தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 20 – டாக்டர் இடங்கர் பாவலன்
20. தாய்ப்பால் சேகரித்தல்
டாக்டர் இடங்கர் பாவலன்
காற்றில் அலைந்தபடியே மலரில் தேனைப் பருகி வட்டமடிக்கிற ஒரு தேன்சிட்டின் உழைப்பிற்கு ஒத்தது, மணிக்கணக்காக அமர்ந்து ஒரு அம்மா தன் மார்பிலிருந்து பாலை எடுத்து வைத்துச் சேகரிப்பதும் அதைப் பிள்ளைக்குப் புகட்டுவதும். ஒரு வசந்த காலத்திற்கு பறவைகள் தயாராகுவது போல நாமும் தேனினும் இனிய தாய்ப்பாலினைச் சேகரிப்பது தொடர்பாக எல்லா வகையிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்ப்பாலினை பம்ப் செய்வதன் வழியே சேகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் கைகளினால் மார்பிலிருந்து பக்குவமாகச் சேகரிப்பதையும்கூட நாம் ஒவ்வொருவரும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் தாய்மார்களே!
மார்பிலிருந்து பாலெடுக்கத் தயாராகிற போது நமக்கென்று இருக்கிற ஏதேனும் தனித்த அறையில் இருந்து பாதுகாப்பு உணர்வோடு தயாராகிக் கொள்ள வேண்டியது அவசியம். அத்தோடு நம் குழந்தைகள் அருகிலேயே அமர்ந்து பாலெடுக்கையில் அவர்களைப் பற்றிய பரிபூரணமான எண்ணங்கள் மனதிலே உருவாகி அதுவே தாய்ப்பால் மார்பில் பெருக்கெடுக்கச் செய்யத் தூண்டுவதற்கு ஏதுவாகிவிடும். அச்சமயத்தில் நம் கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்வதுடன், தாய்ப்பால் சேகரிக்கப் போகிற குவளையையும் நன்றாகக் கொதிக்கிற தண்ணீரிலிட்டு பாதுகாப்பானதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் மனதையும் உடலையும் இலகுவாக வைத்துக் கொண்டு அமர்ந்தபடி பாலினைச் சேகரிக்கத் துவங்குகையில் மார்பினை முதலில் வெதுவெதுப்பான சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளலாம். பின்பு மார்பினை மெல்ல வெளிப்பக்கத்திலிருந்து காம்பை நோக்கியபடி மெல்ல நீவிக் கொள்ளலாம். இதனால் மார்பும் விரைவில் பாலினை சுரப்பதற்குத் தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ளும்.
இதன் துவக்கத்தில் உடலை சற்று முன்பக்கமாக தாழ்த்தியபடி இதனைத் துவக்கலாம். அப்போது ஒருகையில் மார்பைப் பற்றியபடியும் இன்னொரு கையில் சேகரிக்க வேண்டிய குவளையையும் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில் அவரவர் வசதிக்கேற்ப வலது, இடது என்று எந்தக் கைகளையும் பயன்படுத்தி மார்பினைப் பற்றிக் கொள்ளலாம். அதிலே கட்டைவிரல் மேலேயும் மற்ற நான்கு விரல்கள் கீழே இருக்கும்படியும் காம்பிலிருந்து சற்று இரண்டு இன்ச் வெளியே தள்ளியிருக்கும்படி பிடித்துக் கொள்ள வேண்டும்.
மார்பினை கைகளால் நன்றாக பற்றிக் கொண்டவுடன் பாலினை எடுப்பதன் முதல் கட்டமாக விரல்களை அப்படியே பின்நோக்கி நெஞ்சுக்கூடு வரைத் தள்ளி அவ்வாறே காம்பை நோக்கிய விரல்களை மீண்டும் நீவியபடியே கொண்டு செல்ல வேண்டும். அதாவது மார்பலிருந்து பாலினை முன்னும் பின்னும் இசைத்துக் கறப்பது போலத்தான் இதுவும். இதனால் மார்பின் பால் பைகளிலிருந்து காம்பின் வழியே பால் வெளியேறி குவளையில் வந்து நிறைகிறது.
இதே போல விரல்களை காம்பைச் சுற்றி வெவ்வேறு நிலைகளில் மேலும் கீழுமாக, பக்கவாட்டில் என்று பொருத்தி பாலினை எடுத்து புட்டிகளில் நிரப்பலாம். பொதுவாகப் பாலினை எடுக்கையில் அதிகமான தொடுவுணர்வுள்ள மார்பினை மிருதுவாகக் கையாள வேண்டும். இதனால் மார்பின் பாலினை எடுத்துச் செல்கிற குழாய்கள் வீணாக சேதமடைந்து தாய்ப்பால் கட்டிக் கொள்வதை நாமும் தவிர்க்க முடியும்.
நாம் சேகரிக்கிற புட்டிகள் முழுக்க நிரம்பும் அளவுக்கு என்றில்லாமல் முக்கால் அளவிற்கு வழிந்துவிடாதபடி சேகரித்துக் கொள்ளலாம். இதனை அப்படியே கொண்டு போய் குளிரூட்டியில் திறந்த நிலையிலும் வைக்கக் கூடாது, செயற்கை நிப்பில் காம்போடும் மூடியும் வைக்கக்கூடாது. செயற்கை காம்பின் நுனியில் துளைகள் இருப்பதால் அதன் திறப்பின் வழியே தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா! ஆகையால் அதற்கென இருக்கிற மூடியினால் அதை இறுக்கமாக மூடிப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நம் பிள்ளைக்குத் தேவைப்படுகிற போது எடுத்து பசீதீர ஆசையாகப் புகட்டலாம் தானே!