தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்… கட்டுரை – பேரா. எ. பாவலன்

தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்… கட்டுரை – பேரா. எ. பாவலன்
தமிழின் வேர்ப்பரப்பில் தன் பிறப்பை உறுதி செய்தவர் வீரமாமுனிவர்…

தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றும் சாவதில்லை என்பதற்கு வீரமாமுனிவர் ஒரு சாட்சி. அவர் மறைந்து சுமார் 275 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த தினமும், நினைவு நாளும் வரும் பொழுது அவர் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர் வேண்டுகோளுக்கு இணங்க இத்தாலி நாட்டு லிஸ்பனிலிருந்து வருகை தந்தவர் கான்ஸ்டன்ட் ஜோசப் பெஸ்கி.‌ முதலில் அவர் சமய பணி செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்தது. அதன் பொருட்டு 1810இல் கோவாவில் தரையிறங்கினார். அங்கு இருந்து விட்டு இருப்பு கொள்ளாமல், தமிழ்நாட்டிற்கு செல்வதற்கு பெரும் விருப்பம் கொண்டிருந்தார். அதனால் கொச்சி வந்தடைந்து நடைப் பயணமாக அம்பலக்காடு ஊரில் தங்கி பின்னர் மதுரை காமாயக்கன் பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழ்நாடு தான் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. சமயப் பணி ஆற்றுவதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதை அறிந்தவர், முதலில் தமிழைக் கற்கத் தொடங்கினார். ஆனால் தமிழ் அவரை புலன் மாற்றி போட்டது. தான் ஒரு கிறிஸ்தவர் என்பதையும் கடந்து தமிழராகவே வாழ பெரும் விருப்பம் கொண்டார். அதன் அடிப்படையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர் கூட செய்ய முடியாத அரும் பெரும் பணிகளை செய்தவர் வீரமாமுனிவர். விடுவான் முத்துசாமி பிள்ளை அவர்கள், இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது. கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு தலைக்குச் சூரியகாந்திப் பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும். வெள்ளைப்பாகையும் இளங்காவி யுந்தரிய முக்காடும். கையினிற் காவி ஒருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், நெற்பொட்டுச் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும். கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெந்தையின் மேலிட்டிருக்கும்புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும். தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார். வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து.குறிப்பாக தொல்காப்பியர் காலத்தில் இருந்து தொடங்கிய குழப்பத்தை வீரமாமுனிவர் தீர்த்து வைத்தார் என்று சொல்லும் அளவிற்கு தமிழில் புலமைப் பற்று திகழ்ந்தவர். தொல்காப்பியத்தை போலவே சிறந்த இலக்கண நூல் ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்ற தனியாத ஈடுபாட்டின் காரணமாக தொன்னூல் விளக்கம் என்ற ஐந்து இலக்கண கோட்பாட்டோடு அற்புதமான இலக்கண நூலை படைத்தவர். வீரமாமுனிவர் தன் வேர் பரப்பை இலக்கியத்தின் அனைத்து தலங்களிலும் பரவச் செய்தவர். இலக்கணம், இலக்கியம், மொழிபெயர்ப்பு, காப்பியம், உரைநடை இலக்கியம், அகராதி உருவாக்குதல், மொழிபெயர்ப்பு பணி, சிற்றிலக்கியம் இப்படி அனைத்து உள்ளடக்கத்திலும் தன் ஆளுமையை நிரூபித்தவர்.

வீரமாமுனிவரை முற்றும் முதலும் உணராதவர்கள் தான் அவர் மீது தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்கிறார்கள். அதில் ஒன்று இது. வீரமாமுனிவர் எப்படி இத்தனை அளவிற்கு இலக்கியத்தைப் படைக்க முடியும். அது கூட சாத்தியம்தான் தொல்காப்பியத்தை போலவே தொன்னூல் விளக்கத்தை அவரால் எப்படி எழுதி இருக்க முடியும். இன்னும் பலவாறு அவர்கள் அடிப்படைச் சான்றுகளே இல்லாமல் கேள்விகள் முன்வைக்கின்றனர். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல காரணம் இல்லாத விமர்சனத்திற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒன்று வீரமாமுனிவர் மேற்குலக தேசத்திலிருந்து தனது முப்பதாவது வயதில் இந்திய தேசத்திற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர் என்பதும் நன்கு அறியமுடியும். அதேபோல் தமிழ் அவருக்கு தாய் மொழி இல்லை என்பதையும் அனைவரும் அறிவோம். ஆனால் தொடர் முயற்சியும் பயிற்சியும் ஒரு மனிதனை கோபுரத்தின் உச்சாணிக்கொம்பை தொட முடியும் என்பதற்கு வீரமாமுனிவரின் அறிய முயற்சி ஒவ்வொருவருக்கும் பாடம்.

