நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்




விடியலை- வெளியிலும் உள்ளுமாகத் தொடர்ந்து உலகம் வெகு காலமாய்த் தேடிக்கொண்டே இருக்கிறது. சிலர் எண்ணத்தில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் நிகழ்வுகளில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் பொருளாதாரத்தில் விடியலைத் தேடுகின்றனர். இதிலிருந்து மாறுபட்டு தம் கவிதைகளில் தமக்கானதாய் விடியலைத் தேடாமல், மானுட முன்னேற்றத்திற்கான விடுதலையைத் தேடுகிறார் கவிஞர் தாழை இரா. உதய நேசன்.

“விடை தேடும் விடியல்” நூல், தொண்ணூற்று ஆறு சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையினதாக அமைந்திருக்கிறது. சமூகத்தின் மாற்றங்களை உணர்ந்து மேன்மைக்கான விதைகளை ஒவ்வொரு கவிதைகளிலும் பதியமிட்டு சென்றிருக்கின்றன கவிஞனின் எழுத்துக்கள்.

எந்த எல்லையையும் தொட்டுச் சென்று மிகப்பெரும் சாதனைகளைச் சாதிக்கும் என்பதைக் கவிஞர் உதயநேசனின் அனைத்து கவிதைகளும் சான்று பேசுகின்றன.

குறிப்பாகக் கவிஞர் உதயநேசனின் கவிதைகள், எளிமையான சொற்களையும், ஆழமான பொருள் வீச்சையும் கொண்டவை. உளவியல் சார்பானவை. சமூகப் பிரச்சனை சார்பானவை, அழகியல் சார்பானவை, தனி மனித ஒழுகலாறுகள் சார்பானவை, பெண்ணியம் சார்பானவை என பல நிலைகளில் கவிதையின் நிஜங்களை நாம் பாகுபாடு செய்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லையற்ற வெளியெங்கும் பறந்து திரியும் பறவை போல் கவிதை உலகின் எல்லா திசைகளிலும் இவரின் பார்வைகள் அலைமோதித் திரிகின்றன. இவரின் இலக்கியப் பார்வை வேறு வேறு கோணங்களில் படிப்போர் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.

இலக்கியப் பார்வை குறித்து ‘வில்பர் ஸ்காட்’ (Wilbur Scott) கூறும்பொழுது, இலக்கியப் பார்வைகளை ஐந்தாகப் பிரிப்பர். அது உலகளாவிய தரமான இலக்கியத் திறனாய்வு அமைந்த ஒன்றாகும். அல்லது இலக்கியப் பார்வை குறித்த வெளிப்பாடாகும். அந்த வகையில் இலக்கிய பார்வைகளை,

1.அறநெறி சார்பானது

2.சமுதாயப் பார்வை சார்பானது

3.உளவியல் பார்வை சார்பானது

4.வடிவ இயல் பார்வை சார்பானது

5.தொன்ம மூல படிவ பார்வை சார்பானது

என ஐந்து பார்வைகளில் காணலாம்.

இவ்வகைகளில் இலக்கியத்தை ஒவ்வொருவரும் அணுகும் பொழுது படைப்பாளனின் படைப்புத்திறனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கவிஞர் உதயநேசனின் கவிதைச்சோலையில் உள்ள கவிதைகள் இந்த ஐந்து வித பார்வைக்கும் தீனி போடுகின்றன. பலப் பல ஆயிரம் சிந்தனைகளுக்கு வழி விடுகின்றன. தீராத பசியுடன் உள்நுழைய வருபவருக்கு வயிறு முட்ட உணவு அளிக்கின்றன.

96- தலைப்புக்களின் பெயர்களிலேயே கவிதைகள் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றன. பல தலைப்புகள் கவிதைகளாகவும் அடையாளப்படுத்தி நிற்கின்றன. முழுக் கவிதையின் உள்ளார்ந்த பொருளை அதன் தலைப்பிலேயே உணர்த்தி விடுகின்றன. இவ்வாறான தலைப்புகள் சில இடங்களில் தீயாய் சுடுகின்றன. காதல் மேடையமைத்துச் சில தலைப்புகள் குளிர் காற்றாய் இதம் வருடுகின்றன. உதாரணமாய்,

’மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை’

’அந்தந்த நேரம் மாறும் முகங்கள்’

‘நினைவுகளில் நனையும் காகிதக் கப்பல்’

‘விடியலே வந்துவிடு’

‘ஏர்முனையும் எதிர்முனையும்’ எனும் தலைப்புகளும் அதன் கவிதைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன

“கனாக் கால நினைவுகள்” எனும் தலைப்பிலான ஒரு கவிதையில்,

கனவுகள் எனும் அரூபம் மனதைத் தாக்கும் பொழுது ஏற்படும் உணர்வுத் துடிப்புகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இக்கவிதை. கவிஞர் மிக சிறப்பாக இக்கவிதையை உணர்த்திச் செல்கிறார். மக்கள் அனைவரும் இதை உணர்கின்றனர். ஆனால், கவிஞர் உதயநேசன் மட்டும் அதை கவிதையாக மாற்றுகின்றார்.

