ஆயுள் காப்பீட்டுக் கழகம் போராடுகிறதா? – சித்தார்த்தன் சுந்தரம்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்
மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.
இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.
இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.
நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.
காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.
மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.
6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.
இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.
உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.
உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.
மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.
குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.
மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).
கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.
மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.
2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.
இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
Source: Pulapre Balakrishnan 2022.
மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.
வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.
அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).
சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).
இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
-பேரா.பு.அன்பழகன்
நூல் அறிமுகம் : தீஸ்தா செதல்வாட் நினைவோடை (அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்) – அ.பாக்கியம்
தீக்கதிர் 15.10.2018
புத்தக மேசை
தீஸ்தா செதல்வாட் நினைவோடை,
தமிழில் : ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018,
பக் : 232, விலை ரூ.200,
தொலைபேசி: 044 – 24332424
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com
அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் என்பது புத்தகத்தின் துணைத் தலைப்பாக இருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது. தீஸ்தா செதல்வாட் தனது நினைவோடைகளை பதிவு செய்திருந்தாலும் அவை கள எதார்த்தங்களை கண் முன்னால் நிறுத்துகிறது.
காவல்துறை அமைப்பு, உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகம், அரசியல் இயக்கத் தலைமை, புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பெரும் ஊடக நிறுவனங்கள், நீதித்துறை ஆகிய அமைப்புகள் அழுகி முடை நாற்றம் எடுத்துச் சிதைந்து கொண்டிருப்பதை இந்த நினைவோடைகள் மூலமாக நிறுவியிருக்கிறார்.
மேற்கண்ட அரசமைப்புகள் நடுநிலை என்றும் மக்களுக்கானது என்றும் அரிதாரங்களை அள்ளி அள்ளி பூசிக் கொண்டாலும் ஆளும் வர்க்கத்திற்கும், வகுப்பு வாதிகளுக்கும் சேவகம் செய்வதே வர்க்கக் கடமையாக உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்று விடலாம் என்று களமிறங்கிய தீஸ்தா செதல்வாட் அது சாத்தியமில்லை, மக்கள் இயக்கமும், விழிப்புணர்வும் அதற்கு அவசியமானது என தனது களத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
இன்றளவும் அவர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு வருகிறது. மிரட்டல்கள், பாதுகாப்பற்ற பயணங்கள், இணையதள ரவுடிகளின் வசவுகள் என தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகிக் கொண்டே போராட்டக் களத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது
புத்தகத்தின் முதல் பகுதியில் வகுப்புவாத கலவரங்களின் நிகழ்வுகளை எதார்த்தமாகச் சொல்கிறபோது வாசிப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கிறது.
குஜராத் கலவரங்களை பற்றி புத்தகம் அதிகமாகப் பேசியிருந்தாலும் கலவரங்களின் அடிப்படை அரசியல் பொருளாதாரத் தையும் விளக்கியுள்ளார்.
1970ம் ஆண்டுகளில் மும்பையில் பிவண்டி-மகத்ஜல்கோன் கலவரத்தில் பலர் கொல்லப் பட்டனர்.
சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் “வந்தேறிகளைப் பற்றி” வெறுப்பு பேச்சுகளே கலவரத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டது.
1970ம் ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அதிகம் சேர ஆரம்பித்தனர். 1984ம் ஆண்டு வரைசிவசேனா இந்துத்துவா பற்றியோ, இந்து ராஷ்ட்டிரம் பற்றியோ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
1984ம் ஆண்டு மே மாதம் மும்பையில் பிவண்டியில் மதக்கலவரங்களை சிவசேனாவினர் திட்டமிட்டு உருவாக்கினர்.
சிபிஐ விசாரித்த வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தது.
எனினும் குஜராத் கலவரத்தில் செதல்வாட் தலைமையிலான அமைப்பு 69 பெரும் வழக்குகளையும் 150 தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்திய கூட்டாட்சி முறையை நரேந்திர மோடி ஐந்து வழிகளில் பலவீனப்படுத்தியிருக்கிறார் – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா சந்திரகுரு
இந்திய கூட்டாட்சி முறை சமீபகாலமாகவே செய்திகளில் அடிபட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகளால் வடிவமைக்கப்பட்ட குடியரசு தினப் பேரணி அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற கட்சிகளால் ஆளப்படுகின்ற மாநிலங்களின் மீதான அடையாளத் தாக்குதலாகவே கருதப்பட்டது. வெறுமனே குறியீடு என்பதிலிருந்து மாறி பொருள் சார்ந்ததாகி இருக்கின்ற நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் விவாதங்களில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் அரசியலமைப்பு விதிமுறைகள், கொள்கைகள் அனைத்தையும் மீறி மாநிலங்களின் உரிமைகளைத் துச்சமென மத்திய அரசு மதித்து வருவதாக கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
1959ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் மூலம் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டதே இந்திய கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதலாக இருந்தது. அந்த நடவடிக்கையைத் தூண்டியவர்களாக காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி, உள்துறை அமைச்சரான கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் தப்ப முடியவில்லை. அந்தச் செயல் ஜனநாயகம் குறித்து நேருவிடமிருந்த நற்சான்றிதழ்கள் மீது ஒரு கறையாகவே படிந்து போனது.
நேரு பிரதமராக இருந்த நீண்ட காலகட்டத்தில் 356ஆவது பிரிவு எட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்திரா காந்தி பிரதமரான பிறகு அவர் அந்த விதியை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டார். தான் பிரதமராகப் பணியாற்றிய இரண்டு காலகட்டங்களில் (1966 முதல் 1977 வரை; 1980 முதல் 1984 வரை) அந்தப் பிரிவை இந்திராகாந்தி ஐம்பது முறை – சராசரியாக ஓராண்டிற்கு மூன்று முறைக்கும் சற்று அதிகமாகவே – பயன்படுத்தியிருந்தார்.
திருமதி.காந்தியால் இரண்டு கட்டங்களில் 356ஆவது பிரிவு குறிப்பாக 1970-71ல் காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்தி மாநில அரசுகளில் தன்னுடைய பிரிவு ஆதிக்கம் செலுத்த விரும்பிய போதும், 1980ஆம் ஆண்டில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய கட்சியைத் தவிர மற்ற கட்சிகளால் ஆளப்பட்ட பல மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
கூட்டு மனப்பான்மை
இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி வகித்த போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த போது இந்திய அரசியலில் இந்திரா காந்தி சகாப்தம் 1989ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பின்னோக்கிப் பார்க்கும் போது இந்திய கூட்டாட்சியின் பொற்காலமாக இப்போது தோன்றுகின்ற காலகட்டம் அப்போது தொடங்கியிருந்தது. லைசென்ஸ் ராஜ் அகற்றப்பட்டது, பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்காத குடிமக்களின் புத்திசாலித்தனம் போன்றவை பொருளாதார வளர்ச்சியின் எழுச்சி மற்றும் நிர்வாகத்தில் கூட்டு மனப்பான்மையை வளர்ப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தன. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்த சூழல் மலர்ந்தது. அதற்கான பலன்களும் கிடைத்தன.
ஆயினும் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த பிறகு இந்திய கூட்டாட்சி மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. நரேந்திர மோடி பதவியேற்று இந்த ஏழரை ஆண்டுகளில், 356ஆவது சட்டப்பிரிவு எட்டு முறை அதாவது ஆண்டிற்கு ஒருமுறை என்ற அளவிலே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகின்ற போது இந்திராகாந்தியைக் காட்டிலும் மோடி மாநிலங்களின் உரிமைகளை மதிப்பவராக இருந்திருக்கிறார் என்று சொல்ல முடியும் என்றாலும், வேறு பல வழிகளில் மோடி தனக்கு முந்தைய எந்தப் பிரதமரையும் காட்டிலும் இந்திய கூட்டாட்சி முறையைத் துச்சமென மதித்து அதனை மிகவும் பலவீனமே படுத்தியுள்ளார். அவரது அந்தச் செயல்பாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
மாநிலங்கள் மீது திணிக்கப்படும் சட்டங்கள்
முதலாவதாக – உருவாக்கப்படுகின்ற முக்கியமான கொள்கைகள் குறித்த்தாக உள்ள மிகவும் முக்கியமான சட்டங்கள் – அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே இயற்றப்படுகின்றன. இந்த நிலைமை (இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ள) வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உண்மையாகவே இருந்திருக்கிறது. கல்வி, கூட்டுறவு, வங்கி போன்ற முக்கியமான விவகாரங்கள் தொடர்பான கொள்கைகளும், சட்டங்களும் ஒன்றிய அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு பின்னர் மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு அதிகாரத்தைப் பறித்துக் கொண்ட ஒன்றிய அரசு
இரண்டாவதாக – சட்டம் ஒழுங்கு மாநிலம் தொடர்பான விவகாரமாக இருந்த போதிலும், தங்கள் சட்டப்பூர்வ அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தங்களுடைய சட்டங்களை அமல்படுத்துவதற்கான மாநில அரசுகளின் திறனையும், மாநிலங்களுக்கான சுயாட்சியையும் குறைத்து மதிப்பிகின்ற வகையிலேயே மோடி அரசாங்கம் அனைத்தையும் செய்து வந்துள்ளது. சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தை (ஊபா) உண்மையான பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது பிரயோகிப்பதற்குப் பதிலாக மிகவும் தாராளமாக, பொறுப்பற்ற முறையில் தன்னுடைய அரசியல் அதிருப்தியாளர்களை நசுக்குவதற்காக அமல்படுத்துவது, வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கத்துடன் 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமையை அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தொடர்ந்து அனுப்பி வைப்பது போன்ற செயல்பாடுகள் மோடி அரசாங்கம் தண்டனையளிக்கும் அதிகாரங்களைத் தனக்குள்ளாக மையப்படுத்தி வைத்துக் கொள்ள முயல்வதை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கின்றன.
மாநிலங்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்வதன் மூலம் நாட்டை ஒன்றிணைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை கோவிட்-19 தொற்றுநோய் வழங்கியது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தொடக்கத்தில் இருந்தே மோடி அரசு ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டது. பெருந்தொற்றுநோய் என்று அந்த தொற்றுநோயை அங்கீகரிப்பதற்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் புரட்டு வேலைகள், வற்புறுத்தல்களை மேற்கொண்டு பாஜக அரசாங்கம் பதவியேற்றுக் கொள்ளும் வரை மோடி அரசாங்கம் காத்திருந்தது. அந்த வேலை முடிந்த பின்னர் மாநிலங்களையோ அல்லது ஒன்றிய அமைச்சரவையில் உள்ள சகாக்களையோ கலந்தாலோசிக்காமல், நான்கு மணி நேர இடைவெளியில் நாடு முழுவதற்குமான பொதுமுடக்கம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களுடன் எந்தவொரு ஆலோசனையையும் மேற்கொள்ள முயலாமல் பொதுமுடக்கத்துடன் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் (NDMA) செயல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் வைரஸை வீழ்த்தி விட்டது என்ற பெருமைப் பேச்சுகள் அனைத்தையும் மீறி, அந்தச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள், பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் அசாதாரணமான அதிகாரங்களை ஒன்றிய அரசிற்கு வழங்குகின்ற அந்தச் சட்டம் இன்னும் சிறிது காலத்திற்கு நடைமுறையில் தொடரக்கூடும்.
குறிப்பிட்ட சில பேரழிவுகளை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் இந்த அரசாங்கத்தின் கைகளில் மாநிலங்கள் மீதான தன்னுடைய அதிகாரங்களை அதிகரித்துக் கொள்கின்ற மற்றுமொரு கருவியாக மாற்றமடைந்துள்ளது.
புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல்
மூன்றாவதாக – மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற புலனாய்வு அமைப்புகளை தன்னை எதிர்க்கின்ற கட்சிகளையும், மாநில அரசுகளையும் பலவீனப்படுத்தவும். அச்சுறுத்தவும் மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளை பாஜகவில் இணைத்துக் கொள்வது அவர்கள் மீதிருந்த கறையைத் தூய்மைப்படுத்துகிற கங்கா ஸ்னானம் போன்று இருக்கிறது என்று சில காலமாகவே சமூக வலைதளங்களில் ஒரு மீம் பரவி வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விசுவாசிகளாக்குவது
நான்காவதாக – தன்னை எதிர்க்கின்ற மாநில அரசாங்கங்களை திட்டமிட்டுத் தாக்கி வருகின்ற மோடி அரசு தனக்கான விசுவாசத்திற்கான தேர்வுகளை இந்தியக் காவல் பணி, இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகளிடம் மேற்கொள்ள முற்படுகிறது. நவீன ஐஏஎஸ், ஐபிஎஸ் அமைப்புகளை உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், அந்த அமைப்பில் உள்ள அதிகாரிகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் திறமையான, பயனுள்ள, முக்கியமான பாலமாக இருப்பார்கள்; அரசியல்வாதிகள் இடுகின்ற தவறான உத்தரவுகளைப் பின்பற்றாமல், எப்போதும் அரசியலமைப்பை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்றும் கருதினார்.
ஆனால் பட்டேலின் நாற்காலியில் இன்றைக்கு அமர்ந்திருக்கும் அமித்ஷா, தனது அதிகாரிகளிடம் இருந்து தனிப்பட்ட முறையிலான, சித்தாந்த ரீதியிலான கீழ்ப்படிதலைக் கோருபவராக இருக்கிறார். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத முக்கியமான மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் உள்ள ஆளும் ஆட்சிக்கு தாங்கள் விசுவாசமாக இருப்பதாக அறிவிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். இதுபோன்று அரசு ஊழியரை நடத்துகின்ற வக்கிரமான பக்கச்சார்பு கொண்ட பார்வை மத்திய-மாநில உறவுகள், அரசியலமைப்பு சார்ந்த நிர்வாகம் போன்ற சிந்தனைகளுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளைப் பலவீனப்படுத்த மோடி-ஷா ஆட்சி ஆளுநர் அலுவலகங்களையும் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தச் செயல் குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெளிப்பட்டுள்ளது. குடியரசு வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் கட்சி சார்பை மாநில ஆளுநர்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனிநபர் ஆளுமை வழிபாட்டு முறை
ஐந்தாவதாக – அதீத நிறுவன அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமரின் ஆளுமை வழிபாட்டு முறையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் செயல் மாநிலங்களும் மையமும் சம பங்காளிகளாக இருக்கின்ற கூட்டாட்சி குடியரசாக இந்தியா இருக்கின்றது என்ற எண்ணத்தைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பாக மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களில் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இருக்கின்ற தனிப்பட்ட முத்திரை அவர்களிடமுள்ள ஆழ்ந்த சர்வாதிகார மனநிலையையும், மாநிலங்களுடன் பாராட்டைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சத்தையுமே பிரதிபலிக்கிறது.
