நூல் அறிமுகம்: உஷா தக்கரின் “காங்கிரஸ் வானொலி” – அருண்குமார் நரசிம்மன்

நூல் அறிமுகம்: உஷா தக்கரின் “காங்கிரஸ் வானொலி” – அருண்குமார் நரசிம்மன்இந்திய விடுதலைப்போராட்டமும் காங்கிரஸ் வானொலியும்

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியிடமும் பிறகு பிரித்தானியா ஆங்கிலேய அரசிடமும் 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த 200 ஆண்டுகளில் நம் இந்தியர்களை ஆங்கிலேய பிரித்தானிய அரசும் அதன் அதிகாரிகளும் எவ்வாரெல்லாம் கொடுமை செய்து துன்புறுத்தினார்கள் என்பது உலக சரித்திரத்தில் இந்தியர்களின் குருதியால் அழிக்க முடியாவண்ணம் எழுதப்பட்டுள்ளது.
நம்முடைய விடுதலை போராட்டதை பற்றியும் ஆங்கிலேயர்களின் கோரத்தாண்டவத்தையும் இந்தியாவின்
பாமர மக்களுக்கும் நமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் (அச்சு மற்றும் வானொலி) பங்கு மிகப்பெரியதாகும்.

இந்தியாவின் சாமானிய மக்களுக்கு அச்சு ஊடகத்தின் மூலம் அவர்களின் சுதந்திரப் போராட்ட தாகத்தினை அச்சுஊடகத்தார் தணித்தனர். அதேவேளையில் வானொலி தொழில்நுட்பம் தெரிந்த சிலர் வானொலி மூலம் அந்த தாகத்தினை போக்க முயற்சி செய்தனர்.

அதன் ஒரு முயற்சி தான் அன்றைய பம்பாய் நகரில் தலைமறைவாக நடத்தப்பட்ட “காங்கிரஸ் ரேடியோ.” 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவங்கினார். அப்போது 22 வயதேயான உஷா மேத்தாவும் அவரின் நண்பர்களும் காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை இயக்கி ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மண் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.

Congress Radio - Penguin Random House India

உஷா மேத்தாவின் இந்த சாகசத்தை பற்றி அவரால் ஈர்க்கப்பட்ட உஷா தாக்கர் காங்கிரஸ் ரேடியோ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பென்குவின் பதிப்பகத்தாரால் இந்த புத்தகம் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் வானொலியின் பங்கை பற்றி தெரிந்து கொள்ள 288 பக்கங்களை கொண்ட இந்த காங்கிரஸ் ரேடியோ புத்தகம் உதவும்.

இந்தியாவில் எங்கிருந்தோ 42.34 மீட்டர் அலைவரிசையில் இது உங்கள் காங்கிரஸ் வானொலி என்று உஷா மேத்தாவின் குரல் தேசம் முழுவதும் ஒலித்ததாக நூலாசிரியர் உஷா தாக்கர் இந்த புத்தகத்தை துவங்குகிறார். இந்த வானொலி மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் மக்களுக்கு தேசபற்றுஊட்டும் விடயங்களையும் ஒலிபரப்பி வந்தது.

இந்த வானொலியானது சிட்ட காங்கிலிருந்து ஜாம்ஷெட்பூர் வரை அன்றாடம் நிகழும் விடுதலை போராட்ட நிகழ்வுகளை பற்றிய செய்திகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து வழங்கியது. காங்கிரஸ் வானொலியை உஷா மேத்தாவும் அவரின் சகாக்களும் மூன்று மாதங்கள் பம்பாயில் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பிகளை ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களில் மன் தூவி ரகசியமாக வைத்து ஒலிபரப்பு செய்து வந்தனர்.

இதற்குண்டான கருவிகளை கமுக்கமாக பல்வேறு நிறுவனங்களிருந்தும் நபர்களிடமிருந்தும் பெற்று நடத்தி வந்தனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது உஷா மேத்தாவும் இந்த வானொலியை நடத்தி வந்தவர்களும் அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பாபுபாய் காக்கர் இந்த வானொலி நடத்த நிதியை திரட்டினார், முக்கிய சோசியலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா, சந்திரகாந்த் ஜாவேரி மற்றும் விட்டல்தாஸ் கே. ஜாவேரி ஆகியோர் இந்த வானொலி இயங்க பெரிதும் உதவினர்.

இந்த நிறுவனத்தின் தலைமை அமைப்பாளராக, விட்டல்தாஸ் ஜாவேரி, ரேடியோ பொறியியலில் நன்கு பயிற்சி பெற்ற நரிமன் அபர்பாத் பிரிண்டரை அணுகி, காங்கிரஸ் வானொலிக்கு ஒலிபரப்பிற்கான கருவிகளை தயாரிக்க கேட்டுக்கொண்டார். பம்பாயின் சிகாகோ வானொலி நிறுவனத்தின் உரிமையாளரான நானிக் மோத்வானி இந்த வானொலிக்கான உபகரணங்களை வழங்கி உதவி செய்தார்.

இந்த புத்தகம் படித்து முடித்தபின் எனக்கு ஒரு திரில்லர் கதை படித்த உணர்வு வந்தது அதேபோன்று இந்த வானொலி புத்தகத்தை படிக்கும் உங்களுக்கும் வரும் என்று நான் நம்புகிறேன்.

– அருண்குமார் நரசிம்மன்

ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்

ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில் கூடுதலாக 26% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி அவர்களுடைய குழுமத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடையசெய்தது. மேலும் மோடி அவர்களின் நெருக்கமானவராக அறியப்பட்ட அதானியின் குழுமம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பெரிதும் பாதிக்கபடும் என்கிற அச்சத்தைப் பலரும் வெளிபடித்தியுள்ளனர்.

இந்நிலையில் அதாணி குழுமத்தால் எப்படி என்டிடிவியின் பங்குகளை வாங்க முடிந்தது? ஏற்கனவே அம்பானி போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதானியின் இந்த முயற்சி என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆங்கில ஊடகங்களில் பலரும் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சோதனை முயற்சியாக தூர்தர்சன் என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் வாயிலாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1965-ம் ஆண்டு முதன் முதலில் தூர்தர்சன் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இப்படி தொடங்கிய இந்திய செய்தித் தொலைக்காட்சி யின் வரலாற்றில் அடுத்து 30 ஆண்டுகள் தூர்தர்சன் மட்டுமே முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தது. இந்தியாவில் 90களுக்குப் பிறகுப் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அலைக்கற்றைகள் தொடர்பாக வழங்கிய முக்கியமான தீர்ப்பின் காரணமாகவும் தனியார் தொலைக்காட்சியின் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த பின்னணியில் 1998-ம் ஆண்டு என்டிடிவி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியதுதான் இந்தியாவின் முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகும்.

என்டிடிவியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவின் சில நகரங்களுக்கு மட்டுமே இருந்த தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை 1982-ல் தேசிய ஒளிபரப்பாக விரிவாக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் தனியார் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியான ஒரு நிகழ்ச்சி தாயரிப்பு நிறுவனமாக 1988-ம் ஆண்டு பிரனாய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர்களால் தொடங்கப்பட்டது தான் என்டிடிவி நிறுவனம்.

முதல்கட்டமாக அதே ஆண்டு “உலகம் இந்த வாரம்” என்கிற நிகழ்ச்சி தயாரித்தது என்டிடிவி இந்நிகழ்வு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. உலகில் நடந்த சில மிக முக்கியமான நிகழ்வுகளை அலசும் செய்தித் தொகுப்புதான் இந்நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பைப் பெற்றதுடன் இந்திய செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் இந்நிகழ்ச்சித் தொகுப்பை ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.

அதற்குப் பிறகு தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்குவது பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்துவது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தூர்தர்சன் தொலைக்காட்சிக்குத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி நிறுவனம். மேலும் 1995-ம் ஆண்டு முதல் முறையாக தினமும் இரவு எட்டு மணி செய்தியை நேரடி ஒளிபரப்பாகத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி. இந் நேரடி ஒளிபரப்பிற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாகவும் இருப்பினும் என்டிடிவி நேரடி ஒளிபரப்பைச் சாமார்த்தியமாகத் தொடர்ந்து ஒளிபரப்பியதாக என்டிடிவியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டப் புத்தகத்தில் பிரனாய் ராய் குறிப்பிட்டுள்ளார்.

1998-ம் ஆண்டு ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது என்டிடிவி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமாக 6 பணியாளர்களுடன் தொடங்கி 1998-ல் 300 பணியாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது என்டிடிவி நிறுவனம். 1999-ல் ndtv.com இணையதளம் தொடங்கப்பட்டது மேலும் அதே ஆண்டில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் ஆரம்பித்தது. மத்திய அரசின் முன்னாள் தகவல் ஒலிபரப்பு துறை செயலராக இருந்த ரதிகாந்த் பாசு ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவரை ஸ்டார் என்டிடிவி இடையேயான உறவில் பெறும் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர் இடத்தில் பீட்டர் முகர்ஜி வந்த பிறகு இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை அடுத்து 2003-ம் ஆண்டு தனியாக என்டிடிவி 24×7 என்கிற ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியும் என்டிடிவி இந்தியா என்கிற இந்தி செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டன. என்டிடிவி ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி தொடங்கிய சில வாரங்களில் ஹெட்லயன்ஸ் டுடே (தற்போதைய இந்தியா டுடே டிவி) ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் அது என்டிடிவி சேனலுக்கு எந்த வகையிலும் போட்டியாக அமையவில்லை.

