ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி

ஒட்டு போட்ட கால்சட்டையும் உயரத்தில் பறக்கும் தேசியக் கொடியும் கவிதை – கவிஞர் சே கார்கவி




1
உணவைத் தேடி அலையும் பொழுது இல்லை, மனிதர்களையும்
நல்ல மனங்களையும் தேடி அலையும் கடின வேளைகளில்….

2
சக்திமிகுந்த தெய்வமென
கோவிலின் கற்பக்கிரகத்தைப்
பார்த்து கையெடுத்து
வணங்கிய குழுந்தைக்கு
அன்னையை விட
ரொம்ப அழகாக தெரிந்துவிடவில்லை
இருளில்
சிலையாக அமர்ந்த
அம்மனின் அமர்வு…

3
வீட்டில் அமர்ந்தபடியே
கொட்டும் மழையில்
நனைய விரும்பினேன்
அவசர அவசரமாக
மழையைப் பற்றி கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன்…..

4
கழுத்தணைத்து
தலை கோதி
இடையமர்ந்து
தோளேற்றி
அப்படியே
துயில் கொள்ளும்
தேவதையைத்தான்
மகளென்பார்களோ
தாயுமகளென்பார்களோ
தத்தக்கா புத்தக்கா
தடுக்கல்களில்
இதோ
தேடலில் ஓர்
பட்டாம்பூச்சி…

5
பதப்படுத்தப்பட்ட
மண்ணின் ஆசைதான்
பழங்கள் குலுங்கும்
விதையை எச்சமிடச் செய்தது…
சரியாகத்தான்
அமர்ந்துவிட்டான் புத்தன்
ஆசை இல்லையென
ஞானத்தை வழங்கத் தயாராக
இந்த இலையுதிர்க்கும்
போதிமரங்களின் நிழலில்….

6
பிறப்பைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
காது கிழிய கூக்குரலிடுகிறது
நேற்று வீசிய மா விதையின் அருகே குழந்தை

7
காலங்களுக்குப் பின்னே
கடிவாளங்களும் உள்ளன
கரைகின்ற நொடிகளுக்கு
யாராலும் பூட்டிட இயலாது
அவசரமாக
உணவு தேடியும்
இணைதேடியும்
செல்கின்ற அணிலுக்கு
அகல விரிந்து
காத்திருக்கின்றன
காலக்கண்கள்……!

8
சாயங்களை பூசிக்கொள்கிறேன்
முகமூடி வழங்குகிறது
குழந்தை
முகமுடி அணிந்து கொண்டேன்
புன்னகைக்கச் சொல்கிறது
வாழ்க்கை
பயணிக்கத்தொடர்கிறேன்
சாயங்களின் வடிவில்
ஓர் கற்றை நூலால் கட்டிய பாதைகளில்……

9
செருப்பு தைக்கும் தொழிலாளி
ஒருபோதும்
நிமிர்ந்து பார்த்ததில்லை
உயரமெனப்படுபவை அனைத்தும்
இவன் காலடியிலே
கிடக்கின்றன என்பதால்….

10
ஒரு போதும்
உனக்கு பிடித்ததை மறைத்து வைக்காதே
பட்டாம்பூச்சிகள்
பூவிற்கு பிடித்தமாதிரியும்
தேனை
உண்டு மகிழும்…

11
நடனமாடிய பின்பு
காலில் வலியையும்
கைத்தட்டல்களில் ஏற்பட்ட குறையையும்
வெற்றி ஒருபோதும் பார்த்ததில்லை
புன்னைகைக்கு வெற்றி தானே புன்னகையால் மகுடம் சூடும்…..

12
சிறகு
சிறியதோ
பெரியதோ
ஆசைகளைக் கற்றைகளாக
கொண்ட நேரத்தில்
தானாகவே முளைத்துவிடுகிறது
காற்றே இல்லாத இடத்தில்
பறவையாய் மனங்கள்
என்ன
கால்களும் கைகளும.
கூடுதலாக முளைத்துவிடுகின்றன….