பிரதமரைச் சுற்றி இருந்து வருகின்ற ஆளுமை வழிபாட்டு முறை மாநிலங்கள் மீது அங்கீகரிக்கப்படாத நிதிச் சுமையைச் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக பிஎம்-கேர்ஸ் நிதியின் கட்டமைப்பைக் கவனியுங்கள். ரகசியமாக மறைக்கப்பட்டு, பொறுப்பேற்பு எதுவுமில்லாத அந்த நிதி கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பேற்பு என்ற அடிப்படையில் பிஎம்-கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படுகின்ற பங்களிப்புகளை வரிச் சலுகைகளாகக் கருதி தள்ளுபடி செய்யலாம் என்றிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பங்களிக்க விரும்புபவர்களுக்கு அந்தச் சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இந்திரா காந்தியுடன் ஒப்பிடுகையில் நரேந்திர மோடி 356ஆவது சட்டப்பிரிவை ஒப்பீட்டளவில் மிக அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும், சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட மாநிலத்தை ஒழித்த ஒரே பிரதமர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளது. கோவா, அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஹிமாச்சல் பிரதேசம் போன்றவை யூனியன் பிரதேசங்களாக இருந்து இறுதியில் மாநிலங்களாக மாறியவை. ஆனால் மோடி ஆட்சியின் சட்டப்பூர்வ சாமர்த்தியம் (மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் ஆளுநர் கூறிக் கொண்டார்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் தரம் தாழ்த்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில நிலைமை முற்றிலும் மாறாக வேறு வழியிலே செல்ல வேண்டியிருந்தது. மதவெறித் தொனியுடன் ஆணவம், தற்புகழ்ச்சி கொண்ட இந்தச் செயல் நிச்சயமாக இந்தியப் பிரதமர் ஒருவரால் இந்திய கூட்டாட்சிக் கொள்கையின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகவே உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியே மாநிலங்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்துவதற்காக 356ஆவது பிரிவைக் காட்டிலும் நுட்பமான கருவிகளை மிகத் தெளிவான வெற்றியுடன் நரேந்திரமோடியும் அமித்ஷாவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் ஒத்துழைப்புடன் நமது சிறந்த பொதுப் பல்கலைக்கழகங்களை அழித்தல், ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குதல், பெரும்பான்மையினரின் நெறிமுறைகளுக்கு ஊக்கமளித்தல், நமது குடியரசின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படுகின்ற பன்முனைத் தாக்குதல்கள் ஆகியவையே புதிய இந்தியாவின் முக்கியமான சாதனைகளாக இருக்கின்றன.
https://scroll.in/article/1017231/ramachandra-guha-five-ways-in-which-narendra-modi-is-weakening-indian-federalism
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது – அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு
பிரதமர் நரேந்திர மோடி 2022 பிப்ரவரி 07 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் திரும்பிப் பார்க்கின்ற போது அந்த உரை அவருக்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது குடிமக்கள் அவரிடமிருந்து நாட்டின் மீது அரசியல்வாதி ஒருவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையையே எதிர்பார்ப்பார்கள்; அனைத்துக் கட்சிகள், எம்.பி.க்களிடம் அடிப்படையான மரியாதையை அவர் வெளிப்படுத்துவார் என்றே அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர்தான் அவையின் தலைவர். அவர் அங்கே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவராக இருப்பதில்லை. அவரையும், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் எழுப்புகின்ற கேள்விகளின் மூலமாக பாராளுமன்றம் மற்றும் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவே பிரதமரும், அவரது அரசாங்கமும் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளும் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்றாலும் பிரதமர் வேறு தரத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறார். திமிர் பிடித்தவராக அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவராக பிரதமர் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் அன்றைய பேச்சு பொய்யாக்கியுள்ளது. தன்னுடைய பொறுமையை இழந்து போன அவருடைய பேச்சின் தொனி ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கேட்பதாகவே இருந்தது. மேலும் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை அதாவது எதிர்க்கட்சியை மிகவும் மலினமாகவே அவர் நடத்தியிருந்தார்.
பிரதமரின் பேச்சிற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் காரசாரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமரை ‘ராஜா’ என்று அன்றைய தினம் ராகுல் விளித்திருந்தார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை பிரதமர் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பன்முகத்தன்மையைப் புறக்கணிப்பது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பலவீனமான உறவைச் சிதைப்பது குறித்து ராகுலால் மோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே ஆள முடியாது என்றும், மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகப் பேசியிருந்தார். அரசியலமைப்பு ரீதியாக இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்றும், பாஜகவின் பார்வையில் இருப்பதைப் போல அது ஒரு தேசமாக இல்லை என்றும் பிரதமருக்கு ராகுல் நினைவூட்டிக் காட்டினார்.
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு மற்றொன்று என்று இரு வகை இந்தியா இருந்து வருகிறது என்று ராகுல் கூறிய போது அது பிரதமரைச் சற்றே அசைத்துப் பார்த்தது; அம்பானி, அதானி ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் மூலதனத்தின் மோசமான மையப்படுத்தல் மோடி பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியாவில் மிகவும் யதார்த்தமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.
ராகுல் காந்தி இன்னும் கண்ணியமாகப் பேசியிருந்திருக்கலாம் என்று சொல்பவர்கள்கூட பிரதமர் அவ்வாறாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி நுணுக்கம் அறிந்தவரில்லை. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் நெட்டித் தள்ளுகின்ற அணுகுமுறையே அவருடைய தனிச்சிறப்பான ஆளுமையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல மோடி ஒன்றும் பாராளுமன்ற மரபுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர் இல்லை. பாராளுமன்றத்திற்குள்ளே முதன்முறையாக அவர் பிரதமரான 2014ஆம் ஆண்டில்தான் மோடி நுழைந்திருந்தார். ஆனால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியதன் மூலமும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்த மகத்தான தலைவர்களுடன் உறவாடியதன் மூலமும் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குரல் கவனித்துக் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய மரியாதையும் தரப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுமூகமான செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் தேவையென்று கருதப்பட்ட அந்த நேருவிய காலத்தின் தயாரிப்பாகவே வாஜ்பாய் இருந்து வந்தார். நேருவைக் கடுமையாக விமர்சித்த போதிலும் நேருவின் பாசத்தை வாஜ்பாயால் பெற முடிந்தது.
ஆனால் இப்போது மோடி வித்தியாசமான காலகட்டத்தின் தயாரிப்பாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலமைச்சராக இரும்புக்கரம் கொண்டு குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தார்; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை. தான் தவறு செய்யவே முடியாதவர், கட்சியில் அல்லது வெளியில் இருந்து ஒருபோதும் யாராலும் விமர்சிக்கப்படக் கூடாதவர் என்ற மனநிலையுடனே அவர் இருந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை – நான் எந்தத் தவறும் செய்வதில்லை; என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; நாட்டை எப்படி நடத்துவது, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி யாரும் எனக்குக் கற்றுத் தர முயற்சி செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்கப் பொதுக் கண்ணோட்டத்தில் பிரதமரின் அந்த பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சியாகவே இருந்தது. மோடியின் ஆளுமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே ராகுல் காந்தியின் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அதை அலட்சியப்படுத்துவது பிரதமருக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது.
ராகுல் காந்தி அவரிடமிருந்து தகுந்த பதிலைப் பெறுவார் என்று மோடி பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிச்சயம் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவே முயன்றார் என்றாலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறுக்கிட்ட பிறகு அவர் பொறுமையிழந்து விட்டார். தான் இதுவரை யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், இப்போது காங்கிரஸின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது தரம் தாழ்ந்த அவரது பேச்சின் ஆரம்பமாக மாறியது. அவர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதை எளிதில் காண முடிந்தது.
மோடி எப்போதும் தேர்தல் களத்திலேயே இருக்கும் அரசியல்வாதி. வாக்காளரிடம் பேசுகின்ற வாய்ப்பை ஒருபோதும் அவர் நழுவ விடுவதே இல்லை. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் அவரைப் பொறுத்தவரை அது வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, மக்களவையில் தனது பேச்சில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான நேரத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ‘காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி. மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் எந்தவொரு நன்மையும் அந்தக் கட்சி செய்திருக்கவில்லை, அதனால்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாக்காளர்களிடம் அவர் அந்த உரையின் மூலம் கூறினார்.
ஆனாலும் மத்தியில் தனக்குச் சவால் விடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று மோடி கருதுவதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தவே செய்தது. காங்கிரஸிற்கு மாற்றாக மத்தியில் பாஜக எதிர்ப்பு முன்னணியாக தன்னுடைய கட்சி உருவெடுத்துள்ளதாகக் கூறி வருகின்றது என்பதாக மம்தா பானர்ஜியின் சாகச அரசியல் பேச்சுகள் இருந்த போதிலும், ‘காங்கிரஸை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்; இடைவிடாது தொடர்ந்து அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்; மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்து அந்தக் கட்சி நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்’ என்பதில் மோடி மிக உறுதியாக இருந்து வருகிறார். மக்களவைக்குப் பிறகு மாநிலங்களவை என்று மீண்டும் மோடியின் உரையில் பெரும்பான்மை பங்கை காங்கிரஸ் கட்சியே ஆக்கிரமித்துக் கொண்டது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால், பரம்பரை அரசியல், 1984 கலவரங்கள், நெருக்கடி நிலை, ஏழ்மை என நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காங்கிரஸே காரணம் என்று வெறியுடன் அவர் குற்றம் சாட்டியது அவரது சிந்தனைச் செயல்பாட்டின் பின்னணியில் உள்ளவற்றையே நமக்கு நினைவூட்டியது.
காங்கிரஸின் மீது மோடி கொண்டிருக்கும் ஆவேசம், காங்கிரஸின் மீதான அவரது மனவேதனை அல்லது வெறுப்பின் பிரதிபலிப்பாக அல்லது நேரு-காந்தி குடும்பத்தின் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கவில்லை. மிகப் பெரிய அரசியல் தந்திரத்தின் பகுதியாகவே அவரது பேச்சு பொதுவாக இருக்கிறது. தனது ‘புதிய பாஜக’ (தி நியூ பிஜேபி) என்ற புத்தகத்தில் காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் இடைவிடாத வெறித்தனமான பேச்சுகள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளை நளின் மேத்தா தந்துள்ளார். பாஜக தனது வெளியுலகத் தொடர்புகளில் – அதாவது பேச்சுகள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகளில் – காங்கிரஸையே அதிகம் குறிப்பிட்டு வருகிறது என்று அவர் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த தரவரிசையில் காங்கிரஸ் என்ற வார்த்தையே அவர்களுடைய பேச்சுகளில் முதலிடத்தைப் பெற்றது. மோடி, பாஜக, வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பின்தங்கி காங்கிரஸ் என்ற வார்த்தைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. ‘இந்த பெரிய அரசியல் தொடர்பு மாற்றம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது, அதற்குப் பிறகு காங்கிரஸ் தொடர்பான பாஜகவின் பேச்சுகளில் வியத்தகு மாற்றத்தை நம்மால் காண முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு எதிரான பேச்சை படிப்படியாக பாஜக அதிகரித்துக் கொண்டே வந்தது. பாஜகவின் தகவல் தொடர்புகளில் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸிற்கு எதிரான பேச்சு மற்ற அனைத்து விஷயங்களையும் முந்திவிட்டது’ என்று நளின் மேத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘காங்கிரஸின் முதன்மையான சித்தாந்த எதிர்ப்பாளராக, தனது போட்டியாளரைப் பற்றி பாஜக அதிகம் பேசுவது மிகவும் இயல்பானது என்றாலும் பாஜகவை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முக்கிய அரசியல் பாடத்தை கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே காங்கிரஸுக்கு எதிரான அதன் பேச்சுகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு இருக்கிறது’ என்று எழுதியுள்ளார்.
எனது பார்வையில் பிரதமர், அவரது கட்சியினரிடம் உள்ள இந்த வெறுப்பு வரப் போகின்ற எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான ஆட்சி எதிர் மனோநிலை மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், மோடி தன்னை பாதிக்கப்படக்கூடியவராகவே உணருவார். மேலும் காங்கிரஸ் இழைத்துள்ள தீமைகளை வாக்காளர்களும் நாட்டு மக்களும் மறந்து விடக் கூடாது என்றும், அவர்கள் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் நிச்சயம் விரும்புவார். அதற்காக நாகரீகமான விவாதங்கள், உரையாடல்களுக்கு நமது பிரதமர் அதிக அளவிலே தடையை ஏற்படுத்துவார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். அவர்களிடமிருந்து வேறு என்ன நமக்கு கிடைக்கப் போகிறது?
(‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அசுதோஷ் satyahindi.com என்ற இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார்)
https://www.ndtv.com/opinion/pms-speech-reveals-rahul-gandhi-got-under-his-skin-2755902
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் – தமிழில்: தா. சந்திரகுரு
சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதைத் தவிர இந்தியச் சமூகம் குறித்த வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடி அல்லது பாஜகவிடம் காணப்படவில்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல்
எழுத்தாளரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ஆகார் பட்டேலின் நேர்காணலை தி வயர் இணைய இதழ் டிசம்பர் 11 அன்று வெளியிட்டது. பணமதிப்பு நீக்கம், நான்கு மணி நேரத்துக்குள்ளாக நாடு தழுவிய பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பு வெளியிட்டது போன்ற அதிரடி முடிவுகள் ஏற்படுத்திய விளைவுகள் உள்ளிட்டு மோடி ஆளுமையின் கீழ் உள்ள இந்தியா குறித்த ஆகார் பட்டேலின் பகுப்பாய்வு, வகுப்புவாத துருவமுனைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டு பாஜக, ஆர்எஸ்எஸ்சிடம் வேறு எந்தவொரு திட்டமோ அல்லது சித்தாந்தமோ இல்லாதது போன்றவற்றை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது. மோடி நிர்வாகத்தின் சாதனைகள் அல்லது தோல்விகளை மதிப்பிடுவதற்கு 1950களுக்கு முந்தைய அரசாங்கத் தரவுகள் மற்றும் உலகளாவிய குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ள பட்டேலின் சமீபத்திய புத்தகமான ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
நேர்காணலின் முழு எழுத்தாக்கம் கீழே உள்ளது. அந்த நேர்காணலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: வணக்கம். க்ளென்லிவெட் புக்ஸ் உதவியுடன் நடத்தப்படும் தி வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும், மோடியின் குணாதிசயம், அவரது தலைமைப் பாணியை எவ்வாறு புரிந்து கொள்வது என்ற முக்கியமான கேள்விகள் உரிய பதிலுக்காக இன்னும் காத்து நிற்கின்றன. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) என்ற தலைப்பிலான புத்தகம் மிகத் துல்லியமாக அந்தச் சிக்கல் குறித்து பேசியிருக்கிறது. அனைவராலும் நன்கு அறியப்பட்டிருக்கும் பத்திரிகையாளர், கட்டுரையாளரான ஆகார் பட்டேல் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.
ஆகார் பட்டேல்! மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நரேந்திர மோடி எனும் தலைவரிடம் உள்ள குணாதிசயக் குறைபாடுகளின் மூலம் அவரது தலைமையில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த தரவுகளையும், உண்மைகளையும் விளக்குவதே நோக்கம் என்று உங்களுடைய புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய குணாதிசயங்கள், தலைமைத்துவ பாணி மீதே நான் குறிப்பாக கவனம் செலுத்த விரும்புகிறேன். அவரைப் பற்றி ‘அவர் தீர்க்கமானவர், முழுமையான உறுதிப்பாடு கொண்டவர், வெளிப்படையானவர், கற்றுக் கொள்ளாதவர், ஆற்றல் மிக்கவர், கவர்ச்சியானவர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கின்ற சில சமயங்களில் அவரிடம் துணிச்சலும் இருக்கிறது’ என்று எழுதியுள்ளீர்கள். பிரதமராக இருப்பவர் ஒருவரின் குணாதிசயங்கள் ‘தீர்க்கமானவர்’, ‘ஆற்றல் மிக்கவர்’, ‘துணிச்சல் நிறைந்தவர்’ என்றிருப்பதுடன் ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்ற கலவையாக இருப்பது கவலைக்குரியது என்பதாகவே நான் பார்க்கிறேன். அப்படி நான் கூறுவது தவறாக இருக்குமா?
ஆகார் பட்டேல்: இல்லை. நீங்கள் எதுவும் தவறாகச் சொல்லி விடவில்லை. குறைபாடுகள் நம் அனைவரிடமும் இருப்பதாகவே நினைக்கிறேன்; அந்தக் குறைபாடுகள் நமது சூழ்நிலைகளால், நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர்களால் எந்த அளவிற்கு குறைவாகக் காணப்படுகின்றன என்பதுதான் இங்கே முக்கியம். மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன், தன்னுடைய கட்சிக்குள் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், அதிக உறுதிப்பாடு கொண்டவராக மோடியைப் போன்ற ஆற்றல் மிக்க ஒருவரின் குணாதிசயங்கள் அவரிடமுள்ள விவரங்களுக்குள் சென்று விடக்கூடாது என்ற குறைபாட்டை மீறிச் செல்பவையாகவே இருக்கின்றன. கடந்த காலத்திலிருந்து விலகி வேறு முடிவெடுக்க விரும்பும் ‘தீர்க்கமான’ ஒருவருக்கு, அது கவலை அளிப்பதாகவே இருக்கும். உண்மையில் அது ஆபத்தானதுமாகும்.
கரண் தாப்பர்: உண்மையில் நீங்கள் அந்த வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள ‘தீர்க்கமான’ மற்றும் ‘கற்றுக் கொள்ளாத’ என்ற இரண்டு உரிச்சொற்கள் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தான் என்ன செய்கிறோம் என்பதில் ‘உறுதியாக’, ‘நிச்சயமாக’ இல்லாமலேயே இன்னும் முன்னேறிச் சென்று அதைச் செய்வதில் அவர் உறுதியுடன் இருக்கிறார்.