ஆனால் 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டைம்ஸ் நொவ் (Times Now) அதற்க்கு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்ட சிஎன்என் (CNN) போன்ற செய்தி சேனல்கள் அதுவரை தனியார் செய்தித் தொலைக்காட்சிப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்த என்டிடிவியைப் பின்னுக்குத் தள்ளியது. தொடங்கிய சில வருடங்களிலேயே முதல் இரண்டு இடங்களையும் இந்த சேனல்கள் கைப்பற்றின. என்டிடிவியில் பயிற்சி பெற்றவர்களான ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரும் இச் சேனல்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நிறுவனமாக இருந்த என்டிடிவி 2004-ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனமாக மாறுகிறது. அதற்கு அடுத்த ஆண்டு ராய் இணையரால் ஆர்ஆர்பிஆர் என்கிற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் உடனடியாக என்டிடிவியில் தங்களுக்கு இருந்த 60% பங்குகளில் 29% பங்குகள் மாற்றுப்படுகிறது. அதே நேரத்தில் என்டிடிவி நிறுவனம் அசுர வேகத்தில் விரிவாக்க முயற்சிகளைத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு என்டிடிவி ப்ராபிட் (NDTV Profit) என்கிற வணிகச் செய்தி சேனல் தொடங்கப்பட்டது. பிறகு மெட்ரோ நேஷனல் உடன் இணைந்து கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் பிராந்திய மொழியில் செய்திச் சேனல்களைத் தொடங்க முயற்சி செய்யப்பட்டது ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், உலக அளவில் செய்தி சேனல்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதன் வழியாக மலேசியா நாட்டில் அஸ்ட்ரோ என்கிற 24×7 செய்தி சேனலைத் தொடங்குவதற்கு உதவியது. 2006-ம் ஆண்டில் ரேடியோ சேனல் ஒன்றை தொடங்குவதற்காகச் செய்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. மேலும் தொலைக்காட்சி சேவையைத் தாண்டி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து சேவை வழங்குவதற்குத் தொடங்கப்பட்ட என்டிடிவி லேப்ஸ் (NDTV Labs) நிறுவனமும் நீண்ட காலம் தொடர்ந்து நடத்தப்படவில்லை.

இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையான வருமானம் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைத்துவருகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக என்டிடிவியின் விளம்பர வருமானம் பெறும் சரிவைச் சந்திக்க தொடங்கியது. அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஒரு புறம் வருமானத்தில் நெருக்கடி உருவான அதே நேரத்தில் பல விரிவாக்க முயற்சிகள் தோல்வியடைந்ததின் காரணமாகவும் 2005 வரை லாபம் ஈட்டி வந்த என்டிடிவி நிறுவனம் அடுத்த வந்த சில ஆண்டுகளில் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.

அதானி குழுமம் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் வரலாறு

இப்படியான சூழலில் 2007-ம் ஆண்டு குளோபல் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிறுவனத்திடம் இருந்த 7 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் ராய் இணையர் இறங்கினர். இதற்குப் போதுமான நிதி இல்லாததால் இந்தியா புல்ஸ் (India Bulls) என்கிற நிதி நிறுவனத்திடம் இருந்து 501 கோடி ரூபாய் கடன் பெற்றனர் ராய் இணையர். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி அடைகிறது 400 ரூபாயாக இருந்த என்டிடிவியின் பங்குகள் 100 ரூபாயாக சரிந்தது.

இத்தகைய சூழலில் இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே அக்கடனை அடைப்பதற்கு ஐசிஐசிஐ வங்கியிடமும் (ICICI Bank) இருந்து 350 கோடி ரூபாய் கடனை 19% வட்டியுடன் பெறுகின்றனர் ராய் இணையர். பிறகு வங்கி கடனை அடைப்பதற்கு அம்பானியின் பினாமி நிறுவனம் என்று நம்பப்படுகிற விபிசிஎல் (VPCL) நிறுவனத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு 403 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். மேலும் ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடனைத் திருப்பித்தராமல் போகும் பட்சத்தில் அதனிடம் உள்ள என்டிடிவியின் 29% பங்குகளை விபிசிஎல் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்துடன் தான் அக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபிசிஎல் நிறுவனத்தின் கணக்கில் கடன் வழங்கும் அளவிற்குப் பணம் இல்லை என்பதும் இது ஒரு ஆலோசனை நிறுவனமாகத்தான் பதியப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பின்னால் தான் பொது வெளிக்கு வந்தது. இதனுடன் விபிசிஎல் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திடம் கடனை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு சிநோனா (Shinano) நிறுவனத்திடம் இருந்து அதே அளவு தொகையைக் கடனாக பெற்றுள்ளது தெரியவருகிறது. மேலும் விபிசிஎல் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதேபோல் சிநோனா நிறுவனமே ரிலையன்ஸின் ஒரு கிளை நிறுவனம் என்பதும் தெரியவருகிறது. இதனுடன் சிநோனா மற்றும் விபிசிஎல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலக முகவரியில் இயங்கிவந்தது என்பதும் வருமான வரித்துறை அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.

அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் விபிசிஎல் நிறுவனத்தை எமினென்ட் குழுமம் வாங்குகிறது இதன் முலம் என்டிடிவியின் 29% பங்குகளை எடுத்துக்கொள்ளும் உரிமத்தைப் பெறுகிறது அக்குழுமம். அந்த நிறுவனமும் கூட அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ள மகேந்திர நகாத்தா ( Mahendra nhata) அவர்களுடையதுதான். இந்த நிறுவனத்தைச் சில ஆண்டுகள் கழித்து சுரேந்திர லுனிய என்கிற நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது. இந்த பின்னணியில்தான் அதானி குழுமம் என்டிடிவியின் 29% பங்குகளைப் பெற்றுள்ளது. இதனுடன் கூடுதலாக மேலும் 26% பங்குகளை வாங்க உள்ளதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது. ஒருவேளை இதில் அதானி குழுமம் வெற்றி பெறும் பட்சத்தில் என்டிடிவியின் கட்டுப்பாடு ராய் இணையரிடம் இருந்து அதானி குழுமத்திடம் சென்றுவிடும்.

என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை

என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை தொடர்பான சச்சரவுகள் என்பது அதனுடைய தொடக்க காலகட்டந் தொட்டே இருந்து வருகிறது. 1997-ம் ஆண்டு பாராளுமன்றக் குழு என்டிடிவி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தூர்தர்சன் தொலைக்காட்சிக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்தது. அதனைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு சிபிஐ பிரனாய் ராய் மற்றும் தூர்தர்சனில் பணிபுரிந்த ரதிகாந்த் பாசு உள்ளபட பல அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கை நீண்ட காலம் விசாரித்த சிபிஐ 2013-ம் ஆண்டு முடித்து வைத்தது. இதில் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் கடைசி வரை நிரூபிக்கப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க தூர்தர்சனின் இயக்குனராக இருந்த ரதிகாந்த் பாசு (IAS Officer) 1996-ம் ஆண்டு திடீரென பணியில் இருந்து விலகுகிறார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளராகப் பதவி ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து என்டிடிவி மற்றும் ஸ்டார் இடையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையைழுத்தனாது. ஸ்டார் உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த பொழுதும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்டிடிவிக்குச் சாதகமாக இருந்ததாகவும் அதற்கு ரதிகாந்த் பாசு ஒரு முக்கியமான காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாகவே பாசுவிற்குப் பிறகு ஸ்டாரில் பொறுப்பேற்ற பீட்டர் முகர்ஜி கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதன் விளைவாகவே என்டிடிவி உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்ற விதமும் பல கேள்விகளையே நமக்கு எழுப்புகிறது. வாய்ப்பு இருந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் என்டிடிவியின் பங்குகளை வாங்கவில்லை போன்ற கேள்விகளுக்குப் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் 2009-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக லாபி செய்த ராடிய மற்றும் முன்னாள் எக்கானிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் பணிபுரிந்த வேணுவிற்கும் இடையில் நடந்த உரையாடலில் அம்பானியின் நெருக்கமானவராக கருதப்பட்ட மனோஜ் மோடி டெல்லிக்கு வர உள்ளதாகவும் நாம் பிரனாய் ராய்க்கு உதவு வேண்டும் என்று சொல்லும் ஆடியோ வெளியானது. இந்த பின்னணியில் தான் விபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து ராய் கடன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழாவில் 25 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அதில் அம்பானியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளில் அதானி நிறுவனத்திடம் 29% பங்குகளும் ராய் இணையருக்கு 32% பங்குகளும் எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிதி நிறுவனத்திடம் 9.75% பங்குகளும் விகாஸ் இந்தியா என்கிற நிறுவனத்திடம் 4.42% பங்குகளும் 29,691 தனிநபர்களிடம் 23.85% பங்குகளும் உள்ளன. எல்டிஎஸ் மற்றும் விகாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மொரிசியஸ் நாட்டில் இருந்து செயல்படுகின்றன. இதில் எல்டிஎஸ் நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடுகளில் 98% சதவித முதலீடுகள் அதானியின் நான்கு நிறுவனங்களில் உள்ளது. இது இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகிறது. எனவே என்டிடிவியில் அதானி குழுமத்தால் கூடுதல் பங்குகளை எளிதாக பெற முடியும் என்றே தோன்றுகிறது

இந்தியாவில் ஊடகங்களின் இன்றைய நிலை

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் போது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து செய்திகளை வெளியிட்டன. இந்திய ஊடக வரலாற்றில் இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் 2014-க்கு பிறகு நிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. பிரதான ஊடகங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை முழு பாய்ச்சலுடன் இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அமைச்சகத்தின் எந்தக் கோப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டதாக ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டது.

அதேபோல் வழக்கமாக அரசின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் பத்திரிக்கைகள் வழியாக தெரிவிக்கப்படும் ஆனால் பிரதமர் உள்ளபட அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகத்தின் வழியாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். திட்டக்குழுவைக் கலைத்து விட்டு நிதி அயோக் என்கிற அமைப்பை உருவாக்கியது போன்ற விடயங்களைப் பிரதமரின் சமூக ஊடகத்தில் வந்த பிறகே ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இது போன்று தகவல்களைத் தர மறுப்பதின் மூலம் மக்களுக்கு இருக்கும் பிரதான ஊடகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைத்து கொண்டிருக்கிறது இந்த அரசு. அதேபோல் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலான பிரதான ஊடகங்களை அரசின் ஊதுகுழல்களாக மாற்றுவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது இந்த அரசு.

