Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

செல்லுலாய்டின் மாபூமி

காகிதத்தில் ஒளிரும் திரைகள்

ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்ட உணர்வை இந்த புத்தக வாசிப்பு நமக்கு அளிக்கின்றது. வித்தியாசமான கதைகள் எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகின்றன.

 

நம் நாட்டில் இந்த மாதிரியான படங்கள் மிக சிலவே. இன்றைய சூழலில் அவை பெரும் மாற்றம் பெற்று வருகின்றன. “செல்லுலாய்டின் மாபூமி” நூல் தமுஎகசவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன் அவர்களால் தொகுக்கப்பட்ட 28 இந்திய ,மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தொகுப்பு.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

நம் கண்முன்னே ஒவ்வொரு திரைப்படத்தின் கதைமாந்தர்களையும், கதைக்களத்தையும், அதை தயாரித்த இயக்குனர்களையும், அப்படம் பெற்ற விருதுகளையும் பட்டியல் இட்டு நம் முன்னே விருந்து படைக்கின்றார். ஆப்கான், ஆப்பிரிக்க, சைனா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆதாமிண்ட மகன் அபு… மலையாள மொழி திரைப்படம். இயக்குனர் மது அம்பட்டின் ஒரு ஏழை இஸ்லாமிய குடும்பம் தங்கள் மார்க்க கடமையான ஹஜ் செல்ல முயன்று செல்லமுடியாமல் போவது தான் கதை. மார்க்கம் என்பது புறத்தில் தேடுவது அல்ல அது உள்ளார்ந்தது என்பதை உணர்த்தும் படம். 4 தேசிய விருதுகள் பெற்ற படம் தி டே ஐ பிகேம் எ வுமன் ஓரு ஈரான் படம்; இயக்குனர்  மெர்ஸியா மெஷ்கினி. மூன்று பெண்களைப் பற்றிய படம்.

ஈரான் நாட்டில் பெண்கள் வெளியே வரமுடியாத சூழலில் சிறுமி ஒருத்தி தன் தாய் மற்றும் பாட்டியின் உதவியால் டீ கடை ஒன்றில் ஆண் வேடத்தில் பணிச்செய்ய , பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு 70 வயது முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதே கதை. இப்படம் வெனிஸ் திரைப்பட விருதுகள் மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது டெத் ஆன் எ புல் மூன் டே , இலங்கை இன படுக்கொலை போரில் உயிர் இழந்த ஒரு வீரனின் குடும்பக்கதை; இப்பட இயக்குனர் பிரசன்ன விதனாங்கே. தமையன் இறந்ததை ஏற்காமல் அவனுக்காக காத்திருக்கும் ஒரு கண்ணிழந்த தந்தையின் உணர்வுபூர்வமாண கதை.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் தன் தேவைக்காக இனம், மொழி சாதி, மதம் என்று அடையாள அரசியல் மூலம் போரைப் பயன்படுத்துகின்றது. இப்படம் பிண்ணனி இசையன்றி எடுக்கப்பட்டு, இலங்கை அரசால் தடைச் செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்ட படம்.

ஹரிச்சந்திரா பேக்டரி , தாதா சாகிப் பால்கே பற்றிய முதல் மௌனப்படம் .இயக்குனர் பரேஸ் மொகாசி. தாதா சாகிப் பால்கே திரைப்படம் எடுத்த கதைதான் இப்படம்.
முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படம் .ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்த படம். 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற படம் மேஹா தொகா தாரா இந்தியாவின் முதல் அரசியல் திரைப்பட இயக்குனர் வங்காளத்தை சேர்ந்த ‘ரித்விக் கட்டக்’ இயக்கிய இப்படம். இந்தியாவில் காணப்படும் கூட்டு குடும்ப சூழல் குறித்த படம். தனக்கென்று வாழாமல் குடும்பத்தினருக்காக வாழும் ஒரு பெண் பற்றிய படம்.