ஆகார் பட்டேல்: மோடி அதை ஏற்கனவே நம்மிடம் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர் மது கீஷ்வருடனான அற்புதமான வீடியோ நேர்காணல் உள்ளது. அதில் தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி மோடி விரிவாகப் பேசியிருக்கிறார். அது ஏற்கனவே அவர் பதினோரு ஆண்டுகள் முதல்வராக (குஜராத் மாநிலத்தின்) இருந்த பிறகு 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட நேர்காணல். தன்னைப் பொறுத்தவரை கோப்புகளை வாசிப்பது கற்றலுக்காக புத்தகங்களைப் படிப்பதைப் போன்று இருப்பதால், தான் கோப்புகளைப் படித்துப் பார்ப்பதில்லை என்றும் அதற்கு மாறாக அந்தக் கோப்புகளைப் பற்றி இரண்டு நிமிடம் சுருக்கமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டு, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதாகவும் மோடி அந்த நேர்காணலில் கூறியிருந்தார். மிகவும் தீர்க்கமானவர், அரசியல் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் என்று தான் நம்புகின்ற விஷயங்களைச் செய்ய விரும்புகிறவர் அவர் என்பது போன்றவை உண்மையில்லை என்றால் அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவையிரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதாலேயே இந்தியா பல்வேறு விஷயங்களில் இன்றைய நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கரண் தாப்பர்: நீங்கள் கூறிய அந்த இரண்டு விஷயங்களைப் பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். பிரதமராக இருக்கும் ஒருவர் அடிக்கடி எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை தன்னிடமுள்ள விடாமுயற்சி, செறிவு, விவரம் மற்றும் கோப்புகளைப் படிப்பதன் மூலம் சிக்கல்களைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் எடுப்பதில்லை; அதிகாரி ஒருவர் அளிக்கின்ற இரண்டு நிமிடச் சுருக்கத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறார் என்ற மது கீஷ்வரின் கதையை உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அது கேவலமான, மிகவும் சாதாரணமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமராக இருக்கும் ஒருவர் உண்மையிலேயே இப்படித்தான் நடந்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆகார் பட்டேல்: அது மது கீஷ்வர் சொன்ன கதை அல்ல; அவையனைத்தும் மோடியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். அவை வீடியோவில் இருக்கின்றன. அதே பாணியில்தான் அவர் ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களை மாநில முதல்வராகக் கழித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அதுபோன்று இருப்பது மிகவும் வசதியாகவே இருந்திருக்கிறது என்பதால் அவர் உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்றே நம்பலாம்.
கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது நேரடியாக குதிரையின் வாயிலிருந்தே கிடைத்திருக்கிறது. தானே அவ்வாறு கூறியிருப்பதன் மூலம், தனது வார்த்தைகள் மூலமே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.
ஆகார் பட்டேல்: அவ்வாறு இருப்பதை ஒரு மோசமான விஷயம் என்று அவர் பார்த்தார் என்று நான் நினைக்கவில்லை. அவரை ஆதரிப்பவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் சரியானதையே செய்திருக்கிறார் என்று நினைப்பவர்கள் – இப்போது அவருடைய எட்டாம் ஆண்டில் இருக்கிறோம் – அதை மோசமான விஷயம் என்று நினைக்கவில்லை. அவர் கடந்த காலத்தை தீவிரமாக உடைத்தெறிந்தவர், நல்ல காரியங்களை மட்டுமே செய்தவர், செய்து கொண்டிருப்பவர் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து வருகிறார்கள். அவருடைய மோசமான முடிவுகள் பற்றி எனக்கு வேறுவிதமான கருத்துகள் இருந்தாலும், எந்த விவரங்களுக்குள்ளும் சென்று விடக் கூடாது என்று தொடர்ந்து இருந்து வருகின்ற அவரைப் பற்றி அவருடைய ஆதரவாளர்கள் மோசமாக நினைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். 2014ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அவருடைய அவசர முடிவுகளே நம்மைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: ‘மோசமாக எடுக்கப்பட்ட முடிவுகள்’ என்று நீங்கள் சொன்ன அந்த விஷயத்திற்கு சிறிது நேரம் கழித்து வருகிறேன். ஒரு கணம் முன்பாக தன்னை மோடி பார்த்துக் கொள்ளும் விதம் குறித்து நீங்கள் சொன்ன அந்த மிக முக்கியமான வாக்கியத்தின் இரண்டாம் பகுதியைப் பற்றி முதலில் பேசலாம் என்று நினைக்கிறேன். ‘தன்னை ஒரு வீரதீரர் என்றே மோடி பார்த்துக் கொள்கிறார். ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசை அவரிடம் உள்ளது. எதையாவது செய்திட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது. ஆனால் அது என்னவென்று தெரியாமல் இருப்பதும், மிகவும் ஆழமாக அல்லது விவரமாக இருப்பதற்கான ஆர்வம் அவரிடம் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவை வழிநடத்துகின்ற அவரது பாணியின் மூலம் விளைந்துள்ளது’ என்று எழுதியிருக்கிறீர்கள். இவையெல்லாவற்றையும் விட, பேச்சுவழக்கில் நாம் ‘பெருவெடிப்பு’ என்று சொல்கின்ற மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அவர் விரும்புகிறார் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். எப்பொழுதும் – அல்லது பெரும்பாலான நேரங்களில் – தன்னை மூன்றாம் நபராகக் குறிப்பிட்டுக் கொள்பவர், அமெரிக்க அதிபரைச் சந்திக்கச் சென்ற போது தான் அணிந்திருந்த உடையில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டு சென்றவர், தனக்கு ஐம்பத்தியாறு அங்குல மார்பு இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவர் தன்னைப் பற்றி தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சுயபிம்பத்தை நம்மிடம் வெளிப்படுத்துபவராகவே இருப்பார் என்றே நினைக்கிறேன். அவரது அந்தக் குணம் நீடித்து இருப்பதாகவே உள்ளது. முதலமைச்சராக, பிரதமராக தான் இருந்திருக்கும் ஆண்டுகளில் தன்னை அவர் இப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை உண்மையில் நம்மிடம் காட்டிக் கொண்டே இருப்பவராகவே அவர் இருந்திருக்கிறார்.
கரண் தாப்பர்: இந்த இடத்தில் சற்றே நிறுத்தி விட்டு, அதனால் உருவாகியுள்ள பிம்பத்தைப் பார்ப்போம். தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்து பெரிய அளவில் தீர்க்கமான முறையில் நடிக்க விரும்புகின்ற மனிதர் அவர். அடுத்ததாக ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்று நீங்கள் குறிப்பிடுகின்ற மனிதர் அவர். கோப்புகளைப் படிப்பதில்லை; முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ஆழமாக, விவரமாக இருக்கவில்லை என்ற போதிலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுகிறார் என்று சொல்வது அவர் சிந்திக்காது செயலாற்றுகின்றவராக, பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று நமக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது இல்லையா?
ஆகார் பட்டேல்: அந்த இரண்டு வார்த்தைகள் அவரை மிகத் துல்லியமாக விவரிக்கின்றன என்றே நான் கூறுவேன். இருப்பினும் புத்தகத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று நான் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்ட உணர்வுயுடனேயே அவை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவருடைய பதவிக் காலம் குறித்து ஆய்வு செய்த எவரொருவரும் – அவருடைய செயல்திறன் என்னவென்பதை தரவுகள் காட்டுகின்றன – நீங்கள் இப்போது பயன்படுத்திய அந்த வார்த்தைகளைத் தவறானவை என்று நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: எனவே நீங்கள் சித்தரித்திருக்கும் பிம்பம் – பின்விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத பொறுப்பற்றவர், சிந்திக்காது செயலாற்றுகின்றவர் என்ற பிம்பம் அவருக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். தீர்க்கமானவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் அவர் நடிக்கவே விரும்புகிறார்.
ஆகார் பட்டேல்: அது முற்றிலும் சரியானது. மிகச் சரியாக அதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். உண்மையில் அவர் தன்னுடைய செயல்களின் விளைவுகள் என்னவென்று கவலைப்படுபவரே இல்லை. அவரைப் பொறுத்தவரை மற்றவர்கள் தன்னை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.
கரண் தாப்பர்: சிந்திக்காது செயலாற்றுதல், பொறுப்பற்ற தன்மை, விளைவுகளைப் பற்றி கவலைப்படாதது போன்றவற்றின் விளைவாக நடந்துள்ளவை குறித்து எடுத்துக்காட்டுகளுடன் பார்வையாளர்களுக்குச் சொல்ல முடியுமா? அவற்றில் ஒன்றாக பணமதிப்பு நீக்கம் இருக்குமா? நான்கு மணிநேர கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது அதற்குள் அடங்குமா?
ஆகார் பட்டேல்: அந்த முடிவுகளெல்லாம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருந்தன. அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அந்த முடிவின் கீழ் உள்ளவற்றைப் பார்க்க வேண்டும். தேசிய அளவிலான பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கத்தில் யாரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது அல்லது யாரைத் தயார்படுத்தினார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பிபிசி தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. பொதுமுடக்கம் வரப் போகிறது என்பது பேரிடர் மேலாண்மை அல்லது நிதி அமைச்சகம் என்று அரசாங்கத்தில் இருந்த யாருக்கும் தெரியாது. அதனால் ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகவும் குழப்பமான, வலிமிகுந்த காலகட்டமாக இருந்திருக்கக்கூடிய (இருந்த) நிலைமையை எதிர்கொள்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அவகாசம் அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை. அப்போது ஏற்பட்ட அந்த வலியை ஏதாவதொரு வகையில் குறைப்பதை உறுதி செய்வதற்கான அக்கறையும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
இரண்டாவது எடுத்துக்காட்டு, பணமதிப்பு நீக்க முடிவின் கீழ் இருந்த நடவடிக்கைகள். பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில் – நவம்பர் 8 அன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தங்களுடைய செல்போன்களை வெளியே விட்டுவிட்டு வருமாறு அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்த நாளின் பிற்பகுதியில் அது நடக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அமைச்சர்களுக்குத் தெரியாது, அவர்களின் துறைகளுக்கும் தெரியாது. அரசாங்கம் அவர்கள் யாரையுமே தயார் செய்திருக்கவில்லை. வரவிருப்பதை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகள் தேவைப்படும் என்று அரசாங்கம் கருதவில்லை. அந்த செயலின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மோடி புரிந்து கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை டிசம்பர் மாத இறுதியில் புரிந்து கொண்டபோது அவர் மிகவும் குழப்பமடைந்தார் என்றே நினைக்கிறேன். ஆனால் நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்ட போது அதன் விளைவுகள் குறித்து எதையுமே அவர் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கமே அதற்குத் தயாராக இல்லாத நிலையில் ஏதாவது செய்யுமாறு தேசத்தை அவர் கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் அந்த முடிவுகள் குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது, முதலில் சுடுவதைத் தேர்வு செய்து கொண்டு விட்டு பின்னர் அவர் குறிவைத்துப் பார்த்திருக்கிறார் என்பதையே உறுதியாகச் சொல்கின்றது.
கரண் தாப்பர்: நூற்றி முப்பத்தெட்டு கோடி மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் – தனக்கு நல்லது என்று தோன்றுபவற்றை ஆலோசனைகள் எதையும் பெறாமல், தன்னுடைய அமைச்சரவை உறுப்பினர்களைக்கூட கலந்தாலோசிக்காமல், தயாரிப்பு வேலைகள் எதையும் செய்யாமல், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்காமல் உள்ளவராக இருக்கிறார் என்பதாக நீங்கள் ஏறக்குறைய சொல்ல வருகிறீர்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் முன்வைக்கிறேன்.
ஆகார் பட்டேல்: ஆம். அவரது கவர்ச்சியும், அதிகாரமும் அதிக அதிகாரம் இல்லாதவர்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் இணைந்தே இருந்திருக்கின்றன. அது அவரைப் பொறுத்தவரை மேலும் தீங்கு விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. (அருண்) ஜெட்லி, (நிர்மலா) சீதாராமன், (எஸ்) ஜெய்சங்கர், (பியூஷ்) கோயல் என்று இவர்களில் யாருமே தங்கள் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில்லை என்பதைப் பார்த்தாலே அந்த உண்மை உங்களுக்குத் தெரிய வரும். அவர்கள் அனைவருமே எல்லோராலும் பிரபலமானவராக அறியப்பட்ட ஒருவரை வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்கள் அல்ல. அவர்களால் அவரை மறுக்க முடியாது; அவருக்கு ஆதரவாக இருந்து எதையும் ‘வேண்டாம்’ என்று சொல்லக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதே நம்மை இந்த நிலைமைக்கு இட்டு வந்திருக்கிறது.
கரண் தாப்பர்: இப்போது நாம் அவரைப் பற்றி நீங்கள் சொல்கின்ற மற்றொரு விஷயத்திற்கு – நீங்கள் கூறுவதைப் போல தொலைநோக்குப் பார்வை அவரிடம் இல்லாததே அவருடைய குணாதிசயங்கள், தலைமைப்பண்பு ஆகியவற்றை மேலும் மோசமாக்கி இருக்கிறது என்று மோடியைப் பற்றி நீங்கள் உருவாக்கியுள்ள பிம்பம் குறித்து பேசலாம். நான் இங்கே ‘சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு தொடர்ந்து சட்டங்களை உருவாக்குவது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதை நிராகரிப்பதைத் தவிர இந்தியச் சமூகத்தைப் பற்றிய வேறு பார்வை எதுவும் மோடியிடம் இல்லை’ என்று நீங்கள் எழுதியுள்ளதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இரண்டு தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று ஏழாண்டுகள் ஆட்சி செய்தவருக்கு அதுபோன்ற தொலைநோக்குப் பார்வை எதுவுமில்லை என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
ஆகார் பட்டேல்: 1951ஆம் ஆண்டிலிருந்து ஜனசங்கம், பாஜக கட்சிகளின் கொள்கைகள், தேர்தல் அறிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் உண்மையான நிலைத்தன்மையோ அல்லது சித்தாந்தமோ எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை உணர முடியும். இயந்திரமயமாக்கலுக்கு ஆதரவாக அவர்கள் இருந்தார்கள் என்றாலும் டிராக்டர்களைப் பயன்படுத்துவது காளைகளைக் அறுத்துக் கொல்வதற்கு ஒப்பானது என்பதால் அதை விவசாயத்தில் அவர்கள் விரும்பவில்லை. பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் இயந்திரமயமாக்கலை அவர்கள் விரும்பவில்லை. இந்தியர்களின் மாத வருமான வரம்பு இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதுதான் வாஜ்பாய் வரையிலும் இருபதாண்டுகளாக அவர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கையாக இருந்தது.
சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு குறிப்பிட்ட சித்தாந்தம் எதுவும் இந்தியாவின் அரசியல் சக்தியாகத் திகழ்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இருந்ததில்லை. அந்த அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிரான – குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான – நிலைப்பாட்டையே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த நிலைப்பாட்டை 2015க்குப் பிறகு, 2018க்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களில் நம்மால் காண முடியும்.
கரண் தாப்பர்: அப்படியானால் மோடி உருவான கட்சி, அரசியல் பாரம்பரியம் – ஜனசங்கம், பாஜக – அணுகுமுறைகளை, நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வந்துள்ளன; அவர்களுக்குப் பின்னால் எந்தவொரு கருத்தியல் ஒத்திசைவும் இருக்கவில்லை; உண்மையில் தங்களிடமே முரண்பட்டு – மாதத்திற்கு ரூ.2,000 என்ற வருமான வரம்பு போன்ற தங்களுடைய நிலைப்பாடுகள் நியாயமற்றவை என்று கருதி தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று நீங்கள் கூற வருகிறீர்கள். மோடியின் தொலைநோக்கின்மை அதன் பின்னணியில்தான் வெளிப்படுகிறதா?
