பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் கட்டுரை – பேரா. எ.பாவலன்

பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் கட்டுரை – பேரா. எ.பாவலன்பெண் விடுதலையின் முதல் களப்போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மாள்

யார் இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்?. அவர் பெயரில் நல திட்டங்கள் ஏன் வழங்கப்படுகின்றன?. இந்த நூற்றாண்டிலும் பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசாங்கம் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்டது ஏன்?. தொடர்ந்து 1989இல் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இராமாமிர்தம் பெயரில் திருமண நிதி உதவியாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்து தொடங்கி வைக்க காரணம் என்ன?. பின்னர் அவரே 2009 ஆம் ஆண்டு 25,000 ரூபாய் உயர்த்தி வழங்கினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதே அம்மையார் பெயரில் திருமண நிதியாக ரூபாய் 50,000மும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கினார். அதை 2016 ஆம் ஆண்டு 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டது ஏன்?. இந்த சூழலில் தான் இன்றைய முதலமைச்சர் (2022) திரு. மு. க‌. ஸ்டாலின் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளார்.

இப்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்பவர் யார் அவருடைய பெயரில் இத்தனை நல திட்ட உதவிகள் அறிவிக்க காரணம் என்ன? என்னும் கேள்விகளுக்கு பதில் தேடும் முகமாகவும், அடுத்த தலைமுறையினர் அம்மையாரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. அதன் பொருட்டு இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

பேரறிஞர் சி. அண்ணாதுரை அவர்கள் தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று இராமாமிர்தம் அம்மையாரைப் பாராட்டினார். காரணம், அவர் பெண் விடுதலை, நாட்டு விடுதலை, மொழி விடுதலை, சனாதன எதிர்ப்பு, என்று எல்லா தளங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு போராடியவர். பெண் அடிமையில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காக அரும்பாடுபட்டவர். அதனால் ஆதிக்க சக்திகள் அவருடைய தலை முடியை மேடையிலேயே அறுத்து எறிந்தனர். ஆனாலும் சிங்கத்தின் சீற்றம் குறையாது, உயிரே போனாலும் பரவாயில்லை போனது தலைமயிறு தானே என்று தன் சிங்கக் குரலால் மேடைகளில் கர்ஜித்த வரலாறு பெண் மணியின் பெயரால் தான் சமகால‌த்தில் நல திட்டம் வழங்கப்படுகிறது.

இராமாமிர்தம் அம்மையார், கிருஷ்ணசாமி சின்னம்மாள் பெற்றோருக்கு 1883 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பாலூர் எனும் கிராமத்தில் பிறந்தார். பிறந்தது பாலூரில் என்றாலும் வளர்ந்தது மூவலூரில் அதனால் மூவலூர் இராமாமிர்தம் என்று பின்னாளில் அறியப்பட்டார்.

அவர்களுடைய குடும்பம் வறுமையின் காரணமாக சொல்லோனார் துயரக் கடலில் சிக்கிய போது ஒரே இடத்தில் மையம் கொண்டு சூறாவளிக்காற்று சுழன்று அடித்ததை போல வறுமை அவர்களை வாரி சுருட்டியது. அதனால் கட்டிய மனைவியையும் காப்பாற்ற முடியாமல், பெற்ற குழந்தையும் கரை சேர்க்க முடியாமல் கிருஷ்ணசாமி வீட்டை விட்டு சென்று விட்டார். அதன்பின் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தவித்தனர். மீண்டும் சொல்லொண்ணா வேதனையும், துயரைமும் அடைந்தனர்.

கணவனும் கைவிட்டு சென்ற பிறகு மாமியாரும் தன் மகன் வீட்டை விட்டு சென்று விட்டான் என்ற துயரத்தில் இறந்துவிட்டார். எல்லா நிலையிலும் வறுமையும் வெறுமையும் வாழ்வதற்கு கூட வாய்ப்பளிக்காமல் சின்னம்மாள் செய்வதறியாமல் தவித்தார்.

