தங்கேஸ் கவிதைகள்
ஜலீலா முஸம்மில் கவிதை
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!
புள்ளிதான் வைத்தேன்
பூமாலையாக வந்து விழுகிறது
உனை நினைத்ததும் கவிதைகள்!
ஏதேனும் பேசியிருக்கலாமோ?
இரைந்து கதறுகிறது
உன் மௌனத்துக்குப் பக்கத்தில்
என் ஆன்மா!
மாபெரும்
மொழித்திறன் கொண்டு
மறுமொழி தருகிறது
ஒவ்வொரு உயிர் வலியிலும்
இந்த மௌனம்!
இதயப்பூட்டை
உடைத்து திறந்தது
உன் ஒரேயொரு
காதல் பூ
எத்தனையோ
கோட்டைகளும் கோபுரங்களும்
உருவாகி விடுகின்றன
ஒரு கணம்
உன் ஆன்மா
என்னுடன் ஊடுருவி
உரையாடுகையில்!
உயிர் துளியாகிறேன் கவிதை – சசிகலா திருமால்
மனம் கொத்திப் பறவையாய்
மனதினைக் கொத்திக் கொத்தியே
உயிர் திருகும் வலியில்
என் உணர்வுகளைக்
கடத்திச் செல்கிறாய்…
உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது
உந்தன் நினைவுகள்..
எந்தன் உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
உந்தன் ப்ரியமொழியின் குளிர்ச்சியினை..
இதோ இப்பொழுதும்
உந்தன் விரலிலிருந்து கசியும்
வார்த்தைகளில்
உயிர் துளியாகிறேன் நான்..
கவிஞர் ச.சக்தியின் கவிதைகள்
நாங்கள்
மனிதர்கள் தானா….!!!!
*****************************
மாடி கட்டிடம்
மல்லாக்க
படுத்துக்கொண்டு
குடிசையை
பார்த்துச் சிரிக்கிறது
குடிசையில்
வாழ்பவர்களெல்லாம்
மனிதர்கள்
இல்லையென்று
சொல்லிக்கொண்டு
வெயில்
காலத்தில்
காய்ந்து போன
எங்களின்
குரவலைக்கு
நீரை ஊற்றுகிறது
மழை காலத்தில்
குடிநீரோடு கழிவு நீரும்
சாக்கடை நீரும் கலந்தவாறே,
நமுத்துப்
போன அரிசியையும்
கிழிந்து
போன போர்வையையும்
தருகிறார்கள்
கதர் வேட்டிக் கந்தசாமிகள்,
நீ இங்கேயே இரு,
இங்கே
இருந்து மடிந்து
போயென்று
மனதுக்குள்ளே வாயை வளர்த்து
சொல்லிக் கொண்டே ,
கொடுத்த அரிசியும்
போர்வையும்
நாம் வாழ்வதற்கு அல்ல
நாளை நாம்
இறந்து போனால்
தலைமாட்டில்
வைத்துப் படைப்பதற்கு,
பாம்பு,
பூரான், பல்லி
போன்றவற்றிற்கு
அடைக்கலம்
கொடுக்கின்றன
எங்கள் குடிசைகள்,
நீங்கள்
கொடுத்த
தேர்தல் வாக்குறுதிச் சொற்களை
பேப்பர்களில் எழுதி
காகிதக் கப்பலாக
செய்து மழைநீரில்
ஓட்டுகிறோம்
மூழ்கிப்போன
உங்கள் ஊழல் ஊராட்சியின் எதிரே,
தெருவெள்ளாம்
மழைநீர்
மழைநீரில்
மிதக்கிறது குடிசைகள், குடிசையிலிருந்து
எட்டி பார்க்கிறது
மழைநீரில்
அடித்து வரப்பட்ட பாம்பொன்று
காலில் விழுந்து
வாக்கு கேட்டவர்கள்
சிவப்பு நிற
காரில் ஏறிச் செல்கிறார்கள் ,
சாலையெங்கும்
பீ நாற்றங்கள்
நீர் கட்டித்தருவோம்
யென்று சொன்ன
பொது கழிப்பிடங்கள் இதுதானே ?