ஆகார் பட்டேல்: ஆம். அவர்கள் உள்ளீடற்றவர்களகவே இருந்தனர். எந்தவிதமான வருமானமும் இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னது வெறும் சம்பளம் குறித்ததாக மட்டுமே இருக்கவில்லை. அவ்வாறு சொல்லி வந்த அதே கட்சிதான் இப்போது மிகவும் சாதாரணமாக தனியார்மயமாக்கலில் இறங்கி, மோடியின் தலைமையின்கீழ் அரசின் தலையீடுகளற்ற வணிகப் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஆத்மநிர்பார் பாதையில் அந்தக் கட்சிதான் சென்றது. அந்த அறிவிப்பு குழப்பம் நிறைந்தது என்று கட்சியின் ஆலோசகர்களான (அரவிந்த்) பனகாரியா உள்ளிட்டோர் கூறினர். அவர்களுடைய சிந்தனையில் உண்மையான தெளிவு என்பது இருந்ததில்லை. அவர்களிடம் ஒரேயொரு கொள்கை மாறாத்தன்மை மட்டுமே இருந்து வருகிறது. இந்திய முஸ்லீம்களைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவோம், அரசியல் ரீதியாக அவர்களை ஒதுக்கி வைப்போம் என்பதை மட்டுமே அவர்கள் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள். முஸ்லீம்களைத் துன்புறுத்துவது, சட்டத்தின் மூலம் தொடர்ந்து அவர்களைச் சித்திரவதை செய்வது என்பதை மிகவும் வெற்றிகரமாகச் செய்து கொண்டுமிருக்கிறார்கள்.
கரண் தாப்பர்: மோடி உருவான கட்சிகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்திலிருந்து நான் அவற்றை சித்தாந்த ரீதியாக சிந்திக்காமல் வெறுமனே அணுகுமுறை மட்டுமே கொண்ட கட்சிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் என்றே எடுத்துக் கொள்கிறேன். அப்படியென்றால் கடந்த ஏழு ஆண்டுகளில் மோடியின் நடத்தை மற்றும் செயல்திறன் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? அதுவும் அவருடைய தொலைநோக்குப் பார்வையின்மையையே சுட்டிக்காட்டுகிறதா? ஏனென்றால் ஜன்தன் யோஜனா, ஸ்வாச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் சமூகத்தில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கான தெளிவான பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும், அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த உறவுகளை வியத்தகு முறையில் மாற்றியிருப்பதைப் பார்க்கும் போது வெளியுறவுக் கொள்கை குறித்தும் அவருக்கு ஒரு பார்வை இருக்கிறது என்றும் மக்கள் கூறலாம். அவர்களின் வாதங்களை எவ்வாறு எதிர்கொள்வது?
ஆகார் பட்டேல்: அந்த திட்டங்களைப் பொறுத்தவரை அவர் பல முனைகளில் நியாயமான முறையில் சிறப்பாகச் செய்துள்ளார் – அல்லது அதற்கான முயற்சிகளைச் செய்துள்ளார் – என்றாலும் நேரடிப் பலன்கள் பரிமாற்றத்திற்கான ஜன்தன் திட்டம் உட்பட நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த திட்டங்கள் அனைத்துமே அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்ட திட்டங்களே ஆகும். ஸ்வாச் பாரத் அபியான் என்பது நிர்மல் பாரத் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகும். நிர்மல் என்பதற்கு ஸ்வாச் என்று பொருள். ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு ஏன் பெயர் மாற்றப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆக இந்தப் பக்கத்தில் அரசு ஏதோ செய்து கொண்டிருக்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியின் சில கூறுகளைக் கொண்டவையாகவே உள்ளன. அதுமட்டுமல்லாது அந்த திட்டங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டதைக் காட்டிலும் இப்போது மிகக்குறைவான திறனுடனே செய்யப்பட்டு வருகின்றன; எட்ட வேண்டிய இலக்கை அந்த திட்டங்கள் இன்னும் எட்டியிருக்கவில்லை என்ற வாதங்களுக்கும் இடமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் தரவுகளின் மூலம் ஆவணப்படுத்தியும் இருக்கிறேன்.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அவர் செய்திருப்பவை, உலகத்துடன் இந்தியா தொடர்பு கொண்டிருந்த விதத்தின் போக்கையே மாற்றியிருக்கின்றன. அந்த மாற்றங்கள் மிகவும் எதிர்மறையாக இருக்கின்றன என்றே நான் கூறுவேன்; உலக நாடுகளிடம் இந்தியா குறித்து பெரும்பாலும் ‘குழப்பமான ஆனால் தீங்கற்ற நாடு’ என்ற எண்ணமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதில் தலையிட வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் பலமுறை உணர்ந்துள்ள வகையிலேயே இந்தியா தற்போது தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.
எச்சரிக்கைப் பட்டியலில் சேர்ப்பது; பொருளாதாரத் தடை விதிப்பதாக அச்சுறுத்துவது; நாம் இயற்றியுள்ள சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை முன்வைப்பது என்று அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும் உள்ள பல சுதந்திரமான அரசாங்க அமைப்புகள் அண்மைக்காலங்களில் இந்தியாவை எச்சரித்து வருகின்றன. இவையெல்லாம் நமக்கு முற்றிலும் புதியவையாகவே இருக்கின்றன. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக உலகத்துடனான – குறிப்பாக மேற்கத்திய உலகத்துடனான – நமது உறவில் இதுபோன்று நடந்து நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாக அல்லது பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் மூலமாக சிறுபான்மையினரைக் குறிவைத்து மோடி செய்திருக்கின்ற காரியங்கள், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன. அதுபோன்று எழுந்துள்ள உணர்வு இதுவரை நடந்துள்ள மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளால் மறைந்து விடும் என்று நான் கருதவில்லை.
கரண் தாப்பர்: சுருக்கமாகச் சொன்னால் பொருளாதாரம் குறித்த வேறொருவரின் தொலைநோக்குப் பார்வையே மோடியின் தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பார்வையாக மட்டுமே அது இருக்கிறது. முன்பிருந்ததைத் தொடர்வதைத் தவிர தனக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வதாக மோடியின் பங்களிப்பு இருக்கவில்லை. வெளிநாட்டு விவகாரங்களில், உலக நாடுகளுடனான உறவுகளில் அதிக நெருக்கத்தை அவர் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறினாலும், அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் உருவாக்கி, இந்திய ஜனநாயகத்திற்கு கேடுகளையே விளைவித்திருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை அவர் அதிகரித்திருக்கிறார் என்றே கூறுகிறீர்கள். உங்களுடைய பார்வையில் நேர்மறையைக் காட்டிலும் எதிர்மறையே அதிகம் இருக்கிறது.
ஆகார் பட்டேல்: ‘பொருளாதாரம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றே நினைக்கிறேன். அரசால் செய்து முடிக்கப்பட்டிருக்கும் கூறுகள், விஷயங்கள் யாவை என்று கேட்க விரும்புகின்றேன். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்திலிருந்து அவர் தவறி விலகிச் சென்றிருக்கிறார். 2013, 2020 என்று நடத்தப்பட்டுள்ள இரண்டு அரசாங்க கணக்கெடுப்புகளில் உள்ள தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைப் பார்த்தால், 2013இல் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு ஐந்து கோடிக்கும் குறைவானவர்கள் வேலை செய்து வருவது தெரிய வரும். மிகவும் அழிவுகரமான விளைவை நாம் கண்டிருக்கிறோம். ஸ்வாச் பாரத் அபியான் போன்ற மற்ற விஷயங்கள் முந்தைய அரசின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் ஏழாண்டு கால ஆட்சிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றி உங்களுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள். ‘நமது அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற மதச்சார்பின்மை, பன்மைத்துவம் குறித்து அரசியல் கட்சிகள் பேசிடாத ஓரிடத்திற்கு இந்தியாவை மோடி கொண்டு சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் வகுப்புவாதம் என்று கருதப்பட்டது இன்றைக்கு சட்டப்பூர்வமாகி இருக்கிறது; மதச்சார்பற்ற தன்மையானது போலி என்றாகி இருக்கிறது. ‘மோடி விளைவு’ என்றே அதை நாம் சட்டப்பூர்வமாக அழைக்கலாம். மோடி பிரதமராகப் பொறுப்பேற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நாடாக இந்தியா இருக்கிறது என்ற கருத்துக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள், இல்லையா?
ஆகார் பட்டேல்: ஆம். அதற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். இந்த நிலைமையிலிருந்து பின்வாங்குவது சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பாஜக ஆட்சியிலிருந்து சென்று விட்டாலும், தானாக இப்போதைய நிலைமை மாறி விடும் என்றும் நான் நினைக்கவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்த நோய் சமூகத்திடம் தொற்றிக் கொண்டு விட்டது.
மோடி செய்த காரியங்களில் ஒன்று – குஜராத்திலும் அவர் அதைச் செய்திருந்தார் – சட்டப்பூர்வமாக அரசிடம் இருக்கின்ற அதிகாரத்தை தான் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு சமூகத்திடம் அந்த அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற காரியத்தைச் செய்திருக்கிறார். அதன் மூலம் கும்பல் ஒன்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதை முடக்கி விடலாம். அதை எதிர்த்து அரசால் எதுவும் செய்ய முடியாது. முட்டை விற்பனைக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று குஜராத் மாநில பாஜக கூறுகின்ற போது, குஜராத் தெருக்களில் முட்டை வியாபாரிகளைத் தாக்கும் கும்பலை அவர்களால் வைத்துக் கொள்ள முடிகிறது. பாஜக எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற முடிவுகளை அந்தக் கும்பல் தன்வசம் எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற விஷயங்களைச் செய்வதற்கு இனிமேல் அரசு தேவைப்படாது. எனவே 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த இடத்திற்கு நாம் திரும்பிச் செல்வது மிகவும் கடினமாகவே இருக்கும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம் என்றே நினைக்கிறேன்.
கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் கும்பல்களை அவர் இப்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளார். சில வகையான கும்பல் ஆட்சியை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார். காவல்துறையானது இனிமேல் ஒழுங்குபடுத்துவதற்கு சமூகத்திற்குத் தேவைப்படாது; பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்வார்கள்.
ஆகார் பட்டேல்: உண்மையில் அது ஒருவகையில் சட்டப்பூர்வமானதாகவே ஆகியிருக்கிறது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கண்காணிப்பாளர் ஒருவர் செயல்பட்டால், அது அவருடைய ‘நன்னம்பிக்கை’யின் காரணமாக நடந்தது என்பதால் அதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது என்று சொல்கின்ற சட்டங்கள் நான் வசித்து வருகின்ற மாநிலமான கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் உள்ளன.
கரண் தாப்பர்: இதையெல்லாம் வைத்து ‘மோடி மாபெரும் அதிகாரம் கொண்டவராக பாஜக மூலமாக அல்லாமல், தன்னுடைய ஆட்கள் மூலமே அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்கிறார்; ஒரு மனிதர் கிட்டத்தட்ட தனியாளாக நம் நாட்டின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டார்’ என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். இன்றைக்கு அவருடைய கட்சியில் அவரது ஆளுமை, சிந்தனை போன்றவை பெரும் செல்வாக்குடன் உள்ளன. அதற்கு மாறான நிலைமை இல்லை என்றே நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் அல்லது ஆர்எஸ்எஸ் தலைவரால் மோடிக்கு ஆணையிட முடியாது. அவ்வாறு செய்தால் தொண்டர்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். நாட்டிலேயே நம்மிடம் உள்ள மிகவும் பிரபலமான தலைவராக மோடி இப்போது இருக்கிறார். தன்னை நேசிக்கும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை அவர் கட்டுப்படுத்துகிறார். எனது ஐம்பத்திரண்டு ஆண்டுகளில் இதுவரையிலும் நான் ஒரு தலைவர் போற்றப்படுவதைப் பார்த்திராத அளவிலே அவர் போற்றப்படுகிறார் என்றே நினைக்கிறேன். இந்த அளவிற்கான கவர்ச்சி, விருப்பம், புகழ், அதிகாரத்துடன் வேறு யாரும் நம்மிடையே இருந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: இப்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் செயல்திறன் பற்றிய உண்மைகள் குறித்த பகுதிக்கு வரலாம். நேர்மையாகச் சொல்வதானால் அதுவே உங்கள் புத்தகத்தின் முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் செயல்திறனை அளவிடுவதற்கு ஐம்பத்தி மூன்று குறியீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியா அவற்றில் நாற்பத்தி ஒன்பதில் சரிவைக் கண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்; இந்தியாவின் செயல்திறன் நான்கில் மட்டுமே மேம்பட்டிருக்கிறது. ‘…இருக்கின்ற பதிவுகள் விவாதம் அல்லது சர்ச்சைக்கு சிறிதும் இடமளிக்கவில்லை. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் அளவும், வேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உலகத்துடன் இணைந்திருக்கப் போராடிய இந்தியா பல முனைகளில் தோல்வியையே கண்டிருக்கிறது. கவனிக்கத்தக்க மற்றும் அளவிடக்கூடிய வழிகளில் மோடியின் ஆட்சியில் இந்தியா சீரழிவையே கண்டிருக்கிறது’ என்பதே உங்கள் முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் அளவுகோலாக செயல்திறனை எடுத்துக் கொள்ளும் போது பிரதமராக மோடி மிகப் பெரிய தோல்வியைக் கண்டிருக்கிறார் என்றே நீங்கள் சொல்வது இருக்கிறதா?
ஆகார் பட்டேல்: ஆமாம். அதில் எந்தவொரு சர்ச்சையும் இருக்காது என்றே நினைக்கிறேன். மேலும் நான் குறிப்பிட்டுள்ள அந்தக் குறியீடுகள் உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், பொருளாதார புலனாய்வுப் பிரிவு போன்ற மிகவும் பழமைவாத அமைப்புகளிலிருந்து வந்தவை. நாம் அந்த நிறுவனங்களை ‘தாராளவாத இடது வகை’ நிறுவனங்களாகப் பார்ப்பதில்லை. பல விஷயங்களில் கவனிக்கத்தக்க வகையில் சரிவைக் கண்டிருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். பல வழிகளில் ஆபத்தான வகையில் சரிந்திருக்கிறோம். ஆனாலும் நம்மால் அதை அரசியல் விவாதப் பொருளாக மாற்ற முடியவில்லை. உண்மைகள் சர்ச்சைக்குரியவையாக மாறியிருக்கவில்லை. உலகப் பட்டினிக் குறியீடு போன்ற விஷயங்கள் வெளிவரும் போது தான் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்ல அரசாங்கம் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இருக்கின்ற உண்மை நிலவரம் – இந்த குறியீட்டு எண்கள் காட்டுவது என்னவென்றால், நாம் மிகவும் மோசமான இடத்திலே இருக்கிறோம். அதிலிருந்து வெளியேறுவது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: தனது சாதனைகளை, தன்னுடைய அரசாங்கத்தைப் பாராட்டி மோடி நிகழ்த்துகின்ற உரைகளை வெற்றுப் பேச்சு என்று நீங்கள் சொல்கிறீர்கள் – அதுதான் நீங்கள் பயன்படுத்தி இருக்கின்ற துல்லியமான வார்த்தை.
ஆகார் பட்டேல்: அவருடைய அரசாங்கத்திடமுள்ள தரவுகளைப் பார்க்க வேண்டும். 2018 ஜனவரியில் இருந்து பதின்மூன்று காலாண்டுகளில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. ஏன்? அதுகுறித்து நாம் விவாதிக்காது இருப்பதால் நமக்கு அதுபற்றி தெரியாது. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அல்லது ஐந்து மில்லியன் டன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லலாம். அதைத்தான் ஷா கூறினார். ஆனால் அங்கே நாம் எப்படிச் செல்லப் போகி்றோம், எப்போது செல்லப் போகிறோம்? ஆனால் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. உண்மையில் இங்கே உள்ள வாய்ச்சவடால்கள் வெற்றுப் பேச்சுகளாகவே என்னுடைய மனதில் தோன்றுகின்றன. அதுபோன்ற பேச்சுகள் எவ்வித அடிப்படையும் கொண்டிருக்கவில்லை.
நம்மிடம் பாகிஸ்தானைக் காட்டிலும் குறைவான வேலை பங்கேற்பு விகிதமே உள்ளது. இப்போது நமது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2014இல் நம்மைக் காட்டிலும் ஐம்பது சதவிகிதம் பின்தங்கியிருந்த வங்காளதேசத்திற்கும் பின்னால் சென்று விட்டது. அவர்கள் நம்மை எட்டிப் பிடித்தது மட்டுமல்லாது நம்மைக் கடந்து மேலே சென்று விட்டார்கள். இந்த வகையான செயல்திறனை வைத்துக் கொண்டு, மார்பைத் தட்டி ‘நான் உங்களுக்கு நன்மை செய்கிறேன்’ என்று கூறுவது வார்த்தைகள் முற்றிலுமாக அத்தகைய பேச்சுகளிடமிருந்து விலகி நிற்பதையே காட்டுகின்றன.
