பெருத்த நாக்கும் தொண்டையின் பின்பக்கமாக சரிந்து விழுந்து பின்னாளில் குறட்டை விடுபவர்களாக, மூச்சுத்திணறி தூக்கம் கெட்டு நடுராத்திரியில் அடிக்கடி எழுபவர்களாக வாழ நேரிடுவது.

புட்டிப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு மார்புக் காம்பினை மேல் அண்ணத்தில் அழுந்த குடிக்க முடியாததால் அவர்களின் அண்ணம் சற்றுக் கோணலாகவும், பல்வரிசை ஒன்றோடொன்று இடுக்கியுமாக அமைந்து விடுகிறது. இத்தகைய குறுகிய வாய்ப்பகுதி அமைப்பினால் குழந்தைகள் உறங்கும் போது மூச்சு விடச் சிரமப்பட்டு “ஸ்லீப் அப்னியா” போன்ற தூக்க நோயினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பார்த்தீர்களா, ஒரு சின்ன விஷயம், குழந்தைகளைப் போய் எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது என்று!

பால் டப்பாக்களில் குடிப்பதும்கூட குழந்தைகள் விரலைச் சப்பிக் கொள்வதைப் போன்ற செயற்கையான செயல் தானே! இப்படிக் குடிப்பதால் பற்கள் முன்னே தள்ளியபடி தெத்துப் பற்களாகவும், கீழ்த்தாடையோ பின்நோக்கிச் சென்று கோணல் வாயாகவும் தோற்றமளிக்கக்கூடும். இதனால் குழந்தைகளும் முக இலட்சணமில்லாத தோற்றத்தோடு எதிர்காலத்திலே காட்சியளிக்கவும் கூடும் அல்லவா. இதற்கு அப்புறமும் புட்டிப்பால் தான் கொடுக்கப் போகிறேன் என்றால் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் தான் படாதபாடு பட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு முற்றிலுமாக புட்டிப் பாலைத் தவிர்த்துவிடுங்கள், தாய்மார்களே!

தாய்ப்பால் கொடுப்பதால் நீங்கள் மட்டும் அல்ல, உங்களது குழந்தைகளும் அழகானவர்களாக, முக லட்சணமுள்ளவர்களாக மாறுகிறார்கள் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா!
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களிலிருந்து பாதுகாப்பு
வீட்டினைச் சுத்தம் செய்கிற போது அச்.. அச் என்று தும்மிக் கொண்டும், குழந்தைகள் குளிரூட்டப்பட்ட ஏதாவதொன்றைச் சாப்பிடும் போது உர்ர்.. உர்ர் என்று முக்கினை உறிஞ்சிக் கொண்டும் இருப்பதுகூட ஒருவகையில் அலர்ஜி வகையராக்களைச் சேர்ந்தவைதான்.

தன் பிள்ளைக்குச் சளித் தொந்தரவு இருக்கிறது என்று மருத்துவமனைக்கு அழைத்து வருகிற தாய்மார்களுக்கெல்லாம் அது பெரும்பாலும் தடுமன் அல்லது அலர்ஜி தான் என்றுத் தெரிவதில்லை. நாமும்கூட அன்றடம் ஏதாவதொரு அலர்ஜியால் பாதிக்கப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறோம். உலக அலர்ஜி நிறுவனத்தின் அறிக்கையின்படி 2050 ல் உலகத்திலுள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏதாவதொரு அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்கிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இப்படி அலர்ஜியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனது வீரியம் கூடுதலாகி தீவிரமான நோய்கள் வந்து வதைத்தால் அவர்களின் நிலைமையோ படுமோசம் தான். ஏன், இன்றெல்லாம் பச்சைக் குழந்தைகளுக்கும்கூட ஆஸ்துமா போன்ற இளைப்பு நோய்கள் வந்து அவர்களின் அன்றாட வாழ்வையே துயரமாக்கி வைத்திருப்பதை நாமும் அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

அதுசரி, அலர்ஜி என்றால் என்ன? அது ஏன் வருகிறது? இது குழந்தைகளுக்கெல்லாம் போய் வருமா? என்கிற கேள்விகள் நமக்கு இயல்பாகவே எழுகிறது அல்லவா. அதற்கு குழந்தைகள் பிறந்தவுடனே அச்சச்சோ, எனக்கு தாய்ப்பால் இல்லியே! புள்ளையோட பசிக்கு இப்பவே பசும்பாலை ஆத்திக் குடுத்தாகனுமே! என்று மாற்றுப் பாலுக்கு குழந்தைகளைத் தவறாக பழக்குவதே காரணம்.

நிறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்கூட முழுவதுமாக உறுப்புகள் வளர்ச்சியடைந்து பிறப்பதில்லை. ஏனென்றால் அத்தகைய உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு வெளியுலக தொடர்பும் அவசியமாயிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்படி முழுவதும் வளர்ச்சியடையாத, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் முற்றிலும் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கக்கூடிய பாதுகாப்பையே நம்பி இருக்கிற குழந்தைகளுக்கு புற உலகிலிருந்து ஏதாவதொரு உடலிற்கு ஒத்துப் போகாத ஒன்றைக் கொடுத்தோமென்றால் அது ஒவ்வாமை நோயில் கொண்டு போய் தான் விட்டுவிடும்.

குழந்தையின் முதல் ஆறு மாத காலங்களில் தாய்ப்பாலினைத் தவிர வேறு ஏதேனும் விலங்குகளின் பாலினையோ, ஏன் ஒவ்வாத தண்ணீரைக் கொடுத்தாலும்கூட அது தீவிரமான அலர்ஜியை உண்டாக்கிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கவே செய்கிறது. அதேசமயம் ஆறு மாதத்திற்குப் பின்பாக குழந்தைகள் தங்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதால் பெரும்பாலும் அதற்குப் பின்பாக அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதில்லை.

முதல் ஆறு மாதத்திற்குள் மாட்டுப் பாலைப் புகட்டுகையில் அதிலுள்ள கேஸின், லேக்ட்டோ அல்புமின், குளோபுலின் போன்ற எளிதில் செரிமானமாகாத புரதங்கள் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்கிவிடுகின்றன. இதனால் பிள்ளையைப் பெற்ற மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்க முடியாமல் ஒவ்வொரு தாய்மார்களும் அவர்கள் பிறந்த நேரத்திலிருந்து சளி, இளைப்பு என்று ஒவ்வொன்றுக்குமாக மருத்துவமனைக்கு தூக்கி அலைந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.

இதைப் பற்றிய புரிதலே இல்லாமல் தான் பெற்றோர்களும் “என்னோட பிள்ளைக்குப் போய் இந்தப் பொல்லாத ஆஸ்துமா நோய் வந்துருச்சே. இப்படி ராத்திரி பகலுமா கெடந்து பிள்ளையப் போட்டுப் பாடாய் படுத்துதே. என் வயித்துல பொறந்த பிள்ளைக்கு போய் இப்படியொரு நோயா? எங்க வம்சத்துல இப்படியொரு நோய் யாருக்குமே வந்தது இல்லியே” என்று புலம்பியபடி இருக்கிறார்கள்.

