இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் -எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் -எஸ் வி வேணுகோபாலன்

  எழுதவில்லையே தவிர  இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே துயர கீதங்கள்.    இரட்டையர் பிரிந்து தனியே எம் எஸ் வி…
Music Life 87: Unnai thane Gaanam theduthe – SV Venugopalan இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 87: உன்னைத் தானே கானம் தேடுதே… – எஸ் வி வேணுகோபாலன்




‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’

என்றானே மகாகவி, எப்பேற்பட்ட தீர்மானமான பிரகடனம் இது!

இதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தமது சாதனைகளை ஆவணப்படுத்த அக்கறை கொள்ளாது அலட்சியமாக இருக்கும் சமூகம்! எத்தனையோ அரிய செல்வங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கத் தவறி இருக்கிறோம். நுட்பமான வரலாறுகள், பல அசாத்திய மனிதர்களைக் குறித்து நம்மிடையே இல்லை.

அண்மையில் இசையுலகின் அறிஞர் ஒருவரது புத்தகம் சென்னையில் வெளியானது. அவரது பார்வைக்கு அந்தப் புத்தகத்தை விரைவில் சேர்ப்போம் என்று மார்ச் 28, 2023 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக விழாவில் பேசப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அந்த அறிஞர் தனது சுவாசத்தைத் தானிருந்த தேசத்தில் நிறுத்தி விட்டிருந்தது பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. மிக இலகுவாகத் தமிழில் பேச அறிந்திருந்த அந்த அறிஞர் இந்தியர் அல்ல, ஜப்பானியர். லச்சப்ப பிள்ளை எனும் வித்வானிடம் முறைப்படி கற்றுக் கொண்ட சிறப்பாக நாகஸ்வரம் வாசிக்கப் பழகி இருந்தவர். ராஜரத்தினம் பிள்ளை அவர்களைக் குறித்த சீரிய ஆய்வு மேற்கொண்டு அந்த நோக்கில் இசையுலகு குறித்த முக்கியமான தீஸிஸ் அவர் படைத்திருந்ததன் நூல் வடிவம் வெளியாகும் தருணத்தில் அவரே வந்து நாகஸ்வர இசை வழங்க விரும்பி இருந்தார், அது சாத்தியமாகவில்லை என்பது கூடுதல் துயரச் செய்தி.

https://frontline.thehindu.com/other/obituary/terada-yoshitaka-the-man-from-japan-who-played-the-nagaswaram/article66680031.ece

அவரது நூலின் முதல் பிரதியை வாங்கிக் கொண்டவரும், இந்த நூலைக் கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பு செய்திருப்பவருமான பத்திரிகையாளர் – தி இந்து ஆங்கில ஏட்டின் முன்னாள் ரீடர்ஸ் எடிட்டர் ஏ எஸ் பன்னீர்செல்வன் அவர்கள் ஃபிரண்ட்லைன் இதழில் எழுதியுள்ள புகழஞ்சலிக் கட்டுரை, டெரடா யோஷிடாகா (1954-2023) எனும் மிகச் சிறந்த இசை ஆய்வாளரை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. உலக பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இசைத் துறையில் பெரும் பொறுப்புகளும், ஆய்வுத் தலைமையும் வகித்தவர் அவர்.

அந்த நூல் என்ன பேசுகிறது என்பதை தி இந்து ஆங்கில நாளேட்டில் மிகச் செறிவாக முன் வைக்கும் ப கோலப்பன் அவர்களது கட்டுரை, இன்றும் பெரிய சபாக்களில் நாகஸ்வர வித்வான்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது போவதையும் பேசுகிறது.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/caste-politics-of-carnatic-music-and-a-japanese-link-to-thiruvavaduthurai/article66736573.ece

ராஜரத்தினம் பிள்ளை முன்னெடுத்த துணிவுமிக்க போராட்ட அணுகுமுறை, இசையுலகில் நிலவிய சாதீய அணுகுமுறைகளை, வெளிப்படையான பாகுபாடுகளை எப்படி எதிர்கொண்டது என்பதையெல்லாம் அலசும் டெரடா அவர்களது N. Rajarattinam Pillai: Charisma, Caste Rivalry and the Contested Past in South Indian Music புத்தகம் பெரிய மேளமும் கர்நாடக இசையும் என்ற தென்னகத்தின் இரண்டு இசை மரபுகள் குறித்த நுட்பமான ஆய்வு நூலாக விரிகிறது என்பதையும் விவரிக்கிறார் கோலப்பன். பிராம்மணர் மற்றும் பிராம்மணர் அல்லாதாருக்குமிடையே நிலவிய முரண்பாடுகள், சாதீய மேலாதிக்கம் மட்டுமின்றி இசைக்கருவிகள் பயன்படுத்திய இதர சாதியினரை இசை வேளாளர் எப்படி பார்த்தனர் என்பது உள்பட டெரடா தனது ஆய்வில் கொண்டு வந்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

கலைஞர்களை சமமாக மதித்தல் ஒரு சமூகத்தின் பொறுப்பு. சக கலைஞர்கள் திறமையைக் கொண்டாடுதல் கலைஞர்கள் யாரும் இழந்துவிடக் கூடாத நல்லியல்பு. அந்நாட்களில் ஓர் இசைக்கலைஞர் பாட, மற்றுமோர் இசை மேதை அவருக்கு பக்க வாத்தியம் இசைத்ததெல்லாம் கேள்விப்படுகிறோம் என்று தனிப்பட்ட உரையாடலில் குறிப்பிட்டார் கோலப்பன். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடுகையில் ஜி என் பி (ஜி என் பாலசுப்பிரமணியன்) தம்பூரா மீட்டியதுண்டு, புகைப்படப் பதிவே உண்டென்பார்கள் என்றார். மேடையில் ஓர் இசைக் கலைஞர் இசைக்கையில் எதிரே வரிசையாக எத்தனையோ இசை மேதைகள் அமர்ந்து ரசித்துப் பாராட்டிக் கேட்ட சுவாரசியமான செய்திகள் பதிவாகி உள்ளன. ஓர் உன்னத மரபு அது.

அண்மையில், ஓர் அரிய காணொளி பார்த்தபோது அத்தனை உற்சாகம் பிறந்தது. திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களிடம் அமர்ந்து, மன்னவன் வந்தானடி பாடல் கம்போசிங் எப்படி அத்தனை நேர்த்தியாக அமைந்தது என்று மெல்லிசை மன்னர் (குரலை வைத்துத் தான் உணர முடிகிறது, உருவத்தைப் பார்த்து அல்ல!) எம் எஸ் விசுவநாதன் கேட்க, வரிகளின் பெருமை கண்ணதாசனுக்கு என்கிறார். உண்மைதான், அது பாடலின் பெருமை, இசை அமைத்தது நீங்கள் ஆயிற்றே என்றால், அதெல்லாம் குருவாயூரப்பன் கருணை என்று தன்னடக்கத்தோடு சொல்லியவாறு, கே வி மகாதேவன் அவர்கள் ஸ்வர வரிசைகளில் வரும் இடத்தை ஹார்மோனியம் தபோலா கருவிகளோடு இசைத்துக் காட்டுவது ஓர் அருமையான பதிவாகும்.

இதில் மற்றொரு சுவாரசியமான காணொளியும் காணக் கிடைத்தது. எந்தக் கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரு பாடலுக்காகத் தான் மற்றோர் இசை மேதையை எம் எஸ் வி ரசித்துப் பாராட்டிப் பேசினாரோ அதே ராகத்தில் அவரும் ராமமூர்த்தி அவர்களும் சேர்ந்து இசையமைத்த அழகை அவரோடு பல ஆண்டுகள் இணைந்து இயங்கிய மதுரை ஜி எஸ் மணி அவர்கள் மெல்லிசை மன்னர் எதிரில் கொண்டாடிப் பேசும் காட்சி அது.

அந்தப் பாடலை இசைத்தவர்கள் எதிர்பார்க்க முடியாத இணை குரல்கள், சீர்காழி கோவிந்தராஜன், எம் எல் வசந்தகுமாரி! அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் மகனே கேள், வெளியாகவில்லை, அந்த வருத்தத்தோடு மணி பேசுவதைக் கேட்க முடிகிறது. எம் எஸ் வியின் ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய விவரிப்பு இருக்கிறதே…ஆஹா… அந்த ரசனை, பாராட்டு, பரவசம் தான் எத்தனை உன்னதமான பண்பு. தலைக்கனம் அற்ற குழந்தைமைப் பார்வையோடு எம் எஸ் வி மேடையில் இருப்பது இன்னும் அழகான காட்சி.

தாங்கள் முன்பு இசையமைத்த சந்திராணி (1954) படத்தின் ‘வான் மீதிலே’ என்ற பாடலை மிகவும் விரும்பும் இளையராஜா கேட்டுக்கொண்டபடி அவரோடு இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில், அதன் சாயை தெரியாதபடி (செப்படி வித்தை என்கிறார் எம் எஸ் வி!) அமைத்த மெட்டு தான் ‘வா வெண்ணிலா’ பாடல் என்று எம் எஸ் வி இசைத்துக் காட்டிச் சொல்வது ரசமான தகவல்.

பாடலைப் பெற்றெடுத்தது நான், ஆனால் அந்தக் குழந்தைக்குத் தலை சீவிப் பொட்டு வைத்துப் பட்டுச் சட்டை அணிவித்து அலங்காரம் செய்ததெல்லாம் ராஜா தான் என்கிறார். சக கலைஞர்கள் உயர்ச்சி தாழ்ச்சி உணர்வு இன்றி இணைந்து இயங்கும்போது எத்தனை இனிய படைப்புகள் உருவாகும் என்பதையும் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு சொல்கிறார் மெல்லிசை மன்னர்.

வா வெண்ணிலா ஓர் அற்புதமான பாடல். பாடலாசிரியர் வாலி. எஸ் பி பி, எஸ் ஜானகி இருவருமே தனித்தனியாகப் பாடி இருக்கின்றனர். பாலு பாடுகையில் ஜானகியின் ஹம்மிங் பாடலை மேலும் ஒளிர வைக்கிறது! வெண்ணிலாவைத் தேடும் வானம் என்ற பொருளில் விரியும் பல்லவி என்பதால், விண்ணிலே மிதப்பது போலவே ஒலிக்கிறது பாடல் முழுவதும்.

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு இந்தப் பாடல். சுழற்சியை நிறுத்தாத குடை ராட்டினம் இதன் தாளக்கட்டு. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்றார் பாவேந்தர். பார்வை என்ன, முகமே பார்க்க இயலாமல் துடிக்கும் காதலனின் வேட்கை இந்தப் பாடல். அந்த தாகத்தை மொண்டு மொண்டு வந்து கொண்டு சேர்க்கும் குரலில் எஸ் பி பி இந்தப் பாடலை அத்தனை உயிர்த்துடிப்பாக இசைக்க, அந்த உயிர்க் காதலின் இதயத் துடிப்பாக இயங்குகிறது ஜானகியின் ஹம்மிங். வயலின், கிடார், அளவான குழலிசை என்று கருவிகளைத் தேர்வு செய்த ராஜா, சரணங்களுக்கு இடையேயான இசைக்கோலத்தை ஜானகியின் ஹம்மிங் மையக்கருவாக இருக்குமாறு அமைத்துக் கொண்டது பாடலை இன்னும் ஈர்ப்பு மிகுந்ததாக ஆக்குகிறது.

‘வா….வெண்ணிலா’ என்கிற முதல் பகுதி, காதலின் பேரழைப்பு! காதலனின் உளவியல் துள்ளலைத் தாளம் உடனிருந்து மேலும் விசையேற்றுகிறது. ‘உன்னைத் தானே…’என்பது வாலியின் சிறப்பு. எத்தனை எளிய சொற்களில் உணர்வுகளைக் கடத்த முடியும் என்பது தமிழ்த் திரையிசையில் கொட்டிக் கிடக்கிறது. ‘வானம் தேடுதே…’ என்பதில் அத்தனை சங்கதிகளையும் கொணர வைக்கிறார் ராஜா. ‘அங்கண் விசும்பில் அகல் நிலா பாரிக்கும் திங்களும்’ என்று தொடங்குகிறது நாலடியார் செய்யுள் ஒன்று. வானம் அதன் எல்லையற்ற பரப்பினால் பெருமை உடையது. அதைத் தனது வெண்மையான ஒளியால் மின்ன வைக்கிறது நிலா. அதனால் தான், உன்னைத் தானே வானம் தேடுதே என்பது பல்லவியை அத்தனை அழகாக்கி விடுகிறது. பேசுபொருள் உண்மையில் வெண்ணிலா அல்ல, காதலனின் கண்ணில் நிற்கும் பெண் நிலா என்பதை அடுத்த வரிகள் சொல்லிவிடுகின்றன, ‘மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போவதேன் ….’ அந்தத் தாளக்கட்டில் இந்த வரியின் ஒவ்வொரு சொல்லில் ஏற்றும் சங்கதிகளோடு பாலு அபாரமாக இசைப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பல்லவி முடியக் காத்திருக்கும் ஜானகியின் தேனிசைக் குரலில் விரியும் ஹம்மிங், வயலின் இழைகளோடு பின்னிக் கொண்டு குழலால் உள்ளத்தை மெல்லத் தீண்டி சரணத்தில் கொண்டு சேர்க்கிறது. ‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்’ என்கிற இடங்களில் பெரிய ஜாலங்கள் இல்லாமல் நகர்த்தும் ராஜா, ‘ஒரு முறையேனும்…’ என்கிற பதங்களில் தொடங்குகிறார் மந்திர ஜாலத்தை. எதிரொலிக்கும் ஹா…ஹா…. ஹே ஹே என்ற ஒற்றைச் சொல் ஹம்மிங் பாலுவும் ஜானகியுமாக, அடுத்த மூன்று அடிகளும் முடித்து, ‘எனைச் சேர….’ என்ற இடத்தில் எஸ் பி பி எடுக்கும் அபாரமான ஆலாபனை நிறைவு பெறுமிடத்தில் தபேலா போடும் சொடுக்குகள் …ஆஹா….மீதி வரிகளை இன்னும் சுகமாக வழங்குகிறார். அதிலும் அந்தக் கடைசி வரியைத் தாளக்கட்டு இன்றி ஒயிலாக மிதக்க விட்டுப் பல்லவிக்குச் செல்கிறார் பாலு. அங்கே ‘உன்னைத் தானே’ சிறப்புக் கவனத்திற்குக் காத்திருக்கிறது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய இசைப்பயணம் கரவொலியின் ஜோரோடு ஜானகியின் ஹம்மிங் கலக்க, ‘மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்’ என்று எடுக்கிறார் எஸ் பி பி. ‘இடையினில் ஆடும்’ என்கிற இடத்தில் மீண்டும் அதே ஹா…ஹே மந்திர ஜாலம் அடுத்த மூன்று அடிகளுக்கும். ‘உனக்காக….’ என்ற இடம் வாய்க்கிறது மீண்டும் பாலுவுக்கு அபாரமான ஆலாபனை…தபேலா சொடுக்குகள்…மீதி வரிகளின் எல்லையில் முன் போலவே கடைசி வரியைக் காற்றில் மிதக்க விட்டுப் பல்லவியை இன்னும் காற்றோட்டமாக எடுக்கிறார் பாலு. உன்னைத் தானே என்ற இடத்திற்கு இப்போது வாய்க்கிறது கூடுதல் சங்கதி. அருமையாக நிறைவு பெறுகிறது பாடல்.

இசை வெறும் ரசனை மட்டுமின்றி, உணர்வுகளோடு பேசவும் செய்கிறது. உணர்வுகளோடு கலக்கவும் செய்கிறது. நினைவடுக்குகளில் காத்திருக்கிறது, கூண்டு எதிலும் அடைப்பட்டிராத ஒரு கிளி பின்னர் வந்து எடுத்துக் கொடுக்கிறது அந்த அடுக்குகளில் இருந்து அப்போது தேவைப்படும் ஒரு பாடலை….. இசையைச் சுழற்றி விட்டுப் பறந்து போகிறது இசைக் கலைஞர்களைக் கொண்டாடியபடி!

