மாதா எழுதிய “முதுமை” சிறுகதை
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை | மாதா
அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ
சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா வெயிலின் உக்கிரத்தால் உருகி ஓடும் தார்ச்சாலை அருகில் வயிற்றில் பசியோடும், தாகத்தோடும் நின்றிருந்தான். நடந்து நடந்து கால்களெல்லாம் ஓய்வுக்கு கெஞ்சின. சைக்கிளில் வந்தவர் முகக் கவசத்தை முக்கிலிருந்து லேசாக இறக்கி, பசியால் வாடிக் கிறங்கிப் போயிருக்கும் அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டார்.
“ஏம்ப்பா… அங்கே கிடக்கிற பிரேதம் யாரோடது ? உனக்கு வேண்டியவங்களா…?”
“யார்…யாருன்னு தெரியலைங்களே” பசி மயக்கத்தில் பிவாவினால் பேச முடியவில்லை.
“மரத்தடியில் நிக்கிற, பிரேதம் யாருதுன்னு கேட்டா மரம் மாதிரி நிக்கிறாயே…
அப்போது முகக் கவசம் அணிந்த இன்னொருவர் சைக்கிளில் வந்து இறங்கினார். பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்த்து, “ஏன் முகக் கவசத்தை நாடிக்குக் கீழே இறக்கிவிட்டிருக்கிறாய்? மூக்கின் மேலே ஏற்றிப் போடு” என்றவர் திரும்பி பிவாவை அருவருப்போடு பார்த்தார்: “அந்தப் பிணம் யாருதுனு ஏதாவது சொன்னானா?”
“ஒண்ணுமே தெரியலை என்கிறான். எப்போது இங்கு வந்து செத்துப் போனதுன்னு யாருக்குத் தெரியும்? புலம் பெயர்ந்து வருபவர்களை எவரென்று அறிய முடியாது.”
இரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரம் தேசிய நெடுஞ்சாலையை உற்று நோக்கினார்கள். ஊரடங்கினால் தார்ச் சாலையில் வெகுதூரம் வரையில் யாரும் தெரியவில்லை.
பல நாட்களாகவே வெளி மாநிலத்திலிருந்து ஜனங்கள் பெட்டிகளையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இந்த சாலை வழியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“நான் நேற்று மாலை வரை இந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். மக்கள் சாரை சாரையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நேற்று இரவிலோ அல்லது அதிகாலையிலோ யாரோ இந்தப் பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் அல்லது சம்பவ இடத்திலே வந்து இறந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?”
“பிணத்தைக் கொண்டுவந்து போடுகிறவர்கள் ஏன் சாலையிலிருந்து இருபது அடி தள்ளி இருக்கிற மரத்தடியில் போட வேண்டும்?” சைக்கிளில் வந்த மற்றொருவர் கேட்டார்.
“ஆமா… நேற்று இந்தப் பகுதியின் காவல் பணி நீதானே செய்தாய்? இரவு காவலரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லவா நீ வந்திருக்க வேண்டும். வெளியூர்க்காரன் எவனாவது இந்த வழியே வந்து ஊருக்குள் நுழைந்திருக்கிறானா?”
பிணத்தைப் பற்றிய உரையாடல் அவர்களுக்குள் தொடர்ந்துகொண்டிருந்தது.
புலம்பெயர்ந்து இந்த சாலை வழியே நடந்து போய்க்கொண்டிருக்கும் ஏராளமான மக்களில் கொரோனா வைரஸ் பாதித்த யாராவது ஒருவர் ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்திலிருந்து ஊர்க்காவல் போட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இது வரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததில்லை. வெளியாள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாது. அப்படியிருக்க இந்தப் பிணம் இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“சரி. அதை விடு. அடுத்து இந்தப் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவதென்று யோசிக்கலாம்”.
“போலீசுக்கு தகவல் சொல்லலாமா?”
“போலீஸ் வந்து என்ன செய்வாங்க? புகார் எழுதிக் கொடுக்கச் சொல்வாங்க…இறந்தவரைப் பற்றி நாங்க விசாரணை செய்துக்குறோம். இந்தப் பிணத்தை நீங்களே அடக்கம் பண்ணிருங்க என்பார்கள். நம் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு நம்மிடமே வேலை வாங்குவார்கள். இது தேவையா? அதற்கு முன் பிணம் அழுகி வீச்சம் எடுத்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம். அந்தப் பிணம் கொரோனாவால் பாதித்திருந்தால் நம்ம கிராமத்திற்குள் வைரஸ் பரவ ஆரம்பித்துவிடும்”.