ஆனால் தங்களது குழந்தைகளுக்கு முழுவதுமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிற தாய்மார்களெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. எந்தவொரு தேசத்திலும், எந்தவொரு பாலூட்டியிலும் தாய்ப்பால் குடித்து குழந்தைக்கு ஒவ்வாமை வந்ததாக சரித்திரமே இல்லை. மேலும் தாய்ப்பால் என்பதும்கூட இயற்கையாக உங்களுடைய குழந்தைக்காகவென்றே சுரப்பது தானே. அதே போல பசும்பால் என்பதும் அதனுடைய கன்றுக்குட்டிக்கென்று சுரப்பது அல்லவா. அதனால் தான் தாய்ப்பாலை உங்களது பிள்ளைக்குக் கொடுங்கள். பசும்பாலை அதனுடைய கன்றுக்குட்டி குடித்துக் கொள்ளட்டும்.

தாய்ப்பாலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்திகளெல்லாம் வெளியிலிருந்து வரும் கிருமிகளை உடலுக்குள் நுழையவிடாமல் பாதுகாத்து அதனால் ஏற்படும் அலர்ஜியைத் தடுத்தும்விடுகின்றன. தாய்ப்பாலில் இருக்கக்கூடிய CD14 என்கிற மூலக்கூறும் குழந்தைகளினுடைய அலர்ஜி பாதுகாப்பில் கூடுதலாக முக்கியப் பங்காற்றுகிறது. 

ஆகவேதான் தாய்மார்களே! உங்களது குழந்தைகள் இப்போதும், எப்போதும் எந்த நோய் நொடியுமின்றி ஆயுள் முழுக்க ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுமென்றால் தாய்ப்பால் ஒன்று மட்டுமே சிறந்த வழியென்பதை எப்போதும் மறக்கவே செய்யாதீர்கள்.

குடல் அலர்ஜி நோய்களுக்கு குட்பை சொல்லி விடுங்கள்
பொதுவாக உடலுக்குள் புகுந்து தொல்லை தருகிற கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகளை நமது இரத்தத்திலே உருவாக்கி, சண்டையிட்டு நம் உடலைப் பாதுகாக்கும். ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு எல்லா உறுப்புகளுமே ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட அவர்களால் சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடிவதில்லை. ஆகையால் தான் அம்மாவின் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள இரத்தத்திலிருந்து தாய்ப்பாலைத் தருவித்து குழந்தைகளுக்கு நாம் புகட்ட வேண்டியிருக்கிறது.

அப்படித் தாய்ப்பாலைக் குடித்து வளருகிற பிள்ளைகள்கூட அம்மாவினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வைத்து நோய்க்கிருமிகளுக்கு எதிராக சண்டையிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால் எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியுமில்லாத புட்டிப்பாலை மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளெல்லாம் பாவம் என்ன செய்வார்களோ. மேலும் அவர்களுக்கு இத்தகைய வைரஸ் கிருமித்தொற்றுகளால் உண்டாகிற நோயிலிருந்து மீண்டு வருவதும்கூட மிகச் சிரமமாகவும், சித்ரவதையாகவும் தான் இருக்கும்.

குடலுக்குள் நுழைந்து அதன் மேற்புற அடுக்கு போல படிகிற தாய்ப்பாலினால் அதற்கு ஒருவித பாதுகாப்பு வளையம் கிடைத்துவிடுகிறது. இதனால் உணவு மூலமாக வருகிற அலர்ஜி நோய்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுவிடுகிறார்கள். தாய்ப்பாலிலுள்ள சர்க்கரை மூலக்கூறுகளால் குடலில் செரிமானம் உட்பட ஏனைய நல்லது செய்யக்கூடிய லேக்டோபேசில்லஸ் போன்ற பாக்டீரியாக்களும் பல்கிப் பெருகுகின்றன. இதன் கூடவே நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி மூலக்கூறுகளான ஆண்டிபாடிகளும் தாய்ப்பால் வழியே கிடைத்துவிடுகின்றன. இதனால் குடல் பகுதிகள் ஆரோக்கியத்துடன் முதிர்ச்சியடைவதோடு தேவையில்லாத தொற்றுகளில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதேசமயத்தில் இப்படியான எந்த விதமான பாதுகாப்பு வேலியும் புட்டிப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு கிடைப்பதேயில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இப்படி உணவின் மூலமாக, பசும்பால் மூலமாக உண்டாகக்கூடிய அலர்ஜியை தவிர்ப்பதன் மூலமாக தாய்ப்பால் மட்டுமே ஆரம்பத்திலிருந்து குடித்து வளருகிற குழந்தைகளுக்கு அல்செரேட்டிவ் கோலைட்டிஸ் (Ulcerative colitis), க்ரோன்ஸ் நோய் (Crohn’s disease), நெக்ரோடைசிங் எண்டிரோ கோலைட்டிஸ் (Necrotizing enterocolitis) போன்ற குடல் அலர்ஜி நோய்களிலிருந்து இயல்பாகவே பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது என்பதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியான விசயம் தானே.

கூர்மையடையும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் பார்வைத்திறன்
எல்லா அம்மாக்களுக்குமே தன்னுடைய பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும், விரைவாக கற்றுக் கொள்ளும் திறனோடு அறிவாளியாகவும் சுறுசுறுப்பாகவும் வளர வேண்டும், படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதான ஆசைகள் நிறையவே இருக்கும். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதுமா தாய்மார்களே! அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா? என்றவுடன், ஏன் செய்யவில்லை, நாங்கள் தான் பிறந்தவுடனே எங்கள் பிள்ளைகளை பிளே ஸ்கூல், இன்டர்நேஷனல் ஸ்கூல் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து பணத்தை கொட்டிப் படிக்க வைத்துவிடுகிறோமே! அப்புறம் என்ன? என்று உடனே குழப்பிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதெல்லாம் ஒரு விசயமே இல்லை. உங்களது செல்லக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய வயதில் சரியாக கொடுத்தீர்களா, இல்லையா என்பதே இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். ஆம் என்றால், உங்களது சுட்டிப்பிள்ளையின் எதிர்காலத்திற்கான நல்லதொரு அஸ்திவாரதை போட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களுக்கு நீங்களே சபாஸ் போட்டுக் கொள்ளுங்கள்.