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

Music Life 86: Ragathil irangi aada vandhavale – SV Venugopalan இசை வாழ்க்கை 86: இராகத்தில் ஆட இறங்கி வந்தாளோ ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 86: இராகத்தில் ஆட இறங்கி வந்தாளோ ! – எஸ் வி வேணுகோபாலன்




மிகச் சரியாக ஒரு மாதம் ஆகிறது. மும்பை புறப்படும் அன்று பகிர்ந்து கொண்டது முந்தைய கட்டுரை. சென்னை திரும்பியே 20 நாட்கள் ஓடிவிட்டன. இசை கேடாக என்ன நடந்துவிட்டது, இடையே ? இசைக்கும் ஒரு கேடில்லை, ரசனைக்கும் தடையில்லை. கட்டுரைகள் மெல்ல மெல்ல எழுதத் தொடங்குகிறேன், ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு. என்ன நடந்தது என்பதற்குச் செல்லுமுன், பாவேந்தரின் புரட்சிக் கவி காவியத்தில் மிகவும் பிடித்தமான வரிகள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவி என்று எனை அவளும் காதலித்தாள்!
அமுது என்று சொல்லும் இந்தத் தமிழ் என் ஆவி
அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?
உமை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லாத
உயர் தமிழை உயிர் என்று போற்றுமின்கள்!

என்ன ஓசை நயம்… என்னே உணர்ச்சி மயம்…

மும்பைக்கும் புரட்சிக் கவிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? வருகிறேன், கதைக்கு!

நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம், சிறப்பாகப் பங்கேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஊருக்குப் புறப்படும் முதல் நாள், மார்ச் 4 அன்று மாநகர் உலா சென்ற இடத்தில், நேரு அறிவியல் மையத்தில் ஓர் இசைப்பலகை மீது நடை பயின்று கொண்டிருக்க, அது என் கொண்டாட்டத்தில் விசைப் பலகையாகி, நான் சாய்மானம் அற்ற இடத்தில் சாய, கரணம் அடித்து வீழ, இடது கை எலும்பு முறிந்து போனது. அந்த இசைப்பலகை, ஹார்மோனியம் அல்லது பியானோ கீ போர்டு போல் வெள்ளை கறுப்புக் கட்டைகள் மாறி மாறி அமைக்கப்பட்டிருக்க ஒவ்வொன்றின் மீது நடக்கும் போதும் வெவ்வேறு இசை ஒலிக்கும் ஸ்வரங்கள் போல்! அதிலிருந்து தான் நிலை கவிழ்ந்து விழுந்தேன். அதற்காக, இசையால் தான் நான் எலும்பு முறித்துக் கொண்டேன் என்று யாரும் கனவில் கூட ஒரு சொல் சொல்லிவிட்டால் தாங்க மாட்டேன். என் தவறினால் தவறி விழுந்தேன், மாசில்லாத உயரிய இசையை உயிரென்றே போற்றுவோமாக!

மணமகனின் தந்தையை மார்ச் 2 அன்று பிற்பகல் சந்தித்த நிமிடமே நெருக்கமாகிப் போனோம், மும்பையில் வசித்து வரும் அவர், தமிழ்த் திரைப் பாடல்களில் ஏற்பட்ட பரவசத்தில் இங்கே வேலைக்கு வரவேண்டும் என்று அமிர்தாஞ்சன் நிறுவனத்திற்கு விண்ணப்பம் போட்டு இருந்தாராம் அந்நாட்களில்! ஏனோ ரசிக்க விடாமல் நிராகரித்து விட்டார்கள், மும்பையிலேயே வாழ நேர்ந்தது என்று சிரித்தார்…. இசை எங்கு போனாலும் விடுவதில்லை!

அந்தச் சிறிய விபத்து நடந்து முதலுதவிக்காக எங்கே செல்ல என்று வழி காட்டியதோடு, தான் அங்கு வந்து நின்று தக்க உதவிகள் உறுதி செய்தது யார் என்கிறீர்கள், சாட்சாத் யார் திருமணத்திற்குப் போயிருந்தோமோ அந்தத் திருமணச் செல்வி அம்ரிதா தான், அவர் டாக்டர் அம்ரிதா வும் கூட! எக்ஸ் ரே எடுத்து, எலும்பு முறிவு என்று கண்டுபிடித்து, இளம் மருத்துவர் அநிருத்தா கதம், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு போட்டுக் கொண்டிருக்கையில், நான் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டிருந்தேன். ‘ வலிக்கவில்லையா, எப்படி இயல்பாக இருக்கவும் இசைக்கவும் முடிகிறது?’ என்று வியப்போடு கேட்டார் அவர்.

அதே கேள்வியை மறுநாள் சென்னை வந்திறங்கி அடுத்த நாள் பிற்பகல் அறுவை சிகிச்சை மேசையில் படுத்திருந்த போது தியேட்டர் உதவியாளர்களும் கேட்டனர். வாணி ஜெயராமின் பொங்கும் கடலோசை இந்த நாட்களில் ஓயாமல் உள்ளத்திலும் உதடுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! தையல் பிரிக்கப் போயிருந்த போதும் பொங்கும் கடலோசை, கொஞ்சும் தமிழோசை தான்….மூத்த உதவியாளர் ராமச்சந்திரன் ரசித்துக் கொண்டே தனது கடமையைச் செய்து முடித்தார்.

முன்னதாக, அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் கைக்குப் பயிற்சி அளிக்க வரும் பிசியோதெரபிஸ்ட் செந்தில் அவர்களும்
கேட்டார், இசை ரசிகரா என்று! எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கும் ஒரு சமயம் பயிற்சி வழங்கப் போயிருந்தது குறிப்பிட்டார். வாணி ஜெயராம் பாடல் கேட்பீர்களா என்றேன் ஒரு நாள், அவர் கஜல் பாணி பாடல்களை எல்லாம் பின்னி எடுப்பார் என்றார் செந்தில், ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்….’என்று இசைத்தேன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று பட்டென்று பதில் சொன்னவாறு பயிற்சியை வழி நடக்கலானார்! அன்றாடம் பயிற்சி நேரத்தில் அந்த மிகச் சில நிமிடங்களில் ஏதேனும் ஒரு பாடல், யாரேனும் ஓர் இசையமைப்பாளர், ஒரு பாடலாசிரியர், பாடகர் பற்றிய பேச்சு இராது கடப்பதில்லை !

எஸ் பி பி பற்றிய பேச்சு எடுத்ததும், கண்களை இறுக மூடிக் கைகள் குவித்து வணங்கியவாறு அவரைச் சிறப்பித்துச் சொன்னார். பாலுவின் சிறப்பம்சங்கள் சில நான் சொல்லவும், “நந்தா நீ என் நிலா …பாடலை நான் ரொம்ப தாமதமாகத் தான் கேட்டேன், அதற்குப் பிறகு ஓராயிரம் முறை கேட்டுவிட்டேன்….என்ன குரல்…என்ன இசை அது!” என்றார். நான் லட்சம் தடவை என்று சொல்லவும் இன்னும் கிறுகிறுத்துப் போனார். தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இசை அய்யா அது என்றேன். “அவர் பெயராலேயே கேரளத்தில் ஒரு விருது பெற்றது என் பேறு, அது ஒரு பொக்கிஷம் எனக்கு!” என்று எஸ் பி பி குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை நுட்பமான சங்கதிகளும், அழகியலும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் ததும்பிப் பொங்கும் பாடல் அது என்று சொன்னேன்.

2012இல் வந்திருக்கிறது ஒரு கடிதம் எனக்கு, அதுவும் ஒரு மருத்துவரிடம் இருந்து! அவர் பல் மருத்துவர், திருச்சி சுப்பு (சுப்பிரமணியன் பொன்னையா) ! தட்சிணாமூர்த்தி அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, நந்தா நீ என் நிலா பாடல் வரிகள் எழுதி, பாடலைக் கேட்டு ரசிக்க யூ டியூப் இணைப்பும் சேர்த்து அவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல் அது! தூங்காமல் தூங்கி எனும் அரிய புத்தகம் வழங்கிய மருத்துவர் மாணிக்கவாசகம் சகோதரர் மகன் அவர்.

‘மேடையில் அண்ணன் கூட அதிகம் பாடியது மாதிரி தெரியவில்லை, மிக மிக நுண்ணிய பொடி சங்கதிகள் நிரம்பியது’ என்று அண்மையில் கூட பாடகி எஸ் பி ஷைலஜா குறிப்பிட்டிருக்கும் இந்தப் பாடல் வெறும் இசைப் பாடல் அல்ல. இசை வாழ்க்கை அது. முற்றிலும் வேறு ஓர் உலகில் வாழ்தல் அது!

பாலுவே திரும்ப அதே மாதிரி பாட முடிந்திருக்குமா தெரியாது என்று உருகிப் போய் எழுதுகிறார் இசை ஆர்வலர் இதழாளர் ப கோலப்பன். https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/82231-13.html

மிகவும் கஷ்டமான பாடல், அப்பேற்பட்ட இசை அமைப்பு, எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துப் பாடியது என்று எஸ் பி பி அவருக்கே உரிய வெளிப்படைத் தன்மையும் தன்னடக்கமும் ஒளிரப் பேசி இருக்கிறார்.

தந்திக் கருவிகள், தாளக் கருவிகள், குழலிசை எல்லாமாக ஆரவாரமற்ற அடர்ந்த ஒரு பெரு வனத்தில் நிலவு வெளிச்சக் குளியலில் நம்மைக் கொண்டு குடியமர்த்தித் தேனும் தினை மாவும் இன்ன பிறவும் சுவைத்துக் கிறங்க வைக்கும் பேரனுபவம் இந்தப் பாடல்.

இசையமைப்பாளரது கற்பனையில் இசையூற்று பெருகுகிறது. அவரது அனுபவத்தின் திரட்சியில் அது மேலும் ஆழமாகிக் கொண்டு போகிறது. பாடகரைக் கொண்டு அதிலிருந்து மொண்டெடுக்க வைக்கிறார் தேர்ச்சியான இசை அமைப்பாளர் ஒவ்வொருவரும். அந்தக் கற்பித்தலின் வீச்சும், பற்றிக் கொள்பவரின் இலாவகமும் ஒன்றையொன்று உரிய பதத்தில் தொட்டுக் கொள்ள வாய்த்துவிடும் போது பாடல் உன்னதமான தளத்தில் பதிவாகி விடுகிறது. நந்தா நீ என் நிலா அப்படியான அரிய தருணம் ஒரு பாடகருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்குமே ! பாடல் எழுதியவர் இரா பழனிச்சாமி என்ற பதிவிருக்கிறது. (கோலப்பன் அவர்கள் கட்டுரையில் பாண்டுரங்கன் என்ற குறிப்பிருக்கிறது). அற்புதமான இசைக்கவிதை அது.

அட்சர லட்சம் பொன் என்று அந்நாளைய கதைகளை முன்னோர் சொல்லிக் கேட்டிருப்போம். இந்தப் பாடலில் அப்படியாகக் கொடுத்துக் கொண்டே போக வேண்டிய இடங்கள் எத்தனை என்று கேட்டால் எண்ணில் அடங்காது…. ஆள் அரவமற்ற பெரு வனத்தில் சில்லென்று உரசிப் போகும் முதல் காற்று தான், பாலு எடுக்கும் பல்லவியின் முதல் வரி! அதில் நீ கிடையாது, நந்தா என் நிலா……அழகான ஹம்மிங் கரையும் காற்று அது! தாளக்கட்டோடு தொடங்கும் பல்லவியில் நீ சேர்ந்து விடுகிறது, அப்படி அழகாகச் சென்று தாளத்தில் அமர்கிறது, நந்தா நீ என்….நிலா….நிலா.. அட்சரங்கள் எத்தனையோ அத்தனை லட்சங்கள்! நாயகன் மடியில் காண்பது சுகமே….இப்போது வீசும் காற்று இன்னும் குளிர்ச்சியானது. ‘நாணம் ஏனோ வா’ என்பது மூன்று சொற்கள், பாலுவின் குரல் தூரிகை அதை வண்ணங்களில் குழைத்துத் தீட்டும் இசை சித்திரம் அபாரமானது. அந்த ‘வா’ என்ற இழைப்பு, ஆயிரம் அறைகள் கொண்டிருக்கும் காதல் நெருக்கத் தேன் கூட்டுக்குள் வரவேற்கும் சுகத்தை உணர்த்துகிறது. பல்லவி அங்கே முடிந்து விடுவதில்லை, அது தான் தட்சிணாமூர்த்தி அவர்களது மேதைமை.

விழி – மீனாடும் விழி மொழி – தேனாடும் மொழி – குழல் பூவாடும் குழல் – எழில் நீயாடும் எழில்…சுழல் மெத்தையில் ஏற்றிச் செல்கிறான் காதலன். லட்சங்கள் போதாது, அடுத்த வரிக்கு! மின்னி வரும் சிலையே, மோகனக் கலையே, வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே….அந்த தபேலா வாசிக்கும் கைகளுக்கு முத்தங்கள் தான் போடவேண்டும்! மோகனக் கலையே என்ற பதங்களை எப்படி வார்க்கிறார் பாலு, வானவரில் அந்த வா…வாரே வா தான்! பிறகு, வேக சொற்கள், ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே ….ஆஹா….இது அந்தக் காட்டுச் சூழலுக்குள் வண்டுகளின் அபார ரீங்கார ஒய்யார நடை! அதோடு விடுவாரா தட்சிணாமூர்த்தி சாமி, கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா…என்ற ஒரு மின்னல் வெட்டு, மின்மினிப் பூச்சிகள் பளீர் என்று தூவிவிட்டுப் போகும் வெளிச்ச இழையாக! அட்சரமாவது லட்சமாவது, அதற்கு மேல் அல்லவா ஈடு செய்தாக வேண்டும்….

பல்லவியை மீண்டும் அணுகும்போது, அந்த நிலாவை காதோடு ரகசியமாக விளிக்கிறார் பாலு. நிலா…நிலா…என்பதில் எத்தனை காதல் ஈரப் பசை! நாணம் ஏனோ என்பதில், நாணத்தின் ஊடே உதிரும் சிரிப்பு மணிகளில் எத்தனை காதல் குறும்பு!

பாடலின் சுவாரசியம், சரணத்தை நோக்கிய ஓட்டத்தில் பல்லவியை பிரதிபலிக்கும் சுகத்தை இசைக் கருவிகள் மூலம் கொணர்ந்து விடுவது. ஆசை நெஞ்சில் தெய்வத்தை – ஆடி நிற்கும் தீபத்தை அப்படியே பேசுகின்ற வீணையை ஒலிக்க வைக்கிறார். புல்லாங்குழல் காதல் உருக்கத்தைக் கிறக்கமாக்குவதில் முனைந்திருக்கிறது.

சரணங்களை எல்லாம் எழுத இயலாது…..இந்தப் பாடல் கேட்பதற்காகவே, அதில் தோய்ந்து கிடப்பதற்காகவே, பேசிப் பேசிப் பிதற்றித் தன்னையே தொலைத்துத் தொலைத்துக் கண்டெடுப்பதற்காகவே உருவான ஒன்று அல்லவா! வேண்டுமானால் பாருங்களேன், ‘ஆயிரம் மின்னல் ஓருருவாகி…’ என்பதை இலக்கண சுத்தமாக எடுக்கும் பாலு, எத்தனை அருமையான சங்கதிகள் உதிர்க்கிறார், தொடர்கையில், ‘ஆயிழையாக வந்தவள் நீயே…’ என்பதில் எத்தனை இழைகள் அந்த ஆயிழையில் சேர்க்கிறார்! அதை இன்னுமே நகாசு வேலைகள் சேர்த்து மின்ன வைக்கப் புல்லாங்குழல் ஒலித்து இரண்டாம் முறை பாடுமாறு கேட்டுக் கொள்கிறது நம் அன்புப் பாடகரை ! ‘அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே….’ எனும் மூன்றாவது வரி, இன்னும் உயிர்ப்பான அனுபவமாக அமைகிறது, ‘அருந்ததி போலே பிறந்து வந்தாயே…’ என்ற முடிப்பு, காதலின் இதயத் துடிப்பு.