அவர்களில் ஒருவர் பிவாவை ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்னார்: “இவனையே ஏன் பிணத்தை அடக்கம் செய்யச் சொல்லக் கூடாது?”
“ நல்ல யோசனை. அவன் வெறும் ஆளாகத்தான் இருக்கிறான். அவனை பிணத்தின் அருகே போகச் சொல்லுவோம். கிராமத்துக்காரர்கள் யாரும் பிணத்தைத் தொட மாட்டார்கள். நாம் விலகியே இருப்போம்”.
இவ்வளவு நேரமாக அத்தனை உரையாடல்களும் பிவாவின் முன்னால் தான் நடந்துகொண்டிருக்கிறது. சுற்றி நடப்பதைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லை. சோகங்களையும், துயரங்களையும் கடந்தே வந்திருக்கிறான். கொரோனாவைத் தேசிய பேரிடர் என்கிறார்கள். பேரிடர் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள்? கடந்த பல நாட்களாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அவன் கண்டது என்ன? பல்லாயிரம் மனிதர்கள் சொந்த வீடு நோக்கி வேகாத வெயிலில் கால் நடையாகப் பயணிக்கிறார்கள். பட்டினியால் மடிகிறார்கள். குழந்தைகள் பாலின்றி சாகின்றன.
தான் இவ்வளவு நேரமும் தகிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருப்பதை பிவா அப்போதுதான் உணர்ந்தான். சூரியனின் வெப்பத்திலிருந்து காக்க நிழல் பகுதியை நோக்கி நகர்ந்தான். உடனே அவர்கள் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.
“நில்லுப்பா… பிரேதம் யாருன்னு தெரியலைன்னா இருக்கட்டும். நீதான் அந்தப் பிணத்தை புதைக்க வேண்டும். அது வரையில் நீ போக முடியாது” என்று மிரட்டும் தொனியில் கூறினார்கள்.
பிவாவின் கால்கள் தளர்ந்து நடுங்கின. அவர்களின் பயமுறுத்தும் வார்த்தைகள் இன்னொரு பேரிடருக்குள் தள்ளியது போல் உணர்ந்தான். நா வறண்டு, கண்கள் உள்ளே போய், வயிறு ஒடுங்கி நிற்பவனைப் பார்த்து அவர்களில் ஒருவர் இரக்கத்துடன் கேட்டார், “பசிக்கிறதா?”
“தண்ணீர்…தண்ணீர் வேண்டும். கையில் காசு இல்லை.”
பேச்சே வரவில்லை. கொர கொரவென்று சத்தம் வந்தது. பட்டினியால் வயிறு ஒட்டிப் போயிருந்தாலும் அவன் உணவை நாடவில்லை. தொண்டைதான் வறண்டுவிட்டது. முதலில் தண்ணீர்தான் அவனுக்குத் தேவை.
“உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே வந்துவிடும். சொன்ன வேலையைப் பார்”. பிவாவுக்கு உணவும், தண்ணீரும் கொண்டுவர சைக்கிளை எடுத்து வேகமாய்க் கிளம்பினார்.
இவனுக்கு கொரோனா தொற்று இருக்குமோ…இவனை சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியாது. மற்றொரு சைக்கிள்காரர் நினைத்துக்கொண்டார். பிவா அவர் பின்னால் தள்ளாடியபடி நடந்து சென்றான்.
கோவாவிலிருந்து புறப்பட்ட பிவா, நடை பயணத்தின் போது பல்வேறு மனிதர்கள் உடன் வந்தார்கள். தூக்கமிழந்து, நடை தளர்ந்து, பசியோடு நடந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இவனுக்கு கூட்டாளி ஆவார்களா? புலம் பெயர்ந்து பிழைப்பு தேடிப் போன ஒவ்வொருவரும் வீடு போய்ச் சேர வேண்டும் என்ற வேட்கையோடு திரும்பி நடந்து செல்கிறார்கள். பிவா கையிலிருக்கும் பணத்தை லாரி டிரைவரிடம் கொடுத்து இரண்டு வண்டியில் மாறி மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறான்.
