விடுதலைப்போரும் இந்திய விஞ்ஞானிகளும்! – ஆயிஷா. இரா. நடராசன்
‘ஒரு வங்காள வேதியியலாளரின் வாழ்வும் அனுபவங்களும்’ என்று ஒரு புத்தகம். எழுதியவர் இந்திய வேதியியலின் தந்தை பிரஃபுல்ல சந்திரரே எனும் பி.சி.ரே. தன் பள்ளிக்கூட ஆசிரியர் கேசப சந்திர சென் மற்றும் கல்லூரி ஆசிரியர் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள் தனக்கு ஊட்டிய தேசப் பற்றினைப் பற்றி எழுதும் ரே, இந்திய விடுதலையை நோக்கிய அஹிம்சைப் போராட்டம் மற்றும் புரட்சிப் போராட்டம் இரண்டையுமே தீவிரமாக ஆதரித்தவர். ஒரு லட்சம் விடுதலைப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு சிறை பிடித்தபோது அதில் ஒருவராக இணைந்ததால் சிறைவாசம். அதே சமயம் வங்காள கவர்னராகக் கொடியவன் தாமஸ்கிப்சனை பணி அமர்த்தி – இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் தில்லி தர்பார் (1911) நடத்தியபோது – தீவிரவாத விடுதலைப் போராளிகள் வில்லியம்ஸ் கோட்டைமீது குண்டுவீசிட – தான் கண்டுபிடித்த ஆல்கைல் பாதரச நைட்ரைட்டை ரகசியமாக, தாராளமாக வழங்கி உதவுதல் என இருபுறமும் உழைத்த மாபெரும் போராட்ட நாயகராக நம் வேதி அறிஞர் பி.சி.ரே.வைப் பார்க்கிறோம். இந்திய அறிவியலாளர்களின் விடுதலை நோக்கிய பங்களிப்பிற்கு இது பதம்.
1947, ஆகஸ்ட் 15ல் நம் இந்தியப் பெண் இயற்பியல் அறிஞர் பிபாசவுத்ரி மான்செஸ்டிரில் (இங்கிலாந்து) இருந்தார். அவர் ஒரு காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வாளர். அன்றைய காலத்தில் நல்லெண்ணத்தின் அடையாளமாக நாள் முழுவதும் நம் நாட்டிற்காக காந்தி வழியில் உண்ணாநோன்பு இருந்தார். சக விஞ்ஞானிகள் யாவருமே பிரிட்டிஷ்காரர்கள். இதை அறிந்து அவரையும் நம் நாட்டையும் கேலி செய்ய இரண்டு வேளை கூடுதலாகச் சாப்பிட பலவிதமான மாமிச உணவுகளுக்கு அந்த ஆய்வக உணவு விடுதி (காண்டீன்) யில் ஆர்டர் கொடுத்தார்கள். அவர்களது கேலி கிண்டல் என எதையுமே நாள் முழுதும் பிபா சவுத்ரி பொருட்படுத்தவில்லை. எல்லாம் முடிந்து மாலையில் விடுதியில் உணவுக்கான கட்டணம் செலுத்தபோன அவர்களுக்கு அதிர்ச்சி. பிபா சவுத்ரி ஏற்கெனவே அவர்கள் சாப்பிட்ட எல்லாவற்றுக்கும் பில் கட்டியிருந்தார். அவர்கள் கேட்டபோது ‘எங்கள் இந்திய விடுதலைக்காக உங்களுக்கு நான் வைத்த விருந்து’ என்று பதில் வந்தது. நெத்தியடி.
இந்திய அறிவியலின் வரலாறும், விடுதலைப் போராட்ட வரலாறும் பின்னிப் பிணைந்து பயணித்த ஒன்றுதான் என்பதற்கு இதுபோல பல சான்றுகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். தேசத்தின் நலனுக்காகவே அயராது உழைத்த நம் இந்திய விஞ்ஞானிகளின் மண் மீதான பற்றும் தேசபக்தியும் சற்றும் குறைந்தது அல்ல.