கொஞ்சம்
திரும்பி பாருங்களேன்
நாங்களும்
மனிதர்கள் தான்,
இதய விளக்கு…..!!!!
***********************
“நீ இல்லாத
இந்த குடிசைக்காரனின்
வீட்டில் இதயமாக
எறிந்து கொண்டிருக்கிறது
உனது நினைவலைகள் ”
“விளக்கை ஏற்றி
வைத்துவிட்டு
ஏன் இருட்டினில்
ஒளிந்து கொண்டிருக்கிறாய்
வா நாம் சேர்ந்தே எறிவோம்
வெளிச்சமும் இருட்டுமாக ”
“இருண்டு
போன குடிசைக்காரனின்
குடிசையில் தீபமாக
எறிந்து கொண்டிருக்கிறது
வெடித்து சிதறாத
உனது நினைவலைகளை
சுமந்த மண்சுவர்களாகிய
மனமெனும் மண் ”
“சுட்ட
மண்ணில் சுடப்பட்ட
அகல்விளக்கு
திரிகளென்னும்
தூண்டுதலால் எரிகிறது
வீடெங்கும்
காற்றுப்பைகளில்
அடைக்கப்பட்ட
உனது நினைவுகளை சுமந்தவாறு ”
“எறிந்து முடிந்த
என் எலும்பு குச்சிகளை
மீண்டும் உடலோடு
ஒட்டி வைத்து
நீ கொடுத்த விளக்கை ஏற்றுகிறேன் மீண்டும் எரிகிறது குடிசை ”
தீப்பெட்டியை
கடண்கேட்டு
நிற்கிற்கும்
பக்கத்துவீட்டு பாட்டிக்கு
எறிந்து கொண்டிருந்த
எலும்பு குச்சிகளை கொடுத்தனுப்புகிறேன்
அவளோ பெரிய மாடி வீட்டில்
வாடகைக்கு வாழ்கிறாள் ,
குடிசை…..!!!!!
****************
அந்த கடைசி
தெருவில் தான்
என் வீடு இன்னுமும் இருக்கு
ஆனால் வீடு
என்றொரு பெயரை
மட்டுமே தான்
அது தாங்கிக்கொண்டிருக்கு ,
நினைவலைகள்….!!!!!!
**************************
நேற்றைய கனவில்
அப்பா வந்து சிறிது நேரம் உரையாற்றியாற்றி
விட்டு சென்றார்
திடுக்கிட்டு எழுந்து
கண்ட கனவிலிருந்து
வெளியேறி
அங்கும் இங்குமாக
மனதின் கண்களால்
நோட்டமிட்டவாறு
சுவற்றை பார்க்கிறேன்
ஆணியால் அறையப்பட்டு
தொங்கவிடப்பட்டிருந்தது
அப்பாவின்
பழைய புகைப்படம்,
தீ….!!!!
********
ஒடுக்கப்பட்ட
தொழிலாளர்களின்
வயிற்றில் வேள்வி தீயை
மூட்டிகிறார்கள் முதலாளிகள்,
அவன் வீட்டு
கழிப்பறைகள்
எங்களது
வேர்வை துளிகளால் சுத்தமாகிறது,
அப்போது
வெந்து மடிந்தோம் வெண்மணியில்
இப்பொழுதும்
வெந்து மடிகிறோம்
மலக்குழியில்
நீங்கள்
கழித்த மலங்கள்
மன மனக்கிறது
எங்களது கைகளில்,
தண்டவாள பாதையெங்கும்
தலையில்லா
முன்டங்கலாக
எங்களது பிணங்கள்……..!!!!!!
“””நீங்கள்
நீங்கலாக இருக்கும்வரை
நாங்கள்
நாய்களாதான் இருக்க முடியும்;
அறிவு சூரியன்…..!!!!
