Kaviyoviyathodar-Appa 21 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-அப்பா 21

கவியோவியத் தொடர்: அப்பா 21 – நா.வே.அருள்




அப்பா
*********
அறுபது ஆண்டுகளாகியும்
ஒரு மனிதனின் சாம்பலில்
கங்குகள் கனைந்துகொண்டிருக்கின்றன.

இரவின் நித்திரைகளில்
கனவுச் சங்கிலியில்
கண்களைக் கோர்த்துவிடுகிறார் அப்பா.

பகலில் ரெட்டியாரின் ‘ஆராய்ச்சி’யாய்
இருந்துவந்த அப்பாவுக்கு
இரவு விவசாயம் தெரியும்.

கடை மடைக்கு
ஏரியின் மதகிலிருந்து
ஊர்ந்துவரும் தண்ணீர்ப் பாம்பை
வாடிக்கையாய்
வழியில் கொத்தித் தின்னும்
பருந்து.

வரப்புகளுக்கு இடையே
ஒரு நதியைப் போலப் பெருக்கெடுத்து ஓடும்
தண்ணீரில்
அவ்வப்போது கலந்திருக்கும்
அப்பாவின் குருதி

விவசாயி
கவிதையின் அந்தப்புரத்தில் ஓய்வெடுப்பதை
நீங்கள் பார்க்கவே முடியாது.

எனது ஞாபகக் குறிப்பின்
ஒரு பக்கத்தைப் புரட்டுகிறேன்.
காற்றில் உறைந்துபோயிருக்கும்
காலற்ற குதிரைகளின் சவாரிகள்.

என் தம்பிகளைப் பெற்றுடுக்குமுன்
தந்தையின் வயிற்றிலும்
தங்கியது கர்ப்பம்.

நிலவு கொலையுண்ட கும்மிருட்டில்
அப்பாவின் முகத்தில்
இரண்டு நட்சத்திரங்கள் மின்னின.

தன்னந்தனியாக
அவர் வெட்டிய கிணற்றில்
இன்றும்
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்றும் பேய் கிணறு வெட்டுவதாய்
ஊருக்குள் பேச்சு

இரவெல்லாம்
ணங் ணங் கென்னும் சப்தம்
கானகத்தில் சுழலும்
காற்றின் பேரோசை

சவக்குழிகள் என்று
பங்காளிகள் பதறிட
இன்றும் அதே இடத்தில்
அதே இருட்டில்
அப்பா கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார்
பரசுராமரிடமிருந்து பறித்த ஆயுதத்துடன்
அப்பா
புரட்சியின் பூமிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Magathanavargal 20 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-மகத்தானவர்கள் 20

கவியோவியத் தொடர்: மகத்தானவர்கள் 20 – நா.வே.அருள்




மகத்தானவர்கள்
*************************
கவிதைத் திருத்தச் சட்டங்கள் கொண்டுவந்து
அவசர அவசரமாக அமுல்படுத்துகிறபோது
கவிஞர்கள் என்ன செய்வார்கள்?

கவிதைக்குக் குறைந்தபட்ச மதிப்பு கேட்டு
திடீரென உலகிலுள்ள எல்லாக் கவிஞர்களும்
வேலை நிறுத்தம் செய்தால்
என்னாகும் சொற்களுக்கு?

உருட்டி விளையாட ஒரு குழந்தையில்லாத வருத்தத்தில்
மணலில் புதைந்து கிடக்கும் மரப்பாச்சியைப் போல
எல்லா சொற்களும் அநாதையாய்க் கிடக்குமோ?

அவை அநாதைகளாகி
யாரிடம் போய் பிச்சையெடுக்கும்?

அவை விதைகளாக மாறிவிடும்
ஒரு விவசாயியின் கைகளின் வழியே
கலப்பைக் கீறலில்
ஒவ்வொன்றாய் விழுந்து
வேர்க்கடலைச் செடியாகும்.
பறிப்பவர்களின் கைகளில் மண்வாசம் எழும்.

மண்வாசம் மீண்டும் சொற்களாய் மாறி
விவசாயிகளைக்
கவிஞர்களாக மாற்றவல்லவை.

