முஸ்லீம்கள் 2018ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுகை நடத்தி வருவதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது இஸ்லாமிய வெறுப்பு அடிப்படையில் இயங்குகின்ற குழுக்களின் கைவேலையாக இருக்கும் என்றே யாரும் நினைக்கலாம். ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் இப்போது நேரடியாக அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். திறந்தவெளியில் தொழுகைகள் நடத்தப்படுவதை தனது அரசாங்கம் ‘சகித்துக் கொள்ளாது’ என்றும், முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்துகின்ற ஆட்சேபணைக்குரிய மொழியில் கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் கட்டார் முஸ்லீம்களை எச்சரித்திருந்தார்.இதுபோன்ற பிரச்சனைகளை முதலமைச்சர் ஒருவரே உருவாக்குவது மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற செயலாகவே இருக்கிறது. மதநம்பிக்கை கொண்ட முஸ்லீம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்று கூடி ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வது பொதுவான வழக்கம். மற்ற நாட்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நடத்திக் கொள்கின்றனர். இந்த நிலைதான் நாடு முழுவதும் இருந்து வருகிறது. ஏதோ முஸ்லீம்கள் சாலைகளிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து நாளொன்றிற்கு ஐந்து முறை தொழுகைகளை நடத்திக் கொண்டிருப்பதைப் போல, வீட்டில் மட்டுமே முஸ்லீம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்று குறிப்பாக ஹரியானா முதல்வர் எதற்காக உத்தரவிட வேண்டும்?இரண்டாவதாக முதல்வர் கட்டார் தன்னுடைய உரையில் உண்மைகளைக் கூறுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். குருகிராம் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான முஸ்லீம்களே இருக்கின்றனர். குருகிராமில் அதிக எண்ணிக்கையில் மசூதிகள் இல்லாததால், வெள்ளிக்கிழமை ஜமாஅத் தொழுகையை நடத்துவதில் அவர்கள் பெரும்சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கான இடங்களை வாங்குவதற்கு முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அதிகாரப்பூர்வ நிறுவனங்களால் முறியடிக்கப்படுகின்ற அதேசமயத்தில் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பிரச்சனைகள் எதுவுமின்றி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது அரசு நிறுவனங்களிடம் இருக்கின்ற வக்ஃப் நிலங்களில் மசூதிகள் கட்டிக் கொள்ளலாம் அல்லது தொழுகைக்காக சுற்றுச்சுவர்களுடனான திறந்த வெளிகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை மீட்டுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் நிலத்தை மீளப் பெற்றுத் தருவதாக 2018ஆம் ஆண்டே அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அதன் பிறகு பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மூன்றாவதாக திறந்தவெளியில் தொழுகை நடத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு நிர்வாகத்தால் இப்போது ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு முதலமைச்சரிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. சில அமைப்புகள் பொது இடங்களில் தொழுகை நடத்த 2018ஆம் ஆண்டு மே மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரசு நிர்வாகம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கென்று முப்பத்தியேழு இடங்களை ஒதுக்கித் தந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. இரண்டு ரக்அத்கள் ஓதப்படும். ஒரு குத்பா ஓதப்பட்டால், அது பொதுவாக பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும். குருகிராமில் தொழுகைக்காக அரசால் ஒதுக்கித் தரப்பட்ட பெரும்பாலான இடங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அமைந்திருக்கவில்லை. அவை முக்கிய சாலைகள் அல்லது தொழிற்சாலைப் பகுதிகளை ஒட்டியுள்ள லாரிகள் நிறுத்தப் பயன்படுத்தப்படுகின்ற காலி இடங்களாகவே இருந்தன. தொழுகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, வழித்தடங்கள் எதுவும் தடைபட்டதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. அந்த ஒப்பந்தத்தை இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன? அந்த இடங்களின் எண்ணிக்கையைத் தற்போது பத்துக்கும் குறைவான இடங்களாக நிர்வாகம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசின் நேர்மைற்ற, நியாயமற்ற செயலாக இருப்பதுடன் அது முற்றிலும் ஒருபக்கச் சார்பானதாகவும் இருக்கிறது.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மிரட்டல், அச்சுறுத்தலில் மாநில முதல்வரே ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கு நேர்மாறாக முஸ்லீம்களிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கிய பிற குடிமக்களும் குருகிராமில் இருக்கவே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்பவர்களில் பலர் ஆடை மற்றும் பிற தொழில்களில் பணிபுரியும் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களாக அல்லது அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். போதிய இடவசதியுடன் உள்ள சில தொழிற்சாலைகளில் அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் – பெரும்பாலும் ஹிந்துக்கள் – அங்கேயே தங்கள் தொழிலாளர்களை தொழுது கொள்வதற்கு அனுமதிக்கின்றனர். வகுப்புவாதப் பிரிவினைகள் தங்கள் தொழிற்சாலையில் நடைபெறுகின்ற வேலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது அதன் மூலம் தெளிவாகிறது. ஆயினும் காரணம் எதுவாக இருந்தாலும், அது நேர்மறையான விளைவையே கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் சக ஊழியர்களும், ஹிந்துக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவொரு சம்பவமும் நடைபெற்றிருக்கவில்லை. குருகிராமில் வசிக்கும் பலரும் தொழுகைக்கான இடங்களை வழங்குவதில் ஆதரவுடனே இருந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் இரண்டு இணையான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவதாக தொழிலாளர்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி வெளிப்படுத்திக் காட்டியுள்ள ஒற்றுமை அரசியல். அந்த ஒற்றுமையே பல்வேறு பிராந்தியங்களில் கட்டப்பட்டிருக்கும் வகுப்புவாதச் சுவர்களை உடைத்தெறிந்து, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கத்தைத் தள்ளியதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.
