பாண்டிச்செல்வியின் கவிதைகள்
மலர் வளர்ப்போம்
**********************
யுத்தங்களின்
அபாய சங்கொலியில்
உலகத்தின்
அடிவயிறு கலங்குது
அணு குண்டு சத்தத்தில்
கருவும் சிதையுது .
பெண்டு பிள்ளைகள் பதறி
இரத்தம் தெறிக்க ஓடுது
வீடின்றி வாசலின்றி
நாதியற்று
ஆளுக்கொருதிசையில்
சிதறுது குடும்பம்
பாரினில் மூளும்
போரில்
நாடு துறந்து
தூக்கம் தொலைத்து
துக்கம் கனக்க
துப்பாக்கி ஏந்தும்
இராணுவத்தினர்
கண்ணீராறு ததும்புது நாற்புறம்
மனிதம் தொலைத்த
மனிதர்கள்
மரணப் பீதியில்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுச் சாகுது
பூமியில்
மனிதரற்ற
நிலத்தை
வளத்தை என்னசெய்யப்போகுது
வாய்க்கரிசிப் போடக்கூட
யாருமற்ற நாடுதான் எதற்கு
ஒரு மரத்தில்
பறவையினம் பல வாழுது
அன்பொழுக
பாரினில் எட்டுத்திக்கும்
உலாப்போகுது
சமாதானமாக
பிரபஞ்சத்தில்
ஐம்பூதங்கள்
யாவருக்கும் பொதுவே
எல்லையின்
முள் வேலியைப் பிடுங்கி
செடிகளை நடுவோம்
இருபுறமும்
அன்பெனும் நீரைப் பாய்ச்சுவோம்
சமத்துவ மலர் வளர்ப்போம்
முஷ்டியை உயர்த்துவோம்!
********************************
இந்தியாவில்
பிந்தி வந்தேறிய நீ,.
மந்தி ராஜ்யமென பல்டி அடிக்கிறாய்,
குடியானவர்களை ,
குடிபெயர திருத்தம் செய்கிறாய்.;
சட்டத்தை…
உன் இஷ்டம் போல!
மகளிர் இடஒதுக்கீட்டை
ஒப்புக்குக் கூடப் பேச மறுக்கிறாய்!
நண்பகலில் நண்பனோடு நடக்கையில்
நடுவீதியில் நாரடிக்கிறாய்.!
காதலனை மணமுடித்தால்.,
முச்சந்தியில் கருமாதி நடத்தி
கெளரவம் என்கிறாய்!
கிராமத்தின் முக்கு ரோட்டில் மூனு கடை
குடிப்பதற்கு.,!
படிப்பதற்கு பள்ளிக்கூடம்…
கடக்கணும், காததூரம் .!
கல்வியில் காவியை
மழலையர் பள்ளியிலே தூவுகிறாய்!
கட்டணங்களை,பொட்டணமாய் அள்ளுகிறாய்.
ஒரு சாரார் மொழியை,
தேசத்தின் மொழியாக்கத் துடிக்கிறாய்!
தட்டிக்கேட்கும் மாணவர்களின்,
முட்டியை உடைக்கிறாய்.
எதிர்த்து எழும்பும் குரல்களை,
திரித்து வழக்குப் பதிவு செய்கிறாய்!
பூதக்கண்ணாடியில் தேடுகிறாய்,
படைப்பாளர்களை,
காமாலை கண்ணில் பார்க்கிறாய்.!
வழக்காறு நூல்களை.!
குரூரமாகத் தாக்குகிறாய்.,
மண்ணின் மைந்தர்களை.!
கருப்பையைக்
கிழித்து எறிகிறாய்
மதத்தின் அடையாளத்தை, ,
கல்லறையிலும்
காவிச் சாயம் பூசுகிறாய்.
மாட்டுக்கறி உண்பவனை
தீட்டுக்காரனெ
சாட்டையெடுக்கிறாய்,
நாட்டிலிருந்து விரட்டியடிக்கத் தீட்டுகிறாய்
திட்டத்தை!.
உலக சபையில்;
தமிழில் உரையாடி;
வள்ளுவன் உறவுக்காரென,
பூணூல் மாட்டுகிறாய்!.
உன் சந்நியாசி நாடகத்தை ;
வெள்ளாவி வைத்த இளைஞர்களை…
குல்லா அணிந்து தாக்குகிறாய்,…
எழுத, படிக்கச் சொன்ன
நேரு மாமா பல்கலைக்கழகத்தில்
கலகம் செய்கிறாய்,..
கலவரத்தைத் தூண்டி,
நாட்டை கோமாவாக்க துடிக்கிறாய்.
உன் அதிகார சம்மட்டி
அடிக்க, அடிக்க.,…
எஃகாக உருமாற்றம் அடைவோம்,
ஒரு போதும் துருப்பிடித்து உதிர்ந்திடமாட்டோம்.!
