ஆதித் சக்திவேலின் கவிதைகள்
டிப்பெட்ஸ் மட்டுமா சின்னப் பையன் ?
********************************************
(ஜப்பானின் ஹிரோஷிமாவில் முதல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்த அதை அமெரிக்கா சார்பாக விமானத்தில் எடுத்துச் சென்ற விமானி பால் டிப்பெட்ஸ் பற்றிய இந்தக் கவிதை, இன்று ரஷ்யா – உக்ரேன் இடையே நடைபெற்று வரும் போர்ச் சூழலில்,உலகமே அணு ஆயுத பயன்பாடு குறித்து அச்சப்படும் இவ்வேளையில் பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன் .)
ஹிரோஷிமா தழும்பினைத்
தடவிப் பார்க்கிறேன்
முக்கால் நூற்றாண்டு கழிந்த பின்னும்
பிசுபிசுப்பு இன்னும்
ஒட்டுகிறது விரல்களில்
சுக்காய்க் காய்ந்திட
எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?
பால் டிப்பெட்ஸ்
உலோக உருண்டையில்
உறங்கிக் கொண்டிருந்த
யுரேனியம் அணுக்களில்
சூரியனின் சிறு துண்டினை
செந்தணல் மூட்டையாய் ஒளித்து
“சின்னப் பையன்” எனச்
செல்லப் பெயரிட்டு
மனித நேயத்தின் மீது வீச
எடுத்துச் சென்ற சின்னப் பையன்
பால் டிப்பெட்ஸ்
ஒரு சில நொடிகளில்
பல்லாயிரம் உயிர்களுக்கு
பால் ஊற்றியவன்
நள்ளிரவில் நடுவானில்
அவனது “சின்னப் பையனை”
அவிழ்த்துவிட்டு
கருவில் சுமந்து
பெற்றெடுத்து பெயர் சூட்டிய
தாயின் பெயரை
பேரழிவைச் சுமந்து சென்ற
விமானத்திற்குச் சூட்டி
தாய்மையைக் கொச்சைப் படுத்தியவன்
யாரைக் கொல்வது யாரை விடுவது
எனக் குழம்பி நின்ற சாவை
காற்றென ஒரு கணத்தில் ஏவியவன்
எரிந்து கொண்டிருந்த வீதிகளில்
சாம்பலாய்ச் சரிந்த சடலங்கள்
தோலுடன் தொங்கிய சதைத் துண்டங்கள்
உருகி ஓடிய இரும்புத் தூண்கள்
கருகிச் சாம்பலான மரங்கள்
பருகும் நீரிலும்
மரண தாகத்தில் கதிர் வீச்சுகள்
திரும்பிய திசை எல்லாம் மரண ஓலம்
மனித சதையின் ரத்தத்தின் நெடி – இப்படி அவலங்களின்
காட்சிகளை ஓரிரவில் அரங்கேற்றி அகம் மகிழ்ந்தவன்
இதுவரை
கேட்டிரா ஒலி
கண்டிரா ஒளி
பார்த்திரா அமைதி
இவற்றை வரலாற்றின் பக்கங்களில்
அந்த ஒரே இரவில் எழுதி முடித்தவன்
நூறு ஆண்டுகளுக்கு
ஆறு ஆண்டுகள் குறைவாய் வாழ்ந்து
தனக்குக் கல்லறை வேண்டாம்
எனச் சொல்லிச் செத்தவன்
கட்டியிருந்தால் – மக்கள்
மரியாதை செலுத்தவா கூடியிருப்பர்
அவனது கல்லறையில் ?
அங்கே தினம் தினம்
அவனுக்கு மட்டுமா அம்மரியாதை நடக்கும்?