இரண்டாவதாக குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மத்திய ஆளுகின்ற கட்சியின் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் – அவை ஹரியானா முதல்வரின் அல்லது குஜராத் மாநில வருவாய் அமைச்சர் ராஜேந்திர திரிவேதியின் வார்த்தைகளில் தென்படுகின்றன. சாலைகளில் அசைவ உணவுகளை வெளிப்படையாக விற்பது ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக திரிவேதி கூறியிருந்தார். அதுபோன்ற பேச்சுகள் புறந்தள்ளக் கூடியவையாக இருந்தாலும், அவை ஒரு தொகுதியை வலுப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகின்றன. குருகிராமில் தீவிரவாத ஹிந்துத்துவா குழுக்கள் தொழுகையை நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், குஜராத்தில் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அசைவ உணவு விற்பனையாளர்களுக்குத் தடை விதித்து, அவர்களின் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். குஜராத்தில் நடந்தது குஜராத் உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தில் மத்திய மற்றும் மாநில அளவிலான பாஜக தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையிலேயே இருக்கின்றன.இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றாலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மோசமாகச் சித்தரித்து அச்சுறுத்துகின்ற இப்போதைய போக்கு கூடுதல் கவலையளிப்பதாகவே இருக்கின்றது. குருகிராமில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் விஎச்பி தலைவர் ஒருவர் ‘இது தொழுகை அல்ல, ஜிஹாத், பயங்கரவாதம்’ என்று கூறுகின்றார். இது போன்ற பிரச்சாரமே ஹிந்துக்கள் வசிக்கின்ற உள்ளூர்ப் பகுதிகளுக்குள் தெருவோர முஸ்லீம் வியாபாரிகள் நுழைவதை ஹிந்துத்துவா குழுக்கள் வலுக்கட்டாயமாகத் தடுக்கின்ற போது அல்லது முஸ்லீம்கள் வாடகை குடியிருப்பாளர்களாக நிராகரிக்கப்பட்டிருக்கும் பிற குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சாரம் ஒரு சமூகத்தைப் பற்றிய அச்ச உணர்வை உருவாக்க பெரும்பாலும் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இது ஹிந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்ற திட்டமிட்ட உத்தியாகும். அது அவர்களுடைய உன்னதமான தேசியவாதம், பெரும்பான்மைவாதத்துடன் முற்றிலும் பொருந்திப் போவதாக இருக்கிறது.விவசாயிகள் போராட்டத்தைப் போல் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை வெகுஜனப் போராட்ட அரசியலின் பலத்தால் முறியடித்திட முடியும். ஆனால் அது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு போராட்டத்தின் போது உருவாகும் தன்னிச்சையான சகோதரத்துவ உணர்வுகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டியது அவசியம். பிளவுபடுத்துகின்ற வகுப்புவாத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு எதிராக தன்னுனர்வு கொண்ட போராட்டத்திற்கான அரசியல் நோக்குநிலை நிச்சயமாக இப்போது தேவைப்படுகிறது. தானாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் பிரச்சனையைப் புறக்கணிக்கின்ற எந்தவொரு தற்காப்பு நிலையும், மதவெறி அடிப்படையில் மக்கள் பிளவுபடுகின்ற போது அதிக நன்மையடைகின்ற சக்திகளைத் தைரியப்படுத்துவதை மட்டுமே செய்யும்.
https://www.ndtv.com/opinion/haryana-chief-ministers-deceit-in-handling-the-namaaz-issue-2648573 நன்றி என்டிடிவி தமிழில்: தா.சந்திரகுரு
2019 டிசம்பர் 13 அன்று கவுகாத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
தனது அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்தார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆவணங்கள் இல்லாமல் வந்த புலம்பெயர்ந்தோருக்கு – அவர்கள் முஸ்லீம்களாக இல்லாத வரை – இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த சட்டத் திருத்தம் இருந்தது. அத்தகைய சட்டத்தை இயற்றித் தருவதற்கான வாக்குறுதி பாரதிய ஜனதா கட்சியின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த சட்டத்திருத்தம் இந்திய முஸ்லீம்களைக் குறிவைக்கும் வகையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு பேசப்பட்டது.
2019 டிசம்பர் 11 2019 அன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்
அவர்கள் விளக்கிடாத தர்க்கம் மிகவும் எளிமையாக இருந்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடுகின்ற முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அகதிகள்’ என்று தங்களைக் கூறிக் கொள்வதன் மூலம் குடியுரிமையைப் பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகிய இரண்டு முயற்சிகளின் கலவை அனுமதிக்கும். மறுபுறத்தில் பதிவேட்டில் உள்ள சிவப்பு நாடாத்தனம், முஸ்லீம்களைத் துன்புறுத்துவதற்கான கருவியை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜகவிடமிருந்த உந்துதலைப் பொய்யாக்குகின்ற வகையிலே அந்தச் சட்டத்திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படாமலே இருக்கிறது. மக்களவையின் 2021ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில் ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தின் கீழ் வருபவர்கள், அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களாக அதற்கென்று உருவாக்கப்படுகின்ற விதிகள் அமையும். நாடாளுமன்ற வழிகாட்டுதல்களில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் என்றிருக்கிறது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், மோடி அரசு அந்த சட்டத் திருத்தத்திற்கான விதிகளை இதுவரையிலும் வெளியிடவில்லை. குடியுரிமைக்கு ஒருவரால் கூட விண்ணப்பிக்க முடியாத நிலைமையில், அந்த்ச் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உரியவர்களைச் சென்றடைய முடியாத வெற்றுக் காகிதமாகி விட்டது.
பாஜகவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு பிரச்சனையில், அவர்களுக்கு இதுபோன்று திடீரென்று ஆர்வமின்மை தோன்றக் காரணம் என்ன?
தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள் தெருக்களில் நடந்த போராட்டங்களே புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான முதல் எதிர்வினையாக இருந்தன. வங்கதேச ஹிந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வரக்கூடும் என்ற அச்சத்தில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கின. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அடிக்கடி குடியுரிமை சட்டத் திருத்தத்துடன் அமித் ஷா இணைத்துப் பேசி வந்ததால், தங்களுடைய குடியுரிமை நிலைமை குறித்து இந்திய முஸ்லீம்களிடம் அச்சம் உருவாகியிருந்த நிலையில் பிற மாநிலங்களுக்கும் போராட்டங்கள் விரைவில் பரவின.
போராட்டத்தின் வீச்சு மிகப் பெரிய அளவில் இருந்தது. போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், அரசு தரப்பு என்று சில இடங்களில் அது வன்முறைக்கு வழிவகுத்தது. அசாமில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். வங்காளத்தில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் இருபது பேர் கொல்லப்பட்டனர். மங்களூரில் நடத்தப்பட்ட காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த கொந்தளிப்பு தேசிய தலைநகரான தில்லியில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பாஜக அரசியல்வாதியான கபில் மிஸ்ரா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தெருக்களிலிருந்து அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்ததைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவிலே வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன.
குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்று பயந்த இந்தியர்களிடமிருந்து தரவு கணக்கீட்டாளர்கள் அச்சுறுத்தல்களையும், வன்முறையையும் எதிர்கொள்ளும் வகையிலான பல நிகழ்வுகளுக்கு வரப் போகின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் வழியேற்படுத்திக் கொடுத்தது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றின் விளைவாக மக்களிடம் உருவாகியிருக்கும் நம்பிக்கையின்மை, மனக்கசப்பின் காரணமாக மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில காவல்துறை மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியதால் பிரச்சனை தீவிரமானது.
