வசந்ததீபனின் கவிதைகள்
ஆழ்நிலை சஞ்சலம்
*****************************
கசங்கி உளையும் மனம்
வாதையின் ஊடே வெளிப்படும்
தழலின் துளிர்ப்பில் கங்கெனச் சுடரும்
ஆறாத ரணம் உள்ளுள் கனியும்
நலிந்த உடலின் வலி
வெயில் பொழுதில் கிணற்றுள் குருவிகள்
கீச்சாட்டம் கொடிகட்டும் கூத்தாட்டம்
படமாய் விரிந்தபடி
கவினுறு கொண்டாட்டம்
பிரியங்கள் பெருக்கெடுத்தோடுகின்றன
எங்கு நோக்கினும் மலர்க்காடுகள்
பட்டாம்பூச்சியாய்ச் சுற்றித் திரிகிறேன்
எனக்குரியதை எனக்குக் கொடு
உனக்குரியதை நீ வைத்துக் கொள்
அவரவர்க்குரியது அவரவர்க்கு
மீன் கொடுக்காதே
பிடிக்கக் கற்றுக் கொடு
போராட்டம் தரும் பொன்னுலகு
அழகை மட்டும் எழுதமாட்டேன்
அருவருப்பையும் கூறுவேன்
வாழ்வின் சகல கூறுகளையும் சித்திரங்களாய் வரைவேன்
புனைவு போதையில் புதையாதே
எரியும் வாழ்வை ஏறிட்டுப் பார்
சாம்பலாகாமல் தப்பி விடுவாய்
கண்ணீரில் எழுதிய கவிதை
காற்றில் பறந்தோடுகிறது
கைப்பற்ற எண்ணம் இல்லை
உறவினன் வேஷமிட்ட ஓநாய்
உங்கள் செல்லமகளை
தின்றிட அலைகிறது
உஷார் உஷார் உஷார்
ஹிட்லர்களை விட கோயபல்ஸ்கள் அபாயகரமானவர்கள்
கனவுகளைத் தின்னும் பெருச்சாளி
கரன்சிகளை வேட்டையாடுகிறது
கண்களைத் திறவுங்கள் கோமணமாவது மிஞ்சட்டும்
உரத்து ஒலிக்கும் என் குரல்
ஒளிந்து பயந்து ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி ஒடுங்காது
தடை உடைக்கும் மடை திறக்கும் படை வெல்லும்
விவசாயத்தைச் சீரழித்தீர்கள்
விவசாயிகளை சித்திரவதைக்குள்ளாக்குகிறீர்
சோத்துக்கு சிங்கி அடிக்கப் போகிறீர்கள்.
இலைகளில் தள்ளாடுகிறது மழைநீர்
*********************************************
இரு…
இருக்கமாட்டேன்..
இருப்பை தீர்மானிப்பது நீயல்ல
ரோட்டோர நாணல்
பாட்டொன்று பாடுது
போதையின் மயக்கம்
பாதையில் பலி கேட்கும்
ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடும் வரை ஆடிவிட்டு
ஓடு பாம்பே நீ… ஓடு பாம்பே…
எச்சரிக்கை
குழந்தைகளை விட்டு அகலாதீர்கள்
மிருகங்கள் உங்களுக்குப் பரிச்சயமானவை
அடர் வனத்துள் தேடுகிறேன்
ஆறு குளம் நீரோடைகளில்
எங்கும் காணாம்
இசைமலர்
இருதயத்திற்குள் பூத்திருக்கிறது
அடிவாரம் அமைதியாயிருக்கிறது
உச்சியிலிருந்து ஒரு மலர் விழுகிறது
கனவிலிருந்து விழித்தெழுகிறேன்
பேசினார் கேட்டேன்
பேச முடியாமல் போனது
கடலைத் தொழுகிறேன்
அலைகள் எழும்பி ஆசீர்வதிக்கின்றன
ஆனந்தக் கூத்து
குற்றவாளியின் கண்களை உற்றுப்பாருங்கள்
குற்றங்களின் பட்டியல் வெளிப்படும்
இருதயத்திற்கு கதவுகள் உண்டு
பேரம் பேசுங்கள்
பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் ஆதியோகி
கல்லாய் சமைந்திருக்கிறான்
பூமியின் மீது அக்கறை கொள்ளுங்கள்
வானத்தையே ஏறிட்டுக் கொண்டிருக்காதீர்கள்
மனிதன் வாழ வேண்டும் ஆளற்ற வீதி
இரவு முணுமுணுக்கிறது பிறை நிலா
மேகத்திற்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது ஆதியோகி
கண்களைத் திறக்கவில்லை
துரோகங்கள் பகடை ஆடின
சம்போ.. சம்போ.. சம்போ.. சம்போ….
