Arambai Book By Mohammad Yusuf bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: முஹம்மது யூசுப்பின் அரம்பை – கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: முஹம்மது யூசுப்பின் அரம்பை – கருப்பு அன்பரசன்

அவள் கருநீல யானை ஒன்றில் வளையல்கள் குலுங்கிடும் கரமதில் வேல் கம்போடும்.. புல்லாங்குழலோடும் மூத்த குடிகளின் மூதாய். தேவதை.

அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன்… படுக்கைக்கு அருகில் இருந்த சன்னலுக்கு வெளியே வளர்பிறை காணாமல் போயிருந்தது இக்கணம். மூடியும் மூடாமலும் இருந்த விழிகளுக்கு திறந்திருந்த சன்னலுக்குள் இருட்டு கைதாகி இருப்பதாக மூளை உணர்த்தியது… செம்பருத்திப்பூவாய் சிரித்திட்ட என் ராசாத்தியின் மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கும் என்னைப் போலவே இருட்டும் இப்போது சன்னலுக்குள்! படுக்கும் போது இருந்த வளர்பிறைக்கு பதில்.

அமைதியை நிரப்பிக் கொண்டிருக்கும் சிலுசிலு காற்றின் ஓசையை கிழித்து மேலெழும்பி காதுக்குள் வந்து சேர்ந்த ஒற்றை காகத்தின் கரைதலில் விடியத் தொடங்கியிருக்கும் காலைப் பொழுதின் தொடக்கத்தில் சிறு புள்ளியாய் ஒருநட்சத்திரம் மட்டும் கண்ணடித்துக் கொண்டு… ஒன்று காணாமல் போக இன்னொன்று எப்பொழுதும் நிரப்பிக் கொண்டே இருக்கும் இயக்கவியலின் ஆதாரமாக இப்பொழுது கண்ணடிக்கும் அந்த ஒற்றை நட்சத்திரம்.

போர்த்தியிருந்த போர்வையை நீக்கி புலர் காலைக் காற்று முகத்தில்.. நேசம் மிகுந்த கண்மணியின் பாதத்தில் நான் பதித்த முதல் ஈர முத்தத்தை போன்று சிலிர்ப்பைஉண்டாக்கியது உடலுக்குள்ளும் மனசுக்குள்ளும். அமைதி இல்லாமல் எப்பொழுதுமே அலையடித்துக் கொண்டிருக்கும் மனித மனங்களின் நினைவுக் குளத்தில் சின்னதொரு தவக்கட்டான் ஓட்டினை ஓசையில்லாமல் வீசியது பறவை ஒன்றின் கீச் கீச் ஒலி..

அது வீசும் காற்றின் அழகை வடிவாக்கி பேரழகாக்கியது.. குளிர் காலைப் பொழுதின் ஈரக்காற்றும் வானமெங்கும் பூசியிருக்கும் கருப்பும்தான் எத்தனை வனப்பு மிகுந்தது. மனித மனங்களை வசியப்படுத்த கூடியது. வரவேண்டிய இணை வந்து சேரவில்லை என்கிற ஏக்கமதில் குயிலின் குக்கூ காற்று வெளியெங்கும் ராகம் இசைக்க, பக்கத்தில் நேற்று வாசித்து முடித்த அரம்பை..

மதிப்புரையை எங்கிருந்து எப்படி தொடங்குவது? மனசுக்குள் இதே நினைவாக கண்மூடி அயர்ந்தவனை விடியற்காலையின் அழகெல்லாம் அருவி நீராய் உச்சந்தலையில் கொட்டி எழுப்பியது. கருநீல நிற யானை ஒன்றில் சமூகத்தின் மூத்தக்குடி; திடகாத்திர தோளினை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையில் ஒருகையில் வேல் கம்போடும் இன்னொரு கையில் வண்ண வண்ண வளையல் குலுங்கிட புல்லாங்குழல் ஏந்தியும் தேவதையாக எதிரில்.