மாற்றிக் கொள்ளப்பட்ட திட்டங்கள் பரவலாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை பாஜகவால் கிட்டத்தட்ட உடனடியாக மீட்டமைக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை 2019 டிசம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் விவாதித்த போது ‘எங்களுடைய தேர்தல் [2019] அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததால், தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டில் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்ய் தேவையில்லை’ என்று அமித் ஷா மிகக் கடுமையாகக் கூறினார். ஆயினும் அதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குள் ‘இது காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்டது. நாங்கள் அதை உருவாக்கிடவில்லை. அதை பாராளுமன்றத்திற்கு நாங்கள் கொண்டு வரவில்லை, அறிவிக்கவில்லை’ என்று தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைகழுவுகின்ற வகையிலே பேரணி ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2019ஆம் ஆண்டில், குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமித் ஷா அடிக்கடி இணைத்து பேசி வந்திருந்த நிலையில், கடும்எதிர்ப்புகளுக்குப் பிறகு சற்றே பின்வாங்கிய பாஜக உண்மையில் அவை இரண்டும் இணைக்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாஜக கூட்டணி கட்சிகளே அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் அளவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான உணர்வு மிகவும் வலுவாக உள்ளது. திடீரென இப்பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மோடி அரசைப் பொறுத்தவரை அது மிகவும் வலுவான பிரச்சனையாகவே உள்ளது. ‘எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் பிரச்சனையைத் தூண்டுவதற்கு சீனா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகின்ற அதே நேரத்தில் மியான்மரும் அதுபோன்று ஈடுபடக்கூடும் என்று ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 டிசம்பர் 22 அன்று தில்லியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தனது கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இந்தியா குறித்த பிம்பத்தின் மீது ஏற்பட்ட தாக்குதல் குடியுரிமை சட்டத் திருத்தம் உள்நாட்டு அளவில் மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாக இருக்கவில்லை. வெளியுறவு விவகாரங்களிலும், குறிப்பாக தன்னுடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ள வங்கதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியாவிற்கு அது அதிக குழப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குடியுரிமை தொடர்பாக ஏற்பட்டிருந்த அரசியல் வங்கதேசத்தின் மீது கடுமையான வாய்மொழித் தாக்குதல்களை பாஜக அரசியல்வாதிகள் உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்தது. புலம்பெயர்ந்தோரைக் கொண்டு கிழக்கு அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை நிரப்பி வருகிறது என்று பாஜகவினர் பலரும் குற்றம் சாட்டினர். 2018ஆம் ஆண்டில் வங்கதேசத்தவரை ‘கறையான்கள்’ என்று அழைக்கும் அளவிற்கு அமித் ஷா சென்றிருந்தார்.
அதுபோன்ற பேச்சுகள் வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. 2020ஆம் ஆண்டில் மோடி வங்கதேசத்திற்குச் சென்றிருந்த போது வெடித்த வன்முறையில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு 2015ஆம் ஆண்டு மோடி சென்றிருந்த போதுகூட இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காணப்படவில்லை என்பது வங்கதேசத்தில் சில பிரிவினர் இந்தியாவை எந்த அளவிற்கு இப்போது எதிர்மறையாகப் பார்க்கின்றனர் என்பதையே குறிக்கிறது.
பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகின்ற வகையில் இந்தியாவின் உறுதியான கூட்டாளியாக இருந்து வரும் வங்கதேசப் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் பரவலாக ஹிந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து 2021 அக்டோபரில் புதுதில்லியை எச்சரித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா ‘அங்கே [இந்தியாவில்] நம் நாட்டைப் பாதிக்கின்ற, நமது ஹிந்து சமூகத்தைப் புண்படுத்துகின்ற எதுவும் செய்யப்படாமல் அவர்கள் [புதுதில்லி] பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத் திருத்த இந்திய-வங்கதேச உறவுகளைச் சீர்குலைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்று ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் வகுப்புவாத அம்சம் வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியாவை தாராளவாத ஜனநாயக நாடாகக் கருதி வந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில், 2020ஆம் ஆண்டில் இந்தியா பத்து இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. சரிவிற்கான மற்ற காரணிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தமும் ஒரு காரணியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சமான திருத்தங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிற்கான தகுதியை ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து ‘ஓரளவிற்கு சுதந்திரம்’ என்று தரமிறக்கியிருந்தது.
வங்கதேசத்தில் மோடியின் வருகையை கண்டித்து 2021 மார்ச் மாதம் போராட்டம் நடந்தது
பாஜகவிற்கு முற்றிலுமாக இழப்பு
ஒருபுறத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் அறிமுகம் எதிர்மறையான விளைவுகளை – உள்நாட்டு அமைதியின்மையிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேர்வுகளைக் குறைப்பது வரை – ஏற்படுத்தியது. அது பாஜகவுக்கு மிகக் குறைவான நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஹிந்துத்துவாவின் தெற்காசியப் பார்வை மீது கவனம் செலுத்துகிற வகையிலேயே குடியுரிமை சட்டத் திருத்தம் இருந்தது. பாஜகவின் முக்கிய கருத்தியல் அடித்தளத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்ததிர்வு கொண்டதாக இருந்த இஸ்ரேல் வடிவமைத்த ‘திரும்பி வருவதற்கான சட்டத்தின்’ மறுபதிப்பாக பிராந்தியத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்குச் செல்வதற்கான உரிமையை ஏற்படுத்தித் தருவதாகவே சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தலில் அது நமத்துப் போனது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மேற்கு வங்கம் – வங்கதேசத்துடன் அதிக தொடர்பு கொண்ட மாநிலம் – ஆர்வத்துடன் இருந்த நிலைமையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அதையொரு பிரச்சினையாக்காமால் கைவிடுவது என்று பாஜக முடிவு செய்தது, அதற்குப் பதிலாக உள்ளூர் ஊழல் போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவே அது விரும்பியது.
கூடுதலாக குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டாலும், அது பலனளிக்குமா என்பது குறித்தும் மிகப்பெரிய அளவிலே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக நடந்த விவாதங்களின் போதே இந்திய உளவுத்துறை குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மிகக் குறைவான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் மட்டுமே – சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே – பயனடைவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் ஏற்கனவே இந்திய குடியுரிமையை சட்டவிரோதமான முறையில் பெற்றிருப்பார்கள் என்றும் கணித்திருந்தது.
உண்மையில் இந்திய உளவுத்துறையின் அந்தக் கணிப்பை ஏற்கனவே இருந்து வரும் நீண்ட கால விசாவின் செயல்பாட்டிலிருந்து நம்மால் காண முடியும். குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் போன்று 2015ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால விசா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கிடைத்து வருகிறது என்றாலும் 2015ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முஸ்லீம் அல்லாத 25,782 பேர் மட்டுமே இந்த நீண்ட கால விசாவைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் வசித்து வருகின்ற ஹிந்து, சீக்கிய பாகிஸ்தானியர்கள் இந்த வகையான விசாவைப் பெறுவதில் இருந்து வருகின்ற சிவப்பு நாடாத்தனத்தால் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்வதைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் 2020 நவம்பரில் செய்தி வெளியிட்டது.
ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்டத் திருத்தம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பல கொள்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைத்து வந்துள்ள போதிலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அக்கறை மிகக் குறைவாகவே அதனிடம் இருந்திருக்கிறது. அதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டாக, நிச்சயமாக வேளாண் சட்டங்களைக் கூறலாம். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, 2021 நவம்பர் மாதத்தில் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
பாஜகவின் அடிப்படை ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கும் போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். இரண்டு பாறைகளுக்கு நடுவே வெளிவர இயலாமல் சிக்கியுள்ள மோடி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்திருக்கிறார்.
https://scroll.in/article/1012561/protests-bangladesh-and-north-east-why-modi-hasnt-implemented-caa-two-years-after-it-was-passed நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் தமிழில்: தா.சந்திரகுரு
இஸ்லாம் நேற்று இன்று நாளை டி. ஞானையா பாரதி புத்தகாலயம் விலை: ரூ. 50 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
“ஒரு மதத்தைப் புரிந்து கொள்ள அது தோன்றிய காலம், சூழல், பொருளாதார, அரசியல் பின்னணி, கலாச்சாரம், ஆதிக்க சக்தி ஆகியவற்றைப் புரிந்து கொள்வது அவசியம். அது உலகின் எந்த மதமாயினும் சரி. இஸ்லாமையும் நாம் அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பிற மதங்களைப் போல், இஸ்லாம் என்பது எந்த ஒரு தனி நபரையோ, நாட்டையோ, இனத்தையோ குறிப்பதல்ல. அது எந்த மனிதனையும் கடவுளாக்கவில்லை. இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு அடிபணிதல், சரணடைதல், சமாதானம் என்று பொருள். பெயர், உருவம், நிறம், வடிவமற்ற பிரபஞ்ச சக்தியே அல்லாஹ் என்று புதுமையான வழிகாட்டல் தருகிறது இஸ்லாம்.
வணிகத் தொழில் நகரத்தில் பிறந்தவர் முகமது நபி. அன்று அங்கு பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடையே நிலவிய ஸ்திரமற்ற தன்மையும், தனி உடமையின் விளைவால் பெருகிப் போன செல்வந்தர்களால் ஏற்பட்ட சுரண்டல்களால் உழைப்புக் கூலிகள், ஏழைகள் எனும் பிளவிற்கு வழி வகுத்தன. அடித்தட்டு மக்களின் வாழ்வு காக்க ” ஹில்ப் ஃபுதூல்” எனும் போராட்டக் குழு உருவானது. இதில் இளைஞரான முகமது உறுப்பினரானார்.
நிலபிரபுத்துவம் இல்லாத தெற்கு அரேபியாவினர், எல்லா வகையிலும் நீடித்த வளர்ச்சியை அடைந்திருந்தனர். ஆனால் தாம் வாழ்ந்த வட பகுதி அரேபியாவோ, நிலபிரபுத்துவ மன்னராட்சியின் கீழ் கடுமையான பின்னடைவில் இருப்பதை நபிகள் உணர்ந்தார். இதனை சீர் செய்ய , மீட்டுருவாக்கம் செய்ய, ஒழுங்கும் கட்டுப்பாடும், சட்டமும் ராணுவமும், அதிகார மையமும் கொண்ட அரசின் தேவை பெரிதும் இருந்தது.
எல்லா விவசாய சமூகங்களைப் போலவே, மெக்காவிலும் மழைக்கான வருணபகவான் கோவில்கள் இருந்தன. மெக்காவின் க’அபாவில் மட்டும் 360 கடவுள் விக்ரகங்களும், கோவில்களும் இருந்தன.
மெக்காவில் நிலவிய ஏற்றத்தாழ்வு, வறுமை, ஒழுக்கமின்மை, ஆன்மிகச் சிதைவு, பல தெய்வ வழிபாடு எனச் சீர்கெட்டிருந்த நிலையில் இவற்றை மாற்றும் தேவை முற்றிக் கொண்டிருந்தது. முகமது நபி ” ஹீரா” என்ற குகையில் பல ஆண்டுகள் தவமிருந்தார். க அபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக நபிகளின் முப்பாட்டனார் இருந்தார் என்பதால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். முகமது நபி தொழில் நிமித்தம் காரணமாக பல நாடுகளுக்கும் சென்று அனுபவம் பெற்றவர்.
ஜூடாயிசம், ஜொராஷ்ட்ரியம், கிறிஸ்துவம் என அப்போது பெரிதும் பரவியிருந்த தத்துவங்களை முகமது நபி ஆழமாக அறிந்திருந்தார். அரேபிய மண்ணில் தோன்றிய மதங்கள் யாவும் அம்மக்களின் வாழ்வை சரியாக நெறிப்படுத்தவில்லை என்றுணர்ந்த அவர், அவற்றிற்கு மாற்று வழி காணவே அவர் தவமிருந்தார். அவர்களை ஒழுக்கப்படுத்தும் கண்டிப்பான மதம் தேவை என்றும் உணர்ந்தார்.
நபிகளின் உறக்கத்தைக் கலைத்து, ஜிப்ரில் தோன்றி, வாசிக்கத் தெரியாத நபிகளை இறைநெறியை வாசிக்கச் செய்தார். ஜிப்ரில் வழிகாட்டுதலில் உலகுக்கு சமாதானம்; மானுடத்துள் சகோதரத்துவம் இவற்றை உருவாக்கும் மதமாக இஸ்லாம் உருவானது.
நபிகள் பல பெண்களை மணந்து கொண்டார். தனது மதத்தைப் பரப்பக் கடுமையான போர்களை மேற்கொண்டார் எனும் இரண்டு குற்றச்சாட்டுகளைப் பொதுவாக இஸ்லாமின் எதிரிகள் முன் வைப்பதுண்டு. சரி, தவறு என்பதை அதன் காலம், சூழல் எதிரிகள், தேவை முதலியவற்றை வைத்தே எதையும் அளவிடவும் மதிப்பிடவும் வேண்டியுள்ளது.
முகமது நபி (The Prophet Muhammad)
முகமது நபி தனது முதல் மனைவியான தம்மை விட 15 வயது முதியவரான கதீஜாவை திருமணம் செய்து கொண்டார். கணவரை இழந்திருந்த கதீஜாவின் விருப்பத்தின் பேரிலே, தமக்கும் தம்முடைய தொழில் பாதுகாப்புக்கும் உகந்தவரெனக் கருதியே இம்முடிவை அவர் எடுத்தார். கதீஜாவின் மறைவிற்குப் பிறகே 9 விதவைகளை உள்ளடக்கிய 16 பெண்களை, பல்வேறு காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொண்டார்.