குறி சொல்லும் ஜக்கம்மா
*******************************
வம்ச விருத்திக்கு
பத்துக்கு பாக்கியம்
நெறைஞ்சிருக்குனு
ரேகை சொல்லுது
மகமாயி உனக்கு
மொட்டு , பூ பிஞ்சுனு
கழிஞ்சது போக
ஐஞ்சுக்கு அம்சமுனு
ஜக்கம்மா சொல்லுறா
தலைச்சம் மகவு
கனியாகுமுன்னே
கயித்துல தொங்கிட்டா
காத்து கருப்பு அடிச்சதுல
நாலுல ஒன்னு
பரதேசம் போன தகப்பனை தேடியவன் திரும்பவே இல்ல
வீட்டுக்கு
சாதிஜனம்
அங்காளி பங்காளி
ஊருச்சனம் ஆயிரமிருந்தாலும்
கருமாயப்பட்ட மக உன் கண்ணீர் துடைக்க நாதியில்லை.
சொத்துசொகத்துல
வளர்ந்த மக
இன்னைக்கு
அண்ட இடமின்றி
அரவணைக்க யாருமத்து
மூனு ஜீவன்கள் ஆளாக்க
அரும்பாடுபட்ட மகராசி
மூக்கை சிந்தி
மூலையில் உட்காராமா
வம்பாடுபட்ட மக
நீ ஆணா பிறந்திருந்தா
அரசனாகிருப்பே
வளர்ந்த மக்கள் மூன்றில் ஒன்னு மனசுக்கு பிடிச்ச வாழ்வை தேடி ஓடிருச்சு
இரண்டுல ஒன்னு
அப்பன் நெனைப்புல
சீக்காலியா கிடக்கு
சொச்சம் இருக்கும் ஒன்னாவது கரைசேருமா
கரை சேர்க்குமானு
நெரிஞ்சு முள்ளாய் குத்தும் கேள்வி ஒன்னு
நெஞ்சுக்கு குழியில் வாட்டுது ஒன்னை
இதுவரை பிடிச்ச பீடையும் ஏவலும் தூந்துபோக
துணையிருப்பா ஜக்கம்மா
இந்த மனையில்
வயித்துபுள்ளையோட மனசு நெறைஞ்சு வாக்கு கொடுக்கிறேன்
அவளுக்கு காணிக்கையாக
உன் கையில் உண்டானதை கொடு
அப்படியே பழைய கஞ்சியும் சேலை தந்தா சந்தோஷப்படுவா ஜக்கம்மா.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
குறி சொல்லும்
ஜக்கம்மாக்களுக்கு
என்று பிறக்கும் நல்ல காலம்?
க.பாண்டிச்செல்வி.
அமெரிக்கா: கைதிகளின் கூடாரமா? – அ.பாக்கியம்
உலகத்தின் ஒட்டுமொத்த சுதந்திரத்தின், மனித உரிமையின் சொந்தக்காரன் நான்தான் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் போலியானது என்பது அனைவரும் அறிந்ததே.
ராணுவ மேலாதிக்கத்தை வைத்துக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தலையிட்டு பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
உலகத்தில் தனது ராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் நாடு அமெரிக்கா தான். 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவின் ஆறு பாதுகாப்பு துறை அமைப்புகளுக்கு (departments of defence) ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி 1.64 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்காவின் காவல்துறை மட்டுமே பெறக்கூடிய நிதி ஒதுக்கீடு உலக ராணுவத்தில் அதாவது அமெரிக்கா சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடிக்கிறது .
நியூயார்க் நகர காவல் துறை (NPYD) 8.4(80லட்சம்) மில்லியன் மக்களுக்கு சேவை செய்கிறது. இதற்காக ஒதுக்கப்படும் நிதி 5.5 பில்லியன் டாலர் ஆகும். 98.17(சுமார் 10 கோடி) மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாம் நாடு இதே அளவுக்கான தொகையைதான் ஒட்டுமொத்த ராணுவத்திற்கும் செலவு செய்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் வடகொரியா ராணுவ மயமாக்கப்பட்ட ஒரு சர்வாதிகார நாடாகும். சுமார் 26(2 கோடி 60 லட்சம்) மில்லியன் மக்கள் வாழும் வடகொரியாவின் மொத்த ராணுவ பட்ஜெட் சுமார் 1. 6 டாலர் ஆகும். ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) 3.85 (38 லட்சம்) மில்லியன் மக்கள் தொகை வசிக்கும் நகரத்திற்கான காவல்துறை ஆகும். இந்த காவல்துறைக்கு ஆண்டு பட்ஜெட் 1. 9 பில்லியன் டாலர் ஆகும். வடகொரிய நாட்டில் ஒட்டு மொத்த ராணுவ செலவைவிட அதிகமானது.