கரண் தாப்பர்: உண்மையில் முரண்பாடு என்னவென்றால், மோடியைப் பற்றி இதுபோன்ற இருண்ட, மோசமான, பழிக்கின்ற தீர்ப்புகள் இருந்து வருகின்ற போதிலும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமாக இருந்து வருகிறார். அவருக்கிருக்கும் பிரபலத்தை – 2002இல் அவர் செய்தவை அல்லது செய்யாதவை என்றென்றைக்கும் பிரபலமானவராக அவர் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்ற அடிப்படையில் நீங்கள் விளக்கியுள்ளீர்கள். ‘ஆட்சியின் தரப்பில் விவாதிக்கப்படக்கூடிய தோல்வி இருப்பதை மக்கள் ஒப்புக் கொண்டாலும், அடையாளம் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பியதை வழங்குபவராகவே மோடி இருக்கிறார்’ என்றும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை மன்னிக்க, மறந்துவிட, கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ஏனென்றால் ஹிந்து அடையாளத்தையும், அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பதற்கான உறுதியையும் அவர் அளித்திருக்கிறார். அதனாலேயே அவரை மக்கள் போற்றுகின்றார்கள்.
ஆகார் பட்டேல்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இங்கே இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஒன்று தெற்காசியா முழுவதும் பெரும்பான்மைவாதமே இருந்து வருகிறது; நம்மிடையே உள்ள சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துவதிலேயே நாம் செழிக்கின்றோம். நமது பிராந்தியத்தில் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அது பொருந்திப் போவதாக இருக்கிறது. நேருவும் (இந்திரா) காந்தியும் பிரதமர்களாக இருந்த பல ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார செயல்திறன் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்கள் இருவரும் மிகவும் பிரபலமாகவே இருந்தனர். எனவே இந்தியாவில் உள்ள ஜனநாயக, ஜனரஞ்சக அரசியல் ஒருவகையில் ஜனரஞ்சகத்திடமிருந்து செயல்திறனைப் பிரித்து வைப்பது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
கரண் தாப்பர்: ஆட்சியாளர்களுடன் தங்களை உணர்வுப்பூர்வமாக அடையாளம் கண்டு கொள்வதாலேயே, ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார செயல்திறனை மக்கள் மன்னித்து மறந்து விடுகிறார்களா?
ஆகார் பட்டேல்: தங்களுடைய வாழ்க்கையில் நடப்பதற்கும் மக்கள் அவர்களைப் பொறுப்பாக்குவதில்லை.
கரண் தாப்பர்: மோடியின் ஏழு ஆண்டுகளில் மிக மோசமாகத் தவறவிட்டிருக்கும் வாய்ப்பையே இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்கான மிகத் தெளிவான குறிப்பு உங்கள் புத்தகத்தின் இறுதியில் உள்ளது. ‘நரேந்திர மோடியிடம் தேவையான மூலதனம் இருந்தது. கோடிக்கணக்கானவர்களின் வழிபாடு இருந்தது. எதிர்ப்பு என்பதே காணப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு – ஏதாவதொரு திட்டத்தை அவர் தன்னிடம் கொண்டிருந்தால், அதைச் செயல்படுத்த வேண்டுமென்று உண்மையிலேயே அவர் விரும்பியிருந்தால் – அந்த மாற்றங்களை அவரால் செய்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறியதாலேயே இந்தியா தன்னுடைய வாய்பை இழந்திருக்கிறது. வேறு யாருக்கும் அதைச் செய்வதற்கான அதிகாரம் இல்லை; அவரிடமோ அதற்கான தொலைநோக்குப் பார்வை அல்லது விருப்பம் என்று எதுவும் இருக்கவில்லை’ என்று எழுதியுள்ளீர்கள்.
ஆகார் பட்டேல்: இந்த அளவிற்கு பிரபலத்துடன், பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக, எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் நம்மிடையே ஒருவர் இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை. தனது பாரம்பரியத்தை மட்டுமே அவர் வீணாக்கியிருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன் – அது ஒரு மிகச் சிறிய விஷயமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். – ஆனால் இந்த நாட்டிற்கும், நடுத்தர வருமானத்திற்குக்கூட வாய்ப்பில்லாது நம்மிடையே இருக்கின்ற கோடிக்கணக்கான ஏழைகளுக்கும் பாதிப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அது ஒரு மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இவ்வாறு வாய்ப்பைத் தவறவிட்டதன் விளைவாக, இந்தியாவின் எதிர்காலம் மங்கியிருப்பதாகக் கூறுகிறீர்களா? ‘வளர்ந்த நாடுகளின் வரிசையில் சேருகின்ற வாய்ப்பை இந்தியா என்றென்றைக்குமாகத் தவற விட்டுள்ளது’ என்றும், அது ‘இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் ஆண்டுகள்’ என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டுகள் தோல்வியைக் கண்டுள்ள மோடி ஆண்டுகளுடன் ஒத்துப் போனதன் விளைவாகவே நிகழ்ந்திருக்கிறது என்றும் எழுதியுள்ளீர்கள். ‘நடுத்தர வருமான வலையின் கடையிறுதியில் இந்தியா இருக்கும்’ என்று இறுதியில் எழுதுகிறீர்கள். நாடு பற்றி வழங்கப்பட்டிருக்கும் கேவலமான தீர்ப்பாக அது உள்ளது.
ஆகார் பட்டேல்: மிகவும் வருத்தமளிப்பதாகவே அது இருக்கிறது. ஆனால் உண்மைகளோ இவ்வாறாக இருக்கின்றன: 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை – மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலை செய்வதற்குப் போதுமான வயதில் இருந்த போது – மிகவும் சாதகமாக இருந்த ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது. ஆனால் 2014க்குப் பிறகு என்ன நடந்தது? தொழிலாளர் பங்கேற்பு விகிதம் – நாட்டில் வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் – ஐந்தில் ஒரு பங்காகச் சுருங்கி விட்டது. தான் பொறுப்பேற்ற போது இருந்த தொழிலாளர்களின் அளவை ஐம்பத்தியிரண்டு சதவிகிதத்திலிருந்து – அரசாங்கத் தரவுகளின்படி – நாற்பது சதவிகிதம் என்ற அளவிற்கு மோடி குறைத்து விட்டார். அந்த அளவு உலகிலேயே மிகக் குறைவாக, பாகிஸ்தானை விடக் குறைவானதாக இருக்கிறது. உலகின் மிகக் குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கொண்ட பதினாறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: மோடியின் குணாதிசயங்கள், குறைபாடுகள் மற்றும் பிரதமராக அவரது செயல்திறன் ஆகியவை குறித்து பின்வருமான முடிவிற்கு நாம் வருகிறோம்: தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்துக் கொண்ட அவர் தான் செய்வது பற்றி சற்றும் சிந்திக்கவில்லை. தீர்க்கமானவராக இருந்தாலும் அவர் கற்றுக் கொள்பவராக இருக்கவில்லை என்பதால், பொறுப்பற்றவராக, சிந்திக்காது செயலாற்றுபவராகவே அவர் இருந்துள்ளார். அதனாலேயே மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் போன்ற முடிவுகளை அவர் இந்தியாவின் மீது திணித்தார்; நான்கு மணி நேர கால அவகாசத்தில் பொதுமுடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அவரது செயல்திறனின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். அவருக்கிருந்த மகத்தான அதிகாரத்தைக் கொண்டு நாட்டை அவர் மாற்றியிருக்கலாம், அவ்வாறு மாற்றுவதற்கான வாய்ப்பு இந்தியாவால் தவற விடப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வதைப் போல அதன் விளைவுகளாக இனிமேல் நாம் நடுத்தர வருமான வலையில் சிக்கி இருக்கப் போகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காக இந்தியாவின் எதிர்காலத்தையே தவற விட்டிருக்கிறார்.
ஆகார் பட்டேல்: ஆமாம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். நம்மைப் பிளவுபடுத்துவதில், வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைப்பதில் அவர் மிகப்பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்; அதிலிருந்து நாம் விலகிக் கொள்வது மிகவும் கடினமானதாகவே இருக்கும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா சேருவதை உறுதி செய்வதில், குறைந்தபட்சம் அதற்கான பாதையைத் திட்டமிடுவதில் அவர் தோல்வியே கண்டிருக்கிறார். நம்மிடம் எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை. நாம் இப்போது கடந்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் பொருளாதாரரீதியாக மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறோம். அதிலிருந்து நாம் எளிதாக வெளியேறி விட முடியும் என்று நான் நினைக்கவில்லை.
கரண் தாப்பர்: ஆகார் பட்டேல்! இறுதியாக ஒரு கேள்வி – குறைந்தபட்சம் அண்மைக்காலத்திலாவது அரசியல் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அல்லது மோடியின் மங்காப் புகழ் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் மீள முடியாத பலவீனம் மோடி சகாப்தம் இன்னும் ஆண்டுக்கணக்கில் தொடருவதை உறுதி செய்யும் என்றே நான் நினைக்கிறேன்.
ஆகார் பட்டேல்: உண்மையில் அது தொடரும் என்றே நானும் நினைக்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் கட்டமைப்பு ரீதியான அனுகூலம் பாஜகவிற்கு இருக்கிறது; அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளிடம் எந்தவிதமான ஆதார வளமும் இல்லை. அதற்கு (தேர்தல்) பத்திரங்கள் குறித்து மோடி இயற்றிய சட்டமே முதன்மையான காரணமாகும். இந்தக் கட்டமைப்பு வேறுபாடுகள் காரணமாக, அவருக்கிருக்கின்ற பிரபலத்தில் சில சமயங்களில் சரிவு ஏற்பட்டாலும், அரசியல் துறையில் முதன்மையான சக்தியாக உருவெடுத்திருக்கும் பாஜகவை அகற்றுவது கடினமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன். அத்துடன் நாட்டிலுள்ள சிறுபான்மைக் குழுக்களை முதன்மை இலக்காகக் கொண்டு அவர்கள் கவனம் செலுத்துகின்ற சட்டங்களும் நம்மிடம் இருக்கும்.
கரண் தாப்பர்: ஆனால் ஒரு நாள் நிச்சயம் பிரதமர் பதவியை மோடி துறக்க வேண்டி வரும்; தவிர்க்க முடியாமல் அவரது வயது அதை உறுதி செய்யும். அந்த நேரத்தில் பாஜக தொடருமானால், மோடியின் வாரிசு என்று பலரும் நம்புகின்ற அமித்ஷாவின் தலைமையின்கீழ் நாட்டின் எதிர்காலம் எவ்வாறாக இருக்கும் என்று பார்க்கிறீர்கள்?
ஆகார் பட்டேல்: அவர்களிடம் பெரும்பான்மைவாதத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு குறிப்பிட்ட சித்தாந்தமும் இருக்கவில்லை. நான் கூறியதைப் போல, தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாக அவர்கள் கூறி வருபவற்றில் எந்தவொரு நிலைத்தன்மையும் காணப்படவில்லை. சகஇந்தியர்களை மிருகத்தனமாக நடத்துவதைத் தவிர வேறு திசையில் செல்வதற்கான எந்தவொரு வழிகாட்டுதலும் அவர்களுக்கு இல்லை. மோடிக்குப் பின்னர் வரப் போகின்ற எந்தவொரு வாரிசின் கீழும் இந்த நிலைமையே தொடரப் போகின்றது.
கரண் தாப்பர்: அது நிச்சயம் மனச்சோர்வடைய வைப்பதாகவே இருக்கும். எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்தமைக்கு மிக்க நன்றி. பார்வையாளர்களில் பலரும் நீங்கள் அவர்களுக்குக் காட்டியிருப்பதை பார்த்தவர்களாக ஒருபோதும் இருந்து விடக் கூடாது என்று விரும்புபவர்களாகவே இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். எச்சரிக்கையுடன் இருங்கள். ஆகார் பட்டேல்! பத்திரமாக இருங்கள்.
ஆகார் பட்டேல்: மிக்க நன்றி தாப்பர்.
https://thewire.in/government/full-text-modi-has-no-vision-for-indian-society-other-than-to-reject-inclusion-aakar-patel
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் – தமிழில்: தா.சந்திரகுரு
காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது.
ஹிந்துத்துவா / ஹிந்து தேசியவாதம் குறித்த விளக்கம், ஆர்எஸ்எஸ் பற்றிய சுருக்கமான விவரம், அயோத்தி கோவில் சர்ச்சை பற்றிய விவரங்கள், நரேந்திர மோடி எவ்வாறு ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்த விளக்கம், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் போன்றவை இந்த வலையொலி உரையாடலின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.
வலையொலி உரையாடலின் எழுத்தாக்கம்
போல்சனாரோ, ஆர்பன் அல்லது எர்டோகன் போன்ற மற்றுமொரு ஜனரஞ்சகத் தலைவராக நரேந்திர மோடியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் என்றாலும் அவரைப் பற்றி நம்மில் பலருக்கும் அதிகம் தெரிந்திருக்காது. மோடி என்பது பலருக்கும் ஜனரஞ்சகத்தின் சின்னம். அதுபோன்ற பொதுவான எண்ணங்களுக்கு உரிய சூழலையும், பொருளையும் இன்றைக்கு சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்.
உலகில் உள்ள மற்ற ஜனநாயக நாடுகளைப் போல இந்தியா இருக்கவில்லை. அது தனக்கென்று தனித்துவமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் சவால்களுடன் மிகப் பெரியதாக, வேறுபட்டு இருக்கிறது. பாஜக என்ற ஹிந்து தேசியவாத அரசியல் கட்சிக்கு நரேந்திர மோடி தலைமை தாங்கி வருகிறார். இனரீதியான ஜனநாயகம் என்று கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் விவரிக்கின்ற வகையிலே பாஜகவினர் இந்தியாவை மறுவடிவமைத்துள்ளனர்.
இந்திய ஜனநாயகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முன்னணி அறிஞர்களில் ஒருவரான கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் சைன்சஸ்போ நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராகவும், கிங்ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராகவும் உள்ளார். ‘மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்’ என்பது சமீபத்தில் அவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகமாகும்.
ஹிந்து தேசியவாதம், நரேந்திர மோடியின் எழுச்சி பற்றி, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய காரணங்களை கிறிஸ்டாஃப் இங்கே விவரிப்பார். ஏராளமான விஷயங்களைத் தொடுகின்ற போதிலும் நாங்கள் தவறிழைக்கப் போவதில்லை. இன்றைய உரையாடலின் நாயகனாக மோடி இருக்கிறார். மோடி இந்தியாவைப் பற்றி விவாதிக்கவே நாங்கள் வந்துள்ளோம். கிறிஸ்டாஃப் ‘ஒரு “கறுப்பு ஹீரோ” இன்னும் ஹீரோதான்’ என்று எழுதியிருப்பது என்னவென்று பாலிவுட் திரைப்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்திய அரசியல் மற்றும் ஹிந்து தேசியம் என்ற தலைப்பு மிகப் பரந்த அளவிலானது. எனவே இந்த உரையாடலில் உங்களுடைய கருத்துகளை இணைப்பதற்குத் தயங்க வேண்டாம். உரையாடலின் முழு எழுத்தாக்கம் டெமாக்ரசி பாரடாக்ஸ் இணையதளத்தில் (democracyparadox.com) இருக்கிறது. அங்கே சென்று உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். Twitter @DemParadoxஇல் என்னைக் குறிப்பிட்டு பதிவு செய்யலாம். அல்லது [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இப்போது… கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டுடனான உரையாடல் ஆரம்பிக்கிறது…
என்னை அழைத்தமைக்கு நன்றி.