இரண்டாம் சரணம், சீதையையும் ஊர்வசியையும் வம்புக்கிழுக்கும் இலக்கியக் காதல். அந்த சங்கதிகள் ஒரு பக்கம் இருக்கட்டும், பாலுவின் சங்கதிகள் என்னமாக ரீங்கரிக்கும் இதிலும்! ‘ஆகமம் கண்ட சீதையும் இன்று….’ என்று மிதிலையில் மெதுவாக நடந்து பார்த்து, ‘ராகவன் நான் என்று’ என்ற மூன்று சொற்களில் என்னே மாய ஜாலம் காட்டுகிறார் பாலு! ,குழலின் தூண்டலில் இரண்டாம் முறை இசைக்கையில் சங்கதிகள் மேலும் கூடி இன்பத்தையும் கூட்டுகிறது. ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ என்ற வியப்பில் இருந்து, ‘மேகத்தில் ஆடும்….ஊர்வசி எந்தன்….போகத்தில் ஆட…இறங்கி வந்தாளோ’ என்ற மலைப்பில் நிறைவு பெறுகிறது. மேகத்தில் ஆடும் ஊர்வசியை அந்த உயரத்தில் நின்று பார்க்க வைக்கும் குரல் அது. தட்சிணாமூர்த்தி எனும் அற்புத இசை மேதையை, பாடலை வழங்கிய பாலு எனும் அன்புள்ளத்தை, இசைக் கலைஞர்களை என்ன பாராட்டினாலும் தகும்!

மும்பை நேரு அறிவியல் மையத்தில் தவறிக் கீழே விழுந்து இலேசாக மயக்கம் போல் உணர்வதாகச் சொன்ன மாத்திரத்தில் என் கன்னங்களில் இலேசாகத் தட்டித் தட்டி, தூங்கிடாதே…. தூங்கிடாதே… கண்ணைத் திறந்து பார்.. என்று எங்கள் மகன் துடித்த கணம் மறக்க முடியாதது. அடுத்த சில நிமிடங்களில் என்னை ஒருசேர எழுப்பி நானே நிற்க வைத்துக் கொண்டு இடது கையை வலது கரத்தால் தாங்கிப் பிடித்து, எனக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வைத்தது, அவனது அச்சத்தை முதலில் போக்குவதற்காகவே நிகழ்ந்தது. அவனது இளவயது உறக்கப் பொழுதுகள் பாடல்களால், கதைகளால் செழித்திருந்தது. இந்தப் பாடலாலும் அவனைத் தாலாட்டியதுண்டு அந்நாட்களில்! அவன் பெயர் நந்தா!

அன்பு கூடி விசாரிக்கும் உறவுகளும் நட்பும் சுற்றி நிறைந்திருக்க, என்பு கூடிவிடும் விரைவில் என்றே இசைத்திருக்கிறேன் நானும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்




வாணி ஜெயராம் அவர்கள் மறைந்த அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவு திரும்புகையில், ‘தூரிகை எரிகின்ற போது’ என்ற வரியைக் கண்ணீரோடு பாடத் தொடங்கினேன். ஊபர் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்த நண்பர், ஓர் இளைஞர். வாணியம்மா பாட்டு தானே சார் அது.. என்று கேட்டார். இரண்டு கிலோ மீட்டருக்குக் குறைந்த அந்தப் பயணத்தில் மேற்கொண்டு பத்துப் பாடல்களிலிருந்து வாணியின் சிறப்பு ஒலிக்குறிப்பை விளக்கும் இடங்கள் பாடிக் கொண்டு வந்தேன். தொடர்ந்த உரையாடலில், தாங்கள் கேட்க முடியாது இழந்த குரல் அது என்ற வருத்தம், சற்று கோபம் மேலோங்க ஒலித்தது அவரிடமிருந்து.

வாணி அவர்களைப் பற்றிய ஒரு தனிக் கட்டுரையை நண்பர் அழகிய சிங்கர், நவீன விருட்சம் மின்னிதழ் பக்கங்களில் உடனே வெளியிட்டிருந்தார், அண்மையில். ‘இன்னும் வாணியம்மா குரலிலிருந்து மீளவே முடியவில்லை, தோழர். அவர் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் கே வி ஜெயஸ்ரீ பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறார். வாணி ஜெயராம் நினைவில் ஆழ்ந்து இருக்கும் பல அன்பர்கள் வாட்ஸ் அப்பில் பதில் போட்டுள்ளனர்.

வாணி ஜெயராமின் குரல் வளம், அவரது கற்பனைத் திறம், இசை பொழியவென்றே அவருக்கு வாய்த்திருந்த அசாத்திய குரல் நாண்கள் இவற்றை அபாரமாகப் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் என்றென்றும் பேசத்தக்க திரைப்பாடல்களை வழங்கியுள்ளனர்.

https://youtu.be/sVzW9JGEc5s

எம் எஸ் வி இசையில் அந்த 7 நாட்கள் படத்தில் மலேசியா வாசுதேவனோடு இணைந்து வாணி ஜெயராம் இசைத்த, ‘எண்ணி இருந்தது ஈடேற…’ பாடலின் சரணங்கள் காற்றில் மிதக்க வைப்பவை. காதல் ரசம் ததும்பும் ரகசிய பரிபாஷைகள் பரிமாறும் குரலில் வாசுதேவனும், நாயகனை வசீகரிக்கும் துள்ளல் நாயகிக்கான பாவங்களை வெளிப்படுத்தும் குரலில் வாணியும் சேர்ந்து வழங்கிய அந்தப் பாடல் எண்பதுகளில் வானொலியில் ஒலித்தபடி இருக்கும். ‘புதிய ராகம் கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் நினச்சேன்…உன் குரலைக் கேட்டபிறகு தானே ராகம் கண்டு பிடிச்சேன்’ என்ற வரியில், அந்த கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் எதுகை நயத்தின் அழுத்தம் பொங்க மலேசியாவும், ‘முந்தா நேத்து சாயங்காலம் முல்லப் பூவத் தொடுத்தேன்’ என்ற சுவாரசியமான வரியைப் பிடிக்கும் வாணி, ‘உன் பாட்ட கேட்டுக் கெறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன்’ என்னும் வரியில், அவரின் குரலே கிறங்கடிக்கும்.

‘சாரல் மேகம் சரசம் பேசி மனச வந்து நனைக்கும்’ என்று வாணியின் குரலில் தொடங்கும் இரண்டாம் சரணம், மிகுந்த சிருங்காரம். ‘பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்’ என்ற இடத்தில் ஒரு மௌன சிரிப்பை அப்படி கொணர்ந்திருப்பார் வாணி. ‘நேரம் பார்த்து தேதி பார்த்து…’ என்று இணையும் மலேசியா வாசுதேவன், பாடல் முழுக்க காதல் பித்தேறிய மென்குரலில் அசத்தி இருப்பார். பாடல் நெடுக தாளக்கட்டு (தபலா பிரசாத் ஆக இருக்குமோ) அத்தனை சுகமாக ஒலிக்கும். அருமையான பாடல், கவிஞர் வைரமுத்துவின் ஆக்கம்.

தான் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது உள்ளத்திற்கு இதமானவை தான். ‘நீராட நேரம் நல்ல நேரம்’ பாடலை அவர் அத்தனை நேசித்திருக்கிறார். நடனக் காட்சிக்காக அவர் பாடிய பாடல் அது. தயங்கித் தயங்கி அதைக் கேட்கிறார் நேர் காணல் செய்பவர். ஆனால், வாணி விகல்பமில்லாமல் பதில் சொல்கிறார். அந்தப் பாடல் பல்லவியை அத்தனை உற்சாகமாக இசைக்கும் அவர், ‘இந்தப் பாட்டில் சரணம் இன்னும் சிறப்பாக இருக்கும்…’ என்று அதையும் அற்புதமாக இசைக்கிறார்.

எம் எஸ் வி அபாரமாக இசையமைத்த அந்தப் பாடலில் வாணியின் இசை ஞானம் அசாத்திய வகையில் வெளிப்படும். அவரது ராக ஆலாபனையும், சங்கதிகளும், சொற்களின் உச்சரிப்பும் அதற்கு முழு இடமளித்து ஒலிக்கும் இசைக்கருவிகளுமாக தமிழ்த் திரையில் வித்தியாசமான பாடல்களில் ஒன்றாக அமைந்தது கவிஞர் கண்ணதாசன் புனைவில் உருவான அந்தப் பாடல்.

தூரிகை எரிகின்ற போது …../எஸ் வி வேணுகோபாலன்

தூரிகை எரிகின்ற போது ….கட்டுரையை வாசித்துவிட்டு, அதில் தங்கள் மனத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று இடம் பெறவில்லையே என்று அஞ்சல் ஊழியர் இயக்கத்தின் தோழர் மோகனும், இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் கிருஷ்ணனும் மிகுந்த ஆதங்கத்தோடு கேட்ட பாடல், மதங்களைக் கடந்து ரசிகர்கள் உள்ளத்தில் இடம் பெற்ற ஒரு பக்திப் பாடல். அதுவும் எம் எஸ் வி இசையமைப்பில் விளைந்தது தான்.

‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் ரசிகரைக் கொண்டு குடியமர்த்தும் தன்மை மிக்கது. ஒட்டு மொத்தப் பாடலிலும் வாணி ஜெயராம் குரல், தேவாலய மணியின் ஓசை இன்பத்தின் இசை வடிவமாகவே ஒலிப்பதை உணர முடியும்.

பொதுவாக கோரஸ் இசைக்கு, தேவாலய இசைக் குழுவின் பாடகர்களை எம் எஸ் வி அழைத்துப் பாட வைப்பார் என்று சொல்வார்கள். இது தேவகுமாரன் பற்றிய பாடல். ஞான ஒளி உள்ளிட்ட படங்களில் செய்த பரிசோதனைகளுக்கும் அப்பாற்பட்டு இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக சிந்தித்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றும்.

தொகையறா அமைக்கும் சமயங்களில் பாடலின் ஒட்டுமொத்த எல்லைகளை அது தொட்டுக் காட்டிவிடும் வண்ணம் தான் அமைப்பார்கள். அதில் எம் எஸ் வி அம்சமாக மெட்டமைத்துவிடுபவர். புனித அந்தோணியார் படத்தின், ‘மண்ணுலகில் இன்று தேவன்’ பாடலுக்கான தொகையறாவிலேயே எந்த உச்ச இடம் தொடப் போகிறோம் சரணங்களில் என்பதை வாணி அப்போதே ராக சித்திரமாகத் தீட்டிவிடுவார்.

வாணி ஜெயராம், பல்லவியை எடுக்கும் இடம், முற்றிலும் பரவசமிக்க ஒரு பயணத்தின் பிறப்பிடமாகத் தொடங்கும். ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற வரியில் எத்தனை உற்சாகப் பிழிவு…’நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான்’ என்ற வரியில் எத்தனை கனிவு! ‘எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே…’ என்ற வரியில் அவர் வழங்கும் கருணையின் நீட்சி, ‘ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வன் ஆகிறான்’ என்ற தணிப்பில் அவர் பரிமாறும் காட்சி…கண்ணீர் பெருக்க வல்லது. வரிகளைத் திரும்ப இசைக்கையில் சரளமாகப் பெருகும் சங்கதிகள் உள்ளத்தைக் கரைப்பவை.

‘மழலை மொழிகள் கேட்கக் கேட்க…’ என்ற முதல் சரணத்தை அவர் கொண்டாட்டமாக எடுக்கிறார். ‘மனது கொள்ளாதோ…’ என்ற இரண்டு சொற்களுக்கு எத்தனை மந்திரம் போடுகிறது அவரது குரல்…மனம் கொள்ளாத இன்ப ஊற்று அது. ‘மடியில் வந்து அமரும் போது’ என்பதில் அந்தப் ‘போது’ எத்தனை தீர்மானமான அழுத்தம்! ‘மயக்கம் கொள்ளாதோ…’ என்பது ஒரு குழந்தைமை கொண்டாடும் குதூகலம் அன்றி வேறென்ன… ‘பார்வை பட்டால் போதும்….’ என்ற வரியின் ஆவேசம், ‘நம் பாவம் யாவும் தீரும்’ என்பதில் தானே அதைத் தணிக்கவும் செய்கிறது. ‘கைகள் பட்டால் போதும்…’ என்பதில் உருளும் சொற்கள், ‘கவலை எல்லாம் தீரும்’ என்ற பிடிமானத்தில் நிறைவு தந்து, பல்லவியை நோக்கி நகர்கிறது. தபேலா என்னமாக அங்கே குரலோடு பேசிக் கொண்டே ஜதி போட்டுச் செல்கிறது.

இரண்டாம் சரணம் நோக்கிய திசையில் இசைக்கருவிகள் வாணியின் குரல் பாங்கிற்கான கதியிலேயே துள்ளாட்டம் போட்டுப் போகின்றன. ‘அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை’ என்ற வரியை வாணி இழைக்கிறார். ‘அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை’ என்கிற இடம் நம்பிக்கையாளர்களை இன்னும் பரவசப்படுத்தும் இடம். ‘கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்…’ என்ற நீட்சியில் வாணியின் குரலினிமை முன்னுதாரணங்கள் அற்று ஒலிப்பது. ‘குலம் தழைக்கக் குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்’ என்ற நிறைவு கொண்டாடிக் கேட்க வேண்டியது. அங்கிருந்து பல்லவிக்கு தேவகுமாரனை வரவேற்று அழைத்துச் செல்வதுபோலவே தாளக்கட்டு அத்தனை அமர்க்களமாக வாணியின் குரலை உள்வாங்கிக் கொண்டு போய் நிறைவடைய வைக்கிறது. தஞ்சைவாணன் எழுதிய பாடலிது.

உலக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்களுக்கு விடை தெரியாது தவிக்கும் பாமர மக்கள், இதயமற்ற உலகின் இதயமாக, ஆன்மா அற்ற உலகின் ஆன்மாகவாக, தங்களது ஏக்கப் பெருமூச்சாகப் பற்றிக் கொள்ளும் இடத்தில் மதத்தை அடையாளப்படுத்துகிறார் கார்ல் மார்க்ஸ்.

இலக்கியமும், இசையும், கலையும் உயிர் இன்பத்தை, உயிர்களின் தவிப்பை, உயிர்த் தேடலை, உயிராக மீண்டும் மனிதர்கள் முன் படைக்கின்றன. உயிர்ப்புள்ள கலைகள் மனிதர்களை அவர்தம் நெருக்கடிகளில் இருந்து சற்றே விலகி நின்று விடுவித்துக் கொள்ள ஓர் இளைப்பாறுதல் வழங்குகின்றன. இதில் இசை முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மறைந்துவிட்ட மனுஷியின் குரலை மறக்கவே முடியாது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணி ஜெயராம் பாடல்களை நோக்கிய தேடலில் இறங்கிக் களிப்புறுவது, அவரவர் குடும்ப முன்னோடிகளின் மடியில் மானசீகமாகக் கண்ணுறங்கத் துடிப்பது போலவே தோன்றுகிறது. இசையின் மாய மந்திர ஜாலம் அது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 83: பாடல் உண்டா கேட்டுச் சொல்லு – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 83: பாடல் உண்டா கேட்டுச் சொல்லு – எஸ் வி வேணுகோபாலன்




தோழர் நாறும்பூநாதன், “நீங்கள் ரசிப்பீர்கள்என்ற குறிப்போடு ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார் . கதையைச் சொல்லுமுன், கதாசிரியர் செந்தில் ஜெகன்நாதன் இந்த ஜனவரி 30 அன்று தமிழினி இணையதளத்தில் வெளியாகி உள்ள தனது கதையை யாருக்கு அர்ப்பணித்துள்ளார் என்பது இன்னும் சுவாரசியமானது: ” நாதஸ்வர கலாநிதி காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களுக்கு அகம் பணிந்து சமர்ப்பணம்“.

