நூல் அறிமுகம் : இ.பா.சிந்தனின் அரசியல் பேசும் அயல் சினிமா – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம் : இ.பா.சிந்தனின் அரசியல் பேசும் அயல் சினிமா – இரா.சண்முகசாமி
நூல் : அரசியல் பேசும் அயல் சினிமா
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : முதல் பதிப்பு 2014;
இரண்டாம் பதிப்பு 2015
விலை : ரூ.140
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

18.05.2022 அன்று சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் நடைபெற்ற, தோழர் இ.பா.சிந்தன் அவர்கள் எழுத்தில் வெளியான பாரதி புத்தகாலயத்தின் ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவின்போது வாங்கிய நூல்தான் இது.

அப்போது வரை இந்நூல் எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று யோசித்துப் பார்க்கிறேன். வாங்கிய பிறகு ஏன் வாங்கினேன் என்று படிக்க ஆரம்பித்தவுடனேயே பதற்றமடைகிறேன்.

ஆம் என் செல்போனில் நான் இந்நூல் குறித்து தட்டச்சு செய்யும்போதே போனில் ரத்தம் கசிந்து வழிந்து ஓடுவதைக் காண்கிறேன். ஆம் அந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று எனக்கு இப்போது தெரிய ஆரம்பித்தது. அது காங்கோவில் சுரங்கத்திலிருந்து நோக்கியோ செல்போன் உதிரிப் பாகத்திற்காக கேசிட்ரைட் (Cassiterite), கோல்டன்(Coltan) என்னும் கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக 30 சதவீத பெண்களை வன்புணர்வு செய்த; குழந்தைகளைச் சுரங்கத்தில் இறக்கி ரத்தம் பார்த்த; 90 கி.மீ தூரம் 50 கி.கி. கனிமத்தை இரண்டு நாட்கள் தலையில் சுமந்து விமானத்தில் ஏற்றிய மக்களின் ரத்தம் குடித்த; வழியில் ராணுவ அடாவடி, மாஃபியா ரவுடிக் குழுக்களின் சுரண்டலில் என மக்களின் ஒட்டுமொத்த ரத்தத்தையும் வழிந்தோடச் செய்து உற்பத்தி செய்த போனில், ரத்தம் வழிந்தோடுவதை நான் மட்டுமல்ல நீங்கள் வாசித்தாலும் உங்களுடைய செல்போனிலும் ரத்தம் கசிவதை நீங்கள் அழுதுகொண்டே பார்க்க முடியும்.

தோழர்களே, சினிமா என்றால் நமக்கு நம்மூரில், நம் மூளையில் திணிக்கப்படுவதெல்லாம் மூளைச்சலவை திரைப்படங்கள் தான். ஆனால் தப்பித் தவறியும் அரசியலைப் பேசிவிடக்கூடாது என்கிற திட்டமிடலோடு எடுக்கப்படுகிற சினிமாக்கள் தான் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. போதும் இத்தோட நிறுத்திக்கிறேன். நேரா விசயத்திற்கு வருகிறேன்.

அயல் நாடுகளில் எடுக்கப்பட்ட சினிமாக்களை தொடர்ந்து இணையதளத்தில் பார்த்து அதிலிருந்த அனுபவங்களைத் தொகுத்து தோழர் இ.பா.சிந்தன் அவர்கள் மிகச்சிறப்பாக எழுதிய நூலைத்தான் வாசித்தேன், வாசிக்கிறேன்.
இனி அவர் பார்த்த அயல் சினிமாக்களை இணையத்தில் விரல் கொண்டு தேடவேண்டியது தான் பாக்கி.

ஆம் தோழர்களே, ‘blood in mobile, The Coca Cola Case, The Dark side of Chocolate’ என 16 அயல் திரைப்பட பட்டியலை நமக்கு இந்நூல் வழியாகக் காண்பிக்கிறார் எளிய நடை எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்கள்.

வாசிப்போம்!
விவாதிப்போம்!!
கார்பரேட்டுகளின் மனிதத் தன்மையற்ற மூலதன வெறியை விரட்டுவோம் தோழர்களே!!!

இரா.சண்முகசாமி
புதுச்சேரி
9443534321