அந்த வகையில் அவர் பல நூல்களை படைத்திருக்கிறார். அந்த நூல்களின் விவரங்களை அறிந்தாலே போதும் அல்லது அந்த நூல்களின் தலைப்பை உற்று நோக்கினாலே போதும் தமிழ் படித்த வித்வானுக்கு கூட இப்படியான ஒரு சிந்தை எழுந்திருக்கும் என்பதில் சந்தேகம். முதல் முதலில் தமிழில் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் வீரமாமுனிவர். தொல்காப்பியர் கூட எகரமும் ஒகரமும் இயற்கை யற்றே என்ற ஒற்றை நூற்பாவில் சொல்லி முடித்து விட்டார். அதற்கு முன்பாக எத்தனையோ பெரிய ஆளுமைகள் அந்த நூற்பாவை படித்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் அந்த நூற்பாவில் ஏற்பட்ட மயக்கத்திற்கு தீர்வு சொல்ல முனைந்தது கூட இல்லை. முதல் முறையாக எகரத்தை ‘ஏ’ என்று ஒரு சிறு கோடு மட்டுமே உண்டாக்கி நெடிலாக மாற்றியவர். அதேபோன்று ஒகரத்திற்கு ஒரு சிறு சுழியை மட்டும் சுழித்து ஏகாரம் நெடிலாக மாற்றியவர்.

1822ஆம் ஆண்டு வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை முத்துசாமிப்பிள்ளை தமிழில் எழுதினார். அந்நூல் 1840இல் ஆங்கிலத்திலும் 1843இல் தமிழிலும் அச்சானது. அதில் அவர் “வீரமாமுனிவர் தமது ஜென்ம தேசத்திற்றானே தமது சுய பாஷையாகிய இத்தாலிய பாஷையோடு எபிரே, கிறீக்கு, லத்தீன், போர்ச்சுக்கீசு ஆகிய அநேக பாஷைகளிலே தேர்ந்த பாண்டித்தியராய் இருந்தன்றியும், இந்து தேசத்துக்கு வந்தபின்பு சமஸ்கிருதமும் தெலுங்கும் படித்துப் பற்பல அரிய நூற்களைச் செய்தார். தெலுங்கு பாஷைக்கு லத்தீனிலே வியாகரணமும் செய்தார்.

திருச்சிராப்பள்ளிக்கு நவாப்பாய் இருந்த சந்தா சாகிப்பைத் தாம் சந்தித்துப் பேசவேண்டுமென்று பார்சும், இந்துஸ்தானியும் மூன்று மாதத்திற்குள்ளாகப் படித்தார்” என்று கூறுகிறார். ஆகவே முத்துசாமி பிள்ளையவர்கள்படி வீரமாமுனிவருக்குப் பத்து மொழிகள் தெரிந்திருக்கின்றன என்று பதிவு செய்துள்ளார். ஆனால் இதை முனைவர் எஸ்.இராசமாணிக்கம் அடிகளார் மறுத்து
“முனிவருக்குத் தெரிந்த மொழிகள் தாய்மொழி இத்தாலி. முனிவர் எழுதிய நூல்களில் பாதி இலத்தீன் மொழியிலும், விவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் இருந்ததால் அதைக் கற்றிருக்க வீரமாமுனிவர் மறைப் பணியாற்றிய தளத்தில் போர்ச்சுக்கீசியம் அதிகாரப்பூர்வமான மொழியாகப் பயன்பட்டு வந்தது. முனிவர் அம்மொழியில் அகராதி முதலிய நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் பார்சும். இந்துஸ்தானியும் கற்றதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. மேலும் முனிவரது தெலுங்கு அறிவுக்கோ. சமஸ்கிருத அறிவுக்கோ தக்க சான்றுகள் இல்லை, முனிவர் வேறு சில மொழிகளை அறிந்திருக்க வேண்டும். பிரெஞ்சு மொழியில் அகராதி இயற்றியிருப்பதால் அது அவருக்குத் தெரிந்த மொழி. மேலும் போர்ச்சுக் கீசியத்தை ஒட்டி இஸ்பாஞ்ஞ மொழி அமைந்திருப்பதாலும், முனிவர் காலத்தில் (1680-1747) போர்ச்சுக்கல் இஸ்பாஞ்ஞ நாட்டோடு ஒரே நாடாக 1680 தொடங்கி 1740வரை இணைந்திருந்ததாலும், இஸ்பாஞ்ஞ மொழியே ஆட்சி மொழியானபடியாலும் அதை முனிவர் அறிந்திருக்க வேண்டும். ஆக மொத்தம் கணக்கிடுங்கால் வீரமாமுனிவருக்குத் தெரிந்த மொழிகள் என்று உறுதியாகக் கூறக்கூடியவை. இத்தாலி, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், போர்ச்சுக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பாஞ்ஞம், தமிழ் என்று எட்டு மொழிகள் ஆகும்”(மேலைநாட்டவர்களின் தமிழ்த்தொண்டு பக். 116,117) என்ற கருத்தை உறுதியாக பதிவு செய்து இருக்கிறார். வீரமாமுனிவரின் மொழி புலமைக்கும், இலக்கிய அறிவுக்கு பல சான்றுகளைக் காட்ட முடியும். தேம்பாவணி காப்பியமும், தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் உள்ளிட்ட சில நூட்கள் அவருடைய புலமைக்க போதுமானது.