நிற்க !
நமது நாட்டிலும் அண்மைக் காலம் வரை பல தாரத் திருமணங்கள், ஆணுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அநீதி இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. பலதாரத் திருமணம், குழந்தை மணம் , சதி போன்ற பெண்களுக்கு எதிரான அனைத்து அநீதிகளும் மத அங்கீகாரத்துடன் நடந்து வந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆயிரக்கணக்கான பெண்களை மணம் புரிந்து பெண்களை போகப் பொருளாக மட்டுமே நடத்திய இதிகாச நாயகர்களுக்கு, பாடம் சொல்வது போல் ஏக பத்தினி விரதனாக ராமன் ஒருவன் மட்டுமே கொண்டாடப்படுகிறான் என்பதை மறந்துவிடக்கூடாது. இருதாரத் தடைச் சட்டம் என்பதே இந்தியாவில் 1956ல் தான் கொண்டு வரப்பட்டது.
ஆனால் நபிகளின் திருமணங்கள் இதிலிருந்து வேறுபட்டவை. ஆதரவற்ற, விதவைப் பெண்களுக்கு வாழ்வளிக்கவும், அரசு, அரசியல் காரணமான அரசியல் முடிவு அல்லது அரசியல் யுக்தியாகத்தான் இருந்தன. நபிகள் ஸஃபியா, ரைஹானா என்ற யூதப் பெண்களைப் பகை இனத்துடன் உறவு வளர்ப்பதற்காக மணந்து கொண்டார். கிறிஸ்துவர்களுடனான நட்புக்காக “மரியம்” என்ற கிறிஸ்துவ அடிமைப் பெண்ணை மணந்து கொண்டார். ஒன்பது விதவைகளை, அவர்களின் குழந்தைகளுடன் ஏற்றுக் கொண்டது, ஒரு சிறந்த மனிதாபிமான முன்மாதிரி.
மேலும் இஸ்லாம், மனித இயல்புக்கு மாற்றாக, துறவையோ, பிரம்மச்சரியத்தையோ, கன்னியாஸ்திரிகளையோ, சன்னியாசத்தையோ முன்னிலைப்படுத்திய மதமல்ல.
தர்ம யுத்தத்தை எல்லா மதங்களும் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், நபிகளின் போர் முறையை நாம் “அமைதியை ஏற்படுத்தி, சமாதானத்தை நிறுவுவதற்கான யுக்தியாக” எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடற்ற வன்முறையும், கொள்ளையுமே வாழ்வு நெறியாகா அமைந்துவிட்ட பாலைவன சமூகத்தில், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான வன்முறை என்றும், ஓயாத போர்களை நிறுத்துவதற்கான போர் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மட்டும்தான் வன்முறையை மேற்கொள்கிறது என்கிற கருத்து, பலம் வாய்ந்த, உலகு தழுவிய முதலாளித்துவ ஊடகங்களால் இன்று பரப்பப்பட்டு வருகின்றன. WMD என்ற முத்திரையின் பேரில் எண்ணெய் வயல்களில் இன்று இரத்தம் பீறிட்டுப் பாய்கின்றன. ஆயுத விற்பனைக்காக புதிய புதிய பகைகள் விற்பனைக்கு வருகின்றன.
இலங்கையில் பௌத்த வன்முறையாளர் இல்லை. குஜராத்தில் இந்துத் தீவிரவாதி இல்லை. பாலஸ்தீனத்தில் யூத வன்முறை வெறியர்கள் இல்லை. ஈராக்கில் கிறிஸ்துவ வன்முறையாளர் இல்லை. மாறாக, வன்முறை சார்ந்த அனைத்து அடைமொழிகளும் இஸ்லாமியர்க்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.
தங்களது வளமான எண்ணெய் வளத்திற்கு அவர்கள் தரும் விலை இதுவோ ?
இஸ்லாம் என்றதும் உடன் நினைவுக்கு வருவது சிலுவைப் போர். கிறிஸ்துவ பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் துவங்கிய புள்ளி இது. சிலுவைப் போர் 1095 முதல் 1249 வரை 154 ஆண்டுகள் நீடித்தது. புஷ் துவங்கி வைத்தது ஐந்தாம் சிலுவைப்போர். வணிக மையமான வெனிஸ், ஜினோவாவை ஐரோப்பியர் கைப்பற்றும் பொருளாதார அரசியல் லாபம் மதத்தால் வலிமை பெற்றது. பாலஸ்தீனத்தையும், ஜெருசலேமையும் கைப்பற்றிய கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை வெட்டிக் குவித்தனர். புனித ஜெருசலம் ரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டது. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்ட்டின் கால கட்டத்தில்தான் குழந்தைப் போராளியை உருவாக்கும் கொடிய போர்வெறி சிலுவைப் போரில் துவங்கப்பட்டது.
பக்தி மிக்க ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் இக்குழந்தைகளைப் பிடித்து அடிமைகளாக விற்றுக் காசு சேர்த்தனர். 1249 ல் பிரான்சின் ஒன்பதாம் லூயி முஸ்லீம்களால் கைது செய்யப்பட்ட உடன் நான்காம் சிலுவைப் போர் முடிவிற்கு வந்தது. அதன் பிறகு 1918 வரை 669 வருடங்கள் ஜெருசலமும், பாலஸ்தீனமும் முஸ்லீம்கள் வசமே இருந்தது. முதல் உலகப் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு பிரிட்டன் வசமானதும் இன்றும் பெரும் உலகத் தலைவலியாக உள்ள இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சனை துவங்கியது. 1948, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் 78% நிலப்பரப்பை அபகரித்து யூதர்களின் இஸ்ரேல் நாட்டை அரபு மண்ணில் உருவாக்கினர். 1918ல் இன்றைய இஸ்ரேல் நிலப்பரப்பில் இஸ்லாமியர் 55% . ஆனால் இப்பொழுது 14.6%. அதே ஆண்டில் யூதர்கள் வெறும் 50 ஆயிரம். ஆனால் இன்று 63 லட்சம் பேர். ஆனால் ஊடகங்கள் இஸ்ரேலிய பயங்கரவாதம் எனக் குறிப்பிடுவதில்லை. ஹமாஸ் மட்டுமே பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இஸ்லாம் கி.பி.712ல் துவங்குகிறது. முகமதி நபிகள் மறைந்து 80 ஆண்டுகளுக்குப் பின் அவரது மருமகன் முகமது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றியதில் இருந்து துவங்குகிறது. கி.பி.1002 – கி.பி.1026 வரை கஜினி முகமது 17 முறை இந்தியாவைத் தாக்கிப் பல கோயில்களைக் கொள்ளையடித்த பொழுது கோயிலின் செல்வங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் பிராமணப் பூசாரிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மங்கோலியத் தலைவன் செங்கிஸ்கான் வழியினரான முகலாயர்களின் ஆட்சி பாபர் காலத்தில் கி.பி.1526ல் துவங்குகிறது. கி.பி.1528ல் பாபர் அயோத்தி வந்ததன் நினைவாக மிர்பாக்கி என்ற அதிகாரி ஒரு மசூதியைக் கட்டினார். ஆனால் இந்திய பிற்போக்கு வலதுசாரிகள் 1942 டிசம்பர் 21 அன்று, ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் இந்த மசூதி கட்டப்பட்டது என்று கூறி பட்ட உடைத்து ராமர், சீதை சிலைகளை உள்ளே வைத்தனர். நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இதைக் கடுமையாக கண்டித்தனர்.