வங்காள இயக்குனர் கௌதம் கோஷ் தெலுங்கானா விவசாய போராட்ட களத்தை பற்றி தெலுங்கில் எடுத்தப்படம் மாபூமி. இந்த படம் இந்திய அரசின் தேசிய விருது ஆந்திராவின் நந்தி விருது பெற்றது. வட ஆந்திராவின் ஸ்ரீபுரம் கதைக்களம் நாயகன் ஆந்திர ஜமீன்தார்களை எதிர்த்து சாதி வேறுபாடுகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது தான் கதை.

பியூட்டி புல் பாக்ஸர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தாய்லாந்து படம். இயக்குனர் எக்காசாய் உக்ராங்தம் திருநங்கைப்பற்றி எடுத்த மிக உணர்வுபூர்வமாண படம். குத்து சண்டை வீரனான கதை நாயகன் எப்படி பெண்பாலாக மாறி உலக புகழ்பெற்ற கதாநாயகன் ஆகின்றான் என்பதே கதை. உலக திரைப்பட விருதுகள் பல பெற்றுள்ளது

டோக்கியோ ஸ்டோரி ஜப்பானிய மொழி திரைப்படம்; இயக்குனர் யசுஜிரோ. வயதான காலத்தில் எல்லாரும் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். இக்கதையில் வரும் முதியவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளைத் தேடி டோக்கியோ செல்கின்றனர். இயலாத சூழலில் திரும்புகின்றனர். அவசர உலகில் வாழும் உறவுகள் எப்படி உறவுகளை சந்தைப்பொருளாக பார்க்கின்றன என உணர்ச்சிபூர்வமாக கூறும் படம்.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

மலையாள இயக்குனர் கமல் அவர்களால் மலையாள திரைப்படத்தின் தந்தையான கே.சி டேனியலின் பற்றிய உண்மை கதை செல்லுலாய்ட். 2000 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் விருது பெற்ற திரைப்படம். தாதா சாகிப் பால்கே அவர்களிடம் சென்று படம் எடுக்க பயின்று பல பொருளாதார சமூக சிக்கலுக்கு இடையே எடுக்கப்பட்ட படம். படத்தினை வெளியிடுகையில் ஏற்பட்ட சாதி கலவரத்தில் படம் பெட்டிக்குள் சுருண்டது. மலையாளத்தின் முதல் படமே சாதியின் பெயரால் தடைப்பட்டது. பின்னர் கேசி டேனியல் பிறந்த ஊரான கொட்டாரம் வந்து பல் மருத்துவத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்துகின்றார். எழுத்தாளர் சேலங்காட் கோபாலகிருஷ்னனின் தொடர் முயற்சியால் மலையாளத்தில் முதல் சினமா எடுத்ததனால் கிடைக்கும் விருது அவரது கடைசி மகனிடம் வழங்கப்படுகின்றது.

வங்காளத்தில் பிரபலமான எழுத்தாளர் படத் தயாரிப்பாளர் இயக்குநர் மிருனாள் சென் இயக்கிய படம் “மிஸ்டர் மிசஸ் அய்யர்”. கல்கத்தாவிலிருந்து தனியாக வரும் ஓரு பிராமண பெண் தன்னுடன் வரும் ஆடவன் இஸ்லாமியர் என அறியாமல் அவருடைய உதவியால் பல இன்னல்களை தாண்டி சென்னையிலுள்ள தன் கணவருடன் இணைகின்றார். இந்தியரின் பொதுபுத்தி பாதிப்பால் முதலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டாலும் பின்னர் வேற்றுமையை களைந்து ஒற்றுமையாக இருப்பதே யதார்த்தம் என்பதை உணர்த்துகிறார்.

“ரைஸ் பீப்பிள் “கம்போடியா படம். இயக்குநர் ரிதி பான். கம்போடிய நாட்டு அரசின் சர்வாதிகாரப்போக்கில் சாதாரண விவசாயிகளை அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். இக்கதையில் ஏழை விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு மகள்களுடன் தன் 14 பிளாட் அளவுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார். அவரது வாழ்வியலையும் அவரது அச்சத்தையும் இப்படம் விவரிக்கின்றது .விவசாயத்திற்கும் விவசாயிக்குமான உறவு என்பது வெறும் உழைப்பவனுக்கும் உழைப்புகருவிக்குமான உறவு அல்ல அது; உணர்வுகளில் பின்னப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இன்றைய அரசாங்கத்தற்கு கார்ப்பரேட்டுகளின் மொழி புரியும் விவசாயிகளின் மொழி புரிவதேயில்லை என்பதை விவரிக்கிறது.