நம் பழம்பெரும் தேசத்தைக் காட்டுமிராண்டிகளின் நாடு என அழைத்து அதைக் கலாச்சாரரீதியில் மேம்படுத்துவதே தங்களது வருகையின் நோக்கம் (Civilicing Mission) என்று களமிறங்கிய ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் படித்து உயர்ந்து ஆய்வுகளிலும் ஈடுபட்டு சக பிரித்தானிய – உலக விஞ்ஞானிகளுக்கு இணையாக வளர்ந்த இந்திய அறிஞர்களைத் தங்களது கொத்தடிமைகளைப் போல கருதினார்கள். அவர்களை வளரவிடாமல் காலனித்துவ ஆட்சி பல அவமதிப்புகளைச் செய்தது. இவற்றை சுதேசி இயக்கம் மிகக் கடுமையாக எதிர்த்தது.
1904ல் இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரே இந்தியரான தாதாபாய் நவ்ரோஜி இதுபோன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி ஆற்றிய நாடாளுமன்ற உரை உலகின் கவனத்தை ஈர்த்தது. அறிஞர் ஜெகதிஷ் சந்திரபோஸ் விரிவுரையாளராகப் பதவியேற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது அங்கே பணியில் இருந்த வெள்ளைக்கார விரிவுரையாளர்களைவிட எட்டுமடங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து மூன்று வருடங்கள் அவர் ஊதியப் புறக்கணிப்பு செய்தார். பணி செய்வார். ஆனால் ஊதியம் பெறமாட்டார். ஆங்கிலேயர் ஆட்சியின் வெள்ளைப் பேரினவாதம் (Apartheid) என்று இதை தாதாபாய் நவ்ரோஜி குறிப்பிட்டார்.
மேலே குறிப்பிட்ட வேதி அறிஞர் பி.சி.ரே.வும் இதேபோன்ற அவமானங்களை அனுபவித்து இருக்கிறார். 1888ல் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி இருந்தபோதிலும் பேராசிரியர் பணியிலோ ஆய்வகப் பணியிலோ இடமளிக்காமல் ஆங்கிலேயர்கள் புறக்கணித்தார்கள். கொல்கத்தா பல்கலைக்கழக வேதியியல் ஆய்வகத்தின் கதவில் ‘இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி கிடையாது’ என்று அறிவிப்பு தொங்கியதாக மேற்கண்ட நூலில் பி.சி.ரே. ஆத்திரத்தோடு குறிப்பிடுகிறார்.
‘இந்திய மக்களுக்கு அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை கையாள தொழில்துறை வேலைவாய்ப்பு கல்வி போதும். நமது நோக்கம் அறிஞர்களை உருவாக்குவது அல்ல, அடிபணிந்து உழைக்கும் ‘விஷயம்‘ தெரிந்த வேலையாட்களே’ என்று 1854ல் இந்தியா வந்த சார்லஸ் உட்கல்விக்குழு பகிரங்கமாக அறிவித்தது. இவற்றை எதிர்த்து 1876ல் மஹேந்திரலால் சர்க்கார், இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் எனும் இந்திய அறிவியல் கழகத்தை ஏற்படுத்தினார். மஹேந்திரலால் சர்க்கார் ஒரு மருத்துவர். இந்தியாவின் முதல் எம்.டி. பட்டம் பெற்றவர. பவு பஜார் வீதியில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டாலும், நம் தமிழகத்தில் இருந்து சென்ற சி.வி. ராமன் உட்பட பலரை அது ஈர்த்தது. அந்த நாட்களில் அந்த அறிவியல் ஆய்வகத்தின் வாசல் கதவில் ‘ஆங்கிலேயர் உள்ளே நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவிப்புப் பலகை வைத்து நம் விஞ்ஞானிகள் பதிலடி கொடுத்த சம்பவமும் உண்டு.