ஒட்டுமொத்தமான சமூகத்தையே கட்டுப்படுத்த கூடிய அளவுக்கு காவல்துறை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக கருப்பின மக்களுக்கு எதிராக செயல்படும் முறைகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களை ஆகும்.
உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே. ஆனால் கைதிகளில் 20 முதல் 25 சதம் வரை அமெரிக்காவின் பங்காக இருக்கிறது. ஒப்பீட்டு அளவில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சீனாவை சர்வாதிகார நாடு என்றும், மனித உரிமைகளை மீறும் நாடு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உலக மக்கள் தொகையில் 18.5% பங்கு உள்ள சீனாவின் கைதிகள் 15 சதவீதம் மட்டுமே. 194 நாடுகள் உள்ள கைதிகளை ஒப்பிட்டால் அமெரிக்காவின் சிறை கைதிகள் அதைவிட அதிகமாக இருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த உச்சகட்ட காலத்தில் சோவியத் யூனியனில் போர் கைதிகளையும் சேர்த்து 2.5 மில்லியன் கைதிகள் இருந்துள்ளார்கள். அமெரிக்காவின் கைதிகள் இதை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் வன்முறை காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்த கைதிகளில் 67% பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். ஜாமின் பெறுவதற்கான தொகை என்பது ஒரு ஏழையின் 8 மாத ஊதியமாக இருப்பதால் வசதியற்றவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத நிலைமை உள்ளது.
முதலாளித்து வர்க்கத்தின் சிறந்த நலன்களுக்காக, பொருளாதார சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அமெரிக்க அரசு, காவல் துறையையும் சிறைவாசத்தையும் நம்பி இருக்கிறது.
அமெரிக்க தனியார் சிறைகளில் உள்ள கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ள தனியார் தடுப்பு சிறைகள் நிலைமை மோசமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில், 1,16,000 ( பிப். 4, 2021 அன்றைய ஐக்கிய நாடுகள் செய்திகள்) அமெரிக்கக் கைதிகள் தனியாரால் இயக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்த கைதிகளில் 16 சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. 2021 ஆண்டு செப்டம்பர் வரை மெக்ஸிகோ எல்லையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அமெரிக்க அதிகாரிகள் தடுப்புச் காவலில் வைத்துள்ளனர். அவர்களில், 45,000 குழந்தைகள் உட்பட, 80 சதவீதம் பேர் தனியார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தடுப்பு சிறைகள் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன. செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறைந்தபட்ச தரங்கள் இல்லாமல் கட்டமைக்கின்றன. இதன் விளைவாக மோசமான, கடுமையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.
அரசின் கண்காணிப்பு குறைபாடுகளால் தடுப்பு சிறைகளில் வசதிகள் குறைவாகவும், குழப்பமான நிர்வாகம் நடப்பதற்கும்,மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறுவதற்கும் வழிவகுக்கிறது.
சிறைச்சாலை உணவு மற்றும் சுகாதார சேவைகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை தனியார் பெருநிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். இந்தத் தொழில்களில் சிறைத் தொழிலாளர்களைச் குறைந்த கூலிக்கு சுரண்டுவது மூலம் அதிக லாபத்தை தனியார் நிறுவனங்கள் அடைகிறது.
2017 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, சிறைத் தொழிலில் பெரும்பாலான நிறுவனங்கள் கைதிகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 86 சென்ட் முதல் $3.45 வரை ஊதியம் வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து அமெரிக்க மாநிலங்களில் இது போன்ற சிறைத் தொழில்கள் உள்ளன. இங்கு உள்ள சிறைக்கைதிகள் தனியார் நிறுவனங்களால் அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகிறார்கள்.
பல பன்னாட்டு நிறுவனங்களும் இலாபத்தை அதிகரிக்க, அமெரிக்க சிறைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பெரும் லாபத்தை ஈட்டுகின்றனர். தொற்றுநோயின் உச்சத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராட, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் முககவசம் மற்றும் கைசுத்திகரிப்பு பொருட்களை தயாரித்தனர்.
தனியார் நிறுவனங்கள் கைதிகளைக் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளிலும், தீயணைப்பு பணிகளிலும், ஏராளமான கட்டுமான பணிகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். ஏலம் எடுப்பதன் மூலமாக இந்த செய்திகளை பயன்படுத்தி குறைந்த கூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னதான் வேலை செய்தாலும் விடுதலையான பிறகு கைதிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
மனித உரிமைகளை பற்றியும், உலக சுதந்திரத்தை பற்றியும் பேசிக்கொண்டே நாட்டோ அமைப்புகள் மூலமாக உலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர யுத்தங்களை கொடுத்தும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தும் உலக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறது அமெரிக்கா.