திருமறைத் தொண்டர்களுக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய வேதியர் அல்லது உபதேசிமார்களுக்காக ஒரு பயிற்சிப்பள்ளி நிறுவினார். அவர் மேற்கொண்ட பணியில் சிறந்து விளங்கும்படி வீரமாமுனிவர் ‘வேதியர் ஒழுக்க நூலை எழுதியதோடு ‘ஞான உணர்த்துதல்’ என்ற தியான நூலையும் எழுதினார். அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கத் ‘தொன்னூல் விளக்கமும்’ அதன் உரையும் எழுதியபின் ‘சதுரகராதியும்’ தொகுத்துத் தந்து அவர்களுக்குச் செந்தமிழைக் கற்றுத்தந்தார்.

காரணமே இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பவர்களுக்கு இது ஒன்றே போதும். அவர் தமிழை எந்த அளவிற்கு உற்று கவனித்து படித்திருக்கிறார் என்பதற்கு. இருப்பினும் அவர் எழுதிய நூல்களை அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.

தேம்பாவணி
அன்னை அழுங்கல் அந்தாதி
திருக்காவலூர் கலம்பகம்
கித்தேரி அம்மாள் அம்மானை
அடைக்கல மாலை
வெண் கலிப்பா
கருணாம்பர பதிகம்
வண்ணம்
தனிப்பாடல்கள்
வேதியர் ஒழுக்கம்
வேதியர் ஒழுக்கச் சோதனை
வேத விளக்கம்
பேதக மறுத்தல்
லுத்தேரினத்தியல்பு
பொது நிருபம்
திருக்கடையூர் நிருபம்
பரமாத்மா குரு கதை
வாமன் கதை
ஞான உணர்த்துதல்
சதுரகதாதி
தமிழ் – லத்தின் – அகராதி
போர்த்துக்கீசியம் – லத்தின்- தமிழ்- அகராதி
தமிழ் – பிரெஞ்சு – அகராதி
பிரெஞ்சு- தமிழ் – அகராதி
கொடுந்தமிழ்
செந்தமிழ்
கிளாவிஸ்
தேம்பாவணி
தொன்னூல் விளக்கம்
திருக்குறள் உரை
திருக்குறள் உரை பேச்சுத் தமிழில்
திருக்குறள் உரை பரிமேலழகர் உரைத்தொகுப்பு
இந்திய பஞ்சாங்கம்
தமிழ்ப் பஞ்சாங்கம்
திருக்குறள் 1080 பாடல்கள்
பரமார்த்த குருவின் கதை
வாமன் கதை
இலக்கணங்களில் வரும் மேற்கோர்