சீக்கிரம் வீட்டிற்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. கோவாவிலிருந்து கிளம்பி பத்து நாட்களாயிற்று. கோலாப்பூருக்கும், சோலாப்பூருக்கும் இடையில்தான் தற்போது இருக்கிறான். ஊரை நெருங்கிவிட்ட குதுகலம் வந்தது. கையில் பணம் இருந்தால் இந்நேரம் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். லாரி டிரைவரிடம் பணம் கொடுத்தால் வண்டியில் சரக்குகளோடு சரக்குகளாக ஏற்றி குறிப்பிட்ட தூரத்தில் இறக்கி விட்டுவிடுகிறார்கள். அவன் சொந்த ஊரான நான்டெட் இங்கிருந்து சில மணி நேர பயணம் என்றாலும் காசில்லாமல் எப்படி ஊர் போய்ச் சேர முடியும்?
அப்போது பிரேதம் இருந்த இடத்திலிருந்து அரைக் கிலோ மீட்டருக்கு அப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு தெரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். எங்கே தன்னைக் கூப்பிட்டு: விடுவார்களோ என பயந்தான். இப்போது இந்த ஊர்க்காரர்களைப் பயன்படுத்தித்தான் நமது ஊருக்குப் போக வேண்டும். அவர்கள் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் எல்லோரும் இவன் பார்வையிலிருந்து கடந்து போனார்கள். அவர்கள் ஏதாவது இவனிடம் கேட்டால் பதில் சொல்லும் தெம்பு இல்லை. சைக்கிள்காரர் கூடவே சென்றுவிட்டான்.
அருகில் வந்தபின்தான் அது பெண் பிணம் என்று தெரியவந்தது. ஐந்தாறு கிராமத்து ஆட்கள் பிணம் கிடந்த மரத்தடியிலி;ருந்து சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தார்கள். பிரேதத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடிக் கலைகிற கூட்டம் போல் ஒரு தகவலும் பெற முடியவில்லை. பிரேதம் யாரென்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு பிணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் கள்ள மௌனமாக இருந்தார்.
ஒரு பிணத்தை யாருடையது என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? ஒரு பெண் உயிரோடு இருந்தால் தாயாக, ஒருவரின் மனைவியாக, சகோதரியாக இருக்க முடியும். ஆனால் அவள் இறந்து விட்டாள். அவள் யாருக்குச் சொந்தமானவள்? முடிவில்லாத விவாதமாகத் தொடர்கிறது.
இந்தப் பிணத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால், பாலின்றி பட்டினியால் மடிந்த அவளுடைய குழந்தையை மூன்று நாட்களுக்கு முன் சாலையோரம் புதைத்துவிட்டு வந்ததைச் சொல்லியிருப்பாள். இறந்த குழந்தையை சாலையோரத்தில் கிடத்திவிட்டு வா என்று அவளுடைய கணவன் வற்புறுத்தி அழைத்தான். தாயுள்ளம் கேட்கவில்லை. அவள் வர மறுத்த போது, இவர்களை விட்டு விட்டு அவன் சென்றுவிட்டான். பட்டினியாலும், தாகத்தாலும் மூன்று நாட்களாக நடந்து நடந்து குழந்தை இறந்த ஏக்கத்தோடு இவ்விடத்தில் அவள் உயிர் பிரிந்தி;ருக்கிறது,
பிவா பிரேதத்தின் அருகில் சென்று சுற்று முற்றும் பார்த்தான். சைக்கிள்காரர், கிராமத்து ஆட்களுடன் நெருக்கமாக நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“இறந்தவள் என்ன சாதியோ, மதமோ தெரியவில்லை. அவர்கள் வழக்கத்தில் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா?”
“எரித்தால் அதிகம் செலவாகும். பேசாமல் புதைத்துவிடுவதுதான் சரியானது” என்றார் ஒருவர்.
“புதைப்பதென்றால் எங்கே குழி தோண்டுவது? நமது ஊர் மண்ணில் இவளை புதைக்கக் கூடாது. ஊர் எல்லையைத் தாண்டி தாழ்வான பகுதியில்தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்றார் மற்றவர்.
புதைக்கிறவனுக்குக் கூலி கொடுக்க, வந்தவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்கள். ஒருவர் மிச்ச ரூபாயைப் போட்டு நூறு ரூபாயாக ஆக்கினார். சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் வாங்க ஊருக்குள் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. இங்கே இருப்பவர்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பிவாவை சத்தமாக அழைத்து வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, பாதுபாப்பாக பத்தடிக்கு அப்பால் தள்ளி நின்றுகொண்டார்கள்.