கிறிஸ்டாஃப், உங்களுடைய சமீபத்திய புத்தகம் ‘மோடி இந்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல், அது ஹிந்து தேசியவாதம் குறித்ததாகவும் இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், ஹிந்து தேசியவாதம் அனைவரும் நன்கு அறிந்திருக்கும் ஒரு கருத்து. சற்றே குழப்பமானது என்று பலரும் உண்மையில் நம்பக்கூடிய ஹிந்து தேசியவாதம்m என்பது ஹிந்து மதம், தேசியவாதம் என்ற இரண்டு கருத்துகளை ஒருங்கிணைக்கிறது. எனவே அந்தக் கருத்தை ஆராய விரும்புகிறேன். ‘மற்றவர்களின் இழப்பில் ஹிந்து மதத்தின் சில அம்சங்களே ஹிந்துத்துவாவின் விழுமியங்கள்’ என்று நீங்கள் எழுதிய அழகான மேற்கோள் ஒன்று உள்ளது. ஹிந்து மதமும், தேசியவாதமும் ஒன்றாக இணையும் விதத்தை ஆரம்பத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள். எனவே இன்றைக்கு இதிலிருந்து தொடங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஹிந்துத்துவத்தின் எந்த அம்சங்களை ஹிந்து மதம் உயர்த்திப் பிடிக்கிறது, எந்த அம்சங்களை அது அடக்கி வைக்கிறது?
நிச்சயமாக… அது முக்கியமானது. ஆர்எஸ்எஸ்தான் தாய் அமைப்பு. அது ஹிந்து தேசியவாத இயக்கத்தின் சோதனைக்களம். இன்றைய இந்திய ஒன்றியத்தின் நடுவே அமைந்துள்ள நாக்பூரில் 1925ஆம் ஆண்டு முதன்முதலாக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஹிந்துக்கள் பலரிடமும் முஸ்லீம்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றிருந்து வந்த உணர்வின் எதிர்வினையாகவே அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கான்ஸ்டான்டிநோபிளில் கலிபாவை ஒழித்ததற்கு எதிர்வினையாக இந்திய முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கலிபா இயக்கத்தின் பின்னணியில் முஸ்லீம்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்களாக, மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவர்களாகத் தோன்றினர்.
அந்தச் சூழலில்தான் ஹெட்கேவார் 1925ஆம் ஆண்டில் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் துவக்கினார். ஹிந்துத்துவாவை வடிவமைத்த தலைமைக் கொள்கையாளரின் சீடராக ஹெட்கேவார் இருந்தார். இங்கே சாவர்க்கரை அவசியம் குறிப்பிட வேண்டும் – ஏனென்றால் அவர்தான் உண்மையில் ‘ஹிந்துத்துவா: யார் ஹிந்து?’ என்ற சாசனத்தை – ஹிந்துத்துவாவின் கருத்தியல் சாசனத்தை – எழுதியவர். நாம் சாவர்க்கரை சிந்தனையாளர் என்றும், ஹெட்கேவாரை அமைப்பாளராகவும் கொள்ளலாம். அதிக வலிமை கொண்டவர்களாக, அதிக உடல் தகுதி கொண்டவர்களாக, ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக, அறிவுப்பூர்வமாக விழிப்புடன் ஹிந்துக்கள் இருப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த அந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் உதவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
ஆர்எஸ்எஸ்சில் ஷாகா என்ற கிளையே பகுப்பாய்வு அலகு ஆகும். ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், ஒவ்வொரு மாலை அது மறைந்த பிறகும் என்று நடைபெறுகின்ற இரண்டு கருத்தியல் அமர்வுகளில் பெரும்பாலும் ஹிந்து இளைஞர்கள் சீருடையில் தங்கள் வரலாறு, கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த இரண்டு விஷயங்களும் ஒன்றிணைந்து நடக்கின்றன. அந்த அமைப்பால் உந்துதல் பெறும் இளம் உறுப்பினர்கள் சிலர் பின்னர் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்கின்றனர். பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் அளிக்கின்ற பயிற்சிகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்சால் அவர்கள் பிரச்சாரக் என்றழைக்கப்படுகின்றனர். பிரச்சாரக் என்றால் முழு நேரமும் ஆர்எஸ்எஸ்சைக் கவனித்துக் கொள்பவர்கள் என்று பொருள். நாக்பூரிலிருந்து அந்தப் பிரச்சாரக்குகள் ஷாகா வலையமைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்களுக்கு பயணிக்கிறார்கள். நாடு முழுவதும் பயணம் செய்து ஷாகாக்களின் பெரிய வலையமைப்பை அவர்கள் நிறுவுகின்றார்கள். 1947வாக்கில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஷாகாக்களில் ஆறு லட்சம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இருந்தனர்.
உண்மையில் நாடு முழுவதையும் ஆக்கிரமிப்பதுதான் ஆரம்பத்தில் அவர்களுடைய சிந்தனையாக இருந்தது. அப்போது அரசியல் அதிகாரத்தின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. அவர்கள் யாருடனும் தேர்தலில் போட்டியிடவில்லை. அடிமட்ட அளவில் ஹிந்து சமூகம் மிகவும் வலுவாக இருக்க உதவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் அதை மட்டுமே செய்து வந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு நிலைமை மாறும் என்று கருதினார்கள்.
அப்போது ஜனசங்கம் என்ற பெயரில் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள். ஜனசங்கம் என்ற கட்சி 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பாக உருவானது. அந்தக் கட்சிதான் பாஜகவின் முன்னோடியாகும். அவர்களுடைய கட்சி அனைவரும் பார்க்கின்ற பனிப்பாறையின் முனையாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் அந்தப் பனிப்பாறை மிகப் பெரியது. இந்திய சமூகத்துடன் ஓரளவு அது நன்கு பிணைந்துள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிறுவனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆர்எஸ்எஸ்சின் கிளையாக பழங்குடியினருக்காகச் செயல்படுகின்ற வனவாசி கல்யாண் ஆசிரமம் அவர்களிடம் உள்ளது. கல்வி, பள்ளிகளின் வலையமைப்பிற்கு பொறுப்பேற்றிருக்கும் வித்யா பாரதி என்ற கிளை ஆர்எஸ்எஸ்சிடம் உள்ளது. அவர்களுடைய மற்றொரு கிளை சேரிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆக நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆர்எஸ்எஸ்தான் உண்மையாக கவனத்தில் கொள்ள வேண்டிய அமைப்பு. நரேந்திரமோடியே ஆர்எஸ்எஸ்ஸின் தயாரிப்புதான்.
ஆர்எஸ்எஸ்சைப் பற்றி பேசுகின்ற போது, ஹிந்து தேசியம் என்ற வெளிப்படையாக அரசியலாக்கப்பட்டிருக்கும் கருத்தையும் சேர்த்தே பேசுகிறோம். அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான சிறந்த வழியாக, சிறந்த எடுத்துக்காட்டாக அயோத்தி கோவில் இயக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சாரம் குறித்ததாக தொடங்கிய அந்த இயக்கம், விரைவிலேயே அரசியல் ரீதியானதாக மாறியது. உங்கள் புத்தகத்தின் மையத்தில் இருக்கும் பல கருத்துகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹிந்து தேசியம் பற்றிய கருத்துகளை, முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தலை எடுத்துக் காட்டுவதாக அது இருந்தது. அந்த இயக்கம் உண்மையில் எவ்வாறு இருந்தது, அதிலிருந்த சர்ச்சைகள் எவை என்பவற்றை நாம் பேசிக்கொண்டிருக்கும் சூழலுடன் தொடர்புபடுத்தி விளக்க முடியுமா?
அயோத்தி மிகவும் நுண்ணுணர்வுடன் கூடிய ஆற்றல்மிக்க சின்னமாகவே இருந்திருக்கிறது. ராமாயணத்தில் விஷ்ணுவின் மிகவும் பிரபலமான அவதாரமான, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமரின் தலைநகராக அது இருந்தது. ஆனால் ஹிந்து தேசியவாதிகளுக்கோ அவர் ஒரு வரலாற்றுப் பிரமுகராக, ஒரு மன்னராக இருந்தார். 1528ஆம் ஆண்டில் முகலாயப் படையெடுப்பாளர்களால் கட்டப்பட்ட மசூதி இருந்த இடமே மிகச் சரியாக அந்த மன்னர் பிறந்த இடம் என்று கருதிய அவர்கள், ஹிந்துக்களை அணிதிரட்டுவதற்கான இயக்கத்தைத் தொடங்கினார்கள். அந்தப் பிரச்சனையில் 1984ஆம் ஆண்டு வாக்காளர்களைத் துருவமுனைப்படுத்த விரும்பி தேர்தலுக்கு முன்பாக ஹிந்துக்களை அணிதிரட்டும் வேலையைச் செய்தார்கள். ஆனால் 1984ஆம் ஆண்டு சீக்கிய பாதுகாவலர்களால் திருமதி.காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டாக இருந்ததால் தேர்தல் நேரத்தில் ஹிந்துக்கள் – முஸ்லீம்கள் என்ற பிரச்சனையை எழுப்பவியலாத சூழல் இருந்தது. திருமதி.காந்தி படுகொலையால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர்களுடைய திட்டம் முழுமையாகத் தகர்ந்து போனது.
அவர்களுடைய செயல்பாடு எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது. நகரம் ஒன்றில் தொழுகை நேரத்தில் முஸ்லீம்களின் சுற்றுப்புறத்தை ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஹிந்து தேசியவாதிகளின் ஊர்வலம் கடந்து செல்லும். ஊர்வலத்தில் வருபவர்கள் ஆசிட் குண்டுகள், பிற ஆயுதங்களை ஏந்தியிருப்பார்கள். முஸ்லீம்கள் கற்களை வீசித் தாக்கி எதிர்வினையாற்றுவர்கள். கலவரத்தை நிறுத்துவதற்காக காவல்துறை அல்லது சில சமயங்களில் ராணுவம் நிறுத்தப்படும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். ஆக அவர்களுடைய இயக்கத்தால் அப்போது மசூதி மட்டுமே அழிக்கப்படவில்லை. நாட்டின் பல இடங்களிலும் வகுப்புவாத வன்முறைகளை அவர்கள் தூண்டி விட்டிருந்தார்கள். .
உறுதியாக பிராமணர்களைக் கொண்டு – வணிகர்கள், வியாபாரிகளான வைசியர்கள், போர்வீரர் சாதியான சத்திரியர்களையும் உள்ளடக்கி – ஆர்எஸ்எஸ் பல்லாண்டுகளாக ஓர் உயர்சாதி அமைப்பாகவே இருந்து வந்தது. அந்த அமைப்பிற்குள் இந்த மூன்று உயர்சாதியினரும் பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வெகுகாலம் பாஜகவால் சாதாரண மக்களின் கட்சியாக மாற முடியாமல் போனதற்கு மேல்தட்டினருடன் – சிறிய அளவிலான மேல்தட்டினருடன் – அந்த அமைப்பு தன்னைச் சுருக்கிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாகவே இருந்தது. அந்த மூன்று சாதிக் குழுக்களையும் ஒன்று சேர்த்தால், இந்திய சமூகத்தில் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நேர்மறைப் பாகுபாட்டின் பின்னணியில் தொண்ணூறுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேகம் பெறத் தொடங்கியபோது அவர்களிடமிருந்த இவ்வாறான துருவமுனைப்படுத்தல் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்சாதியினருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்த போதிலும், அவர்கள் அதை முடிவிற்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இதர பிற்படுத்தப்பட்டவர்களை அவர்கள் தங்களுடைய திட்டத்திற்குள் அணிதிரளச் செய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டியதாயிற்று. இங்கேதான் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவராக இருந்தார்.
நரேந்திர மோடி பக்கம் ஆர்எஸ்எஸ் ஏன் திரும்பியது? அதற்கான சரியான காரணமாக அவர் சரியான பரம்பரையைக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். சரியான பரம்பரை மட்டுமல்ல, சரியான சாதி, அணுகுமுறையும்கூட அவரிடம் இருந்தது. தனது ஏழாவது வயதில் – மிக இளம் வயதிலேயே குஜராத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தின் சிறிய நகரமான வாட்நகரில் மோடி ஆர்எஸ்எஸ்சில் சேர்ந்தார். உரிய வயதுக்கு வரும் முன்பே அவர் திருமணம் செய்து கொண்டார். அதுபோன்ற திருமணங்கள் குஜராத் மற்றும் பிற இடங்களில் வழக்கமாக அடிக்கடி நடக்கின்றவையாகும். பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறிய அவர் பேலூர் மடத்திற்கு வந்து அங்கே குடியேறினார். பின்னர் குஜராத்துக்கு திரும்பி தனது குடும்பத்தை ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நல்லபடியாக விட்டுவிட்டார். அதன்பிறகு அவரது வாழ்க்கை முழுக்க ஆர்எஸ்எஸ் அமைப்புடனேயே இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பே அவரது குடும்பமாக மாறிப் போனது.
அனைவரையும் விஞ்சி விதிவிலக்கான நபராக அவர் மாறிய தருணம் அது. அவர்தான் அதை முன்னின்று நடத்தினார். அயோத்தியிலிருந்து ரயிலில் திரும்பி வந்த ஐம்பத்தியேழு ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான முஸ்லீம்களை ஹிந்துக்கள் பழிவாங்குவதற்காக அந்த வன்முறைகள் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் எரிக்கப்பட்டிருந்த அந்தச் சூழலில் அவரிடம் மக்கள் இறந்து போன குற்றத்திற்கு படுகொலையே பதிலளிப்பதற்கான வழியாக இருந்தது. அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது.
தன்னுடைய பின்னணி, ஆளுமை காரணமாக மோடி பாஜகவை முற்றிலுமாக மாற்றி விட்டாரா?
கண்டிப்பாக. வாஜ்பாய், அத்வானியின் தலைமையில் 2000களில் இருந்த பாஜக மிகவும் வித்தியாசமானது. அந்த இரண்டு ஆளுமைகளின் காரணமாகவே அவ்வாறாக அந்தக் கட்சி இருந்தது. அவர்கள் இருவரும் அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து மாறி மாறி தலைமைப் பொறுப்பில் இருந்தனர். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அந்த இரு தலைவர்களும் இணைந்தே இருந்தனர். உண்மையில் அது விதிவிலக்கானது. உலகில் அதே இரண்டு தலைவர்களை நீண்ட காலத்திற்குத் தலைமையில் கொண்ட கட்சிகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். அது அவர்களிடமிருந்த கூட்டுணர்வை, சகோதரத்துவ உணர்வையே பிரதிபலிப்பதாக இருந்தது. சகோதரத்துவம் என்ற சொல்லை ஆர்எஸ்எஸ் மிகவும் விரும்புகிறது. அனைவரும் சமமானவர்கள் என்று சகோதரத்துவத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். விதிமுறைகளை விதித்து அவர்களுக்கு ஆணையிடுவதற்கு என்று யாரும் அங்கே இருக்கவில்லை.
இரண்டாவதாக, இந்த இரண்டு தலைவர்களும் பிராந்தியத் தலைவர்களை நம்பி தங்களுடைய கட்சி தொடர்ந்து இருக்க விடாமல், உயர்மட்டத்திலிருந்து தாங்களே பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களாக மாநில அளவில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமித்தார்கள். பாஜகவில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றத்தை மிகவும் ஒத்திருந்தது. ஜவகர்லால் நேரு மாநிலத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டு வழியைக் கடைப்பிடித்தார். ஆனால் மிகவும் பாதுகாப்பற்றவராகத் தன்னை உணர்ந்த இந்திரா காந்தி உயர்மட்டத்தில் இருந்து தனது ஆட்களைப் பதவிகளில் நியமித்துக் கொள்ளவே விரும்பினார்.
இப்போது அதே பாதையில் பாஜகவும் செல்கிறது. தன்னுடைய ஆன்மாவை அது இழந்து கொண்டிருக்கிறது. மாநில அளவில் உள்ளூர் சமூகங்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழந்து வருகிறது. ஆனாலும் அந்த இழப்பு காங்கிரஸால் மீண்டும் பெற முடியாத சமூகமட்டத்திலான தொடர்புகளைக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் மூலம் ஓரளவிற்கு ஈடுசெய்யப்படுகிறது.
உங்கள் புத்தகத்தில் உள்ள மேற்கோள் நரேந்திர மோடி உருவாக்கிய மாற்றம் பாஜகவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது என்ற முத்திரையைக் குத்தியிருக்கிறது. ‘ஆளும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசியல்வாதிகள் உட்பட மற்றவர்களுக்கும் எதிராக மோடி தன்னை ஒன்றிணைப்பவராக முன்னிறுத்திக் கொண்டார்’ என்று எழுதியுள்ளீர்கள். இன்னும் ஆழமாகச் சென்று பார்க்கும்போது, இனரீதியான ஜனநாயகம் மட்டுமல்லாது, குறுகிய நோக்குடைய ஜனநாயகம் என்று பலராலும் விவரிக்கப்படுகின்ற வகையில் இந்தியா மாறி வருவதைக் காண்கிறோம். மற்ற இனச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுவே அவர்களிடமுள்ள அந்த குறுகிய நோக்கத்தை காணக்கூடிய நேரடியான வழியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த குறுகிய நோக்கம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை விளக்கிட முடியுமா? நாட்டில் உள்ள முஸ்லீம்களை இந்தியா எவ்வாறு முறையாக ஓரம் கட்டியது?
