Nalaiyenum Pai Shortstory by Kumaraguru. குமரகுருவின் நாளையெனும் பை! சிறுகதை

நாளையெனும் பை! சிறுகதை – குமரகுரு
இப்போதென்ன நேரமிருக்கும்? இந்த கேள்விக்கான உங்களின் பதில் என்ன? இந்த கேள்வி எப்போதும் மாறாத பதிலைத் தருமா? இல்லை… மில்லி செகண்டுக்கு மில்லி செகண்ட் இதற்கான பதில் மாறி கொண்டேதானே இருக்கும்?

எதற்காக இந்த கேள்வியை நான் எப்போதும் கேட்டு கொள்கிறேன் என்றால், எனக்கு இப்போதிருக்கும் நேரத்தை வைத்துதான் எனது வேலை, எனது பணம், மிச்சமிருக்கும் என் ஆசைகளை நான் அடைவதற்கான கால அவகாசம், நான் சிரிக்க வேண்டுமா இல்லை அழ வேண்டுமா, என்று எல்லாமே நிர்ணயம் செய்யப்படுகிறது.

இப்போதெனும் இந்நேரத்தை ஒருபோதும் திரும்பியடைய முடியாது. இந்நேரம் இந்நொடி ஒரு வண்ணத்து பூச்சி எங்காவது தனது குக்கூனுக்குள்ளிருந்து படபடத்து வெளியேறி பறக்கத் துவங்கியிருக்கும். இன்னொரு வண்ணத்துப்பூச்சி எங்காவது ஓணாணிடம் சிக்கியிருக்கும். இரண்டுமே நடப்பது இப்போது என்பதே வியப்பான நிகழ்வு!

கடல் எப்போதும் அங்கேயே இருந்தபடி அலை வீசி கொண்டிருப்பதைப் போல காலம் தனது பரப்பில் இருந்து நேரம் எனும் அலையை வீசியபடி தனக்குள் நம்மை சுமந்து கொண்டிருக்கிறது. லட்சோபலட்சம் கடல் ஜீவராசிகளைப் போல நாமெல்லாம் காலத்தினுள் வாழ்ந்தபடியிருக்கிறோம். கடலும் காலமும் எப்போதும் அமைதியின் உச்சம்தானே?

நேற்றிலிருந்து காலம் நாளைக்குள் நம்மைத் தூக்கி வீசுகிறது. நாளையின் பை எப்போதும் காலியாகவும், நேற்றின் பை எப்போதும் நிரம்பி ததும்பியும் இருப்பதிலொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், இன்றெனும் காலம் நேற்றுக்கும் நாளைக்கும் நடுவில் நேற்றின் மீதியையும் நாளையின் கனவுகளையும் சுமந்துத் தொங்குவதில்தான் எல்லா ஆச்சர்யமும்!?

நிறைசூலியொருவள் யாரென்று தெரியாத ஒருவனை அல்லது ஒருத்தியை ஒன்பது மாதங்கள், 280 சொச்ச நாட்கள் சுமந்திருக்கிறாள். அந்த காலம் முழுவதும் அந்த அந்நிய சிசுவையே எண்ணியபடி, அதன் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைப் பற்றி எண்ணியபடியே, பத்திரமாகப் பாதுகாக்கிறாள். அவளின் வயிற்றில் ஒரு கொடியவனோ அல்லது ஒரு மாபெரும் தலைவனோ அல்லது ஒரு சராசரி மனிதரோ – யார் வேண்டுமானால் வளர்ந்து கொண்டிருக்கலாம்? ஆனால், இன்று, இப்போது, இந்த ஒன்பது மாத காலங்கள் அவளோ/அவனோ அவளின் அத்தனை அன்புக்கும் உரித்தாகியவொரு அபூர்வ குழந்தை!! அந்த துழந்தைதானே இப்பொழுது-இக்காலம்-இந்நேரம்… இத்தருணம்??

எல்லாத் தருணங்களும் முடிவுறுகின்றன. எல்லா நேரமும், எல்லா காலமும், எல்லாமே முடிவுற்றுப் பின் துவங்கி, என்றொரு சுழலில் சிக்கியேப் பறந்தபடியிருக்கின்றன.

காலத்தின் கரையோரம் நமக்கான படகுகள் நமக்காக மட்டும் காத்திருப்பதில்லை. அதற்குள் உழலும் உணர்வுகளும், உணர்வுகளின் நுனியில் நின்று கொண்டு அப்போதையத் தருணத்தை உதாசீனப்படுத்தாமல் அதிலிருந்து கிடைக்கும் தேனின் ருசியை உணர்ந்து பருகி வெளியேறி அடுத்தத் தருணத்தைப் பற்றி கொள்கிறவர்கள், நாளையின் பைக்குள் பத்திரமாயிருக்கிறார்கள். அவர்கள் படகைத் தவற விடுவதுமில்லை.

கோர்வையாய் மாலையில் பூக்களைக் கட்டுவதைப் போல நம் தருணங்கள் ஒவ்வொன்றும் அதற்கான மணத்துடன் கட்டப்படுகின்றன. யாரோ கட்டுகிறார், அது யாரோ ஒருவரின் உழைப்பு. ஒவ்வொரு நாளும் எல்லோருக்குமானது. எல்லோருக்கும் ஒரே விடியல்தான். எல்லோருக்கும் ஒரே நிழல்தான். ஆனால், இன்றைய நாளொரு சிறுவனின் தேர்வு நாளாகவும் மற்றொரு சிறுவனுக்கான வேலை நாளாகவும்-இரண்டு முனையையும் தாங்கியே இருக்கிறது. நான் நாளை வாங்கியணிப் போகும் புதிய செருப்பு ஏற்கனவே எனக்காக செய்யப்படடுவிட்டது.நான் எப்போது வாஙுகுவேன் என்றால், செருப்பை வாங்கி அணியும் அத்தருணத்தில்தான்… அதுவரை நிகழும் எல்லாம் என்னை அத்தருணத்துக்குள்தான் இழுத்து கொண்டிருக்கின்றன.

காலம், தன் கிளைகளின் இலை நுனிகளிலிருந்து பனித்துளிகளை உதிர்த்தபடியிருக்கிறது. ஒவ்வொருத் துளியும் தனித்துவமான செதுக்கல், தனித்துவமான வடிவம், தனித்துவமான ஈரத்தன்மை, தனித்துவமாக பிம்பங்களைச் சுமந்தபடி, நதியின் பெரும்பரப்பில் அவற்றுக்கான தனித்துவமான இடத்தில் சொட்டக் கூடிய தன்மை கொண்டவை, ஆனாலும், அடியிலோடும் நதி மிகப்பெரியது… அது எல்லோருக்குமானது!! அது எல்லாமுமானது…