சின்னப்பையனின் முதுகுக்குப்
பின்னால் ஒளிந்து கொண்ட
அத்தனை பெரிய மனிதருக்கும் தான்
அப்பேரழிவு குறித்து
ஒரு நாளும் வருந்தியதில்லையாம்
வாழ்ந்த காலத்தில்
நாட்டுப் பற்றைத்
தன் நாசச் செயலுக்கு
முட்டுக் கொடுத்துப்
பேட்டி அளித்திருக்கிறான் அவன்
ஒவ்வொரு முறையும்
தேடுங்கள்
இன்னும் நன்கு தேடுங்கள்
ஹிரோஷிமா வீதிகளில்
அவனது மனசாட்சி
அங்கு தான் எங்காவது கிடக்கும் பாருங்கள்
அதைத் தூக்கி எறிந்த கையோடு தானே
சின்னப்பையனை வீசி இருப்பான் அவன்
தம் காதுகளிலும் கழுத்துகளிலும்
“சின்னப்பையன்”களை மாட்டிக்கொண்டு
வாய் கிழிய அமைதி அறிவுரை தரும்
உலக சட்டாம்பிள்ளைகளின் மனசாட்சி கூட
உங்கள் கைகளில் அகப்படலாம் அங்கே
நீங்கள் தேடுகையில்
முகமற்ற முப்பது குழந்தைகளில்
தன் குழந்தையை
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறாள்
தாய் ஒருத்தி என்பது
அவர்களுக்குத் தெரியுமா ?
போரின் வடிவங்களை
அழிவின் எல்லைகளை
மாற்றி எழுதும் அறிவியலில்
மனித நேயம் மரணிப்பின்
அவ்வறிவியலையே புறந்தள்ளுவோம்
நாட்டுப் பற்றின் இலக்கணங்களாய்
அவ்வழிவுகள் வரையறுக்கப்படும் எனில்
அணு ஆயுதங்களைப் போல்
அப்பற்றையும் கேள்விக்குள்ளாக்குவோம்
மீண்டும் மீண்டும் திரும்பும் வரலாற்றில்
இவ்வரலாறு மீண்டும் திரும்பாதிருக்க
கிழித்தெறிவோம்
வரலாற்றின் அப்பக்கங்களை
“சின்னப் பையனை”த்
தூக்கிச் சென்ற டிப்பெட்ஸோடு
அவனை ஆக்கித் தந்த
சின்னப் பையன்களையும்
வரலாற்றுக் கரை என்போம்
இதயங்களைத் திறந்து வைப்போம்
மனித நேயம்
அதனுள் நுழைந்தோடிட
நிறைந்து வழிந்தோடிட
அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்
****************************************************
(ரஷ்ய – உக்ரைன் போர் நடைபெற்று வரும் இன்றைய சூழலில், இக்கவிதை உக்ரைனை ஆதரித்தோ ரஷ்யாவை எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல. உக்ரைன் பெண் ஒருத்தி வீரத்துடன் தன் கணவனுக்கு மாற்றாய்ப் போருக்குச் செல்வதைப் பாராட்டி உலக மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது “அகமும் புறமும் சங்கமித்த அபூர்வ தருணம்” என்னும் இக்கவிதை. உலக மகளிர் தினத்தன்று இக்கவிதையைப் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.)
போர்
குடி மக்கள் மீது
திணிக்கப்படும் பேரழிவு
திட்டமிட்டே பல நேரங்களில்
போர் எதுவாயினும்
அதில் முதல் பலி
மனித நேயமும் உரிமையும் தான்
மன்னர் கால மண்ணாசையின் எச்சம்
மக்களாட்சித் தலைவர்கள் மனதில்
இன்னும் மறையாது இருப்பதன் வெளிப்பாடு போர்
போர் மேகங்கள்
ஒரு நாட்டில் சூழ
போர் தொடங்கப்படுகிறது
இன்னொரு நாட்டில்
போரிடும் நாடுகளுடன்
உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒரு சமன்பாடு
அது சரிந்திடா வண்ணம் – அவற்றின்
வியூகம் செறிந்த செயல்பாடுகள்
போரில்
சிதறுண்டு போன
கட்டடங்கள் நிமிர்ந்து நிற்கும்
கால ஓட்டத்தில் என்றாவது ஒரு நாள்
கல்லறையில் அடக்கமாவோரின்
தலைமுறைகளின் வாழ்வு?