இதில் இருந்து மாறுபட்டு செயல்படும் ஊடக நிறுவனங்களும் பத்திரிக்கையாளர்களும் பெறும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படி இந்த அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக நேரடியாகவோ அல்லது நெருக்கடி கொடுத்தோ பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் எடிட்டராக இருந்த பாபி கோஷ் 2017-ல் இந்திய சீன எல்லை பகுதியில் நடந்த உரசல்கள் தொடர்பாக அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டபோது நிர்வாகம் அவரை எச்சரித்தது. அதற்குப் பிறகும் அரசை விமர்சிக்கும் வகையில் சில செய்திகளை வெளியிடுகிறார் இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

கொரோனா இரண்டாம் அலையின் போது அரசு செயல்படவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் காணவில்லை என்கிற தலைப்பின் கீழ் தேடப்படும் நபர் இந்திய அரசாங்கம் என்றும், அதன் வயது 7 என்றும், அதை தேடுபவர்கள் இந்திய குடிமக்கள் என்கிற அட்டைப் படத்துடன் அவுட்லூக்கின் இதழ் ஒன்று மே மாதம் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அப்பத்திரிக்கையின் எடிட்டர் ரூபன் பானர்ஜியை வேலையில் இருந்து நீக்கியது அவுட்லூக் நிர்வாகம். கடந்த எட்டு ஆண்டுகளில் இப்படி பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது. அரசின் மிகவும் நெருக்கமான பத்திரிகையாகக் கருதப்பட்ட தைனிக் பாஸ்கரும் (Dainik Bhaskar) கொரோனா இரண்டாம் அலையின் பொழுது அரசைக் கடுமையாக விமர்சித்தது. அதன் எதிரொலியாக சில நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் ரைடு நடத்தப்பட்டது. அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்ட நியூஸ் கிளிக் இணையதளத்தின் அலுவலகத்திலும் இது போன்ற ரைடு ஒன்று நடத்தப்பட்டது.

அதேபோல் என்டிடிவியில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தேசப்பாதுகாப்பிற்கு எதிராக இருந்ததாக சொல்லி என்டிடிவியின் இந்தி சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பைத் தடை செய்தது இந்த அரசு. இதே கால கட்டத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ராய் இணையரின் வீடுகளில் சிபிஐ சோதனையும் நடத்தப்பட்டது. எனவே இந்த அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு நடுவிலேதான் செயல்படும் நிலை உள்ளது என்பதுத் தெளிவாகிறது.

இறுதியாக

என்டிடிவிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தொடக்க காலம் தொட்டே நெருக்கமான உறவே இருந்து வந்துள்ளது. 1998-ம் ஆண்டு நடந்த என்டிடிவி செய்தி நிறுவனத்தின் தொடக்க நிகழ்வு அப்போதைய பிரதமராக இருந்த ஐகே குஜராலின் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழா ஜனாதிபதியின் அலுவலகமான ராஷ்டிர பதி பவனில் நடைபெற்றது இதுவே அந்த அலுவலகத்தில் நடந்த முதல் தனியார் நிறுவனத்தின் நிகழ்வாகும்.

ஆனால் தற்போதைய அரசுக்கும் ராய் இனையருக்கும் இடையிலான உறவு அவ்வளவு இணக்கமானதாக இல்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களை என்டிடிவி காட்டிய விதங்களை அன்றைய ஆளும் அரசாக இருந்த மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் கடுமையாக விமர்ச்சித்ததுடன் அதனுடைய ஒளிபரப்பையும் தற்காலிகமாகக் குஜராத்தில் நிறுத்திவைத்தது. பிரதமர் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய மோடி அவர்கள் அரசு புலிகளைப் பாதுகாக்க ஒதுக்கிய நிதியில் தான் சில சேனல்கள் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தார். அதே காலகட்டத்தில் என்டிடிவி புலிகளைப் பாதுகாப்போம் என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவந்தது. இந்நிகழ்ச்சி தனியார் நிறுவனம் ஒன்றின் ஸ்பான்சர் செய்ப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் மோடி அவர்கள் மறைமுகமாக என்டிடிவியையே விமர்சித்தாக பலரும் கூறுகின்றனர்.

மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான முன்னனி செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி அளித்த மோடி என்டிடிவிக்கு மட்டும் பேட்டி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மோடி அவர்கள் தலைமயிலான அரசு பொறுப்பேற்ற பிறகு என்டிடிவி பலவகைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது. அதேபோல் அரசின் சில விடயங்களை விமர்சனப்பூர்வமாக அணுகியதற்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல சிக்கல்களை என்டிடிவியும் அதில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்களும் சந்தித்து வருகின்றனர். இதில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ரவிஸ் குமார் போன்றவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம்.

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது என்டிடிவியை ராய் இணையர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன என்றே சொல்ல தோன்றுகிறது. என்டிடிவியின் செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் இன்னும் அது அகில இந்திய அளவில் நம்பத்தகுந்த ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையிலும் இந்தியாவில் அதிகமான நபர்களால் (76%) நம்பத்தகுந்த ஊடகமாக என்டிடிவி திகழ்கிறது. இந்நிலையில் தற்போதைய ஆளும் அரசின் மிகவும் நெருக்கமாகக் கருதப்படுகிற அதானியின் கட்டுப்பாட்டிற்கு என்டிடிவி செல்லும் பட்சத்தில் அதனுடைய அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூரி

திரைவிமர்சனம்:  NIGHTCRAWLER – DAN GILROY – சிரஞ்சீவி இராஜமோகன் 

திரைவிமர்சனம்: NIGHTCRAWLER – DAN GILROY – சிரஞ்சீவி இராஜமோகன் NIGHTCRAWLER – DAN GILROY – 2014

நைட்கிராலர் என்ற ஒரு திரைப்படத்தைப் பற்றி இந்த விமர்சனத்தில் பார்ப்போம். ஜேக்கில்லன்ஹால் என்றொரு நடிகர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவருடைய கதை தேர்ந்தெடுத்தாலும் நடிப்பும் நம்ம ஊர் நடிகர் அருள்நிதி போல் இருக்கும். வித்தியாசமான கதைகளை தேடி எடுத்து நடித்து முடிப்பார்

கதைக்குள் போவோம். வேலையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தனக்கான வேலையை ஒவ்வொருவரிடம் கேட்டு கேட்டு அலுத்து போய் கிடைத்த வேலைகளை செய்து அன்றாட செலவுகளை சமாளிக்க சிரமப்படுகிறான். இடையில் ஏதோ ஒரு இடத்தில் சாலையில் வாகனங்கள் அடிப்பட்ட நிகழ்வுகளை விபத்துக்களை கேமராக்கள் மூலம் மீடியாக்கள் படம் பிடித்து அதை காசாக்குவதை தெரிந்து கொள்கிறான் தானும் அந்த தொழிலில் ஈடுபட கேமரா ஒன்றை வாங்கி அது போன்ற இடங்களுக்கு (ஆக்சிடென்ட் நடக்கும் இடங்களுக்கு) நியூஸில் பார்த்து சென்று படம் பிடிக்க முயற்சிக்கிறான். அதிலும் ஒரு சிரமம் ஏற்படுகிறது அவனுக்கு அதாவது காவல்துறையினர் பிற மீடியாக்கள் அனைவரும் வந்து சென்று படம் பிடித்து சென்ற பின்னே இவன் செல்ல நேரிடுகிறது. எப்படி காவல்துறையினரும் மீடியாக்களும் சீக்கிரமே அங்கு செல்கிறார்கள் என்பதை அலசி ஆராயும்போது அவனுக்கு சில தொழில்நுட்ப உதவிகள் தேவைப்பட்டது.

தன்னைப் போல வேலையில்லாத ஒரு இளைஞனை சந்தித்து அவனையும் தன் அசிஸ்டெண்டாக நியமித்துக் கொள்கிறான் தனக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை வாங்கிக் கொள்கிறான் அதாவது காவல்துறையினர் வாக்கி டாக்கில் பேசும் விஷயங்களை; ரகசிய கோடுகளை டிகோடு செய்து சம்பவ இடத்திற்கு சென்று படம் பிடிப்பது இந்த ஹேக்கிங் முறை. தொழில்நுட்பத்துடன் வெற்றி கண்டு சம்பவ இடத்திற்கு பிற மீடியாக்களுக்கு முன்னரே செல்கிறான் இருப்பினும் அவனுக்கு அதில் திருப்தி இல்லை காவல்துறையினருக்கு முன்னரே செல்ல வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். ஓரளவு வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலைமையில் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துகிறான் டி காவல்துறைக்கு வரும் கம்பளைண்ட் அவற்றினை வைத்து காவல்துறைக்கு முன் நேரமே சம்பவ இடத்திற்கு செல்லும் கதாநாயகனுக்கு பல திடுக்கிடும் காட்சிகளை வீடியோவாக படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 

படம் இங்கிருந்து விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது காவல்துறையினருக்கு முன்னமே இவன் எப்படி செல்கிறான் என்பது காவல்துறைக்கும் பிற மீடியாக்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து இவனுடைய வீடியோக்களை பார்த்து வியக்கின்றனர் நல்ல பணமும் காசும் இவனுக்கு கிடைக்கப்பெறுகிறது மேலும் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து தனக்கு தேவையானது என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வான் என்கிற மனநிலையை நம் அனைவருக்கும் இயக்குனர் உரித்தாக்கிக் கொண்டே வருகிறார் பல காட்சிகளில்

கதாநாயகன் ஒரு கொலை நடந்த இடத்திற்கு காவல்துறைக்கும் சக மீடியாக்களுக்கும் முன்னமே சென்று படம் பிடித்து விடுகிறான் கொலை நடந்த இடங்கள் அதற்கான கருவிகள் அனைத்தையும் படம் பிடித்தது மட்டும் இல்லாமல் கொலை செய்தவர்கள் வெளியே வரும் காட்சிகளையும் படம் பிடித்து விடுகிறான் இந்த ஒரு காட்சிக்கு இந்த படத்தை பார்க்கலாம். பின்பு தனது உதவியாளர் உடன் கொலை நடந்த இடத்தையும் அதற்கான கருவிகளையும் காசாக்கி விட்டு கொலைகாரர்களைத் தத்ரூபமாக படம் பிடித்த வீடியோ கிளிப்பை மட்டும் எடிட் செய்து வைத்துக் கொள்கிறான். காவல்துறையிலிருந்து அவனுக்கு விசாரணை வருகிறது எப்படி சென்றீர்கள்? எப்படி படம் பிடித்தீர்கள் என்னவென்றெல்லாம் உண்மையை கூறாமல் நான் இதை சரியாக சென்று கொண்டிருந்தேன் அப்போது சத்தம் கேட்டது அப்படியே படம் பிடித்தேன் கொலைகாரர்களை நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்கிறான். பின்பு கொலைகாரர்களின் வீடியோ கிளிப்பை வைத்துக்கொண்டு அவன் காசாக்கும் விதம் நம்மை பிரமிக்க வைக்கும் இதற்குப் பின் நடக்க போகும் சுவாரசியங்கள் அனைத்தும் நீங்கள் இந்த படத்தை பார்த்ததற்கான பரிசு.

