பொய் மனிதனின் கதை அத்தியாயம் 13 – ஜா. மாதவராஜ்
“ஒரு தேசம் பொய்யர்களுக்கு பழக்கப்பட்டு விட்டால்
உண்மையை மீட்டெடுக்க பல தலைமுறைகளாகும்”
– கோர் விடால்
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஒரு கோவில் பூசாரி கிருஷ்ணர் சிலையை குளிப்பாட்டியபோது அவரின் கை தவறி கீழே விழுந்து கிருஷ்ணரின் கை உடைந்து போய்விட்டது. கிருஷ்ணரின் சிலையை நோயாளியாகப் பாவித்து உடைந்த கைக்குக் கட்டுப் போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பூசாரி சென்றார். டாக்டர்கள் முதலில் மறுத்தார்கள். பூசாரியும் கூட வந்த காவிச் சங்கிகளும் கடுமையாகப் வற்புறுத்த வேறு வழி தெரியாமல் டாக்டர்கள் அந்த கிருஷ்ணர் சிலையோடு கையை சேர்த்து வைத்து கட்டுப் போட்டார்கள். சென்ற நவம்பர் மாதம் 20ம் தேதி பத்திரிகை செய்தி இது.
உண்மையில் டாக்டர் என்ன செய்திருக்க வேண்டும். உடைந்த கிருஷ்ணர் சிலையை விட்டு விட்டு அந்த பூசாரிக்குத்தான் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். டாக்டர் அப்படி அறிவு பூர்வமாக செயல்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சையளிக்கும் நிலை வந்திருக்கும். சமகால சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் அப்படி வெறிகொண்ட மனநிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
இங்குதான் ராமர் பிறந்தார் என இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து தேசம் முழுவதும் ரதயாத்திரை செய்தார்கள். நானூறு ஆண்டு கால மசூதியை இடித்தார்கள். வரலாறு, ஆதாரங்கள் இல்லாமல் நம்பிக்கைகளை வைத்து நாட்டின் உச்சநீதி மன்றமே தீர்ப்பு எழுதிவிட்டது. பாவம் அந்த டாக்டர் வேறென்ன செய்வார்?
இந்த நாட்டின் பிரதமரே விநாயகருக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசும்போது, அந்த கிருஷ்ணர் கோவில் பூசாரிதான் என்ன செய்வார்?
“கணேஷ் என்னும் கடவுளை நாம் எல்லோரும் வணங்குகிறோம். யானையின் தலையும் மனிதனின் உடலும் கொண்ட அந்தக் கடவுள் மூலம் நம் முன்னோர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை தெரிந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.”
2014 அக்டோபர் 25ம் தேதி மும்பையில் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதுதான் இது. தேசத்தின் முக்கிய மருத்துவர்கள், அத்துறை சார்ந்த விஞ்ஞானிகள், அமிதாப்பச்சன், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் எல்லாம் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு மதங்களும், நம்பிக்கைகளும் நிறைந்த 130 கோடி மக்களின் பிரதமராக மோடி பதவியேற்று அப்போது சில மாதங்களே ஆகி இருந்தன.
அத்தோடு மோடி நிற்கவில்லை. மேலும் தொடர்ந்தார். “மகாபாரதத்தில் கர்ணனை அவனது தாய் கர்ப்பம் தரித்து பெற்றெடுக்கவில்லை. இன்றைய மரபணு ஆராய்ச்சிகளை அன்றே நம் மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்.”
“இன்றைய ஆகாய விமானம், ராக்கெட் எல்லாவற்றுக்கும் நம் நாடுதான் முன்னோடி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவை நம் நாட்டில் புழக்கத்திலிருந்தன.”
புராணங்கள் எல்லாவற்றையும் உண்மை போலும் சித்தரித்து மோடி பேசினார். மக்களை முட்டாள்களாக பாவிப்பதும், முட்டாள்களாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவாவையும், மதவெறியையும் தீவிரமாக பரப்பும் அமைப்பைச் சேர்ந்தவர் மோடி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தெளிவாகப் புரியும். அவரது வார்த்தைகளில் ஏவிவிடப்படும் ஆபத்துக்கள் தெரிய வரும்.
அன்றைக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டர்களும் விஞ்ஞானிகளும் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டர் போல வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தனர். மோடியின் பேச்சு குறித்த பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் மீதும் மேலோட்டமான விவாதங்களே எழுந்தன. பிஜேபியின் தகவல் தொடர்பு குழுவைச் சேர்ந்தவர்களே மிக வேகமாக களத்தில் இறங்கி இருந்தார்கள்.