அனாகத நாதம் என்பது கதையின் பெயர். தன்னியல்பாக எழும் இசை இன்பம் என்பது பொருள் என்கின்றனர்சாமிநாதன் நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டு ஒரு நெரிசல் மிக்க பேருந்தில் ஏறிப் பயணம் செய்கிறான்அவனது தந்தை மிகப் பெரிய சங்கீதக்காரர். அவனும் மிகப் பெரிய குருவிடம் கற்றுக் கொண்டவன். அந்த நாதஸ்வரக் கருவி எப்படியாகப் பட்டது, செந்தில் ஜெகன்நாதன் வருணிப்பில் கேட்போம்:

“………அது சாமிநாதனின் அப்பாவுக்கு நாதஸ்வரத்தில் ஆர்வம் துளிர்த்தபோது அவனது தாத்தா நரசிங்கம்பேட்டை ரங்கநாதன் ஆசாரியிடம் செய்து வாங்கிவந்த நாதஸ்வரம். அப்பா உயிரோடு இருந்தவரை அதைத் தொடாத நாளில்லை. அந்த வாத்தியத்தின் ஒவ்வொரு துளைகளைச் சுற்றியும் படிந்திருக்கும் அப்பாவின் விரல் ரேகைகளுக்கு ராகங்கள்இதோ வந்தேன் ராஜாவேஎன்று பணிந்து வரும்….”

ஆனால், இப்போது சாமிநாதன் போய்க் கொண்டிருப்பது கச்சேரி செய்ய அல்ல….தனது உயிரினும் மேலான இசைக்கருவியை யாருக்கேனும் விற்று விட…. ஏனாம்அது தான் அனாகத நாதம் கதை. வாசகர்கள் அவசியம் படிக்க, இங்கே இணைப்பை இணைத்துள்ளேன்:

https://tamizhini.in/2023/01/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

சிறுகதை வெளியான அடுத்த நாளே கேள்விப்பட்டு உடனே வாசித்த போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. ஆனாலென்னவிட்டுவிட முடியுமா என்னதோழர் நாறும்பூநாதன் தொடர்பு எண்ணையும் சேர்த்தல்லவா அனுப்பி இருந்தார்செந்தில் ஜெகந்நாதன் அவர்களை அழைத்து வாழ்த்தவும் மிகவும் நெகிழ்ந்து போனார். திரைத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை

அவரிடம் உண்மையைச் சொன்னேன், எனக்கு இசை ஞானமோ, நுணுக்கங்கள் பற்றிய அறிவோ கிடையாது, வெறும் ரசிகன் என்று. அவரோ தானும் அப்படித் தான் என்று சொல்லிவிட்டு அப்படியல்ல என்பதை ஏற்கெனவே கதையில் மெய்ப்பித்தது மட்டுமின்றி உரையாடலில் அருமையான செய்திகள் பகிர்ந்து கொண்டதிலும் தன்னையறியாமல் வெளிப்படுத்தி விட்டார்

காருகுறிச்சி அவர்களுக்கு உங்கள் கதையை அர்ப்பணித்து இருப்பது சிறப்பானதுஎன்று நான் குறிப்பிடவும், பேச்சு, சிங்கார வேலனே பாடலை நோக்கி நகர்ந்தது. சுவாரசியமான விஷயம் சொன்னார், செந்தில் ஜெகன்நாதன்…. சிங்கார வேலனே பாடலைப் பதிவு செய்துவிட்டுப் பிறகு கேட்கையில் வேறு ஒரு மெல்லிய குரலும் கூடவே பாடிக்கொண்டிருந்தது கேட்டதாம், உற்று கவனித்துக் கேட்டபோது தான், அது வேறு யாருமல்ல, வெங்கடேசன் அவர்களது குரல் என்று புரிந்ததாம்யாரவர்புகழ்பெற்ற நாச்சியார்கோயில் ராகவ பிள்ளையின் சீடர் பெரும்பள்ளம் வெங்கடேசன், பிரபல தவில் வித்வான், காருகுறிச்சி அவர்களுக்கு அணுக்கமாக வாசித்துப் புகழ் பெற்றிருந்தவர்.  (கீழப்பெரும்பள்ளம் என்று இன்னும் துல்லியமாகக்  குறிப்பிட்டார் செந்தில் ஜெகன்நாதன்).  வெங்கடேசன் தவில் வாசிக்கையில் அதற்கான பதங்களை உச்சரித்தபடியே தான் வாசிப்பாராம். சிரமத்தோடு அதைப் பாடல் பதிவில் இருந்து அழித்தனர் என்றார் ஜெகன்நாதன்

இப்பேற்பட்ட முக்கிய கலைஞரைப் பற்றி தி இந்து நாளேட்டின் கோலப்பன் சார் நிச்சயம் எழுதி இருப்பாரே….. என்று கூகிள் சர்ச் போட்ட அடுத்த நொடி, அற்புதமான கட்டுரை கோலப்பன் அவர்கள் எழுத்தில் காணக் கிடைத்தது. ‘பாடல் பெறாத கலைஞர்கள்என்ற தலைப்பில் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் சிலரைப் பற்றிய அந்தப் பதிவில் வெங்கடேசன் அவர்களது அபார மேதைமை பற்றிய வாக்கியங்கள் கடைசி பத்தியில் இடம் பெற்றுள்ளது. அதைவிடவும் பேரானந்தம், பெரும்பள்ளம் வெங்கடேசன் அவர்களது புகைப்படம் கட்டுரையின் முகப்பில் இருப்பது….ஆஹாவேறென்ன வேண்டும்!  

https://www.thehindu.com/news/national/tamil-nadu/unsung-artistes-behind-classic-musicals/article7938848.ece

நாத கலாநிதி காருகுறிச்சி அவர்களது நூற்றாண்டு கொண்டாட்ட நேரத்தில் தவில் கலைஞர் பொன் சண்முகம் அவர்கள் தாள வரிசைகள் வாய் மூலமாக விவரித்து விளக்கும் அருமையான காணொளி ஒன்றும் தேடலில் சிக்கியது.

அதில் தனது குருநாதர் என்று அவர் மிகுந்த மதிப்போடும் பணிவோடும் குறிப்பிடுவது பெரும்பள்ளம் வெங்கடேசன் அவர்களைத் தான்இந்தத் தாள கணிதத்தில் செம்மையான ஆசான்கள் என்று வெங்கடேசன் அவர்களையும் சிக்கில் குஞ்சு சிங்காரம் பிள்ளையையும் குறிப்பிட்டே சண்முகம் தனது பாடத்தை விளக்குகிறார்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்என்கிற இலக்கிய வாசகத்தை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த் துறை தலைவராக இருந்த குரு சுப்பிரமணியன் அய்யா அவர்கள் அடிக்கடி சொல்லிக் கேட்டதுண்டு. குருசிஷ்ய பாரம்பரியம் என்பது கலைகளின் ஆணிவேர். அதே போல் சக கலைஞர்களைப் பாராட்டுதல், அடுத்தவர் திறமை மெச்சுதல் என்பது இன்னும் மேலான பண்பாக்கம் ஆகும். உயிரியற்கை அந்தப் பண்பு. பறவைகளைப் பார்க்கும் தொறும் இந்த உணர்வு மேலிடுகிறது

ளமைக் காலத்தில் காஞ்சிபுர வாசத்தில் பாட்டி வீடு ஒரு ரயில்வே சந்திப்பு. எங்கிருந்தும் எங்கே செல்வோரும் என் பாட்டி பத்தாணியைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு அவள் அன்பு மணக்க வழங்கும் தண்ணீர் கலந்த பாலில் கலந்த கட்டங்கடு காப்பி குடிக்காமல் செல்வதில்லை. பாட்டியின் வீட்டுக்கு விடாமல் வருகை தருவோரும் உண்டு. எப்போதேனும் அரிதாக வந்தாலும், ஒருபோதும் மறக்க முடியாத உறவினர்கள் சிலரும் உண்டு.   திரைப்பாடல்களில் கூடத் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்கள் உண்டு. சில பாடல்கள் அரிதாகவே வந்து ஒலிக்கும், ஆனாலும், அடுத்த சில தினங்களுக்கு உள்ளூர எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

அப்படியான இரண்டு பாடல்களுக்கும் பறவைகளுக்கும் கூடத் தற்செயல் ஒற்றுமை இருக்கிறது. ஒன்று மெல்லிசை மன்னர் இசையமைத்தது. மற்றது இசை ஞானியின் இசையில். ஒன்று கண்ணதாசனின் கை வண்ணம். அடுத்தது அவரது உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தின் புனைவு. ஒன்று காதலில் காத்திருத்தலின் அவஸ்தை. அடுத்தது, இளமைக் கனவுகளின் சிறகடிப்பு. ஒன்று ஏக்கத்தின் விம்மல். மற்றது ஆசைகளின் அறைகூவல். இரண்டு பாடல்களுமேகுருநாதர்களை மட்டுமின்றி சக கலைஞர்களையும் கொண்டாடும் எஸ் பி பாலசுப்பிரமணியன் இசைத்ததுஇரண்டுமே இளமைத் துடிப்பில் ரசிகர்களை வசீகரித்த கமல் ஹாசன் நடித்த படங்களில் இடம் பெற்றது.

நினைத்தாலே இனிக்கும் படமே, இன்னிசை மழை என்ற அறிவிப்போடு தான் வெளியானது. மிக அதிகம் பேசப்படும் பாடல்கள் பல உண்டு என்றாலும், ஆங்கிலத்தில் ஆரம்பித்துத் தமிழுக்கு மாறும் நெஞ்சுக்கு மிகவும் இதமான இந்தப் பாடலின் இசையே பறவைகளின் இதயத் துடிப்பாக அமைத்திருப்பார் எம் எஸ் விஸ்வநாதன். கிடார் மீட்டல் உள்ளத்தை இன்னும் அருகே வந்து வருடிச் செல்லும். தாளக் கருவிகள் உள்ளத்தின் படபடப்பை பேசிக்கொண்டே இருக்கும். காதல் ஏக்கத்தில் இதயத்தின் கரைதலை விசில் ஒலியால் கடத்த வைத்திருப்பார் மெல்லிசை மன்னர். இந்த தாபத்தைப் பறவைகளை முன்னிலைப்படுத்திக் காட்சிப்படுத்தி இருப்பார்கள் திரைப்படத்தில்

பாடலை கிடார் தான் தொடங்கி வைக்கிறது…… அன்பின் பதட்டத்தைச் சிதற விடுகிறது திசையெங்கும்…..வாட் வெய்ட்டிங்வாட் வெய்ட்டிங் (எனக்கென்னவோ வாட்டர் வெய்ட்டிங் என்று தான் தோன்றிக் கொண்டிருக்கிறது) என்று தொடங்கும் எஸ் பி பி, உரையாடலை ஓர் இனிய பறவையோடு நிகழ்த்துகிறார்…. லவ்லி பெர்ட் டெல் மை டார்லிங் என்று!   யூ ஆர் வாச்சிங்யுர் வாச்சிங்என்கிற சுய கழிவிரக்க வரியிலிருந்து, ‘லவ் இஸ் பட் கேம் ஆஃப் வெய்ட்டிங்’ அடுத்த கட்டத்திற்குச் செல்லுமிடம் உள்ளத்தைத் தொடும்

அங்கே பாடல் தமிழுக்கு மாறுகிறது…. காதலுக்குத் தான் மொழியில்லையே….’காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை….’ அந்தக்காதல்’ என்கிற சொல்லில் தான் எத்தனை உள்ளுணர்வுகளை இழைத்து விடுகிறார் பாலுஅந்த நோதல் சற்று நீட்டித்து ஒலிக்கிறது 

பொருத்தமாக. ‘பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்பச்சைக் கிளி சாட்சி சொல்லு…’ அந்த சாட்சி சொல்லு என்கிற இடத்தில் காதல் புகாரை இன்னும் இலக்கியப் படுத்துகிறார் கண்ணதாசன்.  ‘நாற்று நட்டுக் காத்திருந்தா நெல்லு கூட விளைஞ்சிருக்கும்என்பதில் ஓராயிரம் செய்திகள் இருக்கிறது. விவசாயி நாற்று நட்டு விட்டுச் சும்மா காத்திருப்பதில்லைஅந்த நாற்று காத்திருக்கிறது அடுத்தடுத்த கவனிப்புக்கு, அப்புறம் நெல்லாகிறது! காதல் பயிரின் தவிப்பைத் தான் கவிஞர் கொண்டு வந்து சேர்க்கிறார்…. ‘காக்க வச்சுக் கன்னி வந்தா காதல் உண்டா கேட்டுச் சொல்லுஎன்பதில் மற்றும் ஓராயிரம் செய்திகள்!  ‘கன்னி வந்தாஎன்கிற சொற்களை பாலு என்னமாக இழைக்கிறார்…. ‘கேட்டுச் சொல்லுஎன்கிற இடத்தில் நோதலின்  ஆழப் பதிவு!

அங்கிருந்து பறவைகளின் படபடப்பாக, கொஞ்சுதலாக, சீண்டலாக, ஊடலின் வரைபடமாக, மீண்டும் சேர்தலின் இன்பமாக கிடார் ஒலித்துக் கொண்டே போகிறது. இதம் பதமாக ஒலிக்கிறது மென் தாளம்பல்லவியை விசில் எடுத்துக் கொள்கிறது….பாலுவிடம் பல்லவி மீண்டும் வந்தடைய பாடல் இசையின்பமாகப் பின்னர் நிறைவு பெறுகிறது.   ஊடே உள்ளத்தை வருடும் பெண் குரலில் ஹம்மிங் பாடல் இன்பத்தை மேலும் கூட்டுகிறது. ஒரு சில்லென்ற காற்று, நீர்ப்பரப்பில் பட்டுத் தெறிக்கக் காற்றில் பறவைகளோடு நாமும் சேர்ந்தே சிறகடித்துப் பறக்கும் உணர்வைக் கிளர்த்தும் பாடல்.

ஹேய்….ஹேய்ஓராயிரம்…”  பாடல், மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல்களில் ஒன்று. இசைக் கருவிகளின் காதல் சந்தங்கள் புல்லாங்குழல் வழியேயும், வயலின்களின் வில்லில் இருந்தும், கிடாரின் மொழியிலும் எப்படி தித்திக்கும் என்பதை ராஜா அசாதாரண கலவையாகக் கலந்திருப்பார் இந்தப் பாடலில்

ஒற்றைக் குயில் கூவுகிறதுஅதன் பேடை அதை அப்படியே வாங்கித் திரும்பக் கூவுகிறது….குகுகுக்குக் குக்கூ குக்கு குக்கூ என்று தான் தொடங்குகிறது பறவையின் ஒலிக்குறிப்பாகப் பாடல்…. ஒரு குழந்தை புதிதாகக் கற்றுக் கொண்டதைத் திரும்பத் திரும்ப உச்சரித்து உச்சரித்து ரசித்து மகிழ்ந்து கொள்வது போலவே, காதல் இளம் ஜோடிகள் தங்களுக்குள் பழகிக் கொள்ளும் சொல்லின்பங்களைத் திரும்பத் திரும்ப பரஸ்பரம் பரிமாறிக் குதூகலித்துக் களிப்பார்கள். பாடலின் சந்தத்திற்காக ராஜா, ‘ஹேய் ஹேய்என்ற பதத்தை அத்தனை கற்பனையோடு வந்தடைந்திருக்கிறார். அதைவிட நெருக்கமான விளித்தல் என்ன வாய்க்கும்!