1528ல் ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கான இஸ்லாமிய, பிராமண, பிரிட்டிஷ் ஆதாரம் எதுவுமில்லை. இதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் (ராமசரிதா மானஸ் நூல்ஆசிரியர்) துக்காராம், கபீர், ராமானந்தர், மீராபாய், சைதன்யா போன்ற எவரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கவும் இல்லை. பின் வந்த இந்து மகான்களான தயானந்தர், ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தேபேந்திரநாத் தாகூர் போன்ற எவரும் இதுபற்றிக் குறிப்பிடவில்லை.
அதே காலத்தில் அயோத்தியில் நிலவிய தொற்றுநோய், வறுமை மற்றும் கீழ்சாதிக்காரர்களை பிராமணர்கள் இழிவு படுத்திய நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்பொழுது, ராமர் கோவில் இடிப்பு மட்டும் எப்படி இடம்பெறாமல் போயிருக்க முடியும் ?
Akbar (அக்பர்)
ஆனால் பாபரோ தமது உயிலில், கி.பி. 1530ல் “பெரும்பான்மையான இந்து மதத்தை மதிக்கவும், பசு வதையைத் தவிர்க்கவும், வாளால் அன்றி அன்பால் ஆளவும்” எழுதியுள்ளார்.
50 ஆண்டுகள் நல்லிணக்க ஆட்சி செய்த அக்பரை “இந்திய தேசியத்தின் தந்தை” என்று புகழ்கிறார் நேரு. இந்துக்கள் மீதான ஜிஸியா வரியை நீக்கி, ராஜபுத்திரப் பெண்ணை மணந்து சர்வ சமய ஒற்றுமைக்கான உரையாடலை நிகழ்த்தியவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர் ஏற்கும் “தீன் இலாஹி” என்ற புதிய மதக் கோட்பாட்டை உருவாக்கினார். அக்பரின் நிதி அமைச்சர் தோடர்மால் அக்பரின் சார்பாக வாரணாசியில் அனுமார் கோவில் கட்ட இடம் வழங்கினார். அது துளசி அனுமார் மந்திர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஔரங்கசீப்பின் மீது மதவெறியர் என்கிற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், தமக்கு இந்து மதம், மொழி, பண்பாடு பற்றி கற்பிக்காத தனது ஆசிரியர் பயனற்ற அரபுமொழியைக் கற்பித்தது குறித்து அவர் எழுதிய கண்டனக்கடிதம் அவர் பற்றிய மாற்று வடிவத்தை உருவாக்குவன.
முகலாயர்களின் பிரதிநிதிகள் தென்னகத்திற்கு வந்து சில பகுதிகளைப் பிடித்தார்களே தவிர, முகலாயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் தென்னிந்தியா வரவில்லை. ஹைதர் அலியும், அவரது மகன் திப்புவும் பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர் என்பது வரலாறு. திப்பு இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் சின்னமாக விளங்கினான். திப்புவின் அவையில் பூர்ணய்யா, அப்பாஜிராவ், சாம அய்யங்கார், கிருஷ்ணராவ் எனப் பல இந்துக்கள் பதவி வகித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போரைத் துவக்கிய பெருமை திப்புவையே சாரும். அதுபோல உலக வரலாற்றில் போர்க்களத்தில் போரிட்டு வீரமரணமெய்திய ஒரே மாமன்னன் என்ற புகழும் இவருக்கே உரியது.
ஆட்சி, அதிகாரம், வாள், வன்முறை மூலம்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கூற்று தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் பொருந்துவதாக இல்லை. தமிழகமும், கேரளமும் ஆட்சி வழியிலன்றி வணிக ரீதியில் இஸ்லாம் தோன்றும் முன்னரே அரபு நாடுகளுடன் உறவு கொண்டிருந்தன. யவனர்கள் எனும் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றம் பற்றி சங்கப் பாடல்கள் கூறுகின்றன. முகமது நபிகளின் சமகாலத்தில் (கி.பி.630) மதுரை கோரிப்பாளையத்தில் கூன் பாண்டியனிடம் இஸ்லாமியர்கள் நிலம் வாங்கிய ஆவணமும் உண்டு.
ஒடுக்கப்பட்ட சமணர், பௌத்தர், கள்ளர், நாடார், தலித்துகள் சமத்துவம் வழங்கிய இஸ்லாமுக்கு விருப்பமுடன் மதம் மாறினர். தமிழக, கேரள முஸ்லீம்கள் வட இந்திய முஸ்லீம்களைப் போல் அல்லாமல், தமிழ், மலையாளம் மட்டுமே பயன்படுத்துபவர்களாக உள்ளனர். “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முதன் முதலாகத் தமிழுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
அதுபோல , தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு மகத்தானது. “சீறாப்புராணம், முகைதீன் புராணம், நாயகர் புராணம்” போன்ற பெரும் இலக்கியப் படைப்புகளும், சீதக்காதி போன்ற புரவலர்களும், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், சவ்வாதுப் புலவர், செய்க் அப்துல் காதர் நயினார் லப்பை போன்ற படைப்பாளர்களும் தமிழை வளப்படுத்தியுள்ளனர்.
மதமாற்றத்தை ஏற்றுக் கொண்ட மதங்கள் இஸ்லாமும், கிறித்துவமும். ஆனால் இந்து மதமோ அவற்றின் உட்பிரிவான சாதி அமைப்போ இவ்வகை மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஜுடாயிசத்திலும் யூதர்களைத் தவிர வேறு யாரும் சேர முடியாது.