”மறக்க நினைத்து

மறைந்து போனேன்

ஞாபகங்கள் தென்றலாய்த்

தீண்டிச் செல்கிறதே

பேசாத வார்த்தைகள்

புரவிபோல் சீறிட்டுச்

செப்புச்சிலையாகச்

செதுக்கிடச் சொல்கிறதே” (ப-90)

‘மதம் என்னும் மதம் ஏனோ’ எனும் எனும் கவிதைக்குள் சமூகத்தின் தலை விரித்தாடும் கோலத்தைக் கோபக்கனலோடு, சுட்டெரிக்கப் பார்க்கின்றார். பார்த்ததோடு மட்டுமல்ல அதற்கான தீர்வையும் தருகின்றார் கவிதையில்,

”அவனியில் உதித்தவர்

அடித்தளம் மறந்தார்

ஓடுகின்ற உதிரத்தின்

நிறமும் மறந்தார்

மானிடராம் நமக்குள்

பிரிவினை வளர்த்துச்

சிந்தனைகள் குறுகவிட்டுக்

குறுக்குச் சுவர் எழுப்பி

சாதியும் பேதமும்

இல்லையென முழங்கி

நல்லிணக்கம் பேணி

மானுடம் காப்போம்”

என்கின்றார். பிரச்சினைகளும், தீர்வுகளும் ஒரே கவிதையில் நமக்குக் கிடைக்கின்றன. மேலும், ’இவள் பெண்தானே என்று நினைத்தாயோ’ எனும் கவிதையில், பெண் இனத்திற்கான பதிலைத் தருகிறார். அக்கவிதை,

“ஆணும் பெண்ணும்

நிகரெனக் கொண்டால்

வையகம் தழைக்கும்

அறிவில் சிறக்கும்

அவளின் கனவுகள்

அடுப்பில் எரிந்து

கேலியாய் மாறிட

பாவம் என்ன செய்தாயோ

வார்த்தையில் பெண்ணியம் பேசிடும் வர்க்கமே

தடைகள் நீங்கும் காலம் வருமே”

தாழை இரா. உதயநேசனின் கவிதைகள், சிந்தனைகளின் கொடையாகக் கவித்துவத்தோடு வீரியமான எழுச்சியைத் தருகின்றன. மலரின் மணமும், தீயின் சுடலும், காற்றின் வருடலும், மழையின் சுகமும், உளியின் செதுக்களும், ஆணியின் குத்தலும், சூறாவளியின் சுழலும் ஒரு நூலுக்குள் சாத்தியப்பட்டு நிற்கின்றன.

’விடைதேடும் விடியல்’ கவிதைநூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைகளை எளிமையாகவும், அதே நேரம் ஆழமாகவும் படிக்க விரும்புபவர்கள் கவிஞர் உதயநேசனின் அனைத்துக் கவிதை நூல்களையும் வாங்கி இன்புறலாம்.

காலத்தின் தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவிஞரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
9283275782
chandrakavin@gmail.com

நூல் : விடை தேடும் விடியல்
ஆசிரியர்: தாழை. இரா. உதயநேசன்
பதிப்பகம் : வசந்தா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.150
பக்கம்: 140

‘அறநெறிச்சாரம்’ உணர்த்தும்  “உணவுக்கட்டுப்பாடு” கட்டுரை – பாரதிசந்திரன்

‘அறநெறிச்சாரம்’ உணர்த்தும் “உணவுக்கட்டுப்பாடு” கட்டுரை – பாரதிசந்திரன்




‘அறநெறி’ என்பது உன்னதமான வாழ்க்கையின் நடத்தைகளாகும். அதை முறைப்படுத்தி வாழ்வதே சரியான நெறியாகும். ஒழுங்குமுறை என்பதே ‘நெறியென’ப்படுகிறது.
‘அறத்தோடு வாழ்வதே இன்பம்’ என்பது முதுமொழி. ‘சாரம்’ என்பதற்கு ‘பிழிவு’ எனப் பொருள் தருகிறது.அகர முதலி
வாழ்க்கை நடத்தைகளின் பிழிவுகள் அனைத்தும் கூறப் பெற்றுள்ள நூல். அறநெறிச் சாரமாகும்.
இந்நூலைத் ‘திருமுனைப்பாடியார் என்னும் சமணசமயப் பெரியார் எழுதியுள்ளார். ‘அருங்கலச் செப்பு’ எனும் நூலின் அமைப்பைப் பின்பற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.