தாய்ப்பாலில் இருக்கின்ற சூப்பர் கொழுப்பு அமிலங்கள் (DHA), டாரின் போன்ற அமினோ அமிலங்கள், வைட்டமின் பி-6, கேலக்டோஸ் சர்க்கரை போன்றவையெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை நன்றாக ஊக்குவிக்கிறன. இதனால் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளினுடைய மூளையின் வளர்ச்சியானது புட்டிப்பால் குடித்து வளருபவர்களைவிட 20-30% அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இத்தகைய கொழுப்பு அமிலங்கள் மூளையின் மெல்லிய நரம்புகளைச் சுற்றிலும் மையலின் என்கிற மேலடுக்கினை நெய்கிறது. இந்த மையலின் உறைகள்தான் நரம்புகளின் வழியே கொண்டு செல்லப்படுகின்ற மின்னூட்டத் தகவல்களை மின்னல் வேகத்தில் மூளையின் பாகங்களுக்கு அடுத்தடுத்து எடுத்துச் செல்ல உதவுகிறது. மூளை நரம்புகளும்கூட இடது, வலது என்ற புரிதலுடன் பின்னிப் பிணைந்து அதிநுட்பமான வலைதளம் போன்ற அமைப்பினை அங்கே உருவாக்குகின்றன. இதனால் குழந்தையின் உணர்வுகளெல்லம் உடனுக்குடனே மூளைக்கும் மற்ற பாகங்களுக்கும் இடையே வேகவேகமாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. இத்தகைய விரைவான வலைப் பின்னல்களால் குழந்தைகளுமே எளிதில் ஐம்புலன்களால் பகுத்துணரும் திறனுள்ளவர்களாக வளருகிறார்கள். இவையெல்லாமே தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளையில் வெகு விரைவாகவே நடக்கத் துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தாய்ப்பாலில் இருக்கின்ற ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சிக் காரணிகளினுடைய ஊக்குவிப்பின் வழியே பின்பக்க மூளையின் அங்கமான பார்வை நரம்புகளின் வலைப் பின்னல்களும் நன்கு வளர்ச்சியடைந்து குழந்தைகளின் பார்வைத் திறனும் மேம்படுகிறது. குழந்தைகளும்கூட விரைவிலே உங்களது முகபாவனைகளைப் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அசைவுகளுக்கான அர்த்தங்களையும் விரைவிலேயே புரிந்து கொண்டு, நீங்கள் செய்வதைப் போலவே மீண்டும் செய்து காட்டி எல்லோரையும் சிரிக்க வைக்கிறார்கள்.

மேலும் இத்தகைய குழந்தைகள் சீக்கிரமாகவே தங்களது மொழித்திறனை வளர்த்துக் கொள்பவர்களாகவும், அதீத நினைவாற்றல் உள்ளவர்களாகவும், நல் சிந்தனை கொண்டவர்களாகவும் வளர்ந்து எதிர்காலத்தில் பெரும் சாதனையாளர்களாகவும் உருவாகின்றார்கள்.
உயிர்க்கொல்லி நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுகிற தாய்மார்களாகிய நாமும்கூட ஒரு காலத்தில் குழந்தையாய் இருக்கிற போது நம்முடைய அம்மாவின் தாய்ப்பாலைக் குடித்து அவர்களின் இரத்தத்திலிருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் வழியே யாசகம் பெற்றுக் கொண்டு தான் வளர்ந்தே வந்திருப்போம். அதேபோல இன்றுவரையிலும் நாம் எந்தெந்த கிருமித் தொற்றுகளினால் பாதிக்கப்படுகிறோமோ அதற்கு எதிராகவுமே நமது உடல் கூடுதலான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி வைத்திருக்கும் அல்லவா. இப்படியாக பல்லாண்டு காலமாக நோய்களுக்கு எதிராக வழிவழியாக போராடிப் போராடியே நம் உடலில் தேக்கி வைத்திருக்கிற அத்தனை நோய் எதிர்ப்பு சக்திகளையுமே நாம் இப்போது பிரசவித்தவுடன் நம் பிள்ளைக்குத் தாய்ப்பால் வழியாக கொடுக்கப் போகிறோம் என்பது எத்தகைய மகத்தான விசயம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

தாய்மார்களே! குழந்தைகளைப் பிரசவிக்கின்ற நாள் வரையிலும் நாம் என்னென்ன நோய்களையெல்லாம் எதிர்த்து சண்டையிட்டு மீண்டு வந்திருக்கிறோமோ, அந்தந்த நோய்களுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்திகளையெல்லாம் இப்போது தாய்ப்பால் வழியாக நம் பிள்ளைக்கு ஊட்டிக் கொண்டு இருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காலத்திலும்கூட நமக்கு ஏதேனும் புதியதாக நோய் வந்தாலும் அதற்கு எதிராக இரத்தத்தில் உருவாகிற நோய் எதிர்ப்புச் சக்திகளையுமே நமது உடலானது அதனை தாய்ப்பால் வழியாக சுடச்சுட குழந்தைக்கு அனுப்பிவிடுகிறது. அதனால் தான் அம்மாவிற்கு காய்ச்சல் அடித்தால்கூட பிள்ளைக்குப் பாலூட்டுவதை நிறுத்திவிடக் கூடாது என்று மருத்துவர்களும் சதா அறிவுறுத்திபடியே இருக்கிறார்கள்.

தாய்ப்பாலானது பழைய நோய்களுக்கெதிரான எதிர்ப்புச் சக்தியை மட்டுமல்ல, புத்தம் புதியதாக வருகிற நோய்களுக்கு எதிராகவும் எதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. இப்படி அந்தந்த காலத்திற்கேற்ப நோய்களுக்கெதிரான எதிர்ப்பு சக்தியாக தன்னை உருவாக்கிக் கொண்டு நம் பிள்ளைகளைப் பாதுகாக்கிற தாய்ப்பாலைப் போலான ஒன்றை நாம் எந்தக் கடையிலாவது வாங்கி வந்து பிள்ளைக்குக் கொடுத்துவிட முடியுமா என்பதை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்.

தாய்ப்பால் வழியே குழந்தைக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் குழந்தைகளின் உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்திகளை உற்பத்தி செய்யக்கூடிய முக்கியமான உறுப்புகளையும் தூண்டிவிட்டு அதனையும் நோய்களுக்கு எதிரான போராட்டதில் பங்கு பெறச் செய்கிறது. இப்படியாக ஒரே தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு இரட்டை லாபம் என்பது மிகவும் நல்ல விசயம் தானே!

தாய்ப்பால் குடித்தவுடனேயே அது இரைப்பையினுள் சென்று, அங்கேயே எளிதில் செரிமானமாகி, உடனே மளமளவென குடலுக்குள்ளாகச் சென்றுவிடுகிறது. தாய்ப்பால் மூலம் உருவாகிற நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானமான மூலப் பொருட்களை உடைத்து எளிதாக குடல் உறிஞ்சிக் கொள்வதற்கு ஏதுவான உதவிகளையும் செய்கிறது.

ஆனால், புட்டிப்பால் கொடுத்தவுடனே அந்தக் குழந்தையின் முகத்தைக் கவனியுங்களேன். பால் அப்படியே வாயிலே திரண்டு நிற்கும். வயிற்றிலே அது எளிதில் செரிமானமாக முடியாமல் திணறிக் கொண்டு வயிறு உப்பிசம் போடும். இதனால் வயிறும்கூட ஆரோக்கியமற்றுக் கெட்டுப் போய் வயிற்றுப் போக்கும் ஏற்படுவதுண்டு. இப்படித் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கினால் குழந்தைகளின் உடல் நலமும் பாழ்படுகிறது. உடலில் எஞ்சியிருக்கிற சக்தியெல்லாம் இக்குழந்தைகள் இழந்துவிடுவதால் உடலின் வளர்ச்சியும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக தாய்ப்பால் குடித்து வளருகிற பிள்ளைகளோ நல்ல உடல் ஆரோக்கியத்தோடு படு சுறுசுறுப்பாகவும் வளருகிறார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தாய்ப்பாலிலுள்ள ஹார்மோன்கள் நுரையீரலின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. அத்தகைய நுரையீரலுக்கு நோயினை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான பரம சக்தியை அருள்பாளிக்கிறது. இதனால் தாய்ப்பால் குடித்து வளருகிற குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று நோய்களான நிமோனியா போன்றவற்றிலிருந்து ஆரம்பத்திலேயே பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது.