இந்து மதத்தின் தீண்டாமையும், பௌத்த சமண மதத்தாரைக் கழுவிலேற்றிய கொடுமையும், சார்வாகர் என்ற நாத்திகத் தத்துவத்தினரைத் தீயிலிட்டுக் கொன்ற வன்முறையும் மறந்து இஸ்லாம் மட்டும் வன்முறை சார்ந்த மதமாக, இந்துக்களுக்கு எதிரான மதமாக சித்தரிக்கப்படுவது ஏன் ? பரசுரபாகு எனும் மராட்டிய மன்னன் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டபொழுது, சங்கராச்சாரியாரைக் காப்பாற்றியது திப்பு சுல்தான்தான். மன்னர்கள் என்றாலே கொள்ளையர்கள்தான் என்பதற்கு மதம் ஒரு பொருட்டல்ல.
மதம் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதற்கு வங்க தேசப் பிரிவினை நல்ல உதாரணம். ஒன்றுபட்ட இந்தியக் கூட்டாட்சியின் 150 கோடி மக்களில் 50 கோடிப் பேர் முஸ்லிம்களாக இருந்திருப்பர். மூன்றில் ஒரு வாக்காளர் முஸ்லிம். இவர்களை ஒதுக்கிவிட்டு ஜனநாயகம் நிற்காது. எனவே இவர்களுக்கு எதிரான வன்முறைகளும் சாத்தியமில்லை. ஆனால் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் பிரிவினைகள் இந்திய முஸ்லீம்கள் மீதான ஒடுக்குதலுக்கு வழிவகுத்துவிட்டன. கேரளா, மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் 25%. குஜராத்தில் 9%. குஜராத் போன்ற கலவரங்கள் கேரளாவில் நடப்பதில்லை. பாகிஸ்தானால் இந்திய முஸ்லீமகளுக்கு எவ்விதப் பாதுகாப்புமில்லை. பாகிஸ்தானில் 15 கோடி முஸ்லீம்கள், இந்தியாவில் 17 கோடி முஸ்லீம்கள். சிதறிக் கிடக்கும் இவர்கள் முற்றுகையிடப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். இந்து அடிப்படைவாதம் வளரவே பாகிஸ்தான் அடித்தளமிட்டது. மதச்சார்பின்மை அரசியல் மேலும் பலவீனப்பட்டுவிட்டது. அசாம், காஷ்மீர் உட்பட தேசிய இனங்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண நாம் அவர்கள் நிலையிலிருந்து சிந்திப்பதும் அணுகுவதும் பிரச்சனைகள் தீவிரமடையாமல் தீர்வு காண இன்றும் உதவக்கூடும்.
“தாயே உன்னை வணங்குகிறேன்” எனும் வந்தே மாதரப் பாடலைப் பாடுவதற்குத் தயக்கம் ஏன் ? எனும் கேள்வி நியாயமானதே. ஆனால் யார் அந்தத் தாய் ? அது எப்போது எதற்காகப் பாடப்பட்டது. அதன் முதலிரண்டு அடிகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டது ஏன் ? அந்தத் தாய் இந்துக்களின் காளிதான். பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்ற சனாதன வங்க பிராமணர் 1875ல் எழுதிய “ஆனந்த மடம்” நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் என்ற பிராமணன் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடல் இது. பிரிட்டிஷ் அரசு கூட இந்து மத ரீதியிலான தேசபக்தி நாவல் என அங்கீகாரம் தந்தது. வந்தே மாதரம் பாடல் தேசபக்திப் பாடல் அல்ல. இந்து மத வெறியூட்டும் பாடல். முஸ்லிம் எதிர்ப்புப் பாடல். மத வெறியற்ற, மத நல்லிணக்கம் வேண்டும், சமாதான சகவாழ்வு விரும்பும் எவரும் இப்பாடலைப் பாட முன்வர மாட்டார்கள்.
பாலைவனப் பகுதியில் சிறு சிறு குழுக்களாகச் சிதறி, பல பல உருவங்களை வழிபட்டு, கொள்ளையே தொழிலாக வாழ்ந்த மக்களை நாகரிகப்படுத்தி ஒழுங்குபடுத்த உருவான மதம் இஸ்லாம். இன்று உலகம் முழுதும் பரவி 55 நாடுகளில் அரசாண்டு கொண்டு, விஞ்ஞானம் முன்னேறிய நாடுகளில் பரவி சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்து கொண்டுள்ள மதம். மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை அனுமதிக்காது என்பது மதத்தை பிற்போக்கு சக்திகளின் பிடியில் தள்ளிவிடும்.
நபிகளின் மறைவுக்குப் பின் 5,96,000 ஹதீக்கள் (குரானில் இல்லாத நபிகளின் போதனைகள்) போலியானவை என்று கூறி 7257 மட்டும் ஏற்றுக் கொண்டார் அல்புகாரி (826-888). ஹதீத்களைக் காட்டி சட்டம் உருவாக்குவதை உலமாக்களே எதிர்த்தனர்.
இஸ்லாமிய எழுத்தாளரான ஏ.ஜி.நூரானி் , “இன்று முஸ்லிம்கள் குரானுக்கு மாறுபட்டு மோதாதிருத்தல், குரானில் சொல்லப்படாதது இஸ்லாமிய அரசு என்பதை உணர்தல், குரானில் சொல்லப்படாத ஜிகாத் என்பதை வக்கிரமாகத் திரித்துப் பயன்படுத்துதல் இவற்றைக் கைவிட்டுவிட்டு இஸ்லாமை நவீனமயப்படுத்துவது அவசியம்” என்பதை வலியுறுத்துகிறார். “இஸ்லாமிய அரசு என்பது அரசியல் குறிக்கோள். நாடு பிடிக்கவும், மக்களைச் சுரண்டவும், தமது ஆடம்பர உல்லாச வாழ்வுக்காகவும் கலிபாக்கள் துவங்கியதே” என்கிறார் ஆய்வாளர் வில்பரட் மேட்லாங்.
ஆட்சியாளர்களாக இருந்த பென்பெல்லா, நாசர், மொசாத், நஜிபுல்லா, சுகர்னோ, ஹபிப், முஸ்தபா கமால் பாட்சா போன்றோர் இஸ்லாமியப் புரிதலை மாற்றி, பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்து, அவை குரானுக்கு முரண்பட்டதல்ல என்று உணர்த்தி மக்கள் ஆதரவு பெற்றனர். பலதார மணத்தடை, பெண்ணுக்கு ஆணுக்கு விவாகரத்து உரிமை, விவாகரத்து உரிமை கட்டுப்பாடு ஆகியவை மதப் பிற்போக்காளர்களை மீறி பெருவாரி மக்களின் வரவேற்பைப் பெற்றன. மதச் சார்பற்ற நவீன கல்வியை கமால் அட்டா டர்க் பூர்கிபாவில் அமலாக்கினார்.