13
எட்டாம் வகுப்பில்
புட்டங்களில் ஒட்டுகள் போட்ட கால்சட்டையுடன்

கை உயர்த்தி வணக்கங்கள் செய்கிறேன்
ஒட்டிய வண்ணங்களை கண்டு கொள்ளாமலே
பறக்கிறது
எல்லோர் மத்தியிலும் சுதந்திரக் கொடி

கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
(Er.Prof.சே கார்த்திகேயன்.ME)
SWD.Chennai

விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு

விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு




விடுதலையின் பவள ஆண்டு
இந்த விற்பனை பிரதிநிதிகளின்
கைகளில்
விசித்திரமாக இல்லை?
தேசியக் கொடியின் விதிகள்
மறுக்கப்பட்டு பருத்திக் கொடி
பாலியஸ்டராய் பறக்க விடப்பட்டிருக்கிறது இந்த ‘ பாரத் மாத்தாக்களால்’
யாராக இருக்கும் இந்த பாலியஸ்டர் மில்லின் சொந்தக்காரர்?
மூன்று நாட்களுக்கு முன்பே
கொடி ஏற்றப்பட்டிருக்க வேண்டுமாம் அப்படி ஏற்றப் பட்ட
கொடிகள் இன்னும் பல வீடுகளில்
இறக்கப் படவே இல்லை
மழையிலும் வெயிலிலும் ஏழைகளைப்போல் படாதபாடு படுகிறது தேசியக் கொடி!

இத்தனை ஆர்ப்பாட்டங்களிலும்
கூக்குரல்களிலும் ஏதோ ஒன்று
மறைந்திருப்பதை எவரேனும்
அறிந்திருப்போமா?
தாய்மையைக் கூட தங்கள்
இச்சைக்கு இலகுவாக எடுத்துக்
கொண்ட எமகாதகர்களின் விடுதலைக்கே இத்தனை ஆட்டங்கள் பாட்டங்களா?
பவள விழா ஆண்டின் இந்த கோர
நிகழ்வுகள் இந்நாட்டில் வாழ
அச்சம் தருகிறது.

எழுபதைந்து ஆண்டுகளில்
ஏதாவது ஓர் மாற்றம்
இல்லவே இல்லை ஆனால்
மீண்டும் படுகுழி நோக்கித்தள்ளும்
பாதகர்கள் போதனை!
இனியொரு நல் எண்ணம்
எழாத போதினில் ஏனிந்த தேசம்
எரி தழலில் வீழட்டும்

ச.லிங்கராசு
98437 52635

பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி

பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி




சாலையோரத்தில்
அமர்ந்தவாறு
கிழியாத
வெள்ளைத் தாளில்
தேசியக்கொடியை
வரைந்து
கொண்டிருந்தாள் சிறுமி ,

வரைந்த
தேசியக்கொடியினை
எங்கு ஓட்டி வைப்பதென்று
அப்பாவைப்
பார்த்துக் கேட்கிறாள் சிறுமி,

இடிக்கப்பட்டு
தலை சாய்ந்து கிடக்கும்
நம் வீட்டு
நடுச் சுவரில்

அந்த தேசியக்கொடியை
ஓட்டி வையுங்களென்று
சொல்லியவாறே
அங்கிருந்து
நகரத்தொடங்கினார் அப்பா
துரத்தப்பட்ட
நகரத்து வெளியே
மூட்டை முடிச்சுகளோடு ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி




கைத்தட்டி
விளக்கணைத்து
கொரானாவுக்கு
வைத்தியம் பார்த்த
குஜராத் கோமான்

கொடிய வரிகளால்
குடிமக்களின்
கோவணத்தையும் உருவிவிட்டு
வீட்டுக்கு வீடு
தேசியக் கொடியை
ஏற்றச் சொல்கிறார்கள்..

கோட்சேக்களுக்கு
குரு வணக்கம் செலுத்திவிட்டு
காந்தியர்களின்
தேகத்தைக் கீறி
தேசப்பற்றைச் சோதிக்கிறார்.

நூற்றிநாற்பது
கோடி பேரின் உடைமையை
நாலு பேருக்கு உரிமையாகிவிட
நாடுசுற்றும் தரகரவர்

அவருக்கு
முன்னோடிகள் அவருக்கு
சொன்னதெல்லாம்
நாக்பூர் தத்துவங்கள்

நம் முன்னோர்கள்
நமக்கு சொன்னதெல்லாம்
நாடுகாக்கும் மனித சமத்துவங்கள்

முன்னூறு ஆண்டு விடுதலைப் போரில்
அவர்களின்
முன்னோடி முகங்கள் எதுவுமில்லை.