வரிசையாய் நின்று
பணியாட்கள் பரிமாறிட உண்டோரும்
உணவுக்கும் நீருக்கும்
வரிசையில் நிற்பர்
போரின் அழிவுக்கு அஞ்சி
அண்டை நாட்டு எல்லைகளில்
அகதி எனும் தகுதியுடன்
அணுவின் உட்கருவில்
அருகருகே அரவமின்றி அமர்ந்திருக்கும்
ஆக்கமும் அழிவும் போல்
கை கோர்த்துப் பயணிக்கின்றன
அமைதியும் போரும்
இணை பாதைகளாய்
இடைவெளி அதிகமின்றி- வசதிற்கேற்ப
நாடுகள் தாவிக் கொள்கின்றன
ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு
போரின் நடுவே
அமைதிப் பேச்சுவார்த்தை
ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன
அது நடைபெறும் மேசைக்கு அடியிலேயே
அழிவுகளின் அளவால் நிர்ணயிக்கப்படும்
போரின் வெற்றியை
வெற்றி என யார் ஏற்பர்?
மலையுடன் மோதவும்
மன வலிமை வழங்குவது
மலை போல் உயர்ந்து நிற்கும்
தாய் மண்ணின் பற்று
தாய் மொழியின் தாகம்
இவ்விரண்டும்
தெற்கு உக்ரைனின் மைகோலைவ் நகரம்
சுற்றிப் பரந்த வயல் வெளிகள்
வயல்களில் ஆங்காங்கே இருந்த வீடுகள்
சிறு கிராமமாய் மாறியிருக்க
ஆண்டெல்லாம் வளம் சேர்க்கும்
டினீப்பர் நதி தூரத்தில்
கணவனின்
கைகளின் இறுக்கத்தில்
கால்களின் பின்னலில்
நெற்றியில் இட்ட
முத்தத்தின் அழுத்தத்தில்
பொங்கிய அகம் ஒரு புறம்
ஒரு தோளில் தொங்கிய
இயந்திரத் துப்பாக்கியில்
இன்னொரு தோளில் மாட்டிய பையில் நிரப்பிய கையெறி குண்டுகளில்
இடுப்பில் கட்டிய தோட்டாக்களில்
கண்களில் தெறித்த கோபத்தில்
தீப்பொறி பறந்த நடையில்
உடல் மொழியின் வன்மையில்
உள்ளத்தில் திரண்ட உறுதியில்
கொப்பளித்த புறம் இன்னொரு புறம்
அகமும் புறமும் ஆழமாய்ச் சங்கமித்த
அபூர்வ தருணம்
அவள் போருக்குப் புறப்பட்ட நேரம்
திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள்
அவர்களது வயல் வெளியை
நடுவே இருந்த வீட்டை – அதனுள்ளிருந்த
தன் மாற்றுத் திறனாளி கணவனை
எட்டு ஏக்கர் விளைநிலம்
பாதியில்
சூரியக் கதிர்களின் அணைவில்
மயங்கிக் களித்த சூரியகாந்தி
தம் முகத்தை மேற்கில் திருப்பிக்கொண்டிருந்தன
கொஞ்சம் கொஞ்சமாய்
மீதியில்
விளைச்சலின் பாரம் தாங்கா கோதுமை
அறுவடைக்குக் காத்திருந்தது
வரப்புத் தலையணையில்
தலை சாய்த்துப் படுத்தபடி
வெடித்துச் சிதறிய
கோதுமை மணிகளை
கொறித்துக் கொண்டிருந்த
அமைதியின் சின்னங்கள்
கும்பலாய் எழுந்து
எதிர் திசையில் பறந்தன
ஏவுகணைகளின் வெடிச் சத்தம் கேட்டு
தூரத்தில்
நகரின் நடுவே
அப்படியே சரிந்த