************************
சேறும் சகதியும்
சுவரை அழுக்காக்கலாம்
சூரியனை
அழுக்காக்க முடியுமா….?
அழுக்குப்படுத்த
முடியாத
அறிவுச் சூரியன்
அண்ணல் அம்பேத்கர்
அவர்கள் அவரே ,
உலக சூரியன்
கிழக்கிலிருந்து பிறக்கிறான்
உழைக்கும்
மக்களுக்கான
சூரியன் மேற்கிலிருந்து
பிறக்கிறான்,
சூரியனை
சுற்றியே பல கோள்கள்
எங்கள் அறிவு
சூரியனை
சுற்றியே பல உலக நாடுகள்,
நீங்கள்
ஆயுதங்களோடு
போரிட்டுக் கொண்டிருந்த
போது தன்
அறிவாயுதத்தால்
போரிட்டு வெற்றி கண்டவர்,
அவர்
அவர்களுக்கானவர் அல்ல
எல்லோருக்குமானவர்
அறிவை நம்பியவர்,
அகிலத்தை ஆள்பவர்,
காதல்….!!!!
*************
பனிக்கட்டியாக கரைந்து
உருகி பனியாறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது
அவனின் நினைவு,
நினைவிலே வருபவன்
கனவில் கூட நெருங்கி
வர மறுக்கிறான் வயதெனும்
பாத்திரமாக நீ இருப்பதால்,
மந்திரம் தந்திரமாக
தனக்குள்ளே அவனை
வரவழைக்க முயற்சிக்கிறாள்
மூக்கணாங்கயிறை கையுறையிலே
வைத்து அலைபவள்
இச்சையெனும் பச்சைக் கொடியை
உடல் முழுவதும் பூசிக்கொண்டு
அலைந்து திரிபவள்
அலமாரியில் கிடக்கும்
வாசிக்காத புது புத்தகமாய் மினுக்குறாள்,
தனிமையில் வாடிய போது
எனது உடலை யாரே
தீண்டியது போல சில உணர்வுகள்
ஊஞ்சல் கட்டி ஆடியது
மேலாடையாக போர்த்திய
மேகத்துணி காற்றின் வேகத்தால்
களைந்து போய்விடுகிறது
அவன் வருவானா……?
ஊாரடங்கு
எடுத்துக்கொள்வானா …..?
உலக உருண்டை சுழலட்டும்,
அவனின் நினைவுகளை
நான் அசைப்
போட்டுக்கொண்டே இருப்பேன்
வாசலில் கட்டிய
கன்றுக்குட்டியை போல…….!!!!
பேராசான் புத்தன்…..!!!!
****************************
தன் ஆசைகளை துறந்து
போதிமரங்கள் தான் தன் வீடென
கூறிக் கொண்டிருந்த
புத்தனின் சிலையை செதுக்க
ஆரம்பிக்கும் சிற்பியின்
கைகளில் முளைக்க ஆரம்பிக்கிறது
உலகத்திற்கான ஞானம்,
அம்மாவுக்கும்
மகனுக்குமான உறவு …!!!!
******************************
கருவறையின்
முதல் பந்தலில்
ஆரம்பிக்கப்பட்ட உனக்கும் எனக்குமாக தொப்புள் கொடி முடிச்சி கல்லறையின்
கடைசி பந்தலில்
அவிழப்படுகிறது
மரணமெனும் உயிர் புரிதலில்,
பறவையின் நோக்கம்…!!!!!
*******************************
அவைகள்
சிறிய பறவையே
பெரிய பறவையே
அவைகள் எல்லாம்
பறவைகளாக ஆனதே
வானத்தில் பறப்பதற்கு தானே,
மழை…..!!!!
**************
நீ கைநீட்டிய பிறகு தான்
அம்மழையும் மண்ணுக்கு உரமாகிறது
அதில் நான் சிறு பூவாக பூக்கும் துளிராகிறேன்,
மரம் வளர்ப்போம்….!!!!!!