விவசாயிகள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
போராட்டத்தில் களைத்துப்போன கவிஞர்களுக்குப்
புசிக்க ரொட்டிகளுடன் வருவார்கள்.
நடுங்கும் குளிரில் விறைத்துப்போனவர்களுக்குப்
போர்வைகளுடன் வருவார்கள்.
குளிரில் இறந்துபோன கவிஞர்களுக்கு
இரங்கல் உழவு உழுவார்கள்
கவிஞர்களின் வெற்றியைக் கொண்டாட
ஒரு குடியரசு தினத்தில்
கண்டிப்பாய் டிராக்டர்களுடன் வருவார்கள்.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

முந்தைய தொடரை வாசிக்க:
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 19 – நா.வே.அருள்

Kaviyoviyathodar-Yuththa geethangal 19 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 19

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 19 – நா.வே.அருள்



கால பைரவர்கள்
**************************
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
அவர்கள் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும்
வரி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு பொருளின் விலையையும்
உயர்த்த வேண்டியிருக்கிறது.

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு மருத்துவ மனைக்கும்
தடுப்பூசிகளை விற்க வேண்டியிருக்கிறது.

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையை
ரத்து செய்ய வேண்டியிருக்கிறது.

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
கலைமகளின் சடலத்தை
ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்ப வேண்டியிருக்கிறது.

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லாதபோதும்
கபாலம் பிளக்கும் கலப்பை ஆயுதங்களுடன்
உடல் முழுதும் புழுதி பூசிக்கொண்ட
ருத்ர மூர்த்திகள்
இன்னும்
சுடலைத் தாண்டவம் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லாதபோதும்
பரம்படித்த பார்வதிகளின்
முலைப்பால்
தேசமெங்கும் தெறித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஒருநாள்
நிச்சயம் குலுங்கத்தான் போகின்றன
சுடலையாண்டிகளின் மார்புகளில்
சர்வாதிகாரிகளின்
மண்டையோடுகள்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

முந்தைய தொடரை வாசிக்க:
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்

Kaviyoviyathodar-Yuththa geethangal 18 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 18

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்



தனியார் மன்னன்
**************************
இது ரொம்ப மோசமான செய்திதான்
ஆனால் நாடே பரபரப்பாகப் பேசிக்கொள்கிறது
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

இதற்கெல்லாம்
மன்னனின் நோய்தான் காரணமென்று
ஒரு வதந்தி உலவுகிறது.

மறதி
ஒரு மோசமான நோய்
அதிலும் கோமாளி மன்னர்களைத்தான் அது
அதிகம் பாதிக்கிறது என்றொரு பேச்சு.

மறதி
மூளையின் சவ்வுத்தோலை
ஒரு பாலாடையைப்போல புசித்துவிடுகிறது.

ஐஸ் உருகி
கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்பதுபோல்
மன்னனைப் பரிதாபமாக்கிவிடுகிறது
மறதி

மறதியால் பீடிக்கப்பட்ட மன்னன்
முதலில் மறந்துவிடுவது
தனது நாட்டைத்தான்.
அதற்கப்புறம் ஒவ்வொரு பிரஜையாக மறக்க ஆரம்பிக்கிறான்.
அந்தப்புரத்து மகாராணிகளே இப்போது
ஆதார் அட்டைகளுடன் அலைந்துகொண்டிருப்பதாக வதந்தி.
அவ்வளவு ஏன்?
நிலைக் கண்ணாடியைப் பார்த்தபோதும்
சுய பிம்பமே நினைவுக்கு வராத
சித்த சுவாதீனம்

அப்புறமும் எதற்கிந்த
பட்டினியில் உருக்குலைந்துபோன உணவு உற்பத்தியாளர்கள்
நள்ளிரவில்
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்?

மோசமான செய்தியாக இருந்தாலும்
நம்பவேண்டியதாகத்தான் இருக்கிறது….
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Yuththa geethangal 17 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 17

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 17 – நா.வே.அருள்



உலகிலேயே சிறந்த கவிதை
********************************************

விவசாயியின் சாபம் மண்ணாலானது
ஆனாலவன் அவ்வளவு லேசில் சபிப்பதில்லை

வெளியே தெரிவதில்லை
எனினும்
விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல
அவன் ரௌத்ரம் பிரம்மாண்டமானது
காட்சிகளின் விதைகளாக இருக்கும் அவனது
கருவிழிகளிலிருந்துதான்
கருணையின் விருட்சங்கள் வேர்விடுகின்றன.