பலம் : படத்தின் வித்தியாசமான திரைக்கதை திரில்லிங் அனுபவம், மெல்லிய பின்னனி இசை. 

பலவீனம் : மீடியா சம்பந்தப்பட்ட விஷயங்கள் டிஆர்பி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதற்கு உண்டான வசனங்கள் சற்றே குழப்பமாகவும் புரியாமலும் அமைந்திருக்கின்றன.

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

நன்றி
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்திருத்தி எழுதப்பட்ட வரலாறு
பாவண்ணன்

ஒரு பழைய வரலாற்றுச் செய்தி. முதலாம் நூற்றாண்டில் தோன்றிய காளிதாசர் சமஸ்கிருத மொழியில் சாகுந்தலம், மேகதூதம் போன்ற மிகமுக்கியமான நாடகங்களை எழுதியவர். முதல் நாடக ஆசிரியர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். ஆனால் அவருடைய காலத்துக்கு முன்பாகவே பஸன் என்னும் நாடக ஆசிரியர் வாழ்ந்தார். அவருடைய நாடகங்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும் பஸன் எழுதிய எந்தப் பிரதியும் கிடைக்கவில்லை. காவ்யமீமாம்சையில் பஸனைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு மட்டுமே கிடைத்தது. அந்தக் குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு பஸனுக்கு முதல் நாடக ஆசிரியர் என்னும் புகழை அளிக்க ஆய்வாளர்கள் விரும்பவில்லை. ஆதாரமான நாடகப்பிரதி எதுவும் இல்லாத நிலையில் பஸனை யாராலும் எந்த அவையிலும் முன்வைக்க இயலவில்லை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 1913இல் கணபதி சாஸ்திரி என்பவர் பஸன் எழுதிய சமஸ்கிருத நாடகங்கள் அனைத்தையும் மலையாளத்தில் எழுதிவைக்கப்பட்டு கொடியாட்டமாக அரங்கேற்றப்பட்டு வருவதைக் கண்டுபிடித்தார். அவர் எழுதிய பதின்மூன்று நாடகங்களும் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டு புத்தக வடிவம் கண்டன. தேசமெங்கும் அரங்கேற்றப்பட்டு பஸனுடைய புகழ் நிறுவப்பட்டது. உடனடியாக பஸனுடைய நாடகங்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அவரே முதல் நாடக ஆசிரியர் என்னும் உண்மை வரலாற்றில் திருத்தி எழுதப்பட்டது. பஸன் எழுதிய நாடகப்பிரதிகள் ஒன்றுகூட எஞ்சாதபடி எப்படி மறைந்தன என்பது ஒருவராலும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே உள்ளது.

தென்திருவிதாங்கூரில் முதன்முதலாக திரைப்படம் எடுக்கும் கனவில் தன் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடியவர் ஜே.சி.டேனியல். ஆனால் அவருடைய பெயர் திரைப்பட வரலாற்றிலேயே இல்லை. அவர் உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பெயரை ஆய்வாளர்கள் மறந்துவிட்டனர். அவருக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளியில் படமெடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பெயர் மலையாளத்திரைப்பட உலகின் தந்தை என்ற அடைமொழியுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்பது ஆண்டு கால இடைவெளியில் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் ஆற்றிய பணிக்குரிய அங்கீகாரமும் அடையாளமும் மறுக்கப்பட்டன.

பத்திரிகையில் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு பெட்டிக்கடை வாசலில் தற்செயலாக டேனியலைப் பார்த்தார். கடைக்காரர் வழியாக அவர் திரைப்படம் எடுத்து பொருளை இழந்த கதையை அறிந்தார். பிறகு அவருடைய இருப்பிடத்துக்கே தேடிச் சென்று உரையாடி, அவர் திரைப்படம் எடுத்த வரலாற்றை அவர் வழியாகவே கேட்டறிந்தார். பிறகு அதை நிறுவும் வகையில் ஆவணங்களைத் தேடித் தொகுத்து ஊடகங்களோடும் அரசு அதிகாரிகளோடும் போராடி, ஜே.சி.டேனியலே மலையாளத் திரைப்பட உலகின் தந்தை என நிரூபித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அதற்காக உழைக்கவேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக டேனியல் அப்போது மறைந்துவிட்டார். வரலாற்றை மாற்றி எழுதிய அந்தக் கால அனுபவத்தை ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன். அடூர் கோபாலகிருஷ்ணன் முன்னுரையோடு அது மலையாளத்தில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை தமிழில் இப்போது மொழிபெயர்த்திருப்பவர் செ.புஷ்பராஜ்.

அகஸ்தீஸ்வரத்தை பூர்விகமாகக் கொண்டு தென்திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கிறித்துவநாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோசப் செல்லையா டேனியல் என்கிற ஜே.சி.டேனியல். கேளிக்கை என்பதையே அனுமதிக்காத சமயப்பிரிவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வழிவழியாக மருத்துவர்களாகப் பணிபுரிந்து செல்வமீட்டியவர்கள். ஜே.சி.டேனியலுக்கு மருத்துவத்தில் ஆர்வமில்லை. அதனால் திருவனந்தபுரத்தில் பட்டப்படிப்பைப் படித்துமுடித்தார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு சிலம்பாட்டக்கலையின் மீது ஆர்வம் இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் களரிப்பயிற்சியையும் மேற்கொண்டார். பிரபலமான ஆசான் ஒருவரிடமிருந்து அடிமுறைகளைக் கற்றுத் தேர்ந்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த அனுபவத்தில், களரி அடிமுறைகளை முன்வைத்து தாமும் ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினார். அப்போது அவருக்கு திரைப்படம் பற்றிய எந்தத் தெளிவும் இல்லை

தான் எடுக்க நினைத்த ஆவணப்படத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துகொள்வதற்காக அவர் சென்னையில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் பம்பாயில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் கடிதம் எழுதினார். ஒருவர் இருபதாயிரம் ரூபாய் கேட்டார். மற்றொருவர் நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார். தயாரிப்பு செலவு குறித்து பேசுவதற்காக டேனியல் சென்னைக்கும் பம்பாய்க்கும் சென்றார். ஸ்டுடியோ செயல்பாடுகளையெல்லாம் நேரில் பார்த்துவிட்டுத் திரும்பியபோது அவர் மனம் மாறியது. திருவனந்தபுரத்திலேயே ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவெடுத்தார். தனக்குச் சொந்தமான 108 ஏக்கர் நிலத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று திருவனந்தபுரத்தில் இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டினார். 1928இல் திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்ற பெயரில் அந்த ஸ்டுடீயோ தொடங்கியது.

இந்தியாவில் முதல் மெளனப்படத்தை தாதாசாகிப் பால்கே 1913இல் எடுத்து வெளியிட்டார். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் மெளனப்படம் 1918இல் வெளிவந்தது. இந்தியாவின் முதல் பேசும் படமும் தமிழ்நாட்டின் முதல் பேசும் படமும் 1931இல் வெளிவந்தன. ஆனால் அதற்கான பூர்வாங்க வேலைகள் 1928இலேயே தொடங்கிவிட்டன. சமகாலத்தில் பிற நகரங்களில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்த திரைப்படச் சூழல் டேனியலின் நெஞ்சில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. களரி ஆவணப்பட எண்ணம் பின்தங்கிவிட கதையம்சம் கொண்ட ஒரு மெளனப்படத்தை உருவாக்கும் ஆசையாக அது மாறியது.

விகதகுமாரன் என்னும் படத்துக்குரிய கதையை அவரே உருவாக்கினார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்துக்கொண்டிருந்த காலம் அது. பெண் பாத்திரத்தை ஒரு பெண்ணே ஏற்று நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் சாதி இறுக்கமும் மத இறுக்கமும் கொண்ட கேரளசமூகத்தில் அவரால் பெண் பாத்திரத்தை ஏற்று நடிக்க ஒரு பெண்ணை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து தேர்வு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், ஏராளமான பொருளிழப்பை டேனியலுக்கு ஏற்படுத்திவிட்டு ஒரு காட்சிகூட நடிக்காமல் பம்பாய்க்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இறுதியாக, கத்தோலிக்கக் கிறித்துவத்தைத் தழுவிய ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ரோசி என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசி ஏற்றுக்கொள்ள வைத்தார். படம் பிடிப்பதற்கு அவரால் பெரிய நகரங்களில் இருந்து கேமிராமேனை வரவழைக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டிலிருந்து ஒரு கேமிராவை வாங்கி, கையேடுகளைப் படித்து, இயக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டு, அவரே படம் பிடிக்கத் தொடங்கினாறார். ஒவ்வொரு நாளும் எடுத்துமுடித்த படச்சுருளை அவரே இரவு வேளையில் கழுவினார். ஏறத்தாழ இரு ஆண்டுகள் முடிவில் 1930இல் திரைப்பட வேலை முடிந்தது.

23.10.1930 அன்று திருவனந்தபுரம் கேப்பிடல் திரையரங்கில் திரைப்படம் வெளியானது. முதல் காட்சியைக் காண்பதற்காக அதிகாரிகளும் நம்பூதிரி, நாயர் தறவாடுகளைச் சேர்ந்த உயர்சாதியினரும் வந்திருந்தனர். கட்டியங்காரன் திரைக்கு ஓரமாக நின்று காட்சிவிளக்கம் அளித்தபடி இருந்தான். சரோஜினி நாயர் என்னும் பாத்திரத்தில் ஒரு தலித் பெண் நடித்திருப்பதை பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அரங்கம் சிதைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் திரையரங்கத்துக்கு வெளியே நின்றிருந்த ரோசி, பார்வையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நகரத்தைவிட்டு வெளியேறி மறைந்தாள். திரையரங்கம் தாக்கப்பட்டது. ஏராளமான பொருளிழப்புக்கு ஆளான டேனியல் தனக்குரிய எல்லாச் சொத்துகளையும் விற்று கடனை அடைத்துவிட்டு குடும்பத்துடன மதுரைப்பக்கம் சென்றார்.

