முகாமி சிறுகதைத் தொகுப்பு

நூல் மதிப்புரை: அய் தமிழ்மணியின் முகாமி சிறுகதைத் தொகுப்பு – தேனி சீருடையான்
நூல்: முகாமி சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: அய். தமிழ்மணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
பக்கம்: 183
விலை: 175/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சமன்குலைந்த வாழ்வைச் சமப்படுத்தும் குரல்கள்!

தமிழ்ப் பேரகராதியில் தேடியபோது முகாமி என்ற சொல், கிடைக்கவில்லை. முகாந்திரம் என்ற வார்த்தையின் பெர்ய்ச் சொல்லாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். கம்பம் பள்ளத்தாக்கு நிலப் பகுதியில் புழக்கத்தில் இருக்கிற முக்கியமான மக்கள் மொழி முகாமி. பழைய சொல் என்றாலும் புதுமையாய்த் தோன்றுகிறது. நவீன பெயரிடுதல் முறையில் பல பழைய பெயர்கள் புதிய முகம் காட்டி நிற்கின்றன. ”சனம்புக்கீரை, மேநீர், பெயல்” உள்ளிட்ட பல பெயர்கள் வெகுகாலம் புழக்கத்தில் இல்லாத நிலையில் மனித உச்சரிப்பு அவற்றுக்குப் புதுப் பொலிவைத் தருகின்றன.. பழமையை மீட்டெடுத்தல் என்ற பண்பாட்டுச் செயல்பாட்டில் இவையெல்லாம் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்ததற்காகவே நூலாசிரியருக்கு முதல் வாழ்த்தைச் சொல்லலாம்.

தமிழ் மணியும் தோழமை உரை எழுதியுள்ள அ, உமர் பரூக்கும் இலக்கிய்த் துறையில் தங்கள் முதல் ஆசான் என்று குறிப்பிடுவது அ. பீர்முகம்மது அப்பா அவர்களை. அவர் தொழிற்சங்கத் தலைவர். இலக்கியத்தின்பால் ஆழ்ந்த ரசனை உள்ளவர். முற்போக்குப் படைப்புகள் அனைத்தையும் வாசித்த போது அவற்றின்மேல் அவருக்குப் போதாமை இருந்தது. பொருளாதாரக் கூறுகளை முன்வைத்த பிரச்சார மேடைகளாய் அவை திகழ்கின்றன எனக் கூறினார். இலக்கியங்கள் பச்சை மரத்து நிழலாக இருக்க வேண்டுமே தவிர பட்ட மரத்து நிழலாக இருக்கக் கூடாது என்றார். அல்லி உதயன், தேனிசீருடையான். ம, காமுத்துரை ஆகியோர் எழுதிக் கொண்டிருந்த இடைக் காலத்தில் அவர்களோடுதான் முதல் பழக்கம் ஏற்பட்டது அப்பாவுக்கு. அவர்களுக்கும் அவரே ஆசானாக்த் திகழ்ந்தார். ஒவ்வொரு படைப்பையும் முழுமையாய் வாசித்து ரசனைப் படுத்தும் முறையைப் போதித்தார். “ஆகவே” சிறுகதைத் தொகுப்பை அவரே வடிவமைத்தார்.

முகாமித் தொகுப்பின் முக்கியக் கதைகளில் ஒன்று முகாமி. கதாநாயகனின் தந்தை ஒரு கட்டுமான தொழிலாளி. பேப்பர் வாசிப்பின்மூலம் தனது உலக அறிவையும் அரசியல் அறிவையும் வளர்த்துக் கொண்டவர். திராவிடச் சிந்தனையாளரான அவர் மகனின் போக்கறிந்து தன் கால்களையும் இடது பாதையில் பயணிக்க அனுமதித்தார். கதாநாயகனின் அம்மா அவ்வப்போது அவர் வெளியில் சென்று வருவதை, உடல் நிலை கருதி முட்டுக் கட்டை போட்டாலும் சமாதானம் செய்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

மகனிடம் கற்றதை மகனுக்கே திருப்பிச் சொல்லி நல்வழிப் படுத்துவது இந்தக் கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மகன் எழுதி அரங்கத்தில் வாசித்துவிட்டு வந்த கவிதையை அவரும் வாசித்துவிட்டுச் சொல்கிறார். “நாம வாழுற எடம் குப்பதேன்; குப்பையா இருக்குன்னுதேன் எழுதணும்; குப்பையாவே இருக்குன்னு எழுதக் கூடாது. மாத்துறதுதேன் நம்ம வேல; குப்பையா இருக்கது எல்லாருக்கும் தெரியுமே.”