இப்படி எண்ணற்ற நூல்களை இயற்றி தமிழின் சிறப்பை உலகறிய ஓர் அங்குலம் உயர்த்திய பெருமை அவருக்கு உண்டு.
அகராதி தொகுத்த ஆசிரியர் வீரமாமுனிவர் தொகுத்ததாகக் கருதப்படும் அகராதிகள் வருமாறு: 1.சதுரகராதி 2.தமிழ்-இலத்தீன் அகராதி 3. போர்ச்சுக்கீசியம் இலத்தீன்-தமிழ் அகராதி 4. தமிழ்-பிரெஞ்சு அகராதி 5.பிரெஞ்சு- தமிழ் அகராதி ஆகியவை. வீரமாமுனிவருக்குமுன் தமிழில் அகராதி இல்லை. அகராதியின் உள்ளடக்கத்தில் அகராதி என்ற பெயரே வீரமாமுனிவர் ஏற்படுத்தியதுதான். எனினும் மனப்பாடம் செய்யப் பெரும்பாலும் செய்யுளில் அமைந்த நிகண்டுகள் பல இருந்தன. மேலும் தமிழ் போர்ச்சுக்கீசியம் போன்ற இரட்டை மொழி அகராதி பலவற்றை முனிவருக்கு முன்னரே பிரயோன்சா போன்ற மேல்நாட்டவர் தொகுத்துள்ளார்கள். முனிவர் இயற்றிய அகராதி அனைத்திலும் சிறந்தது தமிழ்-இலத்தீன் அகராதியாகும். மேலும் முதல் முதலாகத் தமிழில் அமைந்த இச்சதுரகராதியால் முனிவர் ‘அகராதியின் தந்தை’ என்ற பெயரும் பெற்றுள்ளார்.
முனிவர் காலத்தில் தமிழ் பயில்வோருக்கு நல்ல பாடப் புத்தகங்கள் இல்லை என்கின்ற குறை இருந்தது. இக்குறையை நீக்கி, ‘பரமார்த்த குரு’ என்ற நூலைக் கொடுந்தமிழுக்கு முன்மாதிரியாகவும், தேம்பாவணியிலிருந்து எடுத்த வாமன் கதையைச் செந்தமிழ்ப் பாடமாகவும் எழுதினார். அயல் மொழியைப் பயிலும்போது ஏற்படும் சோர்வு, மனத்தளர்ச்சியைப் போக்க நகைச்சுவையோடு கூடிய பரமார்த்த குரு கதையை எழுதியதாகச் சொல்கிறார். இவ்விரு பாடப் புத்தகங்களும் மாணவருக்கு எளிதில் விளங்கும் வண்ணம் தமிழை ஒட்டித் தாம் அமைத்த இலத்தீன் மொழிபெயர்ப்பை இரண்டு பாடங்களோடும் இணைத்திருக்கிறார்.
முனிவர் காலத்தில் தமிழ் நெடுங்கணக்கு தெளிவாய் அமையவில்லை. ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்து புள்ளி பெறவில்லை. எகர ஒகரங்களில் குறில் நெடில் வேறுபாடு குறிக்கப் பெறவில்லை. அகர நெடிலைச் சுட்டும் காலுக்கும், ஒகர ஒகார உயிர்மெய்யில் வரும் காலுக்கும், ரகர மெய்க்கும் உயிர்மெய்க்கும் வேறுபாடு இல்லை. நான்கும் ஒரே வடிவில் அமைந்திருந்தன. தமிழ் தெரியாதவர்களுக்கு இந்நிலை எத்தகைய தொல்லை அளித்தது என்பது சொல்லத் தேவையில்லை. தேம்பாவணி முதலிய நூல்கள் எழுதிய பிறகு தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எகர ஒகரங்களில் சுழித்து வேறுபாடு காட்டினார். மேலும் நகரம் புள்ளி பெற ‘ரி’யகர உயிர் மெய் கீழே வளைவு பெற்றது. கால் முன் உள்ளபடி விடப்பட்டது ( முனைவர் எம். ஏ. சவேரியார், மேலை நாட்டறிஞர்களின் தமிழ் தொண்டு; 2014, பக்.114,115) இப்படி தொல்காப்பியர் காலத்தில் தொடங்கிய சிக்கலுக்கு சுலபமாக பதில் சொன்னவர். அப்படி தமிழில் முதல் எழுத்து சீர்திருத்த செம்மல் என்று அழைக்கும் அளவிற்கு உயர்ந்தவர்.

தமிழ் உரைநடை வளர்ச்சியைப்பற்றிக் கூறும்போது கைலாசபதி (1968:63-64) வீரமாமுனிவரைப் பற்றிக் கூறுவதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மேனாட்டவருள் வீரமாமுனிவர், தத்துவ போதக சுவாமிகள், சீகன்பால்க் ஐயர் முதலியோர் இயன்றளவு எளிமையாகத் தமிழ் வசனநூல்கள் எழுதினர். பொது மக்கள் பேச்சை ஆங்காங்குத் தழுவிக்கொண்டவராயினும், இவர்கள் தமிழ் உரையாசிரியர் நடையை முன் மாதிரியாகக்கொண்டே பெரும்பாலும் எழுதினர். இதனால், நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெரிதும் வற்புறுத்திக் கூறிய கிறிஸ்துவக் கொள்கைகளை எழுதிய போதும், இவர்களின் நடையில் உணர்ச்சிப் பெருக்கைக் காணமுடியாதுள்ளது. கடின உரைநடை அமைப்பு, உருகும் உள்ளங்களையும் உறைய வைத்தது போலும். ஆயினும் கல்வியறிவில்லாதாரும் கேட்டின்புறும் வண்ணம் வீரமா முனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு கதை’ நகைச்சுவை நிறைந்து காணப்படுகின்றது. அந்த வகையில், அறவியல் சார்ந்த நூல்களும் பயபக்தியுடன் கூடிய நூல்களுமே
எழுதப்பட்ட காலகட்டத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க அவைக்கும் வேடிக்கைக் கதையொன்றை எழுதித் தமிழ் வசனத்தின் தோக்கெல்லையை விரிவுபடுத்திய இத்தாலிய முனிவர் நவீன நகைச்சுவை எழுத்தாளரின் முன்னோடி என்று கூறலாம்..