ஹிந்து பெரும்பான்மையினரையே பாஜக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதனால்தான் இனரீதியான ஜனநாயகமாக இந்தியா மாறிவிட்டது என்று நான் கருதுகிறேன். நடைமுறையில் இரண்டாம் தர குடிமக்களைக் கொண்ட ஜனநாயகமாக இருந்தாலும் சட்டப்படி அது அவ்வாறாக இருக்கவில்லை. சட்டப்படியாக சில சீர்திருத்தங்கள், சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தவையாக இரண்டு அல்லது மூன்று சட்டங்களே உள்ளன.
முதலாவது சட்டமான மாட்டிறைச்சியைத் தடை செய்யும் சட்டம் மாநில அளவிலானதாக இருக்கிறது. இரண்டாவது லவ் ஜிஹாத் எதிர்ப்புச் சட்டம். அதுவும் மாநில அளவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் – பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள சட்டமே. அது கலப்புத் திருமணங்களை மிகவும் கடினமாக்குகிறது. ஹிந்துப் பெண்களை ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு முஸ்லீம் ஆண்கள் முயல்கிறார்கள் என்பதே அந்தச் சட்டத்தின் பின்னணியாகும்.
நடைமுறைகளில் இருந்து வருகின்ற மற்ற பிரச்சனைகளைக் காட்டிலும் சட்டங்கள் குறைவான பிரச்சனைகளுடனே இருக்கின்றன. சங்பரிவாரத்துடன் தொடர்புடைய கண்காணிப்புக் குழுக்கள் 2014க்குப் பிறகு சிறுபான்மையினருக்கு, முஸ்லீம்களுக்கு எதிராக – சில சமயங்களில் மிகவும் தளர்வாக கிறிஸ்தவர்களுக்கும் எதிராக – பிரச்சாரங்களைத் தொடர்ந்து வருவதைக் காண முடிகிறது. முஸ்லீம்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக முஸ்லீம்களின் லாரிகள் பசுக்களை இறைச்சிக் கூடங்களுக்கு கொண்டு செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்க கோ ரட்சகர்கள் எனும் பசு பாதுகாவலர்கள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்கின்றனர். லாரிகளில் மாடுகளைக் கொண்டு சென்ற முஸ்லீம் லாரி ஓட்டுநர்களை அடித்துக் கொன்ற சம்பவங்கள் போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.
அது மிக முக்கியமான மற்றொரு பரிமாணத்தையும் விளைவித்திருக்கிறது. இனரீதியான ஜனநாயகம் சிலரை மட்டும் நகர்ப்புறப் பகுதிகளில் தனிப்பகுதிக்குள்ளே ஒதுக்கி வைத்துள்ளது. அனைவரும் கலந்து வசிக்கின்ற சுற்றுப்புறங்கள் மிகவும் அரிதாகி, விதிவிலக்கானவையாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கான சட்டங்களும் சில சமயங்களில் இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக குஜராத்தில் இப்போது வீட்டை விற்கவோ அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கவோ இயலாது. அங்கே அஸான் எனும் தொழுகைக்கான அழைப்பு கூட சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிவு என்பதே இன்றைய நாளில் நிச்சயம் என்பதாக இருக்கிறது. சாதிகளுக்கிடையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அனைவரும் சேர்ந்து வசிக்கின்ற கலப்பு பகுதிகள் இருக்கக்கூடாது என்று வற்புறுத்தி இரண்டாம் தர குடிமக்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். இனரீதியான ஜனநாயகம் இதுபோன்றும் வெளிப்பட்டுள்ளது – அதுதான் குறுகிய நோக்குடைய ஜனநாயகமாகப் பார்க்கப்படுகிறது.
முறையான விதிகள் மோசமான நிலைமையில் இருப்பது நமது கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் பல வழிகளில் முறைசாரா அடக்குமுறைகளும் நாட்டில் இருந்து வருகின்றன. ‘இந்த கண்காணிப்புக் குழுக்கள் அரசின் குறிப்பாக, அதன் ஆயுதப் பிரிவான காவல்துறையின் மறைமுகமான ஒப்புதல் இல்லாமல் உருவாகி வளர்ந்திருக்க முடியாது’ என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். முறைசாரா அடக்குமுறையாக இருந்தாலும் கூட, அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன். அந்த அடக்குமுறைகள் மோசமானவர்கள் சிலரால் மட்டுமே நடைபெறுவதாக இருக்கவில்லை. காவல்துறையால், அரசால் அரவணைக்கப்பட்டு, அரசின் பல்வேறு அம்சங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடைய பொதுக் கொள்கையின் நடைமுறைப் பகுதியாக மாறியுள்ள ஒன்றைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டில் இந்தியாவை சுதந்திரமான நாடு என்பதில் இருந்து ஓரளவிற்கு சுதந்திரமான நாடு என்று தன்னுடைய வகைப்பாட்டை ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம் குறைத்திருப்பதற்கு அதுவே மிகப்பெரிய காரணமாகும்.
ஆமாம். காவல்துறை உட்பட அரசின் ஆசீர்வாதத்துடனே இந்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது. காவல்துறை அல்லது துணை ராணுவப் படைகள் போன்ற பிற அரசு நிறுவனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன.
கிறிஸ்டாஃப்! ஏராளமான மோசமான விஷயங்களைச் செய்து வருவதால் பாஜகவை மோசமானது என்று இப்போது சொல்வது மிகவும் எளிது என்றாலும் நான் இப்போது கேட்க விரும்புவது – வாக்காளர்கள், தாராளவாத விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான். பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், நான் ஆதரிக்க வேண்டிய வேறொரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்பதே இயல்பான அனுமானமாக இருக்கும். அந்த மாற்று கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் என்பதுவும் இயல்பான அனுமானமாக இருக்கலாம். ஆனாலும் அதுகுறித்து ஏராளமான சந்தேகம் இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது குறித்து இந்தியர்கள் மத்தியிலும், உண்மையில் இந்தியாவிற்கு அப்பாலும் கூட ஏராளமான தயக்கம் நிலவி வருகிறது.
பாஜக ஆட்சியைப் பிடித்த நேரத்தில் சுமித் கங்குலி எழுதிய ‘இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்’ என்ற கட்டுரை 2014 ஏப்ரலில் ஜேர்னல் ஆஃப் டெமாக்ரசி என்ற இதழில் வெளியானது. அவர் அந்தக் கட்டுரையில் அனைவரையும் ஈர்க்கின்ற மேற்கோள் ஒன்றைக் கையாண்டிருந்தார். ‘உண்மையான கருத்தியல் அர்ப்பணிப்புடன் எந்தவொரு கட்சியும் இப்போது இருக்கவில்லை. பதவி, அதன் மூலம் கிடைக்கின்ற பரந்த பலன்களை வென்றெடுப்பதைத் தவிர வேறு எது குறித்தும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அக்கறை கொள்வதில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் (INC), பாரதிய ஜனதா கட்சி (BJP) என்ற இரண்டு மேலாதிக்கக் கட்சிகளும் வெளித்தோற்றத்தில் வெவ்வேறு அரசியல் திட்டங்களைக் கொண்டிருப்பதாக நம் கண்ணில் முதலில் படுவதைத் தாண்டி அவை இரண்டுக்குமிடையே பல பொதுவான தன்மைகள் இருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது, பாஜகவிற்கென்று தெளிவான சித்தாந்தம் உள்ளது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனாலும் இந்திய தேசிய காங்கிரஸிடம் இருக்கின்ற தெளிவான திட்டம் என்னவென்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸின் இன்றைய நிலைப்பாடு என்ன?
இது அருமையான கேள்வி. நீங்கள் யாரை கவனத்தில் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் மாறுபடும். காங்கிரஸின் உயர்மட்டத் தலைமையில் இருக்கின்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மதச்சார்பின்மை, கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றின் மீதுள்ள மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஜவகர்லால் நேருவின் சித்தாந்தத்திற்கு விசுவாசமானவர்களாகவே இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைமை தாங்கிய முந்தைய கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக ஜனநாயகம் போன்றவை கடைப்பிடிக்கப்பட்டதை நாம் பார்த்தோம். மிகவும் சுவாரசியமான, மிக முக்கியமான திட்டத்தின் மூலம் அவர்களால் அமல்படுத்தப்பட்ட இலவச விநியோகம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருந்த கிராமப்புறக் குடும்பங்களுக்கு நூறு நாள் சம்பளத்தை, குறைந்தபட்ச ஊதியத்தை அவர்கள் கொண்டு வந்த தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வழங்கியது. அவர்களுடைய மற்ற தாராளவாத முடிவுகளின் கட்டமைப்பிற்குள் இதுபோன்ற மக்கள்நலன் சார்ந்த நடவடிக்கைகளும் இடம் பெற்றிருந்தன.
காங்கிரஸுக்கு அப்பால் பிராந்தியக் கட்சிகளைப் பார்க்கும் போது, அங்கேயும் அதேபோன்ற நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் முக்கியமான சில சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு பாஜகவிற்குத் தேவைப்பட்ட போது, சில எதிர்க்கட்சிகளின் ஆதரவாலேயே அது சாத்தியமாகியிருக்கிறது.
ஜம்மு, காஷ்மீருக்கு தன்னாட்சியை வழங்கிய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கியதை அதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மாநிலக் கட்சிகளின் ஆதரவின் முலமே அந்தச் சட்டம் சாத்தியமானது. அது ஒரு சட்டமாக மாற முடிந்தது. இதற்கு முன்பு குறிப்பிட்ட குடியுரிமை திருத்தச் சட்டமும் அப்படித்தான்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் உள்ளன. மத்தியில் நடத்தப்படுகின்ற ஒரு வகையான கொடுக்கல்-வாங்கல் பேச்சுவார்த்தையில் தங்களுடைய மதச்சார்பற்ற கடமைகளை விட்டுக் கொடுப்பதில் இதுபோன்ற மாநிலக் கட்சிகளிடம், முக்கியமாக கிராமப்புறக் கட்சிகளிடம் எந்தவொரு தடையும் இருப்பதில்லை. மேலும் இந்த கட்சிகளிடையேயும் மேலிருந்து தரப்படுகின்ற அழுத்தங்கள் நன்றாகவே வேலை செய்கின்றன.
இந்த உரையாடல் முழுவதும், மோடி ஆட்சியைப் பிடித்த பிறகு அதிகாரத்தை மையப்படுத்த முயன்றதால் இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைப் பற்றியே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை நீதித்துறைக்குள்ளும் காண முடிகிறது. கட்சிக்குள் மோடிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்திலும் நம்மால் காண முடிகிறது. முடிவெடுக்கும் போது மோடி தனது கட்சி உறுப்பினர்களை மிகவும் அரிதாகவே கலந்து கொள்கிறார். கண்காணிப்பு மூலம் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அவை நிகழ்ந்த விதம் என்று இதைப் பற்றி பேசுவதற்கு பல வழிகள் உள்ளன. சட்டத்தின் ஆட்சிக்கு அத்தியாவசியமாக இருக்கின்ற அரசு நிறுவனங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நடத்தைகள் எதிர்ப்புகளின்றி வெறுமனே அனுமதிக்கப்படுகின்றன. இறுதியாக இந்திய ஜனநாயகத்திற்கு மீள முடியாத சேதத்தை மோடி இப்போது இழைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏதாவதொரு கட்டத்தில் மோடியை நிராகரித்து இந்திய ஜனநாயகத்தால் தானாக மீண்டு வர முடியுமா?
மோடி அதிகாரம் மிக்கவராக இருப்பது அவர் ஆட்சி செய்யும் விதத்தாலா அல்லது அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாலா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வது மிகவும் முக்கியமாகிறது. ஹிந்து வாக்காளர்கள் அதை விரும்பியதாலேயே அவர் இவ்வாறு இருக்கிறாரா என்ற கேள்விக்கான விடை மூலமாகவே உங்களுடைய கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். கருத்துக் கணிப்புகள், கள ஆய்வுகளைப் பார்க்கும்போது, அநேகமாக ஹிந்து சமுதாயம் உண்மையில் மோடி இல்லை என்றால் அவ்வாறு ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் அளவிற்கு அடியோடு மாறியிருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவராகவே மோடி இருக்கிறார். பாதுகாப்பு தேவை என்ற உணர்வு பெரும்பாலும் இருந்து வருகிறது. பாதுகாப்பின்மை மற்றும் தொடர் அச்சுறுத்தலின் கீழ் இருப்பது போன்ற உணர்வு இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. அதுபோன்ற உணர்வு முந்தைய காலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், இஸ்லாமியர்களின் தாக்குதல்களின் விளைவாகவே உருவாகியிருக்கிறது. 2008 மும்பை குண்டுவெடிப்பு மிகப் பெரிய அளவிலான அதிர்ச்சியை உருவாக்கியது. அதுபோன்ற இன்னும் பல தாக்குதல்கள் அதைப் போன்ற அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளன.
பின்னர் அங்கீகாரத்திற்கான – சர்வதேச அங்கீகாரம் – தேவையும் இருக்கிறது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் உள்ள பெருமிதம் என்பது மிகவும் பரவலான உணர்வாக கருத்துக்கணிப்புகளில் காணக் கிடைக்கிறது. அவை ‘நாம் பாதுகாப்பற்றவர்கள், ஆனால் மரியாதைக்குரியவர்கள்’ என்று சொல்கின்றன. அவை தேசியவாதத்தின் இரண்டு முகங்கள். நடுத்தர வர்க்கத்திலும், நடுத்தர வர்க்கத்திற்கு அப்பாலும் தேசியவாதம் மிகமிக முக்கியமானதாகி இருக்கிறது.
மூன்றாவதாக, அவர் ஏழைகளுக்கு ஆறுதல் அளிப்பதில் மிகுந்த திறமை உள்ளவராக இருக்கிறார். மோடிக்கு வாக்களித்து தாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் ஏழை மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்ற கேள்வியை நான் சமீபத்தில் எதிர்கொண்டேன். மோடி விஷயத்தில் அது உண்மையாகவே இருக்கிறது. ஜனரஞ்சகவாதிகள் பலர் விஷயத்திலும் அது உண்மையாகவே இருந்திருக்கிறது. ட்ரம்ப், போல்சனாரோ போன்ற ஜனரஞ்சகவாதிகள் பதவியில் இருக்கின்ற போது, ஏழைகளுக்காகப் பொருள் ரீதியாக எதையும் செய்யாமல், பொருளற்ற வகையில் எதையாவது செய்திருக்கும் போது மீண்டும் அவர்களுக்கே வாக்களித்து, இந்த ஏழைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது?
