கார்கவியின் கவிதைகள்
கதவிற்கு வெளியே பூட்டு
********************************
என்னை உறக்கத்தில்
போர்த்திவிட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடைபோடுகிறார்…..!
உரக்கப் பேசியவர்
என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்…!
ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்…!
சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப்பிரிந்து காது…!
காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும் காதுகளுக்கு
வயது முற்றிவிடுகிறது
சலிப்பின் காரணமாக….!
மொத்தம் எடையேறிய
விடயங்களுக்குப்
போர்வையைச் சேர்த்து
விடப்படுகிறது கதவிற்கு
வெளியே பூட்டு….!
அமாவாசையும் அந்த விட்டிலும்
**************************************
மொத்த இருட்டில்
பற்றிக்கொள்ளும் பயம்
ஊருக்கே வெளிச்சமூட்டும்
ஒரு நாள் விட்டில்
இருண்ட உலகில்
மௌன கீதங்கள்
அனாதையானது யாரும்
பயணிக்காத சாலை
இழுத்து அடைக்கப்பட்ட
கதவில்
சிறு வெளிச்சம்
படிந்த கை ரேகையில்
படரும் இருள்
வாசலில் அழைப்பு மணி
வயதாகி விடுகிறது அசதிக்கு
அறையும் வராந்தாவில்
இன்று வாசலிலும்
இருளும் விட்டிலும்
கொடுத்தது வெளிச்சம்
இன்னும் ஐந்து
நிமிடத்தில் ஆட்டம்
காலம் வெல்லும் காதல்
***************************
இரவுகளின் துணை கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டேன்…!
நீ
விளையாட வானத்தில்
நட்சத்திரங்கள் அழைத்து வந்தேன்….!
பிள்ளைகளின்
புத்தகத்தில் பருவப்பாடல் பாடி வந்தேன்….!
கனமான காற்றை
மடித்து கழுத்திற்கு
மணி ஆக்கிவிட்டேன்…!
வகைவகையாய்
இரவை சோடித்து
நட்சத்திரங்களை
ஆங்காங்கே புள்ளிகளிட்டேன்….!
புதிதாக பிறந்த குழுந்தைக்கு
புத்தாடை ஆகிவிட்டேன்…!
பளபளக்கும்
தண்ணீர் தடத்தில்
மீனின் தாகமாய்
மாறிவிட்டேன்…!
எல்லாம் மாறிய
என் குணத்தில்
காதலின் வடுக்களும்
நீ
நடந்து வந்த
தடங்களையும்
கண்ணீரில்
நிரப்பி
கால் நனைத்து
பருகிறேன்…
அன்பே
என்(நம்)
காலம் வென்ற காதலால்….!
கானல் நீர்
************
திடிரென எழும் கரடுமரடான
சத்தங்களுக்கு இடையில்
ரம்யமாக கேட்கிறது
“அ ஆ” பாடல் வரிகள்
ஆத்திச்சூடியை படித்தவாறு முதுகுச்சுமை ஏற்றிய
குழந்தை நகர்கிறது..
இரும்பு சுத்தியல் கையில் ஏந்தி
அழுக்குத்துணியில்
காக்கை எச்சம் துடைத்து
கண்ணீரில் கரைந்துக் கொண்டே
இருக்கிறது
புத்தகம் ஏந்திய
கனவினை
மாலையடைந்தவுடன்
சம்பளத்தில் இறக்கி வைக்கும்
பள்ளி செல்லா குழந்தையின் கானல் நீர் மனம்….
இனிப்பு
**********
தினம் தினம் பள்ளி சொல்லும் பொழுதெல்லாம்
தானாக திருப்பப்படுகிறது
நாவோடு சேர்ந்த சிரம்…!
அரையனா எட்டனாக்களை சேகரித்து ஒரு ருபாய் மிட்டாய் கேட்கும் குழந்தை மனம்…!
கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கும் பெற்றோர் மனம்….
இன்று கடையுண்டு
உள்ளே மனிதனுண்டு
பணமுண்டு அள்ளித்தர மணமுண்டு
பூப்பெய்த மறந்தவள் இல்லை
தினம் தோன்றிய ஆசை இல்லை
கடந்து போன ஆசை இல்லை
எறும்பு மொய்க்காது
புழுக்கள் குறையில்லாது
ஆறடி குழியில் உறங்கிக் கொண்டிருக்கும்…!
எங்கோ பிறந்து
காம எச்சங்களால்
மொய்க்கப்பட்ட
பாலியல் இனிப்புகளில்
சிக்கிய
குழந்தையின் கை இனிப்பு….!
சிறகை விரி சிகரம் தொடு
*******************************
விதைகள் வலிகள் காண்பதில்லை- வான்
மழையோ பெய்தலில் கரைவதில்லை…!
கதிரவன் சோர்வை ஏற்றதில்லை-இயற்கை எவையும் இயல்பற்று கடந்த்தில்லை…!
உயரங்கள் தலை நிமிர்வில் சுருங்குவதில்லை- உன்
அடியை உயர்த்தி வழி நடத்து வழிகள் பிறக்கும் உன் பாதம் தொட்டு…!
வரப்புகளில் இல்லாத ஈரம் பயிர்களுக்கு கண்டிப்பாக உயிர் கொடுக்காது
நம் கோள வடிவ கோளத்தில் குடைகள் எதற்கு
துணிந்தெழு…!
புறாக்கள் எப்போது கழுகாக இயலாது..
கழுகிற்கு பதில் புறாக்கள் வீடடங்காது..
இரவு ஆந்தையாய் மட்டும் வாழ்ந்து விடாதே….!
முதுகெலும்பினை கிழித்தெறி-உன்
நம்பிக்கை சிறகு முளைக்கட்டும்,
உன் வேற்றி சிகரம் தொட பறக்கட்டும்…
முதற்சுழி மழையே
**********************
வீதியெல்லாம்
கோலமானப் பிறகு
மார்கழிக்கு
குறையேதும் இல்லை…!
நிரம்பிய நீரில்
நித்தம்
கோலமாடுகிறது
ஏழைகளின்
வறுமையை
வடம்பிடிக்க வந்த
வகையில்லாத
ஆற்றோட்டத்தில்
வைக்காத புள்ளிகளாய்
ரங்கோலிகளை
வண்ணங்களாய் எடுத்துக் கொண்டு
சிக்கு கோலங்களின்
ஊடு புள்ளிகளை
வகையில்லாமல்
வைத்து செல்கிறது
இந்த மழை எனும்
இயற்கை…..
தாமரையில் விரல் பிடித்த அல்லி
*************************************
ஒவ்வொரு
படிகளையும்
தொட்டுச் செல்கின்றன
தாய்மையும்
சேய்மையும்…!
நிலாக்கள்
நீருற்றிய பாதையில்
வலம் வருகின்றன…!
தாமரை
கரம்பிடித்த அல்லி
புத்தாடை போர்த்திக் கொண்டு
முன்னேறுகிறது
வானை நோக்கி….!
அனைத்து
பாதச்சுவடுகளிலும்
அன்பின் நீர்த்துளிகள்
பருகிச் செல்கின்றன
ஈரம் சுரக்காத
பாறைகள்….!
முன்பின் தெரியாத
பலருக்கு பின்பக்க விதிமுறைகளை மட்டும்
அழகியல் சொல்லி நடக்கிறது
கண்களுக்கு காதல் விருந்தாய்……!
தாயும் சேயுமாய்
அன்புகள் ஆங்கே நடைபயணம்…..!