அதே நேரத்தில் உள்நாட்டில் மக்களை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள்ளும், சிறைத் தொழில்கள் மூலமும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் நலன்களை பேணி காத்து வருகிறது.
– அ. பாக்கியம்
எல்லையில்லா இன்பம் கவிதை – ஆதித் சக்திவேல்
நாடுகளின் எல்லைகளில்
போராய் வெடிக்கின்றது
எல்லை மீறிய பனிப் போர்
எல்லையோர கிராமங்களில்
எட்டி நிற்க எச்சரிக்கும் மின் வேலி
முட்டி நிற்கும் இரு நாட்டுத் துப்பாக்கிகள்
தினம் தினம்
தீபாவளி கொண்டாடும் வானம்
வெடிச்சத்தத் தாலாட்டுகள்
அன்னையரின் தாலாட்டுக்குப் போட்டியாய்
வேறுபாடு ஏதுமில்லா
பகல் இரவுகள்
சூரிய ஒளி ஒன்றைத் தவிர
வெடிகுண்டுச் சத்தங்களை
விழுங்கிய இரவுகள் விடியும்
சீறிப் பாயும் போர் விமானங்களின்
பேரிரைச்சலுடன்
ராணுவ வண்டிகளால்
புழுதியான சாலைகள்
ஓடி ஒளிந்து உயிர் காக்க
பதுங்குக் குழிகளான காடுகள்
நாற்புறமும் திறந்திருக்கும்
பதுங்கு குழிகள்- அவற்றில்
ஒளியக் கற்றுக் கொண்ட குழந்தைகள்
அக்குழிகளின் இடுக்குகளில்
ஒளிந்து கொண்ட அவரது கல்வி
ஆழப் புதைந்த
தோட்டாவைத் தோண்டி எடுக்கையில்
பீறிட்ட குருதி உறைந்து கிடக்கும்
அக்குழிகளில் தரை எங்கும்
குண்டு துளைத்த காயங்களில்
ரத்தத்துடன் கசியும்
எல்லையோரக் கனவுகள்
வேடிக்கையாய்
பலூன்களைப் பறக்க விட்டு
ஓடி ஆட வேண்டிய குழந்தைகள்
வெடித்த வெடிகுண்டுகளின் மீதங்களை
வீசிப் பிடித்து விளையாடுகின்றன
மரணத்தின் வாசனை நிறைந்த வீதிகளில்
கருவிலிருந்தே வெடிச் சத்தத் தாலாட்டுக்கு
உறங்கி வளர்ந்த குழந்தைகள்
உறங்க மறுத்து அழுகின்றன
அச்சத்தம் கேட்கா இரவுகளில்
பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகள்
பொம்மைகள் ஆகின்றன
எச்சரிக்கைச் சங்கொலிகள்
எல்லையில் ஒலிக்கும் நேரங்களில்
இலக்குத் தவறிப் (?)பாய்ந்த எறிகணைகளால்
கருகி நிற்கும்
ஆலயங்கள்
வீடுகள்
பள்ளிகள்
பிள்ளைகளின் புத்தகங்கள்
வெடிச் சத்தம் கேட்கா நாட்களில் கேட்கும்
பள்ளிகளில் மணிச் சத்தம்
மலைக் குன்றுகளில் ஓடி ஒளிந்து விளையாடும்
மேகங்களின் இடையே
ஓடி ஒளியும் துப்பாக்கி ஏந்திய உருவங்கள்
அணி வகுத்த
ராணுவ வாகன வரிசை கண்டு
மலர பயந்த பூக்கள்
பேசப் பயந்த கிளிகள்
பாடப் பயந்த குயில்கள்
வெளியெங்கும்
பூத்துக் குலுங்கிய பள்ளத்தாக்குகளில்
மலரும் ஓரிரண்டு பூக்களும்
கருகி உதிர்ந்திடும்
வீசும் கந்தகக் காற்றில்
மன்னராட்சி மறைந்தும்
மண்ணாசை மறவா
மக்களாட்சி மன்னர்கள்
அம்மன்னரின் ஆணைக்கு
எல்லையில் போரிடக் காத்திருக்கும்
அவரது படைகள்
கடந்த போர் நிறுத்தத்தில்
பறக்கவிடப்பட்ட அமைதியின் சின்னங்கள்
பிரார்த்திக்கின்றன அமைதி வேண்டி
தூரத்தில்
வான்நோக்கி வளர்ந்த
பைன் மரக் கிளைகளில் அமர்ந்து
அமரவும் முடியாது
பறக்கவும் முடியாது
அந்தரத்தில் மிதக்கும் கிளைகளில்
தொங்கும் பறவைகளாய்
அச்சத்தின் ரேகை நிரம்பிய நாட்களில்
காலமெல்லாம் மக்கள்
எண்ணிப் பார்த்தேன்
இரு நாட்டு எல்லை – வெறும்
நிர்வாக எல்லையானால்……
எல்லை தாண்டியது என் மகிழ்ச்சி
அடையாளம் இழக்கும்
இரு நாட்டு தேசிய நாணயங்கள்
எல்லையோரக் கடைகளில்
இந்நாட்டோர்
அந்நாடு சென்றிடுவர்
தேநீர் அருந்திவர
அந்நாட்டோர்
இந்நாடு வந்திடுவர்
காய்கறி வாங்கிச் செல்ல
அங்காங்கே பூங்காக்கள்
எல்லை நெடுக
இருநாட்டு குழந்தைகள்
சறுக்கி விளையாடிட
பெண் எடுக்கவும் கொடுக்கவும்
தடை இல்லா எல்லையில்
திருமண ஊர்வலங்கள்
இரு திசைகளிலும்
இரு நாட்டுக் கொடிகளும்
அடுத்தடுத்த கம்பங்களில்
ஒருவர் மாற்றி ஒருவர்
ஏற்றி இறக்குவர்
கம்பி வேலி இல்லா எல்லை
துப்பாக்கிக்கு
வேலை இல்லா எல்லை