திரைப்படக் கனவுகளைத் துறந்துவிட்டு இரு ஆண்டுகள் பாடுபட்டு பல்மருத்துவம் படித்து பட்டம் பெற்றார் டேனியல். மதுரையிலேயே ஒரு கிளினிக் திறந்து மருத்துவம் பார்த்தார். குடும்பம் சற்றே தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கிய காலத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்வதற்காக வந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் தூண்டுதலால் மீண்டும் திரைத்துறையின் பக்கம் சென்றார் டெனியல். இறுதியில் உழைத்துச் சேர்த்த சிறு செல்வத்தையும் இழந்து வறுமையில் வாடினார். வேறு வழியில்லாமல் உறவினர்களின் கருணையால் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு பழைய பரம்பரை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

திரைப்படம் என்பதையே தீயொழுக்கச்செயலாக நினைக்கும் பின்னணியைக் கொண்ட குடும்பம் என்பதால், அவருடைய குடும்பத்தினர் அனைவருமே அவர் வாழ்க்கையையும் செயல்களையும் ஒரு கறையென நினைத்து ஒதுக்கினர். தன்னை ஒரு கட்டத்திலும் நிரூபித்துக்கொள்ளமுடியாத தோல்வியுணர்ச்சியால் அவரும் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் நாட்டமின்றி ஒதுங்கிவிட்டார்.

டேனியல் படமெடுத்தார் என்பதற்குச் சாட்சியாக அவரிடம் எஞ்சியதெல்லாம் ஒரு துண்டு பிலிம் சுருள். சில திரைக்கதைக் காட்சிகளை விவரிக்கும் படங்கள். சில புகைப்படங்கள். அவ்வளவுதான். ஓர் ஆவணமாக அவற்றை ஊடகங்களின் முன் காட்டி சேலங்காட்டாரால் டேனியலின் இடத்தை நிறுவமுடியவில்லை. அதற்கிடையில் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய பாலன் திரைப்படமே முதல் திரைப்படம் என ஆவணங்கள் உருவாகி நிலைபெற்றுவிட்டன.

மலையாளத் திரையுலகின் தந்தையென ஜே.சி.டேனியல் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு சேலங்காட்டார் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து உரையாடினார். ஏறத்தாழ இருபதாண்டு காலம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார் சேலங்காட்டார். அவர் எடுத்த திரைப்படம் மெளனப்படம் என்பதால் அதை மலையாளத்திரைப்படமாக கருதத் தேவையில்லை என ஓர் அதிகாரி நிராகரித்தார். தமிழகத்தைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரம் என்னும் பகுதியில் டேனியல் வசித்து வந்ததால், அவருடைய குறைகளை தமிழக அரசிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, கேரள அரசிடம் சொல்வதில் பொருளில்லை என்று நிராகரித்தார் மற்றொரு அதிகாரி. ஒரு தலித் பெண்ணை நாயர் பெண்ணாக நடிக்கவைத்தவர் என்னும் வெறுப்பில் டேனியலைப்பற்றி உரையாடுவதையே தவிர்த்தனர் சிலர். அவர் கிறித்து மதத்தைச் சேர்ந்தவர் என்னும் காரணத்தால் சிலர் தவிர்த்தனர். கிறித்துவத்துக்குரிய ஒழுக்கத்தை அவர் பின்பற்றாததால், கிறித்துவர்களும் அவரை ஆதரிக்கவில்லை. எல்லா முனைகளிலிருந்தும் வெறுப்பையும் புறக்கணிப்பையும் மட்டுமே எதிர்கொண்ட டேனியல் தீராக்கசப்பில் மூழ்கி விலகிச் சென்றுவிட்டார். எவ்விதமான பெருமையையும் பெறாமலேயே 1975இல் இந்த உலகத்தைவிட்டு மறைந்தார் டேனியல். தன் முயற்சிகளிலிருந்து சற்றும் பின்வாங்காத சேலங்காட்டாரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்ததன் விளைவாகவும் அரசு தன் ஆவணத்தைத் திருத்தி எழுதியது. மலையாளத் திரையுலகத்தின் தந்தையாக டேனியல் அறிவிக்கப்பட்டார். திரையுலகச் சாதனையாளருக்குரிய விருதுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

புஷ்பராஜின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் வழியாக கனவுகள் நிறைந்த ஜே.சி.டேனியலையும் உண்மையை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்கிற முனைப்பு நிறைந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகனாக, நமக்கு இவ்விருவரும் சாதனையாளர்களாகவே தோன்றுகின்றனர்.

(ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு. சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தமிழாக்கம்: எ.புஷ்பராஜ், சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம், 4/16, முதல் குறுக்குத்தெரு, 9-வது பிரதான சாலை, சாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041. விலை. ரூ.100 )

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சுகுணா திவாகர் வார்த்தைகளில் சொல்வதானால், “ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து இறுதி யுத்தத்தின் ரத்தச்சுவடுகள் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்திய” 2009-ல் தொடங்கி 2019 வரையிலான தமிழக அரசியல் குறிப்பாக திராவிட இயக்க நகர்வுகள் குறித்த பதிவுகளே ஆகும்.

அடிப்படைகளின் மரணம் என்ற முதல் கட்டுரை எழுதப்பட்டு இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 13 ஆண்டுகளில் முழுதாகப் பத்தாண்டுகள் திமுக அதிகாரத்தில்/ஆட்சியில் இல்லாத காலம். இந்தக் காலகட்டத்தில் திமுக தனது தவறுகளை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொண்டு தனது முக்கிய கருத்தியல் ரீதியிலான கொள்கை கோட்பாடுகளை சூழலுக்கேற்ப மீளுருவாக்கம் செய்து புதிய செயல்திட்டம் வகுத்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியும் திராவிட அரசியலின் எதிர்காலத்திற்கான பாட்டையுமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் பதவியேற்ற போது, பிற சனநாயகவாதிகளைப் போலவே நானும், சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலாலான செயல்திட்டத்துடன் தனது ஆட்சியை தொடங்கியுள்ளதாகவே கருதுகிறேன். வரப்போகும் 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியே திராவிட அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று வரை ஊழல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஜெயலலிதாவை, “இரும்புப் பெண்மணி, பன்மொழி வித்தகர், அறிவாளி, பெண்களுக்கான முன்மாதிரி(?)” என்றெல்லாம் பார்ப்பனீய ஊடகங்களும் பார்ப்பனீயத்தை உயரிய கலாச்சார பண்பாட்டு நிலையாகக் கருதிக் கொண்டிருக்கும் தமிழக இடைநிலை ஆதிக்க சாதிகளும் ஊதிப் பெருக்கியபடியே இருக்கின்றன. எம்.ஜி.ஆரில் தொடங்கிய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் அதலபாதாளத்தில் விழுந்து இபிஎஸ்_ஓபிஎஸ் காலத்தில் மீளமுடியாத நிலைக்குச் சென்றதை மறுக்க முடியாது. மாநில நலனுக்கானதாகவும், ஒன்றிய அரசுக்கு எதிரானதாகவும் ‘ஜெ’ முன்னெடுத்த சில ‘நற்காரியங்கள்’ தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தன்முனைப்பே என்பதை புரியச் செய்கிறது ‘தந்தை’ பெரியாரும் ‘அம்மா’ ஜெயலலிதாவும் என்ற கட்டுரை.

இரண்டு கழகங்கள் என்ற கட்டுரை திமுக, அதிமுக செயல்பாடுகளை நுட்பமாக ஒப்பிடுகிறது. ‘குடும்ப/வாரிசு அரசியல்’ – தமிழகத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த பெருங்கேடு- இப்போது கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளில் தொடர்வது கழகங்கள் ஏற்படுத்திய அவல விளைவுகளில் ஒன்று. எவ்வித அரசியல் பார்வையுமற்ற குடும்ப வாரிசுகள் (உதயநிதி, துரை வைகோ போன்றோர் – ஏன் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வரும் நாதக சீமான் கூட வேட்பாளர்களில் தனது குடும்ப உறவினர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல காட்டுகள் உண்டு) தேர்தல் அரசியல் களத்தில் முன்னிருத்தப்படுகின்றனர்.

அரசியல் பிடிவாதங்கள் அபாயமானவை என்ற கட்டுரை, ரவிக்குமாரின் பார்ப்பனல்லாதோரின் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத வறட்டு பிடிவாதத்தையும், கி.வீரமணியின் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற பெயரில் சசிகலாவை ஆதரித்த ‘வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளாத’ வறட்டு வாதத்தையும் உடைத்துப் போடுகிறது. பெரியாரை மதத்தலைவராக்கும் வேலையை திகவினரே மேற்கொள்ளத் தொடங்கி நாட்கள் பலவாகிவிட்டன. வரலாற்றுப் பார்வையின் அவசியத்தை சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.

அணிகளாய் சிதறிய அதிமுக என்ற கட்டுரை, கொள்கையாலன்றி தனிமனித முரண்பாட்டால் உருவான அதிமுக, தனிநபர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு இப்போது சுயநலத்தால் அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அவலத்தை எடுத்துரைக்கிறது. ஆனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இப்போதும் நீடிப்பதும் நிலைத்திருப்பதும் எம்ஜிஆர் என்ற தனிநபர் முன்னெடுத்த பாமர அரசியலின் எச்சமாகக் கூட இருக்கலாம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடர்பான கட்டுரை அவரின் ஆளுமையை விமர்சன நோக்கில் அணுகுகிறது. தமிழக அரசியலிலும் வெகுசன சினிமாவிலும் எம்ஜிஆர் என்ற விந்தை நிகழ்வை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது.

“திராவிட” கலைஞர் ஏன் இந்தியாவுக்குத் தேவை என்ற கட்டுரை அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று.

திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று இன்னும் உருவாகவில்லை அல்லது அதற்கான வரலாற்றுத் தேவை இன்னும் எழவில்லை என்ற நிதர்சனத்தை நடப்பு அரசியல் நிகழ்வுகள் மூலம் கூறிச் செல்கிறது ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவையில்லையா’ என்ற கட்டுரை.