1888ல் இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாவது மாநாடு அலகாபாத்தில் நடந்தது. தொழில்துறை, வேலைக்கல்வி என்கிற போர்வையில் தரமற்ற – கீழ்மட்ட அறிவியல் கல்வி தரும் காலனிய ஆட்சியாளர்களை அது கடுமையாகச் சாடியது. 1904ம் ஆண்டு இந்திய அறிவியல் தொழில்நுட்பத் தொழில்துறை கழகம் எனும் விசேட அமைப்பு ஒன்று மும்பையில் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கம் பெரிய அளவில் பொதுமக்கள் இடையே நன்கொடை திரட்டி பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி, மற்றும் விரிவுரையாளர் பதவிகளை பிரத்யேகமாக இந்தியர்களுக்கு என்றே ஏற்படுத்திட அந்த நிதியை வழங்கி காலனித்துவ ஆட்சியாளர்களுக்குச் சவாலாக ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. அறிஞர் அசுடோஷ் முகர்ஜி உட்பட பலர் அதனைத் தாங்கள் பணிபுரிந்த கல்வி நிலையங்களில் செயல்படுத்தவும் முன்வந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் நம் தேசிய-அறிவியல்வாதப் பார்வை இருவிதமான போக்குகளை கொண்டிருந்தது. நமது சுதேசி இயக்கவாதிகள் தொழில் மற்றும் அறிவியல் மயமாதலில் ஜப்பானை முன்மாதிரியாகப் பார்த்தார்கள். அதேசமயம் பாரம்பரிய இந்திய அடையாளங்களை அறிவியல் ரீதியில் மறுபார்வைக்கு உட்படுத்துவது – சாதி, மத, மொழி அடையாளங்களை மீறி ஒரு தேசமாக எழுச்சிகொள்ளுதல்.
இது அன்று நமது அறிவியல் பாதையிலும் எதிரொலித்ததை பார்க்கலாம். கலாச்சார மறுவாசிப்பு மற்றும் நவீனத்துவ அறிவு எழுச்சி, இரண்டையும் நம் மண் சார்ந்து செப்பனிடுதல் எளிதாக இருக்கவில்லை. ஏனெனில் நம் ரத்தம், சதை யாவற்றிலுமே காலனித்துவ அடிமைத்தனமும் கலந்துவிட்டது. இதனால் அறிவியலாளர்கள் தங்களது விடுதலைப் போராட்டப் பங்களிப்பை நேரடியாக அன்றி ஒருவகை பகடி மூலமே செய்யவேண்டிய நிலை. உதாரணமாக, நாம் பி.என்.போஸ் என்று அழைக்கப்பட்ட பிரமாத்தநாத் போஸ் எனும் அறிவியல் அறிஞரை எடுத்துக்கொள்வோம். 1877ல் லண்டன் புனித சேவியர் கல்லூரியில் படித்து முடித்து, ரவீந்திரநாத் தாகூரின் உற்ற தோழர் ஆனவர். தாது இயலில் உலக ஆய்வு அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். 1880ல் ஆங்கிலேயர்களின் இந்திய புவியியல் கழகத்திலல் இணைக்கப்படுகிறார்.
அவரைவிட பத்தாண்டு இளையவரான டி.ஹாலந்து எனும் பிரிட்டிஷ்காரரை பி.என். போசுக்கு மேலே இயக்குநராக நியமித்தார்கள். கூடவே போஸ் தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவருக்குச் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை வேறு. இந்தியா முழுதும் இரும்புத் தாது பற்றி சர்வே எடுத்த போஸ் அதை பிரிட்டிஷார் கையில் தராமல் ஜாம்ஷெட்பூர் டாட்டாவுக்கு அனுப்பி டாட்டா ஸ்டீல்ஸ் தொடங்கக் காரணமாக இருந்தது வரலாறு. இந்திய வளங்களைக் கொள்ளைகொண்டு போக ஆங்கிலேயர்க்கு உரிமை இல்லை எனும் நிலைப்பாடோடு தன் பதவியையும் ராஜினாமா செய்தவர் அவர். கடுமையாக ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள் அவர் மீது கைது வராண்டை ஏவினார்கள். மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்தார் பி.என்.போஸ்.
மருத்துவக் கல்வியில் செவிலியர், கம்பவுண்டர் போன்ற கல்வி களில் மட்டுமே இந்தியர்களுக்கு முன்னுரிமை என்ற நிலை. அப்போது மருத்துவக் கல்வி ஆங்கிலேயர்களுக்கு இணையாக இந்தியர்களுக்கு வழங்கிட 1903 முதல் 1907 வரை தொடர்ந்து ஐந்தாண்டுகள் காங்கிரஸ் மாநாடு நடந்தபோதெல்லாம் குரல் எழுப்பி கே.டி.டெலாஸ், பி.என்.சல், சூரஜ் சக்ரவர்த்தி மற்றும் ராஜேந்திர சந்திரா போன்றவர்களின் கடும் போராட்டத்தின் விளைவாகவே 1910 முதல் கொல்கத்தா சென்னை (மதராஸ்) மும்பை (பாம்பே) என்று மருத்துவ கல்வி நிலையங்களை இந்தியர்களுக்கும் சேர்த்து திறந்தார்கள்.