எழுபது ஆண்டுகளில்
அவர்கள் கூடாரங்களில்
தாயின் மணிக்கொடி ஏற்றியது மில்லை

தினம் தினம் நம்மை வதைத்து
சுதந்திர தினத்தில்
தந்திரமாய்த் தேசக் கொடியை ஏற்றச்சொல்கிறார்கள்

தேசத்தை விற்றதை மறக்க
தேசியக் கொடியை விற்கிறார்கள்

விலைவாசியை ஏற்றத்தை மறைக்க
வீட்டு வாசலில் கொடியேற்றச் சொல்கிறார்கள்.

முக மூடி தரிப்பது
அவர்களுக்குப் புதிதில்லை
இப்போது
சுதந்திர தின
தேசிய கொடி முகமூடி அணிந்திருக்கிறார்கள்

மதவெறிக்கு மாறுவேடமிட்டு
மனித வேட்டையாடத் துடிக்கிறார்கள்.

– பிச்சுமணி

ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு  எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி

ஆர்எஸ்எஸ் தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா? -சம்சுல் இஸ்லாம் தமிழில்: ச.வீரமணி




ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த சமயத்தில் தேசிய இயக்கத்தின் அடையாளமாக இருந்த மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, சுதந்திர தினத்தைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்ததுடன், அனைத்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களும் காவிக் கொடியைத்தான் (Bhagwa Jhanda) வணங்கிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கே.பி. ஹெட்கேவார் அனைத்து ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

இன்று வரையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள்  காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல் ஜனநாயகத்தின் மீதான தங்கள் பற்றுதலைக் காண்பிப்பதற்காக மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கலாம். அதேபோன்றே இஸ்லாமியர்களின் மதராசாக்களில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கோரிக் கொண்டிருக்கலாம். எனினும் ஆர்எஸ்எஸ் இயக்கமானது மூவர்ணக்கொடியை வெளிப்படையாகவே கண்டித்தும், கேவலப்படுத்தியும்தான் வந்திருக்கிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர்களின் கீழ்க்கண்ட அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

1946 ஜூலையில் நாக்பூரில் நடைபெற்ற குருபூர்ணிமா வைபவத்தின்போது கோல்வால்கர் பேசியதாவது:

“பாரதத்தின் கலாச்சாரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது காவிக் கொடி (saffron flag)தான். அது கடவுளின் உருவகம். இந்தக் காவிக் கொடியின் முன் ஒட்டுமொத்த தேசமும் முடிவில் தலைவணங்கிடும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.”

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளிவரும் ஆர்கனைசர் என்னும் அதன் ஆங்கில இதழில் 1947 ஜூலை 17 தேதியிட்ட இதழில் தேசியக் கொடி என்னும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தில், மூவர்ணக்கொடியைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்கள். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் நிர்ணய சபையில் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதை மூர்க்கமான முறையில் எதிர்த்தே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:

“இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாகும். கொடி என்பது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்துஸ்தானத்தில் ஒரேயொரு தேசம்தான் இருக்கமுடியும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான உடைசலும் இல்லாது இருந்துவரும் இந்து தேசம்தான். இதுவே நம் தேசம். இதை அடையாளப்படுத்தக்கூடிய விதத்தில்தான் கொடியும் இருந்திட வேண்டும். அனைத்து சமூகத்தினரின் ஆசைகளுக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் ஒரு கொடியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிடும், அது தேவையுமில்லை. அது முற்றிலும் அவசியமற்றதுமாகும். .. ஒரு தையல்காரரிடம் நாம் நமக்காக ஒரு சட்டையையோ அல்லது ஒரு கோட்டையோ தைப்பதற்கு உத்தரவு வழங்குவதுபோல் நாம் நம் கொடியைத் தெரிவு செய்வதற்கு உத்தரவு வழங்க முடியாது.

