Shakthi's Poems சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்
மகனின் கடைசி வாகனம்
*******************************
“தத்தெடுத்த
மகனை
அவனுடைய
வீட்டிற்கு அனுப்புவதற்காக
தயாராக்கி
கொண்டிருக்கிறார்கள்
ஊர் மக்கள் ,

நீண்ட
நேரமாக
காலையிலிருந்தே
வாகனமும்
வாசலில் வந்து
நின்று கொண்டிருக்கிறது ,

வழியனுப்புவதற்கு
ஊரே வீட்டின்
வாசலில் சூழ்ந்துக்
கொண்டிருக்க
மேள தாளங்களோடு
சிலப்பேர்
ஆடி பாடி கொண்டிருக்க ,

பூமியிலிருந்து
அனுப்பிய பட்டாசுகள்
மேலிருந்து
வெடித்து இடிகளாக
பொழிந்து கொண்டிருக்க

இரண்டு
நாட்களாக
குளிக்காதவனை
அத்தை வீட்டிலிருந்து
தண்ணீரை
எடுத்து வந்து
தலை முழுக குளிப்பாட்டி

புது உடை
உடுத்தியவனை
அழுதுகொண்டே
வழியனுப்பி வைக்கிறார்
அப்பாவும் அம்மாவும்
ஊரார்
உறவினர்கள்
முன்னிலையில் ,

நான்காயிரம்
நண்பர்கள்
புடை சூழ
ஆரவாரத்துடன்
ஆற்றங்கரை
நோக்கி நகர்ந்து
செல்கிறது மகன் ஏறி
படுத்துக்கொண்ட
திரும்பி
வராத கடைசி வாகனம் “……….!!!!!!

அம்மாக்களின் அன்பும் அக்கறையும்…..!!!!!
****************************************************
காற்றை விட
மிக வேகமாக
சுழன்றுக்கொண்டிருப்பவள் அம்மா,

இரவு
விடியாத
பொழுதும்
நான்கு மணிக்கே
விழித்துக்கொள்கிறது
அம்மாவின் கண்கள்,

விழித்துக்கொள்கிற
கண்களில்பசை தடவி
பேப்பரை ஒட்டிவைத்ததை
போல கண்களைமூடி மூடி
திறக்கிறது
அம்மாவின் இமைகதவுகள்,

சாணம் தெளித்தல்,
வாசலை பெருக்குதல்,
கோலம் போடுதல்,
பாத்திரம் விளக்குதல்,
தண்ணீர் பிடித்தல்,
சாப்பாடு செய்தல்,
துணி துவைத்தல்,
வீட்டை சுத்தம் செய்தல்,
மகன், மகளுக்கு தலை வாருதல்,
ஆடு, மாடுகளுக்கு புல்லை பரிமாறுதல் ,
விறகு பொருக்குதல்,
அப்பாவுக்கு பணிவிடை செய்தல்,

காற்றை விட
மிக வேகமாக
பம்பரமாக  சுழல்கிறது
அம்மாவின் உடலும்
அன்பும் அக்கறையும்,

நிலவை காட்டி
பசியாற்றிய
அம்மாவின் கைகளுக்கு
வெற்றிலையும் பாக்கும்
சுண்ணாம்பும் மட்டுமே உணவாகிறது
அப்பாவின் குடிசையின் வாசலில்,

கதை கதையாக
கூறி உறங்க வைத்த
அம்மாவின் கண்கள்
சாமம் வரை உறங்காமல்
விழித்திருக்கிறது
அடுப்பு மோடையில் ,

மகன், மகள், கணவர்
என எல்லோருக்கும்
பகிர்ந்தளித்த அம்மாவுக்கு
உணவாகிறது அப்பா மிச்சம்
வைத்த ரசமும்
கறி இல்லாத
எலும்பு துண்டுகளும்,
கொஞ்சோன்டு
சோறு மட்டும்தான்.