இந்நூல் கி.பி. 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ‘திருமுனைப்பாடி’ எனும் ஊரில் பிறந்தமையால், இவர் தனிப் பெயரில்லாமல், ஊர்ப் பெயராலேயே ‘திருமுனைப்பாடியார்’ என அழைக்கப்பட்டார்.

இந்நூலில், உயிர்கள் கடைந்தேறுவதற்கான வாயில் நல்லறமே என்று அனைத்துப் பாடல்களிலும் ஆசிரியர் கூறுகின்றார். அதில் தலையாயது ‘கல்வி கற்பதே’ என்கிறார். அந்தக் கல்வியே எல்லா அறத்தின் பாலும் உலக உயிர்களை வழிநடத்தும் என்கிறார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பு,தனிப்பாடல் திரட்டு தொகுப்பில், இந்நூலின் 34 பாடல்கள் என்பது பழமையை உணர்த்தும். மொத்தம் 226-வெண்பாக்களால் ஆன இந்நூலில், உணவின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான ‘அறம்’ குறித்தும் விரிவாகப் பேசுகிறார். அதை இனி காணலாம்.சமண சமயக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை முறைப்படுத்தி மேன்மைப்படுத்துவதாகும். ஒழுக்கக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதாகும். வாழத்தெரியாமல், ஏதேதோ பாதைகளில் செல்லும் நாம், முற்றுப்பெறும் இடம் சூன்யமாகவே இருந்து விடுகிறது. வெற்று வாழ்க்கை வாழ்ந்தே பல கோடி மாந்தர் இறக்கின்றனர்.

ஆனால், சமண சமய நூல்கள், வாழ்வதற்கான முறையான தளங்களை நமக்குக் காட்டுகின்றன. அதில் மிக முக்கியமானது. ‘உணவு’ ஆகும்.மனிதன் வாழ உடல் மிக முக்கியம். உடல் இயங்க உணவு மிக முக்கியம். உணவினாலேயே உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் வளர்கின்றன அல்லது செயலாற்றுகின்றன. அப்படிப்பட்ட மிக முக்கியமானது ‘உணவு’ அதை மனிதர்கள் இன்று முறையாக உண்கிறோமோ? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில வரும்.

எதை உண்ண வேண்டும்
எவ்வளவு உண்ண வேண்டும்
எதை உண்ணக் கூடாது
உண்ண வேண்டாதவைகளால் ஏற்படும் தீமை
வரையறையற்ற ஆசையால் ஏற்படும் விளைவுகள்
வயிறின் முக்கியத்துவமறிதல்
உணவே கதி என்று இல்லாதிருத்தல்
என்று ‘உணவுக் கட்டுப்பாட்டைப்” பல பாடல்களால் அறநெறிச் சாரம் விளக்குகிறது. ஊன் துறந்தான் துறந்தாலை ஒப்பான் எனும் தலைப்பிலமைந்த பாடலில்,

கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் – என்றும்
இடுக்க ணெனயுண்டோ யில்வாழ்க் கைக்குள்ளே
படுத்தானாம் தன்னை தவம்.                                                                     (பா-63)

என்கின்றார். இதன்பொருள்,
பிற உயிர்களைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்ணும் கொடிய தீச்செயலை உள்ளத்தால் ஆராய்ந்து தெளிந்து அப்பொழுதே ஒருவன் கைவிடுவானால் எக்காலத்தும்
அவனுக்குத் துன்பம் என்பது ஒன்றும் இல்லை. அப்படிப்பட்டவன் இல்லற நெறியில் நின்றாலும். துறவற நெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன் ஆவான் என்பதாகும்.சமண மதத்தின் மிக முக்கிய உணவுக் கோட்பாடு ஊன் துறப்பதாகும். பிற உயிர்களைக் கொல்லாமை என்பது தான் மிக மிக உன்னதமான செயலாகும். தன்னுடைய உடலை ஓம்புவதும் ஈகையே எனும் தலைப்பிலமைந்த பாடலில்,
சோரப் பசிக்கு மேல், சோற்று ஊர்திப் பாகன், மற்று
ஈரப்படினும், அது ஊரான்: ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்: அதனால்,
முடிக்கும் கருமம் பல.                                                                                                   (பா-122)