இப்படியாக குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, நிமோனியா, காதில் சீழ் வடிதல் போன்றவற்றிலிருந்து தாய்ப்பால் நம் பிள்ளையைப் பொன்னைப் போல பொத்திப் பாதுகாக்கிறது. ஆக, தாய்ப்பாலானது எவ்வளவு தாய்மையோடும் இறைத்தன்மையோடும் நம் பிள்ளைகளோடு நடந்து கொள்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாவது நாம் புட்டிப்பால் கொடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் தாய்மார்களே!

ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பு
குழந்தைகள் பசித்து அழுகையில் தாய்ப்பால் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கடைகடையாக அலையத் தேவையில்லை. என்ன விலை என்று பேரம் பேசி வாங்கவும் வேண்டியதில்லை. அச்சச்சோ, பால்டப்பா காலியாகப் போகுதே! என்று முன்பே இருப்பு பார்த்து, காலாவதி தேதி சரிபார்த்து சேமித்து வைக்கவும் அவசியல்லை.

பால் பவுடரைப் போலவெல்லாம் இது நல்லதா கெட்டதா, கொடுக்கலாமா வேண்டாமா, எவ்வளவு கொடுக்கலாம், எத்தனை முறை கொடுக்கலாம் என்றெல்லாம் யோசித்து சந்தேகத்தோடு தாய்ப்பாலைப் புகட்ட வேண்டிய அவசியமில்லையே! குழந்தையை நீங்கள் மார்பிலே போட்டவுடன் தாய்ப்பால் நேரம் காலமென்று பாராமல் அளவில்லாமல் சுரக்கிறதல்லவா. பிள்ளைகளும் தங்களுக்குத் தேவையானவற்றைக் குடித்து ஓய்வெடுத்து நன்றாகப் பசியாறிக் கொள்கிறார்கள். இப்படித் தேவைப்படுகிற போதெல்லாம் வயிறு நிறைய தாய்ப்பால் குடித்துத் துயில் கொள்ளும் பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து போன்ற குறைபாடுகளெல்லாம் சுத்தமாக வருவதேயில்லை.

Thaipal Enum Jeevanathi Dr Idangar Pavalan WebSeries 5 தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் அனைத்து விதமான சத்துகளோடு பிள்ளைகளின் தேவையறிந்தே சுரக்கிறது. அது எந்த பேதமுமின்றி அனைத்து தாய்மார்களுக்கும் அளவில்லாமல் சுரக்கிறது. தாய்மார்களே, தாய்ப்பால் ஒன்றும் பசும்பாலா, லாக்டோஜனா என்று எதையாவது ஒன்றை விருப்பத் தேர்வு செய்து கொடுக்கக்கூடிய ஒரு பொருளல்ல. அது ஒன்று மட்டும் தான் குழந்தைகளுக்கென இருக்கிற ஒரே தேர்வு என்பதையும் நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

தாய்ப்பாலில் இருக்கிற ஊட்டச் சத்துகளெல்லாம் வானத்து நட்சத்திரங்களைப் போல கணக்கிடவே முடியாத அளவிற்கு எக்கச்சக்கமாகய் இருக்கின்றன. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிற பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து, புரதச்சத்து போன்ற எந்தக் குறைபாடுகளும் வருவதேயில்லை. ஆறு மாதம் வரையிலும் திகட்டத் திகட்ட தாய்ப்பாலும் அதற்குப் பின்பாக அதோடு சேர்த்து மசித்த உணவுமாக பிள்ளைக்குக் கொடுத்து வளர்க்கையில் மராஸ்மஸ், குவாசியோக்கர் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடைய நோய்கள் எதுவுமே குழந்தைகளை அண்டுவதில்லை.

மேலும் தாய்ப்பாலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்திகளோ பிள்ளைகளை அடிக்கடி நோய்வாய்ப்படாமல் பாதுகாப்பதால் அந்நோய்களின் வழியே அவர்களின் சத்துகள் வீணாக்கப்படுவதைத் தவிர்த்து அதனால் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளையும் தடுத்துவிடுகிறது.

ஆக, நம் குழந்தைகள் பிறந்த தருணத்திலிருந்து தாய்ப்பாலை மட்டுமே முழுக்க முழுக்க புகட்டி வளர்க்கையில் குழந்தைகளின் உலகத்தில் இருக்கிற இந்த மாதிரியான தீவிரமான நோய்களையெல்லாம் ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட முடியும். அதுமட்டுமில்லை தாய்மார்களே, குழந்தைகள் பிறந்தவுடனே அவர்களது முதல் நாள் வாழ்வினை உங்களது தாய்ப்பாலைக் கொடுத்து துவக்குவதை விடவா அற்புதமான விசயம் இருக்கப் போகிறது, சொல்லுங்கள் பார்ப்போம்?

மர்மமான நோயிலிருந்து பாதுகாப்பு
சிட்ஸ் (SIDS-Sudden Infant Death Syndrome) என்று மிகச் சுருக்கமாக குறிக்கப்படுகிற, அதேசமயம் பச்சிளம் குழந்தைகளுக்கென்றே ஏற்படுகிற இந்த மர்மமான நோயினைப் பற்றி நம் பலருக்கும் பரிட்சயம் இல்லை தான். ஆனாலும் அந்தக் காலத்தில் வயக்காட்டில் வேலை பார்த்துக் கொண்டே பிள்ளை அழுகிறானா இல்லையா என்று பார்த்துப் பார்த்துப் பாலூட்டி வளர்க்கிற சமயத்தில் பிள்ளைகள் தொட்டிலிலிருந்து எதுவுமே சத்தம் எழுப்பவில்லையே என்று போய்ப் பார்த்தால் மூச்சுப் பேச்சற்றுக் கிடப்பார்கள். என்ன, ஏதென்று காரணமறிந்து வைத்தியம் செய்யும் முன்பே உயிருக்கு ஆபத்தாகிவிடும் மோசமான சூழலை அந்தக் காலத்தில் மட்டுமல்ல இன்றைய காலகட்டத்திலும்கூட குழந்தைகளும் அப்பெற்றோர்களும் சந்தித்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.

அதாவது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே காரணம் இன்னதென்று இல்லாமல் சட்டென்று மூச்சித்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடுகிற மோசமான சூழலுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறது இத்தகைய நோய். பெரும்பாலும் தூக்கக் கலக்கத்தில் புரண்டபடி குப்புற படுத்துக் கொள்கிற குழந்தைகளுக்கே இப்பிரச்சனைகள் வருகின்றன என்பதால் குழந்தைகளின் முதுகுப்பக்கம் தரையைப் பார்த்த வண்ணமாகவே பார்த்து உறங்க வைக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் புட்டிப்பாலின்றி தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிற குழந்தைகளுக்கு இந்த சிட்ஸ் என்கிற சிக்கலான நோயிலிருந்து பாதுகாப்பு கிடைத்துவிடுவதாக மருத்துவ ஆய்வுகள் விளக்குகின்றன.