முதலில் அன்பு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வோம் அரம்பை ஆசிரியர் முஹம்மது யூசுப் அவர்களுக்கு. தலைமை ஏற்று பெரும் சமூகத்தையே வழிநடத்திச் சென்ற, பாதுகாத்துச் சென்ற பெண் அடுக்களைக்குள் கிடந்து தனது செயல்கள் அனைத்திற்கும் ஆணின் கண் அசைவை எதிர்பார்த்து அடங்கி ஒடுங்கிக் கிடப்பதற்கு எதிராக மாயா. வண்ணங்களைக் குழைத்து தூரிகையால் உரையாடும் ஓவியக் கலைஞராக.. கல்லிலே செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வரலாற்று புனைவுகள் அனைத்தையும் கேள்வியின் உளிகளால் செதுக்கிச் செதுக்கி மறு வாசிப்புக்கு உட்படுத்தி நிஜத்தின் வனப்புகளை வடிவாகி வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும், கலகம் செய்யும் சிற்பியாக..

இயற்கையின் உன்னதங்கள் அனைத்திலும் நுழைந்து அதன் வேர் அழகினை தன் கற்பனை வளமையின் உச்சத்தால் பார்ப்பவர்களின் சிந்தனைகளும் மனதும் இறக்கை கட்டி பறக்கும் குதிரையாகிட, தூரிகையால் வார்த்தெடுக்கும் படைப்பாளுமையாக.. தைரியம் மிகுந்தவராக.. நேர்கொண்டு தனது கருத்துக்களை பேசுபவராக நாவலுக்குள்.. தனது தனித்துவம் மிகுந்த சாம்ராஜ்ஜியத்தில் தலைமையேற்று நடத்திச் செல்லும் இளவரசியாக மாயா படைக்கப்பட்டு இருக்கிறார்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும் பழையன கழிதலின் வரலாறும் புதியன புகுதலின் காரணமும், சூழலையும் அறிந்திடத் தேடியலையும்.. வரலாற்றில், சமூகச் சூழலால் வலுத்தது வாழும் வலுவற்றது அழிந்துபோகும், அப்படி என்றால் வலுவற்றதன் காரணம் என்ன வலுவானதாக வளர்ந்து எழுவதற்கான புறச்சூழல் எதுவென்று ஆராயும், வரலாறு எங்கிலும் நடந்து வந்த மாற்றத்திற்கான பாதைகளை மூடி மறைத்த சூட்சமங்களை, பேசமறந்ததின் காரணங்களை அறிந்து கொள்ள நினைக்கும் ஒரு ஆர்வலனாக, அழிந்த ஒன்றின் வேர்களை தேடுபவனாக, அதன் மிச்சங்களை கண்டடையத் துடிக்கும், இயங்கிக் கொண்டே இருக்கும் சாலமன் கதாபாத்திரம் நாவலுக்குள் காடு மலை என எங்கிலும் சுற்றிக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கும்.. வாசிக்கும் நம்மையும் ஜோடி போட்டுக் கொண்டே…

வரலாற்றின் நிஜங்கள் பலவற்றை மாயாவும் சாலமனும் தங்கள் முகநூல் பக்கப் பதிவுகளிலும் இருவருக்குமான பின்னூட்டங்களிலின், விவாதத்தின் வழியாக பேசியிருக்கிறார் நாவலாசிரியர். மாயாவோடு அவரின் அப்பா உதயணன் உரையாடல்கள், வாசகனை தாமிரபரணி ஆற்றுக்குள் அழைத்துச்சென்று நீச்சல் பழக வைக்கும். முஹம்மது யூசுப் நம்மை கரிசல்காட்டு மண்ணெங்கும் நடக்க வைத்து ஓட வைத்து சிவந்து கிடக்கும் பாதங்களிலிருந்து மேலெழும்பி வரும் மண் வாசனையை நுகரச் செய்கிறார் நாவலெங்கும். சாலமன் மாயாவும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப் பறவையாக இருந்து கூவிக் கொண்டும், அகவி கொண்டும், கத்திக் கொண்டும் நாமும் அவர்களோடு பறந்து கொண்டே இருப்போம். மாயா பயிற்சியின் பொழுது மயங்கிட, அவளைத் தாங்கிக்கொள்ளும் கரங்கள் நம்முடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் மனதின் அடியாழத்தில் இருக்கக்கூடிய காதல் உணர்வுகளை மெல்ல வருடி விடும் நமக்குள் இருக்கும் ராசாத்தியின் நினைவுகளைத் தூண்டி.