உலகிலேயே சிறந்த நிலப்பரப்பு
விவசாயியின் இதயம்தான்.
அவனது நெற்றியின் தேசியக் கொடியில்தான்
அசோகச் சக்கரங்கள் உருள்கின்றன.
அன்பு ஊற்றெடுக்கும் விவசாயியின் கிணற்றில்
பாசனத்துக்குப் பஞ்சமேயில்லை.

உலகிலேயே மிகச் சிறந்த கவிதை
வயல்களின் தாள்களில் விவசாயி எழுதும்
உழவுதான்.
விவசாயி எழுதும் கவிதைகளைப் படிக்காமலேயே
கிழித்துப் போடுபவன்தான்
உலகிலேயே மோசமான சர்வாதிகாரி.

விவசாயிக்கு
எவ்வளவு பெரிய மலைப்பாம்பும்
ஒரு மண்புழுதான்
ஒரு மண்புழுவைத் தூண்டிலில் செருகும்போது
அவன் விவசாயி அல்ல
மீனவனாகிவிடுகிறான்.

சேறுதான் விவசாயியின் சிம்மாசனம்
புரியாதவர்களுக்கோ
ஒவ்வொன்றையும் உள்ளிழுத்துக் கொள்கிற
உளைக்கும் புதைசேறு
பூமியைப் புரட்டிப்போட வரும் புல்டோசர்களைக் கூட
அது புசித்துவிடும்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Yuththa geethangal 16 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 16

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 16 – நா.வே.அருள்



பாவ யாத்திரை
************************
இன்றைய உணவு மேசையில்
நான் எடுத்துக் கொண்ட உணவு கழுத்துக்குக் கீழே
இறங்குவதாயில்லை
ஒருவேளை அது
என் சகோதரனின் கழுத்தைக் கயிறு இறுக்கிக் கொண்டிருக்கிற
காரணத்தால் இருக்கலாம்.

உணவைத் தொண்டைக்குக் கீழே தள்ளுவதற்கு
மிகவும் சிரமமாயிருக்கிறது.
அதுமட்டுமல்ல
குமட்டல் எடுக்கும் மனசை
என்னதான் செய்வேன்?

மனசை
எந்திரத்தின் ஒரு பகுதிபோலத் தனியே
கழற்றி வைக்க முடியாதா?

முந்நூறு விவசாயிகளின் பிணங்களின் மேல்
தேசிய கீதம் பாடிய எனது வாய்க்கு
இன்றைய தண்டனையாகத்தான்
எனது இந்த உண்ணா நோன்பு!

அரசாங்க முத்திரை குத்திய மௌனத்தைப்
பத்திரப்படுத்திக் கொள்ளும்
எனது இருத்தலுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை
நான் இறக்கிறபோது
எனது பல்லக்கை அலங்கரிக்க
இந்த வாழ்க்கையின் அவமானம் தேவைப்படலாம்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Ram Periyasami's Pidivathangkalil tholainthu vidugirai Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 24 – நா.வே.அருள்



கவிதை உலகத்திற்கு நல்ல காலம். காதலீ….. என்று விளித்துத் தொடங்கிய பழைய காலம் ஒரு பழைய பேப்பர் கடையில் தேய்ந்த பொருளைப்போலப் போடப்பட்டுவிட்டது. இளைஞர்களின் டிஜிட்டல் பேனாக்கள் இன்ஸ்டாக்ராம் காலத்திற்கு ஏற்றபடி புதிய புதிய பூக்களைப் பூக்கத் தொடங்கிவிட்டன.

கவிதை உதிரத்தின் பூ. அவ்வளவு புதுமையாக – ஃபிரஷ்ஷாக – இருக்க வேண்டும் அது. கவிதையின் மணம் நாசிக்கு இதுவரை முகர்ந்திராத மணத்தைத் தந்தாக வேண்டும்.