பிணத்தைத் தாழ்வான பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஊர்க்காரர்கள் பிணத்தைத் தூக்க உதவிக்கு வர மாட்டார்கள். என்ன செய்வது? எப்படியாவது கொண்டுபோக வேண்டும். வயிறு வேறு பிசைந்து கொண்டிருந்தது. விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும். சட்டென்று முடிவெடுத்தான். குனிந்து பிணத்தின் தோளுக்கடியில் கைகளைக் கொடுத்து இழுத்துச் சென்றான். முகத்தைப் பார்க்கவில்லை. பிணம் பயங்கரமாக கனத்தது. ஆனால் அவன் அடைந்த துயரத்தின் முன் இந்த பிரேதத்தின் கனம் சிறியதுதான்.
திடீரென்று அவனுக்கு தோன்றியது. ‘இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இழுத்துச் செல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் பிறந்து, வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக் கொள்பவர்களுக்கு கண்ணியமான முறையில் வழியனுப்பி வைப்பதே சிறந்த மனித நேயமாகும்’.
மீண்டும் குனிந்து பிணத்தின் பின் கழுத்தின் கீழும், முழங்கால்களுக்குக் கீழும் கைகளை வைத்து தூக்கினான். அவன் உடம்பின் எடையை விட பிணத்தின் கனம் அதிகமாக இருந்தது. கண்கள் இருண்டன. பின் நிதானித்து முழு பலத்தையும் திரட்டி தூக்கி நடந்தான்.
புதைக்கும் இடம் வரை பிணத்தைத் தூக்கி வந்ததால் மேல் மூச்சு வாங்கியது. வேகமாக சுவாசித்தான். நாய்கள் வேகமாக ஓடிவந்து மூச்சு வாங்கி இளைப்பது போல் தஸ் புஸ் என்று காற்று மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் வெளியேறியது. கீழே பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது. ஊர்க்காரர்கள் ஏற்கனவே குழி தோண்டி வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை குழி வெட்டும் கடினமான வேலை இல்லாமல் போனது. ஆனால் ஊர்க்காரர்கள் இவன் கடப்பாறை, மண்வெட்டியைத் தொட்டால் அதன் மூலம் கொரோனா தொற்று ஊருக்குள் பரவிவிடும் என்ற அச்சத்தில் தான் உள்ளுர்காரர்களை வைத்து புதை குழி தோண்டியிருக்கிறார்கள். ஊரின் ஒதுக்கத்தில் செல்லாத காசுகளை சேமிக்கும் உண்டியலாக இருக்கும் சுடுகாட்டில் கூட அந்தப் பிணத்தைப் புதைக்க ஊர்க்காரர்கள் விரும்பவில்லை.
“பிணத்தைத் தூக்கி உள்ளே போடு…”
தூரத்திலிருந்து கத்தினார்கள்.
பிவா அவ்வாறு செய்யவில்லை. பிரேதத்தைத் தூக்கி குனிந்து மெதுவாக உள்ளே இறக்கி படுக்க வைத்தான். அவன் மகள் இறந்தபோது இருக்கிற கண்ணீரெல்லாம் முழுவதுமாக வெளியேறி வற்றிவிட்டது. மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆசுவாசம் அழுகை மட்டுமே. அது கண்ணில் சுரந்துகொண்டிருக்கும் வரை வாழ்வில் எந்த சோகத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். இப்போது சிந்துவதற்கு கண்களில் நீர் இல்லை. தொண்டையில் கட்டி உருவாகி முழுவதும் அடைத்துவிட்டது போல் உணர்ந்தான். வாயெல்லாம் உலர்ந்து, உதடுகள் வெளுத்துவிட்டன. அடுத்த சாவு நானாகத்தான் இருக்கும். அவன் நினைத்துக்கொண்டான்.
“மண்ணைத் தள்ளி குழியை மூடு…”
மீண்டும் சத்தம் கொடுத்தார்கள். அவர்கள் போதும் என்று சொல்லுகிற வரை மண்ணை அள்ளி போட்டுக்கொண்டே இருந்தான். குழியளவிற்கு மேடாக்கி கல்லறை போல் ஆக்கினான்.
“சரிப்பா…வேலை முடிந்துவிட்டது. நாங்கள் போகிறோம்”.