அம்மாவின் அருகிலேயே இருக்கும் குழந்தைகள் தான் நன்றாக தூங்கு எழுகிறார்கள் என்றும், அவர்கள் தான் விரைவிலேயே இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்றும் முன்பே பார்த்தோம். பெரியவர்களாகிய நமக்கு தூக்கத்திலே மூச்சுத் திணறல் வருகிறதென்றால் திடுதிப்பென்று நடுராத்திரியில் எழுந்து சாய்மானமாக உட்கார்ந்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம் அல்லவா. ஆனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும் போது உடனே விழித்துக் கொண்டு அழுது நம்மை எழுப்புகிற அளவிற்கு உணர்வு ஏற்பட வேண்டுமே. அப்படியான தெளிவினை தாய்மார்களாகிய நீங்கள் அவர்களை அரவணைத்து தாய்ப்பால் கொடுக்கின்ற காலத்தில் தான் கற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.

அதேசமயம் தாய்மார்களும்கூட தாய்ப்பால் கொடுக்கிற காலத்தில் குழந்தையின் அருகிலேயே இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்கிற அறிகுறி தென்பட்டால்கூட சட்டென்று கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை உடனே துவங்கிவிடுகிறார்கள்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு மூளையின் வளர்ச்சி துரிதமாக இயங்குகிற காரணத்தாலும், நரம்புகளைச் சுற்றிய மையலின் உறையால் நம் உடலின் அசௌகரியத்திற்குரிய ஆபத்தான உணர்வுகள் வேகமாக கடத்தப்படுகிற காரணத்தாலும் குழந்தைகளும் தன்னுணர்வோடு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உடனடி செயலில் இறங்கி தங்களது சமிக்கையை அழுகையாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். சில நேரங்களில் வைரஸ் (Respiratory Syncytial virus) கிருமியால்கூட இத்தகைய நோயானது ஏற்படுவதாக ஆய்வுகள் வெளிவந்தாலும்கூட தாய்ப்பாலில் இருக்கிற எதிர்ப்பு சக்தியால் இந்நோயிலிருந்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது

தாய்ப்பால் குடித்து வளருகிற குழந்தைகளின் தாடை எலும்புகள், அண்ணம் மற்றும் பற்கள் எல்லாமே ஒரே சீரான ஒழுங்கமைவோடு இயங்குவதால் அவர்கள் தூங்குகிற சமயத்தில் சுவாசத்தின் இயக்கம் வெகு இயல்பாகச் செயல்பட முடிகிறது. இதனால் தூக்கத்தில் மூச்சுத்திணறுகிற தொல்லைகளெல்லாம் அவர்களுக்கு வருவதேயில்லை. இப்படி இரவும் பகலுமாக குழந்தைகளைக் காவல்கார தெய்வத்தைப் போல காக்கும் தாய்ப்பால் தான் நம் பிள்ளைகளினுடைய குலதெய்வம் என்பதை இப்போதாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல தாய்மார்களே, தாய்ப்பால் தான் நம் குழந்தைகளின் தாய்வழி சொத்துக்களில் மிகப் பெருமைக்குரிய ஒன்றும்கூட என்பதையும் மறவாதீர்கள்.

குழந்தைப் பருவத்து உடல் பருமனைப் பராமரித்தல்
தாய்மார்களே, பள்ளிக்கு அனுப்பும் போதுதான் உங்கள் பிள்ளையை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு அடி துவைத்து எடுக்கிறீர்கள். ஆனால் அதை தாய்ப்பாலூட்டும் காலத்திலுமா செய்ய வேண்டும்?

பக்கத்து வீட்டு பிள்ளையைப் பார், எப்படி தளதளவென கன்னுக்குட்டி மாதிரி வளர்ந்து நிக்கிறான். உன் பிள்ளையோ பஞ்சத்தில் வளந்த நோஞ்சான் பிள்ளை மாதிரியல்லவா இருக்கான் என்று அத்தைக்காரியின் ஏச்சுப் பேச்சைக் கேட்டுக் கொண்டே, நம் பிள்ளை துருதுருவென இருக்கிறான், ஆனால் எடை மட்டும் போட மாட்டேங்குறானே?″ என்று பச்சைப் பிள்ளையைக் கூட மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிற மனோபாவம் எப்படியோ தாய்ப்பாலூட்டும் காலங்களில் அம்மாவைத் தொற்றிக் கொள்கிறது. ஆனால் உண்மையில் இதற்குப் பின்னே இருக்கிற கதையே வேறு என்பதைப் பற்றி யாருக்கும் புரிவதில்லை.

பிள்ளைகள் பிறந்தவுடனே ஒரேயடியாக டவுசரை மாட்டிக் கொண்டு எழுந்து ஓடியாடித் திரிய வேண்டும் என்று பெற்றோர்கள் யோசிக்கத் துவங்கிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு அவரவர் வயதிற்கேற்பத் தானே வளர்ச்சியும் இருக்கும். ஆனால் அது தெரியாமல் நம் பிள்ளையை மற்ற பிள்ளைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு, ஒருவேளை நமக்குத் தாய்ப்பால் பத்தலை போலிருக்கே, டாக்டர்கிட்ட போய் பிள்ளைக்குன்னு ஏதாவது சத்து டானிக் தான் வாங்கி கொடுக்கனும் போல!″ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். உண்மையில், வளர்ச்சி என்பது உடல் பருமனை வைத்து அளவிடக்கூடிய ஒன்றா என்ன?

பிறந்த குழந்தைகள் சராசரியாக மூன்று கிலோ எடையோடு இருக்கிறார்கள். அவர்கள் ஆறு மாதத்தில் ஆறு கிலோ எடையும், ஒரு வயதிலே ஒன்பது கிலோ எடையுடனும் தான் மிகச் சாதாரணமாகவே வளர்ச்சியடைகிறார்கள். ஆனால் அதிகப்படியான கொழுப்புகள் கூடி கொஞ்சம் குண்டு குண்டாகத் தெரிகிற குழந்தைகள் தான் சத்தாக வளருகிறார்கள் என்று அவ்வப்போது அக்கம் பக்கத்திலிருந்து நமக்கு தவறாக கற்பித்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.

தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிற குழந்தைகளின் எலும்புகள், தசைகள் மற்றும் உள்ளுறுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளுடன் மட்டுமே அவர்கள் குடித்தபடி வளருவதால் அந்த சத்துகள் யாவும் அந்தந்த உறுப்புக்குள் மட்டுமே செல்கிறது. ஏதேனும் அதிகப்படியான சத்துகள் இருந்தால் தானே கொழுப்புகளாய் போய் உடலில் அவை பாசி போலப் படியும். ஆனால் தாய்ப்பாலைப் பொருத்தவரையில் அவை தேவையின்றி கொழுப்புகளாய் போய் தோல்களுக்கடியில் சேருவதில்லை. அதனால் தான் தாய்ப்பால் பருகிய பிள்ளையைப் பார்த்தாலே இவன் சாப்பிட்டுச் சாப்பிட்டு எலும்பில் தான் சேர்த்து வைக்கிறானோ? என்று நையாண்டி செய்கிறார்கள்.