கைலாசபதியின் இக்கூற்றில் வரும் “தமிழ் வசனத்தின் நோக்கெல்லையை விரிவுபடுத்திய” என்ற தொடர் மிகவும் ஆழ்ந்து நோக்கவேண்டிய தொடராகும். இலக்கிய இலக்கணங் களையும் கூறவும் மட்டுமே வீரமாமுனிவருக்கு முன் தமிழ் உரைநடை பயன்பட்டு வந்தது; இந்நிலையை வீரமாமுனிவர் முதன் முதலாக மாற்றி. வேடிக்கைக் கதையொன்றினை எழுதித் தமிழ் உரைநடையில் கதை எழுதும் பணியினைத் துவக்கி வைத்துள்ளார். இக்கதையினை வீரமாமுனிவர் எழுதுவதற்கான காரணம் எது என்பதனைக் குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

“18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் அக்காலத் திலிருந்த மடாதிபதிகளின் இழிநிலையை எடுத்துக்காட்டும் வகையில் பரமார்த்த குரு கதை என்னும் அங்கத நூலை எழுதினார். மூளையற்ற அக்குருவும் அவர் சீடர்களும் செய்யும் நகைப்பிற்கிடமான காரியங்களைச் சம்பவம் சம்பவமாக எழுதினார்.” என்று தாமஸ் சீனிவாசன் குறிப்பிடுவார். புராட்டஸ்டண்டு சபையினரின் நான்கு பிரிவினரையும் கேலி செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக தெ.பொ.மீ (1965:175) குறிப்பிடுவார்.
இதற்குப் பரமார்த்த குரு கதையில் நேரடியாகச் சான்று எதுவுமில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் விவிலியத்தில் இருந்து ஆதாரம் கேட்பதாக புராட்டஸ்டண்டு பிரிவினர் மீது குற்றம்சாட்டி அவர்களின் அவ்வியல்பினை பரமார்த்த குருவின் சீடர்களின் செயலோடு ஒப்பிட்டு “வேத விளக்கம் என்ற நூலில் வீரமாமுனிவர் இவ்வாறு எழுதுகின்றார்:

“இப்படியாகியும் பதிதர்… நாஞ்சொல்லுவதற்கெல்லா மீது வேதத்தில் எழுதினதாகக் காட்டுங்கள் என்றும். எழுதாததைச் செய்யோமென்றுந்… திரிகிறார்கள். அப்படிக் கள்ளக் குருவாகிய லூத்தோசிஷரான பதிதர் இதிலே பரமார்த்த குருவின் சீஷரேயானார்கள். அதெப்படியென்றால் இந்நாட்டில் வழங்கும் கதையின்படியே ஒரு கண் குருடும், ஒரு கால் நொண்டியும், வாலுமின்றிக் காதுமின்றித் தவ உருபமாய் வற்றியதோர் குதிரை மேலே பரமார்த்தகுரு வழிப் பாதையிற் போகையிலே கீழே தொங்கின மரக்கொம்பு பட்டுத் தலைப்பாகு பிறகே விழுந்ததாம். அதனைச் சீடர்கள் எடுத்தார்கள் என்றெண்ணிச் சற்றப்பால் நடந்தபின் அதெங்கேயென்று குரு கேட்டானாம். அதற்கவர்கள் தலைப்பாகு அங்கே விழுந்து கிடக்கும் என்றதற்கு அவன் கோபித்து, விழுந்ததெல்லாம் எடுக்கத் தேவையில்லையோ என்றான். அதைக் கேட்ட சீஷர் ஓடிப்போய் விழுந்த பாகையை எடுத்துக்கொண்டு வருகையில் அந்திராத்திரி பசும் பயிரில் மேய்ந்த குதிரை கழிந்து விடா நின்ற லத்தியிந் தலைப்பாகையில் ஏந்தியெடுத்துக் குருவின் கையில் வைத்தார்கள்(ஆ. சிவசுப்பிரமணியன், கிறிஸ்தவமும் தமிழ்ச் சூழலும்; 2014, பக். 85,86). இலக்கியத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் தன்மையில் அவருடைய பரமாத்மா குரு கதை அமைந்திருந்தது.
“ஒரு விடயத்தில் தமிழ், இந்தியாவின் மற்றைய சுதேச மொழிகளிலும் பார்க்க மேன்மையொன்றினையுடையதாக வுள்ளது மிகத்தொகையான கிறிஸ்தவ இலக்கியம் இம்மொழியிலேயுள்ளது. மற்றெந்தச் சுதேச மொழியினைப் பேசுபவர்களிலும் பார்க்கத் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாயிருந்ததால், அந்த [தமிழில்] எழுதப்பெற்றுள்ள [கிறிஸ்தவ] நூல்கள், மற்றைய மொழிகளிலுள்ள கிறிஸ்தவ நூல்களின் விகிதப்படி பார்க்கும் பொழுது அதிக தொகையினவாகவேயுள்ளன.”மீறோன் வின்ஸ்லோ – தமிழ் ஆங்கில அகராதியின் முன்னுரையிலிருந்து (1862).