காகிதத்தில் சுற்றப்பட்ட இரண்டு சப்பாத்திகளையும், தண்ணீர் பாட்டிலையும் கீழே வைத்தார்கள். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிடாமல் இருக்க அதன் மீது சிறு கல்லைத் தூக்கி வைத்தார்கள். நூறு ரூபாய் இதிலே இருக்கிறது எடுத்துக்கொள்.
வந்தவர்கள் அனைவரும் முகக் கவசங்களை சரி செய்துகொண்டார்கள். மிகப் பெரிய வேலையை மிக எளிதாக முடித்துவிட்ட திருப்தியில் சமூக இடைவெளிவிட்டு ஊருக்குள் திரும்பிப் போனார்கள்.
பிவா பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தான். காகிதத்தை பிரித்த போது, அதில் தடித்த இரண்டு சப்பாத்தியும், பு+ண்டு சட்னியும் இருந்தன. சட்னியை சிறிது எடுத்து நாவில் தடவினான். வாயில் எச்சில் ஊறியது. கரகரப்பான வாசனை மூக்கைத் துளைத்தது. செரிமான உறுப்புகளெல்லாம் இயங்காததினால் அவனுக்கு பசியெல்லாம் இல்லை. சப்பாத்திகளை காகிதத்தில் சுருட்டி பேன்ட் பைக்குள் திணித்து, ரூபாய் நோட்டுக்களை எண்ணி சட்டைப் பைக்குள் வைத்தான்.
புலம்பெயர்ந்து போய் வேலை செய்து வாங்கிய சம்பளத்தையும், தற்போது இந்த வேலைக்குக் கிடைத்திருக்கும் கூலியையும் ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைத்தான். கடைசியாக புதை மேட்டின் மீது பாதங்களால் சிறிது மண்ணைத் தள்ளிவிட்டான்.
‘எனக்கு இது மாதிரி மரணம் வந்தால், நடந்து வரும் வழியில் எனது குடும்பத்தின் மூன்று உயிர்கள் ஒவ்வொருவராக பலியானதை, ஊரிலுள்ள அம்மாவும், அண்ணனும் எப்படி தெரிந்து கொள்வார்கள்? எனது உயிர் பிரியும் போது, அது எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் நிகழ வேண்டு’மென்று நினைத்தான்.
கையில் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வந்தான். சூரியன் தனது நெருப்புக் கோளத்திலிருந்து வெப்பத்தை பூமியின் மீது இறக்கிக்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை உக்கிரமான வெயிலை உள்வாங்கி அதை அப்படியே வெளியிட்டது. வானத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவனுடைய உடம்பின் தோலுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.
சாலையில் நடந்தான். சட்டைப் பையில் உள்ள நூறு ரூபாய் அவனுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்தது. எதிர்காலத்தை நோக்கி வாழும் மனிதனின் இயல்புதான் இக்கட்டான சூழலிருந்து அவன் மீள உதவுகிறது.
இந்த நூறு ரூபாயை எந்த லாரிக்காரரிடம் கொடுத்தாலும் ஊரில்கொண்டுபோய் இறக்கி விட்டுவிடுவார். வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்.
நன்றி: இண்டியன் லிட்டரேச்சர்- 322
கொங்கணி மூலம் : தாமோதர் மௌசோ
ஆங்கிலம் வழி, தமிழில்: மாதா

மூலக் கதை ஆசிரியர் தாமோதர் மௌசோ அவர்களைப் பற்றி…..
தாமோதர் மௌசோ கொங்கணி மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளர். அடிப்படையில் சிறுகதைகள் அதிகம் படைப்பவர் என்றாலும், சிறுகதைகளும், நாவல்களும் அவருடைய படைப்புக் களமாக உள்ளது. இதுவரை அவர் கொங்கணி மொழியில் பதினேழு நூல்களும், ஆங்கிலத்தில் ஒரு நூலும் வெளியிட்டுள்ளார். மிக ஆழமான இலக்கிய விமர்சகரான இவரது நூல்கள் மராத்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன. “ கர்மெலின்” என்ற தமது முதல் நாவலுக்கு “சாகித்ய அகாதமி” விருது பெற்றவர்.
வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் பெற்றோர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் அமர்த்தப்படும் கோவா மாநிலப் பெண்களது பாடுகளையும், இன்னல்களையும் வடித்திருந்த அந்த நாவல் பதின்மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியங்கள் கூடப் பேசாத அந்தக் கருப்பொருளைத் தமது நாவல் பேசியது என்று சொல்லும் மௌசோ, கொங்கணி இலக்கிய வரலாற்றில் கத்தோலிக்க சமூகம் பற்றிய முதல் பதிவும் இது தான் என்று சொல்கிறார். “சுனாமி சிமோன்” என்ற நாவலுக்கு” வி.வி. பை புரஸ்கர்;” விருது வழங்கப்பட்டது. கோவா அரசின் கலாச்சார விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு ஒன்றிய அரசு, இலக்கியத்தில் மிக உயர்ந்த விருதான “ஞான பீட” விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர் மாதா எனும் மா தங்கராசு அவர்களைப் பற்றி ….
பள்ளி இறுதிக் கல்வி வரை மட்டுமே படிக்க முடிந்த எளிய நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த மா தங்கராசு அவர்கள், அயல் மொழி இலக்கியங்களை வளமான தமிழில் மொழி பெயர்த்து வருபவர், இது வரை 21 மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மாதா என்ற இவரது புனைபெயரில் வெளியாகியுள்ளன. பல்வேறு விவாதப் பொருள்கள் மீதான 32 கட்டுரைகளும் படைத்துள்ள இந்த உற்சாகமிக்க 63 வயதுக்காரர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர். சமூக செயல்பாட்டாளர்.
தனிமை – மாதா

சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப் போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள், ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றி வாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத் தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது.
18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சந்தைப் பொருளாதாரம் உருவாகி முதலாளித்துவத்தின் குழந்தையாக தனிமை பிறந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகமான விவாகரத்துகளினாலும், பிறப்பு விகிதம் குறைவினாலும், கணவன், மனைவி இருவரும் வெளியே வேலைக்குச் செல்வதாலும் தனியாக வாழும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. குடும்பம் சிதைவதாலும், சமுதாய நெருக்கடிகளாலும் சிலர் தனிமையில் வாழ்கிறார்கள். சக மனிதர்களிடமிருந்து விலகியோ, விலக்கி வைத்தோ இருப்பதிலிருந்துதான் தனிமை உருவாகிறது. செய்த பாவங்களுக்குத் தண்டனையாக கூட சிலர் தனிமையை நினைக்கிறார்கள். அவர்கள் நரகத்திலோ, சுடுகாட்டிலோ, பாலைவனத்திலோ இருப்பது போல் உணர்கிறார்கள். நகரங்களின் நெருக்கமும், இரைச்சலும் தனிமையை மேலும் வளர்க்கிறது.
தற்கால தனிமை என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பது மட்டுமல்ல, தனிமை மக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், காதலி, காதலன் உடனிருந்தாலும் கூட சிலர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். சமூகத்தைப் பற்றிய பயமும் தனிமையை உறுதி செய்கிறது. மனதளவில் உறுதியானவர்கள் கூட தனிமைப்பட்டு தளர்ந்துவிடுகிறார்கள். மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனம் விரைவில் வெறுமையடைகிறது.
தனிமை என்பது காரணம் தெரியாத உடல் நலக் குறைவா? நோயியலில் இருதயக் கோளாறு, நீரழிவு நோய், சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை விட தற்காலத்தில் பொதுவாக அறியக்கூடியது தனிமைதான். தொற்று நோயைப் போல பரவிவரும் தனிமை எவ்வாறு உருவாகிறது, அதைத் தீர்ப்பததற்கு வழி என்னவென்று பல முனைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தனிமை என்பது ஒரு உணர்வு. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் இருந்து, அவர்களில் நமக்கு ஒருவருமே தெரியாமல் இருந்தால் நாம் தனிமையை உணர்கிறோம்.
சுமார் 1500 பேர் உங்கள் முகநூலில் இணைந்திருக்கலாம். அதில் பாதிப்பேருக்கு மேல் “லைக்” போட்டு உங்களை தொடர விரும்பாதவர்கள். மீதியுள்ளோர் பள்ளி கல்லூரித் தோழர்கள், குறிப்பிட்ட அரசியல், சாதி அமைப்;பைச் சேர்ந்தவர்கள்,திடீர் நண்பர்கள் ஆகியோர் இருக்கலாம். இவர்களிடம் நாட்டு நடப்புகள், சமூக நிகழ்வுகள், மேற்போக்கான குடும்ப விஷயங்கள், தன்னுடைய “சாதனைகள்” ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவர்களோடு இணையம் மூலம் உரையாடல் நடத்தலாம்;. ஆனால் இவர்களெல்லாம் நமக்கு அப்பால் இருப்பவர்கள். இது படிப்படியாக உயர்ந்து பின் போதையாக மாறிவிடுகிறது. இவற்றினால் தனிமையைப் போக்க முடியாது. தனியர்களுக்கு சமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, இணைய தளம் அல்ல.