*****************************
வெட்டப்பட்ட மரத்துக்காக
கவிதை ஒன்றை எழுத முற்படும் பொழுதெல்லாம் காகிதமும்
கண்ணீர் விட்டு அழுகிறது
நீ என்
உயிரில் தான்
கவிதை வடிக்கிறாய்யென்று ,
கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,
இரா.மதிராஜ் கவிதைகள்
இதயத் துடிப்பு
நிற்கும் போது
மட்டுமல்ல,
உன் நினைவுகள்
மறக்கும் போதும்
மரணிக்கிறேன்.
கண்ணிலிருந்து
வரும்
கண்ணீரும்
எரி தணலாய்
கொதிக்கிறது,
உன்னைப் பற்றிய
செய்திகளே
இன்னும்
என்னை
வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது.
உறவுகள் கூடி
இழுக்கும் தேரில்
உட்கார்ந்து
கொண்டிருக்கும்
நான்
அடிக்கடி
தனிமையாயிருக்கிறேன்.
அன்று என்ன
சொன்னாய்?
இப்போது என்ன
செய்து கொண்டிருக்கிறாய்
என்றொரு கேள்வி
கேட்கிறது,
ஆழ்கடல் பெரிதென்று
நினைக்கிறார்கள்
கண்ணீர்க் கடலில்
விழாதவர்கள்.
தேவதைகளின்
ஊர்வலத்தில்
குறுக்கே
சென்றவர்களும்
வாழ்க்கையைத்
தொலைக்கிறார்கள்.
உலகைச் சுற்றவைப்பது
சூரியனும், சத்திரனுமல்ல,
தானமும், தாயன்பும்
தான்.
இன்னும் ஆவலுடன்
பார்த்து ரசித்துக்
கொண்டிருப்பது
வெற்றி பெறாமல்
முயற்சி செய்துகொண்டிருக்கும்
மனிதன் தான்.
இரா. மதிராஜ்,
97884 75722.
சசிகலா திருமால் கவிதைகள்
பெண் என்பவள்…
**********************
பெண் என்ற பிறப்பின்
அர்த்தம் தேடி அலைகிறேன்
விடையறியா வினாவாகவே
சுற்றுகிறது என்னை…
கருகலைப்பிலும் கரையாமல்
கள்ளிப்பாலிலும் உயிர் போகாமல்
தடைகளைத் தாண்டித் தங்கிவிட்ட
உயிர் கண்டு கலங்கி நிற்கும் நெஞ்சங்கள்…
பாரமென்றறியாது சுமந்த உயிரே
இன்று பாரமாகிப் போனதோ ஈன்றவளுக்கு…
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததை நினைந்து
ஆனந்தக் கண்ணீர் வடித்தாளோ
ஏளனமாயும் போதைப் பொருளாயும்
பார்க்கும் சமூகத்தில்
ஏன் பெண்ணாய்ப் பிறந்தாயோ என்ற
வேதனையில் அழுதாளோ
கன்னம் தொட்டுக் கரைபுண்டோடும்
அவளின் கண்ணீருக்கு
அர்த்தம் இன்னும் விளங்கவேயில்லை..
ஆண் மகவென்றால்
குடும்ப பாரம் சுமப்பானாம்
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததால்
குடும்பத்திற்கே பாரமாகிப் போனதாம்…
கல்யாணம் காட்சி நகைநட்டு சேர்த்திட
எங்கே போவதென்று
மலைத்து நிற்கும் தந்தை..
சீர் செய்தே சீரழியுமாம் உடன்பிறப்பு..
கருவோடு கலைந்திடாத நானோ
அனுதினமும் கருக்கலைப்புச் செய்கிறேன்
என் கனவுகளை…
சுதந்திரமாய் விரித்திட நினைக்கும்
என் சிறகுகளோ ஆங்காங்கே
ஒடிக்கப்பட்டு முடக்கப்படுகின்றன
ஆணாதிக்கம் எனும் அளவுகோல் கொண்டு..