கிறித்தவத் தமிழ்ப் பங்களிப்பு பற்றிப் பேசும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கிறித்தவத்தின் இரு பெரும் கிளைகளான றோமன் கத்தோலிக்கப் பிரிவும் கத்தோலிக்கம் அல்லாத கிறித்தவமும் தமிழ்நாட்டிற் பரவிய முறைமையினையும், அதன் காரணமாகத் தமிழ் இலக்கியப் பங்களிப்பிற் பெறும் (ஒன்றுக்கொன்று சிறிது வேறு பாடான இடத்தினையும் தெளிவுபடுத்துவதில்லை. கிறித்தவர்கள் தமிழுக்காற்றிய “தொண்டு” எனக் கூறிக் கிறித்தவர்களை மானசீகமாகத் “தமிழிலிருந்து ஒதுக்கிவைக்க விரும்பியோரும், கிறித்தவர்கள் பங்களிப்பினையும் மேனாட்டர்” பங்களிப்பினையும் எவ்வாறு பிரித்து நோக்குவது எனத் தயங்கினோருமெனப் பலர் இக்களத்திலே நடமாடியுள்ளனர் தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழிலேயுள்ள இலக்கியங்களின் காலவரன்முறை நெறிப்பட்ட வரலாறே எனக் கொண்டதனாலேயே இக்குழப்பம் ஏற்பட்டது (கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 2010, பக். 21) ரோமன் கத்தோலிக்கர்கள் செய்த பணியை பிரித்து அறிய வேண்டிய தேவை உள்ளது என்று கா. சிவத்தம்பி கூறுகிறார். மேலும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி அளப்பரியது என்றும் பதிவு செய்துள்ளார்.

கித்தேரியம்மாள் அம்மானை-கித்தேரி வரலாறு
வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரியம்மாள் அம்மானையில் கண்டுள்ளபடி, புனித கித்தேரி லுசித்தானியா நாட்டில் பிராகம் நகரில் காயன் என்ற மன்னனுக்கு மகளாக எட்டுத் தங்கைமாரோடு ஒரே சுரத்தில் கி.பி.120இல் பிறந்தாள். மன்னவனாலும், பிறராலும் என்ன பழி வருமோ என்று ஒன்பது பெண்களைப் பெற்ற தாய் அஞ்சி, சீலதி என்ற பாங்கியை மறைவாக அழைத்துக் குழந்தைகள் அனைத்தையும் எவரும் அறியாதபடி ஓடும்நீரில் எறியும்படி கட்டளையிட்டாள். கீழ்ப்படிவது போலக் காட்டிய சீலதி, அக்குழந்தைகளை ஏற்று, அவ்வூர் மேற்றிராணியாரிடம் ஒப்படைத்துக் கத்தோலிக்கத் திருமறையில் வளர்க்கும்படி வேண்டினாள். குழந்தைகளும் அவ்வாறே வளர்ந்து வந்தன. அக்குழந்தைகளின்பெயர்கள் வருமாறு: கித்தேரி, பாசீலி, செனேவுரி, வித்தோரி, எப்பேமி, வீரவி, பிறாத்தை, செருமானி, மாரீனை. மார்சியாள் என்பனவாம். இறைபத்தியில் வளர்ந்த அக்குழந்தைகள், தம் பிறப்பின் வரலாற்றை முனிவர் ஒருவரால் அறிந்தபின், அம்முனிவர் அறிவுரைப்படி துறவு வாழ்க்கை மேற்கொண்டனர்.