கடைசி கவிதை…..!!!!
***************************
இன்னும்
சற்று நேரத்தில்
எழுதப்பட இருக்கிறது
அவனுடைய
கடைசி கவிதை

ஜன்னலை
திறந்து வைத்து
மரத்தை பார்க்கிறேன் ,
அணிலொன்று
ஒரு மாம்பழத்தை முழுவதுமாக
தின்று முடித்துக் கொண்டிருந்தது ,

படுத்துக்கொண்டு
அந்தரத்தில் தொங்கும்
மின்விசிறியையே
உற்று பார்க்கிறேன்
மரம் இல்லாமல்
காற்றை எங்கிருந்து
கடன் வாங்கி
கொடுத்துக்
கொண்டிருக்கிறதென்று புரியாமல் ,

கண்ணாடியில்
என் முகத்தை பார்க்கிறேன்
மீசையும் தாடியும்
நீண்டு வளர்ந்திருந்தது
கண்ணாடியில்
தெரியும் மீசையை
முருக்கிவிட்டு
கொண்டிருந்தது
கண்ணாடியின் கைகள் ,

சமையல்
அறையிலிருந்து
யாரோ
அழுகிற சத்தம்
கேட்டு ஓடிப்போய்
பார்க்கிறேன்
அம்மாவும்
சண்டைக்கோழியொன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன,

சமாதானம் செய்து
வைத்து விட்டு
ஒரு பிடி கறிச்சோற்றை
தின்றவாறே வீட்டிலிருந்து
வெளியேறுகிறேன்

எனக்கு
முன்பாகவே என் உயிர்
வாசலில் வந்து காத்து
கொண்டிருக்கிறதாம்
விடிய காலையிலிருந்தே ” …….!!!!!!!

உழைக்கும் மக்களின் உணர்வும்
உணவும்  மாட்டுக்கறி……!!!!!!

***************************************
காலையில்
ஐந்து மணிக்கே
சைக்கிளை
எடுத்துக்கொண்டு
வேகமாக மிதித்து ஓட்டிய கால்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
இரண்டு முட்டி
எலும்பு துண்டுகள் தான்,
பனியில்
நனைந்தவாறு
ஓட்டிக்கொண்டு
போன அப்பாவுக்கு
முட்டி எலும்பு
துண்டுகளை பொடியாக
வெட்டி சூப்பு வைத்து கொடுக்கிறாள் அம்மா,
ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்
காக்கைகளும்
நாய்க்குட்டிகளும்
தெருவெங்கும்
அலைமோதுகிறது
மாட்டுக்கறி குழம்பின்
ருசியை அறிய,
பச்சை
புற்களை தின்ற
மாடுகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லாக்க
படுத்துக்கொண்டு
கறி வாங்குகிறவர்களின்
முகங்களையே
பார்த்து கண்ணீரை
வடிக்கிறது ,
மாட்டுக்கறி குழம்பை
திருட்டு
தனமான ருசி
பார்க்கிறது பக்கத்து
வீட்டு பூனைக்குட்டிகள் ,
கிருஷ்ணர்
போல வேடமிட்ட
குழந்தைகள்
மாட்டு கால் எலும்பு
துண்டுகளை
புல்லாங்குழலாக நினைத்து
உறிஞ்சி இழுத்தவாறு
மூச்சு வாங்க ஓடுகின்றன கிணற்று மேட்டு தெருவெங்கும்,
கறிக்கடையெங்கும்
மக்கள் கூட்டம்
நிரம்பி வழிகிறது,
நிரம்பி வழியும்
கூட்டத்தை
கிழித்துக்கொண்டு
கறிகளை தூக்கி
கொண்டு
பறக்கிறது காக்கைகள்,
பச்சை நிற
இலை மேல்
வெள்ளை நிற சாதம்
காவி நிறம்
மாட்டுக்கறிக்குழம்பு
தேசிய கொடி பறக்கிறது
உழைக்கும் மக்கள்
வாழும் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்,
இரவு ழுவதும்
பறை இசையை
வாசித்து
அலுத்துப் போன
அப்பாவுக்கும்
அண்ணனுக்கும் வெந்துக்கொண்டிருக்கிறது
சட்டியில் மாட்டுக்கறி
எலும்பு துண்டுகள்,
தலைகீழாக
தொங்குகிறது
மாட்டின் தொடைகள்
தொடைகளை தொட்டுப்பார்க்கிறார்கள்
மேல் தெருவு
மாணிக்கம் மகனும்
ஐய்யப்பன் மகனும்
அரை கிலோ கறி வாங்கி யாருக்கும் தெரியாமல்
சமைத்து கடித்து இழுத்திட …..!!!!