தி சைக்கிளிஸ்ட் இயக்குனர் மோஸன் மக்மல் பஃப் இயக்கிய ஆப்கன் படம் “தி சைக்கிளிஸ்ட்”. உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. நசிம் கடின உழைப்பாளி தன் மனைவி யின் மருத்துவ செலவுக்காக இடைவிடாது 5 நாள்கள் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க, மகன் ஜாமியின் உதவியுடன் முடிவில் ஏழு நாட்கள் கழித்தும் உணர்வில்லாமல் ஓட்டிக்கொண்டே இருக்கிறார். நோயாளி தாயை வரும் பணம் கொண்டு காப்பாற்றுகின்றார் மகன். இப்படம் உலக அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. எந்தவிதமான சேமிப்பு பாதுகாப்பு இன்றி ஓய்வின்றி உழைத்து, அந்த உழைப்பே தனது இயல்பாகி போகும் ஏழை உழைப்பாளிகள் பற்றிய கதை.

“மார்டன் டைம்ஸ்” சார்லி சாப்லினால் 1935 ல் எடுக்கப்பட்ட மௌன மொழி திரைப்படம். உழைப்பே தனது சுபாவமாக மாறிப்போன தொழிலாளி் எப்படி உழைப்பின் மூலம் இயந்திரமாகின்றான். வாழ வழியின்றி அலைகின்றான் என்பதை சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறார் சாப்ளின். கிடைக்கும் வேலைகளை மாறி மாறி செய்து வருகையில் நாயகியை சந்திக்கின்றார் சாப்ளின். வேலை தேடித் தேடி அலைந்து முடிவில் போலீஸிடம் இருந்து தப்பி இருவரும் வெளியேறுகின்றனர். 80 வருடங்களுக்கு முன்பே எந்த வசனங்களும் அல்லாமல் சிரிக்க சிரிக்க முதலாளித்துவமும் தனியார்மயமும் எப்படி உழைப்பாளி மக்களை இயந்திரங்களாக உருவாக்குகின்றன என்பதை சொன்ன படம்.

மக்களுக்காக மக்கள் முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்துக் கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகள். திரைப்படங்கள் வழியே சென்று மக்கள் மனங்களை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கிய தமிழக அரசியல் களம் போலவே, ஆப்பிரிக்க நாட்டு பழங்குடியின மக்களின் மூடபழக்கவழக்கங்களை மாற்றிட முயன்றிருக்கிறார் “மூலாத்” திரைப்படத்தின் இயக்குநர் உஸ்மான் செம்போன்.

ஆண்கள் செய்து கொள்ளும் சுன்னத் போலவே பெண்களும் செய்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தினால் சிறுமிகள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இது போன்று தன் மகளுக்கும் சுன்னத் செய்ய வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அதனை ஏற்க மறுக்கிறாள் படத்தின் நாயகி கோலே. இதனைக் கண்டு ஈர்க்கப்பட்ட சிறுமிகள் நாயகியிடம் ஒன்றிணைகிறார்கள். இச்செயலால் வெகுண்ட அவளது கணவனால் சாட்டையடிக்கு உள்ளாக்கப்படுகிறாள் நாயகி கோலே. இத்தகைய இன்னல்களை புறந்தள்ளி உலக நடப்புகளை வானொலி வழியே அனைவரையும் கேட்கச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாள் கோலே. இதனைக் கண்ணுற்ற பழமைவாதிகளால் வீடுகள் தோறும் உள்ள வானொலிகள் உடைக்கப்படுகின்றன. இச்செயல்களால் நாயகி கோலே ஊக்கம் கொண்டாளேயன்றி பின்னடைவாகவில்லை. இறுதியாக மக்கள் மனங்களில் வெற்றி கொண்டவளாக வீடுகள் தோறும் டிவி ஆன்டெனாக்கள் தோன்றுவது போல காட்டப்படுவது இயக்குநரின் கருத்து வண்ணத்தை காட்டுகிறது.