தங்களுடைய சுதந்திரத்தின் இழப்பில் பாதுகாப்பு தேவை என்று மக்களிடம் உள்ள உணர்வு மோடியைத் தாண்டியும் ஏதோவொரு வகையில் தொடரக்கூடும் என்பதால் சமூகம் அவரை எதிர்கொள்ளும் விதம் நம்மிடமிருக்கும் கேள்வியை மிகவும் கடினமாக்குகிறது. தேசப் பெருமை, அங்கீகாரம் போன்றவையும் அவரைத் தாண்டியும் தொடரலாம். அதே நேரத்தில் தலைவர்களிடம் பெரிய வேறுபாடுகள் இருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
வேறு வகையான தலைமையும் இல்லை என்பதையே காட்டலாம். அதுவொன்றும் மீள முடியாதது அல்ல என்பதால் நாம் வேறு வகையான ஆட்சிக்குத் திரும்பலாம். இந்தியா போன்ற நாட்டில் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக மட்டுமே இல்லாமல், மனசாட்சியின் தலைவர்களாகவே இருப்பதாகக் கூறலாம். இன்றைக்கு மோடியைப் போல குரு வகை ஆளுமையாகவே தலைவர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்கள் அரசை ஆளுபவர்களாக மட்டும் இருக்காமல் மக்களை வழிநடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்கதரிசிகளாகக் காணப்படுகிறார்கள். மார்க்கதரிசி என்றால் வழியைக் காட்டுபவர் என்று பொருள். எனவே வேறொரு வகையான தலைமை வேறொரு சுழற்சியை – பிந்தைய தேசியவாத ஜனரஞ்சக சுழற்சி என்ற வேறு பாதையை மக்களுக்குக் காட்டலாம். அதைத்தான் நாம் அமெரிக்காவில் பார்த்தோம். வேறொரு தலைவர் வேறொரு திசையைக் காட்டக்கூடும் என்பதையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சாத்தியமற்றதாகத் தோன்றியவை இப்போது மிகவும் சாதாரணமானவையாகி, வேறு பாதைக்கு நாம் திரும்பியுள்ளோம் என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
எனவே அந்த வகையில் நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அது மீள முடியாதது என்றும் நான் நினைக்கவில்லை. அது அவரால் மட்டுமே நடந்ததல்ல என்பதாக என்னுடைய பகுப்பாய்வை தனிமனிதரிடமிருந்து மாற்ற விரும்புகிறேன். சமூகத்தில் உள்ள எதிர்பார்ப்புகளின் காரணமாக புதிய ஆட்சி வருவதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும்.
நன்றி, ஜஸ்டின். உங்கள் அழைப்பிற்கு நன்றி.
https://democracyparadox.com/2021/07/13/christophe-jaffrelot-on-narendra-modi-and-hindu-nationalism/
நன்றி: டெமாக்ரசி பாரடாக்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 14 – ஜா. மாதவராஜ்
“ஒரு உண்மையை பொய்யென ஆரம்பித்து
ஒரு பொய்யை உண்மையென முடிப்பான் பொய்யன்”
– வில்லியன் சென்ஸ்டோன்
ராம்கிஷ்ன கிரேவாலுக்கு 70 வயது. முன்னாள் இரானுவ வீரர். தேஜ் பஹதூரோ எல்லைக் காவல் படையின் வீரராக இருந்தவர். இருவருமே ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
2013 செப்டம்பர் 15ம் தேதி ஹரியானா மாநிலத்தின் ரேவரியில் முன்னாள் இராணுவ வீரர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் நடந்த கூட்டம் அது. நாட்டின் இராணுவ வீரர்களுக்கு மோடி செலுத்தும் முதல் மரியாதையை எல்லோருக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
“நாட்டுக்காக உயிரையேத் துறக்க துணிந்திருக்கும் நீங்கள் மகத்தான துறவிகளுக்கு ஈடானவர்கள். உங்களை நான் வணங்குகிறேன்” என உணர்ச்சி பூர்வமாக பேச ஆரம்பித்தார் மோடி.
“பாகிஸ்தான் குஜராத்தை ஒட்டி இருக்கிறது. ஆனால் அங்கு எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருந்தது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி.மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.” என்று பெருமிதம் கொண்டார்.
உண்மை என்னவென்றால் அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் கட்ச் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 1985ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது திட்டமிடப்பட்ட திட்டம் 2003ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.
“நண்பர்களே! தாய் நாட்டுக்காக தங்கள் வாழ்வை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த, சந்தோஷங்களை இழந்த இராணுவ வீரர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ரெயில்வே ஸ்டேஷனில், ஆஸ்பத்திரியில் அவர்கள் பிச்சையெடுப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. நம் மரியாதைக்குரிய முன்னள் இராணுவ வீரர்களின் அடிப்படைத் தேவைகளை யார் மறுத்தது? அவர்களின் சுய மரியாதையை யார் பறித்தது? 2004ம் ஆண்டில் வாஜ்பாய் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் நீங்கள் One Rank One pension பெற்றிருப்பீர்கள்.” என்றார்.
OROP என்றால் One Rank One Pension. இந்திய இராணுவ வீரர்களின் 42 ஆண்டுகால கோரிக்கை அது. இராணுவத்தில் ஒரே ரேங்க்கில் இருந்தாலும் அவர்களின் கிரேடு சார்ந்தும், துறை சார்ந்தும் வெவ்வேறு பென்ஷன்கள் கொடுக்கப்பட்டு வந்தன. பெரும் ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் கொண்டதாயிருந்தது. பணி ஓய்வு பெறும்போது ஒரு இராணுவ வீரர் எந்த ரேங்க்கில் இருந்தாரோ அதற்குரிய பென்ஷன் ஒன்றுபோல் வழங்க வேண்டும் என அவர்கள் காலம் காலமாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அதுவரை இருந்த எந்த பிரதமரையும் விட இராணுவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மோடி தன்னைக் காட்டிக் கொண்டார். தன் தேர்தல் பிரச்சாரங்களில், இராணுவ வீரர்களை இதுவரை இருந்த அரசுகள் மதிக்கவில்லை, போற்றிப் பாதுகாக்கத் தவறி விட்டன என குறை சொல்ல ஆரம்பித்தார். அதற்கு அவர் கையிலெடுத்ததுதான் OROP.
உலகின் சர்வாதிகாரிகள் அனைவருமே மற்ற எவரைவும் விட இப்படித்தான் தங்கள் இராணுவ வீரர்களை போற்றி வந்தனர். அதன் அடிநாதம் வேறு. சர்வாதிகாரிகளுக்கு நிலமே தேசம். மக்கள் அல்ல. குடும்பம், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு எல்லைகளில் நின்று நிலத்தைக் காப்பவர்களை கொண்டாடுவார்கள். தங்கள் நலன்களைப் பொருட்படுத்தாமல் தேசத்தின் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இராணுவ வீரர்களின் தியாகங்கள் வழியாக நாளும் மக்களுக்கு உணர்த்தப்படும். தேசத்தின் மீது மக்களுக்கு ஒரு பக்தியை ஏற்படுத்துவதும், அதை மேலும் தேசீய வெறியூட்ட முயற்சிப்பதுமே பாசிஸ்டுகளின் முக்கிய இலக்கணமாயிருக்கிறது.
நிஜத்தில் அவர்களுக்கு இராணுவமே முக்கியமானது. இராணுவ வீரர்கள் என்னும் மனிதர்கள் முக்கியமில்லை. காலம் இதனை தெளிவுபட உணர்த்தியும் உலகம் முழுமையாக இன்னும் அறியாமலேயே இருக்கிறது.
2014 மே மாதம் மோடி பிரதமர் ஆனார். இராணுவ வீரர்களின் சேவையை வழக்கம்போல் பாராட்டிக்கொண்டு இருந்தாரே ஒழிய, OROP-குறித்து வாயைத் திறக்கவில்லை. ஓய்வு பெற்ற இராணுவர் வீரர்கள் தொடர்ந்து அரசிடம் கேட்கத் தொடங்கவும், 2014 தீபாவளிக்குள் அமல்படுத்தப்படும் என இராணுவ அமைச்சர் பாரிக்கர் உறுதியளித்தார். மோடியிடமிருந்து நல்ல செய்திக்காக பாலைவனத்திலும், பனிமலைகளிலும் இராணுவ வீரர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
காலதாமதம் செய்யப்படுவதையும், தங்கள் பிரச்சினைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையும் உணர்ந்து ஜூன் 15ம் தேதி முன்னாள் இராணுவ விரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘இதுதான் இராணுவ வீரர்களைத் தாங்கள் நடத்தும் விதமா, இதுதான் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தாங்கள் தரும் மரியாதையா?” என ஜனாதிபதிக்கு கடிதங்கள் எழுதினர்.
2015 சுதந்திரதினத்திற்கு முந்திய நாள் முன்னாள் இராணுவத்தினர், இறந்த இராணுவத்தினரின் மனைவி மக்கள் எல்லாம் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு OROP கேட்டு, கோரிக்கை அட்டைகள் சுமந்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் அவர்களை வலுக்கட்டாயமாக தரையோடு இழுத்து விரட்டியடித்தனர். தேசத்தை பாதுகாத்தவர்கள் தேசத்தின் தலைநகர் வீதிகளில் பரிதாபமாக நிலைகுலைந்து போனார்கள். அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் கொதிக்கவும், ’பாதுகாப்பு கருதி’ அப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
அடுத்த நாள், செங்கோட்டையில் நின்று சுதந்திர தின விழாவில் மோடி, நாட்டிற்கு அற்புதங்களைக் கொண்டு வரப்போவதாக மணிக்கணக்கில் நீட்டி முழக்கி விட்டு இறுதியில், இராணுவத்தினரையும், அவர்களது சேவையையும் தான் பெரிதும் மதிப்பதாகச் சொல்லி, OROP-ஐ கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லி பறந்து விட்டார்.
இராணுவத்தினர் மீது மோடி அரசின் போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், OROP ஐ மேலும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வலியுறுத்தியும் முன்னாள் இராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் 2015 ஆகஸ்ட் 17 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். பீகார் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
2015 செப்டம்பரில், மத்திய அரசு OROP குறித்த பணிகள் முடிந்துவிட்டதாகவும் அமல் செய்யப் போவதாகவும் திரும்பவும் அறிவித்தது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 2015 தீபாவளி தங்கள் குடும்பத்தினருக்கு கருப்பு தினம் என முன்னாள் இராணுவத்தினர் அறிவித்தனர். இறுதியாக 2016 பிப்ரவரியில் OROP அமல் செய்யப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இருந்தன. ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் கமிஷன் படி உயர்த்தப்பட்ட தொகையும், அதற்குரிய அரியர்ஸும் தரப்படவில்லை. அதை சரிசெய்ய முன்னாள் இராணுவத்தினர் திரும்பவும் போராட வேண்டி இருந்தது.
மோடியோ, OROP ஐ மத்திய அரசு அமல்படுத்தி விட்டதாகவும் 2016 தீபாவளியை இராணுவத்தினரோடு கொண்டாட இருப்பதாகவும் அறிவித்தார். அக்டோபர் 29ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில், இந்திய திபெத் எல்லையில் இராணுவ வீரர்களுக்கு சுவீட்களை ஊட்டியவாறு போட்டோக்களில் காட்சியளித்தார்.
சரியாக அடுத்தநாள் அக்டோபர் 30ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இராணுவ மந்திரியை சந்தித்து, இன்னும் தீர்க்கப்படாத தங்கள் பிரச்சினையை முறையிட சில முன்னாள் இராணுவத்தினர் சென்றனர். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 70 வயதான ராம்கிஷ்ண கிரேவாலும் ஒருவர். 28 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு 2004ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். தன் கிராமத்தில் பல சமூக சேவைகளையும் செய்து வந்தவர். அதற்காக சங்கர் தயாள் ஷர்மா விருதினையும் பெற்றிருந்தார்.
ஹரியானாவைச் சேர்ந்த எல்லைக் காவல் படை வீரர் தேஜ் பஹதூரும் அதுபோலவே மோடியை நம்பி ஏமாந்து போயிருந்தார். 1996ல் இராணுவத்தில் சேர்ந்திருந்தவர், மோடியின் ஆட்சியில் இராணுவத்திற்குள் நடந்து வந்த ஊழல்கள் ஒழிக்கப்படும், இராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.
2017 ஜனவரி மாதத்தில் இராணுவத்தில் நடந்து வரும் ஊழல்களை வெளியே சொல்ல ஆரம்பித்தார். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவையும், நல்ல உணவுக்கான பொருட்கள் இராணுவ அதிகாரிகளால் வெளியே விற்கப்படுவதையும் வீடியோவில் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பிரபலமாகி பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இராணுவத்தின் மீது பிரதம மோடி வைத்திருக்கும் மரியாதைக்கு பங்கம் அல்லவா அது? பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து உயர் இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அதுகுறித்து தேஜ் பஹதூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் விபரங்கள் வெளியாகவில்லை.
சில மாதங்கள் கழித்து தேஜ் பஹதூரிடமிருந்து இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டது. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சல் தருவதாகவும், அவரது மொபைலை அபகரித்து, அதில் மோசடிகள் செய்து, தேஜ்பஹதூருக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவதூறு செய்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். “ஊழலை வெளிப்படுத்தினால் இதுதான் ஒரு ஜவானுக்கு திரும்பக் கிடைக்குமா என பிரதமரிடம் கேளுங்கள்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
அவரது குரல் எடுபடவில்லை. இராணுவத்திலிருந்து தானாக ஓய்வு பெறுவதற்கு ( VRS) அரை மணி நேரத்துக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டு, எந்த நியதியும் இல்லாமல் உள்ளூர் போலீஸால் விசாரிக்கப்பட்டார். இராணுவத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்கவில்லை என்றும், யூனிபார்மில் இருக்கும்போது மொபைல் போன் உபயோகித்தார் என்றும், அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அறிவித்து இராணுவத்திலிருந்து எந்தவித விளக்கமும் கேட்கப்படாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ‘இராணுவ ரகசியம்’, ‘இராணுவ ஒழுங்கு’ என்றால் சாதாரணமா?
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தேஜ் பஹதூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பார்த்தார். அங்கும் ஏமாற்றமடைந்தார். 2019 ஜனவரி மாதம் 18ம் தேதி, தேஜ் பஹதூரின் மகன் ரோஹித் மரணமடைந்தார். “ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக டெலிபோன் வந்தது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். உள்ளே பூட்டப்பட்ட அறையில் தலையில் சுடப்பட்டு ரோஹித் இறந்திருந்தான். அருகில் பிஸ்டல் கிடந்தது. தேஜ் பஹதூர் வீட்டில் இல்லை. கும்ப மேளாவுக்குச் சென்றிருந்தார்” என போலீஸ் தரப்பு செய்தி வெளியானது. தேஜ் பஹதூரிடமிருந்து எந்த தகவலும் அது குறித்து இல்லை.
2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நிற்கப் போவதாக தேஜ் பஹதூர் முடிவெடுத்தார். 2014 தேர்தலின் போது ஹரியானாவில் எந்த ரேவரியில் நடந்த கூட்டத்தில் நின்று மோடி இராணுவ வீரர்களை போற்றி பேசினாரோ, அதே ரேவரியில் நின்றுதான் 2019 மார்ச் 31ம் தேதி அந்த அறிவிப்பை தேஜ் பஹதூரும் வெளியிட்டார்.
சுயேச்சையாக தேர்தலில் நிற்கத் துணிந்தவரை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி ஆதரித்தது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப் போவதாக அறிவித்தது. அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேவையான விபரங்கள் இல்லையென சொல்லப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அலகாபாத் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து ’தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டது, மோடியின் வெற்றி செல்லாது’ உச்ச நிதிமன்றத்திஉல் வழக்குத் தொடுத்தார். அங்கும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 2020 நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தேஜ் பஹதூர் குறித்த தகவல்களும் இல்லை. மக்களின் நினைவுகளில் அவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள்தான்.
ராம்கிஷ்ன கிரேவாலையும் தேஜ் பஹதூரையும் தேசமும், மக்களும் மறந்து விடக் கூடாது. ‘ஜெய் ஜவான்’ என இனி முழக்கங்கள் எழும் பொதெல்லாம் அந்த இராணுவ வீரர்களின் நினைவுகள் வந்தால் தேசம் பிழைத்துக் கொள்ளும். உண்மையான எதிரிகள் யார் என்பதை அந்த இரண்டு இராணுவ வீரர்களும் தேசத்திற்கு காட்டி இருக்கிறார்கள்.
(இத்துடன் இந்த தொடரை இந்த வலைத்தளத்தில் நிறுத்திக் கொள்கிறோம். மேலும் சில அத்தியாயங்களோடு சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘பொய் மனிதனின் கதை’ புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது.)
References:
Full Text of Shri Narendra Modi’s speech at Ex- Servicemen’s Rally, Rewari : Narendra Modi website
OROP suicide: Who was Subedar Ram Kishan Grewal? : India Today, Nov 3, 2016
BSF jawan Tej Bahadur Yadav, who complained of bad food in camps, dismissed : Hindustan Times, Apr 26, 2017
‘Bad food’ video: NIA probed BSF man for ‘foreign contacts,’ found nothing : Indian Express, Feb 1, 2018
“Will Contest Against PM Modi From Varanasi,” Says Sacked BSF Soldier : NDTV, Mar 19, 2021
PM Modi celebrates Diwali with jawans in Sumdo on the Indo-China border : India Today, Oct 30, 2016
Black Independence Day, cry OROP protesters at Jantar Mantar : India Today, Aug 14, 2015
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்