இன்றோ
ஒவ்வொரு நாட்டிலும்
பாதி நிதி – நிதிநிலை அறிக்கையில்
பாதி நிதி எல்லைக்கும் – அங்கே
அண்டை நாடுகள் தந்திடும் தொல்லைக்கும்
பாராளுமன்றம் பேசும்
பாதி நேரம் எல்லையைப் பற்றியே
இந்நிலை மாறி
என் ஆசை நிறைவேறிடின்
எல்லைகள் இல்லா நாடுகள்
எப்போதும் மகிழுமே
எல்லை இல்லா இன்பத்தில்………
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 14 – ஜா. மாதவராஜ்
“ஒரு உண்மையை பொய்யென ஆரம்பித்து
ஒரு பொய்யை உண்மையென முடிப்பான் பொய்யன்”
– வில்லியன் சென்ஸ்டோன்
ராம்கிஷ்ன கிரேவாலுக்கு 70 வயது. முன்னாள் இரானுவ வீரர். தேஜ் பஹதூரோ எல்லைக் காவல் படையின் வீரராக இருந்தவர். இருவருமே ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்த தேசத்தின் பிரஜைகள் நினைவில் வைத்திருப்பார்களா, தெரியவில்லை. இராணுவத்தையும், இராணுவ வீரர்களையும் பிஜேபி கட்சியும், மோடியும் எப்படி நடத்தியது, மதித்தது என்பதற்கு அவர்களே ரத்தமும் சதையுமான சாட்சிகள். அலைக்கழிக்கப்பட்ட அந்த மனிதர்களின் மரணத்தையும், வாழ்வையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்தவைகளை மீண்டும் கவனிக்க வேண்டும்.
2013 செப்டம்பர் 15ம் தேதி ஹரியானா மாநிலத்தின் ரேவரியில் முன்னாள் இராணுவ வீரர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் நடந்த கூட்டம் அது. நாட்டின் இராணுவ வீரர்களுக்கு மோடி செலுத்தும் முதல் மரியாதையை எல்லோருக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
“நாட்டுக்காக உயிரையேத் துறக்க துணிந்திருக்கும் நீங்கள் மகத்தான துறவிகளுக்கு ஈடானவர்கள். உங்களை நான் வணங்குகிறேன்” என உணர்ச்சி பூர்வமாக பேச ஆரம்பித்தார் மோடி.“1962 போர் சமயத்தில் நான் ஆறாவதோ எழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். இராணுவத்துக்குச் செல்லும் வீரர்களை உற்சாகப்படுத்த ரெயில்வே ஸ்டேஷனில் அவர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் பலகாரங்கள் கொடுத்து வழியனுப்புவதாய் கேள்விப்பட்டேன். என் அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் நான் ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களுக்கு டீ கொடுத்து காலில் விழுந்து வணங்கினேன்.” என மெய்யெல்லாம் கூச்செரியச் செய்தார்.
“பாகிஸ்தான் குஜராத்தை ஒட்டி இருக்கிறது. ஆனால் அங்கு எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருந்தது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி.மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.” என்று பெருமிதம் கொண்டார்.
உண்மை என்னவென்றால் அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் கட்ச் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 1985ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது திட்டமிடப்பட்ட திட்டம் 2003ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.
“நண்பர்களே! தாய் நாட்டுக்காக தங்கள் வாழ்வை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த, சந்தோஷங்களை இழந்த இராணுவ வீரர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ரெயில்வே ஸ்டேஷனில், ஆஸ்பத்திரியில் அவர்கள் பிச்சையெடுப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. நம் மரியாதைக்குரிய முன்னள் இராணுவ வீரர்களின் அடிப்படைத் தேவைகளை யார் மறுத்தது? அவர்களின் சுய மரியாதையை யார் பறித்தது? 2004ம் ஆண்டில் வாஜ்பாய் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் நீங்கள் One Rank One pension பெற்றிருப்பீர்கள்.” என்றார்.