பெண்களுக்கு எதிரான கருத்துகளும் அவர்களை நுகர்வுப் பண்டமாக பார்ப்பதுமான விசயங்கள் சமூகங்களிலும் மட்டுமல்லாது மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய அரசுகளே அதற்கு மாறாக மதத்தின் துணை கொண்டு ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களிடமே மண்டி கிடக்கிறது என்பதனை காட்டும் விதமாக நடந்த உண்மை நிகழ்வை கொண்டு வெளிச்சம் போட்டு காட்டுகிறது “ஒசாமா” ஆப்கன் நாட்டு திரைப்படம். தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஆப்கன் நாடு அங்கே ஆண் துணை இல்லாமல் வாழ்க்கை நகர்த்தி வரும் பெண் தனது வயதான தாயையும் கவனித்துக் கொண்டு பூப்படையாத தன் மகளையும் பல்வேறு துன்பங்களுக்கிடையே வளர்த்து வரும் சூழலில் தனது அன்பு மகளை பூப்படையா மகளை தாலிபான்கள் அவர்களது பயிற்சி பெறும் கூடத்திற்கு பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு அங்கே அவளுக்கு தண்டணை தரப்ப்படுகிறது என்ன தண்டணை தெரியுமா?

70வயது முதியவருக்கு அப்பெண் பூப்படைய செய்வதற்காக மனைவியாக்கப்படுகிறாள். படம் பார்த்தவர் நெஞ்சங்களை பதற வைத்து இனி ஒரு போதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடை நில்லாது போராட வேண்டும் என்கின்ற தூண்டுதலை உருவாக்கியது. இதனாலேயே பல விருதுகளை பெற்றது என்பதில் வியப்பதுமில்லை.

“பர்சானியா” இந்தி மொழிப்படம் . 2002 குஜராத் மாநில கலவரத்தின் கொடிய முகத்தை காட்டும் படம் இயக்குனர் ராகுல் தோலக் 2006 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பெற்ற படம். சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற படம். ஆனால் இது வரை குஜராத் மாநிலத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ள படம்.

அகமதாபாத்தில் உள்ள காலனி ஒன்றில் இந்து முஸ்லீம் சீக்கியர் என்று பலவகை மததினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் .குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு நடைப்பெற்ற நேரத்தில் எல்லா இடங்களிலும் கலவரங்கள் ஏற்பட்டன. அதில் பெரும்பாலான முஸ்லீம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இங்கு இந்துக்கள் பூணூல் இல்லாதவர்கள் விரட்டப்பட்டனர். அதில் சைரஸ் குடும்பமும் ஒன்று. அவரது மகன் பர்சான் சிறந்த கிரிகெட் வீரன் காணாமல் போகிறான். சைரஸ் போலீஸ் நிலையத்தல் புகார் அளிக்கும் போது அவரை பின்னால் உள்ள பிணவறையில் தேட சொல்கின்றனர் ; நகரம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. மத்திய அரசால் மனித உரிமை விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் .

“தி ரோட் ஹோம்” சீன இயக்குனர் ஷாங்யுமு இயக்கியப் படம். உலக அளவில் பல விருதுகள் மற்றும் பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளி சிங்கம் விருதும் பெற்றுள்ளது. அன்பும் காதலும் எந்த பருவத்திலும் வாழ்க்கையில் கிடைப்பது வாழ்வின் அற்புதம். கதையின் கதாநாயகன் ஷாயுங் ஆசிரியராக பணியாற்றும் கிராமத்தின் நாயகி் ஷாவோ. இருவரின் மகன் யுசெங்.