என்கின்றார்.இதன் பொருள்,
உணவினால் இயங்கும் உடலை வாழ்விக்கும் உயிராகிய பாகன். உணவினைக் கொடுக்காமல் விட்டால். அவ்வுடலை இயங்கச் செய்ய மாட்டான். இவ்வுடல் மூலமாகச் செய்ய வேண்டிய செயல்கள் நிறையவுள்ளன. எனவே, கொடுக்க வேண்டிய உணவினைக் குறைபடாமல் கொடுக்க வேண்டும். அது தான் சிறப்பு.
‘விரதம்’ போன்று கடுமையாக இருந்து உடலை வதைக்கக் கூடாது. உடலுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தருவது முக்கியம் எனும் அறிவியல் செய்தியை அறமாக்குகிறது இப்பாடல்,
உடல் குறித்த ஞானமும், மனிதர்களுக்கு மிக முக்கியம் என்பதை இப்பாடல் தருகிறது. ஆசையை அடக்குதலே அறிவு எனும் தலைப்பில் கூறும்பொழுது,

தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
உணற்கு விரும்பு குடரை – வனப்புற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்பத் தாம் கொள்வது அறிவு                                                                               (பா-158)

என்கின்றார். இதன் பொருள், தனக்குத் தகுதி இல்லாத செயலைச் செய்து, ஏதோ ஒரு வகையில், மகிழ்ச்சியில், ஆசையில் உணவுகளை உண்பதற்கு விரும்பும் குடல். உண்டி சுருங்கி அழகு பெற நீர் வற்றிய இடத்தில் ஆம்பல் பூவின் தாள் வாடித்துவண்டு விடுதல் போல, இளைக்கும்படி, உள்ளத்தில் உணவின் மேல் ஏற்படும் ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். இத்தகையதே அறிவு ஆகும். உணவை மருந்தாக்க வேண்டும் எனக்கூறும்பொழுது, உணவை உடலைக் கெடுக்கும்படி ஆக்கக் கூடாது. இறப்பின் விகிதம் அதிகரிப்பது இன்று உணவினாலே தான்.  வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது எனும்பொழுது,

ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
இருநா¨ளுக்கு ஈந்தாலும் ஏலாய் – திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னொடு வாழ்தல் அரிது                                                                          (பா-159)

என்கின்றார். இதன் பொருள்,
ஒரு நாளும் வயிறே, நீ பசியோடு இருக்க மாட்டாய். உணவு அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் இரண்டு நாட்களுக்கான உணவை உண்பாயாக என்று கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய்.

மாட்சிமை பொருந்தியவனே! உன்னுடைய உறுதி பெரிது எனினும். உன் பயன் பெரிது என்றாலும், நின்னோடு வாழ்தல் அரிது உன்னோடு வாழ்வது என்பது துன்பமே ஆகும்.
உணவைப் பிரதானமாகக் கொண்டு தான் இவ்வுடல் இயங்குகிறது. அதற்கான மூலப் பொருட்களைப் பிரித்து. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இயக்கத்தை அதுவே தருகிறது.
என்றாலும், அது அதன் வேலையைச் சரியாகச் செய்கிறது. ஆனால், மனிதனால் தான் அதுக்குத் தேவையான உணவைத் தரும் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.
எனவே. இவன் பேச்சை வயிறு கேட்காததால். உன்னோடு வாழ்தல் கடினம் என்கின்றார் ஆசிரியர். எல்லாம் வயிற்றுப் பெருமாள் பொருட்டு எனும் தலைப்பில் கூறவரும் செய்தியானது,

போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
தோற்றியார்கண் எலாம் தொண்டே போல் – ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு                                                                              (பா-164)

என்கின்றார். இதன் பொருள் புதுப் பணக்காரர்களிடமெல்லாம் சென்று, அவர்களைப் புகழ்ந்தும், ‘என்னைப் பாதுகாப்பாயாக’ என்றும் கூறி கூறி அவர்களுக்குப் பணிவிடை செய்வது உலகத்தாருக்கு இயல்பாகும். இதற்குக் காரணம். ஒரு சாண் வயிற்றை  வளர்ப்பதற்காகத் தான்.தன்னைத் தாழ்த்தியும், பிறரை வாழ்த்தியும். இந்த உணவிற்காக வாழ வேண்டியுள்ளது. என்பது தான் வாழ்வின் மையப் பொருள். இதை உணர்ந்து வயிறைக் கட்டுப்படுத்த வேண்டும். முறைப்படுத்த வேண்டும். அதுவே வாழ்வை உயர்த்தும்.

பாரதிசந்திரன்,
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
தமிழ்த்துறை, வேல்டெக்  கலைக்கல்லூரி, ஆவடி.
9283275782
chandrakavin@gmail.com