உலக மகளிர் தினம் கவிதைகள் – தினேஷ் பாரதி

உலக மகளிர் தினம் கவிதைகள் – தினேஷ் பாரதி
வாட்ஸப் ஸ்டேட்டஸில்
ஒலிக்கிறது
தன் கவலையை
யாரிடமும் சொல்ல முடியா
ஒரு பெண்ணின்
மன அழுகை…

22 கேரட் தங்கம்
******************
“செவ்வா வெள்ளி தல குளிச்சாவுல ஒடம்பு சீதோசனமாகும்” என
அதட்டிக் கொண்டிருப்பாள் அப்பத்தா.

எதிர்வீட்டு அழகருடன்
பேசுவதைப் பார்த்ததும்
“ஆம்பள பிள்ளைட்ட
ஒனக்கென்ன சோலி” யெனக் கரித்துக் கொட்டுவாள்
அம்மாச்சி.

எக்ஸாம் பீஸ்ஸென
வாய் திறந்ததும்
“பணமென்ன மரத்திலயா காய்க்குது” என்று அதட்டிவிட்டு
இஸ்பேட்டு ராஜாவுக்கோ
ஹார்ட்டின் ராணிக்கோ
காத்துக் கொண்டிருப்பார்
அப்பா.

மகளை பள்ளியனுப்பிட்டு
வீடு திரும்பும்
அம்மாவின் நினைவு பூராம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.450 உயருகிறது என்கிற செய்திதான்…

விழிகளால் சிரிப்பவள்
*************************
சென்னையின்
கனரக வாகனங்கள்
துரிதமாக பயணிக்கும்
கூட்டு ரோட்டின் முனையில்
தள்ளுவண்டியில்
பழங்கள் விரித்திருப்பாள்
அந்த பழக்கடைக்காரி.

அவளிடம்
பழம் வாங்கும் நாட்களிலும்
பணமில்லாமல்
பழம் வாங்கா நாட்களிலும்
இதழ் விரித்த புன்னகையால்
கண்களால் அன்பை பொழிந்து
அனுப்பி வைப்பாள்.

கொடுக்கும் பணத்துக்கான
பழத்தை அளிக்காமல்
அதிகப்படியாக அள்ளிடுவாள்.

‘இப்படி அள்ளிக் கொடுத்தால்
எப்படி சம்பாதிக்கிறது’ என்றேன்.

‘மனுஷாள்ல சம்பார்க்கிறத விட
வேற இன்னா நைனா இருக்கு…’
என்று சொல்லியவாறே
விழிகளால் சிரித்தாள்.

– தினேஷ் பாரதி
செல்:9952212701