Thapputhalam ShortStory By Sa Lingarasu. தப்புத் தாளம் சிறுகதை - ச.லிங்கராசு

தப்புத் தாளம் சிறுகதை – ச.லிங்கராசு
இரவு மணி ஏழு முப்பது இருக்கலாம்.தபேலா வாசிப்பின ஒலி அந்த அறையை வியாபித்துக் கொண்டிருந்தது.”தகிட தகமி தகட தகமி தந்தானா” பாடலை முணு முத்துக் கொண்டே ராஜன் தபேலாவொடு ஒன்று கலந்திருந்தார். விரல்கள் தபேலாவில் நர்த்தனமாடின. ராஜனின் கண்கள் கிறங்கி இருந்தன். இசையின் சுகானுபவத்தில் அவர் மிதந்து கொண்டிருந்தார்.பாடிக்கொண்டே தபேலாவை வாசிக்க எல்லோராலும் முடிகிற விசயமில்லை.சிலருக்கு தாளம் எகிறும்.தாளம் சரியானால் வாசிப்பில் தடுமாற்றம் வரும். ராஜனுக்கு இரண்டுமே கைவந்த கலையாக அமைந்திருந்தது.

தாளத்தோடும் லயத்தோடும் சென்று கொண்டிருந்த இசை, திடீர் தப்புத்தாளத்தால் தடம் புரண்டது. அறையின் கதவு தட தட வென்று தட்டப்படும் இரைச்சல் சூழ் நிலையையே மாற்றியது. சினம் தலைக்கேறியவராய் ஆனாலும் தணித்துக் கொண்டு, கதவை திறந்தார்.

“இப்போ சாப்பிட வறீங்களா இல்லையா? பத்திரங்களை எல்லாம் அலம்பி வைக்க வேணாமா? தெனம் ஒங்களோட ஒரே ரோதனையா போச்சி டிராமா கம்பெனியாட்டமா…..” அவரின் தர்ம பத்தினி சங்கீத ராணியின் குரலில் இருந்த உச்ச ஸ்தாயியும் குத்தலும் நெஞ்சை குத்தினாலும் ராஜனுக்கு அது பழகிப்போன ஒனறாகி விட்டது.’ ஞான சூன்ய’த்திற்குப் போய் சங்கீத ராணி என்று பெயர்வைத்த தன் மாமனாரை நொந்துகொண்டார். மனைவியைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டார். அதில் அவருக்கு பரம திருப்தி.
மனம் லேசாகியது.

மத்திய அரசு ஊழியராய் இருந்து, ஓய்வுப் பெற்று அவர் சொந்த ஊர் வந்து சேர்ந்ததும், சொந்த ஊரானாலும, தான் தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தார். நல்ல விசயங்கள், நல்ல இசை, அரசியல் விழிப்புணர்ச்சி, புத்தகவாசிப்பு இதில் எதிலும் நாட்டமில்லாத மனிதர்கள் நிரம்பிய ஊராய் தம் ஊர் இருப்பதை உணர்ந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இசையில் ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். கேள்வி ஞானத்தால் தபேலா வாசிக்க கற்று கொண்டதை மிகப்பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டார்.

தாம் பணியிலிருந்த காலத்தில்,இசையில் ஆர்வமுள்ள இதர மத்திய அரசு அலுவலக நண்பர்களுடன் இணைந்து ஓர் இசைக்குழுவை ஏற்படுத்தி, எல்லா இடங்களுக்கும் சென்று இசைநிகழ்ச்சி நடத்தி வந்ததை ஓய்வுக்கு பின் அதை எண்ணி மருகிக்கொண்டிருந்தார். இசையில் விழுந்தவர்கள் எழுவது கடினம் என்பதை உணர்ந்தவர் தினம் தபேலாவோடு உறவாடியபடி இருக்கிறார்.

இவரின் இந்த இசை ஆர்வத்தை உணர்ந்து கொள்ளாத அவரின் மனைவிக்கு இது வேப்பங்காயாய் கசந்தது. அக்கம் பக்கம் என்ன நினைப்பார்கள்? உறவினர்கள் மத்தியில் எந்த மாதிரியான பேச்சு எழும்? ஒரு முறை தன் தம்பி,

“மாமா என்ன கூத்து கட்டப்போறாராக்கும் இது நம்ம சாதிக்கு ஒத்து வருமா?” என்று கேட்டதை மனதில் வைத்துக் கொண்டு, அவள் அவரை தனி அறையில் சிறை வைக்காத குறையாய் தள்ளி, “அறையிலே என்னவேண்ணா பண்ணுங்க மோள சத்த மட்டும் வெளியே வரக்கூடாது…” என்று பல்லைக் கடித்தாள். ‘தபேலாவை போய் மேளம் என்று சொல்கிறாளே என்றவருத்தம்தான் அவருக்கு.

அடுத்த ஊர் நகர கலப்போடு இருந்தது, ராஜனை உற்சாகப் படுத்தியது.அடிக்கடி அங்கு சென்று வர ஆரம்பித்தார் எப்படியோ அங்கு ஓர் இசை குழு இருப்பதை கண்டு பிடித்து விட்டார். தன்னுடைய இசை ஞானத்தை வெளிப் படுத்தி குழுவில் தபேலா கலைஞராகி விட்டார். இவ்வளவு காலம் தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்த இசைக் கனலை வெளிப்படுத்த தகுந்த இடம் கிடைத்தில் அவருக்கு ஆனந்தம் பொங்கியது.

இதை எப்படி சங்கீதா ராணியிடம் சொல்லி அனுமதி வாங்குவது? யோசித்தார். பணியிலிருக்கும் போது இசை நிகழ்ச்சிக்கு சென்று வருவதை அவள் கண்டு கொள்வதில்லை.கிடைக்கும் பணத்தை அவர் அவளிடமே கொடுத்து விடுவார்.அவளின் முகமலர்ச்சியில் பணமீது அவளுக்கிருந்த ஆசையை கண்டு ராஜன் சற்று சங்கடமானார்.

ஒரு நாள் சங்கீத ராணி நல்ல மூடில் இருக்கும் போது ராஜன் விபரம் சொன்னார்.சங்கீத ராணிமுகத்தை இறுக்கமாக வைத்துக் “பாட்டு கச்சேரி எப்பவாச்சும்தானே நடக்கும்? ……..” என்றாள்.

ராஜன் புரிந்து கொண்டார்.வேறுவேலை பார்த்தாலாவது மாதா மாதம் பணம் கிடைக்கும் இதில் எப்படி என்கிறாள். ஓய்வூதியம் இருவருக்கும் போதுமானதாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளுக்கும் எப்போதோ மணமுடித்தாகி விட்டது…

ராஜன் மனம் நொந்து போனார். இவளிடம் வாக்குவாதம் பண்ணி இனி இசைக்குழுவுக்கு போய் வருவது நன்றாக இருக்காது. இந்த மனநிலையோடு இசையை எதிர்கொள்வதும் இயலாது.
ஒரு வாரம் முடிந்துபோனது காலிங் பெல் ஓசை கேட்டு கதவைத் திறந்த சங்கீத ராணி அதிர்ச்சியும் பெரும் ஆனந்தமும் கொண்டாள். ராஜன் ‘செக்ருட்டி’ சீருடையில் உள்ளே நுழைந்தார்.
“காப்பி போடனுங்களா இல்லே….. டீங்களா” முகம் முழுக்க பல்லோடு சங்கீத ராணி ராஜனை வரவேற்றாள்.