இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்

இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்




அவள் என்ன
கற்சிலையா
உலோகத்தாலான
உருவச்சிலையா?

அரிதாரம் பூசி
அலங்கரித்து
அலங்கல் சார்த்தி….

திருவிழா என்னும் நாளில்
ஆராதிக்கப்படும்
பல்லக்குச் சிலையா?

சிற்பி செதுக்கிய
சிங்காரச் சிலையா?

அசையாத
அழகு செய்யப்பட்ட
அவயங்களால்
அம்மன் சிலையென
காட்டப்படும்
அலங்காரச் சிலையா?

நாள் குறித்து
அர்ச்சனை செய்து
திருவிழா நாளாக்கி
‘ மகளிர் நாளென’
கொண்டாடி……
விழா முடிந்து
மூலையில் முடக்கி
தாழிட்டு…..
இருட்டறையில்
இருக்கையில் அமர்த்தி
இயங்காதவளென
சொல்லாமல் சொல்கிறச்
சொப்பனக் குறியீடா?

இயக்குபவளை
இயங்குபவளை
இனிமைகளின்
இடமாக இருக்கும்
இளகும் இதயத்தவளை
இன்றொரு நாளில் மட்டும்
இமயமிவளென
இருட்டடிப்புச் செய்வதேன்?

அவள்
இன்றும் என்றும்
இயங்கும்……
இயன்றதையெல்லாம் செய்யும்
இறைவி அல்லவா?

-பாங்கைத் தமிழன்

பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி

பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி




தாயாக தாலாட்டினாலும்
தாரமாக சீராட்டினாலும்
தலைமகனுக்காகத் தான்
தவித்துக் கிடப்பாள்…..
பெண் என்னும் பேதை..

தங்கையாய் கவிந்தாலும்
மூத்த தமக்கையாய் ஊட்டமளித்தாலும்
விட்டுக் கொடுக்காது வாழ்த்துவாள்..
வீரத்தை மனமார ஊட்டி வளர்ப்பாள்
சகோதரனின் சோதரியாய்

தோழியாய்த் தட்டிக் கொடுத்தாலும்
காதலியாய்க் கனிந்து நின்றாலும்
உரிமையுடன் திருத்திடுவாள்
உயர்ந்து சிறக்க பின்னணியாயிருப்பாள்
பிரியமான சிநேகிதியாய்

அர்த்தநாரியாய் உறைந்திருப்பாள்
பிள்ளைக்கனியமுதாய் இனித்திருப்பாள்
பூஜ்ஜியத்தைப் பௌர்ணமி போல மாற்றிடுவாள்

எவர்க்கும் அஞ்சிடாது எதிர்த்திடுவாள்
நறுமுகை சூடிய நாச்சியார்..

ஆடவனின் பின்புலமாக
அவனை நகர்த்தும் முன்னெடுப்பாக
உடன் பயணிக்கும் வழி மொழியாக
உயிர்ப்பூத்துக் கிடப்பாள்…
யாதுமானவளாய்…
மங்கை எனும் மகாசக்தி..

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778

தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி

தேதி அல்ல… வரலாறு கவிதை – சூரியாதேவி




எண்ணங்கள் எழுச்சிபெற்று எழுந்து நிற்கும் பேரோவியமாய்
வண்ணங்கள் பல தீட்டப்பட்டு வடிக்கப்பட்ட காவியமாய்
வாழ்க்கையை இன்பமயமாக்க இறுதிவரைப் போராடி
வேள்விகள் பல கடந்து உறுதியோடு வாதாடி
என்ன இந்த வாழ்வு என்றெண்ணி சோர்ந்து போகாமல்
எதையும் சாதிக்கும் என் நாட்டு பெண்மணிகள்
சாகசங்கள் பல நிகழ்த்தும் தன் நாட்டு கண்ணின் மணிகள்
வண்ணங்கள் இல்லாது போய்விட்டால் வானவில் ஏது
பெண்ணவள் இல்லாது போய்விட்டால் வாழ்கையே கிடையாது
ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று
அனைத்துத் துறையிலும் பெண்கள்
அனைத்துத் துறையிலும் பெண்கள்.

மார்ச் – 8 – 2023

முகவரி:

சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988

மகளிர் தினம் கவிதை – கவிதா பிருத்வி

மகளிர் தினம் கவிதை – கவிதா பிருத்வி




மகளிர் தினம்
*****************
அன்றைய பழமொழி
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன..

இன்றைய உலகத்தில்
அனைத்திற்கும் அவசரம்..
வாட்ஸ்அப் உடனடி தகவல்கள்..

மாப்பிள்ளை பெண்ணின்
பழைய வேர்களைத் தேட..
குறைகள் பெரிதாகி
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நின்று போகிறது..

பெண்ணை
போகப் பொருளாக்கும்
காதல் கிறுக்குகள்

பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டும்
காணொளிகளை வெளியிட்டு
இறுமாப்பு கொள்கிறது..

தைரியம் தன்னம்பிக்கை
உனது போர்வாளாகட்டும்
சிறு திரை உடைத்து வா
பெருஞ்சிறை பிளந்து வா

சலனம் தவிர்த்து
சாந்திகொள் சகோதரி…
வரவேற்று அரவணைக்க
வாசலில் உலகம்!

கவிதா பிருத்வி
தஞ்சை.