இத்தொகுப்பின் கடைசி இரு கட்டுரைகள் – “திராவிட அரசியலின் எதிர்காலம்” மற்றும் “மீண்டெழும் திராவிட அரசியல்” ஆகியன திராவிட அரசியல் போக்கு குறித்த நுட்பமான பார்வைகளையும் முக்கியமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. பெரியார் சொன்ன இன அடிப்படையிலான “திராவிடர்” இயக்கத்துக்கும் அண்ணா, கலைஞர் முன்னெடுத்த நில எல்லை அடிப்படையிலான “திராவிட” முன்னேற்ற கழகத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு, திராவிட இயக்கங்கள்/ஆட்சிகள் மூலம் தமிழகத்திற்கும் இந்திய ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட அனுகூலங்கள், பாரிய மாற்றங்கள் பற்றிப் பேசும்போதே “தனி நபர் வழிபாடு”, “குடும்ப/வாரிசு அரசியல்”, “ஊழல்”, “ஆணாதிக்க மய்ய அரசியல்” போன்ற அவலங்களையும் சேர்த்தே நூலாசிரியர் பேசுகிறார். இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அடையாளங்களை அழித்து ஒற்றைத்துவ ‘ஒரே தேசம் ஒரே வரி ஒரே மதம் ஒரே கல்விமுறை, ஒரே கலாச்சாரம்/பண்பாடு” என்ற வகைமாதிரியை பாஜக – சங் பரிவார அடிப்படைவாத சக்திகள் கட்டி எழுப்பி வரும் தற்கால சூழலில் , இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ‘பன்மைத்துவத்தை’ முன்வைக்கும் ‘திராவிட அரசியலின்’ பங்கு முக்கியமாகிறது என்பதை பிரதி தெளிவுற எடுத்துரைக்கிறது. பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதிகளின் அதிகார மய்ய அரசியலாக “திராவிட அரசியலின்” போக்கு மாறிவிட்டதையும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது வரலாற்றின் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்நூல் வெளிவந்த பின்பு, 2021-ல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையில், தற்போதைய சூழலில் திராவிட அரசியலின் போக்கும் நோக்கும் குறித்த கட்டுரையை சுகுணா திவாகர் எழுதவேண்டும் என்ற விருப்பம் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.

“செய்வீர்களா…சுகுணா…நீங்கள் செய்வீர்களா…?”

– அன்புச்செல்வன்

நூல் : திராவிட அரசியலின் எதிர்காலம்
ஆசிரியர் : சுகுணா திவாகர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹90
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302

இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்

இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும்!

(புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை முன்வைத்து)

‘மாடல்’ அல்லது ‘முன்மாதிரி மாநிலம்’ என்ற சொல்லாடல் இந்திய அரசியலுக்கு புதிதல்ல. முதலில் ‘குஜராத் மாடல்’ என்ற புனைவுக் கதை, இந்திய மக்களிடையே முதலாளித்துவ ஊடகங்களால் பரவலாக விதைக்கப்பட்டது. அதன் களத்திலேயே, 2014 ஆம் ஆண்டு ‘மோடி பிம்பத்தின்’ பிரம்மாண்ட வெற்றி அறுவடை செய்யப்பட்டதை அறிவோம். அப்போதே கூட நாட்டின் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகளும், ‘ஜிடிபி’ எண்களா? ‘எழுத்தறிவு மற்றும் மக்கள் நல்வாழ்வு குறியீட்டு’ எண்களா? எது முன்மாதிரிக்கான அடித்தளம் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மிகச் சிறு மாநிலத்தில் அமைந்திருந்த இடது முன்னணியின் ஆட்சியை சுட்டிக்காட்டி, இதுதான் இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்மாதிரி என்ற அந்தக் குரல், வெகுமக்களை உரிய காலத்தில் சென்று சேராதது, சோகமே.

அதன் பின், ‘மாடல்’ பற்றிய பிம்பங்கள் உடையத் தொடங்கின. மிகச் சாதுர்யமாக, தங்களின் கதையாடலை ‘வகுப்புவாத – தேசிய வெறியை” சுற்றியதாக மாற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள், பெருமுதலாளிகளோடு கூட்டினை வலுப்படுத்தி, ஊடகங்களின் பெரும் பலத்தோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இப்போது ‘மாடல்’ பற்றிய கேள்விகள் எதிர் தளத்தில் இருந்துதான் வலுவாக எழுகின்றன. ஆர்.எஸ்.எஸ்/பாஜக கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும், பொருளாதார இறையாண்மையையும் அடித்து நொறுக்கி வருகிறது. எனவே, இந்த போக்கிற்கு மாற்றான முன்மாதிரிகளை பேசுவது காலத்தின் கட்டாயம்.

வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்கு, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைக்க வேண்டும். அதைத்தான் ‘இடதுசாரி மாடல்’ என்று குறிப்பிடுகிறோம்.

இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி, ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாராளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஒரு ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடம் எழுகிறது.

“புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு” என்ற இந்த ஆவணம் அந்த கேள்விகளை தெளிவாக்குகிறது. பதட்டத்தை சீராக்குகிறது. இந்த செயல்திட்டம், எர்ணாகுளத்தில் நடந்த சி.பி.ஐ(எம்) மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

முதல் கொள்கைத் தலையீடு 1939:

இந்திய விடுதலைக்கு முன்பே, மதராஸ் மாகாண அரசாங்கம் அமைத்த குத்தகை விசாரணைக் குழுவிடம் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஒரு மாற்று அறிக்கையை முன்வைக்கிறார். அப்போது கேரளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளே நிறைவடைந்திருந்தது. குத்தகை ஏற்பாட்டில் உள்ளார்ந்து நிலவுகிற சுரண்டல் நடைமுறைகளை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ அமைப்பை ஒழித்தால்தான் சமுதாய வளர்ச்சி சாத்தியம் என்று அறுதியிட்டு கூறியது. உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றது. இவ்வாறு, அது பழைய சுரண்டல் முறைகளுக்கு முடிவுகட்டச் சொன்னது.

இந்திய விடுதலைக்கு பின், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்காக களத்திலும், கொள்கை அளவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம்.

1957 ஆம் ஆண்டில், உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி உருவானது. இந்த வெற்றியைப் பற்றிய தேவையற்ற பெருமிதங்கள் கட்சிக்கு இருக்கவில்லை. முதலமைச்சராக தேர்வான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ‘இப்போதுள்ள சூழ்நிலையில், உழைக்கும் மக்களுடையதும், ஏழை மக்களுடையதுமான நலவாழ்வுக்கான திட்டங்களை அமலாக்கி செயல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் நோக்கம்’ என்றார். ஆம், இந்திய ஆட்சியின் வர்க்கத்தன்மை மாறவில்லை, குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மாநில ஆட்சியைத்தான் கட்சி வழிநடத்தியது. எனவே, மாநில ஆட்சிக்கு உள்ள வரம்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருவது அவசியம் என்றார் அவர். அதுபோலவே, கேரளத்தில் சுதந்திர இந்தியா கண்ட முதல் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை, வர்க்க ஆட்சியையும், வரம்புகளையும் தெளிவாக்கியது.

நிலச் சீர்திருத்தம், கல்வி, மக்கள் நலவாழ்வு போன்று பல்வேறு துறைகளில் கேரளம் மேற்கொண்டுள்ள சாதனைகளை நாம் அறிவோம். இந்தக் கட்டுரையில் அவைகளை மீண்டும் கூறப்போவதில்லை. மாறாக, அந்த சாதனைகளுக்கு திசைகாட்டும் கொள்கைகளின் தடத்தையே பின் தொடரவுள்ளோம்.

மாற்றுக் கொள்கைக்கு வாய்ப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இதுபோன்ற மாநில ஆட்சிகளை நடத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுள்ளது. “மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, அவைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைக்கும் வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்திக்கொள்ளும்” என்பதுடன், உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டவும் உதவியாக இருக்கும் என்கிறது. அதே சமயத்தில் ‘நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான தீர்வுகளைப் பெற்றிட முடியாது’ என்ற எச்சரிக்கையும் வெளிப்படுத்துகிறது.

ஒன்றிய அரசாங்கம், திட்டமிடலை முற்றாக கைவிட்டுவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ஐந்தாண்டு திட்டங்களோ, திட்ட ஆணையமோ இனி கிடையாது. ஆனால், கேரள அரசாங்கம் மட்டும், வளர்ச்சிக்கான திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அது, மக்களுக்கு நல்ல பலனையும் வழங்கி வருகிறது. இதற்கான விதை 1967 எல்.டி.எப் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டது ஆகும். அப்போதைய ஒன்றிய அரசாங்கம் ஐந்தாண்டு திட்டத்தை கைவிட்டு, ‘திட்ட விடுப்பு’ என்ற பாதையில் பயணித்தபோது, கேரள மாநிலத்தில் மாற்று கொள்கைக்கான வரைவுச் சட்டகம் முன்மொழியப்பட்டது. அது பொருளாதார திட்டமிடலின் அவசியத்தை எடுத்துக்காட்டியது. இத்தகைய மாற்றுக் கொள்கைகளே ‘இடதுசாரி மாடலின்’ அடித்தளம் ஆகும்.