திறந்த மேனியாய் கிடக்கும்
பிறந்த பிள்ளையைக்கூட
பெண்ணென்பதால்
காமமேறிய கண்களால் களவாடுகின்றன
அகமெங்கும் அழுக்கேறிய
சில அகோரிகள்…
கருவறை முதல் கல்லறை வரை
கலவிக்கெனவே பயன்படும்
உணர்வுகளற்ற மரப்பாச்சியெனவே
குருதியெங்கும் ஊறிவிட்ட எண்ணமதை
மாற்றிட ஆளின்றி தவிக்கிறது
பெண்ணினம்…
எத்தனை பெரியார் வந்துதான்
என்ன பயன்?..
அத்தனை அசிங்கங்களையும்
ஆழ்துளைக் கிணறெனவே
ஆழ்மனதில் ஆழமாய் புதைத்திட்டே
பழகிவிட்டது
பாழாய்ப்போன பெண்ணினம்..
பெண்ணினத்தை பிரமிப்பாய்
பார்க்கும் காலத்திலும்
கள்ளிப்பால் கலாச்சாரம்
மாறாத சுவடுகளாய் ஆறாத ரணமாய்
இன்னும் இருந்திடதானே செய்கிறது..
பெண் என்பவள் யாராகத்தான்
இருந்திட முடியும்?…
சதைப் பிண்டமாகவா அல்லது
அக்னிச் சிறகுகள் கொண்ட
சாதிக்கும் பறவையாகவா?…
எப்படிப் பார்த்தாலும் நிரம்புவதேயில்லை
பெண் எனும் அட்சயப் பாத்திரம்…
இரக்கமில்லா நின் நினைவுகள்..
****************************************
தினம் தினம்
எந்தன் உறக்கம் பறித்திடும்
இரக்கமில்லா நின் நினைவுகளை
எச்சரிக்கிறேன்…
வேண்டாமென்று விலகி விட எத்தனிக்கையில்
வேண்டுமென்றே பிடிவாதமாய்
இறுக்கிப் பிடித்துக்கொண்டு
இம்சிக்கின்றதே நின் நினைவுகள்….
விரும்பும் போது விலகிச் செல்வதும்
விலகும் போது விரும்பி வருவதும்
காதலின் எழுதப்படாத விதிகளில்
ஒன்று போலும்….
சசிகலா திருமால்
கும்பகோணம்.
சசிகலாவின் கவிதைகள்
காதலித்துக் கிடப்போம் வா…
*********************************
பனிக்குடம் உடைந்து
வெளிவரும் போதே
குரல்வளை நெறித்துக்
கொல்லப்பட்ட அவலம்…
தடைகளைத் தாண்டிடும்
போதெல்லாம்
தடுமாறி விழுந்து
முடமாகிப் போன துயரம்…
பறத்தலை முடக்கி
பிய்த்து எறியப்பட்ட
மென்மையான இறகுகளென
பறந்திட வலுவின்றி
தவித்திடும் கொடூரம்..
விழுங்கிடவியலாமல்
அரவத்தின் விடமென
கண்டத்தினை கவ்விக்கொள்ளும்
நின் நினைவுகளின் வேதனை…
கவிதையாய்க் கருத்தரிக்கப்பட்ட
நம் காதலோ
சிதைவுற்று சிதறுகிறது
அர்த்தமற்ற வார்த்தைகளாய்..
மாளாத் துயரத்திலிருந்து
மீளவியலா நிலையில்
அனுதினமும் அரங்கேறுகிறது
முட்களின் படுக்கையில்
முகம் புதைக்கும் நிகழ்வொன்று…
அடுத்த ஜென்மத்திலேனும்
காலம் தாழ்த்தாமல்
வந்து விடு
காதலித்து கிடப்போம்…
*****************************
விருட்டென்று
விழித்துக்கொள்ளும் காதல்..