இந்துஸ்தானத்தில் உள்ள இந்துக்கள் ஒரு பொதுவான நாகரிகம் (civilization), கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், ஒரு பொது மொழி மற்றும் பொது பாரம்பர்யங்களைக் கொண்டிருந்ததைப்போல, அவர்கள் ஒரு கொடியையும் பெற்றிருந்தார்கள். உலகில் மிகவும் உன்னதமான, மற்றும் பழைமையான கொடியைப் பெற்றிருந்தார்கள். உலகில் அவர்களின் நாகரிகம் எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு அவர்களின் கொடியும் பழைமையானது. அந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் தேசியக் கொடியின் பிரச்சனையையும் அணுகிட வேண்டும். மாறாக இப்போது செய்திருப்பதைப்போன்று ஏனோதானோவென்று அணுகிடக்கூடாது.   அந்நிய படையெடுப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தற்காலிக துரதிர்ஷ்டங்கள் மற்றும் அனைத்துப் பயங்கரங்களும் சேர்ந்து இந்துக்களின் தேசியக் கொடியை ஓரங்கட்டிவிட்டது. ஆயினும் அந்தக் கொடி பழைமையான மகிமையையும் மகத்துவத்தையும் மீளவும் பெறும் என்று அனைவருக்கும் தெரியும். கொடியின் வர்ணம், கிழக்கே சூரியன் உதயமாகும்போது மெதுவாக ஆனால் கம்பீரமாகத் தோற்றத்தை அளிக்கும்போது என்ன வர்ணத்தை அளிக்குமோ அதேபோன்ற நிகரற்ற வர்ணத்தில், தேசத்தின் இதயத்தையும் ஆத்மாவையும் மிகவும் நேசிக்கும் விதத்தில் இருந்திடும்.

இதே வழியில், உலகத்திற்கே உயிரூட்டக்கூடிய சக்தியாக விளங்கும்,  இத்தகைய மதிப்புவாய்ந்த நம் கொடியை நம் முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். சூரியனைப்போன்றே புகழ்பெற்ற வசீகரத்துடனும், பெருந்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும் உள்ள விநோதமான நம் கொடியைக் காண முடியாதவர்கள் அல்லது பாராட்ட முடியாதவர்கள் எதுவும் அறியாதவர்களாகவோ அல்லது தீங்கிழைப்பவர்களாகவோதான் இருப்பார்கள். இந்தக் கொடிதான் இந்தக் கொடி மட்டும்தான் இந்துஸ்தானத்தின் உண்மையான தேசியக் கொடியாக இருக்க முடியும். அதுதான், அதுமட்டும்தான் தேசத்திற்கு ஏற்புடைய ஒன்றாக இருந்திட முடியும். பொதுமக்களின் மத்தியில் இதனை வலியுறுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் நிர்ணயசபை அவர்களின் விருப்பத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவது நல்லது.”

இந்தியா சுதந்திம் அடைந்த சமயத்தில், இந்திய தேசம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் தில்லி, செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான  ஆர்கனைசர் இதழில் (1947 ஆகஸ்ட் 14 தேதியிட்டது), மூவர்ணக்கொடியை இழிவுபடுத்தும் விதத்தில் எழுதியிருந்ததாவது:

“விதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்துள்ளவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனாலும் அது எந்தக்காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடியதாகவோ, சொந்தம் கொண்டாடக்கூடியதாகவோ இருக்க முடியாது. மூன்று என்கிற வார்த்தையே தீங்கு பயப்பதாகும். மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயமாக ஒரு மோசமான தீய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.”

எனவே, ஆர்எஸ்எஸ்-இன் கூற்றுப்படி இந்தியத் தேசியக் கொடி எந்தக் காலத்திலும் இந்துக்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல. அது ஒரு மோசமான சகுனம் ஆகும், நாட்டிற்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும்.