OROP என்றால் One Rank One Pension. இந்திய இராணுவ வீரர்களின் 42 ஆண்டுகால கோரிக்கை அது. இராணுவத்தில் ஒரே ரேங்க்கில் இருந்தாலும் அவர்களின் கிரேடு சார்ந்தும், துறை சார்ந்தும் வெவ்வேறு பென்ஷன்கள் கொடுக்கப்பட்டு வந்தன. பெரும் ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் கொண்டதாயிருந்தது. பணி ஓய்வு பெறும்போது ஒரு இராணுவ வீரர் எந்த ரேங்க்கில் இருந்தாரோ அதற்குரிய பென்ஷன் ஒன்றுபோல் வழங்க வேண்டும் என அவர்கள் காலம் காலமாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அதுவரை இருந்த எந்த பிரதமரையும் விட இராணுவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மோடி தன்னைக் காட்டிக் கொண்டார். தன் தேர்தல் பிரச்சாரங்களில், இராணுவ வீரர்களை இதுவரை இருந்த அரசுகள் மதிக்கவில்லை, போற்றிப் பாதுகாக்கத் தவறி விட்டன என குறை சொல்ல ஆரம்பித்தார். அதற்கு அவர் கையிலெடுத்ததுதான் OROP.
உலகின் சர்வாதிகாரிகள் அனைவருமே மற்ற எவரைவும் விட இப்படித்தான் தங்கள் இராணுவ வீரர்களை போற்றி வந்தனர். அதன் அடிநாதம் வேறு. சர்வாதிகாரிகளுக்கு நிலமே தேசம். மக்கள் அல்ல. குடும்பம், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு எல்லைகளில் நின்று நிலத்தைக் காப்பவர்களை கொண்டாடுவார்கள். தங்கள் நலன்களைப் பொருட்படுத்தாமல் தேசத்தின் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இராணுவ வீரர்களின் தியாகங்கள் வழியாக நாளும் மக்களுக்கு உணர்த்தப்படும். தேசத்தின் மீது மக்களுக்கு ஒரு பக்தியை ஏற்படுத்துவதும், அதை மேலும் தேசீய வெறியூட்ட முயற்சிப்பதுமே பாசிஸ்டுகளின் முக்கிய இலக்கணமாயிருக்கிறது.
நிஜத்தில் அவர்களுக்கு இராணுவமே முக்கியமானது. இராணுவ வீரர்கள் என்னும் மனிதர்கள் முக்கியமில்லை. காலம் இதனை தெளிவுபட உணர்த்தியும் உலகம் முழுமையாக இன்னும் அறியாமலேயே இருக்கிறது.
2014 மே மாதம் மோடி பிரதமர் ஆனார். இராணுவ வீரர்களின் சேவையை வழக்கம்போல் பாராட்டிக்கொண்டு இருந்தாரே ஒழிய, OROP-குறித்து வாயைத் திறக்கவில்லை. ஓய்வு பெற்ற இராணுவர் வீரர்கள் தொடர்ந்து அரசிடம் கேட்கத் தொடங்கவும், 2014 தீபாவளிக்குள் அமல்படுத்தப்படும் என இராணுவ அமைச்சர் பாரிக்கர் உறுதியளித்தார். மோடியிடமிருந்து நல்ல செய்திக்காக பாலைவனத்திலும், பனிமலைகளிலும் இராணுவ வீரர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
ஏமாற்றங்களுக்கு ஆளான முன்னாள் இராணுவ வீரர்கள் கோபம் கொண்டு போராட்டங்களுக்கு அழைப்பு விட ஆரம்பித்தனர். பிரதமராகி ஒரு வருடம் கழித்து 2015 மே 30ம் தேதி மோடி, “நிச்சயம் OROP அமல்படுத்துவோம். அது குறித்து வரையறுக்க வேண்டியிருக்கிறது” என வாயைத் திறந்தார். மே 31ம் தேதி மான் கீ பாத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள் பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
காலதாமதம் செய்யப்படுவதையும், தங்கள் பிரச்சினைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையும் உணர்ந்து ஜூன் 15ம் தேதி முன்னாள் இராணுவ விரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘இதுதான் இராணுவ வீரர்களைத் தாங்கள் நடத்தும் விதமா, இதுதான் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தாங்கள் தரும் மரியாதையா?” என ஜனாதிபதிக்கு கடிதங்கள் எழுதினர்.