அதேசமயம் பிறக்கையில் சராசரியாக ஐம்பது சென்டிமீட்டர் உயரமுடைய பிள்ளைகள் ஆறு மாதத்தில் தான் அறுபத்தைந்து சென்டிமீட்டராகவும், ஒரு வயதில் எழுபத்தைந்து சென்டிமீட்டராகவும் வளர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக மெல்ல மெல்ல வளருகிற வளர்ச்சிப் படிகளைப் புரிந்து கொண்டாலே, எம் பிள்ளை இப்படிக் குள்ளக் கத்தரிக்காய் மாதிரி இருக்கானே! இப்படி ஒல்லிக்குச்சியாட்டம் இருக்கானே! என்றெல்லாம் கவலைப்பட்டு சத்து டானிக், சத்து மாவுகள் என்று தவறான வழியைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.

பெரும்பாலான தாய்மார்கள் என் பிள்ளை எடை போடவே மாட்டேங்குறான் என்று சீக்கிரமாகவே குழந்தைகளுக்கு தாய்ப்பாலோடு சேர்த்து கூடுதலாக பால் பவுடரையும் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒருசிலர் பகலுக்கு தாய்ப்பால், இரவுக்கு பால் பவுடர் என்று கால அட்டவணை போட்டு பாலூட்டுகிறார்கள். அது ஏனோ, அந்த பால் பவுடரில் தான் பாடி பில்டிங் செய்வதற்கான பார்முலா இருப்பதைப் போலவும், இரண்டையும் சேர்த்துக் கொடுக்கும் போது பையன் பயில்வான் என்று சொல்லுகிற அளவிற்குத் தேறிவிடுவான் என்பதாகவும் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் அது எத்தகைய ஆபத்தில் கொண்டு போய் குழந்தையை விட்டுவிடும் என்பதைப் பற்றி யாரும் புரிந்து கொள்வதில்லை.

தங்களது குழந்தைகளின் வளர்ச்சியும், எடையும், உயரமும் வயதிற்கேற்ப எப்படியிருக்கும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் இப்படியான தவறான வழிமுறைகளை அம்மாக்களும் பதட்டத்தோடு தேட வேண்டியிருக்கிறது. ஆனால் பிள்ளையோ நோஞ்சானாக இருக்கிறான், தாய்ப்பால் பத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு பசும்பாலையோ, பால் பவுடரையோ ஆறு மாதத்திற்கு முன்பாகவே கொடுப்பதால் தான் குழந்தைகள் ஒரு வயதிற்குள்ளாகவே குண்டு பிள்ளையாக வளர்ந்து நிற்கிறார்கள். இப்படிப் பிஞ்சிலேயே குண்டாக வளர்ந்த பிள்ளைகள் தான் எதிர்காலத்தில் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு அம்மாக்களுக்கு ஏற்பட்டுவிட்டால் இப்படிப்பட்ட தவறான முடிவிற்கு அவர்களும் செல்ல மட்டார்கள்.

பொதுவாக தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிற குழந்தைகளுக்கு உடம்பின் தேவைக்கேற்பவே பசிக்கிறது. பசி உணர்வுக்கு ஏற்ப அழுது ஆர்பாட்டம் செய்து அம்மாவை எழுப்பி எப்படியோ வயிறு நிரம்ப பால் குடித்துவிட்டுதான் கண் அசருகிறார்கள். குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகையில் அவர்களிடம் இயற்கையாகவே பசித்துப் பால் பருகக்கூடிய உணர்ச்சி நரம்புகள் முதிர்ச்சியடைகிறது. அதேசமயம் மார்பில் குடிக்கையில் அவர்களுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டுமே குடித்துவிட்டு பின் முகத்தை திருப்பிக் கொண்டு போதும் போதும் என்று கூடுதலாக பால் அருந்துவதை தவிர்த்தும் விடுகிறார்கள். இதனால் அவர்களின் தேவைக்கு அதிமான சத்துகள் குழந்தையின் உடலிற்குள்ளாக செல்வதேயில்லை.

ஆனால் புட்டிப்பால் அருந்துகிற பிள்ளைகளைக் கவனியுங்களேன். அட, புட்டிப்பால் அருந்துகிற என்பதைவிட, புட்டிப்பாலைக் கொடுக்கிற தாய்மார்களைக் கவனியுங்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தாய்ப்பால் குடிப்பது என்பது குழந்தைகளின் விருப்பமாக இருந்த விசயம், இங்கே புட்டிப்பாலாக மாறும் போது அது முழுக்க முழுக்க அம்மாவினுடைய விருப்பமாக மாறிவிடுகிறது. பிள்ளையின் பசிக்கு என்றல்ல, தூக்கம் பிடிக்காமல் அழுதால், எறும்பு கடித்து அழுதால்கூட அதற்கும் அம்மாவின் மூளையில் பதிவாகியிருக்கிற அழுதால் பாலூட்ட வேண்டும் என்கிற புரிதல்படி பால் டப்பாவை எடுத்து உடனே வாயிலே திணித்துவிடுகிறார்கள்.

ஆக, அம்மாக்களும்கூட நாம் வைத்திருக்கிற டப்பா முழுவதிலும் இருக்கிற பாலைக் குடித்து முடித்தால் தான் பிள்ளைகளின் வயிறு நிறையும் என்று அசடாக நினைத்துக் கொள்கிறார்கள். அதாவது தட்டு நிறைய சாப்பாட்டைப் போட்டுவிட்டு தட்டைக் காலி செய்தால் தான் பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்கள் என்று எடை போடுவதைப் போலவே பால் டப்பா காலியாகிற விசயத்திலும் அம்மாக்கள் தவறாக புரிந்து கொண்டு அதிகப்படியான பாலைப் புகட்டிவிடுகிறார்கள்.

இதனால் என்ன நடக்கிறதென்று தெரியுமா? குழந்தையின் தேவைக்கு அதிகப்படியான பாலை நாம் புகட்டிவிடுகிறோம். ஏற்கனவே மாட்டுப்பாலில் தாய்ப்பாலைவிட அதிகப்படியான புரதச்சத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அதனால் அவர்களின் அத்தியாவசிய வளர்ச்சிக்குத் தேவையான சக்தியைவிடவும் கூடுதலான சத்து குழந்தையின் உடலிற்குள் சென்றுவிடுகிறது. இப்படித் தேவைக்கு அதிகமாக இருக்கிற சக்தியெல்லாம் குழந்தையின் தோலுக்கு அடியிலே போய் நிறையவே தேக்கி வைத்துக் கொள்கிறது. இதனால் தான் புட்டிப்பால் குடிக்கிற குழந்தைகளின் தோலுக்கடியில் கொழுப்புகள் படிந்து உடல் மெருகேறிக் கொழுகொழுவென தோற்றம் கொள்கிறார்கள். ஆக, ஆழகு என்பதே ஆபத்திற்குரிய விசயம் தான் என்பதையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம் தாய்ப்பால் குடித்து வளருகிற குழந்தைகளின் தேவைக்கேற்ப மட்டுமே பாலும் அதனது சத்துகளும் கிடைப்பதால் தாய்ப்பால் குடிக்க, நன்றாக கை கால் ஆட்டியபடி சுட்டித்தனமாக வளரவென்று பிள்ளைகளும் ஆரோக்கியமாக வளருகிறார்கள். இதனால் தான் அவர்களின் உடலில் கொழுப்புகள் தேவையின்றி சேராமல், அதன் காரணமாக மந்தமாக்கியும் விடாமல் எப்போதும் அவர்களை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறது. அப்படி இல்லையென்றால் போருக்குச் சென்று மகனை நினைத்து, தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயடா மகனே என்று சொல்லியிருப்பாளா, நம்முடைய சங்க காலத்துத் தாய்!