நாவலுக்குள் மாயாவும் சாலமனும் தனித்தனி உலகில் பயணம் மேற்கொள்பவர்கள். வரலாற்று நிகழ்வுகளோடு நில வரைவியலில் கண்டிடும் அடையாளங்களோடு.. வாழ்ந்து மறைந்த மனிதர்களோடு உரையாடிக்கொண்டே இருக்கும் இவர்களை, தனித்தனியாக இருக்கக்கூடிய கருப்பும் சிவப்புமான குன்னிமுத்துகளை அனுபவம் வாய்ந்த பொன் நகை செய்யும் ஆச்சாரி எப்படி லாவகமாக துளையிட்டு அழகிய மாலையாக கோர்க்கிறாரோ அப்படி ஒரு இணைப்பை மாயாவுக்கும் சாலமனுக்கும் நாவலுக்குள் மிக வடிவாக செய்து முடித்திருக்கிறார் அமைதியான அவர்களின் புன்னகைக்குள் நாவலாசிரியர்.

அதிகாரத்தில் எவர் வந்தமர்ந்தாலும் ஏழைகளுக்கான உரிமைகளும் உடமைகளும் மட்டுமே இங்கு தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவும் தொடர்கிறது அக்கொடுமைகள், பெரும் நகரங்கள் எங்கிலும் குடிசைகளை அகற்றி மாடிவீடு குடியிருப்புகள் தருவதாக சொல்லிக்கொண்டு. இங்கே காசிமும் அவரது மனைவி அஸ்மாவும். மன்னர்கள் காலத்தில் தங்கள் மூதாதையருக்கு ஒதுக்கப்பட்ட செம்மண் பூமி வக்பு வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதையறிந்து அதை மீட்பதற்காக அரசியல் வாதிகளை நம்பி ஏமாறும், நில உரிமை வேண்டி நிற்கும், எண்ணற்ற நில மற்றவர்களின் அடையாளமாக இங்கு காசிம். அரசியலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகள், இவரைப் போன்ற எளியவர்களின் வாழ்வினை சூறையாடி தன்னை முன்னேற்றிக் கொள்கிறார்கள் என்பதை நிகழ்கால அரசியலை அதன் ஏமாற்றுத்தனத்தை, அதன் கள்ளத்தை சங்கிலித் தொடர் போன்று இணைந்து இருப்பதை அப்படியே சொல்லி இருக்கிறார்.

எளியவர்களின் வாழ்வு சூறையாடப்படும் பொழுது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் துணையாக இருப்பது எளிய மக்களே என்பதை “பாய் கடை” ரவூப் பாய் அவர்கள் காசிம் மீது கொண்ட அன்பிலும் அக்கறையான அரவணைப்பிலும் தாய்க்கோழியின் பேரன்பாக பேசியிருக்கிறார். நில உரிமைக்கான போராட்டமா..? வாழ்க்கையா? என்று வரும்பொழுது, “வாழ்க்கையே” என்கிற நிஜத்தை எளிய மக்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை எதார்த்தத்தில் இருந்து நாவலாசிரியர் சொல்லியிருக்கிறார். இவர்களைப் போன்றவர்களையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளை என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியையும் நம்முன் நாவலுக்குள் வைத்திருக்கிறார்.