இவர்களது பெருமையும் சிறப்பும், அஞ்ஞான மதம் மேற்கொண்டவனும் கிறிஸ்துவ மத எதிரியுமான காயன் காதில் விழ, தன் ஆணைக்கு மாறாகக் கிறிஸ்துவ மதம் தழுவிய அக்கன்னியரைக் கொணர்ந்து, அந்த வேதத்தைக் கைவிடுமாறு பணித்தான். சிறுமியர் மறுத்தது மட்டுமன்று; கிறிஸ்து மதத்தின் பெருமையைப் பல சான்றுகளால் நிலைநாட்டினர். அச்செயலில் கித்தேரி சிறந்து விளங்கினாள். அவர்களது அறிவையும் அஞ்சாமையையும் கண்டு வியந்த மன்னன், அவர்கள் யார் என்று வினவியபோது, தன் மக்கள் என்று வியப்போடு கண்டு மகிழ்ந்து. தன் அரண்மனையில் வாழும்படி செய்தான். சில நாள்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் தன்மதம் ஏற்கவேண்டுமென அரசன் வற்புறுத்தினான். உடன்படாத நிலையில், அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். சிறைவாழ்க்கையைக் கண்டு அஞ்சாது கடவுளை வாழ்த்தி வரும்போது, வானதூதர் சிலர் வந்து அவர்களை விடுவித்தபின், அவர்களைத் தனித்தனியாய்ப் பிரித்துப் பல் வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் அவர்களைக் காணவில்லை. மன்னன் பல இடங்களுக்கு ஆளனுப்பித் தேடுகையில் கித்தேரி மட்டும் அகப்பட்டாள். ஒருத்தியாவது கிடைத்தாள் என்ற நிலையில் கித்தேரிமீது தனியன்பு காட்டினான். கித்தேரியும் அரண்மனையில் வாழ்ந்து வந்தாள். எனினும் அவளுக்குத் தெரியாமல் திருமணம் பேசி, அதற்கு இசைய முப்பது பாங்கியரை அவளிடம் அனுப்ப, அனைவரும் தோல்வியுற்றனர். இதனால் கோபமுற்ற மன்னன் கித்தேரியை மீண்டும் சிறையில் அடைத்தான்.
அங்கே மரியன்னையைப் பார்த்து நெஞ்சுருகத் தன்னையும் தன் கற்பையும் கண்காணிக்குமாறு வேண்ட, மரியாளும் அவள்முன் தோன்றிப் பல தேவ அணிகலன்களால் அவளை அலங்கரித்துப் பொம்பேர் மலை செல்லுமாறும், அங்கு அவள் வெற்றி வாகை சூடி வீடுபேறு அடைவாள் என்றும் உறுதிமொழி கூறியபோது, வானவர்கள் அவளையும் முப்பது தோழிமாரையும் பொம்பேர் மலையில் கொண்டு சேர்த்தனர். அங்கிருந்த கோயிலில் ஆண்டவனை வழிபட்டு அருந்தவ வாழ்க்கை மேற்கொண்டனர். காயனுக்குத் தெரியாவிட்டாலும், கித்தேரியின் துறவறச் சிறப்பு எங்கும் பரவ, பலர் அவளைக் காண வந்தனர். அவர்கள் வழியாய்ப் பக்கத்திலுள்ள புரோசன் என்ற சிற்றரசன், காயனுக்கஞ்சிக் கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு அஞ்ஞானியானதைக் கேள்விப்பட்டுமனம் வருந்தினாள். இறைவனை மன்றாடியபின் அவன் அலை சென்று. கிறிஸ்தவ மதப் பெருமையை நன்கு எடுத்தோதியபோது மறுப்புக் கூறமுடியாத புரோசன் கித்தேரியைச் சிறையில் அடைத்த இவ்வாறு கித்தேரி மூன்றாம் முறை சிறையுண்டாள். எனினும் ஒருவன் அவளை விடுவித்துப் பொம்பேர் மலை சேர்ப்பித்தான் மறுநாள் அவளைச் சிறையில் காணாது கோபமுற்ற புரோசன், படைகள் சூழ அம்மலை ஏறி வருகையில், கை கால் விளங்காமல் பார்வையி தரையில் விழுந்தான். அவனை ஏவலர் மலையுச்சிக்குச் சுமந்து செல்ல அவனும் அழுது மனந்திரும்பி, இழந்த கை கால் கண்களைப் பெற்று திருமறையை மீண்டும் தழுவி, கித்தேரி விருப்பப்படி நாட்டை நல்லமுறையில் ஆண்டு வந்தான். மேலும் கித்தேரி சாகும் நாளில் தானும் செத்து வீடுபேறு அடைவான் என்ற முன்னுறுதியும் பெற்றான்.