அதுமட்டுமல்லாமல் தாய்ப்பாலில் இருக்கிற கூட்டு சக்தியினால் அதனது சுவையில் மாறுபட்ட கலவையான உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நாக்கிலுள்ள எல்லா வகையான சுவை நரம்புகளையும் சுண்டிவிட்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதனால் தான் தாய்ப்பால் குடித்து வளருகிற பிள்ளைகள் எதைக் கொடுத்தாலும் எனக்குப் பிடிக்கலை என்று ஒதுக்கிவிடாமல், கருவேப்பிலை, காய்கறி என்று தட்டின் ஓரமாய் எடுத்து வைத்துவிடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுகிறார்கள். இதனால் அம்மாக்களும் பிள்ளை சாப்பிடவே மாட்டேங்குறானே, அவனுக்கு என்னத்த தான் கொடுத்து தேத்தவோ என்று புலம்ப வேண்டிய தேவையுமிருக்காது.

ஆனால் புட்டிப்பாலைப் பொருத்தவரையில் குழந்தைகள் ஆசையாக விரும்பிக் குடிக்க வேண்டுமென்பதற்காக செயற்கையாகவே இனிப்புச் சுவையோடு அதனை தயாரித்திருப்பார்கள். இப்படி ஆரம்பத்திலேயே இனிப்புச் சுவைக்குப் பழகியவர்கள் நாம் கொடுக்கிற ஆரோக்கியமான உணவைத் தொட்டுப் பார்ப்பார்களா? அவர்களோ பாக்கெட்டுகளில் விற்கிற சாக்லேட், பிஸ்கட்  என்று துரித உணவுகளை மட்டுமே வாங்கி விரும்பி உண்ணுபவர்களாக, காய்கறிகளை சாப்பிடாமல் அதனை ஒதுக்குபவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். இப்படியிருந்தால் குழந்தைகளின் உடலில் எடை போடாமல் என்ன செய்யும்? இப்போது சொல்லுங்கள், குழந்தைகளின் உடல் பருமன் நல்லதிற்கா என்ன?

அதேசமயம் தாய்ப்பாலில் இருக்கிற வளர்ச்சிக் காரணிகள் மற்றும் ஹார்மோன்கள் குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதால் புட்டிப்பால் குடித்து வளருகிற பிள்ளைகளைப் போல தாறுமாறாக அகலமாய் வளர்ந்து நிற்பதில்லை. இதனால் தாய்மார்களும்கூட எங்கே நம் பிள்ளைக்கு அதிகமாக தாய்ப்பால் கொடுத்தால் எடை போட்டுவிடுவார்களோ என்கிற பயத்திலேயே தயங்கித் தயங்கி பாலூட்ட வேண்டிய அவசியமுமில்லை. நீங்கள் எவ்வளவு தாய்ப்பால் கொடுத்தாலும் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான பாலினையும், சத்துகளையும் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்வதுடன், நாம் விடாமல் தொடர்ந்து தாய்ப்பாலை புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, பிள்ளையை குண்டு ஒல்லியென எடை போட்டு ஆரோக்கியத்தை அளவிடுவதை விட்டுவிட்டு தாய்ப்பால் மட்டுமே புகட்டி வளர்க்கிற போது அவர்கள் தன்னாலே ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பான சுட்டித்தனத்தோடும் வளருவார்கள் என்பதை மட்டும் நாம் மனதிலே இருத்தி வைத்துக் கொள்வோம்.
இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்களுக்கு எதிரான சொட்டு மருந்து..
தினசரி காலையில் எழுந்து முன்வாசலில் மனைவிமார் கோலம் போட, திண்ணையில் அமர்ந்து காப்பி அருந்தியவாரே நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த தம்பதியினரெல்லாம் இப்போது புகைப்படங்களாக மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். முப்பது வயதை மிஞ்சிய தம்பதியினர்கள்கூட பனிவாடைக் காற்று அடிக்கிற அதிகாலை புலரும் முன்னேயே எழுந்து பார்க்குகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் பிரஷரையும், சுகரையும் குறைப்பதற்காக கால்கடுக்க வேர்த்து விறுவிறுக்க நடந்தபடி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் வீட்டைவிட்டு செல்லும் போது மழையைப் பார்த்து குடையை எடுத்துச் செல்லுகிற வழக்கத்திற்கு மாறாக, சென்று வருகிற நேரகாலம் பார்த்து மாத்திரை மருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறோம்.

நாம் வாழுகிற அன்றாட வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கமும் கொஞ்சம்கூட ஆரோக்கியமே இல்லாமல் போய்விட்டது. தெருக்கடைகளில் விற்கிற உணவுப் பண்டங்களில்கூட சுகர் ப்ரீ, கொழுப்பில்லாதது போன்ற விளம்பரங்களைத் தாங்கியபடியே வருகின்றன. உடல் பருமனையும், சுகரையும், இரத்தக் கொதிப்பையும் கொண்டிருக்கிற மனிதர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்காக உடற்பயிற்சி நிலையங்கள், பேலியோ டயட், மருந்து நிறுவனங்கள் என்று போட்டி போட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கின்றன. இங்கே வாழுகிற ஒவ்வொருவருமே தாங்கள் என்றாவது இரத்தக்கொதிப்பு நோயாளியென்றோ, சுகர் நோயாளியென்றோ முத்திரை குத்தப்படலாம் என்கிற பதபதைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உலகத்தில் தான் நம்முடைய பிள்ளைகளும் பிறந்து வளர்ந்து எதிர்காலத்திலே இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இருதயம் சம்பந்தப்பட்ட உயிருக்கு உலை வைக்கக்கூடிய பலவிதமான நோய்களிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ வேண்டியிருக்கிறது. அதேசமயம் நாமும் இப்படிப்பட்ட உலகத்தில் தான் நம் பிள்ளைகளை வளர்க்கவும் வேண்டியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான உலகில் ஆரோக்கியத்துடன் நம் பிள்ளைகளை வளர்ப்பதற்கான மந்திர பானமோ நம் கையில் தான் இருக்கிறது. ஆம், தாய்ப்பால் என்கிற மந்திர பானத்தினால் மட்டும் தான் இத்தகைய நோய்களிலிருந்து நம் பிள்ளைகளை பாதுகாக்கவே முடியும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலினை புகட்டுகையில் அதிலிருக்கிற ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சிக்குரிய சூப்பர் மூலக்கூறுகள் அவர்களின் வயதிற்குரிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தாய்ப்பாலினால் கிடைக்கிற கொழுப்புச் சத்தும் அவர்களுக்கு அத்தியாவசியானது என்பதைத் தாண்டி அநாவசியாக உடம்பில் ஊளைச் சதையாகவெல்லாம் போய் சேற்றைப் போல தங்கிவிடுவதில்லை. உடம்பில் நடக்கிற வளர்ச்சிதை மாற்றங்களும், வேதியல் மாற்றங்களும் தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற குழந்தைகளுக்கு மிகச் சரியாக நடப்பதால் உடம்பிலுள்ள எனர்ஜியை சமநிலையிலேயே வைத்திருக்கிறது. இத்தகைய காரணங்களால் இளம் பருவத்திலேயே உடல் பருமனாகி அதனால் எதிர்காலத்தில் சர்க்கரை, பிரஷர் நோயுள்ளவர்களாக அவதியுறாமல் இருப்பதற்கு தாய்ப்பால் தான் தடுப்பு மருந்தாக இருக்கிறது என்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்படியான இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய்களுக்கு எதிரான சொட்டு மருந்தாகத் தான் ஆரம்பகாலத்தில் நாம் புகட்டுகிற தாய்ப்பால் செயல்படுகிறது என்பது பெரும் மகத்தான விசயம் தானே.