பள்ளிநாட்களில் சாலமனுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதையாக.. அவனுடைய மனதில், அன்பு உணர்வுகளில் ரசவாத மாற்றங்களை நிகழ்த்தி இருக்கக்கூடிய முதல் பெண்ணாக ரகேல் ஆசிரியை இருக்கிறார். பதின் பருவத்தில் நம் அனைவருக்குள்ளும் நிச்சயம் ஒரு அழகு ரகேல் குடியேறி இருப்பார். அவர் இன்றளவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார் இன்னும் நினைவுகளுக்குள். நாவலை நீங்கள் வாசிக்கும் பொழுது உங்களின் மனதின் அடி ஆழத்தில் இருக்கும், அக்கறையோடு அன்பு வார்த்தை பேசிய உங்களின் ரகேல் மெல்ல மேலெழுந்து வருவார்.

வேணியம்மாள் பரமசிவம் பண்ணையாரின் பேரனாக, தாய் தந்தையர் இல்லாதவனாக நாவலுக்குள் அசோக். எவர் ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத பெண் பித்தனாவே நமக்கு அறிமுகமாகிறார் நாவலுக்குள். இப்படியான சூழலில் தனக்கான அம்மா இருக்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் அறிய முடிகிறது அவரால். அம்மாவோ, கணவனை இழந்த விதவைப் பெண்ணாக வெள்ளாடை உடுத்தி கொண்டிருக்கிறார். அம்மாவைத் தேடியடைய முற்படும் பொழுது, அப்பாவும் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தியை கேள்விப்பட்டு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். அப்பாவுக்கு என்னவாயிற்று எங்கு இருக்கிறார் என்பதை தேட..

மூன்று தலைமுறைக்கு முன்னால் இருக்கக்கூடிய தகவல்களை சேகரிதது அறிந்திட வேண்டி வருகிறது.. இப்படி ஒரு நெடிய தேடலில்தான், இந்தியாவில், இடத்தின் அடையாளமாக இருந்த இந்து என்கிற வார்த்தை ஒரு பெரும் பகுதி மக்களின் அடையாளமாக எப்படி பிரிட்டிஷாரால் மாற்றப்படுகிறது? அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? சாதிப் படிநிலை குறித்து.. தன்னை மேல் சாதியாக மேநிலைப்படுத்திக் கொண்டு தன் சொந்த மண்ணிலிருந்து ஏதோ ஒரு தூரத்து நிலத்திற்குள் பழைய அடையாளங்களை மறைத்துக் கொண்டு… வாழ்ந்து வரும் மனிதர்கள் குறித்துப் பேசி விவாதத்தை நடத்துவதற்கு சரியானதொரு இடத்தை நாவலுக்குள் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

எந்தப் பள்ளியில் தன்னுடைய அம்மா ஆசிரியராக பணிபுரிந்த பொழுது தன்னுடைய அப்பாவால் காதலிக்கப்பட்டு பொய்யான தகவலின் அடிப்படையில் வெள்ளாடை உடுத்தி வீட்டில் இருக்கிறாரோ அவரை வண்ணப் பட்டுச்சேலை உடுத்தி அதே பள்ளியின் முதல்வராக அழைத்து வந்து நிருத்துவார் அசோக் நாவலுக்குள். எந்தச் சாதியச் சமூகம் வன்மம் கொண்டு அவரை ஒதுக்கி வைத்ததோ அதே சமூகத்தில் அவரை கரு நீல நிற யானையில் கையில் வேல்கம்போடும் புல்லாங்குழலோடும் நேர்கொண்ட பார்வையில் சமூகத்தின் அத்தனை பக்கமும் பார்க்கக்கூடிய தேவதையாக நாம் பார்க்க முடியும் சந்தியா ஆசிரியை நாவலின் இறுதியில்.

முஹம்மது யூசுப் வடித்திருக்கும் சிற்பங்களுக்குள் பத்மா, விஜிலா, கலிவரதன், பக்கீள் ராஜா, மலைச்சாமி, தலைமை ஆசிரியர் கனகராஜ், கபடி பயிற்சியாளர் சுடலை என்கிற கரீம், மணிகண்டன், ஹரிதாஸ், மஜீத் பாய் இப்படி நிறைய.. அனைத்திற்கும் இந்த நாவலுக்குள் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது.