நாயகன் இறந்ததும் அவரின் உடலை 40 கி்மீ கைகளில் சுமந்தே எடுத்துவர ஷாவோ விரும்ப அதை மகன் நிறைவேற்றுகின்றார். தாங்கள் நடந்த காதலித்த இடங்களில் அவரின் மிக முக்கியமான உணர்வுகள் நிறைந்தவை. அம்மாவின் உணர்விற்கு மதிப்பளிக்கின்றார் , மேலும் தன் தந்தையாரை போன்று அவர் தாயாரின் காதில் விழுமாறு வகுப்பில் பாடம் எடுக்கின்றார். வாழ்க்கையில் காதலுக்கென்று ஒரு தனித்த அத்தியாயம் இருக்கின்றது அது எல்லார் வாழ்விலும் உண்டாகும்உண்டாகும்.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

இயக்குனர் சத்யஜித்ரே இயக்கிய வங்காள மொழிப்படம் சாருலதா. இப்படம் 1965 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 15 வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார். பெண் உளவியலை மையமாக கொண்ட படம். நாயகி சாருலதா கற்பனைத் திறனும் கலைத் திறனும் கூடிய பெண். நிறைய புத்தகங்கள் வாசிப்பது என பொழுதைக் கழிக்கின்றாள். தன் கணவரின் தம்பியுடன் சாருலதா இலக்கியம் குறித்து கலந்துரையாட செய்கின்றார் அவரின் தூண்டுதலால் தனது முதல் புத்தகத்தை வெளியிட அப்போது தான் தன் மனைவியின் இலக்கிய தாகம் கணவருக்கு புரிகின்றது . பிறகு கணவருடன் மனைவியுடனான புரிதல் துவங்குகின்றதை சித்திரிப்பது “சாருலதா”.

 

ஆப்பிரிக்கா கண்டத்து சாட் நாட்டின் இயக்குனர் மகமத் சாலே ஹாரூண் எடுத்தது அபோனா. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பெற்றோர் குழந்தைகளிடம் அன்பாய் அரவணப்பாய் இருக்க நினைத்தாலும் பல நேரங்களிலில் அது முடியாமல் போகின்றது. குழந்தைகளுக்கு தந்தைதான் முதல் ஹீரோ. இப்படம் தந்தையை தொலைத்த இரு சிறுவர்கள் பற்றியது. தாய் அவர்களை ஒரு விடுதியில் சேர்க்க ஒரு சிறுவன் இறந்து விட தாயைத்தேடி வாய்பேச இயலாத சிறு பெண்ணுடன் வரும் சிறுவன் தாய் மனநலகாப்பகத்தில் இருப்பது கண்டு அவளை வீட்டிற்கு அழைத்து வந்து காப்பாற்றுகின்றான் . உலகதரம் வாய்ந்த இந்தப் படம் மிக ஆழமான உணர்வுபூர்வமானது.

“டிராவலர்ஸ் அண்ட் மெஜிசியன்ஸ்” பூடான் நாட்டின் இயக்குநர் கியன்ஸி்நோர்பு இயக்கியது. ஆயிரம் ஆசிரியர்களும், புத்தகங்களும் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடத்தை நல்ல பயணம் கற்றுக் கொடுக்கும். படத்தின் நாயகன் தாந்துபு மலைகிராமம் ஒன்றில் பணியாற்றுகிறான். அமெரிக்கா சென்று வாழும் கனவில் தினமும் அழைப்பை எதிர்பார்க்கும் நபர். அந்த அழைப்பு வந்ததும் தலைநகரத்தை நோக்கி கிளம்புகின்றான் .செல்லுவதற்கு வாகனத்தை எதிர்நோக்கி காத்திருக்க ஒரு புத்த துறவி வருகின்றார். ஒரு முதியவரும் வருகிறார். புத்த துறவி காலத்தை கடத்த ஒரு கதை ஒன்றை சொல்ல தொடங்குகிறார்; மூவரும் ஒரு லாரியில் பயணம் தொடங்க வழியில் ஒரு தந்தையும் மகளும் ஏறுகின்றனர் அந்த பெண் தாந்துபுவை விரும்புகின்றாள். தாந்துபு காதலில் விழ படம் முடிகின்றது; பயணம் தொடர்கின்றது. யாருடனும் ஒட்டாமல் வாழ நினைக்கும் நாயகன் முடிவில் அன்பாய் பழகவும் இயற்கையை ரசிக்கவும் விட்டுக் கொடுக்கவும் கற்றுக் கொள்கின்றான்.

