“தாழை இரா. உதயநேசனின்  இதழ்ப்பணி” கட்டுரை – பாரதிசந்திரன்

“தாழை இரா. உதயநேசனின் இதழ்ப்பணி” கட்டுரை – பாரதிசந்திரன்
வளமிக்கத் தமிழுக்குப் பல்வேறு நிலைகளில் தம் பங்களிப்பைச் செய்கின்றவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கின்றனர். அவர்களின் பணி மிகச் சரியாக இலக்கிய வரலாற்றில் பதிவாகி அடுத்த தலைமுறைக்கு அது சென்றடைகிறதா? என்பது தான் அவசியமாகின்றது. அவ்வகையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில், பதிவு செய்யப்பட வேண்டிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர் தாழை இரா. உதயநேசன் ஆவார்.

கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல்லாற்றல்திறனைப் பல நூல்கள் வழி வெளிப்படுத்தித் தமிழின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக விளங்கிக் கொண்டு, அடுத்தடுத்து இணையத்தில் பல எழுத்தாளர்களை ஒன்றிணைத்துப் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து கொண்டிருப்பதோடு, தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றை இலக்கியத்திற்காகவே நடத்தியும், உலகமக்கள் தமிழைக் கற்கவும், ஆழங்கால்படவும், “அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்” என்னும் சிறப்புமிக்கப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தும், இன்ன பல செயல்கள் செய்தும் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றி வருகின்றார்.

தற்பொழுது, இன்னும் ஒரு மணி மகுடமாக ‘முத்தமிழ் நேசன்’ எனும் இலக்கிய மாத இதழையும் தொடங்கி நடத்தி வருகிறார். அவரின் இத்தகு தமிழ் இதழியல் பணி குறித்துப் பதிவு செய்வது இன்றியமையாததாகிறது.

‘இனிக்கும் இலக்கிய இதழ்’ எனும் தாரக மந்திரத்தினைக் கொண்டு இவ்விதழ் பிப்-மாதம் 2022-ல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வணிக நோக்கும் சார்புத் தன்மையும், மேதமைப் பண்புடனும் வந்து கொண்டிருக்கும் இக்கால வணிக இலக்கிய இதழ்களுக்கு மத்தியில், எளிமையையும், நவீனத் தன்மையையும், சார்புத் தன்மையில்லாதும், வணிக நோக்கமிலாது வந்து கொண்டிருப்பது ‘முத்தமிழ் நேசன்’ இதழின் சிறப்புகளாகும்.

'Thalai Ira. Udayanesan's Magazine Work” Article - Bharatishandran “தாழை இரா. உதயநேசனின் இதழ்ப்பணி” கட்டுரை - பாரதிசந்திரன்

இரசனையை மிகுத்து எழுதத் தூண்டும் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. பல புதிய எழுத்தாளர்களின் தரமிக்கப் படைப்புக்கள் ஒவ்வொரு இதழிலும் காண முடிகின்றது. பக்க வடிவமைப்பும், அச்சு எழுத்துக்களின் வசீகரமும், படைப்புகளின் மேன்மைத் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக இவ்விதழ்களை உருவாக்கியிருக்கின்றன.

இலக்கிய இதழ் ஒவ்வொரு வாசகனையும் ஒரு படி உயர்த்தி, அவனுக்குள் வேதியியல் மாற்றத்தினைப் போல் ஏதாவது ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இச்செயல்பாட்டினை இவ்விதழ்கள் சரிவரச் செய்கின்றன என்பதற்கு உதாரணமாக ஒரு கவிதையை இங்கு எடுத்துக் காட்டலாம். தாழையாரின் ஹைக்கூ கவிதை அதுவாகும். அக்கவிதை,

“விடியலில் மழை
பாத்திரத்தில் நிரம்புகிறது
சொட்டு சொட்டாய் ஓசை”

என்பதாகும். இக்கவிதைக்குள் ‘ஓசை’ எனும் சொல் கவிதையில், காட்சிக்கு அப்பாற்பட்ட ஏற்புடை முரணாக(Acceptance paradox) வந்திருக்கிறது. ஆனால், அக்காட்சியினுடாக இச்சொல்லின் பொருளும் இயைபே.

மழையை இரசித்தலின் காட்சி மனதிற்குள் விரிகிறது. அங்கு சொட்டு சொட்டாய் நீர்தானே சேகரமாகிறது. ‘நீர்’ எனும் சொல் வந்திருந்தால் எதார்த்தவியல் கவிதையாக (Realist poetry) மலர்ந்திருக்கும். இங்கு நீரும் நிரம்புகிறது. அதன் நிரம்புதலின் ‘ஓசையும்’ கேட்கிறது. ஓசை கேட்குமே ஒழிய, அதெப்படி நிரம்பும்? ஆனால், கவிஞனுக்கு நிரம்பும். வாசகனுக்கு இதுவே பிரமிப்பையும், உற்சாகத்தையும் தரும். விடியலின் சுகமோடு, மழையின் சுகத்தையும் இணைந்து, அதன் ஓசையும் உள்ளீடு செய்து ஐம்புலன்களையும் ஒன்று சேர்த்து இக்கவிதை இரசிக்க விட்டிருக்கிறது எனலாம்.