பல்லவியும் சரணங்களும் ஊடாக ஒலிக்கும் இசையாக மிகக் குறைந்த கால அளவிலேயே நிறைவு பெற்று விட்டாலும் பாடலின் இதமான தாளக்கட்டும், பாலுவின் ரசனைக்குரிய குரலும், அதில் தெறிக்கும் கற்பனை நிறைந்த பாவங்களும் உள்ளத்தில் தோய்ந்து விடுகின்றன.

ஹேய் ஹேய்..ஓராயிரம்ஹேய் ஹேய் ஓராயிரம்என்ற பல்லவியின் முதல் வரியிலேயே பாடல் முழுவதும் பரவும் பதமான தாளக்கட்டு குறித்த சித்திரம் தீட்டி விடுகிறார் ராஜா. மலர்களே மலர்ந்ததுஉலகிலே சுகமே இது தானோஎன்கிற வரிகளின் சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சங்கதிகளும், நுட்பங்களும் நீட்சியும்….சொக்க வைக்கும் மயக்க ரசக் கோப்பை ஏந்தி ஒலிக்கிறது பாலுவின் குரல். பல்லவியிலிருந்து மீண்டும் ஹேய் என்ற அழைப்புக்கு நழுவும் ஒவ்வொரு முறையும் மேலும் கிற்ங்கடிக்கிறது அவரது ரகசிய ஒலிக்குறிப்பு மிக்க குரல்.

முதல் பல்லவியில் வயலின்கள் காதல் தீயை வளர்க்கின்றன….குழல் மேலும் காற்று ஊதி அந்தத் தீயை ஜொலிக்க வைக்கிறது….கிடார் அதில் கன்னங்களை மின்ன வைக்கிறது.  ‘கீழ் வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண…’ ஆஹா, சரணத்தின் முதல் வரியில் தான் எத்தனை கொண்டாட்ட உணர்வு! ‘விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமேஎன்பதை இழைத்தெடுக்கிறார் பாலு. ‘எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்…’ என்கிற வரியின் ஒவ்வொரு சொல்லும் எத்தனை துள்ளாட்டமாக அந்தத் தாள லயத்தில் வந்து மிதக்கின்றன….’புதுமையே இயற்கையை ரசிக்காதோ …’ என்கிற அடியில் தான் எத்தனை எத்தனை ஓட்டமும் நடையாய்க் காதலைச் சொல்கிறார்ரசிக்காதோ என்ற ஒற்றைச் சொல்லில் மட்டுமே த்தனை ரசங்களைப் பொழிந்து விடுகிறது அவரது குரல்!

இரத்தினச் சுருக்கமான இசையின் வழியாக இரண்டாம் சரணம் சட்டென்று தொடங்கிவிடுகிறது!  ‘நீ பார்த்ததும் நான் வந்ததும்…’ என்று இழைத்து, ‘தேனானதே வாழ்வில்என்று கொண்டு சேர்க்கும் இடத்தில் காதலின் கொடி பறக்கிறது. ‘இளம் ஜோடியின் விழி ஜாடையில் பேராசைகள் ஒரு கோடியேஎன்பதில் பாடலின் கிண்ணத்தில் காதல் ரசம் ததும்பி வழிகிறது. ‘அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்…’ என்ற வரியும், ‘இளமையே இயற்கையை ரசிக்காதோஎன்கிற வரியும் முதல் சரணத்தைப் போலவே உருக்கி வார்க்கின்றன காதல் ரசத்தைமீண்டும்ஹேய் ஹேய்ஓராயிரம்‘.  பாடல் நிறைவடைந்த பின்னும் மிதந்து கொண்டிருக்கிறது காதல், ரசிகர்களைச் சுற்றிச் சுழன்றுஓராயிரம் என்ன..எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சுகமே என்று எழுதுகிறார் யூ டியூபில் கேட்டுக் கொண்டே இருக்கும் ரசிகர் ஒருவர்

இசை மனிதர்களை புதிய உரையாடல்களில் ஆழ்த்துகிறது. உள்ளூர நடக்கின்றன அந்தப் பேச்சு வார்த்தைகள். கண்களில் நீராகத் துளிர்க்கிறது ரசிகர்களின் பரவசம். சொற்களில் கரை புரண்டோடுகிறது சில நேரம். உன்னத உணர்வுகளைக் கிளர்த்தும் இசை தானும் உன்னதத்தை அடைகிறது. பாடு பொருள் பேசு பொருளாகிறது. சம நோக்கில் எல்லோரையும் நோக்கவைக்கும் இசை தான் உண்மையில் அருளாகிறது

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

இசை வாழ்க்கை 82: எங்கிருந்தோ ஓர் இசை வந்தது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 82: எங்கிருந்தோ ஓர் இசை வந்தது – எஸ் வி வேணுகோபாலன்




புத்தாண்டு கடந்து பொங்கல் விழாவும் நிறைவு பெற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள். செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்கக் கேட்டுக் கொண்ட வள்ளுவர் நாளும் வந்து போனது. இசையொன்றில் லயிக்கும் மனம், அதை வழியனுப்பி விட்டு அடுத்த இசைக்குக் காத்திருக்கிறது. இரவின் இசையில் நனைகிற உள்ளம், விடியலின் இசையில் விழித்துக் கொள்கிறது.

2017 இல் தமிழ் இந்துவில் வந்திருந்த கவிதையில் வெயில் பற்றிய குறிப்புகளில் இப்படி ஓரிடத்தில் வரும்:

வெயிலை இறக்கி வைத்து
மொண்டெடுத்துக் கொடுத்துவிட்டு
வெயிலைத் தலைக்கேற்றி
வெயில் கைப்பிடித்து நடக்கிறாள்
மோர் விற்பவள்

இதில் வெயிலுக்குப் பதிலாக இசை என்று எழுதி வாசித்தாலும் பொருத்தமாகவே தோன்றுகிறது. இசையின் கைப்பிடித்து நடப்பவர்களை அன்றாடம் பார்க்கிறோம். கடந்த மாத இறுதியில் சென்னையிலிருந்து ஏலகிரி மலை நோக்கிய கார் பயணத்தில், வாகன ஓட்டுநர் வாகான ஓட்டுநராக அமைந்ததை அண்மையில் எண்பதை நிறைவு செய்த என் மாமியார் கோமதி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். இசையின் கைப்பிடித்தே லோகநாதன் பயணத்தை வழி நடத்தினார். அவர் சுழலவிட்ட திரைப்பாடல்கள் வழி இசை ஒரு பக்கம் பரவிக்கொண்டிருக்க, அதைப் பற்றிப் படர்ந்த உரையாடலில் அவரோடு பகிர்ந்ததும் அவர் பகன்றதுமாக … ஆஹா… ..அதன் தாக்கமோ என்னவோ, மலையில் பின்னர் குழுமிய குடும்ப சங்கமத்தில் இசையாக எதிரொலித்தது!

குடை கொண்டு போகாத நம்பிக்கை நாளில் எதிர்பாராது பெய்கிற மழை சிலபோது நம் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசிக்கவும் வைத்துவிடும் அல்லவா…. அப்படியாக ஓர் உரை கேட்கச் சென்ற இடத்தில் இசை பொழியுமானால்…. இசையை அடுத்து இசையும் அதையடுத்து இசையும் பொழியுமானால்….

புரட்சியாளர்கள் உலக வாழ்க்கையை நுட்பமாக நேசிக்கத் தெரிந்தவர்கள், வெறுப்பவர்கள் அல்ல என்பதை அலெய்டா குவேரா மெய்ப்பித்தார் மீண்டும்!

கியூப புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவேராவுடைய செல்ல மகள் அண்மையில் இந்தியா வருகை தந்திருப்பதில், சென்னையில் ராஜா அண்ணாமலைமன்ற அரங்கில் ஜனவரி 18 மாலை அதிர அதிர அசர அசர அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் இணையர் தோழர் ராஜியோடு பங்கேற்ற அனுபவம் பரவசமானது. ஏனெனில், தனது உரையின் நிறைவில் அபாரமாக ஒரு ஸ்பானிஷ் கீதத்தை இசைத்தார் அலெய்டா குவேரா. அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தில் தேடிப்போனால், உலக நாடுகள் பலவற்றில் எங்கே சென்றாலும் இசைப்பாடல் பாடாது நிறைவு செய்வதில்லை அவரது உரையை என்று கண்டறிய முடிந்தது.

குறிப்பாக, நிகழ்வின் தொடக்கத்தில் உமையாள்புரம் சிவராமன் அவர்கள், இந்திய – கியூப நட்புறவு வலுக்க வேண்டும் என்று தொண்ணூறுகளில் தான் வாசித்தது போலவே இப்போதும் இசைப்பதாக மலர்ச்சியோடு தெரிவித்து வாசித்த மிருதங்க இசையைத் தனது கண்களால் பருகினார்

அலெய்டா குவேரா எனில், தொடர்ந்து மேடையை அதிர வைத்த பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறை இசையைத் தமது உடல் அதிர்வுகள் மூலம் உள்வாங்கி நிரப்பிக் கொண்டார். அவர் ஒரு மருத்துவர், அதிலும் குழந்தைகள் நல மருத்துவர் எனும்போது அவரது இசை நாட்டம் இன்னும் ஈர்த்தது.

உயிர் காக்கும் மருந்துகளை கியூபாவிற்கு அமெரிக்க அரசு தனது நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகளவிலும் யாரும் அனுப்ப விதிக்கும் தடைகளைக் குறிப்பிடும் அலெய்டா, தனது மருத்துவ மனையில் முக்கியமான மருந்து கிடைக்காததால் மரித்துப் போன குழந்தையின் துயர முடிவைப் பேசும்போது ஏற்படும் ஏகாதிபத்திய கசப்பும், எதிர்ப்பு உணர்வும் விவரிக்க முடியாதது. அவரது உணர்வுகளும், உரையும் மட்டுமல்ல, பாடலும் எழுச்சிகரமாகவே இருந்தது. மொழியைக் கடந்து சிலிர்க்க வைத்தது. இசை வாழ்க்கை புரட்சிக்காரர்களது அடையாளம்! எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது…..என்று வருணிக்கலாமா இதை!

கடந்த சில வாரங்களாகவே எங்கள் தெரு நண்பர் கிருஷ்ணன் நினைவுபடுத்தியதில் இருந்தே உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் இந்த நேரத்தில் ஏனோ இன்னும் உரத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளத்தில்.

அவன் தான் மனிதன் திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே அம்சமாக இசை தொடுத்திருப்பார் மெல்லிசை மன்னர். பாடல்கள் எல்லாம் கண்ணதாசன்! ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை உண்டென்றாலும், பாடியவரின் குரலுக்காகவும், அந்த இசையின் வசப்படுத்தும் தன்மைக்காகவும், பாடலின் நுட்பமான பதங்களுக்காகவும் உள்ளோடிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் மீது ஆர்வம் கூடுதல்!

உள்ளபடியே, வாணி ஜெயராம் குரல் எங்கிருந்தோ தான் தமிழ்த் திரை இசைக்கு வந்தது! அந்தத் தேவதையின் குரலைத் தான் இந்தப் பாடல் இன்னும் விரும்பிக் கேட்க வைப்பது! எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது தொடக்கமுதல் நிறைவு பெறும்வரை அகலவிடாது நின்று கேட்க வைக்கிற இசையோடு கலந்து பொழிவது.

பாடல் ஒரு ஹம்மிங் ஒலியோடு தொடங்குகிறது….மெதுவாகப் பல்லவியின் முதல் வரியை தாள இசைக்கருவிகள் இன்றி இசைக்கிறார் வாணி ஜெயராம், ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது… அது எந்தத் தேவதையின் குரலோ…’ என்று! உடனே, டிரம் செட் சேர்ந்து விடுகிறது, அந்த இடத்தில் வயலின்கள் காத்திருக்க, பல்லவியை மீண்டும் இசைக்கிறார்… பிறகு ‘எங்கள் தீபங்களில் ஒளி வந்தது… அது எந்தக் கைகள் தந்த ஒளியோ’ என்ற அடியின் அழுத்தமான உச்சரிப்பு சொற்களில் வெளிச்சம் மின்னவைக்கிறது!

அருவியின் பொழிவாக அந்தப் பல்லவி இருக்க, அதிலிருந்து பெருகியோடும் நதியாக சரணங்களை அமைத்திருப்பாரோ எம்எஸ்வி என்று தோன்றும். அதனால் தான், பாறையில் தெறிக்கும் நீரலைகளும், கரைகளில் துடிக்கும் சாரல்களுமாக சரணங்களின் பின்பாதி ஒலிக்கிறது.

‘தாழங் குடைகள் தழுவும் கொடிகள்’ என்ற முதல் சரணத்தின் வரி, மிக அரிதான திரைப்பாடல் வரி. அந்தத் தொடக்கத்தை மிக நளினமாக இசைத்திருப்பார் வாணி, அதன்பின், தாமரைப் பூக்களின் கூட்டம் என்ற வரியில் ஒரு சிலிர்ப்பு வைத்திருப்பார். ‘மாலை மணிகள் மந்திரக்கனிகள் மழலை என்றொரு தோட்டம்’ என்கிற இடத்தில் ஆற்றின் போக்கு சீரான தாளகதியில் இருக்கிறது. ‘மாளிகையில் ஒரு மதி வந்தது…அது எந்த வானத்து மதியோ’ என்கிற இடத்தில் பாறையில் தெறித்துப் பூத்துச் சிரித்துப் புரண்டு போகிறது ஆறு. ‘மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ’ என்பதை அபார ஒத்திசைவில் தணித்து இறக்குகிறார் வாணி. அதிலும் அந்த மாய….மாக என்று சொல்லைப் பிரித்து ஒலிக்கும் இடத்தில் இசையின் சுவாரசியம் எங்கோ கொண்டு சேர்க்கிறது.

இந்த ஆற்றுப் பயணத்தில் தபேலாவின் தாளக்கட்டு என்னமாக லயித்துக் கேட்கவைக்கிறது. மறைந்த தபேலா கலைஞர் பிரசாத் அவர்களை நினைத்துக் கண்கள் பனிக்கின்றன.

இரண்டாம் சரணத்தில் இலக்கிய வாசனை இன்னும் மணக்கிறது. ‘கதிரொளி வீசும் கலசம் ஏந்தி கண்ணன் வருகின்ற கனவு’ என்பது மற்றுமோர் அரிய திரைப்பாடல் வரி. ‘கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்’ என்கிற இடத்தில் ஓர் இதமும், ‘கண்கள் தூங்காத இரவு’ என்பதில் ஒரு பதமுமாக, அதுவும் அந்தத் ‘தூங்கா…..த’ என்ற சொல்லில் உறக்கமற்ற காலத்தின் நீட்சியும் வாணி அருமையாகக் கொண்டு வந்திருப்பார். இரண்டாம் சரணத்தின் ஆகப் புகழ் பெற்ற வரிகள், ‘கங்கையிலே புதுப்புனல் வந்தது…அது எந்த மேகம் தந்த புனலோ’ என்பது. எதிர்ப்படும் நீர்த்தாவரங்களை எல்லாம் அரவணைத்துப் பொங்கிப் பெருகிப் போகும் காட்டாறு, ‘மங்கையிடம் ஒரு கனல் வந்தது..அது எந்த மன்னன் தந்த அனலோ’ என்று சுழன்று சுழன்று சுழித்துக் கொண்டு பல்லவியைப் போய் அடையும் இடம் அபாரம்.