உன் அன்பெனும்
ஆழிப்பேரலையில்
வாரிச் சுருட்டி
அணைத்துக் கொள்கிறாய்
எனை மொத்தமாய்…
பெருமழைக்கு முன்னான
சிறுதூறல் போல
மண்வாசனையோடு
மணக்கிறது நின் காதல்…
என் காதலோ…
சிணுங்கல்களின்
பொக்கிஷமாய் உண்டாகும்
நின் இதழின் சுழிவில்
விருட்டென்று
விழித்துக்கொள்கிறது…
உந்தன் கழுத்தோர
பூனை ரோமங்களின்
குறுகுறுப்பில் சிக்கி
சிலிர்த்துக் கொள்கிறது…
நகப்பூச்சு சாயத்தில்
சுயமிழந்து
சொக்கி நிற்கிறது..
இப்படி
அணுவணுவாய்
உன்னை ரசித்து
உள்ளம் உறைகையில் எல்லாம்
போதுமென்ற மனம் மட்டும்
வருவதேயில்லை
என் காதலுக்கு…
ஆமாம்..
உன்மீது கொள்ளை ப்ரியம்
என் காதலுக்கு…
அது அப்படி தான்
உன்னை ரசித்து லயித்திருக்கும்..
எப்போது பார்த்தாலும்
இப்போது தான்
முதன் முதலாய் பார்ப்பது போல…
– சசிகலா திருமால்
கும்பகோணம்
அமீபாவின் கவிதைகள்
அன்பெலி
*************
வீட்டின் எல்லா மூலைகளிலும்
ஓடிக் கொண்டிருந்தது
ஒரு காலத்தில்
அதன் பிறகான காலத்தில்
ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே
பதுங்கத் தொடங்கி இருந்தது
இரவு நேரங்களில்
இருட்டைப் பூசிக்கொண்டு
குதியாட்டம் போட்டது.
சமீப காலமாக
சத்தம் இல்லாமல் போகவே
அதை உற்று நோக்குகையில்
காற்றில் அதன் சப்தம்
பெருநாற்றமாக ஓடிக்கொண்டிருந்தது
வீடெங்கும் ஓடி நிறைந்திருந்ததை இறந்த பின்பு கண்டெடுப்பது
பெரும் பாடாய்ப் போனது
ஒரு வழியாக
முகம் சுளிக்க மூச்சடக்கிக் கண்டெடுத்து
ஒவ்வாமையுடன்
வீதியில் வீசியாயிற்று
இருந்தும் இருக்க வாய்ப்புண்டு
வீட்டின் ஏதேனும் மூலையில்
அதன் குட்டிகள்.
மரணம்
***********
எத்தனை இழப்புகளை
ஏற்படுத்திவிட்டது
இந்த ஒரு மரணம்.
எனது கவனக் குறைவோ
என்ற குற்ற உணர்வு
குறுகுறுக்கின்றது.
என் நினைவுகள் எல்லாம்
நீர்த்துப் போய்விட்டன.
காலைப் பொழுதுகள்
அத்தனைக்
கலகலப்பானதாக இல்லை.
இரவு படுக்கை
ஏதோ ஒன்று குறைவதாய்
குற்றம் சாட்டுகிறது.
குறுகிய காலமே
என்னிடம் இருந்தாலும்
இறுக்கமாக்கி விட்டது
இந்த
ஆண்ட்ராய்டு போனின்
அகால மரணம்.
சுயரூபம்
************
கண்டதையும் படித்து
கண் கெட்டுப்போய்
கண்ணாடி மாட்டித் திரிவதாக
கவலை கொள்கிறாய்.
கண்டபடி நடித்து
புத்தி கெட்டுப்போய்
முகமூடி மாட்டித் திரிவதைப் பற்றி
கவனமில்லாமல்.
– அமீபா