நாடு சுதந்திரம் பெற்றபின்னரும்கூட,  மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியே ஏற்க ஆர்எஸ்எஸ் மறுத்தே வந்திருக்கிறது. கோல்வால்கர், ‘சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of Thoughts’) என்னும் தன்னுடைய நூலில் மூவர்ணக் கொடியைத் தேசியக்கொடியாகத் தெரிவுசெய்திருப்பதை, கண்டித்து எழுதியிருப்பதாவது:

“நம்முடைய தலைவர்கள் நம் நாட்டிற்கு ஒரு புதிய கொடியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? இது மிகவும் போலித்தனமான நகர்தல் ஆகும். … நம்முடைய தேசம் மிகவும் பழைமையான மற்றும் புகழ்மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட மாபெரும் தேசமாகும். நமக்கென்று சொந்தக் கொடி இல்லாமலா நாம் இருந்தோம்? இவ்வளவு ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக தேசிய சின்னம் எதுவும் இல்லாமலா நாம் இருந்தோம்? சந்தேகமேயின்றி நாம் பெற்றிருந்தோம். பின் ஏன் நம் மனதில் இந்த வெற்றிடம், முழு வெற்றிடம்?”

(கட்டுரையாளர், தில்லிப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)

கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்

கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்




அன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
சுதந்திரம் இருக்க
தெருவில் பறந்தது
தேசியக் கொடி
இன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
கொடிகள் பறக்க.
தெருவில் நசுங்கும்
வாங்கிய சுதந்திரம்.

நாங்கள் விடுதலையின் புத்திரர்கள்
வீர நடை போடுகிறோம்.

குடியாத்தத்திலிருந்து
கொடியை
ஒரு குழந்தையைப் போல
ஏந்தி வருகிறோம்.

மாநிலம் முழுவதும்
சுற்றி வருகிறோம்
மாபெரும் சுதந்திரம்
பற்றி வருகிறோம்
கொடிகாக்கும் குமரர்களாய்க்
கூடி வருகிறோம்.

நதியைப் போல நடந்து வருகிறோம்
கடலைப் போல எழுந்து வருகிறோம்
கதிரைப் போல சுடர்ந்து வருகிறோம்

பாரதியின் தாழ்வாரத்தில் பதியமிட்டு
பாரதிதாசனின் பலகணியில் ஒளிரவிட்டு
பட்டுக்கோட்டைப் பாட்டில் பறக்கவிட்டு
தமிழ்ஒளி நெஞ்சத்தில் தழையவிட்டு
பாலசரஸ்வதி கலைக்கூடத்தில் நடனமிட்டு
சங்கரய்யா நல்லகண்ணு கரங்கள் தொட்டு
தாரிகாமி கொடியேற்ற
இந்திய ஒற்றுமையை
ஏந்தி வருகிறோம்.

குருதிக் குளியலுக்குப் பிறகு
இந்தியத் தாய் உடுத்திய
ஒற்றை உடைதான்
தேசியக் கொடி!

அந்த உடைக்குள்தான்
விடுதலையின் புத்திரர்கள்
இழைகளாக இருக்கிறார்கள்.

தேசியக் கொடி….
தியாகிகளின்
நெஞ்சங்களில் நடந்த நெசவு
அதிகாரத்தின் கைக்குட்டையாவதில்லை

உறங்காமல் விழித்திருக்கும்
ஒற்றைக் கணதான்
அசோகச் சக்கரம்!

வெள்ளையனை விரட்டியடித்த
வீரத் தழும்புகளுக்கு
கட்டுப் போட்டுக் காய்ந்த சிவப்புதான்
காவி நிறம்.

சாதிகளற்று சங்கமமாகி
துரோகிகளை அடையாளம் காட்டும்
தூய வெள்ளை

வளர்ச்சிக்கான பாலமாகி…
பசியில் கருத்திருக்கும் பச்சை

கண்ணீரும் வியர்வையும் குருதியும்
கலந்த
மூவண்ணங்களின்
முடி மகுடம்தான் கருநீலம்!

கர்ம வீரர்களின்
கடைசிப் போர்வை
இது கொடியல்ல…
ஒவ்வொருவர் கண்ணுக்குள்ளும்
உறைந்திருக்கும் உயிர்த்துணி.

ஆகஸ்டுக் காற்றில் அசைந்து
மையம் கொண்ட புயல்களின்
மலரும் நினைவுகளில்.
உலக அழகென
கம்பத்தின் உச்சியில் அசையும்
கடைசி இந்தியனின் கனவு

தேசியக் கொடியின் அட்சயப் பாத்திரத்திலிருந்துதான்
ஆயிரமாயிரம் அம்மணக் கம்பங்களுக்கு
ஆடை கிடைக்கிறது!