பாறையில் தெறிக்கும்போதும், கரையில் சிரிக்கும்போதும் தபேலாவைப் பயன்படுத்திய மெல்லிசை மன்னர், பல்லவி அருவிக்கு டிரம் செட் பயன்படுத்திக் கொள்ளும் இந்தத் தாளக் கலவை வியக்கவைக்கும் மேதைமை. சரணங்கள் தொடங்குமுன்னான இடைவெளியில் புல்லாங்குழலும் தபேலாவும் பேசிக்கொள்ளும் உரையாடல் பாடலை இன்னும் நெருங்கி ரசிக்க வைக்கிறது. பூஞ்சோலையில் உலவும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இசை வாழ்க்கையில் எப்போதும் இன்பியல் மட்டுமல்ல துன்பியல் பாடல்களும் ஒலிக்கவே செய்கின்றன. அண்மையில் பெருந்துயரில் ஆழ வைத்தது நெருக்கமான ஒரு தோழரின் மறைவு. இசை கொண்டாடி அவர். ஆவேசமிக்க போராளியின் இசை வாழ்க்கை அது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளராகப் பரவலாக அறியப்பட்ட அ ரெங்கராஜன், மேடைகளில் அதிரவைக்கும் உணர்ச்சிகர உரைகள் நிகழ்த்தியவர். அவரது மென் பக்கங்களில் இசையும் இலக்கியமும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இசை வாழ்க்கை கட்டுரை ஒன்றிற்கு அவரது பதில் இப்படியாக இருந்தது: “You are pushing me into astonishment almost daily, how my lovable Venu is able to pour his thoughts like a waterfalls. Apart from the flow, the extraordinary memory you possess makes me wonder again and again”. அருவி தான் பொழிகிறது அவரது சொல்லாடலில் கூட! மகள் நித்யா இசைக்கலைஞர் சத்யன் மகாலிங்கத்தை நேசிப்பது அறிந்ததும், சாதி மறுப்பு காதல் திருமணம் உறவினர்களையும் அரவணைத்து முன்னின்று நடத்திய அவர், சத்யனின் இசைப் பயணத்தில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியவர்.

உழைப்பாளி மக்களை நேசிக்கும் யாருக்கும் இசையோடான உறவு முக்கியமானதாகிறது. அவரது உரைகளில் பாடலின் வரிகள், கவிதை வரிகள் பளீர் என்று தெறிப்பதைக் கேட்டிருக்கிறோம். எம் பி சீனிவாசன் மாணவி இசை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த ரெங்கராஜன், தனது காதல் இணையர் பரிமளாவுக்கு இசையார்வம் இருப்பதைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தவர். வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) சேர்ந்திசை பாடகர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் பரிமளா.

1997 அக்டோபர் 5 அன்று மகாகவி பாரதி இல்லத்தில் டி கே பட்டம்மாள், விடுதலைப் போராட்ட வீராங்கனை பாப்பா உமாநாத் ஆகியோர் முன்னிலையில் பீட் சேர்ந்திசைக் குழுவின் வசந்தவல்லி பயிற்சியில் 50 குழந்தைகள் பாரதியாகவே தோற்றமளித்து சேர்ந்திசை பொழிந்தது மறக்க முடியாத நிகழ்வு. மெய்சிலிர்க்க அமர்ந்து கேட்டிருந்தோரில் அவரும் ஒருவர். அந்த அரிய நிகழ்வை பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழுக்காகக் கட்டுரையாக்கம் செய்து அவரிடம் தான் முதலில் காட்டினேன். பத்திரிகையில் வந்தபோது அத்தனை நெகிழ்ச்சியுற்றார் அவர்.

மகாகவியின் கவிதை ஒன்று, கல்லூரி நாட்களில் மிகவும் ஈர்த்தது, கண்ணன் என் சேவகன். ‘கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்…வாய் முணுத்தல் கண்டறியேன்’ என்பது அதன் மகத்தான வரிகளில் ஒன்று. பல்லாயிரக் கணக்கான ஊழியர்களது சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக 19 ஆண்டுகள் இயங்கிய அன்புத் தோழன் ரெங்கராஜன், ஒரு போதும் வாய் முணுமுணுத்தது கேட்டறியேன். ‘பெற்று வரும் நம்மையெல்லாம் பேசி முடியாது…. ‘ என்ற வரி சொல்வது போலவே, சமூக மாற்றத்திற்கான தாகத்தோடு அவர் ஆற்றி முடித்த பணிகள் பேசி முடியாது.

கண்ணனைப் பாட மகாகவி எழுதிய கவிதையை, திரைப்பாடலில் ரங்கனைப் பாடுவதாக அமைத்திருந்தார்கள். ‘நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய்…..என்று சீர்காழி கோவிந்தராஜன் அந்தப் பாடலின் வேகத்தைக் கூட்டி மேலே நிறுத்திச் சட்டென்று குரல் தாழ்த்தி, பார்வையிலே சேவகனாய்…..என்று விவரிக்கையில் பெருகும் கண்ணீர், செருக்கற்ற ஞானமும், தேர்ச்சி மிக்க வாசிப்பும், சளைக்காத உழைப்பும் மிக்கவராக இருந்தும், பார்வையிலே தோழனாய் மிளிர்ந்தவர் எனும்போதும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

அதுவும் சீர்காழி அவர்கள், ரங்கா என்று சொல்லி இருக்க மாட்டார், ரெங்கா ரெங்கா என்று தான் குரலெடுத்து முழக்கி முடித்திருப்பார்….. இந்த வரிகளை எழுதும் இந்த நொடியிலும், அந்த ரெங்கா எனும் சொல், ரெங்கராஜனின் நினைவில் கண்களில் நீர் முட்ட வைத்துக் கலங்க வைக்கிறது. எங்கிருந்தோ ராஜபாளையத்தில் இருந்து தான் வந்தவர் ரெங்கராஜன். நடுத்தர வர்க்கம் எனும் இடை சாதி தான் அவரும். ‘இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று தான் அவருக்குப் புகழஞ்சலி செலுத்த வைக்கிறது இந்தப் பாடல்.

அலெய்டா குவேராவின் வருகை ஆனந்த இசைக் கண்ணீர். ரெங்கராஜன் மறைவு துயரத்தின் இசைக் கண்ணீர். புரட்சி என்பது அன்பின் தரிசனம் அன்றி வேறென்ன! எல்லோருக்குமான உலகத்தைத் தான் புரட்சிக்காரர்கள் சமைக்கத் துடிக்கின்றனர். பாகுபாடுகள் – வேறுபாடுகள் அற்ற அன்பின் பெருவாழ்க்கை தான் புரட்சியின் வேட்கை. அன்பின் குரலாக இசை இருக்கிறது. இசையின் பகிர்வில் அன்பு மிதக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்




குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள் முடங்கிவிடாதிருக்க வாரம் தவறாமல் இணைய வழியில் சிறப்பான நிகழ்ச்சிகள் தொடங்கியது இப்போதும் தொடர்கிறது. டிசம்பர் 18 ஞாயிறு மாலை நிகழ்ச்சியில், திரைப்படப் பாடல்களை முன் வைத்து உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு அந்த நாளில் திருச்சியில் இருக்க வேண்டிய அலுவல் அமைந்துவிட்டது. அதனால் திருச்சியில் எந்த இடத்தில் அமர்ந்து சிக்கல் இராது இசைப்பாடல்கள் பற்றிப் பேசுவது என்று யோசிக்கவே தேவையின்றி பளிச்சென்று நினைவுக்கு வந்தார் நியூரோ மருத்துவர் – தமிழ் ஆர்வலர் – திருக்குறள் கொண்டாடி மருத்துவர் சுப திருப்பதி! மதுரை பல்கலை மேனாள் துணை வேந்தர் வ சுப மாணிக்கனார் அவர்களுடைய சகோதரர் பேரன் இவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தினமணிக் கதிரில் வந்த இவரது மனசாடுதல் என்ற சிறுகதை வாசித்துப் பாராட்டிப் பலரோடு பகிர்ந்தபோது, மருத்துவர் சுப்பிரமணியன் மூலம் இவரது அறிமுகம் வாய்த்தது. விஷயத்தைச் சொன்னதும், காத்திருப்பேன், அவசியம் எங்கள் இல்லத்திற்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

கடந்த ஞாயிறு அவரது இல்லத்தில் நுழையும்போதே, அவருடைய தந்தையர் வெளியே வந்து, நீங்கள் இன்னார் தானே, அனுமானத்தில் கேட்டேன் என்று வரவேற்று அமர வைத்தார். ‘இரண்டு ஆண்டுகளுக்குமுன் மருதகாசி நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை தமிழ் இந்து நாளேட்டில் எழுதி இருந்தீர்கள், உங்கள் எண் கேட்டு வாங்கி அழைத்துப் பேசினேன், நினைவு இருக்கிறதா?’ என்று அசத்தினார். அடுத்தடுத்து அவரது கேள்விகளும், உரையாடல்களும் திரைக்கவிஞர்கள் பற்றியதும், அவரவர் முத்திரைப் பாடல்கள் பற்றியதுமாக அமைந்து அதிரவைத்தது. பெரியவரின் அபார நினைவாற்றல், இசையார்வம் குதூகலிக்க வைத்தது. அவரது அனுமதியோடு பின்னர் முதல் தளத்தில் மருத்துவர் ஏற்பாடு செய்திருந்த அறையில் கணினி முன்பு அமர்ந்து இணைய நிகழ்ச்சியில் இணைந்த அடுத்த ஒரு மணி நேரம் அருமையாக அமைந்தது.

கதை சொல்லும் பாடல்களும், பாடல்கள் சொல்லும் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன திரைப்படங்களில்! 35 நிமிட உரைக்குப் பின் சுருக்கமாகப் பேசிய அன்பர்கள் பலரும் அவரவர் தேர்வுப் பாடல்கள் குறிப்பிட்டுச் சிறப்பாகத் தங்கள் கருத்துகள் பகிர்ந்தனர். வருகை தந்தோருக்கு மனநிறைவு தந்த நிகழ்ச்சி அது.

திரைப்பாடல்களில் படத்தின் கதையைச் சொல்லும் வழக்கம், கட்டியக்கார மரபிலும் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். ‘லவ குசா படத்தின் ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே, உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே’ என்ற பாடல் இளமைக் காலத்தில் மிகவும் ஈர்த்த ஒன்று. ஒட்டுமொத்த இராமாயணத்தை எப்படி ஓர் இசைப்பாடல் சொல்லிவிட முடியும் என்று பாடிக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. ‘மந்தரையின் போதனையால் மனம் மாறி கைகேயி…என்று இழுக்கும் இடத்தில் மனம் மிகவும் வேதனைப்படும். தங்கையின் போதனையில் தசகண்ட ராவணன் ஜானகி தேவியைச் சிறையெடுத்தான்…என்று இடைவெளி விட்டு, ‘நெஞ்சம் கனலாகிக் கண்கள் குளமாகித் தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்…இராமன் தேடிச் சென்றான்’ என்ற இடத்தில் அழுத நினைவு கூட உண்டு. அந்தத் துயரமெல்லாம் எப்போது பஞ்சாய்ப் பறக்குமெனில், ‘இராமசாமியின் தூதன் நானடா இராவணா’ என்றான் என்ற இடத்தில் தான்….அங்கே பிடிக்கும் வேகம், கலங்கிய மக்கள் மகிழ்ந்திட இராமன் அரசுரிமை கொண்டான்.. என்ற இடம் வரை ஓட்டம் தான்….அந்தப் பாடல் பிடிபட்டதற்கு முக்கிய காரணமான என் அன்புத் தமக்கை கீதாவின் நினைவுகளும் சூழ்கின்றன இப்போது அந்தப் பாடலை நினைக்கையில், கதைகளும் பாடல்களுமான இளமைக்கால வாழ்க்கையில் தம்பிகளுக்கு அப்படியான அக்கா வாய்ப்பது போல் வரமொன்று உண்டா !

அந்தப் பாடலை நிகழ்ச்சியில் குறிப்பிடவில்லை ! நிகழ்ச்சியில் பேசிய பாடல்களைக் கடந்தும் நிறைய நினைவில் இருக்கின்றன கதை சொல்லும் பாடல்கள்…. சொல்ல நேரம் காணாது! மிகக் குறைந்த வரிகளில் முழு திரைக்கதையை அடையாளப்படுத்தி விடும் பாடல்கள் உண்டு. ‘அய்யனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் நங்கை, அடிவாரம் தனிலிருந்தாள் அலமேலு மங்கை’ என்ற அவள் ஒரு தொடர்கதை படத்தின் பாடல், படத்திற்கு அப்பாலும் உள்ள கதைகளையும் பேசிவிடும்.

கண்ணதாசன், எம் எஸ் வி அப்படியாக உருவாக்கிய சிறப்பான திரைப்பாடல்கள் வரிசையில் ஒன்று, படம் வந்த போதே கவனத்தை ஈர்த்தது. எஸ் பி பாலசுப்பிரமணியன் – வாணி ஜெயராம் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே தேன், இந்தப் பாடல் சற்று வித்தியாசமான சுவையில் அமைந்தது. ஈர்ப்பு இருந்தும் வலுக்கட்டாயமாக மறுத்துக் கொள்ளும் காதலை ஒரு கட்டத்தில் இறங்கிவந்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உளவியல், அவளைச் சீண்டியபடியே அரவணைக்கக் காத்திருக்கும் காதலனின் கருத்தியல் இவற்றை முன்வைக்கும் பாடலில் வேறோர் உருக்கமான ஜோடியின் கதையும் பேசப்படுகிறது. இயற்கையின் வஞ்சனையில் செவிப்புலன் இழந்த தொழிலாளி அவன், அவளோ நம்பிக்கை துரோகத்தின் விளைவை வயிற்றில் சுமந்திருக்க வெளியேற்றப்பட்ட உழைப்பாளி!

கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும் அந்த வரிகளை….மெல்லிசை மன்னரின் மேதைமையை யார் மறுக்க முடியும் அந்தப் பாடலில்!

பல்லவியே அழகியல் கவிதை வரியில் தொடங்கி விரிவடைகிறது. அந்தப் பொருளடர்த்தி, பாடல் நெடுக பரவுகிறது. இரகசியக் குரலைப் போலவே கசியும் மென்மையான இசையில் எஸ் பி பி தொடங்குகிறார், இலக்கணம் மாறுதோ….என்று! அந்த வரியின் அழகில் சொக்கும்போதே, ஆலாபனையில் வளர்த்தெடுக்கிறார் அந்தக் கடைசிச் சொல்லை, அந்தக் கடைசி எழுத்தை….. காற்றில் சுழன்றுவரும் ஆடையைச் சட்டென்று கைகளால் பற்றி இறுகச் சுற்றித் தக்கவைத்துக் கொள்வதுபோல் அந்தத் தாளக்கட்டு (மிருதங்கமாக இருக்குமோ?) பரவசப்படுத்திப் பாடகரைப் பல்லவியை மீண்டும் பாடத் தூண்டுகிறது !

‘இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ’ என்பது பாடல் வருமுன்பே கால காலமாகக் கவியரங்குகளில், தமிழ் மன்றங்களில் சர்ச்சையில் இருந்த விவாத வரி. அதை நெகிழ்வுத் தன்மையைக் கொண்டாடும் காதல் வரியாகக் கட்டமைக்கிறார் கண்ணதாசன்!

பல்லவியில் அடுத்த வரி இன்னும் சிறப்பானது! ‘இது வரை நடித்தது அது என்ன வேடம்…இது என்ன பாடம்’ என்பது இன்னும் நெருக்கமான காதல் வரி! அதில், வேடத்தை நீட்டி இசைக்கும் எஸ் பி பி, பாடத்தைப் பதமாக முன்வைப்பதிலும் அத்தனை அழகு!

பல்லவியிலிருந்து வேக திசைக்கு நகரும் சரணத்தை நோக்கிய வழித்தடத்தை வயலின்களும், புல்லாங்குழலும் உடன்பட்டும் முரண்பட்டும் முன்மொழிந்தும் வழி மொழிந்துமாக அந்தக் காதல் இதயங்களை அப்படியே பிரதியெடுக்கும் மாயத்தை நிகழ்த்துகிறார் எம் எஸ் வி. பிடிவாதமான மனத்தை எப்படி நாயகி இளக வைத்துக் கொண்டு விட்டாள் … என்று வியப்பதுபோல் சீண்டுவதாக அமையும் முதல் சரணத்தின் வரிகளில் ரசிகர்கள் ஆழ்ந்து திளைத்திருந்த கல்லூரி நாட்கள் நினைவில் வந்து போகிறது!