கடைசியில் அந்த அம்மையார் தன் குழந்தையை யாருக்காவது கொடுத்து விடலாம். நாம் சுகப்படவில்லை என்றாலும் குழந்தையாகிலும் சுகப்படட்டும் என்று தீர்மானித்து விட்டாள். இந்த எண்ணம் காரணமாக தன் குழந்தையுடன் மூவலூர் சென்றார். அங்கே ஒரு தாசி அம்மாள் குழந்தையைக் காப்பாற்ற முன்வந்தாள்.‌ அந்த அம்மையாரிடம் தன் குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை விற்று விட்டாள். குழந்தையைப் படிக்க வைத்து பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசையை கொன்றுவிட்டு, குழந்தை பெரிய பெண்ணான  பின்பு அதன் திருமண கோலத்தைக் கண்டு இன்புற வேண்டும் என்று எண்ணியிருந்த எண்ண கோட்டையை இடித்து தள்ளிவிட்டு தாய் உள்ளத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு விற்று விட்டார்கள் ரூபாய் பத்துக்கும் ஓர் பழைய புடவைக்கும் இந்தச் சூழலில் தான் சின்னம்மாள்,  ஆச்சி கண்ணு என்னும் தேவதாசி பெண்ணிடம் ஒரு பழைய புடவைக்கும் பத்து ரூபாய்க்கும் விற்று விட்டார். தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத்தாய் ஆச்சிகண்ணுவின் நினைவாக தன்னுடைய பெயருக்கு முன்னால் “ஆ” என்ற தலைப்பு எழுத்தை வைத்து
ஆ. இராமாமிர்தம் என்றே தன் பெயரை எழுதத் தொடங்கினார்.

என்னை ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தி வாழப்பழகிய சமுதாயத்தில் அன்று இறைவன் பெயரைச் சொல்லி தேவதாசியும், இன்று வாடகைத்தாய் என்று சொல்லியும் அடிமைப்படுத்துகின்றனர். 

இராமாமிர்தம் அம்மையார் ஒடுக்கப்பட்ட தேவதாசி வழியில் இருந்து வந்தவர் என்ற பார்வையால் எண்பது வயது முதிர்ந்த கிழவனுக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடைய எண்ணங்களை தவிடு பொடி ஆக்கினார். இப்படி எல்லா நிலைகளிலும் அவருடைய வாழ்க்கைக் சிறைப்படுத்தப்பட்டது. இவை எல்லாவற்றிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக மாற்றி பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் இன்னலும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதனை அர்த்தமுள்ளதாக்கினார் பெருமைக்குரிய தாயார் இராமாமிர்தம் அம்மா.

அடிப்படையில் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு பெரியார் வழியில் அம்மையார் இராமாமிர்தம் அவர்கள் தனது 38 வது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். 1919 இல் இருந்து 1925 வரை காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு 1922 ஆம் ஆண்டு சிறை சென்றார். காங்கிரஸ் இயக்கம் அடிப்படையில் சமத்துவத்தை விரும்ப மறுக்கிறது. வாவேசு ஐயர் தலைமையில் நடத்தப்பட்ட சேரமான் தேவி குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு உணவருந்த தனி இடம் ஒதுக்கப்பட்டதாலும், 1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இந்த முப்பெரும் இயக்கங்களில் இணைத்துக் கொண்டு மக்கள் தொண்டாற்றினார். பொதுவெளியில் மக்கள் மன்றங்களில் பெண் விடுதலை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு கொள்கைகளை முழங்கினார். குறிப்பாக மிகத் தீவிரமாக தேவதாசி முறை ஒழிப்பை முன்வைத்து பிரசாரம் செய்ய தொடங்கினார். அப்படி ஒரு நாள் பொது மேடையில் பேசும்போது ஆதிக்க சக்திகள் ஒன்று இணைந்து அவருடைய தலை முடியை அறுத்து எறிந்தனர். எதை பேசிய குற்றத்திற்காக அவருடைய கூந்தலை அறுத்தார்களோ அதை சட்டமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி சட்டம் ஒழிப்பு கொண்டு வருவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமிக்கும், முவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்பு சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி அந்தத் திருமணத்தை கொண்டுவர தீர்மானம் ஏற்றிய போது தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியமிக்க இந்திய கலாச்சாரம் சீரழிந்து விடும் என்று ஆவேசப்பட்டனர். அப்போது இராமாமிர்தம் அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமி இடம் கூறுனார். அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டுமென விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பிள்ளைகள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்திய பண்பாட்டுக்காக இனிமேல் உங்கள் வீட்டு பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும் என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு அவமானமாய் இருந்த தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி கேட்ட கேள்விக்கு முத்துலட்சுமி அம்மையார் கொடுத்த பதில் இவை.