ஆனால் புட்டிப்பால் குடித்து வளருகிற குழந்தைகளுக்கு அம்மாக்கள் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தினைவிட கூடுதலாக கொடுத்தபடியே இருப்பதாலும், ஆறு மாதத்திற்கு முன்னமே மாற்று உணவைக் கொடுக்க ஆரம்பிப்பதாலும் அவர்களின் உடலில் தேவைக்கு அதிகமாக கலோரியும், கொழுப்பும் தேங்கிவிடுகிறது. இப்படி அதிகப்படியான ஊட்டச்சத்து நிறைந்த புட்டிப்பாலைக் கொடுக்கையில் குழந்தைகளின் உடலில் இன்சுலின் போன்ற ஹார்மோன்கள் சுரந்து அத்தகைய அதிகப்படியான சக்தியை கொழுப்பாகக் கொண்டு போய் தொப்பையாகவும், குண்டு குண்டு பிள்ளையாகவும் ஆக்கிவிடுகிறது. இதுவெல்லாம் தானே பின்னாளில் இரத்தத்திலே போய் படிந்து ஆபத்தை உருவாக்குகிறது!

தாய்ப்பால் மட்டுமே குடித்து வளருகிற பிள்ளைகளுக்கு இயல்பாகவே எல்லா வகையான சுவை நரம்புகளும் சரியாக தூண்டப்படுவதால் பள்ளிக்குச் செல்லுகிற வயதிலே காய்கறி வேண்டாம், பழங்கள் வேண்டாம் என்றெல்லாம் ஒதுக்காமல் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதேசமயம் புட்டிப்பால் குடித்து வளருகிற பிள்ளைகள் செயற்கையாக சுவையூட்டப்பட்ட பாலினையே சுவைத்திருப்பதால் ஏனைய ஆரோக்கியமான உணவுகளை விரும்பாமல் கைடையில் விற்கிற அதிசுவையூட்டப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையே விரும்பி உண்டு உடம்பை பாழாக்கிக் கொள்கிறார்கள். இப்படி சாப்பிடுவதால் எதிர்காலத்தில் ஆபத்து வரத்தானே செய்யும் என்று பெற்றோர்களுக்கும் புரிவதில்லை.

தாய்ப்பாலிலே இருக்கிற சூப்பர் கொழுப்பு அமிலங்களும், ஹார்மோன்களும் குழந்தையின் உடலில் இன்சுலின் சுரப்பதை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் தாய்ப்பால் அருந்துகிற குழந்தைகளின் இரத்தத்தில் சர்க்கரையினுடைய அளவும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. இப்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவும், அவர்களது எடையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற போது இயல்பாகவே அவர்கள் சர்க்கரை, பிரஷர் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு எதிரான உடலமைப்பைப் பெற்றுவிடுகிறார்கள்.

அதுமட்டுமா, அம்மாக்களின் அருகாமையிலேயே படுத்துக் கொண்டு அவர்களின் கூடுதல் அரவணைப்பிலேயே தாய்ப்பால் பருகி வளருகிற குழந்தைகளுக்குத்தான் போதுமென்கிற அளவிற்கு தாய்ப்பால் கிடைத்துவிடுகிறதே. அதுமட்டுமல்லாமல் அம்மாவின் அருகாமையினால் நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்கிற உணர்வோடு தூங்குவதால் குழந்தைகளுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்படுவதில்லை. ஆம், குழந்தைகளுக்குமே கோபம், விரக்தி, அழுகை, மனஅழுத்தம் எல்லாமே வரும் தான். அவர்கள் பசித்து அழுத் துவங்கும் முன்னரே தாய்ப்பால் குடுத்து நாம் பழக்காத காரணத்தினாலும், அதற்காகவென்று அழுதழுது பால் கிடைக்காமல் போகிற விரக்தியாலும், அம்மாவின் அரவணைப்பு அந்த சமயத்தில் கிடைக்காத பதட்டத்தினாலும் தான் குழந்தைகளுமே மனஅழுத்தம் உள்ளவர்களாக ஆகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனால்தான் புட்டிப்பால் குடித்து வளருகிற குழந்தைகள் மனஅழுத்தம் உள்ளவர்களாக, பிடிவாதம் மிக்கவர்களாக, சொல்லுக்கு அடங்காதவர்களாக, எதுக்கும் அடம்பிடித்து நினைத்ததை சாதிப்பவர்களாக வளருகிறார்கள். இப்படி குழந்தைப் பிராயந்திலேயே அவர்கள் அடத்துடன் வளருகிறார்களென்றால் இத்தகைய மனஅழுத்தமே நாள்பட்ட நோயில் கொண்டு போய் அவர்களை விட்டுவிடுமல்லவா! ஆனால் தாய்ப்பால் குடித்து வளருகிற பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அம்மாவின் சேலை நுனியை பிடித்துக் கொண்டு நிம்மதியாக தூங்கி எழுகிறார்கள்.

தாய்மார்களே, ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நமக்கு வயதாகி குச்சியை ஊன்றிக் கொண்டு நடக்கிற காலத்திலும்கூட நாம் ஊட்டி வளர்த்த தாய்ப்பாலினால் நமது பிள்ளைகளெல்லாம் நோய்நொடியின்றி என்றென்றைக்கும் பாதுகாப்பாகவே இருக்கப் போகிறார்கள் என்பதை விடவா ஒரு சிறந்த ஹெல்த் பாலிசி நம் பிள்ளைகளுக்கு போட்டு வைத்துடப் போகிறோம்? ஆகையால் தாய்ப்பால் மட்டும் தான் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஆகச்சிறந்த முதலீடு என்பதை மட்டும் எப்போதுமே நீங்கள் மறந்துவிடாதீர்கள். அதுசரி, இனி அடுத்த பகுதியில் தாய்ப்பாலைக் கொடுக்கும் முன்பாக தாய்மார்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா?

முந்தைய தொடரை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்