ஈரானிய இயக்குனர் பாபக் பயாமியின் “சீக்ரெட் பேலட்”.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கசிங்கம் விருது, சிறந்த இயக்குனர் விருது பெற்றுள்ளது. தேர்தல் வழியான ஜனநாயகப் பாதை என்பது, வாக்களிப்பது மட்டும் அல்ல; கடினமான பணியும் கூட. ஈரானில் உள்ள தீவு ஒன்றில் தேர்தல் பணிக்காக செல்லும் ஒரு பெண் சந்திக்கும் அனுபவங்கள் தான் இப்படம் . வாக்களர்களை அவர் கைக்கொள்ளும் விதம் அவரின் நேர்மை அருமை. பல நெருக்கடிகள் பயணங்களை மேற் கொண்டு அங்குள்ள பெண்கள் முதியவர்கள் உட்பட கிராமத்தினரை சந்தித்து வாக்கு சேகரிக்கின்றார் ,முடிவில் துணைக்கு வரும் வீரரே வருடத்திற்கு மூன்று முறை தேர்தல் வரக்கூடாதா என வினவும் அளவிற்கு அர்பணிப்பாக பணிச்செய்து திரும்புகின்றார்

உக்ரேன் ரஷ்யா உடனான போர் வெடித்த நேரத்தில் இந்த “குட் பை லெனின்” படம் ஒரு கனத்த நினைவைத் தருகின்றது. ஜெர்மானிய படமீது. இயக்குனர் உல்ப்ஹாங் பெக்கர். உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்ற படம்.

கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் தந்தை மேற்கு ஜெர்மனிக்கு செல்கிறார். சோசலிச அரசால் மக்கள் தேவைக்காக கவுரப்படுத்தப்பட்ட ஒரு தாய் தன் நாட்டில் ஏற்படும் கிளர்ச்சியால் மன வேதனை அடைந்து மனம் அதிர்ச்சி் அடைந்து கோமாவினால் மருத்துவமனையில் இருக்கின்றார். மகன் அலெக்ஸ் தாயைக் கவனித்து்கொள்கின்றார். சகோதரி ஒரு உணவு விடுதியில் பணிபுரிய பல கலாசார மாற்றங்கள் நிகழ்கின்றது.

சோவியத் சிதையுண்டு 25 ஆண்டுகள் ஆன பின்பும் அதன் நிலையை எண்ணி வேதனையடையும் பல கோடி மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கிழக்கு மேற்கு ஜெர்மனியின் இணைப்பிற்கு பின்னரே தாயார் சுய நினைவிற்கு வர மருத்துவரின் ஆலோசனைப் படி கலாச்சார மாற்றங்களை அவரிடமிருந்து மறைக்க முயல கடைசியில் அவர் அறிந்து கொள்கின்றார். மறுபடி உடல் கெட்டு இறக்கும் கணத்தில் தன் கணவரை கடைசியாக காண விரும்புகிறார்.

“மால்கம் எக்ஸ்” ஆப்ரிக்க திரைப்படம். இயக்குனர் ஸ்பைக் லீ. ஒரு இளைஞர் சராசரியாக அதிக பலவீனங்களுடன் இருந்த மால்கம் எப்படி ஒரு தலைவனாகின்றான் தன் சமூகத்தற்காக போராடி அதன் விளைவாக கொல்லப்படுகின்றான் என்பதே கதை.

Sellulaidin Maboomi Book By Kalapiran Bookreview By Prema Kaliyaperumal  களப்பிரனின் செல்லுலாய்டின் மாபூமி - பிரேமா கலியபெருமாள்

மால்கமின் தந்தை சிறு வயதிலேயே வெள்ளையர்களால் கொல்லப்படுகின்றார். தாய் ஒரு வெள்ளைக்கார இனத்தவர். ஆனால் அவரும் வெள்ளை இனத்தவரை வெறுக்கின்றார்.
மால்கம் சிறு வயதில் பல கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு சிறை செஅன்று கைதி ஒருவரால் விளக்கம் பெற்று திருந்தி, எலிஜா முகமது என்ற கறுப்பின விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து முக்கிய தலைவராகின்றார். 39 வயதான மால்கம் தன் மேடை பேச்சு நிகழ்வில் சுட்டுக்கொல்லப்படுகின்றார் .