மருத்துவம் மட்டுமல்ல, இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமையும் போராடி ஆதிக்க ஆட்சியாளர்களான பிரிட்டிஷாரிடமிருந்து நாம் பெற்றதுதான். நாடெங்கும் அறிவியல் துறை சார்ந்து – அதன் உற்பத்தி உறவு சார்ந்து பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். இந்திய தேசிய நீரோட்டத்தில் அறிவியல் சார்ந்த யாவரையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் விரைவில் உணரப்பட்டது. 1900களின் தொடக்கத்தில் மிகவும் தந்திரமாக ஆங்கிலேய அரசு ரயில்வேதுறை வல்லுநர் மாநாடு முதல் சுகாதார பணியாளர் மாநாடு வரை, தனது செயல்திட்டங்கள், தொழில் நுட்பங்களைக் காட்சிப்படுத்திடவும் அதிகாரத்தைச் செலுத்தவும் நடத்திவந்தது. இந்திய அறிவியல் மாநாட்டுக்கழகம் (Indian Science Congress Association) எனும் அமைப்பு 1914ல் தொடங்கப்பட்டது. அனைத்து வகை அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும் இருந்த இந்தியர்களை ஒருங்கிணைத்தல், மேலும் இந்தியர்களுக்கு அறிவியல் ஆய்வு, அயல்நாட்டு ஆய்வகங்களில் இடம் கிடைத்து பயணிக்க பொருளுதவி, போன்றவற்றில் முன்னுரிமை கேட்டு போராடுதல் போன்ற நோக்கங்களோடு இந்திய மக்களிடையே மூடநம்பிக்கைகளை வீழ்த்தி, அறிவியல் மனப்பான்மையையும் தேச பக்தியையும் விதைத்தல் எனும் நோக்கத்தையும் அது இணைத்துக்கொண்டது. ஆண்டுதோறும் இந்திய அறிவியல் மாநாடு அப்போதிலிருந்து – விடுதலைக்குப் பிறகும் – இன்றுவரை நடந்து வருகிறது.
1930ல் சி.வி. ராமன் நம் இந்தியாவின் முதல் அறிவியல் துறை நோபல் பரிசை வென்றது மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். தனது ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அவர் இந்தியன் அசோஷியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் – அறிவியல் கழகத்தில் நிகழ்த்தினார். பிரிட்டிஷ்காரர் நடத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வகத்தில் இல்லை. ஆட்சியாளர்கள் அவர் நோபல் பரிசு பெற சுவீடன் செல்லலாம். ஆனால் அங்கே உரை நிகழ்த்தக்கூடாது என்று தடை விதித்தார்கள். சுவீடன் தேசத்தின் இளவரசரிடமிருந்து பரிசை பெற்றுக்கொண்ட அறிஞர் சி.வி. ராமன் இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டுப் பெற்றார். ‘இந்தப் பரிசை இந்தியச் சிறையில் வாடும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்து நாடே ஒருங்கிணைந்து காலனித்துவ எதிர்ப்புப் போரில் திரண்டு நிற்கிறது என்பதை உலகே அறியச் செய்தார்.
மேக்நாத் சாஹாவும் சத்யேந்திரநாத் போசும், அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் வெளியிட்ட சார்பு தத்துவம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முயன்றபோது அதற்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்ததும் பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே நேரடியாகத் தலையிட்டு சார்பு தத்துவம் குறித்த முதல் ஆங்கிலப் பதிப்பை வெளிவரவைத்ததும் வரலாறு. இதுபோன்ற நிறைய சம்பவங்கள் உண்டு.