ஆசிரியர் த. அமுதா அவர்களின் தலையங்கம் சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து நடுநிலையை உயர்த்திப் பிடித்திருக்கிறது. ‘கல்வி நிலையங்களின் அவலப் போக்கு’ குறித்து ஆகஸ்டு 2022-ல் எழுதும் பொழுது, ‘கல்வி நிறுவனங்களில் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், இதை நாடு என்று சொல்லிக் கொள்வதில் எந்தப் பொருளுமில்லை’ எனச் சாடுகின்றார். எழுத்துக்களில் உண்மைத் தன்மையும், இனம் காட்டி அழைத்துச் செல்லும் போக்கும் இதழ் ஆசிரியரின் சிறப்பை உணர்த்துகின்றன. இவை,

‘எரிதழல் எங்கும் பாரடா
எரியுது வாழ்வெனக் கூறடா’
…….. ……

நாடுகள் வளைய சுற்றிவந்தும்
நலங்காண மனதில்லை-வலிக்குதடா

எனும் தாழையாரின் வரிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
உலகளாவிய இலக்கியச் செய்திகள் ஒவ்வொரு இதழிலும் இடம் பெறுகின்றன. அவை புகைப்படங்களுடன் நேரில் பார்ப்பதைப் போன்ற வர்ணனைகளுடன் வெளி வருகின்றன. உலகளாவிய தமிழ் முன்னெடுப்புக்களை ஆர்வலர்கள் அறிந்து கொள்ளவும், இவை உதவுகின்றன.

கட்டுரை இலக்கியத்தின் வரையரைகளைத் தாங்கி இவ்விதழில் கட்டுரைகள் வெளியிடப் பெறுகின்றன. ‘கவியரசு கண்ணதாசன்’ குறித்தான சூர்யாவின் கட்டுரையில் கவியரசை ஆழமாக அறிந்து கொள்ள முடிகின்றது அவரின் பாடல்களை இரசனையுடன் விளக்கியிருப்பது சிறப்பாகும். முனைவர் ஜோ.சம்பத் அவர்களின் ‘பிரமளின் பார்வையில் மௌனி’ எனும் கட்டுரை மௌனியின் வேறொரு பரிணாமத்தை விளக்குகிறது. தத்துவப் போக்கற்ற கதை கூறும் மௌனியைப் பிரமளின் பார்வையில் வெளிப்படுத்தியிருந்த பாங்கு அழகாகும்.

நூல் குறித்த திறனாய்வுகளும், அரசு மற்றும் அரசு சாரா இலக்கிய விழாக்கள், தமிழகத்தில் நடந்த முறை குறித்த இலக்கியச் செய்திகள் இதழைச் சமப்படுத்துகின்றன. சிறுகதைகள், கவிதைகள் குறித்தத் திறனாய்வுக் கட்டுரைகளும் அதிகம் வெளியிடப்படுகின்றன.

இவ்விதழ்களில், நவீனக் கவிதைகள் தரம் மிக்கவையானவைகளாகக் காணப்படுகின்றன. சுசீலாமூர்த்தியின் கவிதை, பெண்ணின் மனவுணர்வுகளின் வலியை அழகாகக் கூறுகிறது. அக்கவிதை,

‘இமையோரத்தின்
சிறுமுடியொன்று
முத்தம் வேண்டி வதைக்கிறது…
சகலமும் மௌனித்த இரவில்.

காலக் கம்பளமேறி
நடுவானில் பெயரில்லாத
ஏதோ ஒன்றாய் ஆகி விடும் முன்
உயிர் வருடும்
உன் குரலைக் கேட்கின்றேன்….
பெருங்காதலாகிறது வாழ்வு.’

என்பதாகும். கவிஞர் தாமரையின் ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே’ எனும் ”வெந்து தணிந்தது காடு” திரைப்படப் பாடலைப் போன்ற ஏக்கமும் ஆசையும் இக்கவிதையில் வெளிப்பட்டு நிற்கின்றதை உணர முடிகின்றது. இதே போன்று ஆண் மனதில் எழும் மனவுணர்வு வெளிப்பாடாகத் தாழை இரா.உதயநேசன் அவர்களின் கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. அக்கவிதையானது,

‘ஒரே முறையாவது
உனது அன்பினைக்
காட்டு.
ஓராயிரம் முறை
மரித்து
உயிர்த்தெழுவேன்.’

என்பதாகும். காதலுணர்வுகளை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து வெளிப்படுத்தும் நயம் கவிதையின் அழகை மிகுக்கிறது.

இவ்வாறு, தாழையாரின் இதழான ‘முத்தமிழ் நேசன்’ இதழ் தொடர்ந்து இலக்கியப் பணியைச் செய்கிறது. அதோடு, புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. படைப்புக்களின் தரத்தை மேம்படுத்தி தமிழ் இலக்கியம் முன்னேறப் பாடுபடுகிறது. முத்தமிழ் நேசனின் இதழியல் பணி காலத்தால் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். இதனை முன்னெடுக்கும்”தாழை இரா.உதயநேசன்” அவர்களின் இப்பணிகளைத் தமிழுலகம் வியந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
தமிழ்ப்பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி,
ஆவடி.
9283275782
[email protected]