வெ.நரேஷ் கவிதைகள்
1) முந்தான முடிச்சி ஒன்னு
மும்முரமா போகுது
முட்டாக்கு போட்டுக்கிட்டு
முன்னும் பின்னும் பாக்குது
நட்டநடு ராத்திரியில்
நாலாபுரம் தேடுது
அங்கம் ருசி கேட்டுத்தான
அங்கும் இங்கும் அலையுது
கற்பை மட்டும் களவாடி
கணாமப் போனது
பாவி புள்ள பாவி புள்ள
நீ
பொறந்ததுதான் சாபமா?
கற்பை மட்டும் களவாடி
அவன்
போனதுதான் நியாயமா?
**********
2) என்னை மிகவும் பிடிக்கும் என்றாய்
நான் வரும் பொழுது ரசிப்போம் என்றாய்
என் சத்தம் கேட்டு மகிழ்வேன் என்றாய்
என்னைப் பற்றிக் கவிதையாய் வர்ணித்தாய்
ஆனால் ஏனோ நான் உன்னைத் தேடி வந்தவுடன்
எதிரியாகவே பார்க்கிறாய்
இப்படிக்கு அடை மழை
*********
3) நெருங்கிய உறவாக இருந்தாலும்
தூரத்து உறவாக இருந்தாலும்
வாழ்த்து மடல் போல்
முடிகிறது
ஆழ்ந்த இரங்கலும் கூட !
– வெ. நரேஷ்
கேள்வி சிறுகதை – வெ.நரேஷ்
மூன்று வயது சமர், எங்கள் குட்டிச் செல்லத்தைப் பள்ளியில் சேர்த்து மூன்று வாரங்களே ஆனது. அதாவது எங்களுக்கு வீட்டுப் பாடம் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகி விட்டது!
முதலில் தமிழ் எழுத்துகள் கற்றுக் கொள்கிறோம் அவளோடு சேர்ந்து. அ ஆ இ ஈ என்று நாங்களும் அவளைப் போலவே குறிலுக்கு ஒரு மாதிரியாகவும் நெடிலுக்கு வேறு மாதிரியும் தலையை ஆட்டிச் சொல்லப் பழகிக் கொண்டோம். அடுத்து ஆங்கில எழுத்துகள். ABCD என்று போகும் ஆங்கில அகர வரிசையில் நான் A என்றால் அடுத்து B சொல்லணும் என்றால், சமர் முடியாது என்று சொல்லிவிட்டாள். எ ஏ, பி பீ, சி சி, டி டீ என்று தமிழில் உயிரெழுத்து வரிசை குறில் நெடில் போல் ராகம் போட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்.
சரியாப் போச்சு உன்னோட என்று சிரித்துத் தலையில் அடித்துக் கொண்டு, ABCD சொல்லிக் கொடுக்க ஒரு வழியாக மேடம் சமாதானம் ஆகித் திரும்பச் சொல்லிப் பழக ஆரம்பித்தார்கள்.
நடுவே நடுவே இதென்ன, அதென்ன, இது ஏன் இப்படி வளைஞ்சிருக்கு…. இது ஏன் இப்படி சாஞ்சிருக்கு…இது ஏன் ரெண்டு பக்கமும் கை நீட்டி நிக்குது..என்று கேள்விகள் வேறு…
எல்லாம் ஒழுங்காய்த் தான் போய்க் கொண்டிருந்தது, ஒரு நாள் நல்ல வேளை நான் தப்பித்தேன், என் மனைவி சிக்கிக் கொண்டாள்.
“இதென்ன எழுத்து மா?” என்று கேட்டாள் சமர்.
‘இது எம், அது டபிள்யு’ என்றாள் சமரின் அம்மா.
“ஏம்மா இது ரெண்டும் ஒரே மாதிரி தானே இருக்கு….ஏம்மா நீ எம், டபிள்யு ன்னு மாத்தி மாத்தித் தப்புத் தப்பா சொல்றே?” என்று கலகல என்று சிரித்துக் கொண்டே கேட்க, என் மனைவி என்னைப் பார்த்து சிரிக்க, நானும் சிரித்துக் கொண்டே சமருக்கு முத்தமிட்டுக் கை கொடுத்து மகிழ்ந்தேன்.
கேள்விகள் கேட்கப்பட வேண்டும் கேள்விகள் கேட்கப் பட்டால்தான். அதற்கான பதில் கிடைக்கும். சமர் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா இல்லையா என்று என் கேள்விக்கும் பதில் தாருங்கள்.
– வெ.நரேஷ்
கூவ நதிக்கரை கவிதை – வெ.நரேஷ்
கூவ நதிக்கரை
******************
சிங்கார சென்னைன்னு
பேர் மட்டும் வாழுது
சின்னஞ்சிறு பிள்ளைக் கனவு
கரையோரம் வேகுது
பட்டா கேட்டு பேனாலும் பவர் ரொம்ப வெரட்டுது
பாட்டாளேனு இருந்தாலும் விடியல் கண்ண உருட்டுது
ஓட்டேல்லாம் வாங்கிக்கிட்டு
எல்லோரையும் தொரத்தது
வீட்டுக்குள்ள பொக்லைன விட்டு
வெட்கம் இன்றி வெரட்டுது
கூவ நதிக்கரையோரம் குருவிக் கூடா வாழுறோம்
குடிசைக்குள்ள இருந்தாலும் கோபுரமா சாகுறோம்
– வெ. நரேஷ்
வெ. நரேஷ் கவிதைகள்
* உழைக்கச் சென்றவன்
உறங்க மறுத்ததால்
உதவியாய்ச் சென்ற
இடது கைகள்.
* உடைமையைச் சுமந்து
உழைப்பினைத் தொடர்ந்து
உதிரத்தை இழந்து
இறப்பினைப் பெறுபவனே
உழைப்பாளி.
* வறுமையில் வாழ்பவனை
வரவேற்றது
டீ கடை பெஞ்சு.
* அறுவடை செய்து
நெல் குவித்த பிறகு
எதிரில் நிற்பான் முதலாளி
பாதியைப் பறிமுதல் செய்ய.
* கரையோரம் வாழ்ந்து வந்தோம்
ஓட்டுக்காகக் குடிசைக்குள்
கனவுகளை விதைத்து
ஆங்காங்கே கட்டிக் கொண்டான் மாளிகையை.
* ஆள்காட்டி விரலைக் காட்டிவிட்டு
மை பூசிக்கொண்டு வருகிறார்கள்
அவர்களின் முகத்தில்.
-வெ. நரேஷ்