1980, 1987, 1996 ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்தது. இந்த சமயங்களிலெல்லாம் இடதுசாரிகள் முன்னெடுத்த நலத்திட்டங்களை, அடுத்து வருகிற யுடிஎப் ஆட்சி பின்னுக்குத் தள்ளியது. எனவே, ஆட்சியில் போராட்டம், ஆட்சியில் இல்லாத காலங்களில் மக்கள் நல நடவடிக்கைகளை காத்திடும் களப் போராட்டங்கள் என்று அயர்வில்லாமல் கட்சி செயல்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் காரணமாகவும், ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் தாக்குதல் காரணமாகவும், கேரள மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1990 களில், உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் வேகமெடுத்தன. ‘நவதாராளமயம்’ என்பது வெறும் சொல் அல்ல, அது பல்வேறு கட்டுப்பாடுகளையும், செயல் திட்டங்களையும் தன்னகத்தே கொண்ட ‘புதிய உலக ஒழுங்காக’ அமைந்தது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இந்த சூழலை ஆய்வு செய்திட 1994 ஆம் ஆண்டில் ஏ.கே.ஜி ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பில் சர்வதேச விவாதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கேரளாவை பற்றியும் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுவந்த பல்வேறு அறிஞர்கள் அதில் பங்கேற்று விவாதித்தார்கள். தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கூறினார், “நாம் சந்தித்துவரும் தீவிர பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தை திருப்பும் விதத்தில், கேரளத்தின் சாதனைகளைப் பற்றிய விதந்தோதல்கள் வேண்டாம். பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் இந்தியாவின் பிற மாநிலங்களை விடவும் பின் தங்கியுள்ளோம். நெருக்கடிக்கான தீர்வினை தாமதிக்க முடியாது. வேலைவாய்ப்பிலும், உற்பத்தியிலும் பின் தங்கிய நிலைமையை நாம் புறந்தள்ளினால் அது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்”

இந்த மாநாட்டின் விவாதங்கள் பலன் கொடுத்தன. 1996 ஆம் ஆண்டில் ‘மக்கள் திட்ட முன்னெடுப்பு’ வந்தது. 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. திட்டமிடலிலும், வளர்ச்சிப் பணிகளிலும் மக்களின் பங்கேற்பை இது அதிகப்படுத்தியது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட சர்வதேச மாநாடுகள் கேரளத்தின் வளர்ச்சி பிரச்சனைகளை பல்வேறு கோணங்களிலும் விவாதித்தன. மாற்று திட்டங்களை உருவாக்கின. 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், பிரபாத் பட்நாயக் கூறினார், “அரசின் வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே செல்வது தற்செயல் அல்ல, நவ-தாராளமயத்தின் அடிப்படையான வெளிப்பாடு இது. இவ்விசயத்தில் கேரளம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார்.

பெரு முதலாளிகளுடைய மூலதனத்தை தமது மாநிலத்தில் ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்குள் நடக்கும் போட்டியும் அதன் விளைவுகளும் ‘அதிகாரக் குலைவினை’ ஏற்படுத்துகின்றன. நமக்கு தேவை அதிகார பரவலாக்கமே. நவதாராளமய சூழலிலும் அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்று கட்சி விவாதித்தது. ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது பற்றியும், நேரடி அன்னிய முதலீடுகள் பற்றியும் தெளிவை தருவதாக இந்த விவாதங்கள் அமைந்தன.

அடுத்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதில் இந்த விவாதங்கள் பங்காற்றின.

மீண்டும் விஜயன் அரசாங்கம்:

கேரள மாநிலத்தின் வரலாற்றில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த பின்னணியில்தான், எர்ணாகுளத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், கேரளத்திற்கான தொலைநோக்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

‘பல்வேறு வர்க்கங்களின் பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்து, உள்ளார்ந்த சமூக நீதிப் பார்வையுடன்’ கேரள மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் அமைய வேண்டும். ‘நவீன அறிவார்ந்த சமூகத்தை’ அமைப்பதற்காக, அறிவியலையும் நுட்பன்களையும் பயன்படுத்திட வேண்டும், அனைத்து சமூக தளங்களிலும் உற்பத்தி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். திறன் அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் உற்பத்தி உயரவேண்டும் என்கிறது ‘புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு ஆவணம்’.

அதாவது, கேரளத்தின் தொழிலாளர்கள் அதி நவீன இயந்திரங்களை இயக்கிடும் திறனுடன், புதிய தொழில்நுட்ப அறிவுடன் செயல்படும் அடித்தளத்தை வலுவாக அமைக்கும்போதுதான். வாழ்க்கைத் தரம் உயரும். உற்பத்தி அதிகரிப்பதுடன், விநியோகத்தை சமநீதி அடிப்படையில் மேற்கொள்ள முடியும் என்று ஆவணம் தெளிவாக்குகிறது.

முன்பே குறிப்பிட்டதைப் போல, நாட்டில் பொருளாதார திட்டமிடல் முற்றாக கைவிடப்பட்ட காலத்தில், கேரள மாநிலம் மட்டுமே திட்டமிடல் நடவடிக்கைகளை கைவிடவில்லை. இப்போதும் 14 வது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதுடன், ஆண்டு திட்டங்களும் தயாராகின்றன. நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிலவும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளில் எட்ட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்திருக்கிறார்கள்.

வளங்களும், வாய்ப்பும்

இதையெல்லாம் செய்வதென்றால் மாநிலத்திற்கு நிதி அவசியம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும், நவதாராளமய கொள்கைகளின் சட்டகத்திற்கு உட்பட்டுமே அதனை மேற்கொள்ள முடியுமா?. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மேலும் குறையும் சூழலே உள்ளது. இந்த சூழலை எதிர்கொண்டு ‘இடது மாடலை’ முன்னெடுப்பது, வர்க்கப் போராட்ட தெளிவோடே நடத்தப்பட முடியும். இந்த போராட்டத்தில் வெகுமக்களையும் தொடர்ந்து ஈடுபடுத்திட வேண்டும்.

இந்த ஆவணத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பற்றி குறிப்பிடப்படும் பகுதி மிக முக்கியமானதாகும். ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், திறம்பட செயல்படுத்தும் அவசியத்தை மக்களிடமும், அதன் ஊழியர்களிடமும் இந்த ஆவணம் முன்வைக்கிறது. மேலும் பொதுத்துறையில் புதிய புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் அதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற திசையை இந்த ஆவணம் காட்டுகிறது. இது நவதாராளமய விதிகளுக்கு முற்றிலும் முரணான ‘இடதுசாரி மாடலின்’ தனித்துவம் ஆகும்.

அதே போல, சிறு/குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், உள்ளாட்சிகள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுவதுடன், பாரம்பறிய தொழில்களில் நவீன முன்னேற்றங்களை புகுத்துவதன் அவசியத்தையும் தெளிவாக்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியத்தை தெளிவாக்கும் இந்த ஆவணம், மிகவும் சவாலான, நுட்பமான பணிகளை இந்த திசையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வழிகாட்டுகிறது.

புவி வெப்பமாதல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளல்
உள்ளாட்சி அமைப்புகளில் பொது வெளிகளை உருவாக்குதல்
ஊழல் நடைமுறைகளுக்கு முடிவுகட்ட சமூக தணிக்கை வழிமுறைகளை உருவாக்குதல்
போன்ற முன்மொழிவுகள், கேரளத்தின் சமூக வாழ்வில் பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் ‘இடதுசாரி’ வெளிப்பாடுகள் ஆகும்.
உதாரணமாக, கேரளத்தில் தற்போதுள்ள உள்ளாட்சிகளில் 40 சதவீதத்திற்கும் மேல் எதிர்க் கட்சிகளின் நிர்வாகத்தில் உள்ளதையும், நிதி செலவினங்களை மேற்கொள்வதில் உள்ளாட்சிகளுக்கு உள்ள சுதந்திரத்தையும் இதனோடு இணைத்து நோக்கினால், நம்மால் மேற்சொன்ன முன்மொழிவுகளின் தாக்கத்தை உணர்ந்திட முடியும்.

கட்சியும் அரசாங்கமும்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, கேரளத்தின் ஆட்சியை வழிநடத்துகிறது. அதே சமயத்தில் அரசாங்கம் என்பது அனைவருக்குமானது. அனைவரையும் உள்ளடக்கி நடக்க வேண்டியது. இந்த சூழலில், கட்சி தனது பாத்திரத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆவணம் தெளிவாக்குகிறது.

கட்சியின் தொலைநோக்கிற்கு உகந்ததாக அரசின் கொள்கைகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது, எச்சரிக்கை உணர்வுடன் பரிசீலித்து உறுதி செய்திட வேண்டும்.
அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதுடன், வெகுமக்கள் ஆதரவுடனே திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை கட்சியே உறுதி செய்திட வேண்டும்.
பொதுத்துறைகளை திறன் வாய்ந்த வகையில் இயக்கும் கடமையை தொழிற்சங்கங்களும் கவனத்தில் கொள்வதுடன், கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறப்பான சேவைகளை உறுதி செய்வதில் ஊழியர் சங்கங்களும் கவனம் செலுத்திட வேண்டும்.

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு வரம்பிடும் ஒன்றிய அரசின் போக்குகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவது கட்சியின் கடமை என்பதை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

உலகமே, நவதாராளமயம் உருவாக்கிய இடியாப்பச் சிக்கலில் சிக்குண்டிருக்கும் சூழலில் ‘இடதுசாரி’ அரசாங்கங்கள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்து வருகின்றன. இந்த பொறியினை விசிறி, மேலும் சுடர் விடச் செய்யும் ஆவணமே இந்த சிறு பிரசுரமாகும். ‘இடதுசாரி மாடல்’ என்பது, இப்போது ஒரு மாநிலத்தின் களத்தில் வார்த்தெடுக்கப்படும் போதிலும் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மாற்றுப்பாதையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய மக்களின் நலவாழ்வினை பாதுகாத்திட சாத்தியமான, நடைமுறைக்கு உகந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதே அதன் தொலைநோக்கு. இந்த முயற்சி, அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.