ஆண்டாண்டு காலமாக பெண்கள் ஆண்களுக்கு அடங்கி ஒடுங்கியவர்கள். எதிர்த்து பேசுவதற்கு மட்டுமின்றி தங்கள் உரிமைகளையும் தேவைகளையும் கூட கேட்பதற்கு உரிமை மறுக்கப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இராமாமிர்தம் அம்மையார் ஒரு சாட்சி.  போராட்ட காலங்களில் இவர் மீது கொலை குற்றங்களும் அவவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்துக் கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனாலும் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தான் நினைத்ததை சாதிக்க போராடினார். இந்த வரலாற்று எல்லாம் திருமதி சத்தியவாணி முத்து அம்மையார் ஆசிரியராக இருந்து நடத்திய அன்னை இதழில் இராமாமிர்தம் அம்மையார் தொடராக எழுதினார். அது என் வாழ்க்கை என்னும் தலைப்பில் தொடராக வெளிவந்தது.

1936-இல் தன்னுடைய சுயசரிதை நூலான தாசிகளின் மோசவலை அல்லது மதிக்கெட்ட மைனர் என்ற புதினத்தை எழுதினார் அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு செய்தியும் அத்துனை உருக்கமானவை. குழந்தையாக இருந்த போது, ஏற்பட்ட அனுபவத்தை அம்மையாரே பின்வருமாறு விவரிக்கிறார். 

மறுநாள் காலை கண் விழித்துப் பார்த்தேன் தாயைக் காணவில்லை பக்கத்தில் இருந்தவர்களை கேட்டு எழுந்தேன். திருவாரூருக்கு உன் தகப்பனாரை தேடி கொண்டு போயிருக்கிறாள். வந்து விடுவாள் என்று ஆறுதல் வார்த்தைக் கூறினார்கள். அழுதேன் சாப்பிட மறுத்து சமாதானம் கூறித் தேற்றினாள். இரண்டு ஒரு நகைகள் பாவாடை சட்டை துணிகள் புதிதாக தைத்துக் கொடுத்தால் இவைகளை நான் பார்க்காதவளானதால் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த அம்மாள் எனக்கு கல்வி புகட்ட ஆசிரியரை நியமித்தாள். ஆசிரியரும் மிகவும் நல்லவர். அவர் எனக்கு அன்போடு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவைகளைப்  பாடம் சொல்லித் தந்தார். அவரின் அன்பினாலும் கல்வியின் மீது நான் காட்டிய ஆர்வத்தினாலும் என் பெற்றோரை அறவே மறந்து விட்டேன். மூன்று வருடத்திற்குள் மூன்று மொழிகளும் எனக்கு நன்றாக வந்து விட்டன. அடுத்து சங்கீத தேர்ச்சிக்காக படிக்க வைத்தாள். அந்த காலத்தில் சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும்.

குழந்தையாக இருந்த போது தாயைப் பிரிந்து தேடி ஓங்கி அழத் தொடங்கிய அந்த அழுகுரல் தான் பின்னாளில் விடுதலைக்கான பாதையை சமைப்பதற்கு முழங்கியது. தன் வாழ்நாளில் இன்பம் மகிழ்ச்சி என்ன பிற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத குழந்தைதான் பெரும்பாலும் துயரக் கடலில் விழுந்தவர்களை மகிழ்ச்சி என்னும் நாவாயில் கரை சேர்த்தது. தன் வாழ்நாளில் வெளி உலகமே தெரியாமல் மண்ணோடு மண்ணாக மாண்டு போக வேண்டிய குழந்தை ஒன்று பெரியார் காந்தி திருவிக்க அண்ணாதுரை கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பெரும் தலைவர்களிடம் நட்பு இறை சம்பாதித்தது.

இப்படி தன் வாழ்நாள் எல்லாம் போராட்ட தளத்தில் செலவிட்டு பெண்ணின் விடுதலைக்கு பெரும் விருட்சமாக ஓங்கி வளர்ந்த இராமிரதம் அம்மையாரின் வரலாற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவருடைய பெயரால் வழங்கப்படும் உதவித்தொகையை பெறவிருக்கும் மாணவிகள் கட்டாயம் அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த உலகம் உள்ளவரை இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்து கொண்டிருப்பார்.

– பேரா. எ. பாவலன்