அடுக்கு மாடி கட்டடம் பற்றி எரிகிறது
ஏவுகணை ஒன்று அதனுள் நுழைந்து வெடித்து வெளியேறியதில்
கண்ணாடி ஜன்னல்கள்
தெறித்துச் சிதறும் சத்தம்
மரங்கள் கருகி எரியும் ஓசை
நெகிழிகள் உருகி ஓடும் வாசம்
மனித உடல்கள் ரத்தத்துடன் தீயும் வாடை
காற்றில் கலந்ததில் மூச்சுத் திணற
டினீப்பர் நதியின் மேலிருந்த
பாலத்தை நோக்கி நடக்கிறாள்
அங்கு நின்றிருந்த வீரர்களுடன் இணைந்துகொள்ள
கவச பீரங்கிகள் அணி அணியாய்
ஊர்ந்து செல்லும் சத்தத்தில்
எங்கே போகின்றன என
கணிக்க முடியா வண்ணம்
காற்றைக் கிழித்துப் பறந்த
ஏவுகணைகளின் பாய்ச்சலில்
போர் விமானங்களின்
வித்தியாசமான உறுமலில்
இருப்பும் இன்மையும்
கை கோர்த்துக் கொள்ளும்
நுண் புள்ளிகளின் சங்கமமாகிறது
ஒவ்வொரு கணமும்
அவள் கண் முன்னே
இலையுதிர் காலத்தில்
உதிரும் இலைகளைப் போலல்ல
மனித மரணங்கள்
தொடரும் வசந்தத்தில்
மீண்டும் முளை விட
இது அவளுக்கு நன்கு தெரியும்
வாழ்ந்து பெறுவதின்
பன் மடங்கு புகழ் சேர்க்கும்
சில மரணங்கள்
போர்க்களத்தின் வீர மரணம்
முதலாவதாய் அவற்றில்
இதுவும் அவளுக்கு நன்கு தெரியும்
இனி திரும்பிப் பார்ப்பதில்லை எனும் முடிவுடன் முன்னேறுகிறாள்
துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்த படி
வழுக்கும் நிலத்தில் கால் ஊன்றுபவனின்
நம்பிக்கை நிறைந்த கவனத்துடன்
கணவனின் கனவுகளின் திரட்சியாய்
ஆறு மாதங்களாய் – தன்
வயிற்றில் வளரும் குழந்தை
ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கும் அதிர்வுடன் துள்ளி அசையும் சத்தம்
போரின் எல்லாச் சத்தங்களையும் மீறி எதிரொலித்த வண்ணம் இருந்தது
அவளது மனதில்
ரஷ்யாவின் வழி பாய்ந்து
உக்ரைனை பொன் விளையும் பூமியாக்கும்
டினீப்பர் நதி
தன்னுள் ஒன்றெனக் கலந்த
ரஷ்ய – உக்ரைன் ரத்தத்தின்
சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது
கருங்கடலில் கலக்க
தெற்கு நோக்கி
சலனம் ஏதுமின்றி
அந்தப் பாலத்துக்குக் கீழே
உலகுக்கு உரைக்கும் உண்மை
வீரம்
ஒரு பாலினம் சார்ந்ததன்று
ஒரு மண்ணுக்குச் சொந்தமுமன்று
முறத்தால் புலியைப்
புறமுதுகு இடச் செய்த – அன்றைய
பெயர் தெரியா புறநானூற்றுத் தமிழச்சி
ஆங்கிலேய அந்நியனை விரட்ட
ஆயுதம் ஏந்திய வீர மங்கை
வேலு நாச்சியார்
உருக்கு உறுதியுடன் துப்பாக்கி தூக்கிய இன்றைய உக்ரைனிய வீரத்தாய்
இவர்கள் எல்லாம் உலகுக்கு உரக்க
உரைக்கும் உண்மை அதுதானே?