கறுப்பின மக்கள் விடுதலைக்காக போராடிய ஒரு தலைவரை நாடு இழந்தது . அம்பேத்கரைப் போலவே மால்கமும் தனது மார்க்கத்தை விடுத்து சகோதரத்துவம் பேணும் இஸ்லாத்தை தழுவினார். தனது பேரையும் மால்கம் x என மாற்றிக்கொண்டார். தைவான் நாட்டு இயக்குனர் சாய் மிங் லியாங் இயக்கிய படம் “வாட் டைம் இஸ் இட் தேர்”. அவசர உலகில் இயந்திரமாகிவிட்ட சூழல், இழப்புகளை அல்லது நெருங்கிய உறவுகளை பிரிந்து விட்ட நேரத்தில் மனதில் ஏற்படும் மோசமான பலவீனம் பற்றிய படம்.

கேங் ஒரு கடிகார கடை நடத்தி வருகின்றார். அவருடைய தந்தை திடீரென இறந்து விட அவரது இழப்பு ஒரு பயம் கலந்த தனிமையை தருவதை கேங்கும் அவரது தாயாரும் உணர்கின்றனர். கடைக்கு வரும் சியி என்ற பெண், தான் வெளிநாடு செல்லவிருப்பதால் தனக்கு இரு நாடுகளின் மணிகாட்டும் கேங் அணிந்த கடிகாரம் தனக்கு வேண்டும் என்று கூறி வாங்கி செல்கிறார். கேங்கின் தாய் கணவர் திரும்பி வந்து விடுவார் என்ற கனவில் காத்திருக்க, கேங் தன் காதலி சியி பாரீஸ் நகரில் இருப்பதால் அந்த நேரத்தை தன் வீட்டு கடிகாரத்தில் செட் செய்ய, அதை தன் கணவர்தான் மாற்றியதாக கேங்கின் தாயார் நினைக்க, கேங் தனது காதலி சியி இன் நினைவால் வாட, சியி தனது நாட்டைப் பிரிந்த நினைவில் மனப் பிரம்மையால் தவிக்கின்றாள். பின்னணி இசையே இல்லாத இப்படம் இயற்கை ஒலியால் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது.

“காமோஷ் பானி” ஒரு பாகிஸ்தானியப் பெண் குறித்த உருது மொழி திரைப்படம் இப் படத்தின் இயக்குனர் சபிஹாசமர் ஒரு பெண். 2003 ல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பல இந்திய கிராமங்கள் பாகிஸ்தானின் பகுதியானது. பிரிவினைகளின் போது எந்த வீடானாலும் நாடானாலும் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான்.

இப்படத்தில் ஸர்க்கி எனும் கிராமத்தில் வாழும் ஆயிஷா அவர் மகன் சலீம், ஜூபைதாவை காதலிக்கும் சலீம் மத அடிப்படை தீவிரவாத அமைப்பில் சேர்ந்து தலைவனாகிறான். அவனுடைய தாய் ஆயிஷா இந்தியாவிலிருந்து அகதியாக வந்து ஓரு இஸ்லாமியரை திருமணம் செய்த சீக்கிய பெண். அவர் தான் வைத்திருந்த தங்க சங்கிலி ஒன்றை ஜூபைதாவிற்கு தருகின்றார் அதில் அவர் குழந்தை கால புகைப்படம் ஒன்றுள்ளது. ஒரு சீக்கியர் தன் சகோதரியைத் தேடி வருகின்றார் தன் தந்தை சாகும் தருவாயில் இருப்பதாகவும் தன் சகோதரியை தேடி வந்ததாக கூற, ஆயிஷாவை எல்லோரும் ஒதுக்கி வைக்க துக்கம் தாளாமல் கிணற்றில் விழுந்து உயிர் தியாகம் செய்கிறார் . பாகிஸ்தானின் மதவாததிற்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது.

“தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்” இப்படத்தின் இயக்குனர் கார்ல் தியோடர் டிரேயர். பிரான்ஸ் நாட்டு திரைப்படம். மதமும் அரசும் ஓன்று சேர்ந்தால் சுய நலம் சார்ந்த செயல்களுக்காக சொந்த மதக்காரரைக் கூட எந்த அளவிற்கு கொடுமை செய்யும் என்பதை இயல்பாக சொல்லியப் படம். இதுஒரு மௌனப்படம் .50 வருடங்களுக்கு பின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோன் தன் 17 வது வயதில் பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக இராணுவத்தினை ஒருங்கிணைத்து எதிர்த்து நின்று போராடினார். 19 ஆவது வயதில் ஆங்கில அரசு அவரை சிறைப்பிடித்து உயிருடன் எரித்தது. வீரம் செறிந்த இளம் நாயகி தன் கடைசி நாளில் விசாரணை என்ற பெயரில் பல விதமான கொடுமைகளையும் தாக்குதல்களையும் மதபீடத்தின் பெயரால் எதிர் கொண்டதை வலிமையாக பதிவு செய்த படம்.

“அட் பைவ் இன் தி ஆப்டர்னூன்” தன் 17 வது வயதில் இப்படத்தை இயக்கிய பெண் சமீரா மக்மல்பஃப். இவரின் தந்தையும் புகழ்பெற்ற ஈரான் இயக்குனர். பல சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது. நாயகி நோக்ரா தன் தந்தை மற்றும் அண்ணனின் கைக்குழந்தை அண்ணி ஆகியோருடன் உடைந்த விமானத்தின் பாகத்தில் வாழ்ந்து வருகையில் தண்ணீர் தேடி செல்கின்றார். அப்போது ஒரு இளைஞர் ஒருவருடன் பழக அவரால் கவிதை எழுதப் பழகுகிறார். பள்ளியில் ஆசிரியரின் கேள்விக்கு தான் ஒரு அதிபராக வேண்டும் என்ற கனவை கூறுகிறார். நண்பரான இளைஞர் அவர் கனவுக்காக உதவிகள் செய்கிறார். பசியால் நீர் இல்லாமல் கைக்குழந்தை இறந்து விட அவர்கள் இடம் பெயர்ந்து கொண்டே போகின்றனர்.

தி பியானோ நியூசிலாந்து திரைப்படம், இயக்குனர் ஜேன்காம்பியன் என்ற பெண்மணி. அடா பேச முடியாத பெண். திருமணம் முடிந்து தன் பெண் ஃப்ளோரா உடனும் சீதனமாக தான் விரும்பும் பியானோ உடன் நியூசிலாந்து கடற்கரைக்கு கணவன் ஸ்டூவர்ட் வீட்டிற்கு வருகின்றார்வருகின்றார். கணவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பைன்ஸ் அத்தீவின் பழங்குடி தலைவன் .

பியானோ மேல் விருப்பம் கொண்ட பைன்ஸ், தன் நிலத்திற்கு பதில் பியானோவை வாங்குகிறார். கற்று தர அடா ஒப்புக்கொண்டு கற்பிக்கின்றார். பைன்ஸ் அடா மேல் விருப்பம் கொள்ள முதலில் மறுக்கும் அடா கடைசியில் விரும்ப ஆரம்பிக்கறார். இவ்விவரம் கணவருக்கு தெரியவர அடாவின் சுண்டு விரலை வெட்டிவிடுகின்றார். பியானோவின் கட்டையில் தன் நிலையை விளக்கி தன் வெட்டுப்பட்ட விரலுடன் மகள்மூலம் பைன்ஸுக்கு அனுப்பிவிடுகின்றார். முடிவில் அடா, ஃப்ளோரா, பைன்ஸ் மூன்றுபேரும் பியானோவுடன் கப்பலில் தீவை விட்டு
வெளியேற தான் மிகவும் நேசிக்கும் பியானோவை கடலில் எறிந்துவிட்டு பயணிக்கின்றனர்.

என்னைப் போன்ற புதியவர்களுக்கு புரியும் வகையில் சுவாரசியத்தோடு படம் குறித்த தகவல்களோடு மிகுந்த சிரத்தை எடுத்து தான் பார்த்த ரசித்த படங்களை சினிமா பற்றிய சிறந்த நூலாக எழுதி இருக்கும் களப்பிரனுக்கு வாழ்த்துகள்.இது ஒரு பாரதி புத்தகாலய வெளியீடு.

நூல்: செல்லுலாய்டின் மாபூமி
ஆசிரியர்: களப்பிரன்
விலை: 150/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com