– இரா.சிந்தன்

நூல் அறிமுகம் : சு.உமா மகேஸ்வரியின் கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி – வே.சங்கர்

நூல் அறிமுகம் : சு.உமா மகேஸ்வரியின் கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி – வே.சங்கர்
பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியாகிப் பரவலான நேர்மறை மற்றும் எதிர்மறை பின்னூட்டங்களைச் சந்தித்த 31 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு முழுப்புத்தகமாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

’நான் ஒரு எழுத்தாளர் அல்ல’ என்ற அறிமுகத்தோடு தொடங்கும் இந்நூல், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகப் பள்ளிக்கூடக் குழந்தைகள் எதிர்கொண்ட சவால்கள், கருவிகளின் வழியே பாடம் நடத்தப் பழக்கப்படாத ஆசிரியர்களின் அசட்டுத்தனங்கள், குறிவைத்துத் தாக்கப்படும் அரசுப்பள்ளி மற்றும் ஆசிரியர்களின் தன்மானங்கள், பலனற்றுப்போகும் பயிற்சி வகுப்புகள், பத்தோடு ஒன்று பதினொன்றாய் பராமரிக்கப்படும் பதிவேடுகள், தேர்தல்கால நெரிசலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகள், இவற்றிற்கு நடுவில் தட்டுத்தடுமாறிக்கூட அரசுப்பள்ளிகள் தலைநிமிர்ந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம்காட்டும் தனியார்பள்ளிகள் அதற்குத் துணைசேர்க்கும் ஊடகங்கள், கல்வியின் தரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று தெரியாமல் தனியார் பள்ளிகளுக்ப் படையெடுக்கும் மெத்தப் படித்த பொதுமக்கள் எனத் தன்னளவிலிருந்து ஆழமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் அலசத் துணிந்திருக்கிறார் உமா மகேஸ்வரி.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தவிப்போடு தமிழகத்தில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனக்குமுறல்களை மட்டுமே பதிவுசெய்யாமல் எதார்த்தத்தில் அரசுப்பள்ளிகளின் நிலையையும் சேர்த்தே தன் பார்வையிலிருந்து அணுகியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். இதுவரை அரசுப் பள்ளிகளின் மீதிருந்த பிம்பம் தகர்க்கப்பட்டு புதியதொரு கோணத்தில் தகவல்களை அலசி ஆவணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தேர்வு என்ன செய்யும்? வடிகட்டும். மேலோட்டமாய்ப் பார்த்தால் எல்லாம் சரிதான். தேர்வே இல்லாத பள்ளிக்கூடத்தைக் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? ஆண்டாண்டுகாலமாய் மாணவர்களும் ஆசிரியர்களும் அதற்குத்தானே பழக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வுதானே ஒரு மாணவனுக்கான முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியும் என்ற கேள்விக்கு அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதேசமயம், திடீறென்று மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்று தொடர்ந்து மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் தேர்வு முறை ஏற்படுத்தும் விளைவுகளையும் அவரது பாணியிலேயே சொல்லியிருப்பது சிறப்பு.
அதுமட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் இருந்துவரும் ”தொடர் மற்றும் முழுமதிப்பீடு” என்ற பெயரில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதால் என்ன நிகழும் என்ற கேள்வி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

தேர்வுஇல்லாத கல்விமுறைக்கு மாற்று என்ன என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களை வாசித்து எளிதாகப் புரிந்துகொள்ளமுடிந்தாலும், ஏராளமான பதிவேடுகளை பராமரித்தே சலித்துப் போகும் தருவாயில் அசஸ்மெண்ட் என்பது அட்ஜெஸ்ட்மெண்ட்டாக மாறிவிடுமல்லவா? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை.

ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர்கள் மட்டுமே பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் அதைத்தாண்டி இன்றைய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை இதைவிட எளிமையாக யாரும் படம்பிடித்துக் காட்டமுடியாது. இரண்டு ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை கற்பிக்க சாத்தியம் உண்டா என்ற கேள்வி கடைசிவரை உறுத்திக்கொண்டே இருக்கிறது எனலாம்.

தூங்குபவரை எழுப்பிவிடலாம். தூங்குபவரைப் போல் நடிப்பவரை ஒருபோதும் எழுப்பிவிடமுடியாது என்ற பலமொழியை நினைவுகூர்வது போலவே இருக்கிறது இன்றைய அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையும் மற்றும் அணுகுமுறையும்.

ஏதோ தீவிரவாதியின் நடவடிக்கையை கண்காணிப்பதுபோல் எல்லா கோணங்களிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மற்றவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மேதாவிகளுக்கு இந்நூல் சொல்லிச்செல்லும் ஆதங்கங்களின் ஒருதுளியேனும் சென்றடையும் என்றே நம்புவோம்.

ஏனென்றால், எத்தனை பேரிடர்கள் வந்தபோதிலும், துவளாத மனோதிடத்துடன், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எப்படியாவது தன்னை நம்பிவரும் குழந்தைகளுக்கு வகுப்பெடுத்துவிட வேண்டும் என்ற கொள்கைப்பிடிபோடு பணியாற்றும் ஆசிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுவதற்காகவே பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

அங்கொன்றும் இங்கொன்றும் தவறிழைக்கும் ஆசிரியர்கள் எப்போதும் விதிவிலக்கு. அவர்ளை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்று சப்பைக்கட்டு கட்டாமல் அவர்களையும் பாரபட்சமில்லாமல் சுட்டிக்காட்டியிருப்பது நன்று.

ஈவு இரக்கமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் குற்றம்குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடிவைத்துத் தேடும் கண்ணோட்டம் எப்போது தீருமோ அப்போதுதான் கல்வித்துறை உருப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதற்காவே இந்நூலின் ஆசிரியரைப் பாராட்டலாம்.

பழைய தீர்வுகாணும் அணுகுமுறை இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தாமல் போகலாம். சிலவேளைகளில் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். அதே சமயம் புதிய தீர்வுகளை முன்வைக்கும்போது அதன் சாதக பாதகங்களையும் உரையாடல்மூலம் அலசி ஆராயவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் உணர்ந்துகொள்ளவேண்டிய தருணத்தில் உள்ளார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது இந்நூல்.

கல்வியில் பின் தங்கியிருக்கும் மற்ற மாநிலங்களைவிட 20 ஆண்டுகள் முன்னேறியிருக்கும் தமிழகத்தின் கல்வி இனிவரும் காலங்களில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். அதற்கான திட்டமிடல் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்து பிறக்கவேண்டும் என்று சொல்வதோடு கடந்துசெல்லாமல். இன்றைய அரசுப்பள்ளிகளின் நிலைப்பாட்டையும், ஆசிரியர்களின் கையறு நிலையையும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரைத் தொகுப்பில் கல்விச்சிக்களை சொல்லும்போதும் தீர்வுகளை முன்வைக்கும்போதும் அறச்சீற்றத்தோடு காத்திரமான சொற்களைப் பிரயோக்கித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர் என்றே தோன்றுகிறது.

இந்நூலை, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்ப்பதைவிட அடுக்கடுக்கான படிநிலையில் உள்ள கல்வி அதிகாரிகளின் கரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டவேண்டும். அப்போதுதான் இதில் குறிப்பிட்டுள்ள எதார்த்தமான கல்விச்சிக்கல்கள் தீர்வை நோக்கி நகரும் என்பது என் கருத்து..

ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்விசார்ந்த பின்புலத்துடன் கூடிய பதிவுகள் தேவைதான் என்றபோதிலும், இன்னும் கொஞ்சம் பதிவுகளை விஸ்தீரணம் செய்திருக்கலாம். ஏனென்றால் கல்விச்சிக்கல்களின் ஆரம்பம் தெரிந்துகொண்டால்மட்டுமே அதற்கான தீர்வுகளை நோக்கி நகரமுடியும். மேலும், புதிதுபுதிதாகத் தோன்றும் சிக்கல்கள் சுவாரஸ்யமானவை. அதற்கு ஒவ்வொருவரும் கையாளும் தீர்வுகள் அதைவிட சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்நூலை வாசிக்கும் மற்ற ஆசிரியர்களும் தங்கள் பங்குக்கு அனுபவப்பதிவுகளை முன்வைக்க இந்நூல் தூண்டுகோளாய் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தொடர்ந்து அதிகரிக்கும் கல்விச்சிக்கல்களுக்குத் தீர்வு எட்டப்படுகிறதோ இல்லையோ இந்நூலின் வழியே வலியுறுத்தப்படும் ஆசிரியர்களின் ஆதங்க வார்த்தைகள் அரசாங்கத்தின் காதுகளுக்கு மிகச்சரியாக எட்டும் என்று நம்புவோமாக.

நூலின் பெயர் : கல்விச்சிக்கல்கள் தீர்வை நோக்கி
ஆசிரியர் : சு.உமா மகேஸ்வரி
வெளியீடு : பன்மை வெளி
பக்கங்கள் : 208
விலை : ரூ.165

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்
ஒரே நாடு
************
பானையில் வைத்த பழைய சோறும்
பச்சை மிளகாயும்
பழைய உணவாகி…

பாணிபூரியில்
எச்சில் ஊறிப்போனது;

ஹிந்தி மொழியில்
எப்போது கலந்தது
குயிலின் குரல்?

குஜராத்தியின்
உடையில் மயங்கி
வேட்டியும் சேலையும்
வெட்கப்பட்டுக் கிடக்கின்றன!

புரியாத வசனங்களுக்குக்
ஒரே நாடுதான்!
யாருக்குச் சந்தேகம்?
ஏன்?

பெரிய நடிகர்கள்
*********************
சிலரிடம்தான்
சென்று சேர்கிறது…
அதிலும்
சிக்கலான
கேள்விக்கணைகள்!
ஊடகத்தில் பதிவிடும்
எழுத்து!

கேள்விகள்
நானும் கேட்கலாம்
பிறரும் கேட்கலாம்
கேட்பவர்
எவராயினும்
ஞானம் முக்கியம்
கேள்வி ஞானம்!

ஞானம் உள்ளவர்போல்தான்
நடித்துக் கொண்டிருக்கிறது
உலகம்!

நம்பித்தான்
ஒருவரையொருவர்
இதுவரை
வந்துவிட்டோம்!

நாமும்
குழந்தையாக
இருந்தபோது
யாரையும்
நம்பாமல்தான்
இருந்திருப்போம்!

பொம்மைகளுடனும்
பறவைகளுடனும்
ஏன்
விலங்குகளுடனும்
பேசவும் பழகவும் விளையாடவும்
குழந்தைப்பருவம்
தவழ்ந்து கொண்டேயிருக்கின்றன….

குழந்தைகளுக்குத்
தெரிகிறது….
பெரியவரெல்லாம்
நடிக்கின்றனரென்று!

பெரியவர்களுக்குத்தான்
குழந்தைகளைப்
புரிந்துகொள்ள முடியாமல்;

பறவைகளையும்
மீன்களையும்
பொம்மைகளையும்
விலங்குகள் பூங்காவினையும்
வாங்கித் தரவும்
அழைத்துச் சென்று
காட்டவும் மறுக்கின்றனர்!

குழந்தைகளைப்
புரிந்து கொள்ளுங்கள்….
அவர்களைவிடப்
பெரியவர்களை
குழந்தைகள் நன்கு
புரிந்து வைத்துள்ளனர்;
பெரிய்ய்ய்ய்யயயய
நடிகர்களென்று!

பாங்கைத் தமிழன்.

Bhagat Singh's feelings are getting closer to us Article By Sitaram Yechury in tamil trnaslated By S. Veeramani பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன - சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.

உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”

“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”

“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”

“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”

சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”

இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”

“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com