நிற்க. புரோசனின் மதம் மாறுதலும் அதன் காரணமும் காடன் செவியில் பட்டன. கோபமுற்ற மன்னன் புரோசனைக் கொல்ல உடனே போர்வீரரை அனுப்பினான். மேலும் கித்தேரி தன் மகளானாலும், அவன் இருக்கும்வரை அமைதி இராது என்று எண்ணி அவளுக்கு மாப்பிள்ளையாய்த் தேர்ந்தெடுத்த பரிபாலனையே அனுப்பி, அவளையும் வெட்டுமாறு கட்டளையிட்டான். அவனும் மனமகிழ்ந்து திரளான சேனையோடு பொம்பேர் மலையை வளைத்தான். இஃதறிந்த கித்தேரி மலையிலிருந்து இறங்கித் தன் தோழியரோடு அவனை நோக்கிச் சென்றாள். பரிபாலன் கல்நெஞ்சோடு கித்தேரியைப் பிடித்து அவளது தலையை வெட்டினான். அதேபோல் தோழியரும் வெட்டுண்டனர். வெட்டுண்டாலும் கித்தேரி தன் தலையைக் கையிலேந்திக் கொண்டு மலையுச்சி சென்று, கோயிலின் முன் காணிக்கையாக வைத்த பின்னரே உயிர் நீத்தாள். அன்று கி.பி.130 வைகாசி (மே) 21-ஆம் நாள். இதைக் கண்ட கொலைஞன் பரிபாலன் மனந்திரும்பி மதம் மாறினாள். கித்தே செத்தபோது, வானம் இருண்டு இடியோடு பெருமழை கொட்டட படைவீரர் யாவரும் ஓடினாலும் பயனின்றி அவ்விடத்திலேயே அவலமாய்ச் செத்து மாண்டனர். வானவன் ஒருவன் தந்த ஆணைப்படி துறவி ஒருவர் கித்தேரியின் உடலை எடுத்து மலைமீது அடக்கம் செய்தார்
விண்ணுலகம் சென்ற கித்தேரி தன் தங்கையரை மறக்காது அவர்களுக்காக இறைவனை வேண்ட, அவர்களும் பல நாடுகளில் திருமறைக்காகத் தொண்டு புரிந்து வானுலகம் சென்றனர். மேலும் அவளது வேண்டுதலால் அவள்தன் பெற்றோரும், பிறந்த போர்த்துக்க நாடும் மனந்திரும்புவர் என்றும், நாட்டினர் பல சென்று திருமறையைப் பரப்புவர் என்றும், அவளது நாட்டை ஐந்தாம் ஜான் ஆளும்போது மக்கள் எல்லாம் அவளைப் புகழப் பல அற்புதங்களால் பொம்பேர் மையில் ஆய்வாளர் என்றும் இறைவன் அவளுக்கு உறுதியளித்தார். (முனைவர் எம்.ஏ. சவேரியார், மேலைநாட்டறிஞர்களின் தமிழ்த் தொண்டு; 2014, பக். 124, 125). இப்படி சித்திரை அம்மாள் அம்மானை நூலில் வீரமாமுனிவர் பதிவு செய்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கத்தரி அம்மாள் வீரமாமுனிவரின் ஆகச்சிறந்த படைப்பு. அது கிருத்துவர்களின் நம்பிக்கை கூறிய பெரும் படைப்பாகும். அதனால்தான் அருட்தந்தை ஆனந்த் அமலதாஸ் சே.ச. அவர்கள் மறு பதிப்பு கொண்டு வந்துள்ளார். ஏன் இந்த மறு பதிப்பு என்கின்ற கேள்வியை முன்வைத்து அதற்கு அவர் தரும் பதில் பின்வருமாறு வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் கொடுக்கும் நூல். இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல், இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள்.

இரண்டாவது, இந்நூல் முதன் முறையாக இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. அதுவும் அதிக அளவிலான அடிக்குறிப்புகளுடன் அங்கு காணும் நுணுக்கமான வரலாற்றுத் தரவுகளைச் சுட்டிக்காட்டி உள்ளது.
மூன்றாவது, இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் பெண்ணியச் சிந்தனைக்கு நம்மை ஈர்க்கும் நூலாகவும் இது அமைகிறது. கித்தேரி குழந்தைப் பருவத்தில் அநுபவித்த அவலநிலை, பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, மற்றவர் கருணையில் வளர்ந்து, சமயம் கொடுத்த நம்பிக்கையில் திடம் பெற்று; இவ்வுலகச் செல்வாக்குச் சிறப்புகளை இறைவனிடம் தஞ்சம் புகுந்ததாக அமைந்த கதை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைக்கும் நூல். அதனால் இத்நூல் மிக முக்கியம் பெறுகிறது.அதுவும் தமிழ்ப் பண்பாடு முன்வைக்கும் பெண்னிலி பின்னணியில் பார்க்க வேண்டிய நூல். ‘உண்டி கொடுத்தோர்கலி கொடுத்தோர்’ என்று செயல்பட்ட மணிமேகலை. நீதிக்கா போராடி மதுரை மன்னனைத் தெறிக்க வைத்த கண்ணல், ‘லத்திய, செல்லினும் அத்திசை சோறே’ என்று தன்மானம் க அவ்வையார், பக்தியால் பரமனிடம் தஞ்சம் புகுந்த ஆண்டான். இந்த அம்சங்கள் அனைத்தையும் தன்னில் இணைத்த ஒரு வரலாற்றுப் பெண் கித்தேரி.அதனால் இந்நூலை இந்தப் பார்வையில் வெளிக் கொணர்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர். கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார்.

தமிழை தனது முப்பதாவது வயதில் விரும்பி கற்கத் தொடங்கிய வீரமாமுனிவர் தன்னுடைய 67 வது வயதில் இறை பேரருளை அடைவதற்காக சென்றுவிட்டார். கடைசி 37 ஆண்டுகள் இத்தமிழ் சமூகத்திற்கு அவர் செய்த பெருங் கொடை வரலாற்றின் பேரோட்டில் பதிவாகி இருக்கிறது. சமயத்தை பரப்ப வந்த போதகராக வந்தவர் தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை தமிழை தாய் மொழியைப் போல சுவாசித்தவர்.

இலக்கியத்தின் அனைத்து உள்ளடக்கங்களில் தன் ஆழமான பதிவை அழுந்த பதிவு செய்திருக்கிறார். இலக்கியப் பேரேட்டிலும், வரலாற்று நெடுங் கணக்கிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தன் பிறப்பை அர்த்தமுடையதாக மாற்றிய பெருமை கான்ஸ்டன்ட் ஜோசப் பெஸ்கிக்கு உண்டு.

– பேரா. எ. பாவலன்