2015 சுதந்திரதினத்திற்கு முந்திய நாள் முன்னாள் இராணுவத்தினர், இறந்த இராணுவத்தினரின் மனைவி மக்கள் எல்லாம் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு OROP கேட்டு, கோரிக்கை அட்டைகள் சுமந்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் அவர்களை வலுக்கட்டாயமாக தரையோடு இழுத்து விரட்டியடித்தனர். தேசத்தை பாதுகாத்தவர்கள் தேசத்தின் தலைநகர் வீதிகளில் பரிதாபமாக நிலைகுலைந்து போனார்கள். அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் கொதிக்கவும், ’பாதுகாப்பு கருதி’ அப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
அடுத்த நாள், செங்கோட்டையில் நின்று சுதந்திர தின விழாவில் மோடி, நாட்டிற்கு அற்புதங்களைக் கொண்டு வரப்போவதாக மணிக்கணக்கில் நீட்டி முழக்கி விட்டு இறுதியில், இராணுவத்தினரையும், அவர்களது சேவையையும் தான் பெரிதும் மதிப்பதாகச் சொல்லி, OROP-ஐ கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லி பறந்து விட்டார்.
இராணுவத்தினர் மீது மோடி அரசின் போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், OROP ஐ மேலும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வலியுறுத்தியும் முன்னாள் இராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் 2015 ஆகஸ்ட் 17 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். பீகார் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
2015 செப்டம்பரில், மத்திய அரசு OROP குறித்த பணிகள் முடிந்துவிட்டதாகவும் அமல் செய்யப் போவதாகவும் திரும்பவும் அறிவித்தது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 2015 தீபாவளி தங்கள் குடும்பத்தினருக்கு கருப்பு தினம் என முன்னாள் இராணுவத்தினர் அறிவித்தனர். இறுதியாக 2016 பிப்ரவரியில் OROP அமல் செய்யப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இருந்தன. ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் கமிஷன் படி உயர்த்தப்பட்ட தொகையும், அதற்குரிய அரியர்ஸும் தரப்படவில்லை. அதை சரிசெய்ய முன்னாள் இராணுவத்தினர் திரும்பவும் போராட வேண்டி இருந்தது.
மோடியோ, OROP ஐ மத்திய அரசு அமல்படுத்தி விட்டதாகவும் 2016 தீபாவளியை இராணுவத்தினரோடு கொண்டாட இருப்பதாகவும் அறிவித்தார். அக்டோபர் 29ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில், இந்திய திபெத் எல்லையில் இராணுவ வீரர்களுக்கு சுவீட்களை ஊட்டியவாறு போட்டோக்களில் காட்சியளித்தார்.
சரியாக அடுத்தநாள் அக்டோபர் 30ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இராணுவ மந்திரியை சந்தித்து, இன்னும் தீர்க்கப்படாத தங்கள் பிரச்சினையை முறையிட சில முன்னாள் இராணுவத்தினர் சென்றனர். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 70 வயதான ராம்கிஷ்ண கிரேவாலும் ஒருவர். 28 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு 2004ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். தன் கிராமத்தில் பல சமூக சேவைகளையும் செய்து வந்தவர். அதற்காக சங்கர் தயாள் ஷர்மா விருதினையும் பெற்றிருந்தார்.இராணுவ மந்திரியை சந்திக்க முடியாமல் அவர்கள் திரும்ப வேண்டி இருந்தது. ராமர் பெயரைக் கொண்டிருந்த அந்த முன்னாள் இராணுவ வீரர் மிகுந்த மன வேதனையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். ”துணிவும் வலுவும் கொண்ட ஒரு மனிதரை இந்த அரசு நொறுக்கிவிட்டது” என சக இராணுவ வீரர் கலங்கி நின்றார். மோடிக்கும் அவரது அரசுக்கும் ராம்கிஷ்ன கிரேவாலின் மரணம் ஒரு பொருட்டல்ல. செய்தியுமல்ல.
ஹரியானாவைச் சேர்ந்த எல்லைக் காவல் படை வீரர் தேஜ் பஹதூரும் அதுபோலவே மோடியை நம்பி ஏமாந்து போயிருந்தார். 1996ல் இராணுவத்தில் சேர்ந்திருந்தவர், மோடியின் ஆட்சியில் இராணுவத்திற்குள் நடந்து வந்த ஊழல்கள் ஒழிக்கப்படும், இராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.
2017 ஜனவரி மாதத்தில் இராணுவத்தில் நடந்து வரும் ஊழல்களை வெளியே சொல்ல ஆரம்பித்தார். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவையும், நல்ல உணவுக்கான பொருட்கள் இராணுவ அதிகாரிகளால் வெளியே விற்கப்படுவதையும் வீடியோவில் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பிரபலமாகி பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இராணுவத்தின் மீது பிரதம மோடி வைத்திருக்கும் மரியாதைக்கு பங்கம் அல்லவா அது? பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து உயர் இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அதுகுறித்து தேஜ் பஹதூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் விபரங்கள் வெளியாகவில்லை.