ஓர் எளிய மனிதரின் இலக்கியத்துக்கான எளிய வழிகாட்டுதல் அபாரமானது. ஒரு கட்டுமானத் தொழிலாளியின் நாவிலிருந்து இப்படியான வார்த்தைகள் வரக் காரணம் என்ன? யோசிக்கும் போது அறிவுத் தேடலும் அவர் இணைந்து செயல்படும் அமைப்பும்தான் என்று சொல்லாமல் சொல்கிறது கதை.

எந்தக் குறைபாடும் இல்லாமல் வேலை செய்த அப்பாவைப் பார்த்து முத்துராசு அண்ணன் கேட்பார். “இவ்வளவு வெவரமா வேல செய்யிறியே யாருண்ணே ஒன்னோட முகாமி?”

அதற்கு எந்த யோசிப்பும் இல்லாமல் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்; “உழைப்புத்தான் என்னோட முகாமி.” இந்த இடத்தில் கதை உச்சம் பெறுகிறது. முகாமி என்ற சொல்லுக்கான அர்த்தமும் புரிபடுகிறது. “வழிகாட்டி.”

கந்துவட்டிக்கும் அரசியலுக்குமான நெருக்கத்தை அம்பலப் படுத்தும் கதை “கருப்பையாவின் கந்துவட்டிக் கணக்கு.” வாசிக்க வாசிக்க சினிமாப் படம் ஓடுவது போல ஓடுகிறது. தேர்தல் களத்தில் பட்டுவாடா ஏஜண்ட்டுகளாகப் பெரும்பாலும் கந்துவட்டிப் பேர்வழிகளே நியமனம் பெறுகிறார்கள். தேனி உட்பட தென் மாவட்டங்களின் நிலமை அதுதான். (அதிமுக அரசியலே உள்ளடக்கமாய் இருக்கிறது.)

தன்னிடம் கந்துக்குப் பணம் வாங்கிய நபர்கள் மூலம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறான் கருப்பையா. அவன் கட்சியைச் சேர்ந்த தக்காளிச் செல்வம் கருப்பையாவின் துணையோடு சட்டமன்ற உறுப்பினனாக வெற்றி பெறுகிறான். கருப்பையாவின் விசுவாசத்தை மெச்சி, ஐந்து கோடி ரூபா சொத்தை பினாமியாக அவன் பேரில் எழுதி வைக்கிறான். அடுத்து வந்த நகர்மன்றத் தேர்தலிலும் நாற்பத்தி ஐந்தாயிர்ம் ஓட்டுகளுக்கான பணத்தை கருப்பையாவிடம் ஒப்படைக்கிறான் செல்வம். குறைந்தது ஒருகோடி ரூபாயைச் சுருட்டிவிட வேண்டும் என்ற கோதாவில் கணக்குப் போட்ட கருப்பையா பட்டுவாடாவைக் குறைத்துக் கொள்கிறான். தன் கட்சி ஜெயிக்காது என்ற கள நிலவரம் புரிந்த கருப்பையா மேலும் இறுக்கிப் பிடித்து இன்னும் சில கோடிகளைச் சுருட்டுகிறான்.

ஜெயிக்க வாய்ப்பே இல்லை என அறிந்த செல்வம் கருப்பையாவைக் கூப்பிட்டு பினாமி சொத்தையும் பட்டுவாடாப் பணத்தையும் திருப்பித் தந்துவிடும்படி கூறுகிறான். தான் முழுமையாய்ச் செலவ்ழித்துவிட்டதாக எவ்வளவோ சொல்லியும் செல்வம் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கருப்பையா பணம் தர மறுத்துவிடுகிறான். அவனைப் போகச் சொல்லிவிட்டு அடியாட்களை வைத்து மரண அடி அடித்து குற்றுயிரும் குலை உயிருமாய்த் தூக்கி ஓடையோரம் எறிந்து விடுகிறான்.

இந்தக் கதை சினிமா பாணியில் அமைந்துள்ளது. மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் கந்துவட்டிக் கணக்குத்தான். கருப்பையாவுக்கு எல்லாமே தெரியும். பினாமிச் சொத்து, பட்டுவாடாச் செய்யாமல் ஒதுக்கி வைத்த கள்ளச் சொத்து; கட்சிக்கு வெற்றி கிட்டும் போது விட்டுவிடுவார்கள். தோல்வியென்றால் திருப்பிக் கேட்பார்கள்; தராவிட்டால் கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள். இதுதான் பிழைப்புக் கட்சிகளின் அரசியல் கள யதார்த்தம். அப்படி இருக்கும் போது அவன் தர மறுப்பதன் நோக்கம் கந்துவட்டி சார்ந்த உளவியல்தான். கந்துவட்டியால் பணப் பெருக்கம் கண்டவர்கள் அதைச் செலவழிக்கவோ நல்லதுக்குப் பயன்படுத்தவோ செய்யாமல் சேமிப்புக் கிடங்குக்குள் திணித்து வைப்பார்கள். இந்த உளவியலை அழகாகச் சித்தரிக்கிறது “கருப்பையாவின் கந்துவட்டிக் கணக்கு.”

இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகள் பற்றியும் அணிந்துரையில் தமிழ்ச் செல்வன் சொல்லிவிட்டார். அதற்குமேல் பேசுவதற்கு எதுவும் இல்லை.

ஆனாலும் ஒன்றைச் சொல்லவேண்டும். “கெடாவெட்டு” என்னை அதிகன் கவர்ந்ததற்குக் காரணம் அந்த எளிய உழைப்பாளிப் பெண்களின் எழுச்சிதான். கணவன்களின் கயமைத் தனத்தை எதிர்க்கும் அந்தக் குணம் மகத்தானது. படிப்பறிவில்லாத அவர்கள் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்றால் அவர்களைப் போலவே பகடி செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள், கணவனைப் போலவே மனைவியரும் குடித்துக் கும்மாளம் அடிக்கிறார்கள். ஆண்களைப் போலவே இவர்களும் செய்தால் இருவருக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாதுதான்.

ஆணின் அக்கிரமத்துக்கு எதிர் அக்கிரமம் செய்தால் ஒரு தீர்வை நோக்கி இழுத்துச் செல்ல முடியும். பெண்களின் எழுச்சி எந்த வகையிலானதாய் இருந்தாலும் இன்றைய சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அது ஏற்கப்பட வேண்டிய கருதுகோளே. சமன் குலைந்த வாழ்வைச் சமன்படுத்த ஆயிரம் ஆயிரம் தத்துவங்கள் உலக அரங்கில் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக இந்தக் கெடாவெட்டு நாயகிகளின் குரலும் இருந்துவிட்டுப் போகட்டுமே.

“உன்னை அடித்தால் நீயும் அடி” என்றார் சீனிவாசராவ். இது ஜாதீயப் போராட்ட்த்தின் எதிர்வினை மட்டுமல்ல; குடும்பநிலைப் போராட்டத்தின் எதிர்வினையும்தான். இந்தக் கதை சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்குக் கடத்தும் பரிணாமக் கடப்பாட்டை உட்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

முகாமியின் பெரும்பாலான படைப்புகள் இன்றைய கட்சி அரசியல் ராஜபாட்டையில் நடைபோட யத்தனிக்கின்றன. தமிழ்ச்செல்வன் சொல்வது போல அவை காலத்தின் தேவையாய் இருக்கின்றன. ஆனாலும் கலா ரசனையோடும் பூடகத் தன்மையோடும் கூறும் போதுதான் வாசக மனசைப் பெரிதும் ஈர்க்கும்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டும். ‘”ஊரெல்லாம் உலகெல்லாம் தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. மின் ஒளி அணைந்து விண்ணெல்லாம் மண்ணெல்லாம் இருள் கவ்வியது. எங்கிருந்தோ கடமுடாவெனச் சத்தம்! நாலாதிசைகளிலும் பேய்க் கூட்டம் பதறிப் பதறி ஓடுகிறது. அங்கங்கே வெடிச் சத்தம் வேறு. இவற்றைக் கண்டு பயந்த மனிதக் கூட்டம் தீபத்தை அணைக்க மறந்து வீட்டுக்குள் முடங்கியது. காலையில் எழுந்து பயந்தபடி வெளியில் எட்டிப் பார்க்கிறாள் குடும்பத் தலைவி. ஐந்து வீடு தள்ளி ஒரு வீட்டைத் தகரச்சாய்புப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். விசாரித்த போது அந்த வீட்டில் ஒருவருக்குக் கொரோனாவாம்.

அன்றைய செய்தித் தாளின் வந்த முக்கியச் செய்தி.- பத்து நிமிட தீபம் ஏற்றியதில் மின் வாரியத்துக்குப் பலகோடி நட்டம். மின் இயக்கத்தின் எல்லாத் தேவைகளும் நிறுத்தப் பட்டதால் ரத்தம் உறைந்த நரம்பு மண்டலமாய் மின் வழித் தடங்கள் செயலிழந்தன சில இடங்களில் பலத்த சத்தத்தோடு மின்பாதைகள் வெடித்துச் சிதறின..”

இந்தப் பத்தியும் கூட அரசியல்தான் பேசுகிறது.