நாகப்பட்டினத்தில் புத்த விகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருகித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்து கொன்றதாகவும் அந்த கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் போன்று நிறைய ஆதாரங்களை தகவல்களை நம்மில் பலரும் கேட்டிராத செய்திகளை நிஜங்களை நாவல் முழுவதிலும் பதிந்திருக்கிறார்..

வரலாற்று உண்மைகள் பலவும் நாவலுக்குள் வார்த்தைகளாக உருப்பெற்று நிறைந்து காணப்படுகிறது. தனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள்; கேட்டு அறியப்பட்டு நிஜங்கள் அவைகளின் மீது நாவலாசிரியர் தன்னுடைய கற்பனையை பறக்கவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிலத்தில் மலைகளில் காடுகளில் நடக்க விட்டிருக்கிறார் தனது பாதங்களை.. வழக்கமாக நாம் வாசிக்கும் நாவல் வடிவமைப்பில் இருந்து அரம்பை புதியதொரு வடிவமாக எனக்குள் ஒரு உணர்வை வாசிக்கும் பொழுது ஏற்படுத்தியது. நாவலின் கதையோட்டத்தில் இத்தனை தரவுகளையும் வரலாற்று உண்மைகளையும் கொடுப்பதற்கு ஆசிரியர் அவர்கள் நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்.. அதனை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் பல கிளைக் கதைகளை நகர்த்திக் கொண்டே முஹம்மது யூசுப்.

ஆனால் ஒரு சாதாரண வாசகனால்; நாவல் வாசிப்பதில் ஆர்வம் உடையவனால் இத்தனை தரவுகளையும் உள்வாங்கிக்கொண்டு வாசிக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கிடைத்திருக்கக் கூடிய தரவுகள் அனைத்தையும் ஒரே நாவலுக்குள் கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஆசிரியருக்கு அவசியமில்லை அப்படி கொடுக்கக்கூடிய தரவுகளும் மற்ற செய்திகளும் நாவலின் மையக் கருவிற்கு வலு சேர்ப்பதாக அமைந்திட வேண்டும்.. அமைந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாக நினைக்கிறேன்.. சேகரித்த, அறிந்த, அறிவார்ந்த ஆயிரமாயிரம் தகவல்கள் தரவுகள், ஆசிரியரை ஆங்காங்கே
இழுத்துக்கொண்டு சென்று விட்டதோ என்கிற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.. எது எப்படி இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் சொல்லாடல்களும் பெருகி வரும் இந்த சூழலில் பெண் கதாபாத்திரத்தை வலுவாக நிறுத்தியிருக்கிறார் ஆவுடையம்மாவாகவும் சந்தியாவாகவும், மாயாவாகவும், வேணியம்மாளாகவும், சவால் மிகுந்த வாழ்வினை எதிர்கொள்ளும் தனிப்பெண்ணாக அஸ்மாவையும்..

நிகழ்கால அரசியலையும் பல இடங்களில் பகடியாகவும் காத்திரமாகவும் தொட்டுச் சென்றிருக்கிறார். நம்மில் இருந்து மூன்று தலைமுறைக்குள் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள், வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வியாபார நுணுக்கங்கள், சந்தையாக்கம் அதில் இருக்கக்கூடிய நுட்பமான லாப அரசியல், நிலவரைவியலில் நிகழ்ந்தbமாற்றங்கள் இப்படி நிறைய தரவுகளை உள்ளடக்கியதாக வனப்பு மிகுந்த தேவதையாக நம் கண்முன்னே “அரம்பை” ஆசிரியர் முஹம்மது எழுத்துக்களில் அழகாக. சிறப்பான முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் யாவரும் பதிப்பகத்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாவலை தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருக்கிற ஆசிரியர் முஹம்மது யூசுப் மிகவும் மெச்ச தகுந்தவர், பாராட்டப்பட கூடியவர். அன்பும் வாழ்த்துக்களும்.

கருப்பு அன்பரசன்

நூல்: அரம்பை
அசிரியர்: முஹம்மது யூசுப்
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ₹.500/-
பக்கங்கள்: 415.