தேசியக் கொடியின் நிழலிலிருந்து
உருவாகும்
மின்சாரத் தீப்பந்தம் கண்டு
கொலைகாரர்கள் நடுங்குகிறார்கள்
கொள்ளைக்காரர்கள் பதுங்குகிறார்கள்
துரோகிகள் ஒதுங்குகிறார்கள்

தேசியக் கொடியின்
தேசிய கீதம் இதுதான்….
“அடிமைகள் கைப்பற்றும்போது
கம்பம் கழுமரமாகும்!
விடுதலை வீரர்களின் விரல்பட்டால்
கம்பம் கொடிமரமாகும்!”

– நா.வே.அருள்
மாநிலக் குழு உறுப்பினர்
தமுஎகசவின் 15 ஆம் மாநில மாநாட்டையொட்டி எழுதிய கொடிப்பயணக் கவிதை

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




மின்மினிகளின் பகல்
*************************
மேய்த்த மிருகங்கள் திரும்பின
அவள்  பிணமாய்ப் புதரில் கிடக்கிறாள்
ரத்தம் தோய்ந்து பறக்கிறது தேசியக்கொடி
தெய்வத்தைப் புசித்தேன்
சாத்தானைத் தின்றேன்
மனிதர் அனைவரையும் நேசிக்கிறேன்
குழந்தையைக் கடித்துத் தின்றிருக்கின்றன
வெறி நாய்கள் இன்றும்
விட்டு வைக்கலாமா இனியும் நாம்   ?
ஆயுதங்கள் சார்பற்றவை
ஏந்துபவர்களுக்குத் தக்கபடி செயலாற்றும்
வன்முறை வன்முறையைக் கட்டவிழ்த்து  விடும்
வென்ற குதிரைக்குப் புல் கிடைக்கும்
தோற்ற குதிரை பசித்துக் கிடக்கும்
வேண்டுதல் வேண்டாமை
சுயநலம் சார்ந்தது
பசிப்பவனுக்குப் பூவை கொடுக்கிறீர்கள்
புளிச்சேப்பக்காரனுக்குப்
பழம் தருகிறீர்கள்
பெரு நெருப்பு உங்களுக்காக
கனிந்து கொண்டிருக்கிறது
காக்கைச் சிறகினிலே துவேஷம்
கொக்கின் வண்ணத்தில் வெறித்தனம்
நிறம் பற்றிய உரையாடல்களில் உதிரம் பீறிடுகிறது
பூனை அழகானது
பவ்வியமாய் சுற்றித் திரியும்
அடைபட்ட அறைக்குள் பிசாசாகும்
பற்றி எரியத் தொடங்குகின்றன
சிறிய சந்தோஷமும்
சாம்பலாய்ப் பறக்கிறது
உறுமீனுக்காகக் கொக்கு ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது
ஆறு பெருமூச்சாய் நுரைகள் பூக்க
வழி போன போக்கில் போகிறது.

இவளும் மனுசி
******************
துளியாய் விழுந்தது
கடலாய்ப் பெருகுகியது
அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்
மழுங்கச் சிரைக்கப்பட்ட தலை
சீழ்வடியும் புண்களும் ரணங்களுமான உடல்
எம் நாடு எம் இனம் எம் வாழ்வு ஈடேற வழியேது?
கானகத்தின் நடுவில் அழுகுரல்
துக்க நீரூற்றாய்ப் பீறிடுகிறது
எக்குரலையும் விழுங்கிச் செரிக்கிறது அக்குரல்
சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்
அழுவதற்குப் பயிற்சி தேவையில்லை
சிரிப்பும் அழுகையும்
மனிதரைப் பாடாய்ப்படுத்தும்
உடலை விற்கக் காரணமாய் இருந்தாய்
உடலை நாயாய் தின்றாய்
வேசி எனக் கூப்பிடுகிறாயே
வேசி நாயே
சபிக்கப்பட்ட தேசத்தில் வாழ்கிறேன்
என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன
நாவு இழந்து கண்ணீர் வடிய
கற்சிலையாய் நிற்கிறேன்.

– வசந்ததீபன்