ஒருவர் கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். இருபது பேர் ஒரே வீட்டில் பழகுகிறார்கள். ஒன்றாக உணவருந்துகிறார்கள். யாரிடமும் மனதளவில் உறவு இல்லை. மனம் விட்டு பேசமுடியாது. சமூகத்தோடு இணைந்து வாழமுடியவில்லை. இதுதான் தனிமை.
ஒருவர் தனியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள். அவர் தனிமை கிடையாது. உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனியாக சோதனை செய்கிறார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார். ஆனல் உலகம் முழுக்க அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள் அது தனிமை இல்லை.

மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தனிமை இல்லாமலி;ருப்பது சிறுவர்களாக இருக்கும் போது மட்டும்தான். இளமைக் காலத்தில் நாம் ஓர் ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சு+ழ இருந்தாலும் அந்த தனிமை கூடவே இருக்கிறது. அதைப் போக்குவதற்கு வாசிப்பும், செயல்பாடும் சிறந்த வழியாக இருக்கும். நாம் ஏன் செயல்பட வேண்டும்? இரண்டு விஷயங்களை நாடுகிறோம். ஒன்று நம் இருப்பை வெளிப்படுத்த செயல்படுகிறோம.; நம்மை பிறருக்குத் தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும் இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றை சிறப்புற செய்;துகொண்டிருக்கிறோம் என்று நாம் உணர வேண்டியிருக்கிறது. அங்கீகாரம், மனநிறைவு இரண்டும் தனிமையை அகற்றுபவை.
என்னால் எங்கும் தனிமையாக இருக்க முடியும். எனக்குத் தனிமைதான் பிடிக்கும் என்று சிலர் சொல்லக்கூடும். கைபேசியும், இணையதளமும் இல்லாவிடில் அத்தகைய தனிமை அவருக்கு குட்டிச் சாவாக இருக்கும். பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவே முடியாதவர்களாக இருப்பார்கள். சமூக வலைத் தளங்களில் வம்புகளைத் தேடியலைந்து கொண்டிருப்பார்கள்.
முதுமையில் குடும்பம் எனும் பொறுப்பு இல்லாமலாகி, உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிடுகின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ள முடியாததாக, அயலானதாக உள்ளது. இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன் சலிப்பு தனிமையை உருவாக்குகிறது. சிலர் அரசியல், சாதி, மதச் செயல்பாடுகள், குடும்ப சிக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். மனதிற்குப் பிடித்த ஏதாவது ஒரு துறையில் சேவையில் ஈடுபடுவது தனிமையை இல்லாமலாக்கும். இத்தனிமையின் விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். இதில் மாற்றம் இல்லாதவர்கள் அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். குடி உட்பட சிக்கலில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.
உலகில் உள்ள முதியவர்களில் பத்தில் ஒருவர் இந்தியாவில் உள்ளார். இதில் பாதிப் பேர் தனிமையில் வாழ்கிறார்கள். வறுமை, நோய், தனிமை ஆகியவை பெரும்பாலான முதியவர்களைப் பீடித்திருக்கிறது. இந்த மூன்றில் மனரீதியாக அதிக துயரமளிப்பது தனிமையே. பிள்ளைகள் விலகி வெளிநாடுகளுக்கு, வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும் போதே மரியாதைக் குறைவாக நடத்துதல், கவனிப்பு இன்மை, அலட்சியம் போன்றவைகள் உளவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு தனிமை உணர்வை உருவாக்குகின்றன. எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க முடியாமல் தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள். குடும்பத்திலும், வெளியிலும் அவமானங்கள் வருகின்ற போது எதற்காக இந்த உசிரை வச்சிக்கிட்டு இருக்கனும். செத்துத் தொலைக்கலாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் குடிபோதைக்கு அடிமையாகி தங்களை அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.
இலக்கியத்தில் தனிமையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 1667ல் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கம் என்ற கவிதைத் தொகுப்பில் தனிமையைப் பற்றி விவரித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் தனிமையைப் பற்றி முதன்முதலாக வந்த செய்தி இதுதான் என அறியப்படுகிறது.
ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் எழுதிய, உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பந்தயம்” என்ற கதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தனிமைப்பட்டு, கதை முடிவில் பணம் பெரிதல்ல, தனிமனித வாழ்க்கையும், சுதந்திரமுமே முக்கியம் என்பதை கதாபாத்திரத்தின் மூலம் செகாவ் வெளிப்படுத்தியிருப்பார். தனிமையில் இருந்த காலத்தில் அந்த மனிதன் உலக இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் வாசித்தே தனிமையை வீழ்த்தியிருப்பான்.
தனிமையில் வாழ்ந்து வரும் பேக்கரி உரிமையாளரான ஒரு முதிர்கன்னி, தனது வாடிக்கையாளர் ஒருவருடன் ஒரு தலைக் காதல் ஏற்பட்டு, எதிர்பாரா முடிவாக அக்காதல் தோல்வியில் முடியும். பின்னர் அப்பெண் தனது வாழ்வாதாரமான பேக்கரித் தொழிலையும், அதன் தொடர்ச்சியான ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிமையை வெல்லுவாள் என ஓ.ஹென்றி “சூனியக்காரியின் ரொட்டித்துண்டு” என்ற கதையில் விவரித்திருப்பார்.
தமிழில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “தனிமை” என்ற சிறுகதையில், வயதான தாயாரை தனமையில் விட்டுவிட்டு, அவளுடைய இரண்டு பெண் மக்கள் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விசாரித்து விட்டு, வளர்ப்பு மகளான நானே எனது பெற்றோரை விட்டுப் பிரிவதில்லை. பெற்ற மகள்களான அவர்கள் ஏன் உங்களைத் தனிமையில் விட்டுச் சென்றார்கள் என்று கேட்பாள். தனிமை எவ்வாறு உருவாகிறது என்பதை கதாசிரியர் விரிவாகச் சொல்லியிருப்பார்.
தனிமை மன அழுத்தத்தை தணிக்கும் என்பது திசை திருப்பும் முயற்சியே. தனிமையின் சோகம் சரிசெய்யக்கூடியது தான். காலத்திற்கு காலம் தனிமை மாறுபடுகிறது. நவீன கால தனிமையைப் போக்குவதற்கு பல வழிகள் திறந்திருக்கின்றன. அதே வேளையில் பலரும் நினைப்பது போல கேளிக்கைகள், பொழுது போக்குகள் எவருக்கும் தனிமையைப் போக்குவதில்லை. நாம் வாழ்நாள் முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருந்திருப்போம். ஆகவே முதிய வயதில் முழு நேரமும் ஓய்வும், கேளிக்கையுமாக வாழ வேண்டுமென்று கற்கனை செய்திருப்போம். ஆனால் அதிகம் போனால் ஓராண்டு அவ்வாறு ஈடுபட முடியும். அதன் பின் சலிப்பே எஞ்சும். ஏனென்றால் கேளிக்கையில் நாம் பார்வையாளர்கள். எந்த வகையிலும் பங்கேற்பாளர்கள் அல்ல. வெறும் பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும், உள்ளமும் செயலுக்காக வடிவமைக்கப்பட்டவை. செயலின்மையால் சோர்வும், சலிப்பும் அடைபவை. மற்ற ஈடுபாடுகளுடன் ஒப்பிடுகையில் வாசிப்பு மிக மேலானது. ஏனென்றால் அதில் நமது பங்கேற்பு இல்லாமல் முடியாது. வாசிப்பையொட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும் செய்யக்கூடியது அல்ல.
இலக்கிய வாசிப்பு மன அழுத்தத்தை, வெறுமையைக் குறைத்து, கதையில் உலவும் பாத்திரங்களோடு உரையாட வைக்கிறது. கதையோடு இணைந்து புத்தகம் வாசிப்பவரும் புதிய வாழ்க்கையை வாழ முடியும். நேருக்கு நேர் உரையாடலும், எழுதுதலும் மனிதரின் தனிமையைக் குறைக்கும். வாசிப்பதினால் உலகில் எப்போதும் தனிமையை பொழுது போக்கு அம்சமாகவே நாம் உணரலாம். வhசித்த இலக்கியக் கதாபாத்திரங்களின் அனுபவங்களை நம் அனுபவங்களாக உணர்ந்து, அதன் நாயகர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அது அளிக்கும் வெவ்வேறு உலகங்களில் நாம் மானசீகமாக வாழலாம்.