இயேசு கடலின் மீது நடந்தார் என்றால் நம்புவார்கள். மோடி சொன்னதை ஏன் நம்பக் கூடாது” என்றார் ஒருவர்.
யார் நம்பினார்கள்? அப்படி நம்புவதை யார் சரி என்று சொன்னார்கள்? அறிவியலுக்கு முரணான கருத்துக்களை எந்த மதமும், அமைப்பும், மனிதரும் பேசினாலும், பரப்பினாலும் அதை தவறு என சுட்டிக்காட்டி சரிசெய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை. இங்கு ஒரு அரசே அந்த தவறை அப்பட்டமாக செய்கிறது.
“இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முந்திய விஞ்ஞானிகளாய் நமது ஆன்மீகவாதிகளும், ஞானிகளும் வாழ்ந்த நாடு இது. இப்படிப் பேசுவதற்கு மோடி போல ஒரு பிரதமர் வேண்டியிருக்கிறது” என பெருமிதம் கொண்டார் இன்னொருவர்.
ஆன்மீகத் தலைவர்களையும் ஞானிகளையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களை மதிப்பது வேறு. அறிவியலுக்குப் புறம்பான அவர்களது கருத்துக்களை ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏற்றுக்கொள்ள திணிப்பது வேறு. அதிகாரத்தின் பேரில் புராணங்களில் வரும் கற்பனைகளையும், கட்டுக்கதைளையும் உண்மைகள் என சித்தரிப்பது பெரிய மோசடி.
மோடியே அப்படியெல்லாம் பேசியதும், தலைவன் எவ்வழியோ அவ்வழி தம் வழியென பிஜேபியினரும், இந்துத்துவா அறிவு ஜீவிகளும் வரிசை கட்டி பொய்களை அவிழ்த்துவிட்டார்கள்.
ஒன்றிய அரசின் அமைச்சர் பியூஸ் கோயல் ஜி.டி.பி ((GDP) குறித்து விவரிக்கும்போது, “கணக்குகள், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜி.டி.பியை அணுகாதீர்கள். புவியீர்ப்பு விசை குறித்து கண்டறிவதற்கு ஐன்ஸ்டீனுக்கு அவர் படித்த கணிதம் எல்லாம் உதவவில்லை. ஏற்கனவே இருக்கும் விதிகள் மூலம் அணுகினால் புதியவை எதையும் கண்டுபிடிக்க முடியாது.” என்று தன் அறிவை வெளிப்படுத்தினார். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் நியூட்டன் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அறிவான். பேரை தவறுதலாகச் சொன்னதைக் கூட விட்டு விடலாம்.
ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்துதான் இன்னொன்று உருவாக முடியும். வெற்றிடத்திலிருந்து எதுவும் உருவாக முடியாது. இதுதான் விஞ்ஞானம். அதுபோல கற்ற கல்வியிலிருந்துதான், பெற்ற அறிவிலிருந்துதான் புதியன கண்டுபிடிக்க முடியும். அப்படி இல்லை என்று மறுப்பது விஞ்ஞானம், கல்வி மீது காட்டும் அலட்சியமே. இத்தனைக்கும் பியூஸ் கோயல் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டட். படிப்பில் அகில இந்திய அளவில் இரண்டாவது ரேங்க் பெற்றவர். யேல், ஆக்ஸ்போர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தலைமைப் பண்பு குறித்து வகுப்பு எடுத்தவர். இந்திய கல்வி முறை மீதே ஐயம் ஏற்படுத்தும் விதமாக அவரது கருத்துகள் இருந்தன.
ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் குறித்து முதன் முதலாக கண்டறிந்தவர் பிரணவ் என்னும் ரிஷி” என்ற அறிவியல் உலகம் அறியாத தகவலைச் சொன்னார். அவர் ஒரு எம்.ஏ பட்டதாரி. கவிதையெல்லாம் எழுதி இருந்தார். கொஞ்சநாள் ‘டாக்டர்’ என்றும் கூட பேருக்கு முன்னால் போட்டு இருந்தார்.
“மகாபாரதம் காலத்திலேயே இண்டர்நெட் வசதிகள் இருந்தன. கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு போர்க்களக் காட்சிகளை சஞ்சயன் அதன் மூலம்தான் விவரித்தான்” என்றார் திரிபுரா முதலமைச்சர்.
இராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர், “பசுக்கள் மிகவும் புனிதமானவை. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆகிஸிஜனையே வெளியிடும் ஒரே உயிரினம் பூமியில் பசுதான்” என்றார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 102 வது மாநாட்டில் விமானம் ஓட்ட பயிற்சியளிக்கும் அகாதமியைச் சேர்ந்த கேப்டன் ஆனந்த் போடாஸ் என்பவர், “பூமியில் மட்டுமல்ல, கிரகங்களுக்கு இடையேயும் பறந்த விமானங்கள் எல்லாம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன” என்று ஒரே போடாக போட்டார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 105வது மாநாட்டில் ஒன்றிய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாட்டு விதியை (Theory of relativity) தோற்கடிக்கும் விதியொன்று வேதங்களில் இருப்பதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்.
இந்திய அறிவியல் கழகத்தின் 106வது மாநாட்டில் உரையாற்றிய ஆந்திரா பலகலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், “கௌரவர்கள் 100 பேரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். அப்போதே சோதனைக் குழாய் மூலம் கர்ப்பம் தரிக்கும் மருத்துவமுறை இருந்திருக்கிறது” என்றார். மேலும் “எதிரிகளை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் நம்மிடமே வந்து சேரும் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. விஷ்ணு சக்கரம் அப்படியானதுதான்” என்று குறிப்பிட்டார்.
அதே அறிவியல் கழகத்தின் மாநாட்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அஷ்னு கோஷ்லே என்பவர், “டைனசர்களை பூமியில் பிரம்மனே படைத்தார். டார்வின் தியரி எல்லாம் கட்டுக்கதை” என்று அளந்து விட்டார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரும், எம்.பியுமான பிரக்யா சிங் தாக்கூர், “பசுவின் மூத்திரத்தில் பெண்களின் மார்பகப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்து உள்ளது” என்றார்.
இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, ஆண்மயில் வாழ்நாள் ழுவதும் பிரம்மச்சாரி என்றும் ஆண்மயிலின் கண்ணீரை உட்கொண்டு பெண் மயில்கள் கர்ப்பம் தரிக்கின்றன” என தன் மேதாவிலாசத்தை காட்டினார்.
“யோகா மூலம் சுற்றுப்புற சூழலைக் கட்டுப்படுத்த முடியும்” என மோடியும் அவரது பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தார்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் மோடியின் தலைமையில், அவரது சகாக்களும், சங்கீகளும் விஞ்ஞானத்தின் மீது ஒரு தொடர் யுத்தமே நிகழ்த்தி உள்ளார்கள்.
இவைகளை வெறும் ஜோக்குகளாகவும், இப்படி பேசுகிறவர்களை முட்டாள்களாகவும் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்து மதத்தை விஞ்ஞானமாக்குவதும், விஞ்ஞானத்தையே இந்து மதமாக்குவதும் மோடியின் – அவரது இந்துத்துவா சித்தாந்தத்தின் நோக்கம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுதான் அந்த பூசாரியை, உடைந்த கிருஷ்ணர் சிலையைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் கொண்டு செல்ல வைத்திருக்கிறது. அறிவியல் உண்மையை பேசவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்த டாக்டரின் இயலாமை ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.
பள்ளியில் நியூட்டனை, ஐன்ஸ்டினை, அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் நிலைமை என்னவாக இருக்கும். புதுமை குறித்த அவர்களது புரிதல்கள் என்னவாக இருக்கும். ஒரு குழப்பமான மனநிலையில் சிக்கிக் கொள்வார்கள். நவீனத்தை நோக்கி நகர முடியாமல் ஒரு தலைமுறையை மெல்ல மெல்ல முடக்கிப் போடும்.
கடந்த கால மகிமைகளையும், வீண் பெருமைகளையும் பேசிப் பேசி இருட்டுக்குள் மக்களைத் தள்ளுகிறார்கள். நிகழ்காலம், எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அற்ற வெளியில் குருட்டுப் பூனைகளாக்குகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலை மக்களுக்கு உருவாகாமல் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.
அன்றைக்கு அந்த பூசாரி கிருஷ்ணர் சிலைக்கு மருத்துவ சிகிச்சை மட்டும் பெற்று செல்லவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீதையும் பெற்றுச் சென்றிருக்கிறார். அதில் சிகிச்சை அளிக்கப்பட்டவரின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் நோய் காலியாக விடப்பட்டு இருக்கிறது. அந்த நோய் என்னவென்று எழுதுவதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்