“ஒரு நிகழ்ச்சியை விவரிக்க எண்ணும்போது அதற்கு இதுவரை இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் அனுபவித்த அந்த நிகழ்ச்சி அதுவரை அனுபவித்த ஒன்றாக இருப்பது இல்லை. அனுபவத்தைச் சொற்களுக்குக் கொண்டு வருகையில் அந்தச் சொற்களுக்கும், அனுபவித்த நிகழ்ச்சிக்கும் இடையே ஓர் உறவு தோன்றும். இந்த உறவுதான் “பொருளின் பொருள்”. (மா.அரங்கநாதனின் “பொருளின் பொருள் கவிதை”).

இந்த பொருளில், ராம் பெரியசாமியின் இந்தக் கவிதை ஒரு புதிய கவிதைப் பூ!
“பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்”.

சட்டென்று கவிதை நம் மனதில் தீப்பற்ற வைக்கிறது. கவிஞனின் காகிதத்தில் ஏற்கெனவே தீவைத்திருப்பவள் அவளது காதலி. கவிஞனோ கவிதையில் தீவைக்கத் தொடங்கிவிட்டான்.

“ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன ..”

ஒரு பழைய கண்ணாடியில் முகம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்! ஒரு பழைய கண்ணாடியில்தான் கண்ணாடியின் முகமும் தெரிந்துவிடும். ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள் ரேகைகளாகிவிடுகின்றனவாம். ரசம் போன காதலனின் வரைபடத்தை ஒரு பழைய கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கவிஞனோ தனது காதல் ரேகைகளைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதுவும் காதலின் புதிய கவிதை ரேகை! காணாமல் போன காதல் நதியும் கண்ணாடியில் தெரிந்துவிடுமல்லவா?

“காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…”

கால எந்திரம் என்கிற ஒரு கவிதையை எழுதியிருக்கும் என்னை இந்தச் சொற்சேர்க்கை சொக்க வைத்துவிடுகிறது. இந்தக் கவிஞனோ லாவகமாகக் காலத்தையே எந்திரமாக்கிவிடுகிறான். எதுவொன்று எந்திரமானாலும் இதயத்தனம் இல்லாமல் போய்விடும். எந்திரத்தனமான காலத்தை காதல் நினைவுகளுடன் எப்படிக் கடந்து செல்வது? அதனால் கவிஞன் என்ன செய்கிறான்? சுவற்றில் கிறுக்கியோ, எழுதித் தீர்த்தோ ஆசுவாசம் கொள்கிறான். எதையெல்லாம் எழுதித் தீர்க்கிறான்? பழுதடைகிற அன்புகளை!….பழுதடைகிற அன்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் இதய மெக்கானிக் ஷாப்புகளுக்குத்தான் போக வேண்டும். இதய பழுதுபார்க்கும் கடை சில நேரங்களில் சுவராக இருக்கிறது. சில நேரங்களில் தாளாக இருக்கிறது. ரிப்பேர் அதாவது பழுதுபார்க்கிற வேலை கவிதையாக இருக்கிறது. பழுதடைகிற அன்புகளை. கழிப்பறைச் சுவர்களில் எழுதிவைக்கிற நபர்களில் எத்தனைபேர் காதலர்களோ? யார் கண்டார்கள்?

“மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …”

ஓரிரை எறும்பு! கொல்கிறான் கவிஞன். வார்த்தைதான் அவனுக்குக் கிடைத்த வாள். இரை சுமந்த எறும்பு மரத்திற்குப் பாரமா? என்று கேட்கிற கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்…. உன் நினைவென்னும் இரை சுமந்த நானும் உனக்குப் பாரமில்லைதானே? அதனால்… “உன் தோளில் சாய்கிறேன். ” அதுவும் எப்படியாம்?….உலகைச் சுருக்கிக் கிளையில் அமரும் ஒரு பறவையைப்போல… எனவேதான் இவனால் தான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தையும் காதலியின் ஒற்றைப் பெயராகச் சுருக்கிவிட முடிகிறது. இப்படிப்பட்ட காதலனைத் தோள் சாய வேண்டாம் என்று எந்தக் காதலியால் சொல்ல முடியும்?

“ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …”

“காதலியே உன் கடைசி முத்தத்தை என் கல்லறைக்குக் கொண்டுவா” என்று மேத்தா எழுதிய போது புத்தம் புதுசாக இருந்த அந்த எழுதுமுறை இன்றைக்குப் பழசாகிவிட்டது. அதே விஷயம்தான்…. பழைய தோடுதனைப் போட்டு புதிய கம்மல் செய்வதுபோல செய்கிறான் கவிஞன். மரணம் என்பது நீ பிரிவதாலும் நிகழும். காதலியைக் கைப்பிடிக் கனாக்களிடம் ஒப்படைத்துவிடுகிறான். இனி, நான் ராம் பெரியசாமியை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

இனி முழுக் கவிதை…..
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …

Na. Ve. Arul Poetry in Tamil Language. Book Day And Bharathi Tv Are Branch of Bharathi Puthakalayam. நா. வே. அருள் கவிதை

நா. வே. அருள் கவிதை



அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.

அவன்மேல் விழும் ஆயிரம் இலைகளின் நிழல்கள்
அவனை ஒரு
புனித மனநிலைக்குக் கொண்டுசெல்கின்றன.

ஒரு பைத்தியக்காரனைப்போல
அவன் ஓயாமல் வார்த்தைகளைத்
விதைத்துக் கொண்டேயிருக்கிறான்.

உணவு விடுதியில்
மேசை துடைப்பதைவிடவும் மேலான ஒரு கவிதையை
அவனால் எழுத முடியவில்லை.

அவன் தன்னையொரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.

முகம் துடைத்து அழுக்காகிப்போன
ஒரு கைக்குட்டையைப்போல
ஒரு மனிதனைத் தூக்கியெறிய
அவன் விரும்புவதேயில்லை.

ஆனால் அவன் ஒரு காலியான
தண்ணீர்ப்பாட்டிலைப்போல
எறியப்பட்ட நதிகள் ஏராளம்.
ஆனால் அவன் அறிந்துவைத்திருக்கிறான்
இந்தியாவின் கங்கையில் எறியப்பட்ட சடலம்
கனடாவின் ஃபிரேசர் நதியில்
உயிர்பெற்று நீச்சலடிக்கும் என்று.

காலம் ஒரு மனிதனின் இருக்கையின் கீழ்
உலைக்களத்தை வைத்துவிடுகிறது.
அவன் ஒரு காய்ச்சப்பட்ட இரும்பைப்போல
மீண்டும் மீண்டும்
சம்மட்டியால் அடிவாங்குகிறான்.

அவன் ஒருநாள்
ஆயுதமாக மாறுவான் என்பதை
அவனது உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும் பூமியின் விருந்தாளி.

–நா.வே.அருள்

Mounan Yathriga (மௌனன் யாத்ரீகா) Poetry Sannatham Kavithai Thodar (Series 23) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 23 – நா.வே.அருள்



கவிதை உடும்புமௌனன் யாத்ரீகா

இது வரலாற்று உடும்பு. இதன் உடம்புக்குள் காட்டின் எலும்புகள். மென்மை, மிருது என்கிற வார்த்தைகள் மனிதன் காலப்போக்கில் தனது நாக்கில் கண்டெடுத்த போலி அல்லது பாசாங்கு நாகரிகத்தனத்தின் புதையல் வார்த்தைகள். இந்தக் கவிதையில் ஆவி பறக்கப் பறக்க ஆதி மனிதனின் வாழ்வியல் கவிச்சி.

ஆதிகாலம் வேட்டை என்பது இரையோடு சம்பந்தப்பட்டது. நவீன காலத்திலோ வியாபாரத்தோடு தொடர்பாகிவிட்டது. கவிஞன் உடும்பின் உடம்பு விலாசத்தைக் காட்டின் நெடியுடன் கவிதையாய் எழுதுகிறான்…. “முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட காய்ந்த மரத்துண்டு”. வேறு வரிகளிலும் எழுதிக் காட்டுகிறான்….“பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்கள்”.

காலம் கணந்தோறும் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்கிற உலக நியதி. ஒளியைக் கூட விழுங்கிவிடுகிற கருந்துளையின் கதை அறிவோம். ஜீவராசிகளிலேயே சிந்தனை வேட்டை நடத்துபவன் மனிதன்தான். மனிதனின் கண் உடும்பின் மேல். உடும்பின் கண்களோ நீலப்பறவை தங்கும் வங்கின் மேல். அது நுழைந்தவுடன் கவிதையில் ஒரு ஒலிக் காட்சி….“முட்டைகள் நொறுங்கும் சத்தம்”. நகுலனின் சாவின் முட்டையைப் பார்த்திருக்கிறது தமிழ்க் கவிதையுலகம். இந்தக் கவிஞனோ நீலப் பறவையின் முட்டையைப் பச்சை அண்டம் என்கிறான்.

“காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்”

மனிதனின் வரலாறு விலங்கோடு சம்பந்தப்பட்டது. இந்த இடத்தில்தான் கவிதை இடப் பெயர்ச்சி நடத்துகிறது. உடும்பின் வரலாறு மனித வரலாற்றின் குறியீடாகிறது. கால்தடங்களையே காண மறுப்பது மக்களின் இயல்பு; கண்களில் கால்தடம் காண்பது கவிஞனின் வேலை! பிடுங்கிய கண்களில் இடுங்கிய தடங்கள். அவை கண்கள் அல்ல; காலத்தின் உண்டியல்கள்! அதில் குறைந்தது ஆயிரம் தடங்களின் அடையாளங்கள்.

இங்கு தொடங்குகிறது கவிதையின் டுவிஸ்ட்….
”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்”

இது விலங்குகள் பிடிக்கிற வேட்டையல்ல. மனிதர்களுக்குக் காட்டின் கதைசொல்லும் கவிதையின் வேட்டை. வேட்டை ஒரு சாக்கு. துரத்திப் பிடிப்பதெல்லாம் ஒரு துயரம் மிகுந்த இழந்த காட்டின் இதயத்தை! வேட்டையில் இழந்த காட்டை வெற்றிகொள்ள உயிருடன் உடும்பைப் பிடிக்கிற உன்மத்த வெறி.

கவிதையின் டுவிஸ்ட் ஒரு கொண்டை ஊசி வளைவைப்போல சாகசம் புரியத் தொடங்குகிறது. வேட்டையில் பிடிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட கூண்டுகளை அடையாளம் காட்டுகிறான் கவிஞன்.

“சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

சினிமா முடிந்ததும் ஒரு காட்சியை (ஃபிரீஸ்) செய்வது போல – உறைய வைப்பதைப் போல – கவிதை முடிந்துவிட்டாலும் இரண்டு வரிகள் கவிதையை மனதில் உறைய வைத்துவிடுகின்றன….

“வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.”

உடும்பின் பார்வையில் தெரிகிறது இழந்தவர்களின் துயர வரலாறு. வாசிக்க முடிந்தவர்கள் வாசித்துக் கொள்ளலாம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது வெறும் நகைச்சுவை வசனம் அல்ல…. அது வாழ்க்கையின் மீட்சி. உடும்பின் மூலமாக நம் முன்னோர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள். புரிந்து கொண்டால் பூமி நமக்குச் சொந்தம். இல்லையெனில் நாமே நமக்குச் சொந்தமில்லை.

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

இனி முழுக் கவிதை.

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு

”முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட
காய்ந்த மரத்துண்டைப்போல்
உறுதியான வால்
நீலப் பறவைப் பதுங்கும் வங்கில்
நுழைவதைப் பார்த்தேன்

பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை
அது எட்டிப் பார்க்கும்போது காண வேண்டும்
அகவன் மகனே!
உன் உண்டி வில்லை சுருட்டி வை”

“எலே மலைராசா…
நாட்டுக்குள் போய் வந்த காட்டாளா
முட்டைகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது பார்
இந்நேரம் அதன் பிளந்த நாவின் நுனியில்
பச்சை அண்டத்தின் ருசி வழியும்
இன்று நம் அட்டிலில்
கூடுதல் மிளகை அரைப்பாள் நம் கிழத்தி’

“எச்சிலூறும் அந்த நத்தையை
ஓட்டுக்குள் கொஞ்சம் இழுக்கிறாயா?
காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்
எனக்கதைக் காட்டு சிறுமலை நாடா ”

“என் ஈட்டியின் கூர்முனையால்
அதன் கழுத்துச்சதை அறுந்தால்
இரண்டு கண்களையும் பிடுங்கி
உன்னிடம் தந்துவிடுகிறேன்
அதற்குள் ஆயிரம் தடங்களாவது இருக்கும் ”

”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்

சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

மௌனன் யாத்ரீகா