‘கல்லான முல்லை, இன்றென்ன வாசம்?’ என்கிற முதலடியில் அந்த வாசம் பரவ வேண்டிய தொலைவுக்கு சங்கதிகள் போட்டு இசைப்பார் பாலு. ‘காற்றான ராகம்’ என்ற வரி மிகுந்த காற்றோட்டமான வெளியில் ஒலிக்கும். ‘ஏன் இந்த கானம்?’ என்கிற வீச்சு அம்சமானது. வெண்மேகம் கார்மேகமானதைக் கொஞ்சும் அடுத்த வரியைத் தொடர்ந்து, ‘மன்மதன் என்பவன் கண் திறந்தானோ’ என்ற வரி, மூத்த தலைமுறையினரின் பேச்சு மொழியின் கவிதை வடிவம். ‘பெண்மை தந்தானோ’ என்பது இயல்புணர்ச்சியைக் கூட ஆண் மேலாதிக்க நிலையிலிருந்து பார்க்கும் பிரயோகம். இந்தக் கொடுமையை, ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற மற்றபடி அருமையான பாடலிலும் கவிஞர் செய்திருப்பார். ‘யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று…’ எனும் இடத்தில் பாலுவின் முத்திரை சிரிப்பு.

பல்லவிக்கு மீளும் எஸ் பி பி அந்த முதல் வரி ஆலாபனையை இன்னும் சொக்கவைக்கும்படி மனத்தில் நிற்கவைக்கிறார். இரண்டாம் சரணம், நாயகியின் தன்னிலை விளக்கம். வாணி ஜெயராம் குரலினிமை மட்டுமல்ல, தன்னை நிறுவிக்கொள்ளும் பெண் மனத்தின் பிடிமானத்தை மொழியும் அவரது ஆற்றலும் துலங்குகிறது. ‘என் வாழ்க்கை நதியில் கரையொன்று கண்டேன்…உன் நெஞ்சில் ஏதோ….கறை ஒன்று கண்டேன்’ என்பதில் அந்த ‘ஏதோ’ எத்தனை கற்பனை விவரிப்புக்குள் நுழைந்து நுழைந்து வருகிறது! ‘புரியாததாலே திரை போட்டு வைத்தேன்’ என்பதில் அந்தப் ‘புரியாததாலே’ அத்தனை கிறக்கமூட்டும் சுயகழிவிரக்கம். ‘திரை போட்டபோதும் அணை போடவில்லை’ என்று கொண்டு வந்து நிறுத்துமிடம் அத்தனை அழகு. ‘மறைத்திடும் திரை தனை விலக்கி வைப்பாயோ, விளக்கி வைப்பாயோ’ என்பதில் சொற்ஜாலமும் செய்கிறார் கவிஞர்.

அங்கிருந்து, வேறு ஜோடியைப் பாட இருக்கும் சரணங்கள் என்பதால், பல்லவிக்குப் போகாமல் மூன்றாம் சரணத்தை நோக்கி வயலின்களும், குழலும் பேசிக்கொண்டே போக, டிரம்பெட் மொழியும், சிலிர்க்கவைக்கும் சிதார் சிற்றிசையும் தொட்டுக் கொடுக்க, ‘தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை’ என்று எடுக்கிறார் எஸ் பி பி. ‘தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை; என்கிற வரியை, கவிஞர் எந்தத் தருணத்தில் எழுதியிருப்பார்! அதோடு மட்டுமா…. ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்…பாடாமல் போனால் எது தெய்வம் ஆகும்’ என்ற வரியை லட்சக்கணக்கானோர் (இந்த எண்ணிக்கை குறைவோ!) கொண்டாடிய நாட்கள் நினைவில் இருக்கிறது. சரணம் முழுவதையும் ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்துச் சங்கதிகளோடு இழைத்து இழைத்துப் பாடி இருப்பார் பாலு.

அங்கிருந்து பல்லவிக்கு வராமல் நான்காவது சரணத்தை நோக்கிய இசையின் திசையில், தனக்கு உற்ற துணையான காது கேளாத துணை பாத்திரத்தை , ‘மணியோசை என்ன, இடியோசை என்ன…எது வந்த போதும் நீ கேட்டதில்லை’ என்று தொடங்குவது காத்திரமான விளக்கம். ‘நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்’ என்பது பரவச அறிமுகம். சரணத்தின் நிறைவில் வாணி ஜெயராமின் ஹம்மிங், உருக்கமான சூழலின் உருவகமாக மலர்கிறது. பல்லவியில் அவர் நிறுத்தி நிறைவு செய்யுமிடம் இன்னும் அம்சமாக அமைகிறது.

தந்திக்கருவிகளும் குழலும் இன்ன பிற இசைக்கருவிகள் ஒரு புறம் இயங்க, தாளக்கருவிகளின் சுகமான வழிநடைப்பயணம் பாடலை இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது. கமல், சுமித்ரா ஒரு பக்கமெனில், அனந்து, ஷோபா இன்னொரு பக்கம். அனந்துவின் வெகுளித் தன உடல் மொழியும், ஷோபாவின் குழந்தைமையும் மறக்க முடியாதது. பாடலை நினைக்கும்தோறும் ஷோபாவின் துயரமிக்க முடிவு நெஞ்சை அறுக்கவே செய்யும்

தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தாத்தா பாட்டிகளை யார் தான் பார்த்திருக்க மாட்டோம்! மனத்தின் குரலாக இசை மலர்கிறது, திரைப்படங்களில். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதை வசனம் சொல்ல முடியாது, காட்சி மொழி தான் சொல்ல வேண்டும். அதன் சாத்தியங்களில் அதிகம் பயணப்படாத காலங்களில் இசைப்பாடல்கள் நிரப்பிக் கொண்டிருந்தன அந்த இடத்தை, வசனங்களைக் காட்டிலும் தூக்கலாகக் கூட! பாடல்கள் அற்ற படங்களும் பேசப்பட்டதுண்டு, ‘அந்த நாள்’ போல! ஆனால், பாடல்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன, நம்மோடு காலத்தைக் கடந்தும்! நமது நினைவுகள் ஒளி, ஒலி அலைகளால் நிரம்பி இருக்கின்றன! மின்னலைக் காணும்போதே இடியைக் கேட்கத் தயாராகிறது உள்ளம். இசையைக் கேட்கும்போதோ, கதைக்குத் தயாராகிறது உள்ளம்.

கதைக்குள் பாடலும், பாடல்களுக்குள் கதைகளும் நிலை பெற்றுவிட்டன, திரை இசையில்! இசையில் லயிக்கிற மனிதர்கள் வாழ்க்கையை ரசிக்கவும் சற்று எளிதாகிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்




ண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அழைத்து நெருக்கமாகப் பேசியது தான் உடனே நினைவுக்கு வந்தது. இசையின் பால், இசைப் பாடல்களின் பால் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னைக் கூடுதலாக ஈர்த்தது. தமிழின் முன்னோடி சிறுகதை ஆசிரியர்கள் பலருக்கும் இசையோடான இயைபு இருந்திருக்கிறது.

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்‘முதல் 50 ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்று எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் (அவரது பாட்டனார் மதுர கவி பாஸ்கரதாஸ் தான் தமிழின் முதல் பேசும் படத்தில் பாடல் எழுதியவர், எம் எஸ் அவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்தவர்!) எழுதி பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இப்போது வந்துள்ள புத்தகம், படைப்பாளிகளின் இசையார்வம் பற்றிச் சிறப்பாக ஆங்காங்கு தொட்டுச் செல்கிறது. 895 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்துக் கீழே வைக்காமல் படித்து முடிக்க முடியும் என்று ஊக்கப்படுத்திய நூல் அது.

தமிழின் முதல் சிறுகதை எது என்ற விவாதத்தில் அடிபடும் ஆறில் ஒரு பங்கு கதை எழுதியவர் சாட்சாத் மகாகவி சுப்பிரமணிய பாரதி, அவரை விடவா இசை ஞானமிக்க ஒருவர், தமது கவிதைகளை இன்ன தாளத்தில் இன்ன ராகத்தில் இசைக்கலாம் என்று சேர்த்து வெளியிட்டவர், தாமே குரலினிமை மிக்க பாடகர்.

புதுமைப்பித்தன் முதற்கொண்டு பங்காற்றிய மணிக்கொடி இதழில் படைப்புகளை வெளியிட்ட தி ஜானகிராமன், லா ச ராமாமிர்தம்….என்று இசையைக் கொண்டாடியவர்கள் நிறைய உண்டு. மணிக்கொடியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் கவிதை எழுதி இருக்கிறார் என்று அந்தி மழை டிசம்பர் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தோழர் ச தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். துன்பம் நேர்கையில் யாழ் பற்றி சிந்தித்தவர் ஆயிற்றே…

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்று ஏ பி நாகராஜன் வசனம் எழுதியது எத்தனை உண்மையின் பிரதிபலிப்பு என்பதை, தமிழ்ச் சிறுகதை படைப்பாளிகள் வரலாற்றையும் சேர்த்துப் பேசும் தமிழ்ச்செல்வன் பக்கம் கண்ணீரோடு எழுதிச் செல்கிறது. ராஜமுக்தி திரைக்கதை எழுதிய புதுமைப்பித்தன் உடல் நலிவுற்றுத் தவித்தது பற்றி அந்தப் படத்தின் நாயகி இசை வாணி பி பானுமதி தாமதமாக அறிந்து உதவத் துடித்தது குறித்து, தி இந்து நாளிதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருந்தார் தஞ்சாவூர் கவிராயர். ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதை, புதுமைப்பித்தனின் சொந்த வாழ்க்கை தரிசனம் அன்றி வேறென்ன…வயிற்றுப்பாட்டுக்குத் தவிக்கும்போதிலும் படைப்பூக்கம் நழுவ விட்டு விடாத அப்படியான படைப்பாளிகளில் இன்னொருவர் விந்தன்.

ருமையான எழுத்தாளர் என்பதோடு மற்ற படைப்பாளிகளை ஊக்குவித்த எளிய மனிதரான விந்தன், எப்போதும் மறையாத திரைப்பாடல்கள் சில வழங்கிச் சென்றுள்ளார் என்பது, முன்பே கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ்ச்செல்வன் தொகுப்பில் வாசித்தது இன்னும் நெருக்கமாக ஈர்த்தது. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற மகத்தான மெல்லிசை கீதத்தை, 5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் கடந்த சில ஆண்டுகளில் என்று சொல்கிறது யூ டியூப். நான் ஒரு மலையாளி, ஆனால் என் இதயம் கவர்ந்த பாடல் என்கிறது ஒரு குரல். எனது இசை திறமையை வெளிப்படுத்த கல்லூரியில் பெரும் வாய்ப்புகள் பின்னர் அமையக் காரணமாக அமைந்தது இந்தப் பாடலை ஒரு முறை மேடையில் பாடியது தான் என்கிறார் ஒருவர். எம் ஜி ஆர், ஜி வரலட்சுமி நடிப்பில் ஆழ்ந்து ரசிப்போரும் பாடலில் மனத்தைப் பறிகொடுத்துப் பதிவுகள் போட்டிருக்கின்றனர்.

பத்திரிகை அலுவலகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் இருக்கையில், அவருள் இருந்த படைப்பாளியை உணர்ந்து அவரைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தவர் எழுத்தாளர் கல்கி. அந்த விந்தன் எழுதிய பாடல் தான் அது. அந்தத் தேனமுதை, மெல்லிசை மன்னர்களின் இசையில் ஏ எம் ராஜா ஜிக்கி இணையர் அபாரமாக வழங்கி இருப்பது காலம் கடந்து பேசிக்கொண்டிருக்கிறது.

டக்கே இருந்து வந்த ராகம் என்று குறிப்பிடும் இசைக் கலைஞர் சாருலதா மணி, பாகேஸ்ரீ ராகத்தில் சங்கீத மூலவர்களிடம் அதனால் தான் கீர்த்தனைகள் பிறக்கவில்லை, டைகர் வரதாச்சாரியின் சீடர் எம் டி ராமநாதன் புனைந்த பாட்டு தான் முதலாவதாகக் கிடைக்கிறது என்று தமிழிசையில் இந்த ராகத்தின் நுழைவைப் பேசிவிட்டு, திரை இசையில் அமைந்த முதல் பாடலாகக் குறிப்பிடும் பாடல் தான் மயக்கும் மாலைப் பொழுதே என்கிறார்.

https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-bewitching-bhagesri/article3002530.ece

பின்னர் வந்த நிலவே என்னிடம்… பாடலையும் அவர் குறிப்பிடும் போது சங்கீதம் அறியாத எனக்கும் சட்டென்று பிடிபட்டது, குலேபகாவலி பாடலின் ஈர்ப்புமிக்க இடங்கள். அந்தப் பட்டியலில் அவர் தொட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அமர்க்களம். அதில் ஒன்றை மற்றொரு தருணத்தில் இங்கே எடுத்துக் கொள்ளவேண்டும்.

மாலைப் பொழுதின் மயக்கத்தில் ஆர அமர ஆழ்ந்துவிட்டு, சரி போதும் நீ புறப்படலாம் என்று வழியனுப்பி, இரவைத் துணைக்கு அழைக்கும் காதல் உள்ளங்களின் கொண்டாட்ட இசை தான் பாடல். அந்த மயக்கத்தை ஜி வரலட்சுமி அபாரமாக புலப்படுத்துவதைக் காணும்போது, ஆரவல்லி படத்தின் நாயகியாக அவரது அதிகார மிடுக்கு மிக்க முகமும் நினைவுக்கு வந்தது. இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயமில்லையா என்று எழுதினாரே கவிஞர், காதல் யாரைத் தான் விடும்!

காமிராவில் ஒரு காட்சி விரிந்து புறச்சூழலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஜிக்கியின் தொடக்க ராக ஆலாபனை, படத்தைப் பாராமல் கூட அந்தி கருக்கும் பொழுதில் மனத்தைக் கொண்டு நிறுத்திவிடுகிறது. மயக்கும் மாலை என்று வருணித்து, நீ போ போ என்று வழியனுப்புவது, மறுநாளைக்கும் மயக்கம் வேண்டுமென்பதற்கு நைச்சியம் செய்து வைக்கும் உத்தி போல் படுகிறது. அந்த மாலை தங்களுக்குத் தேவைக்குமேல் நீண்டுவிட்டதுபோல் குற்றம் சாட்டுவது மாதிரி அந்த மாலையைக் கொஞ்சம் நீட்டித்து இசைக்கிறார் ஜிக்கி. அந்த போ போ என்பது கூட, யாரையும் விரட்டும்போது இரட்டிப்பு அழுத்தம் சொல்லித் தானே அனுப்பி வைப்பது மாதிரி தான்! ‘இனிக்கும் இன்ப இரவே நீ வா வா என்பதில் இரவுக்கு வரவேற்பும், நீ இடத்தைக் காலி செய் என்று மாலைக்கு மற்றுமொரு அழுத்தமும் சேர்ந்து ஒலிக்கிறது. இரவை வரவேற்பது எதற்காக….’இன்னலைத் தீர்க்க வா’ என்று அடுத்த அடியில் காரணமும் சொல்லப்பட்டு விடுகிறது. மூன்று வரிகளில் எத்தனை காவியம் புனைந்திருக்கிறார் விந்தன்.

ஜிக்கியின் காதல் அறையின் சாளரம் வழியே கசியும் இசை கேட்டு, ஏ எம் ராஜா நுழையும் இடம் துல்லியமான காதலை இத்தனை மெல்லியதாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறது. ‘பன்னீர் தெளிக்கப் பனி பெய்யுமே’ என்ற அனுபல்லவியில் எத்தனை சுகம்….’பசும்புல் படுக்கப் பாய் போடுமே’ என்ற அடுத்த வரியில் எத்தனை இதம்! இதிலிருந்து பல்லவிக்கு ராஜா புறப்படவும், அதன் நிறைவில் ஹம்மிங் எடுத்து, முதல் சரணத்திற்கு வருகிறார் ஜிக்கி.

‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே…. பாடும் தென்றல் தாலாட்டுமே’ என்ற வரிகளை என்னமாக எடுக்கிறார் ஜிக்கி. இரவின் உணவையும் உறக்கத்தையும் இயற்கையின் மடியில் எடுத்துக் கொள்கின்றன காதல் இதயங்கள். ‘தேனூட்டுமே’ என்ற இடத்தில் அத்தனை ரசம் கொடுத்து இழைத்திருப்பார் ஜிக்கி. அதே போல், ‘தென்றல்’ எனும் வார்த்தையே நம்மை வருடுவது போல் இசைப்பார். அதிலிருந்து ‘புன்னை மலர்கள் அன்பினாலே’ என்ற வரிக்கு அவர் மாறும் விதமும், அந்த அன்பில் அவர் குழைக்கும் அன்பும் அபாரம். ‘போடும் போர்வை ….’ என்று வளர்த்து, ‘தன்னாலே’ என்று அதை நீட்டிக்கும் இடம் இன்னும் சொக்க வைக்கும். பல்லவியில் கொண்டு அவர் முடிக்க, இந்த முறை ஏ எம் ராஜா எடுக்கிறார் ஹம்மிங், தொடர்ந்து, இரண்டாவது சரணம்.

இரண்டாவது சரணம், சிருங்கார சுவாரசியம். ‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே’ என்ற நாயகியின் குறிப்பில் இருந்து உரிமை எடுத்துக் கொள்கிறான் நாயகன், ‘கனியிதழ் காதல் பசி தீர்க்குமே ..’ என்பது அவனது தூண்டுதல். அதை அப்படி அனுபவித்து இசைப்பார் ராஜா. நாயகி ஏன் மறுக்கப் போகிறார், ‘காண்போம் பேரின்பமே’ என்கிறாள். அங்கிருந்து பாடலை எங்கோ கொண்டு செல்கிறார் விந்தன், ‘வானிலும் ஏது வாழ்விது போலே …’ என்ன கவித்துவக் காதல் வரி! மென்மையான குரலிலேயே உயர்த்திக் கொண்டு போகிறார் ராஜா அதை. ‘வசந்தமே இனி எந்நாளும்’ என்பது காதல் இன்ப வாழ்க்கையின் நிறைவுரை ஆக ஜிக்கியின் குரலிசையில் ஒலிக்கிறது.

ராக ஆலாபனைகளும், குரலினிமையும், தொடக்கமுதல் சீரான கதியில் இன்பியல் ரசனை தோய்ந்து வெளிப்படும் தன்மையும் பாடலை எப்போதும் கேட்கவைக்கிறது. சிதார் இசையும், பதமான தாளக்கட்டும் உள்ளுக்குள் ஒலித்தபடியே இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டங்களினூடே காதலைப் பேசியவர் விந்தன். புரட்சிகர இதயங்களில் காதல் பூத்துக் குலுங்கும் என்பதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த இசைப்பாடல்.

கருத்தொருமித்து வெளிப்படும் காதலின் இசை அது. எல்லோரும் இன்புற்று இருக்க நினைக்கும் இசை. வேறொன்று அறியாத இசை. மலர்ச்சி மிக்க புதிய சமூகத்திற்கான இசையும் அது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்




நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வந்துசென்ற பின்னும் வீடெங்கும் அவர்கள் பேச்சும் சிரிப்பும் சூழ்ந்திருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த சில பாடல்கள் இன்னும் நெஞ்சில் சுழன்ற வண்ணம் உள்ளன. அதே போலவே, எப்போதோ கேட்ட சில பாடல்களும்! அப்படியான இசைப்பாடல் ஒன்றை எதிர்பாராத நேரத்தில் யாரோ இசைத்தட்டு சுழலவிட்டுக் காந்த ஊசியைப் பொருத்த நேருமானால்…ஆஹா…

எழுபதுகளில் வானொலியில் அதிகம் ஈர்த்த பாடல்களில் ஒன்று அது. யூ டியூபில் போய்ப் பார்த்தால், 1973இல் வந்த படத்தின் பாடலை 2 லட்சம் பேர் அண்மைக் காலத்தில் கேட்டிருக்கின்றனர். பாடலைக் கேட்டுவருவோரின் பதிவுகளைப் பார்த்தால் ‘இது எனது கதை, எனது பாடல்’ என்கிறார் ஒருவர். அவரைப் போலவே இன்னும் சிலர். மறக்க முடியாத தங்களது இளமைக் காலத்தின் காதல் தீயை இந்தப் பாடலை வைத்து மீண்டும் மீண்டும் பற்ற வைத்துக் கொண்டு பலரும் படும் பாடுகள் பார்க்க முடிகிறது.

சொல்லாமல் இருப்பதே காதலுக்குப் பெருமை என்று தங்களுக்குள் எழுதியெழுதி வைத்துக் கொண்டு தங்களது கண்ணீரால் தாங்களே அதை அழித்துக் கொண்டவர்கள், பாடலின் தூண்டலில் இன்னும் அணையாத நெருப்பின் கங்கு இப்போதும் ஒளிர்வதில் அதே கண்ணீரில் கன்னங்களின் பளபளப்பதைப் பார்த்துக் கொள்கின்றனர். அது மெல்லிசை மன்னரின் மாயமா, கவிஞர் வாலியின் மந்திரமா தெரியாது…

எளிய சொற்களில் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளத்தைச் சென்றடைய முடியும் என்பது மட்டுமல்ல, அவர்கள் மனத்தில் நினைப்பதெல்லாம் பாடலில் ஒலிப்பது தான் அந்த மாயமும் மந்திரமும். காதலைச் சொல்ல முடியாது என்பதை எத்தனையோ விதங்களில் ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அதைவிடவும் காதல் அவஸ்தையை வேறு எப்படி விளக்கி விட முடியும்….எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அதைச் சொல்வதற்கு ஒரு வாய் இருந்தபோதும் சொல்லாமலே நினைப்பதும் துடிப்பதும் தவிப்பதும் தான் அந்தப் பாடல்….

பாடலைத் தானே பாடுவது என்றும், பெண் குரல் ஜானகியாக இருக்கட்டும் என்றும் எந்த முக்கிய தருணத்தில் முடிவெடுத்தாரோ எம் எஸ் வி, எத்தனை அம்சமான பாடல் வாய்த்தது ரசிகர்களுக்கு !

விஸ்வநாதன் அவர்களது மேதைமையை எண்ணியெண்ணி வியக்க வைக்கும் கம்போசிங் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். கதைக் களத்தில் குறிப்பிட்ட காட்சிக்கான பாடல்கள் ஒரு விதம், பாத்திரங்களின் மனச் சலனங்கள் குறித்த பாடல்கள் வேறு விதம். இந்தப் பாடல் அந்த ரகம். அப்படியானால் பாடலின் உள்ளடக்கம் பேசுவதை இசையும் சேர்ந்து பேசவேண்டும். இசை எடுத்துக் கொடுக்கப் பாடல் சொல்லும் கதையை மீண்டும் வாங்கிக் கொண்டு அடுத்த செய்திக்கு, இசை, பாடலை முன்னகர்த்த வேண்டும். பாடல் வரிகளில் ஆழும் ரசிகரை அவரது மனநிலைக்குப் பக்கத்திலிருந்து அதே உணர்வுகளில் மேற்கொண்டு உலவுவதற்கு ஏற்ற இசை கொண்டு பாடல் வழங்கப் படவேண்டும்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அதனால் தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் விரும்பிக் கேட்கும் பாடல் வரிசையில் இருக்கிறது. கவிஞர் வாலியின் எழுத்து. வேறென்ன வேண்டும்…

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும்
சொல்வதற்கு
வார்த்தையின்றித் தவிக்கிறேன்

என்ற இந்தக் கட்டமைப்பு, எந்த விதத்தில் இசைக்கப்பட்டால் நாயகனின் பரிதவிப்பை அப்படியே கடத்த முடியும் என்பதைத் தன்னியல்பாகச் சென்றடையும் இடத்தில் சிறக்கிறது இசையமைப்பாளர் பங்களிப்பு. கிடார், வயலின், புல்லாங்குழல், தாளக்கருவிகள் ….என்று இசைக்கருவிகள் தேர்வும், தேர்ச்சியான பயன்பாடும் !

பல்லவி வரிகளை அப்படியே பாடிக்கொண்டு செல்வதில்லை எம் எஸ் வி…. தொடக்கச் சிற்றிசைக்குப் பின் சட்டென்று தொடங்கும் அவரது குரலே தனித்துவமான உணர்வுகளின் வார்ப்பாக அமைந்துவிடுவது. ஒவ்வொரு வரியாக ஒவ்வோர் உணர்வாக ஒவ்வொரு தளமாக இந்தப் பாடலை எடுத்துச் செல்லும் அவரது நடை, ஒற்றைப் படகில் மிக மெதுவாக ஒற்றைத் துடுப்பு போட்டுக் கொண்டு நீர்ப்பரப்பைக் கடக்கும் ஒற்றை மனிதர் போன்ற பயணமாக இருக்கும். வாயிருந்தும் …. சொல்வதற்கு …. என்ற அடுத்தடுத்த துடுப்புகளை அடுத்து, வார்த்தையின்றி என்ற இடத்தில் சற்று ஆழமாக நீரையள்ளி எடுத்துக் கொள்கிறது அவரது துடுப்பு ..அத்தனை சுயகழிவிரக்கம் அந்தச் சொல்லுக்குக் கூட்டுகிறார் எம் எஸ் வி. ‘தவிக்கிறேன்’ என்பது அடுத்த துடுப்பு. அந்தத் தனிமை போக்கிக் கொள்ளச் சுருக்கமான ஹம்மிங் சேர்த்து ஆற்றுப் படுத்திக் கொள்ளும் உணர்வு மேலிடச் செய்கிறார்.

முதல் சரணத்தை நோக்கிய இசை இந்த ஆற்றுப் பயணத்தின் நீரலைகளின் நெளிவே தான்….அழுத்தமான மென்குரலில் வயலின் உள்ளோடிக் கொண்டிருக்க, புல்லாங்குழல் தாபத்தைப் பரவவிடுகிறது. அருகே தட்டுப்படுகிறது இப்போது மற்றுமொரு ஒற்றைப் படகு, சற்று வேகமான துடுப்பு வலித்து வருபவளின் குரலைப் பளீர் என்று எடுக்கிறார் எஸ் ஜானகி. ‘காற்றில் மிதக்கும் புகை போலே …’ என்று தொடங்கும் வரிகளில், நினைவுகளே… என்பது காற்றில் அலைமோதி எதிரொலிக்கிறது. தபேலா அம்சமாக வாங்கி நிறைத்துத் திருப்பிக் கொடுத்து நடத்துகிறது பாடல் வரிகளை. ‘மன வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ என்றும் நிறைந்தானோ..’ என்று வேகத் துடுப்புகளில் கேள்வியெழுப்பி வேறு யாரும் வேறு பதிலேதும் தந்து விட இடமின்றி, ‘அதில் புகுந்தானே என்றும் நிறைந்தானே’ என்று பதிலும் சொல்லப்பட்டு விடுகிறது. சரணங்கள் நான்கிலும் இதே பாணியைப் பயன்படுத்தி இருப்பார்கள். சரணத்தின் முடிவில் அதே ஹம்மிங் எடுக்கும் ஜானகி, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பல்லவியை மிகவும் ஒயிலாக எடுக்கிறார்.

இரண்டாம் சரணத்தை நோக்கிய பயணத்தில் அந்த ஒற்றை வயலின் இசை…ஆஹா…ஆஹா… அதன் தாக்கத்தில் எம் எஸ் வி எடுக்கும், ‘காதல் என்பது மழையானால்’ என்ற வரிகள் எழுபதுகளில் மிகவும் கொண்டாடிக் கேட்டு ரசிகர்கள் பாடிக்கொண்டே இருந்ததுண்டு. ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்’ என்பதை வாலியை விடவும் ரசித்து லயித்துக் குரலில் கொண்டுவந்திருப்பார் மெல்லிசை மன்னர். ‘நீராட்ட நான் பாராட்ட…’ என்ற இடத்தில் அந்த சந்தம் என்னமாகக் கொஞ்சல் நடை பயில்கிறது! ‘அவள் வருவாளே சுகம் தருவாளே ‘ என்ற ஆசுவாசம் சரணத்தை நேர்த்தியாக்குகிறது.

‘ஆசை பொங்குது பால் போலே’ என்ற மூன்றாவது சரணத்திலும் ஜானகியின் குரலினிமை சிறப்பானது. ‘அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே’ வரிகளில் எத்தனை காதலும் சேர்ந்து பாலோடு பொங்குகிறது! ‘கொதித்த மனம்…கொஞ்சம் குளிரும் விதம்’ என்றவரிகளில் இயைபு அபாரம், வாலியின் முத்திரை அது. ‘அவன் அணைப்பானோ இல்லை மாட்டானோ’ என்ற கேள்வி காதலிசைப் பாடல்களில் பெண் மனத்தின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மிகச் சில வரிகளில் ஒன்று.

நான்காம் சரணத்தை நோக்கிய வேகத்தில் விசில் இசையைக் கொண்டுவந்திருப்பது எழுப்பப்படும் உணர்வுகளின் உல்லாசத்தை பிரதிபலிக்கிறது. ஒற்றை வயலின் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் தொடர்ச்சியில், ‘நேரில் நின்றாள் ஓவியமாய்’ என்ற கடைசி சரணத்தில் எம் எஸ் வி இன்னும் நெருக்கத்திற்கு எடுத்துச் செல்கிறார் தாபத்தை! இரண்டாம் முறை பாடுகையில், ‘ஓவியமாய்’ என்ற சொல்லை இன்னும் அழகாகத் தீட்டுவார்! ‘நான் பாதி அவள் தான் பாதி’ என்பதை அவர் இசைக்கும் விதம் சுவாரசியமானது. சரணத்தின் நிறைவில் ‘நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே’ என்ற உளநிறைவு அபாரமாக இருக்கும்.

பாடலின் நிறைவில் படகுகள் இரண்டும் அருகருகே சம வேகத்தில் துடுப்பு போட்டபடி நகர்ந்து கண்ணிலிருந்து மறையுமிடத்தில் நிறைவு பெறுகிறது பாடல். ஆனாலும் நீரலைகளின் மீது தெறிக்கும் ஒளியும், அவற்றின் மென் அதிர்வுகளும் ரசிகர் நெஞ்சில் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கடந்த ஒருவாரமாக உள்ளே ஓடிக் கொண்டே இருக்கிறது, சுழன்ற வண்ணம் இம்சை செய்து கொண்டிருக்கிறது…அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டுச் சொல்லுங்களேன் என்று அதைத் தெரிந்து கொண்டே வாட்ஸ் அப்பில் கேட்கத் தோன்றுகிறது ஒற்றியூர் சந்திரசேகரன் அவர்களுக்கு!

கதைகளையும் சேர்த்து அசைபோட வைக்கின்றன பாடல்கள். பாடலை அசைபோடுகின்றன மனங்கள். காலத்தின் முன்னும் பின்னும் மனத்தை வழி நடத்துவதில் இசை ஓர் உளவியல் பயிற்சியாளர் போல் இயங்குகிறது. ஒரு மனத்திலிருந்து எண்ணற்ற உள்ளங்களையும் ஒருமிக்கிறது. அந்தப் பரவசத்தை வாரண்டி கியாரண்டி குறிப்பிடத் தேவையே இல்லாத அளவு உறுதிப்படுத்துகிறது. பொய்யாமொழி தான் இசையும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]