ஆங்கிலேய அரசு இந்தியத் தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளை ஒன்றிணைக்கும் அவசியத்திற்காக ‘நேச்சர்’ அறிவியல் இதழ் ஆசிரியர் சர் ரிச்சர்டு கிரிகரி தலைமையில் தொழிற்துறை மாநாடு ஒன்றை (Industries conference) 1933ல் நடத்தியது. வெலிங்டன் பிரபு அப்போது வைஸ்ராயாக இருந்தார். இதன் ஒரு அங்கமாக அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சித் துறை (Department of Scientific and industrial Research) எனும் தனித்துறை தொடங்கப்பட்டது. அத்துறையில் இந்திய அறிவியல் தொழில்நுட்பவாதிகள் யாருமே இடம் பெறவில்லை. நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்காடு ராமசாமி முதலியார் மூன்றாண்டுகள் கடுமையாகப் போராடி இந்த அமைப்பையே இரத்துசெய்ய வைத்தார். அப்போது அவர் வைஸ்ராயின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தார். 1940ல் தற்போதுள்ள கவுன்சில் ஃபார் சைன்டிஃபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (CSIR) என்று அது மாற்றப்பட்டது. சாந்தி ஸ்வரூப பட்னாகர் எனும் இந்திய விஞ்ஞானி அதன் தலைமை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
இன்று இந்தியா உலக அளவில் பிரம்மாண்டத் தொழில்துறை நல்லரசாக வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கல்விச் சாலைகள், பிரம்மாண்ட ஆய்வுக்கூடங்கள், மிகப் பெரிய தொழில்துறை, ஐ,ஐ,டி உட்பட ஆய்வுக் கல்வி நிறுவனங்கள், வானியல், அணுவியல், விண்வெளியியல், ராணுவத் தளவாட இயல் என்று நாம் மிளிராத துறை இல்லை. இதற்கெல்லாம் காரணம் விடுதலைக்கு முன் நடந்த பிரம்மாண்ட விவாதம் ஒன்றும், அதன் ஊடாக நியமிக்கப்பட்ட சில வல்லுநர் குழுக்களும்தான் என்று அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். மகாத்மா காந்தியடிகள் கிராம சுயராஜ்யத்தை முன்மொழிந்து குடிசைத் தொழில்களை மேம்படுத்தி ஆதரித்ததன் பின்னனியில் அறிஞர் பி.சி.ரே. போன்றவர்கள் இந்திய அறிவியல் மாநாட்டில் பாரம்பரிய கிராமியத் தொழில்களைச் சார்ந்து செயல்படத் தூண்டியபோது அதை மேக்நாத் சாஹா உட்பட பல விஞ்ஞானிகள் எதிர்த்தார்கள். தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்துறையை மேம்படுத்தி சோவியத் ரஷ்யாவின் வழியில் பிரம்மாண்ட வளர்ச்சியை முன்வைத்தே அறிவியல் வளர்க்கப்படவேண்டும் என வாதிட்டனர்.
அப்போதைய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் (1933) சுபாஷ் சந்திரபோஸ், சாஹாவின் குரலை ஏற்றார். 1938ல் ஜவஹர்லால் நேரு (பின்நாட்களில் முதல் பிரதமர்) தலைமையில் தேசிய திட்டக் கமிட்டி ஒன்றை காங்கிரஸ் அமைத்தது. இதில் கனிமவளம், நீர்பாசனம், பொதுசுகாதாரம், தொழில்நுட்பம், கல்வி உட்பட 29 துணைக்குழுக்களை காங்கிரஸ் நியமித்தது. அறிவியல் அறிஞர் மேக்நாத் சாஹாவின் தலைமையில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. பொதுவாகவே இதுபோன்ற குழுக்களில் பல விஞ்ஞானிகளும் பங்காற்றினர் என்றாலும் சாஹா தலைமையிலாக தொழில்நுட்பக் கல்வி திட்டக்குழுவில் பீர்பால் சஹானி, ஜெ.சி. கோஷ், நசீர் அகமது எனப் பல்துறை விஞ்ஞானிகள் இருந்தனர். நம் நாட்டின் இன்றைய தொழிற்கல்வி கொள்கை உட்பட பல அற்புதங்களை அந்த கமிட்டிகளே அடித்தளமிட்டு சுதந்திரத்திற்கு முன்பே அமைத்துக் கொடுத்தன. எனவே இந்திய விடுதலைப் போராட்டத்திடமிருந்து அன்றைய விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை தனித்துப் பார்க்கவே முடியாது. நம் விடுதலைத் திருநாளின் பவளவிழா ஆண்டில் அந்த மாபெரும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றுவது நம் அனைவரின் கடமை ஆகும்.