பிற சக இந்திய சமூகத்தினர் விரும்பாத, தவறாகப் பார்க்கப்படும் பழக்கங்கள் மாற்றப்பட இஸ்லாமிய சமூகம் தமக்குள் ஆய்வு செய்வது அவசியம். இஜித்திகாத் என்ற அறிவு சார்ந்த ஆய்வுக்கு பதில் முடக்கும் ஜிகாத் முன்னிலைப்படுத்துவது ஆபத்து என்பதை உணர வேண்டும். புர்கா, பர்தா, தலாக், பெண் ஜீவனாம்சம், பெண் கல்வி, வேலை மறுப்பு, உரிமை மறுப்பு, பலதார மணம் போன்றவை இஜ்திகாத்துக்கு உட்பட வேண்டும். இஸ்லாமியரிடம் சகிப்புத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை இஸ்லாமிய அறிஞர்களும் ஏற்கின்றனர். ஏசுவுக்கும், மேரி மகதலேனாவுக்கும் உறவு என்ற டாவின்சி கோட் 5 கோடிப் பிரதிகள் விற்கப்பட்டது. இதனால் கிறிஸ்து மதம் சிதறிவிடவில்லை. இப்பொழுதுள்ள பைபிளுக்கு மாற்றாக எழுதப்பட்ட பல வேதங்கள் உண்டு. விமர்சனங்கள், விளக்கங்கள், புதிய கோணங்கள், மறுவாசிப்பு ஆகியவற்றால் மட்டுமல்ல, அடக்குமுறைகளால் கூட மதம் அழிந்துவிடவில்லை என்பது வரலாறு.
இஸ்லாம் ஒரு உருவத்தை முன்வைத்ததல்ல. அது ஒழுங்கின்றி, ஒற்றுமையின்றிச் சிதறி வாழ்ந்த மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்த உருவான நன்முயற்சி. இஸ்லாம் இதுவரையான அனைத்து மதங்களிலிருந்தும், தத்துவங்களிலுமிருந்தும் உருவாக்கப்பட்ட வாழ்வு நெறி. இஸ்லாம் புதுமை, சீர்திருத்தம், புரட்சி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு உருவான மதம்.
எனவே மனித குலத்தின் ஒற்றுமையை உருவாக்கும் மதச்சார்பற்ற சமத்துவ நோக்கு, போரற்ற, வன்முறையற்ற, பகிர்வு உணர்வுமிக்க சமாதான வாழ்வு, இவற்றை வலியுறுத்தும் அனைத்து சக்திகளுடனும் உறவு கொண்டு கைகோர்த்து, போராடி புதிய உலகை உருவாக்குவதில் இஸ்லாம் ஆக்கப்பூர்வமாக முன்னிற்க முடியும்.
“மனிதர்களாகி” உங்களில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு சட்ட செயல்முறை வரையறுத்துத் தந்துள்ளோம். அல்லா விரும்பியிருந்தால் அனைவரையும் ஒரே இனமாக, ஒரே மதமாகப் படைத்திருக்க முடியும். அவன் உங்களுக்குக் கொடுத்ததைச் சோதித்துப் பார்க்கத்தான் இவ்வாறு செய்தான்’ என்கிறது குரான்.(5:48)
சோதனையில் வெற்றி பெறுவதும், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதுமே நம் அனைவர் முன் உள்ள தலையாயக் கடமை.
“இன்ஷா அல்லாஹ்”
ஒரு ஆசிரியராக வரலாற்றை அணுகுதலும் , மதங்களின் தோற்றம் குறித்த புரிதலும் மிக அவசியம் என நினைத்து இந்த சிறுநூலை வாசித்தேன்.
இன்று உலகில் நிலவும் அனேக வன்முறைகளுக்கு மதவெறி ஓர் காரணம் என்பதை நாம் அறிவோம்.
அந்த அடிப்படையில், இந்நூல் எனக்கு அந்நிய மதமான “இஸ்லாமைக்” குறித்து ஓரளவு புரிந்து கொள்ள உதவியது.
எல்லா மத வெறியும் ஆபத்தானதே.
எல்லா மதங்களிலும் வன்முறைகள் உள்ளன.
எல்லா மதங்களிலும் புராணக் கதைகளும், போலி உருட்டுகளும் கொட்டிக் கிடக்கின்றன.
எனவே, இந்தப் பதிவு முன்வைக்கிற மாற்று மத விமர்சனத்தை, அந்த காலகட்டத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.
மூன்று நாட்களாக, எடிட் செய்து, டெலிட் செய்து, மறுபடியும் டைப் செய்து, இஸ்லாமைப் பின்பற்றும் நண்பர்களின் கருத்து கேட்டு, என்னளவில் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிவாக இதை வடிவமைத்திருக்கிறேன்.
இதை வாசிக்கும் எந்த ஒரு மதப்பற்றாளருக்கும் முரண்பாடுகள் எழும் என்பதை அறிவேன்.
ஒருவேளை, அப்படியான முரண்பாடுகள் எழுமாயின் அவற்றை உணர்வு & நம்பிக்கை ரீதியில் அணுகாமல், தர்க்க ரீதியாக அணுகி சான்றுகளின் அடிப்படையில் மறுக்கலாம்.
காலங்காலமான நம்பிக்கைகளில் இருந்து ஒரு புதிய உரையாடலைத் தொடர்வது என்பது மானுட நாகரீகப் போக்கின் முக்கியமான நகர்வு.
புத்தகம் : மதவாத தேசியம் ஆசிரியர் : பேரா.ராம் புனியானி தமிழில் : ராஜசங்கீதன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் பக்கம் : 32 விலை : ரு. 30 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mathavatha-dhesiyam-ram-puniyani/ இந்த சிறு புத்தகம் ஆகஸ்டு 3…
முகலாய ஆட்சிக் காலம் முழுவதும் கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நாத் மரபினர் பேரரசர்களிடமிருந்து பரிசுகளும் நிதியுதவிகளும் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வமான ஆலய ஆவணங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. கிறிஸ்டைன் மாரேவா கர்வோஸ்கி [முகலாய ஆட்சியாளர்களை இந்தியாவின் நாயகர்களாக எப்படிக் கருத முடியும் என்று உத்தரப்…
நாட்டில் தற்போதுள்ள சமூக அமைப்பைக் கடுமையாகச் குற்றஞ்சாட்டும் விதத்தில், இந்தியச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்கிற உண்மையை சமீபத்தில் வெளியாகியுள்ள அரசாங்கத்தின் சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. 2011இல் மேற்கொள்ளப்பட்ட…
[இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு மட்டும் முஸ்லீம்களை காவல் அடைப்பு முகாம் ஏற்படுத்தி அடைத்து வைத்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை இவ்வாறு அடைத்து வைத்திருக்கிறது. ஏப்ரல் 11இலிருந்து இவ்வாறு அடைத்து வைத்திருப்பவர்களுடன் பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று…