சில மாதங்கள் கழித்து தேஜ் பஹதூரிடமிருந்து இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டது. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சல் தருவதாகவும், அவரது மொபைலை அபகரித்து, அதில் மோசடிகள் செய்து, தேஜ்பஹதூருக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவதூறு செய்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். “ஊழலை வெளிப்படுத்தினால் இதுதான் ஒரு ஜவானுக்கு திரும்பக் கிடைக்குமா என பிரதமரிடம் கேளுங்கள்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
அவரது குரல் எடுபடவில்லை. இராணுவத்திலிருந்து தானாக ஓய்வு பெறுவதற்கு ( VRS) அரை மணி நேரத்துக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டு, எந்த நியதியும் இல்லாமல் உள்ளூர் போலீஸால் விசாரிக்கப்பட்டார். இராணுவத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்கவில்லை என்றும், யூனிபார்மில் இருக்கும்போது மொபைல் போன் உபயோகித்தார் என்றும், அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அறிவித்து இராணுவத்திலிருந்து எந்தவித விளக்கமும் கேட்கப்படாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ‘இராணுவ ரகசியம்’, ‘இராணுவ ஒழுங்கு’ என்றால் சாதாரணமா?
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தேஜ் பஹதூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பார்த்தார். அங்கும் ஏமாற்றமடைந்தார். 2019 ஜனவரி மாதம் 18ம் தேதி, தேஜ் பஹதூரின் மகன் ரோஹித் மரணமடைந்தார். “ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக டெலிபோன் வந்தது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். உள்ளே பூட்டப்பட்ட அறையில் தலையில் சுடப்பட்டு ரோஹித் இறந்திருந்தான். அருகில் பிஸ்டல் கிடந்தது. தேஜ் பஹதூர் வீட்டில் இல்லை. கும்ப மேளாவுக்குச் சென்றிருந்தார்” என போலீஸ் தரப்பு செய்தி வெளியானது. தேஜ் பஹதூரிடமிருந்து எந்த தகவலும் அது குறித்து இல்லை.
2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நிற்கப் போவதாக தேஜ் பஹதூர் முடிவெடுத்தார். 2014 தேர்தலின் போது ஹரியானாவில் எந்த ரேவரியில் நடந்த கூட்டத்தில் நின்று மோடி இராணுவ வீரர்களை போற்றி பேசினாரோ, அதே ரேவரியில் நின்றுதான் 2019 மார்ச் 31ம் தேதி அந்த அறிவிப்பை தேஜ் பஹதூரும் வெளியிட்டார்.
சுயேச்சையாக தேர்தலில் நிற்கத் துணிந்தவரை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி ஆதரித்தது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப் போவதாக அறிவித்தது. அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேவையான விபரங்கள் இல்லையென சொல்லப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அலகாபாத் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து ’தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டது, மோடியின் வெற்றி செல்லாது’ உச்ச நிதிமன்றத்திஉல் வழக்குத் தொடுத்தார். அங்கும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 2020 நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தேஜ் பஹதூர் குறித்த தகவல்களும் இல்லை. மக்களின் நினைவுகளில் அவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள்தான்.
ராம்கிஷ்ன கிரேவாலையும் தேஜ் பஹதூரையும் தேசமும், மக்களும் மறந்து விடக் கூடாது. ‘ஜெய் ஜவான்’ என இனி முழக்கங்கள் எழும் பொதெல்லாம் அந்த இராணுவ வீரர்களின் நினைவுகள் வந்தால் தேசம் பிழைத்துக் கொள்ளும். உண்மையான எதிரிகள் யார் என்பதை அந்த இரண்டு இராணுவ வீரர்களும் தேசத்திற்கு காட்டி இருக்கிறார்கள்.
(இத்துடன் இந்த தொடரை இந்த வலைத்தளத்தில் நிறுத்திக் கொள்கிறோம். மேலும் சில அத்தியாயங்களோடு சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘பொய் மனிதனின் கதை’ புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது.)
References:
Full Text of Shri Narendra Modi’s speech at Ex- Servicemen’s Rally, Rewari : Narendra Modi website
OROP suicide: Who was Subedar Ram Kishan Grewal? : India Today, Nov 3, 2016
BSF jawan Tej Bahadur Yadav, who complained of bad food in camps, dismissed : Hindustan Times, Apr 26, 2017
‘Bad food’ video: NIA probed BSF man for ‘foreign contacts,’ found nothing : Indian Express, Feb 1, 2018
“Will Contest Against PM Modi From Varanasi,” Says Sacked BSF Soldier : NDTV, Mar 19, 2021
PM Modi celebrates Diwali with jawans in Sumdo on the Indo-China border : India Today, Oct 30, 2016
Black Independence Day, cry OROP protesters at Jantar Mantar : India Today, Aug 14, 2015
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்